மீனாகுமாரி இந்தியாவின் தலை சிறந்த நடிகைகளில் ஒருவர். சாவித்ரியோடு ஒப்பிடலாம். சொந்த வாழ்க்கையும் கொஞ்சம் சாவித்ரியைப் போலத்தான் இருக்கும். சிறு வயதிலேயே திரைப்படங்கள், அவர் ஊதியத்தை வைத்து வாழ்ந்த குடும்பம், 20-21 வயதிலேயே ஏற்கனவே திருமணமான கமல் அம்ரோஹியுடன் காதல், திருமணம், மணமுறிவு; வித்தியாசம், மணமுறிவுக்குப் பிறகு தர்மேந்திரா உட்பட்ட சில காதலர்கள் இருந்தார்கள், பகிரங்கமாகத்தான் உறவு இருந்தது. வினோத் மேத்தா மீனாகுமாரி மறைந்தபோது அவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதினார். பெரிய தரிசனம் என்று எதுவுமில்லைதான், ஆனால் முழுமையான வாழ்க்கை வரலாறு.
ராஜேஷ் கன்னா ஆராதனா வெளியான சமயத்திலிருந்து நாலைந்து வருஷம் புகழின் உச்சியில் இருந்தார். அதற்கு சமமாக எம்ஜிஆர்/ரஜினி மேல் தமிழர்களுக்கு இருந்த/இருக்கும் அன்பு, என்டிஆரை தேவுடுவாகவே பார்த்த தெலுங்கர்களை மட்டுமே சொல்ல முடியும். ஆனால் கன்னாவுக்கு இருந்தது அகில இந்திய புகழ். அவரது உச்சங்களும் வீழ்ச்சியும் பெரிய நாவலின் கதைக்களனாக இருக்க சாத்தியம் உள்ளவை. நாலைந்து வருஷம் ராஜா, அதற்குப் பிறகு – முப்பது முப்பத்தைந்து வயதிலிருந்து பெருங்காயம் வைத்த டப்பா என்பது ஒரு மனிதனுக்கு எத்தகைய அகச் சிக்கல்களை உருவாக்கும்? யாஸ்ஸர் உஸ்மான் எழுதிய Rajesh Khanna: The Untold Story of India’s First Superstar ராஜேஷ் கன்னாவின் அகச்சிக்கல்களை நன்றாகவே விவரிக்கிறது. இருந்தாலும் எனக்கு டைம் பாஸ்தான். காரணம் ராஜேஷ் கன்னா எனக்கு முக்கியமானவர் அல்லர். இத்தனைக்கும் “மேரே சப்னோன் கி ராணி” பாடலுக்கு பரம ரசிகன். அந்தப் பாடல் அவரை வைத்து படமாக்கப்பட்டிருக்கும் விதம் என் மனம் கவர்ந்தது. ஆனால் எனக்கு அவரது திரைப்படங்களில் பிடித்தது பாடல்கள்தான். என் நாயகர்கள் ஆர்.டி. பர்மனும் கிஷோர் குமாரும்தான். ஆனந்த் திரைப்படம் இந்திய சினிமாவின் சாதனைகளில் ஒன்று, ஆனால் அது எனக்கு ரிஷிகேஷ் முகர்ஜியின் சாதனை. கௌதம் சிந்தாமணி எழுதிய “Dark Star: The Loneliness of Being Rajesh Khanna” அவரது திரைப்படங்களை விவரிக்கிறது.
சத்ருகன் சின்ஹா, Anything but Khamoshi (2016): பாரதி எஸ். ப்ரதான் எழுதி இருக்கிறார். சத்ருகன் சின்ஹாவின் தன்னம்பிக்கை, அவரது ஸ்டைல், வில்லன் நடிகராக இருந்தவரை பெரிய நட்சத்திரமாக உயர்த்தியது. அவரது பாணி ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அம்பரீஷ், மோகன்பாபு உட்பட்ட பலருக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது. புத்தகத்தில் கிடைக்கும் சித்திரம் அவர் போலித்தனங்கள் அற்ற மனிதர் என்பதுதான். குறைகள் அற்றவர் அல்லர், ஆனால் நிறைகளும் நிறைய உடையவர். ஆனால் யாருக்கும் தலை தாழ்த்தவில்லை. திருமணம் ஆன புதிதிலேயே கூட நடிகை ரீனா ராயோடு உறவு! பூனத்தோடு திருமணம், ரீனா ராயோடு தேனிலவு என்று இருந்திருக்கிறார். அரசியலில் பாஜகவுக்காக பெரும் கூட்டங்களை ஈர்ப்பவராக இருந்திருக்கிறார், ஆனால் மோதி அரசில் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தம். டைம் பாஸ்தான், ஆனால் படிக்கலாம்.
ரிஷி கபூர், குல்லம் குல்லா (2017): மீனா ஐயரோடு எழுதியது. ரிஷி கபூர் ஹிந்தி சினிமாவின் ராஜ குடும்பத்தில் பிறந்தவர். அதனால் கிடைத்த லாபங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் அனுபவித்திருக்கிறார். சில பல குறைகள் உள்ளவர். ஆனால் அவற்றுக்காக வருத்தப்படுபவர் இல்லை. போலித்தனம் இல்லை. என் மனதில் பதிந்த ஒரு இடம் – அவரது மனைவி நீது சிங் ரிஷி கபூர் பிற பெண்களுடன் உறவு கொண்டிருப்பார் என்று கோடி காட்டுவதுதான். இது திரை உலகில் எத்தனை சாதாரணமாக இருந்திருக்கிறது? டைம் பாஸ்தான், ஆனால் படிக்கலாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்