இன்று ஒரு esoteric விஷயத்தைப் பற்றி பதிவு. 1947-க்கு முன்னால் நாடகங்களிலும் தனிப் பாடல்களாகவும் தேசத் தலைவர்களைப் பற்றி பாடப்பட்ட பாடல்கள் பற்றி. இதற்கான உந்துதல் தமிழ் இணைய நூலகத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் பல பாடல் புத்தகங்களால் ஏற்பட்டது. (எடுத்துக்காட்டாக: சர்தார் பகவத் சிங் தேசீய சங்கீர்த்தனம்)
எனக்கு பழைய தமிழ் நாடகங்களின் – பாய்ஸ் கம்பெனி நாடகங்கள் – மீது ஆர்வம் உண்டு. அவற்றை அந்தக் காலத்தில் விரும்பிப் பார்த்த ரசிகர்களின் மனநிலை, அவர்களின் அறிவுப்புலம் பற்றி கொஞ்சம் வியப்புண்டு. இன்று வசதிகளும் படிப்பும் உள்ள என்னை, என் தலைமுறையினரை விட கர்நாடக சங்கீதத்தை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். மணிக்கணக்காக இசையை கேட்கும் பொறுமை உள்ளவர்கள்.
அவர்களின் அரசியல் அறிவு, நாட்டு நடப்பு பற்றி புரிதல் பற்றியும் எனக்கு குழப்பம்தான். “பண்டித மோதிலால் நேருவை பறிகொடுத்தோமே” என்று யாரோ ஒரு ராஜபார்ட் நாடகத்தில் பாடினால் அந்த நாடகத்தைப் பார்க்க காலணா அரையணாவுக்கு டிக்கெட் வாங்கி எங்கோ பின்னால் உட்கார்ந்து பார்க்கும் கிராமப்புற உழைப்பாளிகளுக்கு யார் இந்த மோதிலால் நேரு என்று கேள்வி எழுந்திருக்குமா? அவர் இறந்துவிட்டார் என்று தெரிந்திருக்குமா? படிப்பறிவு குறைவான காலத்தில், செய்தித்தாள்கள் பரவலாகாத காலத்தில் இந்த செய்திகள் எல்லாம் கிராமங்களை எப்படி சேர்ந்தன?
காந்தியைப் பற்றி பாடல்கள் பிரபலமாக இருந்தன, அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் காந்தியை வைத்து நலங்கு, ஊஞ்சல் பாடல்கள் வரை எழுதி இருக்கிறார்கள். பகத்சிங் ஓரளவு பிரபலமாக இருந்தால் அதுவும் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிகிறது. உள்ளூர் தலைவர்கள் ராஜாஜி பற்றி பாட்டுக்கள் எழுதப்பட்டால் புரிந்து கொள்ள முடிகிறது. டாக்டர் கிச்லூ? மௌலானா ஷௌகத் அலி? சி.ஆர். தாஸ்? டி.எஸ்.எஸ். ராஜன்? இந்த நூலகத்தில் பார்த்த பாடல்களின் தலைவர்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. யார் யார் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று அனுபந்தம் இருக்கிறது. (தந்துகூரி பிரகாசம், ருக்மிணி லக்ஷ்மிபதி, அன்றைய எம்.எல்.ஏ. அஞ்சலை அம்மாள், ரத்தினசாமி தேவர், கிருஷ்ணசாமி பாரதி…) நான் நினைப்பதை விட அதிகமாக தேசீய இயக்கம் கிராமங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
இன்னொரு சுவாரசியம். யாரைப் பற்றி பாட்டு இருந்தாலும் அதில் காந்தி மகான் என்று இரண்டு வரி வந்துவிடுகிறது. அது காந்தீய வழியை நிராகரித்த பகத்சிங் பற்றிய பாட்டாக இருந்தாலும் சரி!
எனக்கு இந்தப் பாடல்கள் பற்றிய அறிமுகம் என் சிறு வயதில் மறைந்த இயக்குனர் ஏ.பி. நாகராஜன் நடத்திய ஒரு வானொலி நிகழ்ச்சியிலிருந்து கிடைத்தது. தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர், எஸ்.எஸ். விஸ்வநாததாஸ், மதுரகவி பாஸ்கரதாஸ், சாப்ஜான் போன்ற பேர்களை முதன்முதலாக அப்போதுதான் கேள்விப்பட்டேன். “கதர் கப்பல் கொடி தோணுதே” என்று எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் பாடிய ஒரு பாடல் இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. பிற்காலத்தில் வெ. சாமிநாத சர்மா, டி.கே.எஸ். சகோதரர்கள், எஸ்.வி. சஹஸ்ரநாமம், தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர் போன்றியவர்களின் பங்களிப்பைப் பற்றி அங்கும் இங்குமாக படித்திருக்கிறேன். Truly fascinating.
