தக்காளியின் அரசியல்

(மீள்பதிவு)

இன்று உலகெங்கும் தக்காளி மிக அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி. நன்றாகப் பழுத்த தக்காளியின் லேசான இனிப்பும் லேசான புளிப்பும் எல்லாவற்றுக்கும் மேலாக அதன் juicyness-ஐயும் விரும்பாதவர் யார்? காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்து அதனுடன் தக்காளியை வதக்கி தாளித்து சட்னி செய்தால் – அட அட அதன் சுவையை விவரிக்க நாஞ்சிலால் கூட முடியுமோ என்னவோ தெரியவில்லை. இது சாப்பாட்டுக்கான தளம் இல்லை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

barry_estabrookTomatoland பாரி எஸ்டப்ரூக் எழுதிய அபுனைவு. புத்தகம் அவர் நெடுஞ்சாலையில் காரை ஓட்டிச் செல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவருக்கு முன்னால் ஒரு லாரி, அது நிறைய தக்காளி. திடீரென்று சில தக்காளிகள் லாரியிலிருந்து விழுகின்றன. 70 மைல் வேகத்தில் ஒரு தக்காளி வந்து உங்கள் காரின் முன்பக்கக் கண்ணாடியில் அடித்தால் என்னாகும்? கண்ணாடி முழுவதும் சிவந்த தக்காளிச்சாறு, முன்னால் பார்க்க முடியாமல் விபத்து என்று நினைப்பீர்கள். அதுதான் இல்லை. தக்காளி கான்க்ரீட் சாலையில் அந்த வேகத்தில் விழுந்தாலும் உடைவதில்லை. ஏறக்குறைய ஒரு சிவப்புக் கல் வந்து அடிப்பது போலத்தான் இருக்கிறது.

எஸ்டப்ரூக் வியந்து போகிறார். வீட்டுக்கு வந்து நாலு தக்காளியைத் தரையில் போடுகிறார். வீசி எறிகிறார். தக்காளி உடைவதே இல்லை. (இதைப் படித்துவிட்டு நானும் தக்காளியை கல் தரையில் போட்டுப் பார்த்தேன். உடையவில்லைதான், ஆனால் மெதுவாகத்தான் போட்டேன், எஸ்டப்ரூக் சொன்னதைக் கேட்டு வேகமாக வீசி எறிந்து அது தப்பித் தவறி உடைந்து போனால் வீட்டம்மாவிடம் யார் பேச்சு வாங்குவது?)

இன்று அமெரிக்காவில் – குறிப்பாக ஃப்ளோரிடாவில் விளையும் தக்காளிகள் அப்படி மாற்றப்பட்டிருக்கின்றன. மரபணுவிலேயே மாற்றம், கடினத்தோல் உடைய தக்காளியுடன் ஒட்டு என்று பல விதமாக இது நடந்திருக்கிறது. ஃப்ளோரிடாவின் தக்காளி வியாபாரிகள் சங்கம் அங்கிருந்து விற்பனைக்குப் போகும் ஒவ்வொரு தக்காளியும் இந்த அளவு கடினத்தோல், இந்த மாதிரி வடிவம் உள்ளவையாக இருக்க வேண்டும் என்று பல குணங்களை strict ஆக கடைப்பிடிக்கிறது.

ஆஹா ஓஹோ அமெரிக்கான்னா அமெரிக்காதான், என்ன மாதிரி தரக்கட்டுப்பாடு என்பவர்கள் அடுத்த பாராக்களை கட்டாயமாகப் படிக்க வேண்டும்.

