எனக்கு சிறு வயதிலிருந்தே கவிதை என்றால் கொஞ்சம் ஒவ்வாமை. பாரதியைத் தவிர்த்து வேறு யார் கவிதைகளையும் விரும்பிப் படித்ததில்லை. 20-22 வயதில் பாரதியின் கவித்துவத்தை, உத்வேகத்தை மலையாளி நண்பன் ஒருவனுக்கு மொழிபெயர்க்க முடியாமல் போன நொடியிலிருந்து பாரதியே நல்ல கவிஞர்தானா என்று கொஞ்சம் சந்தேகம். தமிழில் பாரதியையும் பிச்சமூர்த்தியையும் விட்டால் சுமாரான கவிஞர்கள் கூட கிடையாது என்றுதான் நினைத்திருந்தேன். (அப்போது சங்க இலக்கியம், கம்பன் பற்றி எல்லாம் ஸ்னானப்ராப்தி கூட கிடையாது.) பத்து வருஷத்துக்கு முன்பு கூட எனக்குப் பிடித்த கவிதைகள் என்று தமிழ் ஆங்கிலம் எல்லாவற்றையும் சேர்த்து 20-30 சொல்ல முடிந்தால் அதிகம். 50 வயதுக்குப் பிறகுதான் எனக்கு நற்றிணையும் குறுந்தொகையும் அகநானூறுமே பிடிபட ஆரம்பித்தது. (ஏ.கே. ராமானுஜன் வாழ்க!)
விஷ்ணுபுரம் விருதை தமிழின் முக்கிய விருதுகளில் ஒன்றாகக் கருதுகிறேன். விருது பெற்றவர்கள் பற்றி வரும் கட்டுரைகளை ஆர்வத்துடன் படிப்பேன். ஆனால் என் கவிதை ஒவ்வாமையால் கவிஞர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும்போதெல்லாம் அந்தக் கட்டுரைகளை புறம் தள்ளிவிடுவேன்; அப்படியே படித்தாலும் மேலோட்டமாக skim செய்வேன், அவ்வளவுதான்.
இந்த முறை விக்ரமாதித்யன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் அப்படித்தான். ஆனால் நாளை அமெரிக்கா திரும்ப வேண்டும், இரவு தூக்கம் பிடிக்கவில்லை. விக்ரமாதித்யன் பற்றி ஜெயமோகன் எழுதியதை படிக்க ஆரம்பித்தேன். அவரது கண்ணில்:
லக்ஷ்மி மணிவண்ணன் ஒருமுறை உரையாடும் போது சொன்னார். அவருடைய கவிதைகளைப் பிறிதொருவர் எழுதியிருந்தால் அவை கவிதைகள் ஆகாது என்று. கவிதையை எழுதிவிட்டு அதனருகே நின்றிருக்கிறார் அவர். கவிதையைத் தன் வாழ்க்கையால் சூழ வளைத்து ஒரு பின்புல உலகை உருவாக்குகிறார். கவிதைக்கு விரிந்த அனுபவப் புலத்தை தன் வாழ்க்கையால் அவர் அளிக்கிறார். ஆகவே அவருடைய கவிதை என்பதனால் மட்டுமே அவை கவிதைகள்.
ஜெயமோகனின் இந்த முத்தாய்ப்பை நான் வன்மையாக மறுக்கிறேன். விக்ரமாதித்யன் மது அருந்தினால் எனக்கென்ன, மாடு மேய்த்தால் எனக்கென்ன? எழுத்தாளனும் கவிஞனும் தன் எழுத்தின் வீச்சை எப்படி வந்தடைகிறான் என்பது வெறும் மேலதிகத் தகவல் மட்டுமே. அது சில சமயம் சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் எழுத்தாளனின் ஆளுமையும் வாழ்க்கையும்தான் அவனது வரிகளை கவிதை ஆக்குகின்றன என்றால் அது கவிதையே அல்ல என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்.
மேலும்
கவிஞன் சாம்பல் கரைக்க
கங்கையும் காணாது குமரியும் போதாது!
