2021 பரிந்துரைகள்

2021-இல் படித்த, மீண்டும் படித்த நல்ல படைப்புகளின் பட்டியல்.

இரண்டு புத்தகங்களை கட்டாயம் வாங்கிப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஒன்று பிங்கலி சூரண்ணா எழுதிய ப்ரபாவதி ப்ரத்யும்னமு, டேவிட் ஷுல்மன் மற்றும் வெல்செரு நாராயணராவ் மொழிபெயர்ப்பு. இன்னொன்று நாஞ்சில் எழுதிய மிதவை. அடுத்த முறை நாஞ்சிலைப் பார்க்கும்போது அவர் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று உத்தேசம்.

வகை படைப்பாளி படைப்பு குறிப்புகள்
நாவல் அ. மாதவையா சத்யானந்தன்
அம்ரிதா ப்ரீதம் பிஞ்சர்
அசோகமித்ரன் இந்தியா 1944-48
ஆ. மாதவன் புனலும் மணலும்
இமையம் செல்லாத பணம் 2020 சாஹித்ய அகடமி விருது
எம்.டி. வாசுதேவன் நாயர் ரெண்டாமூழம் பீமன் பார்வையில் மகாபாரதம்
எமிலி ப்ரான்டே Wuthering Heights
எஸ். ராமகிருஷ்ணன் சஞ்சாரம் 2018 சாஹித்ய அகடமி விருது
ஃபகீர் மோஹன் சேனாபதி சா மானா அத குந்தா முதல் ஒரிய நாவல்
கல்கி சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு
ச. பாலமுருகன் சோளகர் தொட்டி
சரத்சந்திர சாட்டர்ஜி தேவதாஸ்
நாஞ்சில் நாடன் மிதவை கலக்கிவிட்டார்!
பாலகுமாரன் ஆனந்த வயல், பந்தயப்புறா, தாயுமானவன்
பெர்னார்ட் கார்ன்வெல் ஆர்தர் நாவல்கள்
பெருமாள் முருகன் கூளமாதாரி கமல் பரிந்துரை
மைக்கேல் கானலி Dark Hours த்ரில்லர்
தகழி சிவசங்கரன் பிள்ளை செம்மீன்
ஸ்ரீவேணுகோபாலன் திருவரங்கன் உலா, மதுராவிஜயம்
ஜெய்ஷங்கர் காமிக்ஸ்
நாடகம் ஆகஸ்ட் வில்சன் Ma Rainey’s Black Bottom திரைப்படம்
ஆரன் சோர்கின் A Few Good Men, Farnsworth Invention
கிரீஷ் கார்னாட் நாகமண்டலா
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை மனோன்மணீயம்
பாசர் மகாபாரத நாடகங்கள்
பெர்னார்ட் ஷா செயிண்ட் ஜோன்
புகழேந்திப் புலவர் மகாபாரத நாட்டார் கதைகள்
மெரினா மாப்பிள்ளை முறுக்கு
மோஹன் ராகேஷ் ஆஷாட் கா ஏக் தின்
விஜய் டெண்டுல்கர் காஷிராம் கொத்வால்
சிறுகதை அக்தர் மொஹியுதின் Wannun Ma Banym காஷ்மீரி சிறுகதை
அருண்மொழிநங்கை நுரை
ஆஸ்கார் வைல்ட் Happy Prince
ஃப்ரெடெரிக் ப்ரௌன் Arena Science Fiction
ஃபகீர் மோஹன் சேனாபதி ரேபதி முதல் ஒரிய சிறுகதை
கென் லியூ Paper Menagerie
சி.சு. செல்லப்பா சரசாவின் பொம்மை சிறுகதைத் தொகுப்பு
சூசன் க்ளாஸ்பெல் A Jury of Her Peers
தி. ஜானகிராமன் பாயசம்
நாஞ்சில் நாடன் யாம் உண்பேம், தன்ராம்சிங், கதை எழுதுவதின் கதை சாஹித்ய அகடமி விருது பெற்ற சூடிய பூ சூடற்க சிறுகதைத் தொகுப்பு
மாக்சிம் கார்க்கி 26 Men and a Girl
மாணிக் பந்தோபாத்யாய் ப்ரகோஇதிஹாசிக் வங்காளச் சிறுகதை
லா.ச.ரா. யோகம் ஜனனி சிறுகதைத் தொகுப்பு
ரேமண்ட் கார்வர் So Much Water, So Close to Home
வண்ணதாசன் பூரணம் சாஹித்ய அகடமி விருது பெற்ற ஒரு சிறு இசை சிறுகதைத் தொகுப்பு
விஜயகுமார் ம்ருகமோக்ஷம்
ஜெயமோகன் கந்தர்வன், பழைய பாதைகள்
ஹாரி கெமல்மன் Nine Mile Walk துப்பறியும் கதை
ஹூலியோ கோர்த்தசார் Southern Thruway
கவிதை நல்லந்துவனார் பூமலி வையைக்கியல்பு பரிபாடல்
பாரதி ஊழிக்கூத்து
பிங்கலி சூரண்ணா ப்ரபாவதி ப்ரத்யும்னமு அபாரம்! மொழிபெயர்ப்பு: டேவிட் ஷுல்மன், வெல்செரு நாராயணராவ்
மிர்சா காலிப் தில்-ஏ-நாதான்
ஜான் டோன் For Whom the Bell Tolls
அபுனைவு க.நா.சு. படித்திருக்கிறீர்களா?
கமில் சுவலபில் Introducing Tamil Literature
கலைஞானம் சினிமா சீக்ரெட்ஸ்
சோமலே தமிழ் பத்திரிகைகள்
டி.எஸ்.எஸ். ராஜன் நினைவு அலைகள்
நா. வானமாமலை உரைநடை வளர்ச்சி
நாகசாமி Art of Tamil Nadu, மாமல்லை
பாரி எஸ்டப்ரூக் Tomatoland
ரகோத்தமன் ராஜீவ் காந்தி கொலை வழக்கு
ரா.அ. பத்மநாபன் சித்திரபாரதி, பாரதி புதையல்
வ.ரா. தமிழ் பெரியார்கள்
வெ. சாமிநாத சர்மா நான் கண்ட நால்வர் திரு.வி.க., வ.வே.சு. ஐயர், சுப்ரமணிய சிவா, பாரதி
வெப் மில்லர் The Dharsana Salt Works Demonstration
வையாபுரிப் பிள்ளை தமிழ் சுடர்மணிகள்
திரைப்படம் ரஞ்சித் சார்பட்டா பரம்பரை
ரெஜினால்ட் ஹட்லின் மார்ஷல்

புத்தகப் பைத்தியங்கள்

புகைப்படங்களைப் பார்க்கும்போதே மன நிறைவாக இருந்தது. மாதிரிக்கு ஒன்றை இணைத்திருக்கிறேன்.

