(மீள்பதிவு)
Wuthering Heights-இல் என்னவோ இருக்கிறது. அது என்ன என்று விளக்க முடியவில்லை.
தெரிந்த கதைதான். அனாதை ஹீத்க்ளிஃப் மிராசுதார் எர்ன்ஷா குடும்பத்தில் யார்க்ஷையரின் gothic சுற்றுச்சூழலில் வளர்கிறான். மிராசுதார் மகள் காதரீனுடன் மனிதர் உணர்ந்து கொள்ளும் மனிதக் காதலை மிஞ்சிய ஒரு காதல். மிராசுதார் மகன் ஹிண்ட்லிக்கோ அனாதையை வேலைக்காரனாக வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும், அப்பாவும் தங்கையும் நிறைய இடம் கொடுக்கிறார்கள் என்று கடுப்பு. அப்பா இறந்ததும் ஹீத்க்ளிஃபை வேலைக்காரனாகத்தான் நடத்துகிறான். இந்த சமயத்தில் நாகரீகமான நகரத்து வாலிபன் லிண்டனைக் கண்டு காதரீனின் மனம் கொஞ்சம் கலைகிறது. காதல் என்றால் ஹீத்க்ளிஃப்தான், ஆனால் அன்றைய சமூக சூழ்நிலையில் ஹீத்க்ளிஃப்பை மணந்தால் அவளுக்கு மரியாதை இருக்காது என்பதை உணர்கிறாள். ஹீத்க்ளிஃப் வீட்டை விட்டு வெளியேறுகிறான். சில வருஷங்கள் கழித்து காதரின் லிண்டனை மணக்கிறாள். பொருள் ஈட்டி ஒரு கனவானாக ஹீத்க்ளிஃப் திரும்புகிறான். காதலுக்கு துரோகம் செய்த காதரீனை அவனால் வெறுக்க முடியவில்லை, ஆனால் ஹிண்ட்லி, லிண்டன் எல்லாரையும் பழி வாங்க நினைக்கிறான். ஹிண்ட்லியின் நிலங்களையும் சொத்துகளையும் பறிக்கிறான். லிண்டனின் தங்கையை ஏமாற்றி மணக்கிறான். காதரீன் இறந்துவிட அவனைக் கட்டுப்படுத்தும் ஒரே சக்தியும் அழிந்துவிடுகிறது. ஹிண்ட்லியின் மகன் ஹரேடனை ஹீத்க்ளிஃப் தன் வேலையாளாக வளர்க்கிறான். தன் மகனுக்கு காதரீனின் மகளை பலவந்தமாக மணமுடித்து லிண்டன் குடும்பத்து சொத்துகளையும் கவர்ந்து கொள்கிறான். ஹரேடன், மகள் காதரீன் இருவர் வாழ்வையும் சொடுக்குப் போடும் வேளையில் அழித்துவிடலாம் என்ற நிலையில் அவனுக்கு வாழ்வில் அலுப்புத் தட்டிவிடுகிறது. காதரீனின் ஆவி தெரிகிறது. சாப்பிடாமல் தூங்காமல் இறந்து போய்விடுகிறான்.
நாலாவது முறை படிக்கும்போதும் முதல் முறை படித்தபோது மனதில் பட்ட விஷயங்களேதான் மீண்டும் மனதில் படுகின்றன. லிண்டன் மீது, காதரீன் மீது லிண்டன் கொண்டிருக்கும் காதல் மீது ஹீத்க்ளிஃப்புக்கு உள்ள இளக்காரம்; மனதில் ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்றிக் கொண்டு ஹீத்க்ளிஃப்பை மணக்கும் இசபெல்லா லிண்டன்; லாக்வுட்டுக்கு காதரீனின் ஆவி தென்பட்டது என்பதை அறிந்ததும் ஆவி தனக்கும் தெரியுமா என்று தேடும் ஹீத்க்ளிஃப்; ஹரேடன் ஹீத்க்ளிஃப்பின் பிம்பமாக வளர்வது; அம்மா காதரீனின் வாழ்க்கை எர்ன்ஷா-ஹீத்க்ளிஃப்-லிண்டன் என்று போனால் மகள் காதரீனின் வாழ்க்கை லிண்டன்-ஹீத்க்ளிஃப்-எர்ன்ஷா என்று போவது.
வாழ்வில் ஒரே ஒரு விஷயம்தான் இருக்கிறது என்றால் எப்படி நடந்து கொள்வீர்கள் என்பது சித்தரிக்கப்படுவதாலா? போலித்தனமே இல்லாத ஹீத்க்ளிஃப் பாத்திரத்தாலா? நம்பகத்தன்மை நிறைந்த பாத்திரங்களாலா? யார்க்ஷையரின் குளிர்ந்த காற்றடிக்கும் குன்றுகளை உணர முடிவதாலா? நானும் நாலைந்து முறை படித்துப் பார்த்துவிட்டேன், சுவாரசியம் குறைவான இந்த நாவல் ஏன் இலக்கியமாகிறது என்று என்னால் articulate செய்ய முடியவில்லை. நண்பர்கள் யாராவது?
ப்ராண்டே சகோதரிகளில் ஒருவரான எமிலி ப்ராண்டே எழுதி 1847-இல் வெளியான நாவல். இன்று பேரிலக்கியமாகக் கருதப்பட்டாலும் வெளிவந்த காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்ததாம்.
பல முறை திரைப்படமாக வந்திருக்கிறது. எனக்குப் பிடித்த version லாரன்ஸ் ஒலிவியர் (ஹீத்க்ளிஃப்), டேவிட் நிவன் (லிண்டன்), மெர்லே ஓபரான் நடித்து 1939-இல் வெளிவந்த படம். ஹிந்தியிலும் தில் தியா தர்த் லியா (1966) என்று வந்தது. ஆனால் அதில் ஹீத்க்ளிஃப்பும் (திலீப் குமார்) காதரீனும் (வஹீதா ரெஹ்மான்) ஒன்று சேர்ந்துவிடுவார்கள்!
படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்