சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் அனேகமாக காலாவதி ஆகிவிட்டவை. (தமிழாசிரியர், திமலாவைத் தவிர). ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ கேஸ்தான். அவருடைய கதைகளில் பெரும் கேள்விகள் எழுவதே இல்லை. அவர் புதிதாக எந்த கருவையும் உருவாக்கிவிடவும் இல்லை. சின்னச் சின்ன நகாசு வேலைகள், (உதாரணம் – கவிதை படிக்கும் ரோபோ) மெல்லிய நகைச்சுவை ஆகியவைதான் அவற்றின் பலம். ஒரு ரோபோ உயிர் பெறும் கருவை அலுப்புத் தட்டும் வரையில் பயன்படுத்தி இருக்கிறார்.

ஆனால் அறிவியல் புனைவுகள் எனக்கு அறிமுகம் ஆனதே சுஜாதா மூலம்தான். 1976 வாக்கில் கல்கி பத்திரிகையில் ஏழெட்டு சிறுகதைகளை எழுதினார். காலப்பயணம், நடப்பதை முன் கூட்டியே சொல்லும் கம்ப்யூட்டர், அணு ஆயுதப் போரில் அழிந்த உலகம் என்று பல கருக்களை வைத்து எழுதினார். அந்த வயதில் மிகவும் கவர்ந்தன. அறிவியல் புனைவுகளின் சாத்தியங்கள் புரிந்தன. ஒரு அதிசயம் நடந்துவிட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று யோசிக்க வைத்தன. குறிப்பாக கால எந்திரம் சிறுகதையில் இறந்த காலத்தில் ஏற்படும் சிறு மாற்றமும் வரலாற்றை முழுமையாக மாற்றிவிடலாம் என்ற கருத்தை முதல் முறையாகப் படித்தேன். ஆங்கிலத்தில் SF படித்தவர்களுக்கு அது தேய்வழக்காகக் கூட இருக்கலாம். ஒன்பது பத்து வயது சிறுவனுக்கு அது கண்திறப்பு.

அந்த கல்கி சிறுகதைகளின் தொகுப்பு கிடைத்தது, அதைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்று நினைத்தேன். பிறகு பிற அறிவியல் சிறுகதைகளையும் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டேன்.

கல்கி சிறுகதைகளில் அன்று எனக்கு மிகவும் பிடித்திருந்த சிறுகதை தமிழாசிரியர். இன்று படித்ததைப் போலவே நினைவிருக்கிறது. இன்றும் புத்திசாலித்தனமான கரு என்றே கருதுகிறேன்.

என்ன கதை? பல நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன, தமிழ்தான் உலகத்தின் பொதுமொழி. ஆனால் தமிழ் எக்கச்சக்கமாக மாறிவிட்டது. சங்கத தமிழை இன்று நாம் புரிந்து கொள்ள கஷ்டப்படுவது போல நமது தமிழை அன்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அது பழந்தமிழ், வழக்கொழிந்துவிட்டது. தமிழ் சுருங்கிவிட்டது – “உனக்குப் புரிகிறதா?” என்பது “புரி?” என்று மாறுகிறது. புரியவில்லை என்று சொல்ல வேண்டுமா? “அபுரி!” பழந்தமிழை கற்ற ஒரே ஒருவர்தான் இன்னும் இருக்கிறார் – அவர்தான் தமிழாசிரியர். பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். பல வருஷங்களாக ஒரு மாணவனும் பழந்தமிழைப் படிக்க வரவில்லை. அவரது வேலை அபாயத்தில். திடீரென்று 2 பேர் வருகிறார்கள். மாணவர்கள் கிடைத்துவிட்டார்கள், வேலைக்கு இருந்த அபாயம் போயிற்று என்று இவருக்கு சந்தோஷம். பல்கலைக்கழகத் தலைவர் மாணவர்களை பார்வையிட வருகிறார், யாரையும் காணவில்லை. தமிழாசிரியர் அவர்களைத் தேடுகிறார். கடைசியில் அவர்கள் வேற்றுக் கிரகத்திலிருந்து படையெடுத்து வருபவர்கள், தங்கள் தொடர்பு மொழியாக பழந்தமிழை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. எந்தக் கம்ப்யூட்டராலும் உடைக்க முடியாது இல்லையா? தமிழாசிரியருக்கு இப்போது அசதித் துறையில் வேலை. (சதியின் எதிர்ச்சொல் அசதி!)

