தமிழ்பிரபா: பேட்டை

பேட்டை (2018) நாவலில் எழுத்தாளரின் திறமை தெரிகிறது. ஆனால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று நினைக்க வைத்தது.

பேட்டை சிந்தாதிரிப்பேட்டையில் ஆங்கிலேயர் ஆட்சியில் குடியேறிய பள்ளர் ஜாதியினர் – அங்கே பல பரம்பரைகளாக வாழ்ந்தவர்களின் – வாழ்க்கையை நுண்ணுலகமாக (microcosm) காட்டுகிறது. வாழ்க்கை முறை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கப்படுவதுதான் நாவலின் வெற்றி. ஆனால் தரிசனங்களோ, இல்லை வரலாற்றின் வீச்சோ எதுவுமில்லை. அது பற்றாக்குறை உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது.

நாவல் கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் நெசவாளர்களை சென்னைக்கு அருகில் குடியேற்றுவதில் இருந்து ஆரம்பிக்கிறது. சுத்திகரிப்பு வேலைகளுக்காக சில தலித்களும் வருகிறார்கள். ஜாதி முறைப்படி வீடுகள் கட்டப்படுகின்றன. தலித்களுக்கு ஊரில் இடமில்லை, அவர்கள் ஊருக்கு வெளியேதான். பிறகு நாவல் நேராக சமகாலத்துக்கு வந்துவிடுகிறது. எண்பதுகளின் பிற்பகுதி என்று வைத்துக் கொள்ளலாம். இன்று நாறும் கூவத்தின் அருகில் வீட்டு வசதி வாரியக் டியிருப்புகள். அனேகரும் தலித்கள். கணிசமானவர்கள் கிறிஸ்துவர்கள். புதிதாக திருமணம் ஆன ரெஜினா. அவள் உடலில் அவள் மாமியாரின் ஆவி புகுந்து கொள்கிறது. பாதிரியார் பேயை ஓட்டுகிறார். ரெஜினா தீவிர மத நம்பிக்கை உடையவளாக மாறுகிறாள். மகன் ரூபன். நண்பர்கள். சிலர் கேரம் விளையாடுகிறார்கள். ரூபன் பன்னாட்டு நிறுவனங்களுக்காக வேலை செய்யும் நிறுவனத்தில் சேர்கிறான். பொருளாதார ரீதியில் பிறந்த சூழலுக்கு அடுத்த படிநிலையில் இருக்கிறான். கம்பெனிக்கு அழைத்துச் செல்ல தினமும் கார் வருகிறது. அவனுக்கு ஒரு மடிக்கணினி தரப்படுகிறது. ஒரு பெண்ணோடு உறவு ஏற்பட்டு முறிகிறது. நண்பர்களின் வாழ்வு திசைதிரும்புகிறது. காதல். அவனையும் ஒரு பேய் பிடிக்கிறது. குண்மாகிறது…

நாவல் எப்படியோ ரூபனின் சூழலை காட்டிவிடுகிறது. அது சென்னைத் தமிழில் கெட்ட வார்த்தைகள் விரவிய பேச்சா, அதிதீவிரமாக மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் கிறிஸ்துவ சபைகளின் சித்தரிப்பா, மதுவும் போதையும் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பதா, கேரம் போர்ட் விளையாட்டுப் பின்புலத்தின் விவரிப்பா, ரூபனின், அவன் நண்பன் சௌமியனின், குடிகார யோசப்பின் அகச்சிக்கல்களா என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.

நாவலின் சிறந்த பகுதி ரூபன்-இவாஞ்சலின் காதல். இயற்கையாக இருக்கிறது. இன்னொரு சிறந்த பகுதி பாதிரியார் மிக இயல்பாக தன் வட்டத்துக்குள் வருபவர்களின் மத நம்பிக்கைய தீவிரப்படுத்துவது. பெரிய பாத்திரங்களான நகோமி ஆயா, இறந்து போகும் நண்பன் சௌமியன் போன்றவர்கள் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு பாத்திரங்கள் கூட – டிஜிடல் யுகத்தில் முக்கியத்துவத்தை இழக்கும் ஓவியர் பூபாலன், குடித்துவிட்டு லந்து செய்யும் ரூபனின் அப்பா, கொஞ்சம் லூசான ஆமோஸ், செத்துப் போன மாமியார் கிளியாம்பா – நல்ல படைப்புகள்

சரித்திர வீச்சு இல்லை என்றால் முதல் ஓரிரு அத்தியாயங்களுக்கு – சிந்தாதிரிப்பேட்டை எப்படி நிறுவப்பட்டது – அவசியமே இல்லை. நாவலில் இன்னும் ஒருங்கமைதி (coherence) அதிகரித்திருக்கும். நாயகன் ரூபனுக்கு பேய் பிடிக்கும் இடம் எனக்கு ஒட்டவில்லை. அதுவும் அவன் சொல்லும் காரணம் செயற்கையாக இருக்கிறது. நாயகன் நாவல் எழுத விழைவது, ஃபேஸ்புக்கில் பதிவு போடுவது எல்லாமே நாவலோடு ஒட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவற்றில் கொஞ்சம் தன்வரலாற்றுச் சாயல் இருக்குமோ என்று தோன்ற வைத்தது.

நாவல் எனக்கு மெரினா எழுதிய மாப்பிள்ளை முறுக்கு நாடகத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. அதே பாணி எழுத்து, சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையில் வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகளில் வாழும் கிறிஸ்துவ தலித் பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட மாதிரி இருக்கிறது.

நல்ல எழுத்துதான். ஆனால் ஏதோ – இல்லை நிறையவே குறைகிறது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. படித்தே ஆக வேண்டும் என்று சொல்லமாட்டேன். ஆனால் சராசரிக்கு மேலான எழுத்துதான். உங்கள் நூலகத்துக்கு வாங்கலாம்தான். ஆனால் இன்னும் தரமான இலக்கியம் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: நண்பர் ரெங்காவின் விமர்சனம்