தக்காளிக்கான விவசாயக் கூலிகள் அனேகமாக மெக்சிகோக்காரர்கள். அவர்கள் பல இடங்களில் கொத்தடிமைகளாகத்தான் நடத்தப்படுகிறார்கள். பரதேசி படத்தில் வரும் கொத்தடிமைகளுக்கும் இந்தக் கூலிகளுக்கும் வித்தியாசமே இல்லை. வன்முறை கொஞ்சம் குறைவாக இருக்கிறது, அவ்வளவுதான். தப்பிக்க முடியாது. வரும் பணம் இருக்கும் இடத்துக்கும் சாப்பாட்டுக்குமே சரியாகப் போய்விடும். தக்காளி விவசாயம் இன்று அனேகமாக பெரிய நிறுவனங்கள் கையில். அவர்கள் மேஸ்திரிகளை வைத்து விவசாயம் செய்கிறார்கள். இருக்கும் இடம், சாப்பாடு இரண்டையும் தருவது மேஸ்திரிதான். கொடுமையான விஷம் உள்ள பூச்சி மருந்தை கையால் தெளிப்பது என்பதெல்லாம் சர்வசாதாரணம். இப்படி விஷத்தோடு நேரடி தொடர்பு இருப்பதால் குறையுள்ள குழந்தைகள் பிறந்து அது பெரிய வழக்காகி இருக்கிறது.

எஸ்டப்ரூக் சொல்லும் இரண்டாவது விஷயம் – சுவை. இந்தத் தக்காளிகளில் சுவையே இருப்பதில்லை. நான் பெரிதாக இதையெல்லாம் கவனிப்பவன் இல்லை. ஆனால் கடைசியாக எப்போது ரசத்தில் அட தக்காளி இத்தனை சுவையாக இருக்கிறதே என்று சாப்பிட்டு பல மாதங்களாகிறது. தக்காளி அரைக்கப்பட்டால்தான் கொஞ்சமாவது ருசி தெரிகிறது. சுவையை விதி விதித்து கட்டுப்படுத்த முடியாது, வடிவம், தோல் பற்றி கவலைப்படாமல் தக்காளி விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளிடம்தான் சுவையான தக்காளி கிடைக்கிறது என்கிறார்.

மூன்றாவதாக அவர் சொல்வது தக்காளியின் பல வகைகள் காணாமல் போய்க் கொண்டிருப்பது. இப்படி ஒரேயடியாக சீரான தக்காளி என்று போனால காட்டுத் தக்காளியின் பல வகைகள் காணாமல் போய்விடுகின்றன. ஒட்டு விவசாயம் நடப்பது எதிர்காலத்தில் கஷ்டம். பல கல்லூரிகள் இன்று இந்தக் காட்டுத் தக்காளியின் விதைகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் பணம் வருவது பெரிய நிறுவனங்கள் மூலம்தான், நாளை ஒரு தென்னமெரிக்க விவசாயி அவன் வீட்டு பக்கத்திலுள்ள மலையில் விளைந்து கொண்டிருந்த தக்காளி விதையை இந்தப் பெரிய நிறுவனங்கள் தயவு வைத்தால்தான் பெறக் கூடிய நிலை உண்டாகலாம்.

இந்தியத் தக்காளிகளின் நிலை எப்படி? யாருக்காவது தைரியம் இருந்தால் கீழே போட்டு உடைகிறதா என்று பாருங்கள்!

இது தக்காளியின் அரசியல் மட்டுமல்ல, அமெரிக்காவின் விவசாயக் கூலிகளின் அரசியல்; விவசாயம் பெரிய நிறுவனங்கள் கையில் போய்க் கொண்டிருப்பதின் அரசியல். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

2 thoughts on “தக்காளியின் அரசியல்

  1. அமெரிக்கத் தக்காளிகள் போல இல்லையென்றாலும் இங்கே கடைகளில் கிடைக்கும் தக்காளிகள் திடகாத்திரமாக தான் இருக்கின்றன. இதை வாசித்த உடன் தான் எனக்கும் தோன்றுகிறது ருசியான தக்காளி ரசத்தை என் வாழ்க்கையிலேயே பார்த்த ஞாபகம் இல்லை. பொதுவாகவே சில பிரத்யேக ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும் நாட்டு ரகக் காய்கறிகள் கூடுதல் சுவையாகவே இருக்கிறது .

    நவீன வாழ்க்கையை விட்டுவிட்டு விவசாயம் தற்சார்பு என்று போகிறவர்களை முதிரா மனம் கொண்டவர்கள் என்ற எண்ணம் எனக்கு உண்டு , கண்ணை விற்று தூக்கம் வாங்குவானேன் என்று நானும் சிறிது காலத்தில் போய் விடுவேன் என்று நினைக்கிறேன் .

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.