அரவிந்தன் நீலகண்டன்: கொஞ்சம் தேனீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்

அரவிந்தன் நீலகண்டனுக்கும் எனக்கும் ஏகப் பொருத்தம். அவரது அரசியல் நிலைப்பாடு அவர் கண்களை மறைக்கிறது என்பது என் வருத்தம். நான் ஒரு முட்டாள் என்பது அவரது முடிவு.

அரசியல் நிலைப்பாடு அவர் கண்களை மறைக்கிறது என்று நான் நினைப்பதற்கு ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். ஒரு முறை கி.ரா.வுக்கு பத்மஸ்ரீ விருது தர அ.நீ./ஜடாயு/ராஜமாணிக்கம் போன்றவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அ.நீ.யின் பதில் – கி.ரா.வுக்கு தகுதி இருந்தால் அவருக்கு பத்மஸ்ரீ விருது தருவதில் தவறில்லை. பாவம் அ.நீ. கி.ரா.வின் இலக்கியத் தகுதி என்ன என்று இனி மேல்தான் தெரிந்து கொள்ளப் போகிறார். ஆனால் ஜடாயுவோ அவருக்கும் ஒரு படி மேல். என்ன மயிருக்கு இவருக்கு விருது தருவது என்றார்…

அதனால்தான் கொஞ்சம் தேனீர் கொஞ்சம் ஹிந்துத்துவம் என்னை வியப்படைய வைத்தது. இந்தப் புத்தகத்தில் அ.நீ. எழுதி இருப்பதோடு நான் ஏறக்குறைய முழுமையாக இசைகிறேன்!

முதல் கட்டுரை மதன்மோகன் மாளவியா பற்றி. 2014-இல் மாளவியாவுக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. (பல ஆண்டுகள் முன் மறைந்த தலைவருக்கெல்லாம் பாரதரத்னா என்பது கேலிக்கூத்து என்பது வேறு விஷயம்) அப்போது தி.க. தலைவர் வீரமணி மண்ணுருண்டை மாளவியா என்று அவரை எள்ளி நகையாடி இருக்கிறார். ஏனென்றால் மாளவியா வட்ட மேஜை மாநாட்டுக்காக கடல் கடந்து சென்றபோது ஒரு மண்ணுருண்டையை எடுத்துச் சென்றிருக்கிறார். சாஸ்திரங்கள் கடல் கடந்து போவதைத் தடுக்கின்றன என்பது தெரிந்ததே. அந்த விதியை சமாளிக்க மாளவியா இப்படி செய்திருக்கிறார். அது முட்டாள்தனமான குறியீடாகவே இருந்துவிட்டுப் போகட்டும், அது அவரது நம்பிக்கை அல்லவா? அதில் அடுத்தவர் எப்படி மூக்கை நுழைக்கலாம்? நம்மூர் வெய்யிலில் கறுப்புச் சட்டை அணிவது புத்திசாலித்தனம்தானா? மாளவியா தலித் எதிர்ப்பாளர் என்று வீரமணி சொன்னாராம். ஆனால் மாளவியா ஹிந்து மகாசபையின் சிறப்பு மாநாட்டில் சொன்னாராம். (அ.நீ.யின் மொழிபெயர்ப்பு – தலித் என்ற வார்த்தையை மாளவியா பயன்படுத்தி இருக்க மாட்டார்…)

என் தலைப்பாகையை நான் ஹிந்து மதத்தை சார்ந்த என் தலித் சகோதரர்கள் காலடிகளில் ஏன் வைக்கக் கூடாது?… என் தலித் சகோதரர்கள் கோவிலுக்குள் சென்று வழிபடக் கூடாது என்று சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறது?

மாளவியாவை ஆசாரவாதியான ஹிந்துதான். ஆனால் அவரது கருத்துக்கள் மாறி இருக்கின்றன. அவர் பெண்களுக்கான வாக்குரிமையை எதிர்க்கவும் செய்தார், பின்னாளில் ஆதரிக்கவும் செய்தார். வேறென்ன வேண்டும்?

ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான மூஞ்சே 1931-இலோ என்னவோ முசோலினியை சந்தித்தாராம். அ. மார்க்ஸ் இதைப் பற்றி குறையாக சொன்னாராம். 1936 வாக்கில் இத்தாலி அபிசீனியாவை ஆக்கிரமிக்கும் வரை ஃபாசிசம் சர்வதேச அளவில் ஒரு கெட்ட வார்த்தை இல்லை. முசோலினி – ஏன் ஹிட்லர் கூட – அவரது நாட்டை சரியான திசையில் நடத்திச் செல்கிறார் என்ற எண்ணம் பொதுவாக சில வருஷங்களாவது இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மூஞ்சே முசோலினியை சந்தித்ததில் என்ன தவறு? அ.நீ. காந்தியே 1931-இல் முசோலினியை சந்தித்தாரே என்கிறார். சரிதானே?

சவர்க்கார் மன்னிப்பு கேட்டார் என்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டை அவ்வப்போது கேட்டிருக்கலாம். என்ன சிறையிலேயே உட்கார்ந்திருக்க வேண்டுமா? அதை விட வெளியே பயனுள்ள காரியம் எதையாவது செய்ய வேண்டுமென்றால் இந்த மாதிரி உத்திகளை பயன்படுத்துவதில் ஒரு தவறுமில்லை. போராடும்போது சிறைவாசம் என்பது அரசின் மனச்சாட்சியை – அதாவது பொதுப்புத்தியை – உறுத்தவோ, இல்லை சிறை சென்றவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்து அரசுக்குப் பிரச்சினை எற்படுத்தினாலோ மட்டுமே பயனுள்ள உத்தி. சவர்க்காரின் சிறைவாசத்தால் அவருக்கு மட்டுமே பிரச்சினை, பிரிட்டிஷ் அரசுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. அதனால் அவர் வெளியே வந்து வேறு ஏதாவது முறையில் பங்களிக்க முயன்றிருக்கிறார். அதனால் அவரது தியாகத்தை குறைத்து மதிப்பிட முடியுமா என்ன? இதெல்லாம் கேனத்தனமான பேச்சு. அதைத்தான் அ.நீ.யும் விவரிக்கிறார்.

இவை உதாரணங்கள் மட்டுமே. ஏறக்குறைய எல்லா கட்டுரைகளுடனும் முழுமையாக உடன்படுகிறேன். என் கண்ணில் அ.நீ., ஜடாயு போன்றவர்களின் முக்கியத்துவமே அரசியல் நிலைப்பாடுகளால் வேண்டுமென்றேயோ இல்லை உணராமலோ இப்படிப்பட்ட வாதங்களை முன் வைப்பவர்களை வன்மையாக மறுப்பதுதான். ஆனால் அவர்களும் இப்படியே அரசியல் நிலைப்பாட்டால் இதே போன்ற வாதஙகளை எதிர்ப்பக்கத்திலிருந்து முன் வைப்பதுதான் சோகம்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்