ஒரு புகைப்படம் இல்லாமல் போய்விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. வேறு பீடிகை இல்லாமல்.
லா.ச.ரா.வின் சிந்தாநதியிலிருந்து:
நாற்பத்தைந்து, நாற்பத்தேழு வருடங்களுக்கு முன் கூடவே இருக்கலாமோ? ஆனால் ஐம்பது ஆகவில்லை.
உங்களை மெரினாவுக்கு அழைத்துச் செல்கிறேன்.
சொல்லத் தேவையில்லையானாலும் கண்ணகி சிலை இல்லை.
ஸப்வே இல்லை. மூர்மார்க்கெட், பின்னால் வந்த பர்மா பஜார் போல் எல்லாப் பொருள்களும் வாங்கக்கூடிய சந்தையாக மெரினா மாறவில்லை. இத்தனை ஜனமும் இல்லை.
மாலை வேளை, வானொலியின் ஒலி பெருக்கிகளை மாட்டியாகிவிட்டது. அங்கேயே சுட்டு அப்பவே விற்கும் பஜ்ஜியின் எண்ணெய் (எத்தனை நாள் Carryover-ஓ?) புகை சூழவில்லை. நிச்சயமாக இப்போதைக் காட்டிலும் மெரினா ஆசாரமாகவும், சுகாதாரமாகவும், கெளரவமாகவும், காற்று வாங்கும் ஒரே நோக்கத்துடனும் திகழ்ந்தது. பூக்கள் உதிர்ந்தாற்போல், இதழ்கள் சிதறினாற்போல், எட்ட எட்ட சின்னச் சின்னக் குடும்பங்கள். நண்பர்களின் ஜமா. அமைதி நிலவுகிறது.
இதோ மணலில், வடமேற்கில் ப்ரஸிடென்ஸி கல்லூரி மணிக் கோபுரத்துக்கு இலக்காக அக்வேரியம் பக்கமாக என்னோடு வாருங்கள். ஆ, அதோ இருக்கிறார்களே, ஏழெட்டுப் பேர் கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
உஷ் – மணிக்கொடி சதஸ் கூடியிருக்கிறது. அதன் நடு நாயகமாக- அப்படியென்றால் அவர் நடுவில் உட்கார்ந்திருக்கவில்லை. எல்லாருமே சப்தரிஷி மண்டலம் போல் வரிசை இல்லாமல்தான் அமர்ந்திருப்பார்கள். நாயகத் தன்மையை அவருடைய தோற்றம் தந்தது.
அந்நாளிலேயே அவரைத் தென்னாட்டுத் தாகூர் என்று அந்த வட்டம் அழைக்கும். அந்த ஒப்பிடலுக்குப் பொருத்தமாகத்தான் இருந்தார். நடு வகிடிலிருந்து இருமருங்கிலும் கரும்பட்டுக் குஞ்சலங்கள் போலும் கேசச் சுருள்கள் செவியோரம் தோள் மேல் ஆடின. கறுகறுதாடி மெலிந்த தவ மேனி. ஆனால் அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் மெலிந்த உடல்தான். சிதம்பர சுப்ரமணியனைத் தவிர, அவர் பூசினாற் போல், இரட்டை நாடி. க.நா.சு, சிட்டி சாதாரண உடல் வாகு.
ந. பிச்சமூர்த்தியின் அழகுடன் சேர்ந்த அவருடைய தனித்த அம்சம் அவருடைய விழிகள். ஊடுருவிய தீக்ஷண்யமான பார்வை. அதன் அற்புதக்ரணத் தன்மை அவருக்குக் கடைசிவரை இருந்தது. உயரத்தில் சேர்த்தி அல்ல. அவரிடம் மற்றவர்கள் காட்டின மரியாதையும், அவர் பேச்சுக்குச் செவி சாய்த்த தனிக் கவனமும், என்றும் சபாநாயகர் அவர்தான் என்பதை நிதர்சனமாக்கியது.
எத்தனைக்கெத்தனை பிச்சமூர்த்தி ஒரு பர்ஸனாலிட்டியாகப் பிதுங்கினாரோ அத்தனைக்கத்தனை அவர் எதிரே உட்கார்ந்திருந்த கு.ப.ரா. தான் இருக்குமிடம் தெரியாமலிருப்பதே கவனமாயிருந்தார் எனத் தோன்றிற்று. பிச்சமூர்த்தியைக் காட்டிலும் குட்டை. அவருடைய கனத்த மூக்குக் கண்ணாடி இல்லாவிட்டால் அவர் பாடு திண்டாட்டம்தான். பேசும்போது அவர் குரல் அவருக்குக் கேட்டதா என்பது என் சந்தேகம்.
பிச்சமூர்த்தியும், கு.ப.ரா.வும் எழுத்தில் கையாள எடுத்துக்கொண்ட விஷயம், பாணி தனித்தனி, ஆனால் ஏன் இவர்களைச் சிறுகதை இரட்டையர்கள் என்று குறிப்பிட்டார்கள்? எனக்குப் புரியவில்லை.