நான் புத்தகங்களை வாங்குவது மிகவும் குறைந்துவிட்டது. சின்ன வீட்டுக்கு குடிபெயர்ந்து ஐந்து வருஷம் ஆகிவிட்டது, இடப்பற்றாக்குறை. மேலும் இருக்கும் புத்தகங்களை படித்து முடிக்கவே இன்னும் 10 வருஷம் ஆகும். ஆனாலும் என்னை விட பெரிய புத்தகப் பைத்தியங்களைப் பார்ப்பது பெரிய மகிழ்ச்சி!

நான் கஞ்சன். என்னிடம் இருக்கும் புத்தகங்களில் முக்கால்வாசி பழைய புத்தகங்கள்தான். இவற்றைப் பார்த்தால் புதிதாக வாங்கின மாதிரி இருக்கிறது. அது இன்னும் ஒரு சின்ன மகிழ்ச்சி…

என்னிடம் 2000-3000 புத்தகங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் முயன்றால் நானும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுவிடலாம்…

உங்கள் வீட்டு அலமாரிகளில் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன? பின்னூட்டத்தில் எழுதுங்கள்! செந்தூரம் ஜெகதீஷ் போன்றவர்களின் வீடு முழுக்க இருக்கும் என நினைக்கிறேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

குறுந்தொகை 7

(Reblogged, original post here)

Continuing “my” translation efforts of Kurunthokai for my daughter, Sreya. Another lucky instance though, A.K. Ramanujan’s translation is available for this.

Let me start by conceding that this is not an A grade poem for me. If I ever publish a poetry anthology, this won’t find a place in it. But this is another timeless poem. A morphed version of this poem can be still observed. It is not set in a desert any more, we have to check airports and railway stations and shopping malls, especially foreign ones.

The poem depicts a woman in a new, unfamiliar place. The woman knows nobody but the man accompanying her. The place may be unfamiliar for the man as well, but he still has to act as if he knows the mores of the place well. You can easily imagine a young Indian couple, who have married/eloped against the wishes of their parents; originally from a village, now getting down at a big city’s e.g. Mumbai railway station/bus stand. The success of this poem lies in creating such a vivid backstory in our mind.

A.K. Ramanujan’s Translation:

This bowman has a warriors band
on the ankle;
the girl with the bracelet on her arm
has a virgin’s anklets
on her tender feet
They look like good people
In these places
the winds beat
upon the vakai tree
like drums for acrobats
dancing on the tightropes

Poor things, who could they be?
and what makes them walk
with all the others
through these desert ways
so filled with bamboos?

Writer: Perum Padmanar, Category: Paalai (Desert)

<hr>

உண்மையை ஒத்துக் கொள்கிறேன். எனக்கு இந்தக் கவிதை முதல் வரிசையில் இல்லை, நான் என்றாவது எனக்குப் பிடித்த கவிதைகள் என்று ஒரு தொகுப்பு போட்டால் அதில் இடம் பெறாது. ஆனால் இந்தக் கவிதையும் இன்றும் நாம் காணக் கூடிய காட்சிதான். பழக்க்கப்பட்ட காட்சிதான். என்ன, பாலைவனத்தில் அல்ல, வெளிநாட்டு விமான நிலையங்களிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலும் ஷாப்பிங் மால்களிலும் பார்க்கிறோம், அவ்வளவுதான்.

இந்தக் கவிதை காட்டும் காட்சி புது இடத்தில், பழக்கப்படாத இடத்தில், துணையாக வரும் ஆணைத் தவிர வேறு யாரையும் அறியாத பெண்; தனக்கு புது இடமோ இல்லையோ பழகிய இடம் மாதிரி கொஞ்சம் பந்தா காண்பிக்கும் ஆண். இன்னும் கொஞ்சம் யோசித்தால் பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள். கவிதையைப் படிக்கும்போது அப்படி ஒரு backstory தோன்றுவதுதான் இந்தக் கவிதையின் வெற்றி.

பாடலை எழுதியவர்: பெரும்பதுமனார் திணை: பாலை

தமிழில் கவிதை:

கண்டோர் கூற்று:

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே யாரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற்றொலிக்கும்
வேய்பயிலழுவ முன்னியோரே.

தொகுக்கப்பட்ட பக்கம்: குறுந்தொகை

நீண்ட நாட்களாக வரும் காமிக்ஸ்

இந்தப் பதிவிலிருந்து:
 1. The Katzenjammer Kids(1897-2006)
 2. Gasoline Alley (1918-present)
 3. Barney Google and Snuffy Smith (1919-present)
 4. Little Orphan Annie (1924-2010)
 5. Popeye (1929-1994)
 6. Blondie (1930-present)
 7. Dick Tracy (1931-present)
 8. Prince Valiant (1937-present)
 9. Brenda Starr, Reporter (1940-2011)
 10. Beetle Bailey (1950-present)
 11. B.C. (1958-present)
 12. Dennis the Menace (1951-present)

தமிழில் தினத்தந்தி நாளிதழில் வந்துகொண்டிருந்த கன்னித்தீவு (சிந்துபாத்) காமிக்ஸ்தான் நீண்ட நாளாக வருவது என்று நினைக்கிறேன். இன்னும் வருகிறதா? எப்போது ஆரம்பித்தது என்று யாருக்காவது தெரியுமா?

தொகுக்கப்பட்ட பக்கம்: காமிக்ஸ்

புஷ்பா தங்கதுரை – எழுபதுகளின் வடுவூரார்

pushpa_thangaduraiபுஷ்பா தங்கதுரை பற்றி தனியாக ஒரு பதிவு எழுத முக்கிய காரணம் நாஸ்டால்ஜியா. பதின்ம வயதுகளில் சுஜாதாவுக்கு அடுத்தபடி அவரைத்தான் விரும்பிப் படித்தோம். ஒரே காரணம்தான். செக்ஸ் வர்ணனைகள். அந்தக் காலகட்டத்தில் அவர் எழுத்துக்கள்தான் நண்பர்கள் குழுவுக்கு கிளுகிளுப்பூட்டின. ஓரிரு வருஷமாவது புஷ்பா தங்கதுரை புத்தகம் கிடைக்குமா என்று தேடி அலைந்தோம், வீட்டுக்குத் தெரியாமல் மறைத்து வைத்துப் படித்தோம். கழுத்துக்கு கீழே கை என்று படித்தாலே மனம் கிளர்ச்சி அடையும் 13-14 வயது. இவர் பெண் ஓரினச் சேர்க்கை, மார்புக் காம்புகள், கஜுராஹோ சிற்பம் போல உறவு, விரல் போடுவது (fingering) என்றெல்லாம் எழுதி இருக்கிறார். ஏன் புத்தகம் கிடைக்காதா என்று தேடி அலைய மாட்டோம்?

