ஷேக்ஸ்பியர் நாடகம்: மூன்றாம் ரிச்சர்ட்

இன்னும் தொடர்ந்து எழுதுவதற்கான மனநிலை – rhythm – வரவில்லை. அதுவும் அடுத்ததாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது ஷேக்ஸ்பியரின் Richard III நாடகம். எழுத வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் எனக்கு ஏன் இந்த நாடகம் பிடித்திருக்கிறது என்ற கேள்வி எழும். சரியாக பதிலை தொகுத்துக் கொள்ள முடியாது, எழுதுவது தள்ளிப் போகும்.

பொதுவாக ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்கள்தான் சிறப்பானவை என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. Richard III நாடகம் அந்த எண்ணத்தை இன்னும் உறுதிப்படுத்துகிறது.

முதல் பத்து வசனங்களிலேயே கதை சூடு பிடிக்கிறது. ரிச்சர்டின் பதவி ஆசை, எதையும் செய்யத் தயங்காத குணம், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது, அவரது அழகற்ற உருவம் அவரது இயல்பின் மீது ஏற்படுத்தும் தாக்கம் எல்லாம் பத்து வரியில் புரிந்துவிடுகிறது. ரிச்சர்ட் ஒரு பயங்கர வில்லன் என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் அவருக்கு தான் யார், எப்பேர்ப்பட்டவர் என்று நன்றாகவே தெரிந்திருக்கிறது. அடுத்தவர்களிடம் நடித்துக் கொண்டே இருக்கிறார், ஆனால் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்பவர் அல்ல. ரிச்சர்ட் பாத்திரத்தின் கவர்ச்சியே அந்த தன்னை ஏமாற்றிக் கொள்ளாத தன்மைதான். ஒரு பயங்கர வில்லனை தன் உள்ளத்துக்கு நேர்மையானவர் என்றால் எனக்கே விசித்திரமாகத்தான் இருக்கிறது, ஆனால் அதுதான் உண்மை. பத்து வரியில் நமக்கு இத்தனை புரிய வைப்பதுதான் ஷேக்ஸ்பியரின் திறமை.

நல்ல நடிகர்கள் பிய்த்து உதறக் கூடிய பாத்திரம். லாரன்ஸ் ஒலிவியரின் நாடகம் மற்றும் திரைப்படம் மிகச் சிறப்பானதாம். (இரண்டையும் நான் பார்த்ததில்லை)

முதல் காட்சிக்கு முன்னால் ரிச்சர்ட் ஒரு உள்நாட்டுப் போரில் தன் அண்ணனும் அரசனுமான நான்காம் எட்வர்டுக்கு துணை நின்று எதிரிகளை வென்றிருக்கிறார். அவர்தான் முக்கிய எதிரிகளான ஆறாம் ஹென்றி, அவரது மகன் எட்வர்ட் இருவரையும் கொல்வதாகவே சொல்லப்படுகிறது. போர் முடிந்துவிட்டது, அடுத்தது என்ன, தான் எப்படி எல்லாரையும் கவிழ்த்துவிட்டு அரசனாவது என்று வசனம் பேசுகிறார். தன் இன்னொரு சகோதரனான க்ளாரென்ஸ் மீது கோள் மூட்டி அவரை சிறையில் தள்ள ஏற்பாடு செய்திருக்கிறார். ஏனென்றால் எதிர்காலத்தில் தனக்குப் போட்டியாக வந்துவிடுவானோ என்ற பயம். முதல் காட்சியில் க்ளாரென்ஸைப் பார்த்ததும் அய்யோ நம் அண்ணன் உன்னை சிறையில் தள்ளுகிறானே, நான் அவனிடம் பேசிப் பார்க்கிறேன் என்று நீலிக்கண்ணீர். க்ளாரென்ஸும் ரிச்சர்டை நம்புகிறார்.

அடுத்த காட்சி மிகப் பிரமாதமாக எழுதப்பட்டது. உள்நாட்டுப் போரில் தான் கொன்ற எட்வர்டின் மனைவி ஆன் நெவில் எட்வர்டின் பிணத்தை அடக்கம் செய்ய வருகிறார். தான் ஆன் நெவிலை காதலிப்பதாகவும், அதனால்தான் எட்வர்டை கொன்றதாகவும் ஆனை நம்ப வைக்கிறார். ஆனும் எட்வர்டின் பிணம் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்படும்போதே ரிச்சர்டின் “காதலை” ஏற்கிறார். ஆனும் ரிச்சர்டும் ஒருவருக்கொருவர் counter கொடுப்பது பிரமாதம்.