மொழி எப்படி மாறக் கூடும், எப்படி குறைவான ஒலிகளைக் கொண்டு அதே கருத்துக்களை சொல்ல முயற்சிக்கும் என்பதெல்லாம் அப்போது (இப்போதும்) உற்சாகமூட்டிய கருத்துக்கள். சதி-அசதி வார்த்தை விளையாட்டெல்லாம் இத்தனை வருஷம் கழித்தும் மறக்கவில்லை. இரண்டாம் உலகப் போரின்போது நவாஹோ இந்தியர்களின் மொழியை ரகசிய தொடர்பு மொழியாக பயன்படுத்தினார்களாம். சுஜாதா எங்காவது இந்தச் செய்தியைப் படித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

கல்கி சிறுகதைகளில் தேவன் வருகை அவருக்கு பிடித்தமானது என்று தெரிகிறது. ஆனால் ஓ. ஹென்றி ட்விஸ்ட் மட்டுமே உள்ள, கடைசி வரிக்காகவே எழுதப்பட்ட சிறுகதை. கடவுள் ஆறு மணிக்கு தரிசனம் தருகிறேன் என்கிறார். பிறகு என்ன? சூரியன் சிறுகதை அவ்வப்போது anthology-களில் இடம் பெறுகிறது. அணுகுண்டுப் போரால் நிலப்பரப்பு முழுதும் கதிர்வீச்சு, மனிதர்கள் பூமிக்கடியே வாழ்கிறார்கள். ஒரு சிறுவனுக்கு சூரியனைப் பார்க்க விருப்பம். காலமானவர் சிறுகதையில் பத்திரிகையின் ஜீவநாடியான கம்ப்யூட்டர் நாளை பத்திரிகை ஆசிரியர் இறக்கப் போவதை இன்றைய செய்தியாக பிரசுரிக்கிறது. நகர்வலம் சிறுகதையில் மூழ்கிவிட்ட சென்னை சுற்றுலாத் தலமாக மாறி இருக்கிறது. வாசல் சிறுகதையில் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க மக்களைக் கொல்லும் நாட்டின் தலைவர் நரகத்துக்கு செல்கிறார். யயாதி சிறுகதையில் 25 வயதுக்கு திரும்ப மருந்து சாப்பிடும் அறுபது வயதுக்காரர் கொஞ்சம் அதிகமாக மருந்தை சாப்பிட்டுவிடுகிறார். ரூல் நம்பர் 17-இல் அரசு குழந்தை பிறப்பை கடுமையாக கட்டுப்படுத்தும் வேளையில் ஒரு clerical error-ஆல் அனுமதி இருக்கிறது என்று நினைக்கும் அப்பா. கால எந்திரம் அந்த வயதில் கொஞ்சம் சிந்திக்க வைத்த கதை. 2020களின் மனிதன் தொல்காப்பியரை சந்திக்கிறான்.

பிற சிறுகதைகளில் திமலா சிறப்பானது. அவரது திறமை வெளிப்படும் அபூர்வ SF. இன்னும் 500 வருஷம் கழித்து கோவில், சடங்கு எல்லாம் எப்படி நடக்கும்? திருப்பதியில் ஜருகண்டி ஜருகண்டி என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பார்களா? பல தளங்களில் யோசிக்க வைக்கும் சிறுகதை. விஞ்ஞானம் முன்னேறிக் கொண்டே போனால் சடங்குகள் சார்ந்த ஆன்மீகம் என்னவாகும் என்ற கேள்வியை எழுப்புகிறார்.

அறிவியல் சிறுகதைகள் என்று சொன்னாலும் இவற்றில் அறிவியல் சிறுகதைகள், அமானுஷ்ய சிறுகதைகள் எல்லாவற்றையும் பற்றியும் கலந்து கட்டி எழுதி இருக்கிறேன். மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா, சொர்க்கத்தீவு, சில பல கணேஷ்-வசந்த் நாவல்கள் ஆகியவற்றை அறிவியல் புனைவுகள் என்று வகைப்படுத்தலாம்தான், ஆனால் நாவல்களை தவிர்த்திருக்கிறேன்.

ஒரு நாள் போன்ற சிறுகதைகளில் அவர் முனைந்திருந்தால் நல்ல சிறுகதைகள் கிடைத்திருக்கலாம். நல்ல கரு. திமலாவின் பாதிப்பு உள்ள சிறுகதை. கனவு வாழ்க்கை வாழ விரும்பும் ஒருவனை விவரிக்கிறது. தலைதீபாவளி கொண்டாட்டம். ஆனால் அன்றைய முன்னேறிய நாகரீகத்தில் தலைதீபாவளி என்ற பேச்சே கிடையாது. ஆசைப்படும் எஞ்சினியருக்காக ஒரு அனுபவத்தை உருவாக்கித் தருகிறார்கள்.