புஷ்பா தங்கதுரையின் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது நாவலை ஜெயமோகன் சிறந்த வணிக நாவல்கள் வரிசையில் வைக்கிறார். வணிக நாவல்களைப் பொறுத்த வரை ஜெயமோகன் தன் கறாரான அணுகுமுறையை பெரிதும் தளர்த்திவிடுகிறார். நானோ வணிக நாவல்களை அவரை விட சீரியசாக எடுத்துக் கொள்பவன். இந்த நாவலின் மகா மோசமான கற்றுக்குட்டி நடை ரொம்பவும் படுத்துகிறது. தெய்வீகக் காதல் என்று உருகிக் கொண்டே இருக்கிறார்கள். தமிழில் வணிக நாவல்கள் எப்படி எல்லாம் மாற்றம் அடைந்தன என்பதைப் பற்றி ஆர்வம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் தவிர்த்துவிடலாம். ஆனால் அந்தக் காலத்தில் வெற்றி பெற்ற நாவல்தான். கமல், விஜயகுமார் நடித்து (தண்டமான) திரைப்படமாகவும் வந்தது.

நந்தா என் நிலா நாவலிலும் இப்படித்தான் காதல் காதல் என்று உருகிக் கொண்டே இருக்கிறார்கள். மஹா போர். விஜயகுமார், சுமித்ரா நடித்து திரைப்படமாகவும் வந்தது.

என் பெயர் கமலா என்ற நாவல்தான் செக்ஸ் வர்ணனைகள் வாரப் பத்திரிகைகளில் கூச்சமில்லாமல் பதிக்கபபட்டதற்கு ஆரம்பம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். விபச்சார விடுதியில் விற்கப்படும் கமலாவின் வாழ்க்கை. அன்று விபச்சாரம் என்றாலே ஆபாசப் புத்தகம் ஆகிவிடும் போலிருக்கிறது. அதே போல சிவப்பு விளக்கு எரிகிறது என்று விபச்சாரத் தொழில் செய்யும் பெண்களின் கதைகள் என்று ஒன்றும் உண்டு. ஆனால் எனக்குத் தெரிந்த வரை சாண்டில்யன்தான் இதற்கெல்லாம் முன்னோடி. ஆனால் சாண்டில்யன் இப்படி எல்லாம் எழுதும்போது எப்படா முடியும் என்று இருக்கும். இவர் எழுதியதையோ விரும்பிப் படித்தேன்.

இன்ஸ்பெக்டர் சிங் துப்பறியும் லீனா மீனா ரீனா, ராகினி ஒரு ஹிப்பி நீ போன்ற கதைகள் கொஞ்சம் பரவாயில்லை. நாங்கள் வளர்ந்த காலத்தில் சில நாவல்களாவது பிடித்திருந்தன. நன்றாக நினைவிருப்பது மங்களா சுபமங்களா என்ற நாவல். அருங்காட்சியக (museum) அதிகாரிகள் சிலர் பெண்களை அனுபவித்துவிட்டு கொலை செய்துவிடுவார்கள். அவர்களின் எலும்புக்கூடுகளை ஆதிச்சநல்லூர் எலும்புக்கூடுகள் என்று அருங்காட்சியகத்தில் மாட்டிவிடுவார்கள். காபரே இலவசம் என்ற சிங் துப்பறியும் கதையில் ஒரு பெண் தன் உள்ளாடையைக் கழற்றி விளையாடி போலீஸ் கண்காணிப்பை ஏமாற்றுவதாக வரும். அந்தக் காலத்தில் கிளுகிளுப்புக்கு கிளுகிளுப்பு, மர்மத்துக்கு மர்மம். துணிந்தபின் சுகமே குறுநாவலில் 12-14 வயது பெண்களைத் தேடும் மனநோய் கொண்டவனைக் கண்டுபிடிக்கும் சாக்கில் பாலியல் perversion-களை விவரிப்பார். வெள்ளி மோகினி குறுநாவலில் ஒரு கொலையின் மர்மத்தை கண்டுபிடிப்பார். கிளுகிளுப்புக்கு இரண்டு இளம் பெண்கள் சிங்குக்கு மசாஜ் செய்துவிடுவார்கள்.

இவற்றைத் தவிர தாரா தாரா தாரா என்று ஒரு கதை கொஞ்சம் சுமாராக இருக்கும்

ஆனால் மீண்டும் படித்த அனேக துப்பறியும் கதைகள் – காதல் இல்லை காதலி, சரிதா சரிதா, துள்ளுவதோ இளமை, மன்மத மருந்து, துரோகம் துரத்துகிறது, இளமைக்கு ஒரு விசா, கடலுக்குள் ஜூலி – உப்பு சப்பில்லாத தண்டங்கள். மேலும் அடுத்த ரூம் பெண், என்றும் இரவுப் பூக்கள், கடைசி வரை காதல் எல்லாம் உலக மகா தண்டம். ஆனால் அந்த வயதில் எது கிளுகிளுப்பாக இருந்தது என்று தெளிவாகவே புரிந்தது.

ஒரு காமிக்ஸ் கதை கூட முயற்சித்திருக்கிறார் –ஹைவே 117.க்ரீச் க்ரீச் க்ரீச் என்ற சிறுவர் நாவலும் உண்டு.

ஸ்ரீவேணுகோபாலன் என்ற பேரிலும் புஷ்பா தங்கதுரை கதைகள் எழுதினார். அனேகமாக வைணவப் பின்புலம் உள்ள சரித்திரக் கதைகள். அந்தப் பெயரில் அவர் எழுதிய திருவரங்கன் உலா, மதுரா விஜயம் நாவல்கள் மட்டுமே எதிர்காலத்திலும் படிக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. வெகு சில இன்ஸ்பெக்டர் சிங் துப்பறியும் நாவல்கள் தமிழ் வணிக நாவல்களில் பொருட்படுத்தப்படலாம். மற்றபடி அவர் எழுதியதெல்லாம் குப்பை என்றேதான் வகைப்படுத்துவேன். ஆனால் ஒரு காலத்தின் தேவையை அவர் ஓரளவுக்கு பூர்த்தி செய்தார் என்பதை மறுப்பதற்கில்லை – எழுபதுகளின் வடுவூரார்.

ஜெயமோகன் திருவரங்கன் உலா நாவலை நல்ல historical romances வரிசையில் வைக்கிறார். ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது நாவலை நல்ல social romances வரிசையில். முன்னதை ஏற்கிறேன். பின்னதோடு 100% வேறுபடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

ஸ்ரீவேணுகோபாலன்: திருவரங்கன் உலா+மதுராவிஜயம்

டில்லி சுல்தான்களின் படைகள் முதலில மாலிக் காஃபூர் தலைமையில் ஒரு முறை, முகம்மது பின் துக்ளக் தலைமையில் ஒரு முறை தமிழகம் வரை படையெடுத்து வந்ததும், இரண்டாவது படையெடுப்பின்போது ஸ்ரீரங்கத்து ரங்கநாதனின் உற்சவமூர்த்தி ஊர் ஊராக மறைத்து எடுத்துச் செல்லப்பட்டதும் நாற்பது ஐம்பது வருஷம் கழித்து மீண்டும் விஜயநகர அரசின் தளபதி கோபண்ணா முயற்சியால் மூர்த்தி ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டதும் வரலாறு. திருவரங்கன் உலா, மதுரா விஜயம் என்று இரண்டு நாவல்களாக இந்த நிகழ்ச்சிகளை ஸ்ரீவேணுகோபாலன் எழுதி இருக்கிறார்.

ஒரு சாதாரண சிலை; உற்சவமூர்த்தி, அவ்வளவுதான். அதை ஏன் ஊர் ஊராக காப்பாற்றி கொண்டு போக வேண்டும்? தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் அது சிலைதான். எனக்கு சிலையாகத் தெரிவது அந்த பக்தர்களுக்கு தெய்வம். படையெடுத்து வந்த “துருக்கரிடம்” தெய்வம் சிக்கிவிடக் கூடாது என்ற ஆவேசம், பரபரப்பு, மீண்டும் திருவரங்கத்தில் அரங்கனை குடி கொள்ளச் செய்ய வேண்டும் என்ற வெறி (obsession) நன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மிச்ச குறைகளை எல்லாம் அது பின்னால் தள்ளிவிடுகிறது.

எனக்கு முதல் பாகமான திருவரங்கன் உலாவை விட இரண்டாம் பாகமான மதுராவிஜயம் இன்னும் பிடித்திருந்தது. இரண்டையும் தனி நாவல்களாகவும் படிக்கலாம். மதுரா விஜயம் விஜயநகர இளவரசர் குமார கம்பணரின் மனைவி கங்காதேவி எழுதிய வடமொழிக் காவியம். இந்த நாவலின் கடைசி பக்கங்களில் கம்பணர் முயற்சியால் மதுரையில் மீனாட்சி மீண்டும் குடிகொண்டது வந்தாலும் நாவல் அரங்கனின் மீட்பைத்தான் சுற்றி சுற்றி வருகிறது. கோபண்ணா கம்பணரின் தளபதி, மதுரை சுல்தான் ஆட்சியை அழிக்காமல் இரண்டும் நடக்காது என்பதுதான் மதுராவிஜயத்துக்கும் இந்த நாவலுக்கும் உள்ள தொடர்பு.

மதுராவிஜயம் ஆரம்பத்தில் வல்லபன் என்ற இளைஞன். போன தலைமுறையில் அரங்கன் சிலையை திருவரங்கத்திலிருந்து தூக்கி வந்தவர்களில் முக்கியமான குலசேகரன், அவனை உருகி உருகி ஒருதலையாகக் காதலித்த தேவரடியாள் வாசந்திகா இருவரின் மகன். அம்மாவின் கட்டளைப்படியும், அப்பாவின் ஆசையை நிறையவேற்றவும் அரங்கன் சிலையைத் தேடிக் கிளம்புகிறான். துணைக்கு நண்பன் தத்தன். நாட்டில் பொதுவாக பழைய நிலைக்கு நாடு திரும்பாதா, சுல்தான் ஆட்சி ஒழியாதா, அரங்கர் திருவரங்கம் திரும்பாரா என்ற வேட்கை பரவி இருக்கிறது. விஜயநகர அரசின் ஆரம்ப காலம்.

கடைசியாக கிடைத்த தகவலின்படி மேல்கோட்டையில்தான் சிலை இருக்கிறது. விசாரித்து விசாரித்து கடைசியில் திருப்பதி சென்றடைகிறான். அங்கே அந்தக் காலத்தில் மூன்று “கொடவர்கள்” – அரங்கனின் பணியாளர்கள் – சேர்ந்து மலையிலிருந்து குதித்து உருண்டு புரண்டு எப்படியோ காட்டிற்குள் சிலையை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். காப்பாற்றும் முயற்சியில் இருவர் இறந்து போகிறார்கள். ஒருவருக்கு சித்தம் கலங்கிவிடுகிறது. வல்லபனும் தத்தனும் எப்படியோ சிலையைக் கண்டுபிடிக்கிறார்கள். திருப்பதியில் அரங்கன் இப்போது. இன்றும் திருமலை கோவிலில் அன்றைய சந்திரகிரி சிற்றரசர் யாதவராயர் அரங்கனின் உத்சவ மூர்த்தியை வைக்கக் கட்டிய ரங்கமண்டபம் இருக்கிறது. விஜயநகர அரசின் தளபதி கோபண்ணா தான் திருவரங்கத்திற்கு அரங்கனைக் கொண்டு செல்வேன் என்று சபதம் எடுக்கிறார்.

காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட சம்புவராயர்களின் சிற்றரசு வெல்லப்படுகிறது. மதுரை மீனாட்சி கம்பணரை தன்னை மீட்கும்படி கனவில் உத்தரவிடுகிறாள். (இது மதுராவிஜயம் காவியத்தில் வருவது, அதற்கு யதார்த்தமாக விளக்கம் தந்துவிடுகிறார்.) சுல்தான் மீது படையெடுப்பு, வெற்றி, வேதாந்த தேசிகர் முன்னிலையில் அரங்கனை திருவரங்கத்தில் வைக்கிறார்கள், கம்பணரும் கங்காதேவியும் மதுரையில் மீனாட்சியை மீட்கிறார்கள்.

அரண்மனை சதிகள் இருந்தாலும் இது தமிழின் வழக்கமான அரண்மனை சதி வரலாற்று நாவல் அல்ல. நாவலின் வளவள பக்கங்களிலும் அரங்கனை மீட்க வேண்டும் என்ற் தணியாத வேட்கையை ஸ்ரீவேணுகோபாலன் அடிநாதமாக காட்டுகிறார்.

முதல் பாகமான திருவரங்கன் உலா நாவலில் அரங்கர் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி மதுரை, திருவனந்தபுரம், கோழிக்கோடு, மேல்கோட்டை வழியாக திருப்பதி காடுகளை சென்றடைந்திருக்கிறார். மதுராவிஜயத்தில் அவர் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டு திருமலை கோவில், செஞ்சி அருகே உள்ள சிங்கவரம், சமயபுரம் வழியாக ஸ்ரீரங்கம் வந்தடைகிறார்.

முதல் பாகமான திருவரங்கன் உலா விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது. ஆரம்ப கட்டங்களில் திருவரங்கம் முற்றுகை இடப்படுவதும் அதைக் காக்க நூறு பேர் ஆயிரக்கணக்கானவரை எதிர்க்கும் போரும் சிறப்பாக சித்தரிக்கப்படுகின்றன. குலசேகரன் தற்செயலாக டில்லி படையைப் பார்த்து செய்தி கொண்டு வர, அவனுக்கு பாதுகாப்பில் முக்கிய ஸ்தானம் கிடைக்கிறது. போரில் பஞ்சுகொண்டானுடன் இணைந்து கடும்போர் புரிகிறான். ஆனால் அரங்கரோடு தப்பி ஓட வேண்டிய நிலை. நடுவே வாசந்திகாவுக்கு குலசேகரன் மீது காதல். குலசேகரனோ தற்செயலாக சந்திக்கும் ஹேமலேகாவை விரும்புகிறான். அரஙகர் பழமுதிர்சோலையில் இருக்கும்போது திருவண்ணாமலை ஹொய்சள அரசரின் உதவியை நாடுகிறான். அரசரின் இளம் மனைவி நியோகமுறைப்படி குலசேகரனை கூட விரும்புகிறாள். அதற்கு ஒத்துக் கொண்டு படை பெற்று போரிட்டாலும் முழுத்தோல்வி. குலசேகரன் இறப்போடு முதல் பாகம் முடிகிறது.

குறைகள் இல்லாமல் இல்லை. தெய்வீகக் காதல்கள் பல பக்கங்களில் வருகின்றன, அது நாவலின் வடிவ கச்சிதத்தை குலைக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் மீறித் தெரிவது அரங்கரை மீட்க வேண்டும் என்ற வெறி. அன்று சிலராவது இபபடி உணர்ந்திருக்க வேண்டும். அதைச் சித்தரிப்பதில்தான் இந்த நாவலின் வெற்றி இருக்கிறது.

தினமணி கதிர் பத்திரிகையில் தொடர்கதையாக வந்திருக்கிறது.

ஸ்ரீவேணுகோபாலன்தான் புஷ்பா தங்கதுரை என்ற பேரில் சில பல கிளுகிளு நாவல்களையும் எழுதினார் என்பது தெரிந்திருக்கலாம். ஸ்ரீவேணுகோபாலன் என்ற பேரில் வரலாற்று நாவல்கள், புஷ்பா தங்கதுரை என்ற பேரில் கிளுகிளு கதைகள்.

வரலாற்று நாவல்கள் அனேகமாக வைணவப் பின்புலம் உள்ளவை. ஜெயமோகன் திருவரங்கன் உலா நாவலை நல்ல historical romances வரிசையில் வைக்கிறார். நண்பர் விஷ்வேஷ் ஓப்லா இந்தப் புத்தகங்களைப் பற்றி எழுதியது இங்கே மற்றும் இங்கே.

இந்த நாவல்கள் தந்த ஊக்கத்தில் படித்த வேறு சில வரலாற்று நாவல்களைப் பற்றியும் இங்கேயே எழுதிவிடுகிறேன். தெய்வீகக் காதல் இரண்டை வைத்து மதுரையில் நாயக்கர் ஆட்சி உருவானதை மோகவல்லி தூது என்ற நாவலாக எழுதி இருக்கிறார். சின்னப் பிள்ளைகளுக்கு எழுதிய மாதிரி இருக்கும். மிகை உணர்ச்சி (melodrama) நிறைந்த தென்மேற்குப் பருவம் (இளம் பெண்ணுக்கு இன்னல்) ஒரு காலத்தில் வாசகர்களைக் கவர்ந்திருக்கலாம். கள்ளழகர் காதலிக்கு அதற்குக் கூட வாய்ப்பே இல்லை. மன்மத பாண்டியன் புஷ்பா தங்கதுரை பாணியில் – அதாவது பாலியல் வர்ணனைகள் நிறைய புகுத்தி எழுதப்பட்ட நாவல். இதில் விரல் போடுவது (fingering) எல்லாம் விவரிக்கப்படுகிறது, ராணி பத்திரிகையில் எழுதி இருக்கிறார், எப்படி அனுமதித்தார்களோ!

இந்த இரண்டையும் – குறிப்பாக மதுராவிஜயத்தை – படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்: விஷ்வேஷ் ஓப்லாவின் அறிமுகக் கட்டுரை

விக்ரமாதித்யன் பற்றி ஜெயமோகன்

எனக்கு சிறு வயதிலிருந்தே கவிதை என்றால் கொஞ்சம் ஒவ்வாமை. பாரதியைத் தவிர்த்து வேறு யார் கவிதைகளையும் விரும்பிப் படித்ததில்லை. 20-22 வயதில் பாரதியின் கவித்துவத்தை, உத்வேகத்தை மலையாளி நண்பன் ஒருவனுக்கு மொழிபெயர்க்க முடியாமல் போன நொடியிலிருந்து பாரதியே நல்ல கவிஞர்தானா என்று கொஞ்சம் சந்தேகம். தமிழில் பாரதியையும் பிச்சமூர்த்தியையும் விட்டால் சுமாரான கவிஞர்கள் கூட கிடையாது என்றுதான் நினைத்திருந்தேன். (அப்போது சங்க இலக்கியம், கம்பன் பற்றி எல்லாம் ஸ்னானப்ராப்தி கூட கிடையாது.) பத்து வருஷத்துக்கு முன்பு கூட எனக்குப் பிடித்த கவிதைகள் என்று தமிழ் ஆங்கிலம் எல்லாவற்றையும் சேர்த்து 20-30 சொல்ல முடிந்தால் அதிகம். 50 வயதுக்குப் பிறகுதான் எனக்கு நற்றிணையும் குறுந்தொகையும் அகநானூறுமே பிடிபட ஆரம்பித்தது. (ஏ.கே. ராமானுஜன் வாழ்க!)

விஷ்ணுபுரம் விருதை தமிழின் முக்கிய விருதுகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.  விருது பெற்றவர்கள் பற்றி வரும் கட்டுரைகளை ஆர்வத்துடன் படிப்பேன். ஆனால் என் கவிதை ஒவ்வாமையால் கவிஞர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும்போதெல்லாம் அந்தக் கட்டுரைகளை புறம் தள்ளிவிடுவேன்; அப்படியே படித்தாலும் மேலோட்டமாக skim செய்வேன், அவ்வளவுதான்.

இந்த முறை விக்ரமாதித்யன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் அப்படித்தான். ஆனால் நாளை அமெரிக்கா திரும்ப வேண்டும், இரவு தூக்கம் பிடிக்கவில்லை. விக்ரமாதித்யன் பற்றி ஜெயமோகன் எழுதியதை படிக்க ஆரம்பித்தேன். அவரது கண்ணில்:

லக்ஷ்மி மணிவண்ணன் ஒருமுறை உரையாடும் போது சொன்னார். அவருடைய கவிதைகளைப் பிறிதொருவர் எழுதியிருந்தால் அவை கவிதைகள் ஆகாது என்று. கவிதையை எழுதிவிட்டு அதனருகே நின்றிருக்கிறார் அவர். கவிதையைத் தன் வாழ்க்கையால் சூழ வளைத்து ஒரு பின்புல உலகை உருவாக்குகிறார். கவிதைக்கு விரிந்த அனுபவப் புலத்தை தன் வாழ்க்கையால் அவர் அளிக்கிறார். ஆகவே அவருடைய கவிதை என்பதனால் மட்டுமே அவை கவிதைகள்.

