ராஜாஜி, கல்கி, மதுவிலக்கு

ராஜாஜி பற்றிய பதிவில் அவர் விமோசனம் என்ற பத்திரிகையை நடத்தியதைப் பற்றி எழுதி இருந்தேன். அதைப் பற்றி இன்னும் விவரங்கள் இருந்த ஒரு கூட்டாஞ்சோறு பதிவை மீள்பதித்திருக்கிறென்.

பாங்கர் விநாயகராவ் என்ற புத்தகத்தை சமீபத்தில் எப்போதோ படித்தேன். கல்கி மதுவிலக்கு அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி விமோசனம் என்ற பத்திரிகையில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. எந்த கதையும் சுகமில்லை. பிரசாரம் கதையை விட முக்கியமாக இருக்கும்போது கதையில் இலக்கிய நயம் தொலைந்து போய்விடுகிறது. மேலும் கல்கியின் ஆரம்ப கால சிறுகதைகள் இவை – சுவாரசியம் குன்றாமல் எழுதும் கலையை அவர் இன்னும் முழுதாக தெரிந்துகொள்ளாத காலம் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் ஒரு முன்னுரை எழுதி இருக்கிறார். அந்த முன்னுரையில் விமோசனம் பத்திரிகை உருவான விதம், அவருக்கும் ராஜாஜிக்கும் எப்படி உறவு ஏற்பட்டது என்பதை பற்றி எல்லாம் விவரித்திருக்கிறார். பிரமாதமாக இருந்தது. இந்த புத்தகம் வானதி பதிப்பகம் வெளியீடு, இதற்காகவே வாங்கலாம்!

ராஜாஜிக்கு அப்போதெல்லாம் கல்கியை அவ்வளவு தெரியாது. கல்கி கதர் போர்டில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு நவசக்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர சென்னை போகும்போது கல்கியை அவர் பார்த்திருக்கிறார். ராஜாஜி ஒரு மதுவிலக்கு பத்திரிகை நடத்த கல்கியை அழைத்துக் கொள்ளலாம் என்ற நினைத்து கல்கியிடம் சொல்லியிருக்கிறார். கல்கிக்கு இஷ்டம்தான், ஆனால் பத்திரிகை ஆரம்பிக்க நாளாகும் என்பதால் நவசக்தியில் திரு.வி.க.விடம் சேர்ந்திருக்கிறார். மூன்று வருஷம் ஒரு தகவலும் இல்லை. ஒரு நாள் ராஜாஜி சென்னைக்கு வந்திருந்தபோது அவரை பார்க்கப் போயிருக்கிறார். என்னவோ காரணத்தால் நவசக்தி வேலையையும் விட்டுவிட்டார். ராஜாஜி மூன்று மாதத்தில் வந்து சேர்ந்துகொள் என்று சொல்ல இவர் இன்றைக்கே வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ராஜாஜி நீ சென்னையில் வேலை இல்லாமல் இருந்தால் கெட்டுப் போய்விடுவாய்! என்று சொல்லி அவரை திருச்செங்கோட்டுக்கு அனுப்பி இருக்கிறார்.

அங்கே அவருக்கு மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம். இது அந்தக் காலத்தில் போதுமா போதாதா என்று தெரியாது. போதாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ராஜாஜியின் மகனான சி.ஆர். நரசிம்மனுக்கு நாற்பதுதான். அந்த சம்பளத்தில்தான் அவர், அப்பா ராஜாஜி, தங்கை லக்ஷ்மி (எதிர்காலத்தில் காந்தியின் மருமகள்) எல்லாரும் வாழவேண்டுமாம்! அதுவும் 17×10 அடி உள்ள ஒரே அறை கொண்ட வீட்டில்!

பணக்கார வக்கீல் தன் பங்களா, ஆயிரக்கணக்கில் வருமானம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நாற்பது ரூபாய் சம்பளத்தில் எதற்கு வாழ்ந்தார்? (இதே போல் ஈ.வெ.ரா.வும் வருமானம் வரும் தோப்புகளை எல்லாம் அழித்தார்.) சரி அவருக்கு பைத்தியம் என்றாலும், கல்கி, மற்றும் பலரும் எதற்கு அவர் பேச்சை கேட்டுக்கொண்டு சொற்ப சம்பளத்தில் அங்கே வேலை செய்தார்கள்?

மதுவிலக்குக்காக ஒரு பத்திரிகை – இது எப்படி விற்கும் என்று தெரியவில்லை. கல்கிக்கும் இதே சந்தேகம்தான். பத்து இதழ்கள் வந்திருக்கின்றன. ராஜாஜியும் கல்கியுமே எல்லா பக்கங்களையும் நிரப்பி இருக்கிறார்கள். ராஜாஜி உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்கு போனதும் கல்கி இழுத்து மூடிவிட்டாராம்.

இரண்டு கேள்விகள்:

  • ஒரு இடத்தில் அந்த ஊரில் பஞ்சம் என்றும் இந்த ஆசிரமம் மூலம் கதர் நூற்பதன் மூலம் லட்சக்கணக்கில் நிவாரணம் வழங்கப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார். கதர் விற்று அவ்வளவு லாபம் வந்திருக்கப்போவதில்லை. பிறகு லட்சங்கள் எங்கிருந்து வந்தன?
  • சில ஹரிஜன்கள், பிராமணர் அல்லாதார் பற்றி குறிப்பிட்டாலும் ஆசிரமத்தின் முக்கியஸ்தர்கள் எல்லாரும் பிராமணர்கள் போலத்தான் தோன்றுகிறது. காங்கிரஸில் அப்போது இருந்த பிராமணர் அல்லாதோர் (திரு.வி.க., வரதராஜுலு நாயுடு, முத்துரங்க முதலியார் – இவர் பின்னால் முதலமைச்சரான பக்தவத்சலத்தின் மாமனார், ஜே.சி. குமரப்பா, சர்தார் வேதரத்தினம் பிள்ளை) யாருமே இதில் பங்கெடுத்துக்கொள்ள முன் வரவில்லையா? இல்லை ராஜாஜி பிராமணர்களுக்கு முன்னுரிமை அளித்தாரா?

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்