ஒரு வழியாகத் திரைபப்டத்தைப் பார்த்துவிட்டேன்.
என்னைப் பொறுத்த வரையில் கதையின் நாயகர்கள் கலை இயக்குனர் தோட்டா தரணியும் நடன இயக்குனர் பிருந்தாவும்தான். தோட்டாவோடும் பிருந்தாவோடும் ஒப்பிட்டால் மற்றவர் எல்லாம் – மணிரத்னம் உட்பட – கொஞ்சம் சோட்டாவாகத்தான் தெரிகிறார்கள்..
மணிரத்னத்தின் திரைப்படங்களில் பாடல் காட்சிகள் எப்போதுமே அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். அவர் இசை வீடியோக்களோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம் என்று எனக்கு சில சமயம் தோன்றியதுண்டு (உதாரணமாக காற்று வெளியிடை திரைப்படம்) நல்ல வேளையாக இந்தப் படத்தின் takeaway பாட்டுக்கள் மட்டும் அல்ல.
குறிப்பாக தேவராளன் ஆட்டம் வண்ணங்கள் நடனம் ஆடுவதைப் போல இருந்தது. ராட்சஸ மாமனே படமாக்கப்பட்டிருக்கும் விதம் பிரமாதம். Visual treat. இரண்டிற்கும் வீடியோ கிடைக்கவில்லை. யூட்யூபில் வர இன்னும் கொஞ்சம் நாளாகும் போலிருக்கிறது.
ஆனால் இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். பூங்குழலி அறிமுகக் காட்சியில் படகில் பூங்குழலி ஏறி நிற்கும்போது நிலா அது வானத்து மேலே பாட்டு இந்தப் படத்திலுமா என்று ஒரு நொடி தோன்றியது!
திரைப்படத்தின் பல காட்சிகள் – உடையும் பாலத்தின் மீது செல்லும் தேர், ஆற்றை தெப்பத்தின் மேல் கடக்கும் குதிரை, பழுவேட்டரையர் அரணமனை, இலங்கை அரசன் மஹிந்தன் வரும் காட்சி போன்றவை அழகுணர்ச்சியுடன் படமாக்கப் பட்டிருந்தன.
வேறு எதுவுமே இல்லாவிட்டாலும் இவற்றுக்காகவே பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஆனால் இன்னும் இருக்கின்றன.
திரைக்கதை வசனத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். கதை பொன்னியின் செல்வனை இம்மியும் மாற்றாமல் எழுதப்பட்டிருக்கிறதா? இல்லை. ராஷ்டிரகூடர்களுடன் போர், நுளம்பம்பாடி போர், குந்தவை பழுவேட்டரையரை மடக்குவது என்றெல்லாம் நாவலில் கிடையாது. பெரிய பழுவேட்டரையரும், அனிருத்த பிரம்மராயரும், ஏன் ஆழ்வார்க்கடியானும் கூட நாவலில் இன்னும் பெரிய பாத்திரங்கள். ஆனால் திரைப்படத்தின் பெரும் பகுதி நாவலை அடியொற்றித்தான் செல்கிறது. நாவல் சில ஆயிரம் பக்கம் உடையது, கொஞ்சம் ramble ஆகத்தான் செய்யும். திரைப்படத்தின் விடுபடல்கள் நாவலை இன்னும் coherent ஆக்கும் முயற்சிகள் அவ்வளவுதான்.
திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் காட்சிகளும் அப்படித்தான். உதாரணமாக நாவல் முழுவதும் குந்தவை ஒரு பெண் சாணக்கியர் என்ற ரேஞ்சுக்குத்தான் கல்கி விவரிப்பார். ஆனால் ஓலை அனுப்புவதைத் தவிர குந்தவை வேறு எதுவும் செய்யமாட்டாள். சிற்றரசர் கூட்டத்தில் தம்பிகளுக்கு உங்களில் இருவர் மகள்கள் மனைவி ஆகலாம் என்று ஆசை காட்டுவது அந்தப் பாத்திரத்தை வலுப்படுத்துகிறது.
ராஷ்டிரகூடர்களோடு போர் என்பது இன்னொரு நிராயுதபாணியை கொல்லமாட்டேன் என்ற ஒரு நொடி வசனத்துக்காக கட்டி எழுப்பப்பட்ட பிரம்மாண்ட போர்க்காட்சியோ என்று தோன்றுகிறது. வீரபாண்டியனைக் கொல்வதால் ஆதித்தகரிகாலனுக்கு ஏற்படும் அகச்சிக்கல்களை அந்த ஒரு நொடி வசனம் நன்றாகவே காட்டிவிடுகிறது.
மிக நீண்ட நாவலை கெடுக்காமல் நல்லபடி திரைக்கதை ஆக்குவது சிரமம். அதை மணிரத்னம், ஜெயமோகன், இளங்கோ குமரவேல் மூவரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். வசனங்கள் மனோகரா வசனம் போல anachronism ஆகவும் இல்லை, அதே போல கொச்சையான பேச்சுத் தமிழாகவும் இல்லை. இயல்பாக இருக்கின்றன. அது ஜெயமோகனுக்கு ஜுஜுபி வேலைதான்.
