ஸ்ரீவேணுகோபாலன்: திருவரங்கன் உலா+மதுராவிஜயம்

டில்லி சுல்தான்களின் படைகள் முதலில மாலிக் காஃபூர் தலைமையில் ஒரு முறை, முகம்மது பின் துக்ளக் தலைமையில் ஒரு முறை தமிழகம் வரை படையெடுத்து வந்ததும், இரண்டாவது படையெடுப்பின்போது ஸ்ரீரங்கத்து ரங்கநாதனின் உற்சவமூர்த்தி ஊர் ஊராக மறைத்து எடுத்துச் செல்லப்பட்டதும் நாற்பது ஐம்பது வருஷம் கழித்து மீண்டும் விஜயநகர அரசின் தளபதி கோபண்ணா முயற்சியால் மூர்த்தி ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டதும் வரலாறு. திருவரங்கன் உலா, மதுரா விஜயம் என்று இரண்டு நாவல்களாக இந்த நிகழ்ச்சிகளை ஸ்ரீவேணுகோபாலன் எழுதி இருக்கிறார்.

ஒரு சாதாரண சிலை; உற்சவமூர்த்தி, அவ்வளவுதான். அதை ஏன் ஊர் ஊராக காப்பாற்றி கொண்டு போக வேண்டும்? தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் அது சிலைதான். எனக்கு சிலையாகத் தெரிவது அந்த பக்தர்களுக்கு தெய்வம். படையெடுத்து வந்த “துருக்கரிடம்” தெய்வம் சிக்கிவிடக் கூடாது என்ற ஆவேசம், பரபரப்பு, மீண்டும் திருவரங்கத்தில் அரங்கனை குடி கொள்ளச் செய்ய வேண்டும் என்ற வெறி (obsession) நன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மிச்ச குறைகளை எல்லாம் அது பின்னால் தள்ளிவிடுகிறது.

எனக்கு முதல் பாகமான திருவரங்கன் உலாவை விட இரண்டாம் பாகமான மதுராவிஜயம் இன்னும் பிடித்திருந்தது. இரண்டையும் தனி நாவல்களாகவும் படிக்கலாம். மதுரா விஜயம் விஜயநகர இளவரசர் குமார கம்பணரின் மனைவி கங்காதேவி எழுதிய வடமொழிக் காவியம். இந்த நாவலின் கடைசி பக்கங்களில் கம்பணர் முயற்சியால் மதுரையில் மீனாட்சி மீண்டும் குடிகொண்டது வந்தாலும் நாவல் அரங்கனின் மீட்பைத்தான் சுற்றி சுற்றி வருகிறது. கோபண்ணா கம்பணரின் தளபதி, மதுரை சுல்தான் ஆட்சியை அழிக்காமல் இரண்டும் நடக்காது என்பதுதான் மதுராவிஜயத்துக்கும் இந்த நாவலுக்கும் உள்ள தொடர்பு.

மதுராவிஜயம் ஆரம்பத்தில் வல்லபன் என்ற இளைஞன். போன தலைமுறையில் அரங்கன் சிலையை திருவரங்கத்திலிருந்து தூக்கி வந்தவர்களில் முக்கியமான குலசேகரன், அவனை உருகி உருகி ஒருதலையாகக் காதலித்த தேவரடியாள் வாசந்திகா இருவரின் மகன். அம்மாவின் கட்டளைப்படியும், அப்பாவின் ஆசையை நிறையவேற்றவும் அரங்கன் சிலையைத் தேடிக் கிளம்புகிறான். துணைக்கு நண்பன் தத்தன். நாட்டில் பொதுவாக பழைய நிலைக்கு நாடு திரும்பாதா, சுல்தான் ஆட்சி ஒழியாதா, அரங்கர் திருவரங்கம் திரும்பாரா என்ற வேட்கை பரவி இருக்கிறது. விஜயநகர அரசின் ஆரம்ப காலம்.

கடைசியாக கிடைத்த தகவலின்படி மேல்கோட்டையில்தான் சிலை இருக்கிறது. விசாரித்து விசாரித்து கடைசியில் திருப்பதி சென்றடைகிறான். அங்கே அந்தக் காலத்தில் மூன்று “கொடவர்கள்” – அரங்கனின் பணியாளர்கள் – சேர்ந்து மலையிலிருந்து குதித்து உருண்டு புரண்டு எப்படியோ காட்டிற்குள் சிலையை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். காப்பாற்றும் முயற்சியில் இருவர் இறந்து போகிறார்கள். ஒருவருக்கு சித்தம் கலங்கிவிடுகிறது. வல்லபனும் தத்தனும் எப்படியோ சிலையைக் கண்டுபிடிக்கிறார்கள். திருப்பதியில் அரங்கன் இப்போது. இன்றும் திருமலை கோவிலில் அன்றைய சந்திரகிரி சிற்றரசர் யாதவராயர் அரங்கனின் உத்சவ மூர்த்தியை வைக்கக் கட்டிய ரங்கமண்டபம் இருக்கிறது. விஜயநகர அரசின் தளபதி கோபண்ணா தான் திருவரங்கத்திற்கு அரங்கனைக் கொண்டு செல்வேன் என்று சபதம் எடுக்கிறார்.

காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட சம்புவராயர்களின் சிற்றரசு வெல்லப்படுகிறது. மதுரை மீனாட்சி கம்பணரை தன்னை மீட்கும்படி கனவில் உத்தரவிடுகிறாள். (இது மதுராவிஜயம் காவியத்தில் வருவது, அதற்கு யதார்த்தமாக விளக்கம் தந்துவிடுகிறார்.) சுல்தான் மீது படையெடுப்பு, வெற்றி, வேதாந்த தேசிகர் முன்னிலையில் அரங்கனை திருவரங்கத்தில் வைக்கிறார்கள், கம்பணரும் கங்காதேவியும் மதுரையில் மீனாட்சியை மீட்கிறார்கள்.

அரண்மனை சதிகள் இருந்தாலும் இது தமிழின் வழக்கமான அரண்மனை சதி வரலாற்று நாவல் அல்ல. நாவலின் வளவள பக்கங்களிலும் அரங்கனை மீட்க வேண்டும் என்ற் தணியாத வேட்கையை ஸ்ரீவேணுகோபாலன் அடிநாதமாக காட்டுகிறார்.

முதல் பாகமான திருவரங்கன் உலா நாவலில் அரங்கர் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி மதுரை, திருவனந்தபுரம், கோழிக்கோடு, மேல்கோட்டை வழியாக திருப்பதி காடுகளை சென்றடைந்திருக்கிறார். மதுராவிஜயத்தில் அவர் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டு திருமலை கோவில், செஞ்சி அருகே உள்ள சிங்கவரம், சமயபுரம் வழியாக ஸ்ரீரங்கம் வந்தடைகிறார்.

முதல் பாகமான திருவரங்கன் உலா விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது. ஆரம்ப கட்டங்களில் திருவரங்கம் முற்றுகை இடப்படுவதும் அதைக் காக்க நூறு பேர் ஆயிரக்கணக்கானவரை எதிர்க்கும் போரும் சிறப்பாக சித்தரிக்கப்படுகின்றன. குலசேகரன் தற்செயலாக டில்லி படையைப் பார்த்து செய்தி கொண்டு வர, அவனுக்கு பாதுகாப்பில் முக்கிய ஸ்தானம் கிடைக்கிறது. போரில் பஞ்சுகொண்டானுடன் இணைந்து கடும்போர் புரிகிறான். ஆனால் அரங்கரோடு தப்பி ஓட வேண்டிய நிலை. நடுவே வாசந்திகாவுக்கு குலசேகரன் மீது காதல். குலசேகரனோ தற்செயலாக சந்திக்கும் ஹேமலேகாவை விரும்புகிறான். அரஙகர் பழமுதிர்சோலையில் இருக்கும்போது திருவண்ணாமலை ஹொய்சள அரசரின் உதவியை நாடுகிறான். அரசரின் இளம் மனைவி நியோகமுறைப்படி குலசேகரனை கூட விரும்புகிறாள். அதற்கு ஒத்துக் கொண்டு படை பெற்று போரிட்டாலும் முழுத்தோல்வி. குலசேகரன் இறப்போடு முதல் பாகம் முடிகிறது.

