செப்டம்பர் பலி எழுபது-எண்பதுகளில் வாரப் பத்திரிகை தொடர்கதையாக வந்தது என்று நினைவு. அப்போது அங்கும் இங்குமாக படித்திருக்கிறேன்.
இன்று முழுமையாகப் படிக்கும்போது வாரப் பத்திரிகை தொடர்கதைகளில் அவ்வப்போது ஏற்படும் கச்சிதக் குலைவு இல்லாமல் சீராகச் செல்வது தெரிகிறது. சினிமாத்தனமான நிகழ்ச்சிகளிலும் நம்பகத்தன்மை இருக்கிறது. அங்கங்கே சுஜாதாவின் டச் தெரிகிறது. ஆனால் எளிமையான வணிக நாவல் என்பதும் தெளிவாகப் புரிகிறது.
என்ன கதை? பெங்களூர். எளிய மனிதன் தங்கசாமி மீது கொலைக்குற்றம் ஜோடிக்கப்படுகிறது. மூன்று வருஷம் சிறை. பணக்காரப் பெண் வினோதினியோடு தற்செயலாக பழக்கம். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு நிழலான முதலாளியைத் தேடுகிறான். வினோதினி உதவுகிறாள். காதல். அவளது அப்பாவும் சம்மதிக்கிறார். முடிவில் வழக்கமாக தமிழ்ப்படங்களில் வருவது போல வில்லன் யார் என்று ஒரு திடுக்கிடும் திருப்பம். தங்கசாமியால் ஒன்றும் செய்யமுடியாது. வில்லன் கோஷ்டியோடு கைகோர்ப்போம், செப்டம்பருக்குள் அவர்களை பலி கொடுப்போம் என்று வினோதினி அவனுக்கு தைரியம் தருகிறாள்.
ஓட்டைகள் இல்லாமல் இல்லை. முதலாளியைத் தேடும் தங்கசாமி தனக்குத் தெரிந்த சின்ன லெவல் வில்லன் கோஷ்டி ஆசாமிகள் – பட்டர், வக்கீல் – மூலம் அடுத்த நிலை வில்லன்கள் பக்கம் போக முயற்சியே எடுப்பதில்லை. இன்னொரு ஓட்டையை விவரித்தால் வில்லன் யார் என்று தெரிந்துவிடும், அதனால் வாயைப் பொத்திக் கொண்டுவிடுகிறேன்.
சுஜாதாவின் டச் சில இடங்களில் தெரிகிறது. பெண் பாத்திரங்கள் – வினோதினி, கிருஷ்ணவேணி – நன்றாக வந்திருக்கின்றன. நடைமுறையில் நடக்காதுதான், ஆனாலும் வினோதினி-தங்கசாமி ஈர்ப்பு இயல்பாக இருக்கிறது. சிறையில் அத்துமீறல்களைக் கண்டுகொள்ளாத அதிகாரி, போலீஸ் விசாரணைகள் இயல்பாக இருக்கின்றன(ர்).
இந்த நாவலைப் படிக்கும்போது எனக்கு மீண்டும் மீண்டும் தோன்றிய எண்ணம் இதை ஏன் திரைப்படமாக எடுக்கவில்லை என்பதுதான். இது நல்ல மூலக்கதை. விஜய் போன்றவர்களை நாயகனாக வைத்து மாஸ் திரைப்படமாக எடுக்கலாம். தனுஷ் போன்றவர்களை நாயகனாகப் போட்டு நடிக்கவும் வைக்கலாம். யாராவது உதவி இயக்குனர்கள் இந்தப் பக்கம் வந்தால் யோசிங்கப்பா!
படிக்கலாம். ஆனால் எளிய வணிக நாவல்தான்.
தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்