முந்தைய பதிவிலிருந்து:
ஜெயமோகனிடம் மாற்றங்களைப் பற்றி ஒரு முறை பேசி இருக்கிறேன். அவர் நாவலில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய வேண்டி இருந்தது என்று சொன்னார். உதாரணமாக ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார் என்று நாவலைப் படித்துவிட்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. அப்படி எல்லாம் திரைப்படத்தில் அரைகுறையாக விட்டுவிடுவது கஷ்டம். நந்தினியின் தந்தை யார்? வீரபாண்டியனா? அப்பாவையே கணவன் என்று ஆதித்த கரிகாலனிடம் சொன்னாளா? மந்தாகினிக்கு சுந்தர சோழர், வீரபாண்டியன் இருவருடனும் உறவு இருந்ததா? இதை எல்லாம் கல்கி வேண்டுமென்றே விவரிக்கவில்லை, சில முடிச்சுகளை வேண்டுமென்றே அவிழ்க்காதது அவரது உத்தி. நாவலை இன்னும் பிரமாதமாக்குகிறௌ என்று நண்பர்கள் அந்தக் காலத்தில் பேசிக் கொள்வோம். அதை எல்லாம் சரிப்படுத்த தேவை இருந்தது என்று ஜெயமோகன் சொன்னார். அதாவது நாவலின் இடைவெளிகளை நிரப்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்திருக்கிறது.
திரைக்கதையில் எனக்கு நொட்டை சொல்ல வேண்டுமென்றால்; வந்தியத்தேவனின் கதாபாத்திரம் நாவலில் முதலில் வீரன்; பிறகு கொஞ்சம் குறும்புத்தனம் உள்ளவன். திரைப்படத்தில் முதலில் பெண்களோடு flirt செய்யும் குறும்புக்காரன், அப்புறம்தான் வீரம் எல்லாம் என்ற சித்திரம் எழுகிறது. ஆ. கரிகாலன் பார்க்கும் இள வயது நந்தினிக்கும் வீரபாண்டியனின் மரணப்படுக்கையில் பார்க்கும் நந்தினிக்கும் உருவ வித்தியாசம் அதிகம். எப்படி பார்த்தவுடன் தெரிந்தது? வீரபாண்டியனே நந்தினி என்று அழைக்கிறார்தான், ஆனால் உலகத்தில் ஒரே நந்தினிதானா? ஓலை கொண்டு வந்த வந்தியத்தேவனைப் பார்த்து நீர் சோழ இளவரசியை மணப்பீர் என்று அருண்மொழி சொல்கிறார். கையில் இருப்பது நீ உடனே கிளம்பி வா என்று ஒரு ஓலை மட்டுமே; அதில் அக்காவின் உள்ளம் எப்படித் தெரியும்?
இரண்டாவதாக நடிப்பு; விக்ரமுக்கு இந்த மாதிரி பாத்திரம் எல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. ஜெயம் ரவி பொருத்தமான தேர்வுதானா என்று எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அவரும் நன்றாகவே செய்திருக்கிறார். கார்த்தியும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆனால் கலக்கி இருப்பவர் ஐஸ்வர்யா ராயும், அவருக்கு அடுத்தபடியாக த்ரிஷாவும். மற்ற பாத்திரங்களில் ஜெயராமும், பார்த்திபனும், ஐஸ்வர்யா லட்சுமியும், கிஷோரும் நன்றாக செய்திருக்கிறார்கள். ஜெயராமின் பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி இருக்கலாம், அந்த மெல்லிய நகைச்சுவை கொஞ்சம் மாறுதலாக இருந்திருக்கும்.
ஆனால் முக்கிய நடிகர்களின் முதிர்ச்சியான தோற்றம் கொஞ்சம் உறுத்துகிறது. ஆதித்த கரிகாலன் இறக்கும்போது 30 வயது கூட இருக்காது. விக்ரமைப் பார்த்தால் நாற்பதாவது சொல்லலாம். அதே போல ஜெயம் ரவி கதையில் வரும் அருண்மொழியைப் போல இளைஞன் அல்ல. கார்த்தியும் மனதில் இருக்கும் வந்தியத்தேவனை விட கொஞ்சம் முதிர்ச்சியாகத்தான் தெரிகிறார்.
வந்த புதிதில் – ஒரு ஏழெட்டு வருஷமாவது – ஏ.ஆர். ரஹ்மானின் பாட்டுக்களை முதல் முறை கேட்கும்போதே பிடித்துவிடும். சின்னச் சின்ன ஆசையாகாட்டும், போறாளே பொன்னுத்தாயியாகட்டும், பேட்டை ராப் ஆகட்டும், அப்படித்தான். அப்புறம் சில வருஷம் முதலில் கேட்கும்போது பெரிதாக ஈர்க்காது, ஆனால் கேட்க கேட்கப் பிடித்துவிடும். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அப்படித்தான் இருக்கின்றன. இது வரை அடிக்கடி கேட்கவில்லை, அதனால்தானோ என்னவோ எதுவும் சரியாக நினைவிலேயே இல்லை. பார்ப்போம்.