ஜெயமோகனின் இந்த முத்தாய்ப்பை நான் வன்மையாக மறுக்கிறேன். விக்ரமாதித்யன் மது அருந்தினால் எனக்கென்ன, மாடு மேய்த்தால் எனக்கென்ன? எழுத்தாளனும் கவிஞனும் தன் எழுத்தின் வீச்சை எப்படி வந்தடைகிறான் என்பது வெறும் மேலதிகத் தகவல் மட்டுமே. அது சில சமயம் சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் எழுத்தாளனின் ஆளுமையும் வாழ்க்கையும்தான் அவனது வரிகளை கவிதை ஆக்குகின்றன என்றால் அது கவிதையே அல்ல என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்.

மேலும்

கவிஞன் சாம்பல் கரைக்க
கங்கையும் காணாது குமரியும் போதாது!

இதோ
இன்னும் சிறிது நேரத்தில் விடிந்துவிடும்
இந்த
பவளக்கொடி கூத்து முடிந்துவிடும்
இவன்
அர்ச்சுன மகாராசா வேஷம் கலைந்து ஊர்திரும்பலாம்
இன்னும்
இரண்டு மூன்று நாளைக்குக் கவலையில்லை
குடிக்கூலி பாக்கி
கொடுத்துவிடலாம்
கொஞ்சம்
அரிசி வாங்கிப் போட்டுவிடலாம்
வீட்டுச் செலவுக்கும்
திட்டமாகத் தந்துவிடலாம்
பிள்ளைகளுக்கு
பண்டம் வாங்கிக்கொண்டு போகலாம்
சொர்க்கம் ஒயின்ஸில்
கடன் சொல்ல வேண்டாம்
இன்னொரு நாள் இன்னொரு திருவிழாவில்
கூத்துப்போடும்வரை எதிர்பார்த்து
காத்திருக்கவேண்டிய மனசு
இஷ்டத்துக்கும் கொண்டாடும் இன்று

கற்பூர வாசனை சரியாகத் தெரியாத எனக்கே இது கவிதை என்று புரிகிறது. ஆளுமைதான் இதை எல்லாம் கவிதை ஆக்குகிறது என்பது விக்ரமாதித்யனை குறைத்து மதிப்பிடுவது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

சில சமயம் கவிதையும் எழுத்தும் உருவான process சுவாரசியமாக இருக்கிறதுதான். ஆனால் ஷேக்ஸ்பியரின், பெர்னார்ட் ஷாவின், பிரேம்சந்தின், தி.ஜா.வின் சொந்த வாழ்க்கையைப் பற்றி பெரிதாக யாரும் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களது output-தான் முக்கியம், எழுத்து உருவான process ஒரு அடிக்குறிப்பு (footnote) மட்டுமே. விக்ரமாதித்யனுக்காக வேறு விதிகள் இருக்க முடியாது.

என் போன்ற ஞானசூன்யங்களை விடுங்கள், “ஆகாசம் நீல நிறம்” தொகுப்பை 1987-இல் படித்தபோதே ஜெயமோகன் விக்ரமாதித்யனின் ஆளுமையைப் பற்றி அறிவாரா? இல்லை படித்த பிறகு அண்ணாச்சியை அறிமுகம் செய்துகொண்டாரா? அறிமுகம் ஆன பிறகு கவிதைத் தொகுப்பைப் பற்றி ஜெயமோகனுடைய எண்ணங்கள் மாறினவா என்ன? அவற்றை முதலில் அவர் குப்பை என்று நினைத்தார், பிறகு அண்ணாச்சி பழக்கம் ஆன பிறகு அவை உன்னதமான கவிதைகளாக மாறிவிட்டனவா? இது என்ன பைத்தியக்காரத்தனம்?

ஜெயமோகன் தேர்ந்த வாசகர், விமர்சகர். இலக்கியம் என்று வந்துவிட்டால் அதை அக்குவேறு ஆணி வேறாக அலசுபவர். சில சமயம் அப்படி அலசாமல் இலக்கியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்ற நிலை எடுக்கிறார், எடுத்திருக்கிறார். உதாரணமாக நவீனத்துவம், பின்நவீனத்துவம் இதெல்லாம் என்ன என்று புரியாதவர்களுக்கு பாலகுமாரனிலிருந்து அசோகமித்திரனுக்கு போவது கடினம் என்பார். பாலகுமாரனைக் கடந்து அசோகமித்திரனையே படிக்க முடியாதவன், அசோகமித்திரன் எழுத்தே புரியாதவன், நவீனத்துவம் theory பற்றி எங்கே படிக்கப் போகிறான், எப்படி புரிந்து கொள்வான்? அப்படி முதலில் theoretical foundation-ஐ நன்கு கற்று பிறகுதான் அசோகமித்திரனைப் படிப்பான் என்பது பகல் கனவு. அவரே கூட புனைவுகளைப் படித்த பிறகுதான் புனைவுகளை வகைப்படுத்தி இருப்பார், அப்படி வகைப்படுத்துவதின் அடிப்படைகளைப் பற்றி படித்திருப்பார், புரிந்து கொண்டிருப்பார் என்பதுதான் என் யூகம்.

அண்ணாச்சியின் ஆளுமை அவரது கவிதைகளின் கவர்ச்சியை ஜெயமோகனுக்கு இன்னும் அதிகரித்திருக்கலாம். ஆனால் அடிப்படையில் அவை நல்ல கவிதைகளாக இல்லாவிட்டால் ஒரு நாளும் எழுதுபவரின் ஆளுமை அவற்றை கவிதைகளாக மாற்ற முடியாது. குடிகாரர்கள், நிலையான வாழ்க்கை அமையாதவர்கள் எழுதுவதெல்லாம் நல்ல கவிதை ஆகிவிடுமா என்ன? ஆளுமை, பின்புலம் தனக்கு இன்னும் ஆழ்ந்த புரிதலைத் தருகிறது என்று சொல்ல வந்தவர் இந்த வரிகளை கவிதை ஆக்குவது அண்ணாச்சியின் ஆளுமைதான் என்று சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன்.

வேறு வழியில்லை 🙂 விக்ரமாதித்யனின் கவிதைகளை நானேதான் படித்து எனக்கு ஒத்து வருமா என்ற முடிவுக்கு வரவேண்டும். ஜெயமோகன் போட்டிருக்கும் கோட்டை என்னால் ரோடாக மாற்றிக் கொள்ள முடியாது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தொகுக்கப்பட்ட பக்கம்: விமர்சனம்

பில் கேட்ஸின் 2021 பரிந்துரைகள்

பில் கேட்ஸ் வருஷாவருஷம் ஐந்தாறு புத்தகங்களை பரிந்துரைப்பார். 2021க்கான பட்டியல் இது.

