தமிழ் விக்கி

நான் வனவாசம் போயிருந்த நாட்களில் நடந்த முக்கிய சாதனை தமிழ் விக்கி.

1500க்கும் மேற்பட்ட பக்கங்கள். தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்பு! அசன்பே சரித்திரமா, அதற்கு ஒரு பக்கம் உண்டு. ஸ்ரீரங்கத்து தேவதைகளா, அதற்கும் ஒரு பக்கம் உண்டு. தமிழ் இலக்கியத்தின், பண்பாட்டின், ஒவ்வொரு கூறையும் பற்றி விவரிப்பு. தமிழ் விக்கிபீடியாவின் முட்டாள்கள் முனைந்து சேக்சுபியர் என்று எழுதுவது போன்ற பைத்தியக்காரத்தனம் எல்லாம் கிடையாது. முழு நடுநிலைமை என்று எதுவும் கிடையாது, ஆனால் முடிந்த வரை நடுநிலை (எனக்கு நேரடியாகவே நடுநிலையாக எழுத வேண்டும் என்று முயன்றது/முயல்வது தெரியும்). ஒருவரது இலக்கிய இடம் என்று ஒரு பகுதி வந்தால் அதில் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். அது நேர்மையாக இருக்கிறது, முடிந்த வரையில் மேற்கோள்கள் மூலம் சுட்டப்படுகிறது.

இதில் ஜெயமோகனின் பங்களிப்பு நிறையவே உண்டு. இதற்கும் ஒரு பொச்சரிப்பைக் கண்டு வியந்தேன். நான் வியப்பதைக் கண்டு ஜெயமோகன் வியப்படைய மாட்டார், அவர் இந்த மாதிரி நிறைய பார்த்திருக்கிறார், நான் எதையும் பார்த்ததில்லை என்று அவருக்கு நன்றாகவே தெரியும். 🙂

எளிமையாகச் சொன்னால் நொட்டை சொல்வது சுலபம். அப்படி நொட்டை சொல்பவர்கள் குழுவில் சேர்ந்து தங்கள் கருத்துக்களை சொல்ல முயற்சி கூட செய்யவில்லை என்றால் பேசாமல் இருப்பது உத்தமம். எந்த அமைப்பிலும் வழிநடத்துபவர் உண்டு, அவரோடு நீங்கள் வேறுபட்டால் அவரை உங்கள் வாதத்தால் மாற்றுவது உங்கள் சாமர்த்தியம்.

ஜெயமோகன், நாஞ்சில், சோ. தர்மன் உட்பட்ட ஆசிரியர் குழு, அயராது உழைக்கும் நண்பர் கூட்டம் எல்லாருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! (அ.கா. பெருமாள் ஆசிரியர் குழுவில் இருந்தார், இப்போது காணோம்)

பின்குறிப்பு: நான் சிலிகன் ஷெல்ஃபில் எழுதி வருவது தடைப்பட தமிழ் விக்கியும் ஒரு காரணம். ஆரம்பித்த காலத்தில் நானும் சேர்ந்து சுறுசுறுப்பாக இரண்டு மூன்று பக்கங்களை எழுதினேன். நான் வாரத்துக்கு ஒன்றிரண்டு எழுதினால் ஜெயமோகன் ஒரு நாளைக்கு பத்து பதினைந்து பக்கம் எழுதித் தள்ளினார். அவர் அனுமார் வேகத்தில் பாலம் கட்டினால் எனக்கு அணில் வேகத்தில் நாலு சின்னக் கல்லைப் போடவே மூச்சுத் தள்ளியது. ஏற்கனவே மனச்சோர்வில் இருந்தேன், நம்ம வேகம் இவ்வளவு மோசம் என்பது மனச்சோர்வை இன்னும் அதிகமாக்கிவிட்டது. கடைசியில் மகா புத்திசாலித்தனமாக சிலிகன் ஷெல்ஃபில் ஏதோ இரண்டு மூன்று நாளைக்கு ஒரு முறை எழுதுவதையும் நிறுத்திவிட்டேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: References (இதற்கு தமிழில் என்ன எழுதுவது? சான்றுகள் என்றால் சரியாக இல்லை…)