புதுமைப்பித்தனை மனதில் கூட்டுகையில், பளிச்சென்று நினைவில் படுவது அவருடைய உயர்ந்த dome like நெற்றியும் வெடிப்பான உரத்த சிரிப்பும்தான். அடிக்கடி சிரிப்பார்.
எனக்கு நினைவு தெரிந்தவரை, பி.எஸ். ராமையா எப்பவுமே உற்சாகமான பேர்வழி, நிமிர்ந்த முதுகும் வரித்த கழி போன்ற உடலுக்கு உறையிட்டாற் போல், ஜிப்பாவும், தரையில் புரளும் வேட்டியும் அவரை உயரமாகக் காட்டின. கைகளை உற்சாகமாக ஆட்டி உரக்கப் பேசுவார்.
இந்தக் கூட்டத்தை நான் உங்களுக்குப் பரிச்சயம் பண்ணும் சமயத்தில் கலைமகளில் சக்ரவாகம் என்கிற அவர் கதை வெளியாகி அதன் வெற்றிப்ரபை சிதம்பர சுப்ரமணியனைச் சூழ்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவரிடம் விஷயம் நிறைய இருந்தது. ஆனால் சங்கோஜி. அப்படியே அபிப்ராயமாக ஏதேனும் அவர் சொல்ல ஆரம்பித்தாலும் சரியாக முடிக்காமல், சிரிப்பில், பலமான தலையாட்டலில் மழுப்பிவிடுவார். நுண்ணிய முக அங்கங்கள். அலைபாயும் க்ராப்.
தி.ஜ.ர. முழங்கால்களைக் கட்டியபடி குந்திட்டபடி உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு செளகர்யமான போஸ்ட்சர். தலையை அழுத்த வாரி, உடனேயே மெனக்கெட்டுத் தானே கையை உள்ளே விட்டுக் கலைத்துக் கொண்டாற்போல் குட்டையாக வெட்டிய க்ராப் விரைத்துக் கொண்டிருக்கும். அவர் தோற்றத்தில் கவனம் இன்னும் கொஞ்சம் செலுத்தியிருந்தால் அழகான மனிதனாகவே வெளிப்படுவார் என்பது என் கருத்து. செதுக்கினாற் போன்ற மூக்கு, வாய், வரிசையான முத்துப் பற்கள். சிரிக்கும்போது அவர் முகத்தில் ஐந்தாறு வயதுகள் உதிரும்.
சிட்டி, சி.சு. செல்லப்பா, க.நா.சு. இவர்களின் படங்களைச் சமீபமாகப் பத்திரிகைகளில் பார்க்கிறீர்கள். அன்றைக்கு இன்று வருடங்கள் இவர் தோற்றங்களை அதிகம் பாதித்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ஒருவர், இருவர் அல்லது இருவர் மூவர். கூட்டத்தில் சேரலாம். குறையலாம். ஆனால் மாலை, இந்த வேளைக்கு இந்த இடத்தில் இந்த ஏழு பேர் நிச்சயம்.
அத்தனை பேரும் கதராடை.
இவர்களை விழுங்கும் விழிகளால் பார்த்துக்கொண்டு இவர்கள் பேச்சைச் செவியால் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பதில் எனக்கு அலுப்பே இல்லை.
இலக்கிய ஆர்வம் மிக்க என் நண்பன் குஞ்சப்பாவும் நானும், எங்கள் மரியாதையில், இயற்கையான வயதின் அச்சத்தில் இவர்களுக்கு நாலு அடி எட்ட உட்கார்ந்திருப்போம்.
நான் அப்போத்தான் மொக்கு கட்டியிருந்த எழுத்தாளன். எஸ்.எஸ்.எல்.சி. குட்டெழுத்து தட்டெழுத்துப் பரீட்சைகள் தேறிவிட்டு வேலைக்கு அலைந்து கொண்டிருந்தேன். தேடினால் கிடைத்துவிடுகிறதா? பறித்து எடுத்துக்கொள் என்கிற மாதிரி அப்பவே, வேலை ஒண்ணும் காய்த்துத் தொங்கவில்லை. அந்த ரோசம், அதனால் படும் கவலை சமயங்களில் தவிர, சிந்தனைக்கும் இலக்கியச் சிந்தனைக்கும் வயது காரணமாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஆக்கக் கனல் வெளிப்பட வழி காணாது, உள் புழுங்கவும் வேண்டிய நேரம் இருந்த அந்தப் பருவத்தில் என்னை என்னிலிருந்து மீட்டு எனக்குத் தருவதற்கு இந்தக் கடற்கரைக் குழுவின் பாதிப்பு தன் பங்கைச் செய்தது என்றால் மிகையில்லை.
மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன் ஆசிரிமையில் வெளி வந்து கொண்டிருந்த ‘ஷார்ட் ஸ்டோரி’ ஆங்கில மாதப் பத்திரிகையில் என் கதைகள் இரண்டு பிரசுரமாகியிருந்தன, அடுத்து மணிக்கொடி (ஆசிரியர் ப.ரா) யில் மூன்று கதைகள், ஹனுமான் வாரப் பத்திரிகையில் ஒன்று. உம், ஆமாம்.