அதற்கு அடுத்த காட்சியும் மிகப் பிரமாதமானது. இறந்து போன ஹென்றியின் அம்மா ரிச்சர்டை பிற பெண்கள் – அரசி, அரசியின் உறவினர்கள் எல்லார் முன்னாலும் சபிக்கிறாள் பாருங்கள், படிக்கும் நமக்கே பக் என்று ஆகிவிடுகிறது. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள காட்சி.

பிறகு ரிச்சர்ட் சிறையில் இருக்கும் க்ளாரென்ஸை கொல்ல ஏற்பாடு செய்கிறார். பழி அண்ணனும் அரசனுமான எட்வர்ட் பேரில். எல்லாரும் தன்னை நம்பும்படி நடந்து கொள்கிறார். இறந்து கொண்டிருக்கும் எட்வர்ட் ரிச்சர்டை தன் மகன்களுக்கு பாதுகாவலராக நியமிக்கிறார். இளவரசருக்கு பட்டம் சூட்டப் போகிறேன் என்று எல்லாரையும் நம்ப வைக்கும் ரிச்சர்ட் அவர்களை லண்டனுக்கு அழைத்து வந்து சிறைப்படுத்துகிறார். அவர்களுக்கு ஆதரவாக இருக்கக் கூடிய மாமன் மச்சான் எல்லாரையும் கொன்றுவிடுகிறார். இரண்டு இளவரசர்களும் முறைதவறிப் பிறந்தவர்கள் என்று ஒரு கதையை ஆரம்பித்து தானே முடி சூட்டிக் கொள்கிறார். தன் மனைவி ஆகிவிட்ட ஆன் நெவிலுக்கு விஷம் வைத்துக் கொன்றுவிடுகிறார். தன் அண்ணன் மகளை மணந்து கொள்ள பெருமுயற்சி செய்கிறார். தனக்கு பெரும் உதவியாக இருந்து பிறகு மனத்தாங்கலோடு விலகிய பக்கிங்ஹாம் பிரபு எப்படியோ மாட்டிக் கொண்டுவிட அவரையும் கொல்கிறார். அவரை எதிர்த்து வரும் ஏழாம் ஹென்றியிடம் போரில் தோற்று போர்க்களத்தில் இறந்து போகிறார்.

தன் அண்ணன் மகன்களைக் கொன்றுவிட்டு அண்ணியிடம் மகளைத் திருமணம் செய்து கொடு என்று கேட்கும் காட்சியும் மிக நன்றாக எழுதப்பட்ட ஒன்று. ரிச்சர்ட் முடிசூட்டிக் கொள்ளப் போகிறார் என்று தெரிந்ததும் முன்னாள் அரசி, சாபம் விட்ட பழைய அரசி, அரசி ஆகப் போகும் ரிச்சர்டின் மனைவி ஆன் நெவில் ஆகியோர் எப்படி சாபம் விடுவது என்று பேசுவதும் இன்னொரு நல்ல காட்சி.

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு நாம் இன்றும் மேற்கோள் காட்டும் வரிகள். இந்த நாடகத்தில் எனக்கு இரண்டுதான் தெரிந்தன.

Now is the winter of our discontent
Made glorious summer by this son of York

மற்றும்

A horse, a horse, my kingdom for a horse!<

நாடகத்தை இணையத்தில் படிக்கலாம்.

