ஜெயகாந்தன்: பிரம்மோபதேசம்

ஜெயகாந்தனின் புனைவுகள் சென்ற தலைமுறையில் பெரும் கேள்விகளை எழுப்பி இருக்கும். “பழைய” மரபார்ந்த விழுமியங்களும் அன்றைய நவீன விழுமியங்களும் சந்திக்கும் இடம் ஒவ்வொன்றும் அவருக்கு யுகசந்தியாகத் தெரிந்திருக்கிறது. அதை காத்திரமான எழுத்தின் மூலம் விவரித்திருக்கிறார். “கெட்டுப் போனவள்” தலையில் தண்ணீர் ஊற்றி அவளை புனிதமாக்குவது என் அம்மா தலைமுறையினருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும், நினைத்து நினைத்து பேசுபொருளாக இருந்திருக்கும். என் தலைமுறையினருக்கு அது நன்றாகவே புரிந்திருக்கும், ஆனால் அதிர்ச்சி குறைவாகத்தான் இருந்திருக்கும். ஆனால் என் 19 வயதுப் பெண்ணிடம் சில நேரங்களில் சில மனிதர்கள் கதையைச் சொன்னால் ஏதோ ஒரு நாள் யாரோடோ படுத்தாளாம், அவள் வாழ்க்கையே தடம் புரண்டுவிட்டதாம் வாட் நான்சென்ஸ் என்றுதான் சொல்லுவாள். “கெட்டுப் போனவள்” என்றால் என்ன என்று அவளுக்கு சரியாகப் புரியுமா என்பதே சந்தேகம்.

யுகசந்தி சிறுகதையின் பாட்டி அன்று நாயகி, புதுமைப்பெண்; இன்று சாதாரணப் பெண்! நாடகம் பார்த்த நடிகையின் கணவன் அன்று ஆயிரத்தில் ஒரு அபூர்வக் கனவான் (gentleman). இன்று ஆயிரத்தோடு ஆயிரத்தொருவன் மட்டுமே. அவருக்கு பெரும் பிரச்சினைகளாத் தெரிந்தவற்றில் பல இன்று சுலபமாகக் கடக்கக் கூடியவை. அவருக்கு பெரும் அகச்சிக்கல்களாகத் தெரிந்தவை பொருளிழந்து கொண்டே போகின்றன.
அவற்றில் மிஞ்சி இருப்பது எழுத்தின் காத்திரம் மட்டுமே, அதை உணர முடியாவிட்டால் விரைவிலேயே காலாவாதி ஆகிவிடுமோ என்று இன்று தோன்றுகிறது. இன்று சில நேரங்களில் சில மனிதர்கள் ஒரு கிளாசிக். இன்னும் ஐம்பது வருஷங்கள் கழித்து? பிரதாப முதலியார் சரித்திரம் போல வெறும் ஆவண முக்கியத்துவம் உள்ள படைப்பாக குறைந்துவிடுமோ என்று கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கிறது.

பிரம்மோபதேசம் அந்த வரிசையில் உள்ள ஒரு சிறுகதை/குறுநாவல். தூய பிராமணரான சர்மா; வயிற்றுப் பிழைப்புக்காக சமையல் வேலை பார்த்தாலும் மரபார்ந்த ஞானம் உள்ளவர். வடமொழி, தமிழ் இரண்டிலும் பாண்டித்தியம் உள்ளவர். மனுஸ்மிரிதியை கரைத்துக் குடித்தவர், குறிப்பாக பிராமணனின் கடமைகள் பற்றி அதில் உள்ளதை அதை பூரணமாக நம்புபவர். தன் 19 வயது மகள் மைத்ரேயிக்கு உண்மையான பிராமணனான ஒரு மாப்பிள்ளையைத் தேடுகிறார், அது அறுபதுகளிலேயே கிடைப்பது மகா கஷ்டம்.

பிராமணாகப் பிறந்த சேஷாத்ரி சர்மாவின் சமையல் குழுவில் சேர்கிறான். சேஷாத்ரி நாஸ்திகன்; கம்யூனிஸ்ட். சர்மாவுக்கு அவன் பிராமணன் இல்லை, அவரைப் பொறுத்த வரை எந்த நாஸ்திகனும் பிராமணனாக இருக்க முடியாது. ஆனால் சேஷாத்ரியை பிராமணனாக மதிக்காவிட்டாலும் மனிதனாக மதிக்கிறார், மாற்றுக் கருத்து உள்ளவன் என்பதை ஏற்கிறார், இருவருக்கும் பரஸ்பர மரியாதை இருக்கிறது.

சர்மா ஒரு ஓதுவார் பையனை – சதானந்தன் – சந்திக்கிறார். சதானந்தன் சர்மாவைப் போலவே மரபார்ந்த விழுமியங்களில் முழு நம்பிக்கை உள்ளவன். சமஸ்கிருதம் அறியான், ஆனால் தமிழில் பாண்டித்தியம் உள்ளவன். சர்மாவின் கண்ணில் ஓதுவார் குடும்பத்தில் பிறந்த பிராமணன்.

சேஷாத்ரிக்கும் மைத்ரேயிக்கும் காதல் ஏற்படுகிறது. சர்மாவால் அதை ஏற்க முடியவில்லை. மைத்ரேயிக்கும் அவர் பிராமணன் என்று மதிக்காத சேஷாத்ரி மேல் காதல் என்று தெரிகிறது. அவருக்கு துளியும் இஷடமில்லை. ஆனால் மனுஸ்மிருதியில் பருவம் வநது 3 ஆண்டுகளுக்குள் மணம் செய்து வைக்காவிடில் பெண் யாரை தேர்ந்தெடுக்கிறாளோ அவளை பெற்றோர் மறுக்கக் கூடாது என்று இருக்கிறதாம். சேஷாத்ரி அதைக் காட்டியே சர்மாவை மடக்குகிறான். சர்மா மறுக்கவில்லை, ஆனால் மைத்ரேயியை முற்றாக விலக்குகிறார். அதே நேரத்தில் சதானந்தனுக்கு பிரம்மோபதேசம் செய்து – பூணூல் போட்டு – அவனை பிராமணனாக மாற்றுகிறார்.

சர்மாவின் பாத்திரப் படைப்பு பிரமாதம். ஜெயகாந்தனை பிராமணன் என்ற archetype பெரிதும் கவர்ந்திருக்கிறது. இந்தப் புனைவில் மட்டுமல்ல, ஜெயஜெய சங்கர, நான் என்ன சேயட்டும் சொல்லுங்கோ ஆகியவற்றிலும் இந்த archetype-ஐ அற்புதமாகக் கண் முன் கொண்டு வருகிறார். திறமை குறைந்த எழுத்தாளர் கையில் சேஷாத்ரி பாத்திரம் வெறும் ஸ்டீரியோடைப் ஆகி இருக்கலாம். ஆனால் மிக இயல்பான சித்திரமாக கொண்டு வருகிறார். சர்மாவின் விழுமியங்களை ஏறக்குறைய முழுமையாக நிராகரிக்கும் என் போன்றவர்களுக்கே சர்மாவின் கோணம் புரிகிறது, அவர் மேல் மதிப்பும் மரியாதையும் வருகிறது. மிக அருமையாக எழுதப்பட்ட கதை. வேறென்ன சொல்ல?

காலாவதி ஆகிவிட்டதோ, ஆகப் போகிறதோ எனக்கென்ன அக்கறை? என் கண்ணில் இது ஜெயகாந்தனின் சாதனைகளில் ஒன்று. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

மணிக்கொடி சதஸ்

ஒரு புகைப்படம் இல்லாமல் போய்விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. வேறு பீடிகை இல்லாமல்.

லா.ச.ரா.வின் சிந்தாநதியிலிருந்து:

நாற்பத்தைந்து, நாற்பத்தேழு வருடங்களுக்கு முன் கூடவே இருக்கலாமோ? ஆனால் ஐம்பது ஆகவில்லை.

உங்களை மெரினாவுக்கு அழைத்துச் செல்கிறேன்.

சொல்லத் தேவையில்லையானாலும் கண்ணகி சிலை இல்லை.

ஸப்வே இல்லை. மூர்மார்க்கெட், பின்னால் வந்த பர்மா பஜார் போல் எல்லாப் பொருள்களும் வாங்கக்கூடிய சந்தையாக மெரினா மாறவில்லை. இத்தனை ஜனமும் இல்லை.

மாலை வேளை, வானொலியின் ஒலி பெருக்கிகளை மாட்டியாகிவிட்டது. அங்கேயே சுட்டு அப்பவே விற்கும் பஜ்ஜியின் எண்ணெய் (எத்தனை நாள் Carryover-ஓ?) புகை சூழவில்லை. நிச்சயமாக இப்போதைக் காட்டிலும் மெரினா ஆசாரமாகவும், சுகாதாரமாகவும், கெளரவமாகவும், காற்று வாங்கும் ஒரே நோக்கத்துடனும் திகழ்ந்தது. பூக்கள் உதிர்ந்தாற்போல், இதழ்கள் சிதறினாற்போல், எட்ட எட்ட சின்னச் சின்னக் குடும்பங்கள். நண்பர்களின் ஜமா. அமைதி நிலவுகிறது.