இதோ
இன்னும் சிறிது நேரத்தில் விடிந்துவிடும்
இந்த
பவளக்கொடி கூத்து முடிந்துவிடும்
இவன்
அர்ச்சுன மகாராசா வேஷம் கலைந்து ஊர்திரும்பலாம்
இன்னும்
இரண்டு மூன்று நாளைக்குக் கவலையில்லை
குடிக்கூலி பாக்கி
கொடுத்துவிடலாம்
கொஞ்சம்
அரிசி வாங்கிப் போட்டுவிடலாம்
வீட்டுச் செலவுக்கும்
திட்டமாகத் தந்துவிடலாம்
பிள்ளைகளுக்கு
பண்டம் வாங்கிக்கொண்டு போகலாம்
சொர்க்கம் ஒயின்ஸில்
கடன் சொல்ல வேண்டாம்
இன்னொரு நாள் இன்னொரு திருவிழாவில்
கூத்துப்போடும்வரை எதிர்பார்த்து
காத்திருக்கவேண்டிய மனசு
இஷ்டத்துக்கும் கொண்டாடும் இன்று
கற்பூர வாசனை சரியாகத் தெரியாத எனக்கே இது கவிதை என்று புரிகிறது. ஆளுமைதான் இதை எல்லாம் கவிதை ஆக்குகிறது என்பது விக்ரமாதித்யனை குறைத்து மதிப்பிடுவது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
சில சமயம் கவிதையும் எழுத்தும் உருவான process சுவாரசியமாக இருக்கிறதுதான். ஆனால் ஷேக்ஸ்பியரின், பெர்னார்ட் ஷாவின், பிரேம்சந்தின், தி.ஜா.வின் சொந்த வாழ்க்கையைப் பற்றி பெரிதாக யாரும் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களது output-தான் முக்கியம், எழுத்து உருவான process ஒரு அடிக்குறிப்பு (footnote) மட்டுமே. விக்ரமாதித்யனுக்காக வேறு விதிகள் இருக்க முடியாது.
என் போன்ற ஞானசூன்யங்களை விடுங்கள், “ஆகாசம் நீல நிறம்” தொகுப்பை 1987-இல் படித்தபோதே ஜெயமோகன் விக்ரமாதித்யனின் ஆளுமையைப் பற்றி அறிவாரா? இல்லை படித்த பிறகு அண்ணாச்சியை அறிமுகம் செய்துகொண்டாரா? அறிமுகம் ஆன பிறகு கவிதைத் தொகுப்பைப் பற்றி ஜெயமோகனுடைய எண்ணங்கள் மாறினவா என்ன? அவற்றை முதலில் அவர் குப்பை என்று நினைத்தார், பிறகு அண்ணாச்சி பழக்கம் ஆன பிறகு அவை உன்னதமான கவிதைகளாக மாறிவிட்டனவா? இது என்ன பைத்தியக்காரத்தனம்?
ஜெயமோகன் தேர்ந்த வாசகர், விமர்சகர். இலக்கியம் என்று வந்துவிட்டால் அதை அக்குவேறு ஆணி வேறாக அலசுபவர். சில சமயம் அப்படி அலசாமல் இலக்கியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்ற நிலை எடுக்கிறார், எடுத்திருக்கிறார். உதாரணமாக நவீனத்துவம், பின்நவீனத்துவம் இதெல்லாம் என்ன என்று புரியாதவர்களுக்கு பாலகுமாரனிலிருந்து அசோகமித்திரனுக்கு போவது கடினம் என்பார். பாலகுமாரனைக் கடந்து அசோகமித்திரனையே படிக்க முடியாதவன், அசோகமித்திரன் எழுத்தே புரியாதவன், நவீனத்துவம் theory பற்றி எங்கே படிக்கப் போகிறான், எப்படி புரிந்து கொள்வான்? அப்படி முதலில் theoretical foundation-ஐ நன்கு கற்று பிறகுதான் அசோகமித்திரனைப் படிப்பான் என்பது பகல் கனவு. அவரே கூட புனைவுகளைப் படித்த பிறகுதான் புனைவுகளை வகைப்படுத்தி இருப்பார், அப்படி வகைப்படுத்துவதின் அடிப்படைகளைப் பற்றி படித்திருப்பார், புரிந்து கொண்டிருப்பார் என்பதுதான் என் யூகம்.