குறைகள் இல்லாமல் இல்லை. தெய்வீகக் காதல்கள் பல பக்கங்களில் வருகின்றன, அது நாவலின் வடிவ கச்சிதத்தை குலைக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் மீறித் தெரிவது அரங்கரை மீட்க வேண்டும் என்ற வெறி. அன்று சிலராவது இபபடி உணர்ந்திருக்க வேண்டும். அதைச் சித்தரிப்பதில்தான் இந்த நாவலின் வெற்றி இருக்கிறது.

தினமணி கதிர் பத்திரிகையில் தொடர்கதையாக வந்திருக்கிறது.

ஸ்ரீவேணுகோபாலன்தான் புஷ்பா தங்கதுரை என்ற பேரில் சில பல கிளுகிளு நாவல்களையும் எழுதினார் என்பது தெரிந்திருக்கலாம். ஸ்ரீவேணுகோபாலன் என்ற பேரில் வரலாற்று நாவல்கள், புஷ்பா தங்கதுரை என்ற பேரில் கிளுகிளு கதைகள்.

வரலாற்று நாவல்கள் அனேகமாக வைணவப் பின்புலம் உள்ளவை. ஜெயமோகன் திருவரங்கன் உலா நாவலை நல்ல historical romances வரிசையில் வைக்கிறார். நண்பர் விஷ்வேஷ் ஓப்லா இந்தப் புத்தகங்களைப் பற்றி எழுதியது இங்கே மற்றும் இங்கே.

இந்த நாவல்கள் தந்த ஊக்கத்தில் படித்த வேறு சில வரலாற்று நாவல்களைப் பற்றியும் இங்கேயே எழுதிவிடுகிறேன். தெய்வீகக் காதல் இரண்டை வைத்து மதுரையில் நாயக்கர் ஆட்சி உருவானதை மோகவல்லி தூது என்ற நாவலாக எழுதி இருக்கிறார். சின்னப் பிள்ளைகளுக்கு எழுதிய மாதிரி இருக்கும். மிகை உணர்ச்சி (melodrama) நிறைந்த தென்மேற்குப் பருவம் (இளம் பெண்ணுக்கு இன்னல்) ஒரு காலத்தில் வாசகர்களைக் கவர்ந்திருக்கலாம். கள்ளழகர் காதலிக்கு அதற்குக் கூட வாய்ப்பே இல்லை. மன்மத பாண்டியன் புஷ்பா தங்கதுரை பாணியில் – அதாவது பாலியல் வர்ணனைகள் நிறைய புகுத்தி எழுதப்பட்ட நாவல். இதில் விரல் போடுவது (fingering) எல்லாம் விவரிக்கப்படுகிறது, ராணி பத்திரிகையில் எழுதி இருக்கிறார், எப்படி அனுமதித்தார்களோ!

இந்த இரண்டையும் – குறிப்பாக மதுராவிஜயத்தை – படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்: விஷ்வேஷ் ஓப்லாவின் அறிமுகக் கட்டுரை

2 thoughts on “ஸ்ரீவேணுகோபாலன்: திருவரங்கன் உலா+மதுராவிஜயம்

  1. கிண்டிலில் கிடைக்கின்றது. முதல் பகுதியை ஆரம்பித்து பாதியில் நிறுத்தி விட்டேன். ரங்கனை நூறாண்டுகளுக்கு மேலாக பூஜை செய்வதால், ரங்கநாதர் கோவில் என்றாலே நம்ம இடம் என்ற உணர்வு தானாக வந்துவிடும். எந்த ரங்கனும் கோம்பை ரங்கன்தான் எனக்கு. அதனால் மிகவும் பர்சனலாக தோன்றிவிட்டது. அதுவே ரங்கன் கிளம்பியதும் படிக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, அதோடு வேறு பலவும் சேர்ந்து கொண்டதால் ரங்கன், ஆற்றை தாண்டியதும் நிறுத்தி விட்டேன். படித்தவரை அந்த மக்களின் உணர்வை கடத்திவிட்டார். ஒரு சில புத்தகங்கள் மட்டுமே என்னை உணர்ச்சி வசப்படுத்தி, கண்ணீரை வரவழைத்துள்ளது. இதுவும் ஒன்று. அந்த காதல் போன்றவை சின்ன சின்ன ஸ்பீட் ப்ரேக்கர்கள். திருவரங்கன் உலா இரண்டு பாகமாக கிண்டிலில் உள்ளது, அதில் இரண்டாம் பாகம்தான் மதுராவிஜயமா, இல்லை அது தனி நாவலா???

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.