சோம்னா (1971) நல்ல அறிவியல் சிறுகதை என்பதை விட நல்ல சிறுகதை. கொஞ்சம் போரடித்துக் கொண்டே போயிற்று, கடைசி வரியில் மாற்றிவிடுகிறார்.

அவருக்கு இரண்டு கருக்களில் ஓரளவு விருப்பம் இருந்திருக்கிறது. ரோபோ உயிர் பெறுவது, பல நூறாண்டுகளுக்குப் பின் பெண்களின் நிலை. இவற்றை வைத்து பல சிறுகதைகளை எழுதி இருக்கிறார். பிற்காலத்தில் அவர் எழுதிய மீண்டும் ஜீனோ போன்றவை ரோபோ உயிர் பெறும் கருவை வேறு விதமாக யோசித்ததுதான்.

ரோபோ உயிர் பெறும் கருவை வைத்து எழுதியவற்றில் திவாவில் உயிர் பெற்ற ரோபோ தன்னை உருவாக்கியவனைக் கொல்கிறது.

பெண்களின் நிலை கருவை வைத்து எழுதியவற்றில் வாசனை சிறுகதையில் பெண்கள் அருகிவிட்டனர், உலகிலேயே பத்து பெண்கள்தான் இருக்கின்றனர், அவர்களை கண்காட்சியில் வைத்து காட்டுகிறார்கள். வெளியில் இருக்கும் சில பெண்கள் காட்சிப் பொருளாக மாற விரும்பாமல் ஒளிந்து வாழ வேண்டிய நிலை. ஒன்பதாவது பெண் சிறுகதையில் பெண்கள் குழந்தை பெற விரும்புவதில்லை. ஏமாற்றி தாயாக்குபவர்களுக்கு அரசு ஊக்கப் பரிசு தருகிறது. முன்னால் சொன்ன கல்கி சிறுகதைகளில் ஒன்று. மஞ்சள் ரத்தம் சிறுகதையில் அறைக்கு வரும் பெண் ரோபோவோ என்று சந்தேகித்தால் அவள் பூமியின் மனுஷி.

டாக்டர் ராகவானந்தம் வரும் சிறுகதைகள் அனேகமாக அறுபதுகளில் எழுதப்பட்டவை. அவற்றில் சுஜாதா உத்தேசித்தது மெல்லிய நகைச்சுவையை மட்டுமே. ராகவானந்தம் விஞ்ஞானி. எதையாவது கண்டுபிடிப்பார், அது வேலைக்காகாது. இந்தக் கருவை வைத்து சின்னதாக தமாஷ் செய்வார். ராகவேனியும் 277 சிறுகதையில் உலகை அழித்துவிடக் கூடிய புதிய element ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டு அதை ஆஃப் செய்ய முயற்சிக்கிறார்கள். 1000 வருஷங்கள் வாழ்வது எப்படி சிறுகதையில் காயகல்பம் சாப்பிட்டுவிட்டு 300 வருஷம் உயிரோடு இருக்கும் ஒருவரை சந்திக்கிறார்கள். வாட்டர் கார் விவகாரத்தில் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரை வைத்து காரை ஓட்டுகிறார்கள்.

ராகினி என் வசமாக அமானுஷ்ய சிறுகதை என்றுதான் வகைப்படுத்த வேண்டும். பெரியவர் என்னவெல்லாமோ வித்தை காட்டுகிறார். அஷ்டமாசித்தி தெரிந்தவர் போலிருக்கிறது. முடிவு வரிக்காகவே எழுதி இருக்கிறார். நல்ல வரிதான் – “நான் எழுந்து சென்று அந்தக் கூட்டத்தில் மறைவதை நானே பார்த்தேன்”. ஆனால் அது மட்டும் பத்தாது.

அனாமிகா போன்ற சிறுகதைகள் SFதானா என்பதே சந்தேகம்தான். சுனாமியில் இறந்த ஒரு பெண்ணின் கையில் சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள் புத்தகம் இருந்ததாம். அதைக் கேட்ட நெகிழ்வில் இறந்து போன பெண் சுஜாதாவிடமே பீச்சில் வந்து பேசுவதாக ஒரு கதை. ராகினி என் வசமாக சிறுகதையை கொஞ்சம் உல்டா செய்தது போல இருக்கிறது.