இதோ மணலில், வடமேற்கில் ப்ரஸிடென்ஸி கல்லூரி மணிக் கோபுரத்துக்கு இலக்காக அக்வேரியம் பக்கமாக என்னோடு வாருங்கள். ஆ, அதோ இருக்கிறார்களே, ஏழெட்டுப் பேர் கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உஷ் – மணிக்கொடி சதஸ் கூடியிருக்கிறது. அதன் நடு நாயகமாக- அப்படியென்றால் அவர் நடுவில் உட்கார்ந்திருக்கவில்லை. எல்லாருமே சப்தரிஷி மண்டலம் போல் வரிசை இல்லாமல்தான் அமர்ந்திருப்பார்கள். நாயகத் தன்மையை அவருடைய தோற்றம் தந்தது.

அந்நாளிலேயே அவரைத் தென்னாட்டுத் தாகூர் என்று அந்த வட்டம் அழைக்கும். அந்த ஒப்பிடலுக்குப் பொருத்தமாகத்தான் இருந்தார். நடு வகிடிலிருந்து இருமருங்கிலும் கரும்பட்டுக் குஞ்சலங்கள் போலும் கேசச் சுருள்கள் செவியோரம் தோள் மேல் ஆடின. கறுகறுதாடி மெலிந்த தவ மேனி. ஆனால் அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் மெலிந்த உடல்தான். சிதம்பர சுப்ரமணியனைத் தவிர, அவர் பூசினாற் போல், இரட்டை நாடி. க.நா.சு, சிட்டி சாதாரண உடல் வாகு.

ந. பிச்சமூர்த்தியின் அழகுடன் சேர்ந்த அவருடைய தனித்த அம்சம் அவருடைய விழிகள். ஊடுருவிய தீக்ஷண்யமான பார்வை. அதன் அற்புதக்ரணத் தன்மை அவருக்குக் கடைசிவரை இருந்தது. உயரத்தில் சேர்த்தி அல்ல. அவரிடம் மற்றவர்கள் காட்டின மரியாதையும், அவர் பேச்சுக்குச் செவி சாய்த்த தனிக் கவனமும், என்றும் சபாநாயகர் அவர்தான் என்பதை நிதர்சனமாக்கியது.

எத்தனைக்கெத்தனை பிச்சமூர்த்தி ஒரு பர்ஸனாலிட்டியாகப் பிதுங்கினாரோ அத்தனைக்கத்தனை அவர் எதிரே உட்கார்ந்திருந்த கு.ப.ரா. தான் இருக்குமிடம் தெரியாமலிருப்பதே கவனமாயிருந்தார் எனத் தோன்றிற்று. பிச்சமூர்த்தியைக் காட்டிலும் குட்டை. அவருடைய கனத்த மூக்குக் கண்ணாடி இல்லாவிட்டால் அவர் பாடு திண்டாட்டம்தான். பேசும்போது அவர் குரல் அவருக்குக் கேட்டதா என்பது என் சந்தேகம்.

பிச்சமூர்த்தியும், கு.ப.ரா.வும் எழுத்தில் கையாள எடுத்துக்கொண்ட விஷயம், பாணி தனித்தனி, ஆனால் ஏன் இவர்களைச் சிறுகதை இரட்டையர்கள் என்று குறிப்பிட்டார்கள்? எனக்குப் புரியவில்லை.

புதுமைப்பித்தனை மனதில் கூட்டுகையில், பளிச்சென்று நினைவில் படுவது அவருடைய உயர்ந்த dome like நெற்றியும் வெடிப்பான உரத்த சிரிப்பும்தான். அடிக்கடி சிரிப்பார்.

எனக்கு நினைவு தெரிந்தவரை, பி.எஸ். ராமையா எப்பவுமே உற்சாகமான பேர்வழி, நிமிர்ந்த முதுகும் வரித்த கழி போன்ற உடலுக்கு உறையிட்டாற் போல், ஜிப்பாவும், தரையில் புரளும் வேட்டியும் அவரை உயரமாகக் காட்டின. கைகளை உற்சாகமாக ஆட்டி உரக்கப் பேசுவார்.

இந்தக் கூட்டத்தை நான் உங்களுக்குப் பரிச்சயம் பண்ணும் சமயத்தில் கலைமகளில் சக்ரவாகம் என்கிற அவர் கதை வெளியாகி அதன் வெற்றிப்ரபை சிதம்பர சுப்ரமணியனைச் சூழ்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவரிடம் விஷயம் நிறைய இருந்தது. ஆனால் சங்கோஜி. அப்படியே அபிப்ராயமாக ஏதேனும் அவர் சொல்ல ஆரம்பித்தாலும் சரியாக முடிக்காமல், சிரிப்பில், பலமான தலையாட்டலில் மழுப்பிவிடுவார். நுண்ணிய முக அங்கங்கள். அலைபாயும் க்ராப்.

தி.ஜ.ர. முழங்கால்களைக் கட்டியபடி குந்திட்டபடி உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு செளகர்யமான போஸ்ட்சர். தலையை அழுத்த வாரி, உடனேயே மெனக்கெட்டுத் தானே கையை உள்ளே விட்டுக் கலைத்துக் கொண்டாற்போல் குட்டையாக வெட்டிய க்ராப் விரைத்துக் கொண்டிருக்கும். அவர் தோற்றத்தில் கவனம் இன்னும் கொஞ்சம் செலுத்தியிருந்தால் அழகான மனிதனாகவே வெளிப்படுவார் என்பது என் கருத்து. செதுக்கினாற் போன்ற மூக்கு, வாய், வரிசையான முத்துப் பற்கள். சிரிக்கும்போது அவர் முகத்தில் ஐந்தாறு வயதுகள் உதிரும்.

சிட்டி, சி.சு. செல்லப்பா, க.நா.சு. இவர்களின் படங்களைச் சமீபமாகப் பத்திரிகைகளில் பார்க்கிறீர்கள். அன்றைக்கு இன்று வருடங்கள் இவர் தோற்றங்களை அதிகம் பாதித்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஒருவர், இருவர் அல்லது இருவர் மூவர். கூட்டத்தில் சேரலாம். குறையலாம். ஆனால் மாலை, இந்த வேளைக்கு இந்த இடத்தில் இந்த ஏழு பேர் நிச்சயம்.

அத்தனை பேரும் கதராடை.

இவர்களை விழுங்கும் விழிகளால் பார்த்துக்கொண்டு இவர்கள் பேச்சைச் செவியால் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பதில் எனக்கு அலுப்பே இல்லை.

இலக்கிய ஆர்வம் மிக்க என் நண்பன் குஞ்சப்பாவும் நானும், எங்கள் மரியாதையில், இயற்கையான வயதின் அச்சத்தில் இவர்களுக்கு நாலு அடி எட்ட உட்கார்ந்திருப்போம்.

நான் அப்போத்தான் மொக்கு கட்டியிருந்த எழுத்தாளன். எஸ்.எஸ்.எல்.சி. குட்டெழுத்து தட்டெழுத்துப் பரீட்சைகள் தேறிவிட்டு வேலைக்கு அலைந்து கொண்டிருந்தேன். தேடினால் கிடைத்துவிடுகிறதா? பறித்து எடுத்துக்கொள் என்கிற மாதிரி அப்பவே, வேலை ஒண்ணும் காய்த்துத் தொங்கவில்லை. அந்த ரோசம், அதனால் படும் கவலை சமயங்களில் தவிர, சிந்தனைக்கும் இலக்கியச் சிந்தனைக்கும் வயது காரணமாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஆக்கக் கனல் வெளிப்பட வழி காணாது, உள் புழுங்கவும் வேண்டிய நேரம் இருந்த அந்தப் பருவத்தில் என்னை என்னிலிருந்து மீட்டு எனக்குத் தருவதற்கு இந்தக் கடற்கரைக் குழுவின் பாதிப்பு தன் பங்கைச் செய்தது என்றால் மிகையில்லை.

மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன் ஆசிரிமையில் வெளி வந்து கொண்டிருந்த ‘ஷார்ட் ஸ்டோரி’ ஆங்கில மாதப் பத்திரிகையில் என் கதைகள் இரண்டு பிரசுரமாகியிருந்தன, அடுத்து மணிக்கொடி (ஆசிரியர் ப.ரா) யில் மூன்று கதைகள், ஹனுமான் வாரப் பத்திரிகையில் ஒன்று. உம், ஆமாம்.

“ஏண்டா, அங்கே தனியா உட்கார்ந்திண்டிருக்கே, இங்கே வாயேன்!”

தி.ஜ.ர, அழைப்பார். அப்படியே நகர்ந்து, அவருக்கும் ஈஸ்வரனுக்கும் இடையே (என் நினைப்பில்) அவர்கள் பாதுகாப்பில் இடுங்குவேன். அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நான் என்னைப் பாவித்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் இது மாதிரி நேர்ந்தால் வலிக்குமா? ஆனால் இங்கே வாய் திறக்க எனக்கு தில் கிடையாது. போயும் போயும் இங்கே றாபணாவா? என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அப்போதெல்லாம் யார் சொல்வதையும் கவனமாகக் கேட்டுக் கொள்ளும் பங்குதான் என்னுடையது.

