மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே. அதுவே கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து மீள்பதித்ததுதான். மீள்பதிக்க காரணம் அழிசி பதிப்பகம் இந்தப் புத்தகத்தை மீண்டும் கொண்டு வருவதுதான். அழிசி ஸ்ரீனிவாச கோபாலனுக்கு ஒரு ஜே!
புதிய வெளியீடு
படித்திருக்கிறீர்களா? (தொகுதி 1)
க. நா. சுப்ரமண்யம்
‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் வெளியான கட்டுரைத் தொடர் ‘படித்திருக்கிறீர்களா?’ மூன்று தொகுதிகளாக நூல் வடிவம் பெற்றுள்ளன. இது முதல் தொகுதியின் மறுபதிப்பு. இரண்டாவது தொகுதியின் மறுபதிப்பும் விரைவில் வெளியாகும்.
*
‘தமிழ் விக்கி’ இணையக் கலைக்களஞ்சியத்திலிருந்து…
க. நா. சுப்ரமணியத்தின் புகழ்பெற்ற ‘படித்திருக்கிறீர்களா?’ என்னும் நூல் பரிந்துரைப் பட்டியல் சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வந்த தொடர். அது க. நா. சுப்ரமணியம் முன்வைத்த அறிவியக்கத்திற்குத் தொடக்கமாக அமைந்தது. அந்தப் பரிந்துரைப் பட்டியலை ஒட்டி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் ஆதரவும் எதிர்ப்புமாக விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. அந்நூல் தமிழில் ஒரு மூலநூல்தொகை (Modern Tamil Canon) ஒன்றை உருவாக்கும் முயற்சி. அப்பட்டியலை தொடர்ந்து தன் வாழ்நாள் முழுக்க க.நா.சுப்ரமணியம் விரிவாக்கிக் கொண்டே இருந்தார். அதில் அவர் புதிய படைப்பாளிகளைச் சேர்த்தார், பழையவர்கள் சிலரை தவிர்த்தார். அவர் பரிந்துரைத்தவர் களில் ஷண்முகசுப்பையா, அநுத்தமா போன்ற சிலர் பின்னாட்களில் அவருடைய வழிவந்த விமர்சகர்களாலும் அவரை ஏற்கும் வாசகர் களாலும்கூட ஏற்கப்படாது மறைந்தனர். அவரால் முதன்மைப் படுத்தப்பட்ட ஆர். ஷண்முகசுந்தரம் போன்ற சிலர் அவர் அளித்த இடத்தை அடையவில்லை. அவர் பொருட்படுத்தாத ப. சிங்காரம் போன்றவர்கள் பின்னாளில் அவருடைய வழிவந்த விமர்சகர் களாலேயே முதன்மையான இடத்தில் வைக்கப்பட்டனர். ஆனால் இந்த மாறுபாடுகளை கடந்து க. நா. சுப்ரமணியம் உருவகித்த அந்த மூலநூல்தொகையே நவீனத் தமிழிலக்கியத்தின் மையத்தொகுதி என இன்றும் மறுக்கப்படாமல் நிலைகொள்கிறது.
*
படித்திருக்கிறீர்களா? (தொகுதி 1)
க. நா. சுப்ரமண்யம்
விலை ரூ.170
தொடர்புக்கு: 70194-26274
(மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே.)
க.நா.சு.வின் இந்தப் பட்டியல் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக முக்கியமானது. Eye opener. தமிழ் புனைவுலகு டைம் பாஸ் மட்டுமே அல்ல, விகடன்/குமுதம், சுஜாதா/சாண்டில்யன்/பொ. செல்வன் மட்டுமே அல்ல, மிகச் சிறந்த படைப்புகள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ நாலைந்து நல்ல எழுத்தாளர்கள்/புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். இந்தப் புத்தகத்தை வாங்கி அடுத்த ஒரு மணி நேரத்தில் படித்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடாக திலீப்குமாரின் புத்தகக் கடையை கண்டுபிடித்தபோது கிடைத்த மகிழ்ச்சி, ஜெயமோகனை முதல் முறை சந்தித்தபோது கிடைத்த மகிழ்ச்சியைத்தான் சொல்லலாம்.
செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் அப்போது கிடைத்தது.
தன் ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சுப்ரமண்யம் அலசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் சமகால தமிழ் படைப்புகளைப் பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை. நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும், ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது என்றுதான் அன்று தோன்றியது. இன்று இவற்றைப் படிக்கும் முதிர்ச்சி வந்திருக்கிறது, ஆனால் இன்றும் அவற்றை நேரடியாகப் படிப்பதைத்தான் விரும்புகிறேன், கோனார் நோட்ஸ்களை அல்ல.
க.நா.சு.வின் அணுகுமுறை எனக்கு மிகவும் இசைவானதுதான். ஆனால் அவர் ரசனைக்கும் எனது ரசனைக்கும் ஒத்துப் போகவில்லை என்பது பெரிய நகைமுரண். க.நா.சு.வின் பட்டியலில் அனேகமானவை எனக்கு சாதாரணப் புத்தகங்களாகத் தெரிகின்றன. சில சமயம் க.நா.சு. போன்ற ஜாம்பவான் இதை எப்படிய்யா பரிந்துரைத்தார் என்று வியக்கிறேன். ஜெயமோகன் சட்டகங்களை வகுத்து வரையறைகளை செதுக்கி இந்தப் புத்தகம் இந்தப் பாணி இப்படிப் படிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும்போது புத்தகத்தைப் படிக்க வேண்டும் அதற்கு என்ன இத்தனை சட்டதிட்டம் என்று தோன்றும். ஆனால் அவர் எனக்கு ஒரு புத்தகம் பிடித்திருக்கிறது என்று சொன்னால் அனேகமாக எனக்கும் பிடித்திருக்கும். இது அடுத்த நகைமுரண்!
அதாவது க.நா.சு.வின் அணுகுமுறையைத்தான் என்னால் ஏற்க முடிகிறது. ஆனால் ஜெயமோகனின் ரசனைதான் எனக்கு ஒத்து வருகிறது. 🙂
இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல் வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!
ஜெயமோகன் ஒரு பின்னோட்டத்தில் சொன்னார்.
அவர் (க.நா.சு.) போட்டு 30 வருடம் புழங்கிய பட்டியல்தான் படித்திருக்கிறீர்களா? இன்றும் தமிழில் புழங்கும் தரவரிசை அதில் உருவாகி வந்ததே. அதற்காக கநாசு 30 வருடம் வசைபாடப்பட்டார். வசை தாங்க முடியாமல் சென்னையை விட்டே ஓடி டெல்லியில் தஞ்சம் புகுந்தார்.
க.நா.சு. போட்டதுதான் முதல் பட்டியல் போலிருக்கிறது. இதற்கு வசை பாடப்பட்டாரா? என்ன மக்களோ!
க.நா.சு.வின் பட்டியல் கீழே. இவற்றில் சில இன்னும் கிடைக்கவில்லை, ரசனை வேறுபட்டிருக்கிறது என்று தெரிந்தாலும் இன்னும் தேடுவதை நானும் நிறுத்தவில்லை.
- புதுமைப்பித்தனின் காஞ்சனை – புதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தன் எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. காஞ்சனைதான் தமிழின் முதல் பேய்க்கதையாம். க.நா.சு. இந்தச் சிறுகதை தொகுப்பை பற்றி எழுதியதை இங்கே முழுமையாகப் படிக்கலாம். புதுமைப்பித்தனே எழுதிய முன்னுரை இங்கே. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு. தேர்வு.
- தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
- சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம் – இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே இருந்தது. நண்பர் ராஜனிடம் இந்தப் புத்தகமும் மண்ணில் தெரியுது வானம் என்ற புத்தகமும் கிடைத்தது. ஆனால் படித்தபோது இது ஒரு சுமாரான நாவல் என்றுதான் எண்ணினேன். ஏன் இதைப் பரிந்துரைத்தார் என்று யோசிக்க வைத்தது. படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.
- எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – நல்ல புத்தகம், நானும் பரிந்துரைக்கிறேன். பிள்ளையைப் பற்றிய சில பதிவுகள் இங்கே, இங்கே மற்றும் இங்கே.