காவல் துறை கெடுபிடி அதிகம், அதனால் கொஞ்சம் குறியீடாக சொல்வது ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. கே.பி. சுந்தராம்பாள் வள்ளியாக வந்து வெள்ளைக் கொக்குகளை விரட்டினால், அது வெள்ளையர்களை விரட்டுவதாக புரிந்து கொண்டு கை தட்டி இருக்கிறார்கள். சஹஸ்ரநாமம் வாலீசனாக (William Wallace) நடித்து அரசுக்கு எதிராக புரட்சி செய்து தூக்கு தணடனை விதிக்கப்பட்டால் (பாணபுரத்து வீரன்) அது பகத்சிங்கை குறிப்பதாக சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு நாடகத்தை காவல்துறை தடை செய்தால், உடனே நாடகத்தின் பேரை மட்டும் மாற்றி அதையே அரங்கேற்றி இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் வெளிப்படையாகவும் எழுதி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக.
பூனை இது பூனை – இது
வெள்ளைக்காரப் பூனை
நம்மைக் கொல்ல வந்த பூனை
இந்தப் பதிவு எல்லாருக்கும் சுவாரசியப்படும் என்று தோன்றவில்லை. ஆனால் உங்களுக்கு ஏதாவது நினைவுகள், இல்லை கருத்துகள் இருந்தால் கட்டாயம் சொல்லுங்கள்
பின்குறிப்பு: பாடல் புத்தகங்களில் எனக்கு அதிசுவாரசியமாக இருந்தது விளம்பரங்கள். அடிக்கடி விளம்பரப்படுத்தப்பட்டது கொக்கோகம் புத்தகம்! புத்தக விளம்பரங்கள் அந்தக் காலத்து “செக்ஸ்” புத்தகங்கள் பற்றிதான். “தாய்க்கிழவிகள் தளுக்கு”, “படுக்கை அறையில் பாசாங்கு செய்த பங்கஜவல்லி”, அமிர்த சஞ்சீவி தாதுவிருத்தி லேகியம், ஜெகமெங்கும் புகழ் பெற்ற ஜெயலக்ஷ்மி கூந்தல் வளரும் பரிமளத் தைலம் என்று பல. காந்தியைப் பற்றிய பாடல் புத்தகத்தில் இந்த மாதிரி ஒரு விளம்பரம் வருவதின் நகைமுரணை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மதிமோசக் களஞ்சியம் என்ற புத்தக விளம்பரத்தில் வழக்கமான “தேவடியாள் மோசம்”, “தட்டுவாணி மோசம்”, “மார்வாடி மோசம்”, தவிர “மூர்மார்க்கெட் சன்னியாசிகள் மோசம்”, “திருப்பதி போகும் உத்தியோகஸ்தர் மோசம்” என்று வருகிறது, அது என்னடா மோசம் என்று மண்டையைக் குடைகிறது!
அண்டப் புளுகனை அதட்டி ஆகாயப் புளுகனை விரட்டி திடீர் புளுகனை துரத்தி ஜண்டப் புளுகன் வண்டிப் புளுகன் மதராஸ் புளுகன் முதலிய பிரபல புளுகர்களை ஜெயித்து புளுகர்களுக்கு அரசனாக விளங்கிய நிமிஷப் புளுகனை வென்ற நிஜப்புளுகன்
என்ற புத்தகத்தை படிக்க உண்மையிலேயே ஆவலாக இருக்கிறது. அது என்னங்க நிஜப்புளுகன்!
பின்குறிப்பு 2: காப்புரிமையை நடைமுறைப்படுத்துவது இன்றே கஷ்டம். அன்றைய ஆசிரியரின் ஆங்காரம்!
உண்மையாய் ஒருவனுக்கு உத்தமி பெற்றிருந்தால்
அன்புடன் எனது நூலை அச்சிட மனதில் எண்ணான்
முன்னூறு பேர் சேர்ந்து மூதாரி முண்டை பெற்றால்
என் நூலை அச்சிட எண்ணம் கொள்வான்தானே
தொகுக்கப்பட்ட பக்கம்: விடுதலைப் போராட்டம்