என்ன பேசினார்கள்? இலக்கியம். இங்கே மார்தட்டல் கிடையாது. வகுப்பு நடத்தவில்லை. உபதேசம் செய்யவில்லை. இலக்கியத்திலேயே யாருக்கேனும் வாரிசு எடுத்துக்கொண்டு கட்சிப் பிரசாரம் கிடையாது. உலக இலக்கிய கர்த்தாக்களின் சிருஷ்டிகள் நடமாடின. அவர்கள் பெயர்களைச் சொல்லிச் சுவைக்க எனக்கு ஆசைதான். ஆனால் ஏதோ வெறும் பெயர்களை உதிர்த்து அதில் பெருமை அடையப் பார்க்கிறேன் எனும் சந்தேகத்துக்குக்கூட நான் ஆளாக விரும்பவில்லை. அந்த மாதிரிப் பெருமையால் எனக்கு இனி ஆக வேண்டியது ஏதுமில்லை. தவிர அப்போதேனும் மாப்பஸான், மாம், செக்கோவ் என்று எழுத்தாளர்கள் முனகினார்கள். Chase, Robbins, Maclean என்று இடத்தைப் பிடித்துக்கொண்டு, எழுத்து ஒரு ஃபாக்டரியாக மாறியிருக்கும் இந்நாளில் நாங்கள் பழகிய பெயர்கள், அந்த எழுத்துக்களின் சத்தியங்கள் எடுபடா.

பிச்சமூர்த்தியின் வெளிப்பாட்டில் விஷயம் நிறைய இருக்கும். அபூர்வமான விதானங்கள் தட்டும். இத்தனைக்கும் பேச்சில் சிங்காரங்கள், நகாசுகள் effect உண்டாக்க வேண்டும் எனும் தனி முயற்சி இல்லை. உள்ளது உள்ளபடி அவர் கண்டபடி. ஆனால் எப்படியும் கவிஞன் மனம் இல்லையா? லேசாக நடுக்கம் கொடுத்த குரலில் வார்த்தைகள் வெளிப்படுகையில், பிசிர்கள் கத்தரிக்கப்பட்டு, சொல்லும் பொருளும் சுளை சுளையாக விழுவது போலத் தோன்றும். ரத்னச் சுருக்கம். இதற்குள் முடிஞ்சு போச்சா? இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா?

“ராஜகோபாலா! சிட்டி! செல்லப்பா!” என்று அழைக்கையில் அந்தக் குரல் நடுக்கத்தில் ததும்பிய இனிமை, பரஸ்பரம் யாரிடம் இப்போ காண முடிகிறது? அவர் பார்வையே ஒரு ஆசீர்வாதம்.

இலக்கிய விழாக்கள் இந்நாளில் கொண்டாடப்படுகின்றன. கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. டி.வி., வானொலி வழி வேறு: பேட்டிகள், சந்திப்புகள், மோஷியாரா, ஸம்மேளனம்.., எந்தச் சாக்கிலேனும் மேடை.

ஆனால் கடற்கரையில் மாலை அந்த இரண்டு, இரண்டரை மணி நேரம் இந்த ஏழெட்டுப் பேர் கூடி மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்களே, அதுதான் உண்மையில் இலக்கியப் பட்டறை.

இத்தனை வருடங்களின் பின்னோக்கில் எனக்கு இன்னும் வேறு ஏதேதோ உண்மைகள் புலப்படுகிறாப் போல் ஒரு உணர்வு.

ஏதோ ஒரு வகையில், இவர்கள் எழுத்துக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பிக்குகள்.

இந்த ஏழெட்டுப் பேரில் நாலுபேர் இப்போது நம்முடன் இல்லை. இவர்களில் மூவரேனும் எழுத்துக்கே பலியானவர்கள்.

அந்த மஹாராஜியைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். அவள் மோஹினி. மிக்க அழகி. இரக்கமற்றவள். Medusa “வா, வா. என்னைப் பார். என் அழகைப் பார்!”

அவன் நெஞ்சை நீட்டுகிறாள். உள் உள்ளேயே பாடுகிறாள்.

கொல் இசை.

சிந்தா நதி மேல் கவிந்த ஒரு பனிப் படலம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

விசித்திர நூலகங்கள்

படிக்க எத்தனையோ வழிகள். இந்த நூலகங்கள் புன்னகைக்க வைக்கின்றன. கழுதை மேல் நூலகம், ஒட்டக நூலகம், நூலகக் கப்பல் எல்லாம் சின்ன மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஆனால் புல்லரிக்க வைப்பது Nanie’s Reading Club. அப்பா அம்மா நினைவாக தன் சொந்தப் புத்தகங்களை வீட்டிற்கு வெளியே வைத்தாராம். யார் வேண்டுமானாலும் கொண்டு போகலாம். புத்தகங்களை இரவல் வாங்கியவர்கள் அவர்கள் புத்தகங்களையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். இன்று நானியின் வீடு முழுவதும் புத்தகங்கள். இப்போது பைக்கிலும் கொண்டு போய்க் கொடுக்கிறாராம். அப்பா அம்மாவை இதை விட எப்படி கௌரவப்படுத்த முடியும்?

அமெரிக்காவிலும் Little Free Library என்று ஒன்று உண்டு. சின்ன பெட்டி ஒன்று அங்கங்கு இருக்கும். யார் வேண்டுமானாலும் அதில் இருக்கும் புத்தகங்களை கொண்டு போகலாம், புத்தகங்களை அதில் வைத்துவிடலாம்.

நார்வேயில் இன்னொரு விசித்திர நூலகம். அங்கே எழுத்தாளர்கள் தங்கள் “புத்தகங்களை” சேர்க்கலாம். ஆனால் நூறு வருஷங்களுக்கு அப்புறம்தான் அவற்றைப் படிக்க முடியும்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

சீவலப்பேரி பாண்டி

சீவலப்பேரி பாண்டி திரைப்படமாகத்தான் பார்த்திருக்கிறேன். சுமார்தான். சமீபத்தில் எங்கோ புத்தகத்தைப் பார்த்தபோது இது புத்தகமாக வேறு வந்ததா என்று புரட்டிப் பார்த்தேன். பதிவாக எழுத ஒரே காரணம்தான். புத்தகத்தை விட எனக்கு புத்தகம் உருவான விதம் சுவாரசியமாக இருக்கிறது.

ஜூனியர் விகடனில் தொடராக வந்திருக்கிறது. எப்போதுமே இந்த மாதிரி “கள்ளபார்ட்” ஆளுமைகளுக்கு ஒரு கவர்ச்சி உண்டு. அது ஜம்புலிங்க நாடாராகட்டும், சம்பல் கொள்ளைக்காரர்களாகட்டும், ஃபூலான் தேவியாகட்டும், ஆட்டோ சங்கராகட்டும், வீரப்பனாகட்டும், அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள மக்களிடம் ஆர்வம் இருக்கிறது. ஆனால் இந்த பாண்டியைப் பற்றி சௌபா எப்படி கேள்விப்பட்டார்? ஜூனியர் விகடன் ஆசிரியர் இது ஏதோ பிரபலமாகாத, யாரம் கேள்விப்டாத, வெளியில் தெரியாத் கிராமத்து வெட்டு குத்து கொள்ளை கொலை, இதை எல்லாம் யார் படிப்பார்கள் என்று கேட்கவில்லையா? எப்படியோ பதிவாகி இருக்கிறது, வெற்றி பெற்றிருக்கிறது, திரைப்படமாக மாற்றினால் ஓடும் என்ற அளவுக்கு பிரபலம் ஆகி இருக்கிறது.

சௌபாவின் அணுகுமுறையை பாராட்ட வேண்டும். அவர் பாண்டிக்காக வாதிட்ட வக்கீல்களைப் பார்த்திருக்கிறார், விவர்ம் சேகரித்திருக்கிறார். வக்கீல்களில் ஒருவர் ரத்னவேல் பாண்டியன். பிற்காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர்.

பாண்டியின் வரலாறு என்ன? யாரோ தூண்டிவிட்டதால் பெரிய மனிதர் ஒருவரை கொலை செய்கிறார். சிறை. ஆனால் தூண்டிவிட்டவர்கள் தன் குடும்பத்தை நிர்க்கதியாக விட்டுவிட்டார்கள் என்று தெரிந்து தப்பி இருக்கிறார். கொடைக்கானல் பக்கத்தில் தலைமறைவு வாழ்வு. அவ்வப்போது சொந்த ஊர் பக்கம் வந்து திருடுவது. தற்செயலாக தன் மனைவியை “கொன்றுவிடுகிறார்”. அவரைத் தேடி அலையும் காவல்துறை. கடைசியில் பிடிக்கிறார்கள். அவர்தான் என்கவுண்டரில் சுடப்பட்ட முதல் ஆளாம். (அப்படி என்றால் ஜம்புலிங்க நாடார், மலையூர் மம்பட்டியான் எல்லாம் சுடப்பட்டு இறகக்வில்லையா?)

இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

சில சினிமா புத்தகங்கள்

மீனாகுமாரி இந்தியாவின் தலை சிறந்த நடிகைகளில் ஒருவர். சாவித்ரியோடு ஒப்பிடலாம். சொந்த வாழ்க்கையும் கொஞ்சம் சாவித்ரியைப் போலத்தான் இருக்கும். சிறு வயதிலேயே திரைப்படங்கள், அவர் ஊதியத்தை வைத்து வாழ்ந்த குடும்பம், 20-21 வயதிலேயே ஏற்கனவே திருமணமான கமல் அம்ரோஹியுடன் காதல், திருமணம், மணமுறிவு; வித்தியாசம், மணமுறிவுக்குப் பிறகு தர்மேந்திரா உட்பட்ட சில காதலர்கள் இருந்தார்கள், பகிரங்கமாகத்தான் உறவு இருந்தது. வினோத் மேத்தா மீனாகுமாரி மறைந்தபோது அவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதினார். பெரிய தரிசனம் என்று எதுவுமில்லைதான், ஆனால் முழுமையான வாழ்க்கை வரலாறு.

ராஜேஷ் கன்னா ஆராதனா வெளியான சமயத்திலிருந்து நாலைந்து வருஷம் புகழின் உச்சியில் இருந்தார். அதற்கு சமமாக எம்ஜிஆர்/ரஜினி மேல் தமிழர்களுக்கு இருந்த/இருக்கும் அன்பு, என்டிஆரை தேவுடுவாகவே பார்த்த தெலுங்கர்களை மட்டுமே சொல்ல முடியும். ஆனால் கன்னாவுக்கு இருந்தது அகில இந்திய புகழ். அவரது உச்சங்களும் வீழ்ச்சியும் பெரிய நாவலின் கதைக்களனாக இருக்க சாத்தியம் உள்ளவை. நாலைந்து வருஷம் ராஜா, அதற்குப் பிறகு – முப்பது முப்பத்தைந்து வயதிலிருந்து பெருங்காயம் வைத்த டப்பா என்பது ஒரு மனிதனுக்கு எத்தகைய அகச் சிக்கல்களை உருவாக்கும்? யாஸ்ஸர் உஸ்மான் எழுதிய Rajesh Khanna: The Untold Story of India’s First Superstar ராஜேஷ் கன்னாவின் அகச்சிக்கல்களை நன்றாகவே விவரிக்கிறது. இருந்தாலும் எனக்கு டைம் பாஸ்தான். காரணம் ராஜேஷ் கன்னா எனக்கு முக்கியமானவர் அல்லர். இத்தனைக்கும் “மேரே சப்னோன் கி ராணி” பாடலுக்கு பரம ரசிகன். அந்தப் பாடல் அவரை வைத்து படமாக்கப்பட்டிருக்கும் விதம் என் மனம் கவர்ந்தது. ஆனால் எனக்கு அவரது திரைப்படங்களில் பிடித்தது பாடல்கள்தான். என் நாயகர்கள் ஆர்.டி. பர்மனும் கிஷோர் குமாரும்தான். ஆனந்த் திரைப்படம் இந்திய சினிமாவின் சாதனைகளில் ஒன்று, ஆனால் அது எனக்கு ரிஷிகேஷ் முகர்ஜியின் சாதனை. கௌதம் சிந்தாமணி எழுதிய “Dark Star: The Loneliness of Being Rajesh Khanna” அவரது திரைப்படங்களை விவரிக்கிறது.

சத்ருகன் சின்ஹா, Anything but Khamoshi (2016): பாரதி எஸ். ப்ரதான் எழுதி இருக்கிறார். சத்ருகன் சின்ஹாவின் தன்னம்பிக்கை, அவரது ஸ்டைல், வில்லன் நடிகராக இருந்தவரை பெரிய நட்சத்திரமாக உயர்த்தியது. அவரது பாணி ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அம்பரீஷ், மோகன்பாபு உட்பட்ட பலருக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது. புத்தகத்தில் கிடைக்கும் சித்திரம் அவர் போலித்தனங்கள் அற்ற மனிதர் என்பதுதான். குறைகள் அற்றவர் அல்லர், ஆனால் நிறைகளும் நிறைய உடையவர். ஆனால் யாருக்கும் தலை தாழ்த்தவில்லை. திருமணம் ஆன புதிதிலேயே கூட நடிகை ரீனா ராயோடு உறவு! பூனத்தோடு திருமணம், ரீனா ராயோடு தேனிலவு என்று இருந்திருக்கிறார். அரசியலில் பாஜகவுக்காக பெரும் கூட்டங்களை ஈர்ப்பவராக இருந்திருக்கிறார், ஆனால் மோதி அரசில் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தம். டைம் பாஸ்தான், ஆனால் படிக்கலாம்.

ரிஷி கபூர், குல்லம் குல்லா (2017): மீனா ஐயரோடு எழுதியது. ரிஷி கபூர் ஹிந்தி சினிமாவின் ராஜ குடும்பத்தில் பிறந்தவர். அதனால் கிடைத்த லாபங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் அனுபவித்திருக்கிறார். சில பல குறைகள் உள்ளவர். ஆனால் அவற்றுக்காக வருத்தப்படுபவர் இல்லை. போலித்தனம் இல்லை. என் மனதில் பதிந்த ஒரு இடம் – அவரது மனைவி நீது சிங் ரிஷி கபூர் பிற பெண்களுடன் உறவு கொண்டிருப்பார் என்று கோடி காட்டுவதுதான். இது திரை உலகில் எத்தனை சாதாரணமாக இருந்திருக்கிறது? டைம் பாஸ்தான், ஆனால் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

ராம்நாராயண்: Third Man – ரஞ்சி கிரிக்கெட் நினவுகள்

எனக்கு கிரிக்கெட் பற்றி பிரக்ஞை ஏற்பட்டது 1975 பொங்கல் சமயத்தில் சென்னையில் நடந்த கிரிக்கெட் மாட்சின்போது. யாரென்றே தெரியாத ஒருவர் வீட்டில் மந்தைவெளியில் டிவியில் முதல் முறையாக ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்த்தேன். டிவியைப் பார்ப்பதே அதுதான் வாழ்க்கையில் முதல் முறை. ஆங்கிலமும் புரியவில்லை. கிரிக்கெட்டும் தெரியாது. ஸ்க்வேர் லெக், ஃபைன் லெக் என்றால் எத்தனை கால்கள் என்றுதான் தோன்றியது. ஆனால் ஒன்றுமே தெரியாவிட்டாலும் விஸ்வநாத் விளையாடுவது வேறு லெவலில் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. அன்றிலிருந்து நான் தீவிர விஸ்வநாத் விசிறி.

நாங்கள் அப்போது மானாம்பதி என்ற கிராமத்தில் வசித்தோம். நண்பர்கள் கிரிக்கெட் ஆட முயற்சித்து தோல்விதான். மட்டை, பந்து எல்லாம் வாங்க காசு ஏது? எப்போதாவது உடற்பயிற்சி ஆசிரியர் அந்தோணிசாமி பழைய பிய்ய ஆரம்பித்துவிட்ட பேஸ்பால் பந்தை எங்களுக்குக் கொடுத்தால் அது முழுதும் பிய்ந்து இரண்டு பாதிகள் ஆகும் வரை – இரண்டு மூன்று நாள் – விளையாடுவோம். (அதிசயமாக பேஸ்பால் எங்கள் பள்ளியில் விளையாடப்பட்டது) எங்களுக்கு கில்லிதாண்டுதான் சாஸ்வதம்.

ஆனால் விஸ்வநாத் உபயத்தில் கிரிக்கெட் மனதைக் கவர்ந்துவிட்டது. கிரிக்கெட் பற்றி தெரிந்து கொள்ள இரண்டே வழிகள்தான். ஹிந்து பத்திரிகை, ரேடியோ. ஹிந்து பத்திரிகையின் பத்திகளை திருப்பி திருப்பிப் படித்திருக்கிறேன். எப்போதாவது பழைய ஸ்போர்ட் அண்ட் பாஸ்டைம் பத்திரிகை கிடைத்தால் பொக்கிஷமாக வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் எனக்கு ஆங்கிலம் சரளமாகப் படிக்க வந்ததற்கு ஹிந்து பத்திரிகையின் கிரிக்கெட் பத்திகள்தான் முதல் காரணம்.

அப்போதெல்லாம் ரஞ்சி போட்டி பற்றி எல்லாம் விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். நியூசிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் சென்ற குழுவில் சுதாகர் ராவை தேர்ந்தெடுத்ததற்கு பதில் மைக்கேல் டால்வியைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று என் அப்பாவிடம் கத்தி போய் படிக்கற வேலையைப் பாருடா என்று திட்டு வாங்கியதெல்லாம் நினைவிருக்கிறது. முதன்முதலாக் தமிழில் ரஞ்சி போட்டி ஒன்றுக்கு – தமிழ்நாடு vs கர்நாடகா – தமிழில் கமெண்டரி கேட்டு புல்லரித்துப் போனதெல்லாம் உண்டு. அந்த கமெண்டரியில் இன்னும் சில வரிகள் நினைவிருக்கின்றன – “சந்திரசேகர் மட்டையை மிக அழகாக சுற்றினார். ஒரே ஒரு பிரச்சினை பந்து மட்டையில் படவில்லை”, “பாண்டவர்களுக்கு அர்ஜுனன் போல கர்நாடகாவுக்கு விஸ்வநாத்”.