- லா.ச.ரா.வின் ஜனனி – நல்ல சிறுகதைத் தொகுப்பு, ஆனால் என் கண்ணில் இதை விட சிறந்த புத்தகங்களை லா.ச.ரா. எழுதி இருக்கிறார். பாற்கடல், புத்ர, அபிதா, சிந்தாநதி, இதழ்கள்… லா.ச.ரா.வின் எழுத்துகள் எப்போதுமே உணர்ச்சி பிரவாகம், இதுவும் அப்படித்தான். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?
- எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – அந்தக் காலத்தில் படித்தபோது எஸ்.வி.வி. கலக்கிவிட்டார் என்று தோன்றியது. நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருந்தது. “படித்திருக்கிறீர்களா” பட்டியலைப் பார்த்துவிட்டு அதே புத்தகக் கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான். கல்கியின் நகைச்சுவை மாதிரி இருந்தது. ஆனால் 15-20 வருஷம் கழிந்த பிறகு மீள்வாசிப்பில் வெறும் fluff என்று தோன்றியது. அப்போதே அவரது ராமமூர்த்தி போன்ற பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை. என் கண்ணில் இதற்கு இன்றைக்கு ஒரு curiosity value மட்டுமே.
- வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் முழு புத்தகத்தையும் படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாகக் கருதப்படுகிறது. மங்கையர்க்கரசியின் காதல் சிறுகதையை இங்கே படிக்கலாம்.
- யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். மிகைப்படுத்துதல் எதுவும் இல்லாத, மிக உண்மையான அவதானிப்புகள். என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
- வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். மீள்வாசிப்பிலும் பிடித்திருந்தது. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
- சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
- ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – நல்ல தேர்வு.
- தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. இதுவும் நண்பர் ராஜனிடம் கிடைத்தது. அதைப் பற்றிய பதிவு இங்கே. சிலிர்ப்பு அருமையான சிறுகதை. பசி ஆறிற்று, தவம் என்ற இன்னும் இரண்டு சிறுகதைகளும் குறிப்பிட வேண்டியவை. எந்த சிறுகதையும் சோடை போகவில்லை.
- மு.வ.வின் கரித்துண்டு. மறைந்த நண்பர் சேதுராமன் அனுப்பிய புத்தகம். மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இது பிடித்திருந்தது. ஆனால் இது எல்லாருக்குமான நாவல் அல்ல. தமிழின் சிறந்த நாவல்கள் என்று நான் ஒரு பட்டியல் போட்டால் அதில் வராது.
- தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
- டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள்/. நானும் பரிந்துரைக்கும் புத்தகம். விரிவாக இங்கே.
- ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் -க.நா.சு.வின் விவரிப்பு படிக்க வேண்டும் என்று ஏக்கப்பட வைத்தது. ஆனால் முதல் வாசிப்பு எனக்கு ஏமாற்றம் தந்தது. க.நா.சு. கொடுத்த பில்டப் அளவுக்கு புத்தகம் இல்லை என்று நினைத்தேன். மறுவாசிப்பில் எனது வாசிப்பின் குறைகள் தெரிந்தன, நல்ல புத்தகம் என்று நினைத்தேன்.
- கு. அழகிரிசாமி கதைகள் – அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். மேலே வார்த்தைகளை வளர்த்துவானேன்?
- அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் இந்தப் புத்தகம்தான் எங்கள் ரசனை வேறுபாட்டை சந்தேகம் இல்லாமல் காட்டுகிறது. இதெல்லாம் ஒரு புத்தகம், இதை க.நா.சு. பரிந்துரைக்கிறார் என்ற வியப்பு அடங்கவே இல்லை.
- கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. க.நா.சு.வின் முழுக் கட்டுரையும் இங்கே.
- பாரதிதாசன் கவிதைகள் – அவருக்கு சந்தம் கை வந்த கலை, அவ்வளவுதான். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்துப் பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும். ஆனால் பாரதிதாசன் நல்ல கவிஞர் இல்லை என்பது என் உறுதியான கருத்து. இத்தனைக்கும் எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
- கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதைத் தொகுப்பு. கனகாம்பரம், திரை, பண்ணை செங்கான், விடியுமா? ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர்.
தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், புத்தகப் பரிந்துரைகள்