என்னா கூச்சல் போட்டார்கள்! ஆழ்வார்க்கடியான் நாராயணா என்று சொல்லவில்லை, நெற்றியில் நீறு இல்லை, ஹிந்துக்களை இழிவு செய்கிறார்கள் என்று வெறும் டீசரைப் பார்த்துவிட்டு ஒரு கும்பல் கத்தியது. படம் வந்த பிறகு தானாக அடங்கி இருக்கிறது. ஆனால் பார்ப்பன ஆதரவு திரைப்படம், ராஜராஜன் ஹிந்துவே அல்ல என்று அடுத்த கும்பல் கிளம்பி இருக்கிறது. படத்தை எதிர்ப்பது என்று முடிவு எடுத்தாயிற்று, படம் எப்படி இருந்தால் என்ன, சும்மா கத்துவோம், என்று கிளம்பி இருக்கிறீர்களா? உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையாடா?
இதில் நடுவாந்தரமாக ஒரு கும்பல் கல்கியின் கதையை மாற்றிவிட்டார்கள் என்று கத்துகிறது. பொ.செ.யைப் இந்த சாக்கிலாவது ஒரு முறை படித்துப் பாருங்கப்பா!
பொ.செ. தமிழில் ஒரு cult நாவல். திரைப்படம் அப்படி ஒரு cult திரைப்படமாக அமையாது என்று நினைக்கிறேன். நன்றாக ஓடும், அடுத்த பாகம் வரும்போது நினைவிலிருக்கும், ஆனால் இன்னும் இரண்டு வருஷம் கழித்து மறந்தும் போய்விடும் என்று தோன்றுகிறது. விக்ரம் 2 திரைப்படம் போலத்தான் முடியும், பாஹுபலி போல cult திரைப்படமாக மாறாது என்று தோன்றுகிறது.
அதனால் என்ன? ஒரு குறைவுமில்லை. திரைப்படம் நன்றாகவே இருக்கிறது. அரங்கங்களில் சென்று பாருங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், கல்கி பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்:
இந்தக் கதை ஒரு 10 வருடங்களுக்கு முன் எடுத்திருக்க வேண்டும் (பெரும்பாலும் அதே நடிகர்களை வைத்து). இப்போது அனைவருக்கும் வயதாகி விட்டது. அது தான் படத்தில் பெரிய உறுத்தல்.
பழுவேட்டரையர்களை மணியம் முதல் பத்மவாசன் வரை வரைந்திருக்கிறார்கள். சரத்குமார், பார்த்திபன் ஒட்டவேயில்லை அந்தத் தோற்றங்களுடன். வந்தியத்தேவனும் தான் (அரும்பு மீசை வாலிபனாக இருக்க வேண்டியவன்). பிரகாஷ்ராஜ் சுந்தரசோழன் (சுந்தரமாகவே இல்லையே). அரவிந்த்சாமியைப் போட்டிருக்கலாம்.
LikeLike
இரண்டாம் பாகத்தில் பழவேட்டரையர் நந்தினி வந்தியத்தேவன் ஊமைராணி மற்றும் பல பாத்திரங்கள் சூடு பிடிக்கும்.
சு.சோழனும் கரிகாலனும் அருண்மொழியும் ஒரே நேரத்தில் கொலை செய்வதுதான் நாவலின் உச்ச கட்டம். பார்ப்போம்.
LikeLike
ஆனால் இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். பூங்குழலி அறிமுகக் காட்சியில் படகில் பூங்குழலி ஏறி நிற்கும்போது நிலா அது வானத்து மேலே பாட்டு இந்தப் படத்திலுமா என்று ஒரு நொடி தோன்றியது!
– கூட அதுவே தானோ என்று தோன்றியது :).
ஆனால் “சமுத்திர குமாரி” என்ற பெயருக்கு ஏற்றார் போல் சமுத்திரத்துனுள்ளிருந்து வரும் காட்சி அழகாக இருந்தது.
ஓலை அனுப்புவதைத் தவிர குந்தவை வேறு எதுவும் செய்யமாட்டாள். சிற்றரசர் கூட்டத்தில் தம்பிகளுக்கு உங்களில் இருவர் மகள்கள் மனைவி ஆகலாம் என்று ஆசை காட்டுவது அந்தப் பாத்திரத்தை வலுப்படுத்துகிறது.
– அதே அதே 🙂
இதில் நடுவாந்தரமாக ஒரு கும்பல் கல்கியின் கதையை மாற்றிவிட்டார்கள் என்று கத்துகிறது. பொ.செ.யைப் இந்த சாக்கிலாவது ஒரு முறை படித்துப் பாருங்கப்பா!
– இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கும் சிலரின் இலக்குகளே வேறு என்று தோன்றுகிறது. கன்டென்ட் – லைக்ஸ் – வியூஸ் – ரெவின்யு …
– பாலாஜி
LikeLike
meant to say “costume கூட அதுவே தானோ என்று தோன்றியது”
LikeLike