ராம்நாராயணின் கிரிக்கெட் பத்திகள் அந்தக் காலகட்டத்தை மிக அழகாக விவரிக்கின்றன. சுமாராகவே எழுதி இருந்தாலும் நாஸ்டால்ஜியாவால் இந்தப் புத்தகம் மனதைக் கவர்ந்திருக்கும். ராமோ born raconteur. கடந்துபோன ஒரு காலத்தை மிக அருமையாக விவரிக்கிறார்.

ராம் எழுபதுகளின் பிற்பகுதியில் முன்னணி offspinner. அவரது காலகட்டம் சுழற்பந்து வீச்சாளர்களின் பொற்காலம். பேடியும் பிரசன்னாவும் சந்திரசேகரும் வெங்கடராகவனும் மட்டும்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்கள். ஷிவால்கர், கோயல், வி.வி. குமார், ஹன்ஸ், இவர், ஏன் பின்னாளில் விளையாடிய திலிப் தோஷி உட்பட்ட பல சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளே நுழையவே முடியவில்லை. அதுவும் பிரசன்னா, வெங்கட் இருவருமே offspinner-கள். அவர்கள் இரண்டு பேரும் இடத்தை காலி செய்தால்தான் இவருக்கு வாய்ப்பு. அப்படி ஒரு சின்ன window கிடைத்தபோது அதை ஷிவ்லால் யாதவ் தட்டிக்கொண்டு போய்விட்டார். இளைஞர் என்று அவருக்கு முதலில் வாய்ப்பு கொடுத்த்விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ராமின் புத்தகத்துக்கு Third Man என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது அவர் ப்ரசன்னா, வெங்கட்டுக்கு அடுத்த படியில் இருந்த offspinner, ஆனால் அவரால் மேலே ஏற முடியவே இல்லை என்பதை குறிக்கத்தான்.

ரஞ்சியில் கூட வாய்ப்பு கிடைக்க ராம் பெரிதும் போராட வேண்டி இருந்தது. ஏறக்குறைய இவரது சமவயதினரான வெங்கட் தமிழகத்தில் நிலைபெற்று விட்டார். சீனியர் வி.வி. குமாருக்கு இன்னொரு இடம் போய்விட்டது. ராம் ஆந்திராவில் வங்கி ஊழியராக சேர்ந்தார். ஆனால் ஹைதராபாத் அணியிலும் அவரால் உள்ளே நுழைய முடியவில்லை. நௌஷேர் மேத்தா என்ற இன்னொரு offspinner அப்போது ஹைதராபாத் அணிக்கு நன்றாகவே விளையாடினார். க்ளப் போட்டிகளில் தான் வேலை பார்த்த வங்கிக்கு விளையாடுவார். அதிலும் அவ்வப்போது வாய்ப்பு கிடைக்காது. கடைசியாக ரஞ்சிக்கு அடுத்த நிலை போட்டி ஒன்றில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதைப் பிடித்துக் கொண்டு ரஞ்சிக்குப் போனார்.

ராம் ரஞ்சி போட்டிகளில் ஒரு ஐந்தாறு வருஷம் கலக்கினார். ஆனால் என்ன கலக்கி என்ன பயன்? அப்போதெல்லாம் இரண்டு அணிகள் மட்டுமே ரஞ்சியின் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். தென்னிந்தியாவில் மூன்று வலிமையான அணிகள் இருந்தன. தமிழ்நாடு, ஹைதராபாத், கர்நாடகா மூன்றில் எந்த இரண்டு அடுத்த நிலைக்கு செல்லும் என்பது அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. அடுத்த நிலைக்குப் போனால் வருஷத்துக்கு ஏழெட்டு மாட்சுகள் விளையாடலாம். போகாவிட்டால் ஐந்தாறுதான். அதில் என்னதான் பிரமாதமாக விளையாடினாலும் முப்பது விக்கெட் எடுக்கலாம், அவ்வளவுதான். நிலைபெற்றுவிட்ட பேடி, சந்திரசேகர், பிரசன்னா, வெங்கட் ஆகியோரை தாண்ட முடியாது.

என் கண்ணில் ராமுக்கு 1978-79-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவோ (அதுவும் சென்னையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்), குறைந்தபட்சம் 1979-80-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவோ அல்லது பாகிஸ்தானுக்கு எதிராகவோ வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அப்போது 32-33 வயது இருக்கும். அந்த வயதுக்காரரான தோஷிக்கு வாய்ப்பு தரப்பட்டது, அவரும் அதை தக்க வைத்துக் கொண்டார். இவருக்கு பதிலாக இளஞரான ஷிவ்லால் யாதவுக்கு வாய்ப்பு தரப்பட்டது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நன்றாக விளையாடினாலும் பாகிஸ்தானுக்கு எதிராக சொதப்பினார். அப்போதாவது இவருக்கு ஒரு சின்ன வாய்ப்பு தரப்பட்டிருக்கலாம். விளையாட்டில் வாய்ப்பு கிடைக்காமல் போவது சாதாரணமான, குரூர நிகழ்ச்சி.

ஆனால் ராம் ஹைதராபாத்துக்கு விளையாடிய காலம் மிகச் சிறந்த ஆளுமைகள் ஹைதராபாத்துக்கு விளையாடிய காலம். ஜெயசிம்ஹா, பட்டோடி ஆகியோரின் காலம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. அபிட் அலி, நரசிம்மராவ் போன்றவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ராமுக்கு இவர்கள் மீது அன்பு, மரியாதை, பக்தி, நட்பு எல்லாம் நிறைய. பெரிய பந்தம் உருவாகி இருக்கிறது. அதிலும் ஜெய், பட்டோடி, அபிட் அலி போன்றவர்கள் காரக்டர்கள். அவர்களின் ஆளுமையை மிக அருமையாக விவரிக்கிறார்.

அவர் விளையாடிய காலம் அமெச்சூர் கிரிக்கெட்டின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ரஞ்சி கோப்பை போட்டிகளை விடுங்கள், க்ளப் லெவல் போட்டிகளுக்குக் கூட கூட்டம் அம்மும். ஆனால் பொருளாதார ரீதியில் பெரிதாக லாபம் இல்லை. ஏதாவது அரசுப் பணி, வங்கிப் பணி என்று கிடைக்கும். ராம் தான் மும்முரமாக கிரிக்கெட் விளையாடிய காலத்தில் கூட வங்கிப் பணியையும் செய்ய வேண்டி இருந்ததை இயல்பாக விவரிக்கிறார்.

ராம் ஒரு பிறவி கதைசொல்லி. ரஞ்சி நினைவுகளை விடுங்கள், கல்லூரி லெவல் கிரிக்கெட், க்ளப் லெவல் கிரிக்கெட் போன்றவற்றைக் கூட சுவாரசியமாக விவரிக்கிறார்.

ராமின் சகோதரர் சிவராமகிருஷ்ணன் இவரை விட கொஞ்சம் அதிர்ஷ்டக்காரர். ரஞ்சியில் விளையாட அவர் பெரிதாக போராடவில்லை. ஆனால் அவருக்கும் டெஸ்ட்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ராம் எனக்கு தூ………ரத்து உறவினரும் கூட.

என் கணிப்பில் இந்தப் புத்தகம் கிரிக்கெட் பைத்தியங்களுக்கு மட்டுமானதல்ல. நாஸ்டால்ஜியாவால் மனம் உருகுபவர்களுக்கு மட்டுமானதல்ல. கடந்து போன ஒரு உலகத்தை காட்டுகிறது. அது எல்லாருக்குமே பிடிக்கும் என்றுதான் கணிக்கிறேன். கிரிக்கெட் பைத்தியம் இருந்தால், ரஞ்சி கிரிக்கெட் முக்கியமாக இருந்த காலகட்டத்தில் நீங்கள் வளரிந்திருந்தால் இன்னமும் ரசிப்பீர்கள், அவ்வளவுதான்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கிரிக்கெட் பக்கம்

வ.உ.சி. வழக்கு

வ.உ. சிதம்பரம் பிள்ளையின் “குற்றங்களுக்கு” மிக அதிகப்படியான தண்டனை வழங்கப்பட்டது வரலாறு. சுப்ரமணிய சிவாவுக்கு உதவு புரிந்தார் என்று சிவாவை விடவும் அதிகமான தண்டனை வழங்கப்பட்டது என்று நினைவு. யாருக்கும் – இவருக்கு குருவான திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜ்பத் ராய், காந்தி, நேரு – யாருக்கும் 40 வருஷம் சிறைத் தண்டனை வழங்கப்படவில்லை. அதுவும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய ஒரு உரைக்காக – வெறும் பேச்சுக்காக 40 வருஷம் சிறைத்தண்டனை என்பது உலகத்தில் எங்கும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை.