தொகுக்கப்பட்ட புத்தகம்: பரிந்துரைகள்

தக்காளியின் அரசியல்

(மீள்பதிவு)

இன்று உலகெங்கும் தக்காளி மிக அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி. நன்றாகப் பழுத்த தக்காளியின் லேசான இனிப்பும் லேசான புளிப்பும் எல்லாவற்றுக்கும் மேலாக அதன் juicyness-ஐயும் விரும்பாதவர் யார்? காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்து அதனுடன் தக்காளியை வதக்கி தாளித்து சட்னி செய்தால் – அட அட அதன் சுவையை விவரிக்க நாஞ்சிலால் கூட முடியுமோ என்னவோ தெரியவில்லை. இது சாப்பாட்டுக்கான தளம் இல்லை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

barry_estabrookTomatoland பாரி எஸ்டப்ரூக் எழுதிய அபுனைவு. புத்தகம் அவர் நெடுஞ்சாலையில் காரை ஓட்டிச் செல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவருக்கு முன்னால் ஒரு லாரி, அது நிறைய தக்காளி. திடீரென்று சில தக்காளிகள் லாரியிலிருந்து விழுகின்றன. 70 மைல் வேகத்தில் ஒரு தக்காளி வந்து உங்கள் காரின் முன்பக்கக் கண்ணாடியில் அடித்தால் என்னாகும்? கண்ணாடி முழுவதும் சிவந்த தக்காளிச்சாறு, முன்னால் பார்க்க முடியாமல் விபத்து என்று நினைப்பீர்கள். அதுதான் இல்லை. தக்காளி கான்க்ரீட் சாலையில் அந்த வேகத்தில் விழுந்தாலும் உடைவதில்லை. ஏறக்குறைய ஒரு சிவப்புக் கல் வந்து அடிப்பது போலத்தான் இருக்கிறது.

எஸ்டப்ரூக் வியந்து போகிறார். வீட்டுக்கு வந்து நாலு தக்காளியைத் தரையில் போடுகிறார். வீசி எறிகிறார். தக்காளி உடைவதே இல்லை. (இதைப் படித்துவிட்டு நானும் தக்காளியை கல் தரையில் போட்டுப் பார்த்தேன். உடையவில்லைதான், ஆனால் மெதுவாகத்தான் போட்டேன், எஸ்டப்ரூக் சொன்னதைக் கேட்டு வேகமாக வீசி எறிந்து அது தப்பித் தவறி உடைந்து போனால் வீட்டம்மாவிடம் யார் பேச்சு வாங்குவது?)

இன்று அமெரிக்காவில் – குறிப்பாக ஃப்ளோரிடாவில் விளையும் தக்காளிகள் அப்படி மாற்றப்பட்டிருக்கின்றன. மரபணுவிலேயே மாற்றம், கடினத்தோல் உடைய தக்காளியுடன் ஒட்டு என்று பல விதமாக இது நடந்திருக்கிறது. ஃப்ளோரிடாவின் தக்காளி வியாபாரிகள் சங்கம் அங்கிருந்து விற்பனைக்குப் போகும் ஒவ்வொரு தக்காளியும் இந்த அளவு கடினத்தோல், இந்த மாதிரி வடிவம் உள்ளவையாக இருக்க வேண்டும் என்று பல குணங்களை strict ஆக கடைப்பிடிக்கிறது.

ஆஹா ஓஹோ அமெரிக்கான்னா அமெரிக்காதான், என்ன மாதிரி தரக்கட்டுப்பாடு என்பவர்கள் அடுத்த பாராக்களை கட்டாயமாகப் படிக்க வேண்டும்.

தக்காளிக்கான விவசாயக் கூலிகள் அனேகமாக மெக்சிகோக்காரர்கள். அவர்கள் பல இடங்களில் கொத்தடிமைகளாகத்தான் நடத்தப்படுகிறார்கள். பரதேசி படத்தில் வரும் கொத்தடிமைகளுக்கும் இந்தக் கூலிகளுக்கும் வித்தியாசமே இல்லை. வன்முறை கொஞ்சம் குறைவாக இருக்கிறது, அவ்வளவுதான். தப்பிக்க முடியாது. வரும் பணம் இருக்கும் இடத்துக்கும் சாப்பாட்டுக்குமே சரியாகப் போய்விடும். தக்காளி விவசாயம் இன்று அனேகமாக பெரிய நிறுவனங்கள் கையில். அவர்கள் மேஸ்திரிகளை வைத்து விவசாயம் செய்கிறார்கள். இருக்கும் இடம், சாப்பாடு இரண்டையும் தருவது மேஸ்திரிதான். கொடுமையான விஷம் உள்ள பூச்சி மருந்தை கையால் தெளிப்பது என்பதெல்லாம் சர்வசாதாரணம். இப்படி விஷத்தோடு நேரடி தொடர்பு இருப்பதால் குறையுள்ள குழந்தைகள் பிறந்து அது பெரிய வழக்காகி இருக்கிறது.

எஸ்டப்ரூக் சொல்லும் இரண்டாவது விஷயம் – சுவை. இந்தத் தக்காளிகளில் சுவையே இருப்பதில்லை. நான் பெரிதாக இதையெல்லாம் கவனிப்பவன் இல்லை. ஆனால் கடைசியாக எப்போது ரசத்தில் அட தக்காளி இத்தனை சுவையாக இருக்கிறதே என்று சாப்பிட்டு பல மாதங்களாகிறது. தக்காளி அரைக்கப்பட்டால்தான் கொஞ்சமாவது ருசி தெரிகிறது. சுவையை விதி விதித்து கட்டுப்படுத்த முடியாது, வடிவம், தோல் பற்றி கவலைப்படாமல் தக்காளி விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளிடம்தான் சுவையான தக்காளி கிடைக்கிறது என்கிறார்.

மூன்றாவதாக அவர் சொல்வது தக்காளியின் பல வகைகள் காணாமல் போய்க் கொண்டிருப்பது. இப்படி ஒரேயடியாக சீரான தக்காளி என்று போனால காட்டுத் தக்காளியின் பல வகைகள் காணாமல் போய்விடுகின்றன. ஒட்டு விவசாயம் நடப்பது எதிர்காலத்தில் கஷ்டம். பல கல்லூரிகள் இன்று இந்தக் காட்டுத் தக்காளியின் விதைகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் பணம் வருவது பெரிய நிறுவனங்கள் மூலம்தான், நாளை ஒரு தென்னமெரிக்க விவசாயி அவன் வீட்டு பக்கத்திலுள்ள மலையில் விளைந்து கொண்டிருந்த தக்காளி விதையை இந்தப் பெரிய நிறுவனங்கள் தயவு வைத்தால்தான் பெறக் கூடிய நிலை உண்டாகலாம்.

