தொல்லியல் நிபுண்ர் நாகசாமி தனது 91-ஆவது வயதில் மறைந்தார் (ஜனவரி 23, 2022).
நாகசாமி பத்மபூஷன் விருது பெற்றவர். தமிழ்நாட்டின் தொல்லியல் துறையின் முதல் தலைவராகப் பணியாற்றியவர். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் வல்லவர். சோழர் கால செப்பு சிற்பங்களைப் பற்றிய முதன்மை நிபுணர். சிவபுரம் நடராஜர் சிலை ஒன்று லண்டனுக்குக் கடத்தப்பட்டபோது இவரைத்தான் நிபுணர் சாட்சியாக விசாரித்தார்கள். அந்த நீதிபதி இவரது சாட்சியத்துக்குப் பிறகு விசாரிக்க ஒன்றுமே இல்லை, சிலையை தமிழகத்துக்கு திருப்பி அனுப்புங்கள் என்று தீர்ப்பளித்தார்.
அவர் எழுதிய புத்தகங்கள், தொல்லியல் துறை தலைவராக இருந்தபோது அவர் அமைத்த கண்காட்சிகள், சென்னை அருங்காட்சியக அதிகாரியாக (தலைவர்?) இருந்தபோது அவர் அமைத்த காட்சிகள் எல்லாவற்றிலும் அடிநாதமாக இருந்தது இவை அநிபுணர்களிடம் – சாதாரணர்களிடம் – போய்ச் சேர வேண்டும் என்ற விழைவு. அருங்காட்சியகத்தில் பணியாற்றியபோது பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகளை ஒரு காட்சியாக அமைத்தார். எட்டயபுரத்தில் பாரதியாரின் வீடு ஏதோ சிறு தொழிற்கூடமாகவே இருந்திருக்கிறது, அதை மீட்டெடுத்து சீரமைத்தார். அரசு அலுவலகங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்த திருமலை நாயக்கர் மஹாலை ஒளி அமைப்புகளை ஏற்பாடு செய்து பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்தார்.
அதுவும் அவர் அறுபது எழுபதுகளில் எழுதியவற்றில் புகைப்படங்கள் நிறைந்திருக்கும். புகைப்படங்களை புத்தகத்தில் பதிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர், சாதாரணர்களுக்கு அது உதவியாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தார். அந்தக் காலத்தில் புகைப்படம் எடுப்பது எளிதல்ல. குறிப்பாக, புகைப்படங்களுக்காகவே அவரது Art of Tamil Nadu புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன். சுட்டியை கிளிக்கினால் சில புகைப்படங்களைப் பார்க்கலாம். முழுப் புத்தகமும் இங்கே கிடைக்கிறது.
ஆனால் அவரது எல்லா புத்தகங்களும் சாதாரணர்களுக்கு அல்ல, சில நிபுணர்களுக்கு மட்டும்தான். ஆனால் சாதாரணர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நிறைய புத்தகங்களை எழுதி இருக்கிறார். எடுத்துக்காட்டாக தஞ்சை பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் என்ற புத்தகம் பெரிய கோவில் கல்வெட்டுக்களை புரியும் வகையில் சொற்களைப் பிரித்து பதிக்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய கோனார் நோட்ஸ். வரலாற்றை நம் போன்றவர்களுக்கு அருகில் கொண்டு வர முயற்சி எடுத்தார், அந்த ஒரு காரணத்துக்காகவே அவரை நினைவு கூரலாம்.
என் தங்கையின் மாமனார். முதல் முறை அவர் வீட்டுக்குப் போனபோதே அவரைப் பற்றி புரிந்துவிட்டது. அவரது அறையின் சுவர் முழுக்க புத்தக அலமாரிகள். அலமாரிகள் பற்றாமல் அங்கங்கே இறைந்து கிடந்த புத்தகங்கள். கண்ணை எடுக்க முடியவில்லை. தங்கையின் நிச்சயதார்த்தம் பாட்டுக்கு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க நான் காலேஜில் கட் அடிப்பது போல நிச்சயதார்த்த நிகழ்ச்சியை அவ்வப்போது கட் அடித்துவிட்டு அவர் நூலகத்தில் உட்கார்ந்திருந்தேன்.
