ஃபாண்டம்

காமிக்ஸ், அதுவும் சாகச காமிக்ஸ் அறிமுகமானது இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ மூலம்தான். அதற்குப் பிறகு முத்து காமிக்ஸில் பிறகு வேறு நாயகர்கள் வந்தாலும் – ரிப் கிர்பி, சிஸ்கோ கிட், மாண்ட்ரேக் மாதிரி – யாரும் முதல் மூவர் அளவுக்கு மனதைக் கவரவில்லை. ஓரளவு அருகே வந்தது ஃபாண்டம் மட்டுமே.

ஃபாண்டம் ஏறக்குறைய டார்ஜான். நீண்ட பாரம்பரியம் உள்ள டார்ஜான். கதைகள் தனிப்பட்ட முறையில் எதுவும் பெரிதாக சுவாரசியப்படவில்லைதான். ஆனால் மண்டையோட்டு குகை, பந்தர் பிக்மிக்கள், கதை சொல்லும் மோஸ், பாண்டமின் ஓநாய், அவரது வெள்ளை குதிரை, பல தலைமுறை ஃபாண்டம்கள் எழுதி வைத்திருக்கும் சாகச வரலாறு, மண்டையோட்டு முத்திரை பதிக்கும் அவரது மோதிரம், இவைதான் காமிக்ஸ்களை சுவாரசியப்படுத்தின.

முதல் ஃபாண்டம் ஐநூறு அறுநூறு வருஷங்களுக்கு முன் கப்பல் உடைந்து ஆஃப்ரிக்காவின் காடுகளில் வந்து சேர்கிறார். பிக்மிக்கள் அவரது நண்பர்களாகிறார்கள். கடற்கொள்ளையர்களை எதிர்த்துப் போராடுசதை தன் சுயதர்மமாகக் கொள்கிறார். அவரது சந்ததியினரும் அப்படியே. காட்டின் காவல்துறை ஒன்றை உருவாக்குகிறார். இன்றைய ஃபாண்டமின் மனைவி டயானா. அவரும் அப்படியே சர்வாதிகாரிகள், கடற்கொள்ளையர்கள் எல்லாரையும் எதிர்த்துப் போராடுகிறார்.

பொதுவாக இன்றைய ஃபாண்டமின் சாகசங்களை விட சென்ற தலைமுறையினரின் சாகசங்கள் எனக்கு சுவாரசியமாக இருக்கும்.

ஃபாண்டம் பாத்திரத்தை படைத்தவர் லீ ஃபாக்.

சமீபத்தில் புத்தகமாக சிலவற்றை படித்தேன். சிறு வயதில் படிக்கத்தான் என்றாலும் எனக்கு நாஸ்டால்ஜியா, அவ்வப்போது புன்னகைத்தேன். எதையாவது படிப்பது என்றால் Story of Phantom, Slave Market of Mucar இரண்டையும் பரிந்துரைக்கிறேன்.

காமிக்ஸாக இல்லாமல் புத்தகமாகப் படித்தவை – Story of Phantom, Slave Market of Mucar, Golden Circle, Veiled Lady, Hydra Monster, Mysterious Ambassador, Mystery of the Sea Horse, Scorpia Menace.

இவை எல்லாம் பத்து வயதிற்குள் படிப்பதற்குத்தான். அதுவும் காமிக்ஸாகப் படிப்பதுதான் உத்தமம். ஆனால் அந்த வயதில் படிக்க மிக சுவாரசியமானவை.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்