ம.ந. ராமசாமி, யன்மே மாதா

நாலைந்து நாள் முன்னால் ஜெயமோகன் தளத்தில் ம.ந. ராமசாமி என்ற எழுத்தாளரைப் பற்றி ஒரு கட்டுரையைப் பார்த்தேன். மூத்த எழுத்தாளர், ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை.

ம.ந. ராமசாமி நாற்பது ஆண்டுகளுக்கு முன் யன்மே மாதா என்று ஒரு சிறுகதையை எழுதி இருக்கிறார், அது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. யன்மே மாதா என்பது அம்மாவுக்கு சொல்லப்படும் சிரார்த்த மந்திரம்.

யன்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம…

என்று இருக்கிறதாம். அதாவது என் அம்மா “ஒழுக்கம்” தவறி என்னைப் பெற்றிருந்தாலும் சரி, என் உயிரியல் ரீதியான அப்பா யாராக இருந்தாலும் சரி, என் அம்மாவை மணந்து கொண்டவர்தான் என் தந்தை. அவருக்கு இந்த பிண்டம் போய்ச் சேரட்டும் என்று பொருளாம். ஜெயமோகன் என் அம்மாவின் கணவர், என் அம்மாவோடு உறவு கொண்டவர்கள் அனைவருமே என் தந்தையர், அவர்கள் அனைவருக்குமே இந்தப் பிண்டம் போய்ச் சேரட்டும் என்று மொழிபெயர்த்திருக்கிறார்.

என் அப்பாவுக்கு ஈமக்கடன்கள் செய்தபோது அங்கும் இங்கும் சில வார்த்தைகள் புரிந்தன. புரிந்த வரையில் அப்பா மற்றும் மூதாதையரே, நீங்கள் அனைவரும் நான் அளிக்கும் பிண்டத்தில் திருப்தி அடைந்து பிதுர்லோகம் போங்கள், இங்கே பேயாக சுற்றாதீர்கள் என்றுதான் இருந்தது. மூதாதையர் வாழ்பவர்களை பேயாக ஆட்டி வைக்கக் கூடாது என்ற பயம்தான் தெரிந்தது. ஏதோ தொன்மையான சடங்கு, பேய் பிசாசு என்ற பயம் அதிகமாக இருந்த காலத்தில் எழுதப்பட்டிருக்கும், அப்பாவிடம் என்ன பயம், அவர் நம்முடனே இருந்தால் நல்லதுதானே, அவரை இருக்க வேண்டாம், போ போ என்று பிரார்த்திக்கிறோமே என்று நினைத்துக் கொண்டேன். சிரார்த்த மந்திரங்கள் எல்லாம் இப்படித்தான் தொன்மையான அச்சங்களை பிரார்த்தனையாக வெளிப்படுத்தும் போலிருக்கிறது என்று தோன்றியது.

ஆனால் இப்படி ஒரு பிரார்த்தனையைப் படித்ததும் மனம் நிறைந்தது. "கற்பு நெறி", பாலியல் ஒழுக்கம் ஆகியவற்றில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. நான் வளர்ந்த காலகட்டத்தால் அவை புரிகின்றன, அவற்றை மீறுவது எனக்கு கஷ்டம்தான். ஆனால் தர்க்கரீதியாக யோசித்தால் அம்மா, அப்பா, குடும்பம், உறவுகள் எல்லாம் பாலியல் ஒழுக்கத்தை விட பல மடங்கு முக்கியம். அம்மா கொலையே செய்திருந்தாலும் பிள்ளைகளுக்கு அம்மாவோடு உறவு முறியக் கூடாது என்றே கருதுகிறேன், அப்படி இருக்கும்போது பாலியல் ஒழுக்கம் எல்லாம் ஜுஜுபி.  உயிரியல் ரீதியான தந்தையை விட பிள்ளைகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்பவர்தான் முக்கியம், அவர்தான் உண்மையான தந்தை. இத்தனை நெகிழ்வான அணுகுமுறை ஹிந்து மதத்தில் காலம் காலமாக இருப்பது பெரிய மகிழ்ச்சி!

நம் தொன்மங்களில் இப்படி நெகிழ்வுத்தன்மையை காட்டும் நிறைய சம்பவங்கள் இருக்கின்றன. யுதிஷ்டிரனுக்கும் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் நகுல சகதேவர்களுக்கும் அப்பா பாண்டுதான். சத்யவதியின் அப்பா மீனவர் தலைவர் தசராஜன்தான். திருதராஷ்டிரனும் பாண்டுவும் விசித்ரவீரயனின் பிள்ளைகள்தான். கண்ணன் வசுதேவரின் மகன் மட்டுமல்ல, கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபனுக்கும் குமரன்தான். ஆனால் கர்ணனைப் போன்ற அவலச்சுவை நிகழ்ச்சிகளும் இருக்கின்றனதான்.

ஜெயமோகனின் மொழிபெயர்ப்பு – சரியோ தவறோ – உயிரியல் ரீதியான தந்தையும் என் குடும்பம்தான், அவருக்கு பிண்டம் போய்ச் சேரட்டும் என்பதும் அருமை, கவித்துவமானது. குடும்பம் விரிவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! நந்தகோபர், வசுதேவர் இருவருமே அப்பா என்றால் யாருக்கு என்ன வருத்தம்?

நான் வடமொழி அறியேன், சிரார்த்த மந்திரத்தை சரியாக எழுதி இருக்கிறேனா என்பது நிச்சயமில்லை. குத்துமதிப்பாகத்தான் மொழிபெயர்க்கவும் செய்திருக்கிறேன். யாராவது வடமொழி தெரிந்தவர்கல் சரியாக மொழிபெயர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

யன்மே மாதா சிறுகதையை படிக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. ம.ந. ராமசாமியின் சிறுகதையில் இந்த மந்திரம் என் தாயை இழிவு செய்கிறது, சிரார்த்தத்தில் இதை சொல்ல மாட்டேன் என்று போகிறதாம். அவரது அணுகுமுறையும் சரிதான். ஆனால் என் கண்ணில் இந்த மந்திரம் இன்னும் பெரிய சரி!

ராமசாமியின் சிறுகதை ஒன்று கிடைத்தது. புத்திசாலித்தனமான சிறுகதை. நாயகன் இளம் எழுத்தாளர். ஒரு சிறுவன் எந்த வரியைச் சொன்னாலும் அது எந்த நாவலில்/சிறுகதையில் இடம் பெறுகிறது என்று துல்லியமாகச் சொல்கிறான். ஏதோ அமானுஷ்ய சக்தியோ என்று எல்லாரும் திகைக்கிறார்கள். நாயகனின் சிறுகதையிலிருந்து ஒரு வரியை எடுத்துக் கொடுக்கிறார்கள். அவன் இது நதானியேல் ஹாதோர்ன் எழுதியது என்கிறான்!

இந்த மாதிரி சிறுகதை எழுதத்தான் ஆசைப்படுகிறேன். 🙂 இன்னும் ஒரு விசித்திரம் – இதே கரு உள்ள கதையை ஆங்கிலத்தில் எங்கேயோ படித்த ஒரு நினைவு. அதாவது இந்தக் கதையே காப்பி அடித்ததாக இருக்கலாம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள், ஹிந்து மதம்

தொடர்புடைய சுட்டிகள்: