நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து: எஸ்.டி. சுந்தரம்

எஸ்.டி. சுந்தரத்தின் எழுத்து நாட்டுடமை ஆகாவிட்டால் நான் இந்தப் பதிவை எழுதி இருக்க மாட்டேன், நீங்களும் பிழைத்திருப்பீர்கள். அவரது எழுத்து முற்றிலும் காலாவதியானதே.

சுந்தரம் 1921-இல் ஆத்தூரில் பிறந்தவர். 11, 12 வயதில் நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்துவிட்டார். பிறகு தமிழ் வித்வான் படிப்பு படித்திருக்கிறார். 1942-இல் விடுதலைப் போராட்டத்தில் சிறைவாசம். அவரது புகழ் அனேகமாக கவியின் கனவு (1945) நாடகத்தால்தான். அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்திருக்கிறது, சிவாஜி மற்றும் நம்பியார் நடித்திருக்கிறார்கள். நாடகம் பார்க்க சிறப்பு ரயில் பெட்டியே இருந்ததாம். அதாவது தஞ்சை-நாகப்பட்டினம் ரயிலில் ஒரு பெட்டி இந்த நாடகம் பார்க்கப் போகிறவர்களுக்கு மட்டுமாம். அதன் வெற்றியால் திரை உலகில் நுழைந்தார். மோகினி (1947), லைலா மஜ்னு (1948), கன்னியின் காதலி (1949), விப்ரநாராயணா (1950), மனிதனும் மிருகமும் (1953), கள்வனின் காதலி (1958) சாரஙகதாரா (1959?) ஆகிய திரைப்படங்களுக்கு வசனமும் சில பாடல்களும் எழுதி இருக்கிறார். ஒன்றிரண்டு திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். மனிதனும் மிருகமும் இவரது சொந்தத் தயாரிப்பும். கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்துக்கும் இவர்தான் வசனம் என்று படித்தேன், ஆனால் அது சக்தி கிருஷ்ணசாமி என்று நினைவு. பிறகு மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார், இயல் இசை நாடக மன்ற செயலாளர் பதவி. சங்கீத் நாடக அகடமி ஃபெல்லோஷிப் பெற்றிருக்கிறார். 1979-இல் மறைந்தார்.

1934-இல் நவாப் ராஜமாணிக்கமே கல்லூரியில் சேர்த்துவிட்டார் என்று படித்தேன். 13 வயதில் எப்படி கல்லூரியில் சேர்ந்திருக்க முடியும்? அப்போதே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சிறைவாசம் என்றும் படித்தேன். எட்டு வருஷமா கல்லூரிப் படிப்பு? சரியான காலவிவரம் இல்லை.

பொதுவாக அவரது நாடகங்களில் எல்லாரும் நீள நீளமாக செந்தமிழில் வசனம் பேசுகிறார்கள், காதல் வயப்படுகிறார்கள், இந்தக் கால நடையில் சொல்வதென்றால் பஞ்ச் டயலாக பேசுகிறார்கள். துணை பாத்திரங்கள் மட்டும் சாதாரண தமிழில் பேசுகிறார்கள். ஒரு நாடகமும் – கவியின் கனவு உட்பட – ஐம்பதுகளுக்குப் பிறகு பார்த்திருப்பார்களா என்று சந்தேகம்தான்.

கவியின் கனவு இன்று தேய்வழக்காகத்தான் தெரிகிறது. விடுத்லைப் போர், மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி, சர்வாதிகாரி, சிறையில் வாடும் கவிஞன்… ஆனால் அன்று ஏன் வெற்றி பெற்றது என்பது நன்றாகவே புரிகிறது. நல்ல தமிழ், அன்றைய “முற்போக்கு” கருத்துக்கள்…

நம் தாய் (1947) நாடகத்தில் புரட்சி வீரர்கள் அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஐம்பதுகளில் எம்ஜிஆரோ சிவாஜியோ நடித்திருந்தால் ஓடி இருக்கலாம். இன்று தேய்வழக்குகள்தான் கண்ணில் படுகின்றன.

உலகம் சிரிக்கிறது நாடகத்தில் மணிமேகலை காப்பியத்தின் ஒரு பகுதியை நாடகமாக்கி இருக்கிறார்.

வீர சுதந்திரம் நாடகம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் (வாஞ்சிநாதன், லாலா லஜ்பத் ராய், பகத் சிங், திருப்பூர் குமரன்…) கதைகளைத் தொகுக்கிறது.

அவரது பலம் அவரது ஆளுமைதான் என்று தோன்றுகிறது. உண்மையான நாட்டுப் பற்று, தமிழ் இலக்கியங்களில் புலமை, எழுத வேண்டும் என்ற விழைவு. ஆனால் அவரால் அவர் வளர்ந்த காலத்தின் பாய்ஸ் கம்பெனி நாடகங்களைத் தாண்ட முடியவில்லை. அன்றைய நிலவரத்தின்படி அவரால் செவ்வியல் நாடகங்களை எழுத முடியும், ஓரளவு சாதாரணத் தமிழில் இயல்பான உரையாடல்களை எழுத முடியும். முன்னோடி என்று கூட சொல்ல முடியவில்லை, முன்னோடிகளின் நகல் மட்டுமே என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை பக்கம்

தொடர்புள்ள சுட்டி:
தமிழ் விக்கி குறிப்பு
மின்னூல்கள்