அண்ணாச்சியின் ஆளுமை அவரது கவிதைகளின் கவர்ச்சியை ஜெயமோகனுக்கு இன்னும் அதிகரித்திருக்கலாம். ஆனால் அடிப்படையில் அவை நல்ல கவிதைகளாக இல்லாவிட்டால் ஒரு நாளும் எழுதுபவரின் ஆளுமை அவற்றை கவிதைகளாக மாற்ற முடியாது. குடிகாரர்கள், நிலையான வாழ்க்கை அமையாதவர்கள் எழுதுவதெல்லாம் நல்ல கவிதை ஆகிவிடுமா என்ன? ஆளுமை, பின்புலம் தனக்கு இன்னும் ஆழ்ந்த புரிதலைத் தருகிறது என்று சொல்ல வந்தவர் இந்த வரிகளை கவிதை ஆக்குவது அண்ணாச்சியின் ஆளுமைதான் என்று சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன்.
வேறு வழியில்லை 🙂 விக்ரமாதித்யனின் கவிதைகளை நானேதான் படித்து எனக்கு ஒத்து வருமா என்ற முடிவுக்கு வரவேண்டும். ஜெயமோகன் போட்டிருக்கும் கோட்டை என்னால் ரோடாக மாற்றிக் கொள்ள முடியாது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தொகுக்கப்பட்ட பக்கம்: விமர்சனம்
Completely agree, Vikramathiyan is a poet by talent, not by his demeanor. He exhibits his poetic heart through his Tamil expertise and poet-specific vision about the society and the world. Romanticing him, by connecting to his external habits, just adds masala to the story and the way others look at him.
LikeLike
I agree Bala, this is indeed romanticizing him…
LikeLike
ஐம்பது வயதுக்கு மேலே போனால் கவிதைகளை எல்லாம் ரசிக்க வேண்டியிருக்கும் போல,போகட்டும் இன்னும் பல வருடங்கள் இருக்கின்றன.
எதையும் ரசிக்க, எழுத்தாளர்களின் பின்புலம் எந்தளவு உதவும் என்று தெரியவில்லை. ஒரு சில அரசியல் விவரங்களுக்கு பயன்படலாம். ஒரு சில உணர்வுகள் அவர்களின் சொந்த வாழ்க்கையிலிருந்து வந்திருக்கலாம், நமக்கு அது தெரியும் போது இன்னமும் அதிகம் நெருங்குவது போல இருக்கும். அது அந்த எழுத்தாளரை கொஞ்சம் தெரிந்தவராக ஆக்குமே ஒழிய, அந்த எழுத்தை அல்ல. சில விதிவிலக்குகள், பாலகுமாரனின் அடியார்களுக்கு அவர் என்ன எழுதினாலும் அதில் ஏதோ இருப்பதாக நம்பி, எதையாவது கண்டடையவும் கூடும்.
அசோகமித்திரன் நினைவு கூட்டம் பெங்களூரில் நடந்தது, அங்கு ஒருவர் அசோகமித்திரனின் எழுத்துக்களில் முரணியக்கம், அது இது என்று எவ்வளவோ பேசினார். பாவம் அசோகமித்திரன் ஆவி கேட்டு கொண்டிருந்தால் என்ன நினைத்திருப்பரோ. இது போன்ற இசங்களை எல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது, பரீட்சைக்கும் படிக்கும் ஃபீல் வராது. யாரையும் படிக்காமல் அசோகமித்திரனின் கரைந்த நிழல்களை படிக்கும் போதே தெரிந்துவிடும் அது ஒரு மாஸ்டர் பீஸ் என்று.
LikeLike