ஜில்லு சிறுகதை கல்கி சிறுகதையான சூரியனை நினைவுபடுத்தியது. கதிரியக்க மழை பெய்யப் போகிறது. அரசு ஊரையே காலி செய்கிறது. நாய்க்கு இடமில்லை. சிறுவன் தன் நாயோடு ஓடிவிடுகிறான்.

சில சமயம் அவர் படித்த கதைகளை தமிழ்ப்படுத்தி இருக்கிறார். மிஸ்டர் முன்சாமி ஒரு 1.2.1 (1969) Flowers for Algernon-இன் தமிழ் வடிவம்.

இன்னும் இருக்கின்றன, ஆனால் நினைவில் வந்தது, சமீபத்தில் படித்தது இவ்வளவுதான்.

பொதுவாக அறிவியல் புனைவுகளில் அறிவியல் plausible ஆக இருந்தால் நல்லது. இன்று நடக்காவிட்டாலும் இன்னும் ஆயிரம் வருஷங்கள் கழித்து நடக்கும் சாத்தியக்கூறு இருந்தால் நல்லது. ஆனால் சுஜாதா இந்த சிறுகதைகளில் பொதுவாக உத்தேசிப்பது மெல்லிய நகைச்சுவையை மட்டுமே.பல கதைகளில் சின்னதாக தமாஷ் பண்ணவே எழுதி இருக்கிறார். அதுவும் டாக்டர் ராகவானந்தம் கதைகளில் இது மிகத் தெளிவாகத் தெரியும்.

விதிவிலக்குகள் இருந்தாலும் பொதுவாக இன்று படிக்கும்போது அவரது அறிவியல் சிறுகதைகள் பெரிதாக கவர்வதில்லை. அடுத்த தலைமுறை இளைஞர்களைக் கவரும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை. இன்று அவரது தீவிர ரசிகர்கள், அல்லது முன்னோடி முயற்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் இதில் ஆர்வம் இருக்கப் போவதில்லை. உங்கள் பதின்ம வயது மகனோ மருமகளோ nephew-ஓ niece-ஓ தமிழில் என்ன படிக்கலாம் என்று கேட்டால் இவற்றை பரிந்துரைத்துவிடாதீர்கள். திமலா கூட உலகமகா தரிசனம் என்று சொல்லிவிட முடியாது. தமிழாசிரியர் புத்திசாலித்தனமான சிறுகதை, அவ்வளவுதான்.

அதற்காக அவரது முன்னோடி முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதற்கும் இல்லை. கால்குலேட்டர்கள் வந்துவிட்டதால் பதினாறாம் வாய்ப்பாடு வரை சொல்லிக் கொடுத்த மூன்றாம் வகுப்பு ஆசிரியர் மேல் மரியாதை போய்விடுகிறதா என்ன? ஆனால் அவருக்கு நன்றி சொல்ல இந்த பதிவு. இன்றும் அவரே தமிழின் முதன்மை அறிவியல் சிறுகதைகளை எழுதி இருக்கிறார். (ஜெயமோகனின் முயற்சிகளை நான் gothic fiction என்றே வகைப்படுத்துவேன்.)

அவரது அறிவியல் அபுனைவுகளைப் பற்றியும் ஒரு வார்த்தை. இன்று இவற்றால் பெரிய பயன் இல்லை. அவற்றின் தாக்கத்தை இன்றைய இன்டர்நெட் யுகத்தில் உணர்வது கஷ்டம். ஆனால் ஒரு காலத்தில் அவற்றுக்கு இருந்த மவுசு மிக அதிகம். ஒரு தலைமுறைக்கே அறிவியலில் ஆர்வத்தை வளர்த்தவர் அவர். கடவுள் இருக்கிறாரா இன்றும் படிக்கக் கூடிய அறிமுகப் புத்தகம். ஏன் எதற்கு எப்படி, ஜீனோம், ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து போன்ற புத்தகங்களை இன்று நாஸ்டால்ஜியாவுக்காகத்தான் படிக்க வேண்டும். அவற்றைப் பற்றி எழுத பெரிதாக எதுவும் இல்லை.

படிக்க வேண்டுமென்றால் தமிழாசிரியர், திமலா இரண்டை மட்டுமே பரிந்துரைப்பேன். முன்னோடி மட்டுமே. இன்றும் தமிழில் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை என்பதுதான் வருத்தம். எனக்கு அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற கனவு உண்டு…

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்