இந்த நாடகம் அன்றைய பொதுப் புரிதலை வைத்து எழுதப்பட்டது. ஷேக்ஸ்பியர் எலிசபெத் ராணி காலத்தவர். ரிச்சர்ட் மறைந்து கிட்டத்தட்ட 150 வருஷங்களுக்குப் பின்னால் (1592/1593) இந்த நாடகத்தை எழுதினார். அவருக்கு முக்கிய ஆதாரம் 1520-வாக்கில் அதாவது ரிச்சர்ட் இறந்து 40 வருஷங்களுக்குள் தாமஸ் மோர் எழுதிய ரிச்சர்டின் வரலாறு. தாமஸ் மோர் ரிச்சர்டை போரில் வென்று அரசரான ஏழாம் ஹென்றியின் மகனான எட்டாம் ஹென்றியின் அமைச்சர். அதாவது ரிச்சர்ட் மோரின் அரசரின் அப்பாவுக்கு எதிரி. மோர் ரிச்சர்டை மகா கொடூரமான, ஈவு இரக்கம் இல்லாத, பதவிக்காக எதையும் செய்யக் கூடிய வில்லனாக சித்தரித்திருக்கிறார். ஷேக்ஸ்பியர் காலத்து அரசியான எலிசபெத் ராணியும் ரிச்சர்டின் எதிரியின் வம்சாவளிதான். ஷேக்ஸ்பியரும் ரிச்சர்டை அப்படித்தான் சித்தரித்திருக்கிறார்.

தாமஸ் மோர்தான் புகழ் பெற்ற உடோபியா என்ற புத்தகத்தையும் எழுதியவர். மோர் தன் அரசனின் அப்பாவின் எதிரியான ரிச்சர்டை எதிர்மறையாகத்தான் சித்தரிப்பார், ரிச்சர்ட் இத்தனை கொடூரமானவர் கிடையாது என்றும் பலர் இப்போது வாதிடுகிறார்கள். எனக்கு இந்தத் தியரி இன்னொரு புனைவு மூலம் (ஜோசஃபைன் டே எழுதிய Daughter of Time) அறிமுகம் ஆயிற்று. அதுவும் ஒரு நல்ல (துப்பறியும்) புத்தகம், என்றாவது அதைப் பற்றியும் எழுத வேண்டும்

மூன்றாம் ரிச்சர்டின் வரலாற்றுப் பின்புலம் தெரியாவிட்டாலும் இந்த நாடகத்தைப் படிக்கலாம்தான். ஆனால் தெரிந்தால் இன்னும் உத்தமம்.1452-இல் பிறந்த மூன்றாம் ரிச்சர்ட் ப்ளாண்டாஜெனட் மன்னர்களில் கடைசி அரசர். 31 வயதில் அரசர் ஆகி 33 வயதில் போரில் இறந்தார். அழகற்றவர், கூனர் என்று படித்திருக்கிறேன்.

வாரிசுரிமைப் போர்கள் நடந்து கொண்டே இருந்த காலம். தன் அண்ணன் நான்காம் எட்வர்டுக்கு துணை நின்று அன்றைய மன்னர் ஆறாம் ஹென்றியை அரசுப் பதவியிலிருந்து இறக்க உதவி செய்தார். ஹென்றி எப்படியோ எட்வர்டைக் கவிழ்த்து மீண்டும் அரசனானாலும், ரிச்சர்ட் மீண்டும் அண்ணனுக்கு துணை நின்று ஹென்றி, அவரது மகன் எட்வர்ட் இருவரையும் வென்றார். பிறகு தான் கொன்ற எட்வர்டின் மனைவி ஆன் நெவிலை மணக்கிறார். அண்ணன் எட்வர்ட் தான் இறக்கும்போது ரிச்சர்டை தன் சிறு வயது மகன்களுக்கு பாதுகாவலனாக நியமிக்கிறார். ரிச்சர்டோ அவர்கள் இருவரையும் Tower of London-இல் சிறையிடுகிறார். பிறகு அவர்களையும் கொன்றுவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அரசனாகிறார். எதிர்ப்பவர்கள், எதிர்க்கக் கூடிய வாய்ப்புள்ளவர்கள் என்று எல்லா பிரபுக்களையும் கொன்று தள்கிறார். இரண்டு வருஷத்துக்குள் ஏழாம் ஹென்றி இவரை எதிர்த்து வெல்கிறார். ரிச்சர்ட்தான் போரில் மாண்ட கடைசி இங்கிலாந்து அரசர்.