40 வருஷம் என்பது உயர்நீதிமன்றத்தில் ஆறு வருஷமாக குறைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பிரதி இங்கே

வ.உ.சி.யின் பேச்சை சரியாக பதிவு செய்யவில்லை, அது சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. பதிவு செய்ததாக சொல்லப்படும் அதிகாரி பொதுக்கூட்டம் பக்கமே வரவில்லை என்றெல்லாம் வாதாடிப் பார்த்திருக்கிறார்கள். நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த வாதங்கள் திருநெல்வேலி நீதிமன்றத்தில்லும் வைக்கப்படனவா என்று தெரியவில்லை.

ஆனால் வ.உ.சி. என்ன பேசினார் என்று தெளிவாக தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

As soon as the English people set foot in India, poverty also made its appearance in the country. So long as the foreign Government exists we shall not prosper. So long as we continue to be the servants and slaves of foreigners we shall have to endure hardships.

Three-fourths of the Englishmen now in India are traders. If we all unite and make up our minds not to purchase their goods what business will they have here? They must all run back to their country.”


Besides, if we avoid going to these accursed Civil Criminal and Police Courts, the remaining one-fourth of the English will have no work to do. Thus all the white men will run away from our country.

Being 33 crores of people how astonishing it is that we are slaves to 3 crores. The cause of our growing poorer day by day is that 180 crores of rupees are carried away each year in steam ships to a country 6,000 miles away. What country can stand such treatment as this?

தெளிவாக, செறிவாகப் பேசி இருக்கிறார். நீதிபதி மில்லர் வ.உ.சி. முன் வைக்கும் சுதேசி இயக்கம் அன்னிய நாட்டு பொருட்களை புறக்கணித்து சுதேசி தொழில்களை வளர்ப்பது அல்ல, அது ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு துரத்தும் உத்தி. வ.உ.சி. வேண்டுவது ஆங்கிலேய மேலாண்மைக்கு உட்பட்ட சுயாட்சி அல்ல, ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு துரத்துவதுதான் வ.உ.சி.க்கு முக்கியம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். ஆறு வருஷம் சிறை என்று தீர்ப்பளித்திருக்கிறார்.

வ.உ.சி.யின் பேச்சு இன்று முழுதாகக் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் எத்தனை செறிவாகப் பேசி இருக்கிறார்? வாராது வந்த மாமணியேதான்…

தொகுக்கப்பட்ட பக்கம்: விடுதலைப் போராட்டம்

தொடர்புடைய சுட்டி: சுப்ரமணிய சிவா அப்பீல் தீர்ப்பு

எழுத்தாளர் ராஜாஜி

தலைவர் ராஜாஜியைப் பற்றி அனைவருக்கும் தெரியும். சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவர். காந்தியின் சம்பந்தி. மகாபுத்திசாலி என்று பேர் வாங்கியவர். இந்தியாவின் கவர்னர் ஜெனரல், உள்துறை மந்திரி, சென்னை மாகாண முதல்வர் என்று பல பதவிகள் வகித்தவர். காந்தியின் அணுக்கர் என்றாலும் காந்திக்கு எதிரான அரசியல் நிலையை எடுக்கத் தயங்கியவரில்லை. அரசியல் எழுத்தும் பேச்சும் ஆகியவை அவரது வாழ்வில் நிறைய உண்டு என்பதை சொல்லவே தேவை இல்லை.

அவர் நிறைய எழுதியும் இருக்கிறார். தனக்கு தெரிந்தவற்றை தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற துடிப்பு – அதுவும் விடுதலைக்கு முன் நிறையவே – இருந்திருக்கிறது. விசாலமான படிப்பும் இருந்திருக்கிறது. இதிகாசங்கள் மற்றும் உபநிஷதங்களை தமிழில் கொண்டுவருதல், அறிவியல், தத்துவம் என்று பலவற்றையும் அறிமுகப்படுத்தி எழுதி இருக்கிறார். (அறிமுகக் கட்டுரைகள் பலவும் இன்று காலாவதி ஆகிவிட்டன.) பல வித விளக்கங்கள், புனைவுகள், மொழிபெயர்ப்புகள், பத்திரிகை நடத்துதல் என்று பலவும் முயற்சித்திருக்கிறார். கலைச்சொற்களை உருவாக்க பெரிதும் முயற்சித்திருக்கிறார்.

1922-இல் முதல் முறை சிறை சென்று மீண்ட பிறகு தன் முதல் புத்தகத்தை எழுதி இருக்கிறார் – சிறையில் தவம்.

கல்கி பத்திரிகை ஆரம்பித்தது அவருக்கு எழுத வசதியாக இருந்திருக்கும். அவரது பல புத்தகங்களும் கல்கியில் தொடராக வந்தவைதான். பல புத்தகங்கள் இன்னொரு சீடரான சின்ன அண்ணாமலை நடத்திய தமிழ்ப்பண்ணை பதிப்பகம் மூலம் வெளி வந்திருக்கின்றன.

வியாசர் விருந்து (மகாபாரதம்), சக்ரவர்த்தி திருமகன் (ராமாயணம்) இரண்டையுமே தமிழுக்கு அவரது முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறேன். இவற்றை கட்டாயம் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். இரண்டும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன, தலைவராக, முதல்வராக, அமைச்சராக அவரது பங்களிப்பு நாளை மறக்கப்படலாம். ஆனால் இந்தியாவுக்கு – ஏன் உலகத்துக்கே – அவரது மறக்க முடியாத கொடை இந்த இரண்டு புத்தகங்கள்தான். நான் என்ன, அவருமே அப்படித்தான் கருதி இருக்கிறார். அவரது வார்த்தைகளிலேயே:

நாட்டுக்கு நான் பல பணிகள் செய்ததாக நண்பர்கள் போற்றுவதுண்டு. அவற்றிலெல்லாம் வியாசர் விருந்தும் சக்ரவர்த்தி திருமகனும் எழுதி முடித்ததுதான் மேலான பணி என்பது என்னுடைய கருத்து.

இரண்டுமே கல்கி பத்திரிகையில் தொடராக வந்தன. பத்து பனிரண்டு வயதில் முதன்முதலாக வியாசர் விருந்தைப் படித்தது எனக்கு ஒரு பெரிய கண்திறப்பு. அதற்குப் பிறகு பல முறை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். எளிமையான ஆரம்ப கட்ட அறிமுகங்கள்தான், ஆனாலும் என் கண்ணில் மிக முக்கியமானவை.

அவர் இவற்றை எழுதுவதற்கு முக்கியக் காரணம் ஈ.வெ.ரா.தான் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. என்னதான் நட்பு, பந்தம் என்றாலும் ஈ.வெ.ரா.வின் நயமும் நாகரீகமும் இல்லாத shrill பேச்சு முறை அவருக்கு எரிச்சல் மூட்டி இருக்க வேண்டும். நீ தமிழர்களை ராமாயணத்தை எரிக்கச் சொல்கிறாயா, நான் அவர்களை ராமாயணத்தை படிக்க வைக்கிறேன் என்று அவர் மனதில் தோன்றி இருக்கும். தனக்கு பணம் வராவிட்டால் பரவாயில்லை, குறைந்த விலையில் இவை இரண்டும் பதிக்கப்பட வேண்டும் என்று வானதி பதிப்பகம் திருநாவுக்கரசிடம் சொன்னாராம். இருவரில் யார் வென்றது என்று சொல்ல வேண்டியதில்லை.

1958-இல் சக்ரவர்த்தி திருமகனுக்காக அவருக்கு சாஹித்ய அகடமி விருது தரப்பட்டது. அது ஒரு மோசமான முன்னுதாரணம். அவர் ராமாயணத்தை மறுவாசிப்போ அல்லது மறுபடைப்போ (transcreation) செய்யவில்லை. வால்மீகிக்கும் கம்பனுக்கும் போக வேண்டிய விருதை அவர் மறுத்திருக்க வேண்டும். ஆனால் அவரை பின்னாளில் சாஹித்ய அகடமி ஃபெல்லோவாகத் தேர்ந்தெடுத்தது என் கண்ணில் சரியே. என்ன, க.நா.சு.வும், தி.ஜா.வும் அவருக்கு முன்னால் சாஹித்ய அகடமி ஃபெல்லோக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

தத்துவங்களை தமிழில் கொண்டு வர நிறைய முயற்சி செய்திருக்கிறார். உபநிஷதப் பலகணி போன்றவை மிகச் சுருக்கமாக உபநிஷதங்களின் சாரத்தை சொல்லும் முயற்சி. என் கண்ணில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் அவை எழுதப்பட்ட காலத்தில் முக்கியமானவையாக இருந்திருக்கும். சிறையில் கூட வகுப்புகள் நடத்துவாராம், அவற்றைத்தான் எழுத்து வடிவமாக்கி இருப்பார் என்று நினைக்கிறேன். என்ன, அச்சமில்லை, ராமகிருஷ்ண உபநிஷதம் (1950, கல்கி தொடர்) போன்றவை எனக்கான புத்தகங்கள் அல்ல.

