பழைய நாவல்: பொற்றொடி

இப்போதெல்லாம் பொழுது போகவில்லை என்றால் தமிழ்.விக்கி தளத்தில் ஏதாவது ஒன்றிரண்டு பக்கத்தைப் படிக்கிறேன். அப்படிப் பார்த்த பக்கங்களில் ஒன்று பொற்றொடி – 1911-இல் எழுதப்பட்ட நாவல். மின்னூல் வேறு கிடைத்ததால் படிக்க ஆரம்பித்தேன்.

உண்மையைச் சொல்லிவிடுகிறேன். நூறு வருஷங்களுக்கு முன் எழுதப்படவில்லை என்றால் இந்த நாவலை நான் சீந்தக்கூட மாட்டேன். நாவலின் பழமை ஒன்றே அதை படிக்க வைத்தது. உங்களுக்கு பழமை, முன்னோடித்தனம் எல்லாம் ஒரு பொருட்டில்லை என்றால் தவிர்த்துவிடுவது நலம்.

ஆனால் பொற்றொடியின் நடை கொஞ்சம் நவீனப்படுத்தப்பட்டால் அது சாண்டில்யன் எழுதி இருக்கக் கூடிய கரு/நாவல். ஏன், லட்சுமி எழுதி இருக்கக் கூடிய கரு/நாவல். முப்பது நாற்பதுகளில் பாய்ஸ் கம்பெனி நாடகமாக, ஏன் ஐம்பது அறுபதுகளில் திரைப்படமாக நடிக்கக் கூடிய சாத்தியக் கூறு உள்ளது.

மிக எளிமையான கதைதான். பொற்றொடிக்கு பதினாறு வயது. “படித்த பெண்”. அதுவும் 1911க்கு முந்தைய காலகட்டத்திலேயே. பன்னிரண்டு வயதிலிருந்து சீராளனோடு காதல். அப்பா பிடிவாதமாக பணக்கார வெள்ளையப்பனுடன் திருமணம் ஏற்பாடு செய்கிறார். சீராளன் அவனது குருவான பக்கா சுவாமிகள், சுவாமிகளின் நண்பரான சப்-ஜட்ஜ் ராயர் ஆகியோரின் உதவியோடு முகூர்த்தத்துக்கு முன்னால் பெண்ணைத் தூக்கிவிடுகிறான். அதே முகூர்த்தத்தில் திருமணமும் நடந்துவிடுகிறது. வெள்ளையப்பன் அன்றிரவே ஆயிரக்கணக்கானவர் உள்ள படையோடு திருமண வீடு மீது தாக்குதல் நடத்துகிறான். சீராளனுக்கு அடி, அவனைத் தூக்கிச் சென்றுவிடுகிறார்கள். சீராளன் இறந்ததாக நம்பி சுவாமிகளும் ராயரும் வழக்கு நடத்துகிறார்கள். அனேகருக்கு தண்டனை, லஞ்சம் கொடுதது தப்பிக்கும் வெள்ளையப்பனுக்கும் உயர்நீதிமன்றத்தில் தண்டனை. தூக்கிச் செல்லப்பட்ட சீராளன் உயிர் பிழைக்கிறான், பத்து பனிரண்டு நாளைக்குப் பின் வந்து பார்த்தால் பொற்றொடி துயரத்தில் சாகக் கிடக்கிறாள். சீராளனைப் பார்த்ததும் புனர்ஜன்மம். சுவாமிகள் பணத்துக்காக மணம் செய்து கொள்ளக் கூடாது, குணத்துக்காகத்தான் என்று ஒரு சொற்பொழிவு ஆற்றுகிறார். சுபம்!

“படித்த பெண்ணின்” சித்தரிப்பு, அவள் தன் கணவனைத் தானே தேர்ந்தெடுக்கலாம் என்ற நிலை எல்லாம் அப்போது புரட்சியாக இருந்திருக்க வேண்டும். இதை அன்று படித்தவர்கள் பெண்களைப் படிக்க வைத்தால் கெட்டுப் போய்விடுவார்கள், அப்பா அம்மாவை எதிர்ப்பார்கள் என்று நினைத்திருந்தால் நான் வியப்படைய மாட்டேன்.

நாவலின் சிறந்த பகுதி கொள்ளையர்களின் தாக்குதல்தான். அதில் கொஞ்சமாவது உண்மை இருக்க வேண்டும். நாற்பது ஐம்பது பேர் தங்களை தற்காத்துக் கொள்வது ஓரளவு படிக்கும்படி இருக்கிறது. ஆனால் அன்று சீராளனிடம் துப்பாக்கி – அதுவும் நாலைந்து இருப்பது – எல்லாம் கொஞ்சம் அதிகப்படிதான்.

பொற்றொடியும் சீராளனும் பேச ஆரம்பித்தால் நாலைந்து பக்கம் மூச்சு விடாமல் பேசுகிறார்கள். சீராளன் பத்து பனிரண்டு நாளைக்குள் திரும்பிவிடுகிறான். ஆனால் அதற்குள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து, அப்பீல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்றத்திலும் வழக்கு முடிகிறது. அதாவது 12 நாட்களுக்குள் இரண்டு வழக்கு முடிவடைந்துவிடுகிறது. இத்தனைக்கும் இந்த நாவலை எழுதியவர் வழக்கறிஞர்!

நாவலை எழுதியவர் ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம் பிள்ளை. சுதேசமித்திரன் இதழில் பாரதியாருடன் இணைந்து துணையாசிரியராகப் பணியாற்றியவர். ஜி. சுப்ரமணிய அய்யரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். திருநெல்வேலியில் கோலோச்சிய ‘சர்வஜனமித்திரன்’ பத்திரிகையின் தூண்களில் ஒருவராம்

நாவலின் முன்னோடித்தனம் என்பது பெண் கல்வி நல்லது, பெண்ணுக்கு தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தை மிக இயல்பாக முன்வைப்பதுதான். 1911-இல் இதற்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் என்பதை பிள்ளைவாள் உணர்ந்திருப்பாரா என்றே கேள்வி எழுந்தது.

மீண்டும் சொல்கிறேன், நூறு வருஷங்களுக்கு முன் எழுதப்படவில்லை என்றால் இந்த நாவலை நான் சீந்தக்கூட மாட்டேன்.உங்களுக்கு பழமை, முன்னோடித்தனம் எல்லாம் ஒரு பொருட்டில்லை என்றால் தவிர்த்துவிடுவது நலம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
மின்னூல்
தமிழ் விக்கி குறிப்பு