இருபத்து சொச்சம் வயதில் நாடகத்தைப் படித்துவிட்டு பிறகு பின்புலத்தை புரிந்து கொள்வதற்காக சில வரலாற்றுப் புத்தகங்களையும் புரட்டிப் பார்த்தேன். மன்னர்களுக்கு ஹென்றி விட்டால் எட்வர்ட் விட்டால் ரிச்சர்ட் என்றுதான் பேர். வேறு பேரே கிடைக்காதா என்று கடுப்பாக இருந்தது. எந்த ஹென்றிக்கு எந்த எட்வர்டோடு போர் என்று புரிந்து கொள்வதே மகா கஷ்டம். அதுவும் இங்கிலாந்து வரலாற்றில் எனக்கென்ன பெரிய ஆர்வம்?

பிடித்த நாடகத்தைப் பற்றி எழுதுவதில் எனக்கென்ன மனத்தடை? நாடகத்தின் உணர்ச்சி பொங்கும் வசனங்கள், வார்த்தை விளையாட்டு ஆகியவற்றைத்தான் சாமிநாத சர்மாவின் பாணபுரத்து வீரன், அண்ணாதுரையின் சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம், பம்மல் சம்பந்த முதலியாரின் மனோகரா, கருணாநிதியின் பொற்கால திரைப்பட வசனங்கள் (மந்திரிகுமாரி, மனோகரா) ஆகியவற்றிலும் முயற்சித்திருக்கிறார்கள். இவற்றுக்கும் இந்த நாடகத்துக்கும் உண்மையிலேயே என்னதான் வித்தியாசம், ஏன் அலங்கார அடுக்குமொழி கருணாநிதி எழுதினால் செயற்கையாகத் தெரிகிறது, ஷேக்ஸ்பியர் எழுதினால் பிடித்திருக்கிறது, இது ஆங்கிலத்தை விடவும் தமிழ் ஒரு மாற்று அதிகம் புரிவதின் விளைவா, ஆங்கிலத்தில் எழுதினால் ஒஸ்தி என்று மனதுக்குள் பீட்டர் விட்டுக் கொள்கிறேனா என்று சில சமயம் தோன்றுகிறது. ஆனால் வலிந்து புகுத்தப்படும் செயற்கைத்தனம் என்று பல முறை – குறிப்பாக கருணாநிதி வசனங்களில் – தெரியத்தான் செய்கிறது. அவரது உச்சக்கட்ட சாதனை என்று நான் கருதும் மனோகரா திரைப்படத்தில் கூட – அதுவும் சிவாஜி சபைக்கு இழுத்துவரப்பட்டு பேசும் வசனங்களில் கூட அங்கங்கே நெருடுகிறது. அந்த நெருடல் இந்த நாடகத்தில் சுத்தமாக இல்லை. ஏன் என்று என்னால் விளக்க முடியவில்லை.

எப்படி இருந்தால் என்ன? படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். பார்க்க முடிந்தால் இன்னும் உத்தமம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஷேக்ஸ்பியர் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

2 thoughts on “ஷேக்ஸ்பியர் நாடகம்: மூன்றாம் ரிச்சர்ட்

 1. To enjoy a literary work, one (reader) need to offer a willful suspension of disbelief’’. Readers offer such suspension to some and not to some. (Why?). Shakespeare command such surrender from millions. Karunanidhi from less!

  For me karunanidhi’s dialougues work fine. You need to go into the mood of the speaker!

  Like

  1. டேவிட் ராஜேஷ்., உதாரணத்துக்கு இந்த வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்

   “கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, ‘வீரனே! என் விழி நிறைந்தவனே!’ என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?”

   இதில் மனோகரனின் அப்பாவுக்கு என்ன ஆசை? கோபம் என்று சொல்லலாம். கானாவுக்கு கானா போட வேண்டும் என்று கரை காண முடியாத ஆசை என்று எழுதுகிறார். தானாவுக்கு தானா போட வேண்டும் என்று “தங்கள் தணியாத ஆசை” – தணியாத ஆசை என்றால் முன்னால் மனோகரனை எப்போதாவது சிறைப்படுத்தி இருக்க வேண்டும் இல்லையா? “தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, ‘வீரனே! என் விழி நிறைந்தவனே!'” என்பது படு செயற்கையாக இருக்கிறது. தங்கக் கட்டில் என்று சொல்வார்கள் சரி. ஆனால் இவருக்கு எதுகை வேண்டும் அதனால் தந்தம், சந்தனம் என்று எழுதுகிறார். இதை எல்லாம்தான் நெருடல் என்கிறேன்.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.