ஸோக்ரதர் (சாக்ரடீஸ் வாதங்களின் மொழிபெயர்ப்பு) குறிப்பிட வேண்டிய இன்னொரு புத்தகம்.

அவர் அறிவியலை எளிமைப்படுத்தி எழுதிய புத்தகங்கள் இன்று காலாவதி ஆகிவிட்டனதான். ஆனால் திண்ணை ரசாயனம் (1946-இல் புத்தகம், அதற்கு முன் கல்கி தொடர்) போன்ற புத்தகங்களை எத்தனை பாராட்டினாலும் தகும். தமிழில் வேதியியலின் முக்கிய கருத்துக்களை – அணு vs மூலக்கூறு (molecule – அவர் பயன்படுத்தும் தமிழ் வார்த்தை “புணர்பொருள்”), கரிம vs கனிம வேதியியல் (organic, inorganic chemistry – organic chemistry-க்கு மிக அழகான தமிழ் வார்த்தையை உருவாக்கி இருக்கிறார் – யாக்கை ரசாயனம்!) – மிக அருமையாக, ஆங்கில, மணிப்பிரவாள, தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி விளக்கி இருக்கிறார். அனலம் (ஆக்சிஜன்), வளிரம் (நைட்ரஜன்), நீரகம் (ஹைட்ரஜன்) என்று பல வார்த்தைகளை உருவாக்கி இருக்கிறார். யாக்கை ரசாயனம்/வேதியியலாவது வழக்கில் வந்திருக்கலாம். தாவரங்களின் இல்லறம் என்ற புத்தகத்தையும் குறிப்பிடலாம்.

அவரது அறிமுகக் கட்டுரைகள் பல இன்று காலாவதி ஆகிவிட்டன. ராஜாஜி கட்டுரைகள் என்ற தொகுப்பை இன்று தவிர்த்துவிடலாம்.

விமோசனம் என்ற பத்திரிகையை நடத்தி இருக்கிறார். கல்கி உதவி ஆசிரியராக இருந்தார் என்று நினைவு. மதுவிலக்கு பிரசாரத்துக்காகவே எழுதி இருக்கிறார். கல்கி மதுவிலக்கு பிரச்சாரத்துக்கு என்று அரைத்த மாவையே அரைக்க வேண்டி இருக்கிறதே என்று அலுத்துக் கொண்டாராம். பத்திரிகை பத்து மாதம் நடந்ததாம், அப்புறம் ராஜாஜி சிறை சென்றார் என்று நினைவு, கல்கி இதுதான் சான்ஸ் என்று பத்திரிகையை இழுத்து மூடிவிட்டாராம்.

பல சிறுகதைகளும் உண்டு. விடுதலைக்கு முன் நிறையவே எழுதி இருக்கிறார். மணிக்கொடியில் கூட அவரது சிறுகதைகள் வந்திருக்கின்றனவாம். நாவல் எதுவும் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை.

ஒரு புனவெழுத்தாளராக அவருடைய பலம் கதைகளில் தெரியும் நம்பகத்தன்மை. அவரைத்தான் யதார்த்தவாத எழுத்தின், ஷண்முகசுந்தரம் போன்றவர்களின் முன்னோடியாகக் கருத வேண்டும். ஆனால் கதைகளில் எப்போதும் ஒரு வாத்தியார் மனப்பான்மை தெரியும். நீதிபோதனை இல்லாமல் அவரால் எழுதவே முடியவில்லை. அனேகமாக ஒவ்வொரு கதையையும் நல்லுபதேசம் செய்வதற்காகவே எழுதி இருக்கிறார். பொதுவாக நயம் குறைவு. அதனால்தான் அவர் முன்னோடி எழுத்தாளர், முன்னணி எழுத்தாளர் இல்லை.

தேவானை, திக்கற்ற பார்வதி போன்ற கொஞ்சம் நீளமான சிறுகதைகளில் அவரது பலம் நன்றாகத் தெரிகிறது. எந்த விதமான மிகை உணர்ச்சியும் இல்லாமல் கள் ஒரு விவசாய/நெசவுக் குடும்பத்தை எப்படி அழிக்கிறது என்பதை எழுதி இருக்கிறார்.

தேவானையில் நெசவுத் தொழில் நசித்துப் போவதால் நகரத்துக்கு செல்லும் அண்ணன்; அவனைத் தொடரும் குடும்பம்; வேலையில் சேரும் தங்கை தேவானை. அங்கே மேஸ்திரி மூலம் குழந்தை. பிறகு பிச்சை எடுக்கும் நிலை. இந்தக் கதையை உயர்த்துவது தேவானை ஒரு காலத்தில் வீட்டு வேலை செய்த குடும்பத்தை சேர்ந்த ராமநாதையர் அவளை கண்டுகொண்டு அவள் எங்கே என்று மீண்டும் மீண்டும் பிச்சைக்காரர்கள் கூட்டத்தில் தேடும் சித்திரம்.

தி. பார்வதியின் முதல் வரி:

கறுப்பனை வேறே வைத்தார்கள்.

பதின்ம வயதில் வேறே வைத்தார்கள் என்றால் தனிக்குடித்தனம் என்று புரிந்து கொண்ட கணத்தில் இது அழகான சொற்பிரயோகம் என்று நினைத்தது நன்றாக நினைவிருக்கிறது.

குடியானவக் குடும்பத்து கறுப்பன் கள்ளிற்கு அடிமையாகி, கடன் வாங்கி, கடன் கொடுத்தவன் கறுப்பனின் மனைவி பார்வதி தொடர்பு வைத்துக் கொண்டு, கறுப்பன் அவனை வெட்ட, அவன் சிறை செல்ல, சோரம் போனவள் என்று குடும்பத்தார் ஒதுக்க, பார்வதி தற்கொலை செய்து கொள்கிறாள். இப்படி சுருக்கமாக எழுதினால் கதையின் பயங்கரம் விளங்கவே விளங்காது. முழுவதும் படிக்கத்தான் வேண்டும். அதிலும் வழக்கு காட்சிகள் மிக நன்றாக வந்திருக்கின்றன.

திக்கற்ற பார்வதியை ஜெயமோகன் சிறந்த வணிக நாவல்கள் பட்டியலில் சேர்க்கிறார். ராஜாஜியின் மறைவுக்குப் பின் (1974) ஸ்ரீகாந்த், லட்சுமி நடித்து சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்தது.

அன்னையும் பிதாவும், முகுந்தன், ஜகதீச சாஸ்திரிகள் கனவு, அறியாக் குழந்தை ஆகிய சிறுகதைகள் தீண்டாமையின் கொடுமையைப் பற்றி. இவற்றில் அறியாக்குழந்தை 4 வயது சிறுவனுக்கு தீண்டாமை புரியவில்லை என்பதை அழகாகக் காட்டுகிறது. முகுந்தனும் நல்ல சிறுகதை. ஜாதி ஆசாரம் பார்த்த தன் தாயே பறையர் ஜாதியில் மீண்டும் மறுபிறவி எடுத்திருப்பதாக உணரும் முகுந்தன். அன்னையும் பிதாவும் சிறுகதையும் நன்றாக எழுதப்பட்டது. தான் “பறையன்” என்பதை மறைக்கும் அர்த்தநாரி. இவை எல்லாமே படிக்கக் கூடிய சிறுகதைகள்.

பட்டாசுக்கட்டு நல்ல முடிச்சு உள்ளது. திருடும்போது தன் மகனுக்காக பட்டாசையும் சேர்த்து திருடும் அப்பன்.

தீபாவளியின் தேவதரிசனம் சுமாரான கதைதான். ஆனால் ராமனும் கண்ணனும் யுதிஷ்டிரனும் கையால் நூற்ற கதர்தானே கட்டி இருப்பார்கள் என்று கேட்பது நயமாக இருந்தது.

மதுவிலக்கை முன்னிறுத்தும் சிறுகதைகள் யாருக்காக எழுதப்பட்டவை என்று எனக்கு ஒரு கேள்வி உண்டு. அதை தேவானையும் திக்கற்ற பார்வதியும் கறுப்பனும் படித்திருக்க மாட்டார்கள், மிஞ்சி மிஞ்சிப் போனால் ஜகதீச சாஸ்திரியும் முகுந்தனும் அர்த்தநாரியும் படித்திருக்கலாம். அவர்கள் படித்து என்ன பயன்?

புதுமைப்பித்தன் ரவா உப்புமா, போண்டா சாம்பார், ராஜாஜி சிறுகதைகள் ஆகியவற்ற தவிர்க்காவிட்டால் நோய்தான், பத்தியமாக இருக்க வேண்டும் என்று நக்கலடிப்பாராம். ஆனால் அவரே ராஜாஜியின் கதைகள் பிரச்சாரக் கதைகள்தான், இருந்தாலும் ராஜாஜி அவற்றை நயம்பட எழுதி இருக்கிறார் என்றும் சொன்னாராம்.

