புஷ்பா தங்கதுரை பற்றி தனியாக ஒரு பதிவு எழுத முக்கிய காரணம் நாஸ்டால்ஜியா. பதின்ம வயதுகளில் சுஜாதாவுக்கு அடுத்தபடி அவரைத்தான் விரும்பிப் படித்தோம். ஒரே காரணம்தான். செக்ஸ் வர்ணனைகள். அந்தக் காலகட்டத்தில் அவர் எழுத்துக்கள்தான் நண்பர்கள் குழுவுக்கு கிளுகிளுப்பூட்டின. ஓரிரு வருஷமாவது புஷ்பா தங்கதுரை புத்தகம் கிடைக்குமா என்று தேடி அலைந்தோம், வீட்டுக்குத் தெரியாமல் மறைத்து வைத்துப் படித்தோம். கழுத்துக்கு கீழே கை என்று படித்தாலே மனம் கிளர்ச்சி அடையும் 13-14 வயது. இவர் பெண் ஓரினச் சேர்க்கை, மார்புக் காம்புகள், கஜுராஹோ சிற்பம் போல உறவு, விரல் போடுவது (fingering) என்றெல்லாம் எழுதி இருக்கிறார். ஏன் புத்தகம் கிடைக்காதா என்று தேடி அலைய மாட்டோம்?
புஷ்பா தங்கதுரையின் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது நாவலை ஜெயமோகன் சிறந்த வணிக நாவல்கள் வரிசையில் வைக்கிறார். வணிக நாவல்களைப் பொறுத்த வரை ஜெயமோகன் தன் கறாரான அணுகுமுறையை பெரிதும் தளர்த்திவிடுகிறார். நானோ வணிக நாவல்களை அவரை விட சீரியசாக எடுத்துக் கொள்பவன். இந்த நாவலின் மகா மோசமான கற்றுக்குட்டி நடை ரொம்பவும் படுத்துகிறது. தெய்வீகக் காதல் என்று உருகிக் கொண்டே இருக்கிறார்கள். தமிழில் வணிக நாவல்கள் எப்படி எல்லாம் மாற்றம் அடைந்தன என்பதைப் பற்றி ஆர்வம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் தவிர்த்துவிடலாம். ஆனால் அந்தக் காலத்தில் வெற்றி பெற்ற நாவல்தான். கமல், விஜயகுமார் நடித்து (தண்டமான) திரைப்படமாகவும் வந்தது.
நந்தா என் நிலா நாவலிலும் இப்படித்தான் காதல் காதல் என்று உருகிக் கொண்டே இருக்கிறார்கள். மஹா போர். விஜயகுமார், சுமித்ரா நடித்து திரைப்படமாகவும் வந்தது.
என் பெயர் கமலா என்ற நாவல்தான் செக்ஸ் வர்ணனைகள் வாரப் பத்திரிகைகளில் கூச்சமில்லாமல் பதிக்கபபட்டதற்கு ஆரம்பம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். விபச்சார விடுதியில் விற்கப்படும் கமலாவின் வாழ்க்கை. அன்று விபச்சாரம் என்றாலே ஆபாசப் புத்தகம் ஆகிவிடும் போலிருக்கிறது. அதே போல சிவப்பு விளக்கு எரிகிறது என்று விபச்சாரத் தொழில் செய்யும் பெண்களின் கதைகள் என்று ஒன்றும் உண்டு. ஆனால் எனக்குத் தெரிந்த வரை சாண்டில்யன்தான் இதற்கெல்லாம் முன்னோடி. ஆனால் சாண்டில்யன் இப்படி எல்லாம் எழுதும்போது எப்படா முடியும் என்று இருக்கும். இவர் எழுதியதையோ விரும்பிப் படித்தேன்.