இந்தியத் தக்காளிகளின் நிலை எப்படி? யாருக்காவது தைரியம் இருந்தால் கீழே போட்டு உடைகிறதா என்று பாருங்கள்!

இது தக்காளியின் அரசியல் மட்டுமல்ல, அமெரிக்காவின் விவசாயக் கூலிகளின் அரசியல்; விவசாயம் பெரிய நிறுவனங்கள் கையில் போய்க் கொண்டிருப்பதின் அரசியல். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

Wuthering Heights

wuthering_heights

(மீள்பதிவு)

Wuthering Heights-இல் என்னவோ இருக்கிறது. அது என்ன என்று விளக்க முடியவில்லை.

wuthering_heights_charactersதெரிந்த கதைதான். அனாதை ஹீத்க்ளிஃப் மிராசுதார் எர்ன்ஷா குடும்பத்தில் யார்க்‌ஷையரின் gothic சுற்றுச்சூழலில் வளர்கிறான். மிராசுதார் மகள் காதரீனுடன் மனிதர் உணர்ந்து கொள்ளும் மனிதக் காதலை மிஞ்சிய ஒரு காதல். மிராசுதார் மகன் ஹிண்ட்லிக்கோ அனாதையை வேலைக்காரனாக வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும், அப்பாவும் தங்கையும் நிறைய இடம் கொடுக்கிறார்கள் என்று கடுப்பு. அப்பா இறந்ததும் ஹீத்க்ளிஃபை வேலைக்காரனாகத்தான் நடத்துகிறான். இந்த சமயத்தில் நாகரீகமான நகரத்து வாலிபன் லிண்டனைக் கண்டு காதரீனின் மனம் கொஞ்சம் கலைகிறது. காதல் என்றால் ஹீத்க்ளிஃப்தான், ஆனால் அன்றைய சமூக சூழ்நிலையில் ஹீத்க்ளிஃப்பை மணந்தால் அவளுக்கு மரியாதை இருக்காது என்பதை உணர்கிறாள். ஹீத்க்ளிஃப் வீட்டை விட்டு வெளியேறுகிறான். சில வருஷங்கள் கழித்து காதரின் லிண்டனை மணக்கிறாள். பொருள் ஈட்டி ஒரு கனவானாக ஹீத்க்ளிஃப் திரும்புகிறான். காதலுக்கு துரோகம் செய்த காதரீனை அவனால் வெறுக்க முடியவில்லை, ஆனால் ஹிண்ட்லி, லிண்டன் எல்லாரையும் பழி வாங்க நினைக்கிறான். ஹிண்ட்லியின் நிலங்களையும் சொத்துகளையும் பறிக்கிறான். லிண்டனின் தங்கையை ஏமாற்றி மணக்கிறான். காதரீன் இறந்துவிட அவனைக் கட்டுப்படுத்தும் ஒரே சக்தியும் அழிந்துவிடுகிறது. ஹிண்ட்லியின் மகன் ஹரேடனை ஹீத்க்ளிஃப் தன் வேலையாளாக வளர்க்கிறான். தன் மகனுக்கு காதரீனின் மகளை பலவந்தமாக மணமுடித்து லிண்டன் குடும்பத்து சொத்துகளையும் கவர்ந்து கொள்கிறான். ஹரேடன், மகள் காதரீன் இருவர் வாழ்வையும் சொடுக்குப் போடும் வேளையில் அழித்துவிடலாம் என்ற நிலையில் அவனுக்கு வாழ்வில் அலுப்புத் தட்டிவிடுகிறது. காதரீனின் ஆவி தெரிகிறது. சாப்பிடாமல் தூங்காமல் இறந்து போய்விடுகிறான்.

நாலாவது முறை படிக்கும்போதும் முதல் முறை படித்தபோது மனதில் பட்ட விஷயங்களேதான் மீண்டும் மனதில் படுகின்றன. லிண்டன் மீது, காதரீன் மீது லிண்டன் கொண்டிருக்கும் காதல் மீது ஹீத்க்ளிஃப்புக்கு உள்ள இளக்காரம்; மனதில் ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்றிக் கொண்டு ஹீத்க்ளிஃப்பை மணக்கும் இசபெல்லா லிண்டன்; லாக்வுட்டுக்கு காதரீனின் ஆவி தென்பட்டது என்பதை அறிந்ததும் ஆவி தனக்கும் தெரியுமா என்று தேடும் ஹீத்க்ளிஃப்; ஹரேடன் ஹீத்க்ளிஃப்பின் பிம்பமாக வளர்வது; அம்மா காதரீனின் வாழ்க்கை எர்ன்ஷா-ஹீத்க்ளிஃப்-லிண்டன் என்று போனால் மகள் காதரீனின் வாழ்க்கை லிண்டன்-ஹீத்க்ளிஃப்-எர்ன்ஷா என்று போவது.

emily_bronteவாழ்வில் ஒரே ஒரு விஷயம்தான் இருக்கிறது என்றால் எப்படி நடந்து கொள்வீர்கள் என்பது சித்தரிக்கப்படுவதாலா? போலித்தனமே இல்லாத ஹீத்க்ளிஃப் பாத்திரத்தாலா? நம்பகத்தன்மை நிறைந்த பாத்திரங்களாலா? யார்க்‌ஷையரின் குளிர்ந்த காற்றடிக்கும் குன்றுகளை உணர முடிவதாலா? நானும் நாலைந்து முறை படித்துப் பார்த்துவிட்டேன், சுவாரசியம் குறைவான இந்த நாவல் ஏன் இலக்கியமாகிறது என்று என்னால் articulate செய்ய முடியவில்லை. நண்பர்கள் யாராவது?

ப்ராண்டே சகோதரிகளில் ஒருவரான எமிலி ப்ராண்டே எழுதி 1847-இல் வெளியான நாவல். இன்று பேரிலக்கியமாகக் கருதப்பட்டாலும் வெளிவந்த காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்ததாம்.

wuthering_heights_filmபல முறை திரைப்படமாக வந்திருக்கிறது. எனக்குப் பிடித்த version லாரன்ஸ் ஒலிவியர் (ஹீத்க்ளிஃப்), டேவிட் நிவன் (லிண்டன்), மெர்லே ஓபரான் நடித்து 1939-இல் வெளிவந்த படம். ஹிந்தியிலும் தில் தியா தர்த் லியா (1966) என்று வந்தது. ஆனால் அதில் ஹீத்க்ளிஃப்பும் (திலீப் குமார்) காதரீனும் (வஹீதா ரெஹ்மான்) ஒன்று சேர்ந்துவிடுவார்கள்!

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்