சபேசன் காப்பி அபூர்வமாக உபதேசம் இல்லாத ஒரு கதை. காப்பி நன்றாக விற்பதும், திடீரென்று மார்க்கெட் சரிவதும். வணிக எழுத்துதான், ஆனால் அழகாக இருக்கிறது. கூனி சுந்தரி “மரத்தை ம்றைத்தது மாமத யானை” என்ற வேதாந்தக் கருத்தை விவரிக்கிறது.

அவருடைய அரசியல் உரைகள் அவ்வப்போது தொகுக்கப்பட்டிருக்கின்றன. Indian Communists போன்றவை இன்று சுவாரசியமாக இல்லை.

குறை ஒன்றும் இல்லை அவரது பிரபலமான சாஹித்யம். அதைத் தவிர வேறு ஏதாவது சாஹித்யத்தை எழுதி இருக்கிறாரா தெரியவில்லை.

ராஜாஜி அசோகமித்ரனோ ஜெயமோகனோ இல்லைதான், ஆனாலும் அவரும் இலக்கியவாதியே. வியாசர் விருந்தும் சக்ரவர்த்தி திருமகனும் அவாது புனைவுகளை மங்கவைத்துவிட்டன, அவரது சிறுகதைகளைத் தொகுத்துப் போடலாம். (60 சிறுகதைகள் எழுதி இருக்கிறாராம்.)

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: எழுத்தாளர் ராஜாஜி பற்றி விகடனில்

புத்தகத்தில் ஓவியம்

சில நாட்களுக்கு முன்னால் கனடாவில் உள்ள வான்கூவர் நகரத்துக்கு விடுமுறைக்குப் போயிருந்தோம்.

எனக்குப் பொதுவாக கடை கடையாக ஏறி இறங்குவதில் விருப்பம் கிடையாது. ஆனால் என் மனைவிக்கும் என் மகள்களுக்கும் கொஞ்சம் விருப்பம் உண்டு. அதனால் நானும் மெதுமெதுவாக மாறிக் கொண்டிருக்கிறேன்.

வான்கூவரில் காஸ்டௌன் (Gastown) என்ற இடத்துக்குப் போயிருந்தோம். காஸ்டௌன்தான்
ஒரிஜினல் வான்கூவர். அது இன்று வரலாற்று முக்கியத்துவம் உள்ள இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தில் இருப்பது நீராவியால் ஓடும் கடிகாரம்.

நாலைந்து மணி நேரத்துக்குப் பிறகு விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். நான் முற்றிலும் களைத்திருந்தேன். திரும்பும் வழியில் Rare Books என்று ஒரு கடை கண்ணில் பட்டது. கடைக்குப் போக சாலையிலிருந்து இறங்கி அடித்தளத்திற்கு (basement level) போக வேண்டும். என் மனைவி அங்கே ஒரு பெஞ்சில் உட்கார, நானும் என் மூத்த பெண்ணும் கீழே போனோம்.

எந்தப் புத்தகமும் நான் வாங்கும் புத்தகம் இல்லை. விலையும் கட்டுப்படியாகாது. அனேகமாக பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் வந்த புத்தகங்கள். Memoirs of Eminent Etonians போன்ற புத்தகங்களை எல்லாம் நான் வாங்க வாய்ப்பே இல்லை. இரண்டு நிமிஷத்தில் திரும்ப இருந்தவனை விற்பனையாளர் இரண்டு மூன்று கிழவிகளிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது நிறுத்தியது.

அவர் புத்தகத்தை பக்கவாட்டில் காண்பித்துக் கொண்டிருந்தார் – அதாவது மேலட்டைக்கும் கீழட்டைக்கும் இடைப்பட்ட பக்கங்களை. புத்தகம் மூடித்தான் இருந்தது. பக்கங்களை கொஞ்சம் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அழுத்தினார். திடீரென்று ஒரு படகின் ஓவியம் தெரிந்தது!

இன்னொரு புத்தகத்தையும் காட்டினார். இதில் மீன்பிடிப்பவன் ஒருவனின் ஓவியம்.

புத்தகத்தை உருவாக்கிய பிறகு இப்படி அதில் ஓவியம் தீட்டுவார்கள் என்று விளக்கினார். சில பக்கங்களில் வண்ணங்கள் உள்ளே வந்திருக்குமாம். புத்தகத்தின் பக்கங்களை நாசமாக்காமல், இத்தனை சின்ன இடத்தில் இத்தனை சிறப்பான ஓவியம்! இந்தக் கலைக்கு Fore-edge Painting என்று பெயராம்.

இன்னும் பல ஓவியங்களை தளத்தில் காணலாம்.

என்னால் திறந்த வாயை மூட முடியவில்லை. புத்தகத்தை வாங்குவது கட்டுப்படி ஆகாது என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பார்த்ததே பெரிய அதிர்ஷ்டமாகத் தெரிந்தது. களைப்பெல்லாம் போயே போச்!

வான்கூவருக்கு சென்றால் போய்ப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய சுட்டி: Rare Books புத்தகசாலை

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது

2022-க்கான விஷ்ணுபுரம் விருதுக்கு சாரு நிவேதிதா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஜெயமோகனின் வார்த்தைகளில்:

நாற்பதாண்டுகளாக தொடர்ச்சியாக இலக்கியச்செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் சாரு நிவேதிதா தமிழில் மரபான அனைத்தையும் சமன்குலைக்கும் பிறழ்வெழுத்தின் முன்னோடியான படைப்பாளி. இந்திய இலக்கியக் களத்திலேயே எல்லா வகையிலும் பிறழ்வெழுத்தை முன்வைத்தவர் என அவரையே சொல்லமுடியும்.

விஷ்ணுபுரம் விருது பிரபலமான ஒருவருக்கு அளிக்கப்படுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். பூமணியையும் ஞானக்கூத்தனையும் ஒரு சிறு வட்டத்திற்குள்தான் தெரியும், சாருவின் பெயரை ஆயிரத்தில் ஒரு தமிழனாவது கேள்விப்பட்டிருப்பான்/ள் என்றுதான் கணிக்கிறேன். ஆனால் சாருவும் இது வரை விருது என்றெல்லாம் அங்கீகாரம் பெறாதவர்தான்.

என் எண்ணத்தில் முத்துலிங்கமே இந்த கௌரவத்துக்கு உரியவர், அவருக்குப் பிறகுதான் மற்றவரெல்லாம். ஆனால் நானா விருது யாருக்கு என்று முடிவெடுக்கிறேன்? 🙂

சாருவை நான் அதிகமாகப் படித்ததில்லை, படித்த வரை அவர் என் மனதை பெரிதாகக் கவர்ந்ததில்லை என்றாலும் அவரும் விருதுக்கு தகுதியானவர்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. பெரிதாக மனதைக் கவராத எழுத்தாளர் விருதுக்கு தகுதியானவர் என்பது முரண்பாடாக இல்லையா என்று நீங்கள் கேட்க்லாம். சில சமயம் அப்படித்தான். உதாரணமாக காஃப்கா எனக்கான எழுத்தாளர் அல்லர். Metamorphosis நாவலை என்னால் ரசிக்க முடியவில்லை. aதனால் அவரின் எழுத்தின் தரம் தாழ்வானது அல்ல.

For the record: சாருவின் புனைவுகளில் நான் ஜீரோ டிகிரி மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் 15, 20 வருஷத்துக்கு முன்னால் இருக்கும். ஜெயமோகன் சொல்வது போல பிறழ்வெழுத்துதான். படிக்கும்போது சித்தரிப்புகளால், குறிப்பாக பாலியல் சித்தரிப்புகளால் அதிர்ச்சி அடையத்தான் செய்தேன். ஆனால் அந்த முதல் அதிர்ச்சி அடங்கியதும் வாசகனை அதிர்ச்சி அடையச் செய்வதற்காக மட்டுமே எழுதப்பட்டவை என்றுதான் மதிப்பிட்டேன். அப்படிப்பட்ட எழுத்துகளுக்கு என் மனதில் பெரிய மதிப்பு இல்லை. அதனாலேயே நான் அவரது பிற புனைவுகளைத் தேடிப் பிடித்து படிக்கவில்லை.

தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்தது பழுப்பு நிறப் பக்கங்கள். ஆனால் பழுப்பு நிறப் பக்கங்களை நான் அறிமுக நூலாகவே மதிப்பிடுகிறேன். விரிவான அலசலாக அல்ல. இந்த மாதிரி அறிமுகங்களை நான் கூட எழுத முடியும் என்று எனக்கு ஒரு நம்பிக்கை. அசட்டு நம்பிக்கையாக இருக்கலாம் 🙂 நானே எழுதக் கூடியது என்று மதிப்பிடுபவை எனக்கு சாதனைகளாகத் தெரிவதில்லை 🙂 க்ரௌச்சோ மார்க்ஸ் சொன்ன மாதிரிதான் –

I refuse to join any club that would have me as a member!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சாரு நிவேதிதா தமிழ் விக்கி பக்கம்
விஷ்ணுபுரம் விருது தமிழ் விக்கி பக்கம்