இன்ஸ்பெக்டர் சிங் துப்பறியும் லீனா மீனா ரீனா, ராகினி ஒரு ஹிப்பி நீ போன்ற கதைகள் கொஞ்சம் பரவாயில்லை. நாங்கள் வளர்ந்த காலத்தில் சில நாவல்களாவது பிடித்திருந்தன. நன்றாக நினைவிருப்பது மங்களா சுபமங்களா என்ற நாவல். அருங்காட்சியக (museum) அதிகாரிகள் சிலர் பெண்களை அனுபவித்துவிட்டு கொலை செய்துவிடுவார்கள். அவர்களின் எலும்புக்கூடுகளை ஆதிச்சநல்லூர் எலும்புக்கூடுகள் என்று அருங்காட்சியகத்தில் மாட்டிவிடுவார்கள். காபரே இலவசம் என்ற சிங் துப்பறியும் கதையில் ஒரு பெண் தன் உள்ளாடையைக் கழற்றி விளையாடி போலீஸ் கண்காணிப்பை ஏமாற்றுவதாக வரும். அந்தக் காலத்தில் கிளுகிளுப்புக்கு கிளுகிளுப்பு, மர்மத்துக்கு மர்மம். துணிந்தபின் சுகமே குறுநாவலில் 12-14 வயது பெண்களைத் தேடும் மனநோய் கொண்டவனைக் கண்டுபிடிக்கும் சாக்கில் பாலியல் perversion-களை விவரிப்பார். வெள்ளி மோகினி குறுநாவலில் ஒரு கொலையின் மர்மத்தை கண்டுபிடிப்பார். கிளுகிளுப்புக்கு இரண்டு இளம் பெண்கள் சிங்குக்கு மசாஜ் செய்துவிடுவார்கள்.
இவற்றைத் தவிர தாரா தாரா தாரா என்று ஒரு கதை கொஞ்சம் சுமாராக இருக்கும்
ஆனால் மீண்டும் படித்த அனேக துப்பறியும் கதைகள் – காதல் இல்லை காதலி, சரிதா சரிதா, துள்ளுவதோ இளமை, மன்மத மருந்து, துரோகம் துரத்துகிறது, இளமைக்கு ஒரு விசா, கடலுக்குள் ஜூலி – உப்பு சப்பில்லாத தண்டங்கள். மேலும் அடுத்த ரூம் பெண், என்றும் இரவுப் பூக்கள், கடைசி வரை காதல் எல்லாம் உலக மகா தண்டம். ஆனால் அந்த வயதில் எது கிளுகிளுப்பாக இருந்தது என்று தெளிவாகவே புரிந்தது.
ஒரு காமிக்ஸ் கதை கூட முயற்சித்திருக்கிறார் –ஹைவே 117.க்ரீச் க்ரீச் க்ரீச் என்ற சிறுவர் நாவலும் உண்டு.
ஸ்ரீவேணுகோபாலன் என்ற பேரிலும் புஷ்பா தங்கதுரை கதைகள் எழுதினார். அனேகமாக வைணவப் பின்புலம் உள்ள சரித்திரக் கதைகள். அந்தப் பெயரில் அவர் எழுதிய திருவரங்கன் உலா, மதுரா விஜயம் நாவல்கள் மட்டுமே எதிர்காலத்திலும் படிக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. வெகு சில இன்ஸ்பெக்டர் சிங் துப்பறியும் நாவல்கள் தமிழ் வணிக நாவல்களில் பொருட்படுத்தப்படலாம். மற்றபடி அவர் எழுதியதெல்லாம் குப்பை என்றேதான் வகைப்படுத்துவேன். ஆனால் ஒரு காலத்தின் தேவையை அவர் ஓரளவுக்கு பூர்த்தி செய்தார் என்பதை மறுப்பதற்கில்லை – எழுபதுகளின் வடுவூரார்.
ஜெயமோகன் திருவரங்கன் உலா நாவலை நல்ல historical romances வரிசையில் வைக்கிறார். ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது நாவலை நல்ல social romances வரிசையில். முன்னதை ஏற்கிறேன். பின்னதோடு 100% வேறுபடுகிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து