“ஏண்டா, அங்கே தனியா உட்கார்ந்திண்டிருக்கே, இங்கே வாயேன்!”
தி.ஜ.ர, அழைப்பார். அப்படியே நகர்ந்து, அவருக்கும் ஈஸ்வரனுக்கும் இடையே (என் நினைப்பில்) அவர்கள் பாதுகாப்பில் இடுங்குவேன். அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நான் என்னைப் பாவித்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் இது மாதிரி நேர்ந்தால் வலிக்குமா? ஆனால் இங்கே வாய் திறக்க எனக்கு தில் கிடையாது. போயும் போயும் இங்கே றாபணாவா? என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அப்போதெல்லாம் யார் சொல்வதையும் கவனமாகக் கேட்டுக் கொள்ளும் பங்குதான் என்னுடையது.
என்ன பேசினார்கள்? இலக்கியம். இங்கே மார்தட்டல் கிடையாது. வகுப்பு நடத்தவில்லை. உபதேசம் செய்யவில்லை. இலக்கியத்திலேயே யாருக்கேனும் வாரிசு எடுத்துக்கொண்டு கட்சிப் பிரசாரம் கிடையாது. உலக இலக்கிய கர்த்தாக்களின் சிருஷ்டிகள் நடமாடின. அவர்கள் பெயர்களைச் சொல்லிச் சுவைக்க எனக்கு ஆசைதான். ஆனால் ஏதோ வெறும் பெயர்களை உதிர்த்து அதில் பெருமை அடையப் பார்க்கிறேன் எனும் சந்தேகத்துக்குக்கூட நான் ஆளாக விரும்பவில்லை. அந்த மாதிரிப் பெருமையால் எனக்கு இனி ஆக வேண்டியது ஏதுமில்லை. தவிர அப்போதேனும் மாப்பஸான், மாம், செக்கோவ் என்று எழுத்தாளர்கள் முனகினார்கள். Chase, Robbins, Maclean என்று இடத்தைப் பிடித்துக்கொண்டு, எழுத்து ஒரு ஃபாக்டரியாக மாறியிருக்கும் இந்நாளில் நாங்கள் பழகிய பெயர்கள், அந்த எழுத்துக்களின் சத்தியங்கள் எடுபடா.
பிச்சமூர்த்தியின் வெளிப்பாட்டில் விஷயம் நிறைய இருக்கும். அபூர்வமான விதானங்கள் தட்டும். இத்தனைக்கும் பேச்சில் சிங்காரங்கள், நகாசுகள் effect உண்டாக்க வேண்டும் எனும் தனி முயற்சி இல்லை. உள்ளது உள்ளபடி அவர் கண்டபடி. ஆனால் எப்படியும் கவிஞன் மனம் இல்லையா? லேசாக நடுக்கம் கொடுத்த குரலில் வார்த்தைகள் வெளிப்படுகையில், பிசிர்கள் கத்தரிக்கப்பட்டு, சொல்லும் பொருளும் சுளை சுளையாக விழுவது போலத் தோன்றும். ரத்னச் சுருக்கம். இதற்குள் முடிஞ்சு போச்சா? இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா?
“ராஜகோபாலா! சிட்டி! செல்லப்பா!” என்று அழைக்கையில் அந்தக் குரல் நடுக்கத்தில் ததும்பிய இனிமை, பரஸ்பரம் யாரிடம் இப்போ காண முடிகிறது? அவர் பார்வையே ஒரு ஆசீர்வாதம்.
இலக்கிய விழாக்கள் இந்நாளில் கொண்டாடப்படுகின்றன. கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. டி.வி., வானொலி வழி வேறு: பேட்டிகள், சந்திப்புகள், மோஷியாரா, ஸம்மேளனம்.., எந்தச் சாக்கிலேனும் மேடை.
ஆனால் கடற்கரையில் மாலை அந்த இரண்டு, இரண்டரை மணி நேரம் இந்த ஏழெட்டுப் பேர் கூடி மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்களே, அதுதான் உண்மையில் இலக்கியப் பட்டறை.
இத்தனை வருடங்களின் பின்னோக்கில் எனக்கு இன்னும் வேறு ஏதேதோ உண்மைகள் புலப்படுகிறாப் போல் ஒரு உணர்வு.
ஏதோ ஒரு வகையில், இவர்கள் எழுத்துக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பிக்குகள்.
இந்த ஏழெட்டுப் பேரில் நாலுபேர் இப்போது நம்முடன் இல்லை. இவர்களில் மூவரேனும் எழுத்துக்கே பலியானவர்கள்.
அந்த மஹாராஜியைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். அவள் மோஹினி. மிக்க அழகி. இரக்கமற்றவள். Medusa “வா, வா. என்னைப் பார். என் அழகைப் பார்!”
அவன் நெஞ்சை நீட்டுகிறாள். உள் உள்ளேயே பாடுகிறாள்.
கொல் இசை.
சிந்தா நதி மேல் கவிந்த ஒரு பனிப் படலம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்
அருமையான பதிவு. இன்றைய “எழுத்தாளர்”களுக்கு இவர்கள் யாரென்றே தெரியாது.
LikeLike