அவருடன் தஞ்சை பெரிய கோவிலுக்குப் போனது மறக்க முடியாத அனுபவம். சுற்றுப் பிரகாரத்தில் இருந்த கல்வெட்டுகளை நான் தினத்தந்தி படிப்பது போல படித்துக் காட்டிக் கொண்டே போனார். அவர் தயவில்தான் தஞ்சை பெரிய கோவில் ஓவியங்களைப் பார்க்க முடிந்தது.
முதுமை அவரை கொஞ்சம் பாதித்திருந்தது. உடல் தளர்ந்துவிட்டது. ஆனால் கடைசி வரை எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும்தான் இருந்தார். அதுவும் பெரிய பூதக் கண்ணாடி வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய நிலை, ஆனால் படிப்பது கடைசி வரை நிற்கவே இல்லை.
அவரது கருத்துக்கள் சில – தமிழ் மரபு வைதீக மரபின் வளர்ச்சியே, திருக்குறள் வேதங்களின் தொடர்ச்சியே, மஹாபலிபுர சிற்பங்கள், கோவில்களைக் கட்டியது நரசிம்மவர்ம பல்லவர் அல்லர், அவரது பேரனான ராஜசிம்ம பல்லவர் – போன்றவை எனக்கு வியப்பளித்தன. ஆனால் அவற்றைப் பற்றி அவருடன் வாதிடும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது. தமிழ் மரபைப் பற்றியும் வைதீக மரபைப் பற்றியும் நுனிப்புல் மேய்ந்திருக்கும் நான் அவற்றை கரைத்துக் குடித்திருக்கும் அவரிடம் என்ன வாதிட? குடும்பத்துப் பெரியவர் என்ற மரியாதை வேறு குறுக்கே நின்றது. அதனால் என் கருத்து வேறுபாடுகளைப் பற்றி அவரிடம் எதுவும் பேசியதில்லை.
அதுவும் மாமல்லை, New Light on Mamallapuram என்ற புத்தகங்களில் மஹாபலிபுர சிற்பப் பொக்கிஷங்களை நிறுவியவர் நரசிம்மவர்மர் அல்லர், ராஜசிம்மரே என்ற வாதங்கள் வலுவாகத்தான் இருந்தன. இதைப் போலவே தமிழ் மரபு பற்றியும் அவர் வலிமையான வாதங்களை முன்வைத்திருக்கலாம், அவர் எழுதிய Tamil Nadu: The Land of Vedas போன்ற புத்தகங்களை புரட்டியாவது பார்த்த பிறகுதான் அவருடன் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது வாய்ப்பைத் தவற விட்டுவிட்டோமே என்று தோன்றுகிறது.
அவரது புத்தகங்களின் நான் பரிந்துரைப்பது Art of Tamil Nadu, மாமல்லை, New Light on Mamallapuram, சொல்மாலை, தஞ்சை பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள். (நான் படித்தவை வெகு சிலவே.) இவற்றுள் மாமல்லை மாதிரி பள்ளிப் பருவத்தில் வரலாற்றைப் படித்திருந்தால் அது மனதில் பதிந்திருக்கும். சிறப்பான புத்தகம். மாமல்லபுரத்தின் அரசியல் வரலாறு, இலக்கியச் சான்றுகள், கோவில்கள், சிற்பங்கள் எல்லாவற்றையும் அருமையாக, புரியும்படி விவரித்திருக்கிறார். சொல்மாலை பல கோவில் கல்வெட்டுகளை புரியும்படி விளக்குகிறது. தஞ்சை பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் பெரிய கோவில் கல்வெட்டுக்களை புரியும் வகையில் சொற்களைப் பிரித்து பதிக்கப்பட்டிருக்கிறது.
நாகசாமியின் மகனான மோகன் நாகசாமி அவர் எழுத்துக்களுக்காகவே தமிழ் ஆர்ட்ஸ் அகாடெமி என்ற தளத்தை நடத்தி வருகிறார். மோகனுக்கு அவரது எல்லா எழுத்துக்களையும் இணையத்தில் ஏற்றிவிட வேண்டும் என்ற பெரிய விழைவு உண்டு, அது பூர்த்தி ஆகட்டும்!
நாகசாமியின் பல புத்தகங்கள் தமிழ் இணைய நூலகத்திலும் (சுட்டி 1, சுட்டி 2, சுட்டி 3) ஆர்க்கைவ் தளத்திலும் (சுட்டி 1, சுட்டி 2) கிடைக்கின்றன.
தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்
தொடர்புள்ள சுட்டிகள்: