டம்பாச்சாரி விலாசம்

டம்பாச்சாரி விலாசம் 1847-இல் எழுதப்பட்ட ரொம்பப் பழைய நாடகம். (தமிழ் விக்கி தளம் 1867 என்கிறது, ஆனால் என் குறிப்புகளின்படி 1847தான், எங்கே பார்த்தேன் என்பதுதான் நினைவில்லை) பாய்ஸ் கம்பெனி பாணி நாடகங்களில் இதுவே முதல் நாடகம் என்று எங்கோ படித்த நினைவு. தகவல் அல்லது நினைவு தவறாக இருக்க வாய்ப்புண்டு. பம்மல் சம்பந்த முதலியார் போன்ற முன்னோடியே இந்த நாடகத்தை முன்னோடி நாடகம் என்று குறிப்பிடுகிறார். ரத்தக்கண்ணீர் நாடகம்/திரைப்படத்தின் மூல வடிவம் இதுவே என்றும் சொல்லப்படுகிறது.

எனக்கு பழைய நாடகங்களில் ஈர்ப்பு உண்டு. அதுவும் எத்தனை அரதப்பழசோ அத்தனை தூரம் ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது 🙂 டம்பாச்சாரி விலாசம் திரைப்படமாக மறு ஆக்கம் செய்யப்பட்டதும் ஈர்ப்பை அதிகரிக்கிறது. (ஆனால் ரத்தக்கண்ணீர் திரைப்படமே எனக்கு பெரிதாக சுவாரசியப்படவில்லை.) ஒரே பிரச்சினை, ஆர்க்கைவ் தளத்தில் கிடைக்கும் மின்பிரதியின் தரம் கொஞ்சம் மோசம். படிப்பது கஷ்டம். தம் கட்டிப் படித்தாலோ அவ்வப்போது கோனார் நோட்ஸ் தேவைப்படுகிறது.

டம்பாச்சாரி விலாசம் அந்தக் காலத்திற்கு பெரும் புரட்சியாக இருந்திருக்க வேண்டும். ராமன், கிருஷ்ணன் என்று தெரிந்த கதை இல்லை; ராஜா ராணி கிடையாது; அன்றைய சமூகம்தான் பின்புலம் (மிகைப்படுத்தப்பட்ட பின்புலமாக இருக்கலாம்.)

நாடகத்தின் நடை பெரிய மாற்றமாக இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன். பாட்டுகளும் வசனங்களும் கலந்து வருகின்றன. பல முறை ஒரு பாடலை விளக்கியே வசனம் வருகிறது. அன்றைய பேச்சு மொழி நிறையவே பயன்படுத்தப்படுகிறது. பல மொழி வார்த்தைகள் இயல்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. தெலுகு வேலைக்காரன் – பெத்தபோயி – என்றால் அவன் தெலுங்கில்தான் பேசுகிறான். சோக்ரா உருதுவில். ஆங்கிலம் பீட்டர் விடுவது போல அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தின் மொழியே தமிழ் நாடகத் துறையில் முன்னடியாக இருந்திருக்க வேண்டும். முதலியாரின் வார்த்தைகளிலேயே (எழுத்துப் பிழைகளைத் திருத்தி இருக்கிறேன்.)

இந்நூலில் தெலுங்கு, பார்சி, இங்கிலீஷ் முதலாகிய தேசிய மொழிகளும் வாராங்க போராங்க வாராங்கோ போராங்கோ அவங்கோ இவங்கோ முதலாகிய கிராமிய மொழிகளும் ஸமஸ்கிருத நாடகங்கள் போலவும் தமிழ்க் குறவஞ்சி முதலானவைக்கள் போலவும் வேண்டிய இடங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

டம்பாச்சாரியும் அவன் நண்பர்களும் பீட்டர் விடுவதற்கு ஒரே ஒரு உதாரணம் கீழே.

வெயிட்டு செய் சட்டுவாஜீ
கெயிட்டுபோற் பறந்தே ஓடி
ஃபெயிட்டனைப் போட்டுக் கொண்டென்
ரயிட்டரை வரச் சொல்வாயே

ஆங்கிலத்தில் – “Wait, my assistant! Fly like a kite and ask my clerk to come back in the pheaton!”

கதைப் பின்னல் இன்று காலாவதியாகிவிட்ட ஒன்றுதான். என்ன நடக்கப் போகிறது என்பது மிக வெளிப்படை, கதையின் போக்கு வெகு சுலபமாகப் புரிந்திருக்கும். உதாரணமாக வில்லன் பேர்கள் எல்லாம் குடிகேடன், ஆயிரப் புளுகன் என்றுதான் இருக்கும். அவர்கள் அறிமுகக் காட்சியில் தான் எத்தனை குடும்பத்தைக் கெடுத்தேன், தான் எப்படிப்பட்ட பொய்களைச் சொல்வேன் எனறு விளக்கி பாட்டு பாடுவார்க்ள். டம்பாச்சாரியும் அவர்கள் வில்லத்தனத்தை மெச்சி எதிர்பாட்டு பாடுவார். எதற்கு குடிகேடனை தன் நண்பராகக் கொள்கிறார் என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. பாத்திரப் படைப்புகளில் எந்த நுணுக்கமும் கிடையாது. ஆனால் டம்பாச்சாரி போன்ற ஒரு ஜமீந்தார், அவனை ஏமாற்றி வாழும் ஒட்டுண்ணி வில்லன்கள், தாசி, தாசியின் அம்மா, தாசிகளோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் “மாமா”, வைத்தியர், சில பல வேலைக்காரர்கள், நேர்மையான பணியாட்கள், உத்தம மனைவி என்று பல சமூகத் தட்டுகளில் பாத்திரங்களை படைத்ததே பெரும் புரட்சியாக இருக்க வேண்டும். (மிருச்சகடிகம், மத்தவிலாசப் பிரகசனம் போன்ற விதிவிலக்குகளில் இப்படிப்பட்ட பாத்திரங்கள் இருக்கலாம்.)

ஒரு வரியில் சொன்னால் – உண்மையான முன்னோடி நாடகம்.

நாடகத்தை எழுதியவர் காசி விஸ்வநாத முதலியார். சைதாபுரத்துக்காரர், அதாவது இன்றைய சைதாப்பேட்டைக்காரர். 1806இல் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். முதலில் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் பிறகு மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றி இருக்கிறார். டம்பாச்சாரி விலாசம் தவிர, தாசில்தார் விலாசம், பிரம்ம சமாஜ விலாசம் ஆகிய நாடகங்களை எழுதி இருக்கிறார்.

1880க்குப் பிறகு புகழ் பெற்று விளங்கிய பாலாமணி அம்மாள் குழுவினர் இந்த நடிகத்தை அடிக்கடி நடத்துவார்களாம். வசூல் குறையும்போதெல்லாம் இந்த நாடகத்தை போட்டுவிடுவார்களாம். தாசி மதனசுந்தரியாக பாலாமணி அம்மாளும் டம்பாச்சாரி பாத்திரத்தில் ராஜாம்பாள்/கோகிலாம்பாள்/வடிவாம்பாள் ஆகியோரும் நடித்தனர், பிற்காலத்தில் சி.எஸ். சாமண்ணா ஐயர் ஒரே நாளில் பல பாத்திரங்களை ஏற்று நடித்து புகழ் பெற்றார் என்றும் மூத்த நடிகர் சட்டாம்பிள்ளை வெங்கடராமன் தகவல் தருகிறார். (அவர் இன்னொரு மூத்த நடிகரான சாரங்கபாணியிடம் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டாராம்.)

எளிய கதைதான்; டம்பாச்சாரி வீண் டம்பத்துக்காக பரம்பரையாக வந்த பணத்தை கோட்டை விடுகிறான். ஒட்டுண்ணி நண்பர்கள், தாசி மதனசுந்தரி அவனை சுத்தமாக மொட்டை அடித்துவிடுகிறார்கள். ஆனாலும் கடனை வாங்கி இவர்களுக்காக செலவழித்துக் கொண்டே இருக்கிறான். மனைவி மக்களைத் துரத்திவிடுகிறான். கடனைத் திருப்ப முடியாமல் சிறை. தப்பித்து வந்தால் தாசியும் நண்பர் என்று நினைத்தவர்களும் அவஐ அவமதிக்கிறார்கள், மனம் திருந்துகிறான். அப்பர் சுவாமிகள் உபதேசம் செய்கிறார். அவன் அப்பா அவனுக்கு தான் சேர்த்து வைத்ததில் கொஞ்சம்தான் கண்ணில் காட்டி இருக்கிறார், அதனால் முன் போலவே சொகுசு வாழ்க்கை, சுபம்! (ரத்தக் கண்ணீர் போல நோய், பிச்சை எடுக்கும் நிலை எல்லாம் வரவில்லை)

நாடகத்தில் அங்கங்கே ஒரு வரியைப் படித்ததும் நிறுத்திவிடுவேன். அதிலிருந்து அன்றைய சமூகச் சூழ்நிலை பற்றி கீற்று போல ஒரு குறுக்குவெட்டு சித்திரம் கிடைக்கிறது.

முதல் பக்கத்திலேயே எனக்கு களைகட்டிவிட்டது. எழுதியவர் முதலியார், மெய்ப்பு பார்த்து பதித்தவர் ராவுத்தர். ஜாதி ஆசாரம் மிகுந்த காலத்தில் கூட இப்படி எல்லாம் தொழில் முறை உறவு இருந்திருக்கிறது.

வடமொழி, தமிழ், தெலுகு ஆகியவற்றில் பெரும் புலவர்கள் என்று முதல் பக்கத்தில் ஒரு பட்டியல் போடுகிறார், அதாவது அன்று இந்த மூன்று மொழிகளுமே படித்தவர்களுக்கு முக்கியமாக இருந்திருக்க வேண்டும்.

கை வறண்ட பிறகு கடன் வாங்கப் பகல் வேஷம் போட்டு டிஸ்கவுண்டு செய்வதால் டிஸ்கவுண்டு மேஸ்டராகி கோர்ட்டு வழக்குகளாடி இன்ஸால்வெண்டு ஆக்டில் வருவதால் இன்ஸால்வேண்டு மேஸ்டராகி பின்பு பிழைக்க வகை தெரியாதவர்களாததால் ஆயிரப் புளுகன், தலைப்பாகை மாற்றி, குடிகேடன், இவர்களில் ஒருவாராகி…

இந்த வரியில் அப்படியே நின்றுவிட்டேன். அது என்ன டிஸ்கவுண்டு மேஸ்டர், தலைப்பாகை மாற்றி? (தலைப்பாகை மாற்றிக்கு பின்னால் விளக்கம் வருகிறது, அவன் தொப்பியை கழற்றி இவனுக்கும் இவன் தொப்பியைக் கழற்றி அவனுக்கும் போடுபவனாம், குல்லா போடுபவன் என்று பிற்காலத்தில் மாறி இருக்க வேண்டும்) திவால் ஆவது 1850களிலேயே சாதாரண நிகழ்ச்சியா? அப்படி என்றால் ஆங்கிலேய ஆட்சி, சட்டம், நீதிமன்றங்கள் எல்லாம் அப்போதே எத்தனை வலுவாக நிறுவப்பட்டிருக்க வேண்டும்? நீதிமன்றங்களில் முதலியார் நிறையப் பார்த்திருப்பார் என்று யூகிக்கிறேன்.

அப்புறம் நிறைய disclaimer – அதில் ஒன்று.

சற்பிராமண… அந்தணர்களை நான் தூஷிக்கவில்லை. பிராமண ஆசாரங்களிலிருந்து வழுவி… தாழ்ந்த குலத்தாருக்கு ஸ்தீரிகளை பிணைத்து வைக்கிற அப்படிப்பட்ட மகா நீசமான சீவனம் செய்கிறவர்களை மாத்திரமே எடுத்துச் சொல்ல வந்தது

அப்படி என்றால் இதையே பிழைப்பாக சில பல பிராமணர்களாவது கொண்டிருக்க வேண்டும்! இந்த நாடகத்தின் கும்பகோணம் ஐயரின் மறுவடிவம்தான் தில்லானா மோகனாம்பாள் வைத்தி!

சில வர்த்தகர்கள்… குஜராத்திப் பேட்டையில் நடப்பது போல அதிக வட்டி முதலாகியா லாபத்தை இச்சித்து

குஜராத்திப் பேட்டைதான் இன்றைய சௌகார்பேட்டையா? 200 வருஷங்களுக்கு முன்பே வட்டி வியாபாரம் செய்யும் குஜராத்திகள் குடியிருப்பு சென்னையில் இருந்ததா?

வினோதரசமஞ்சரி புத்தகத்தை எழுதிய அஷ்டாவதனம் வீராசாமி செட்டியார், நன்னூலைப் பதிப்பித்த திருத்தணிகை விசாகப் பெருமாளையர் உட்பட்ட 20-30 பேர் சாற்றுக்கவிகள் (வாழ்த்துக்கள்) கொடுத்திருக்கிறார்கள். முதலியார் அன்று சென்னை பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் பயிற்றுவித்த தமிழாசிரியர்கள் பலரிடமிருந்தும் சாற்றுக்கவிகளை பெற்றிருக்கிறார். வேலூர் சுப்பராய முதலியார் மகாபாரதத்தை கீர்த்தனையாகப் பாடி இருக்கிறாராம், யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? (லலிதாராமிடம் விசாரித்தேன், அவரே கேள்விப்பட்டதில்லை. தேடிப் பார்க்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.)

விசாகப் பெருமாளையர்தான் அப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் தலைமை தமிழாசிரியராம். முதலியாரின் வார்த்தைகளிலேயே –

மகா-ஸ்ரீ-ஸ்ரீ கம்பெனியாரால் ஏற்படுத்தப்பட்ட யூனிவர்சிடி எனும் சென்னை சகலசாஸ்திரசாலை தமிழ்த் தலைமை புலமை நடாத்தும் இயற்றமிழாசிரியராகிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர்

கம்பெனி என்று இங்கே சொல்லி இருப்பது இந்த நாடகம் கம்பெனி நாட்களில், அதாவது 1857-க்கு முன்பே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற என் குறிப்புக்கு வலு சேர்க்கிறது. மேலும் கவர்னர் லார்ட் எல்ஃபின்ஸ்டோன் என்று ஒரு இடத்தில் வருகிறது. எல்ஃபின்ஸ்டோன் 1842 வரைதான் சென்னை கவர்னராக இருந்தவர்.

சென்னை கவர்மெண்டு நார்மல் ஸ்கூல் தமிழ்த் தலைமைப் புலவர் கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை வாழ்த்துப்பா கொடுத்திருக்கிறார், அது என்ன நார்மல் ஸ்கூல், இன்று என்ன பெயர் என்று தெரியவில்லை. பச்சையப்பா கல்லூரி அப்போதே இருந்தது என்று தெரிகிறது, பச்சையப்ப முதலியாரது சென்னைப் பலகலைச்சாலையில் தமிழ்த்தலைமை புலமை நடாத்தும் வித்துவான் சுப்பராயப் பிள்ளையும் கொடுத்திருக்கிறார். அதே பல்கலையில் தமிழ்ப் புலமை நடாத்தும் கூவம் ராஜா திரிபுராந்தக முதலியாரும், கூவம் சுப்பராய முதலியாரும் கொடுத்திருக்கிறார்கள். கூவம் என்று அப்போது ஒரு ஊர் இருந்திருக்கிறது! பல்கலை என்ற வார்த்தை அப்போதே புழக்கத்தில் இருந்திருக்கிறது.

சாற்றுக்கவிகளில் பாதி எனக்கு புரியவில்லை, கோனார் நோட்ஸ் தேவைப்படுகிறது. அதுவும் செட்டியார் சிலேடையில் புகுந்து விளையாடுகிறார். அவர் “கற்பனை” என்ற வார்த்தையை நான்கு விதத்தில் பயன்படுத்துகிறார், எனக்கு மூன்றுதான் புரிந்தது. (கல் பனை மரம் போன்ற துதிக்கை உள்ள பிள்ளையார், கற்பு நெறி, கற்பனை..)

அங்குசபாசனுக்கும் அருள் குமரேசனுக்கும் மங்களம் என்று தொடங்குபவர் மகுட விக்டோரியா, மஹா பார்லிமெண்டார், அகில போர்ட் ஆஃப் கன்ட்ரோல், ஹானரபில் கம்பெனி, தகவு மைசூர் கர்த்தர் (மைசூர் மஹாராஜா), தஞ்சாவூர்க் கொற்றவர், புகழு நவாப், புனித கவர்னர், சுப்ரீம் கோர்ட்டார், சதர் கோர்ட்டார் என்று எல்லாருக்கும் மங்களத்தை அடுக்கிக் கொண்டே போகிறார்.

அங்கங்கே அன்றைய பெரிய மனிதர்கள் – கவர்னர் லார்ட் எல்ஃபின்ஸ்டோன், கவுன்சில் மெம்பர் (காஜுலு) லக்ஷ்மிநரசு, செல்வந்தர்கள் பச்சையப்ப முதலியார், மணலி சின்னையா பிள்ளை, கோமள சீனிவாசப் பிள்ளை, திருத்தணிகை விசாகப் பெருமாளையர், (மழவை) மகாலிங்க ஐயர் – ஆகியோரின் பேரை நுழைத்துவிடுகிறார். சில இடங்களில் அவர் பெயரையும் நுழைத்துக் கொள்கிறார். வீட்டில் திருடியவன் அதிகெட்டிக்காரன் என்று ஒரு இடத்தில் சொல்லிவிட்டு அன்றைய பெயர் பெற்ற திருடர்களின் பட்டியல் ஒன்று தருகிறார் – தண்டையார்பேட்டை குமரன், ஏரிவாய் தாண்டவராயன், தலைவிரிச்சான் ரத்னசபாபதி, தீவட்டிச் செல்லன் அப்புக்காத்தான்….

டம்பாச்சாரி அறிமுகக் காட்சியில் காதில் பச்சை முருகு காந்தி வீசும் சீமை ரவைக் கடுக்கன்; திருத்தமாக வாரப்பட்ட கன்னக் கருத்த ஜுலுப்பா (தலைமுடி என்று புரிகிறது, அனேகமாக உருது வார்த்தையான ஜுல்ஃப் என்று நினைக்கிறேன்), காதுக்கு கீழே கிருதா, முறுக்கிய மீசை, செஞ்சாய வேஷ்டி, கொக்கி மாட்டிய இஸ்திரி ஜாக்கெட்டு, சரிகை ஷால், நவாத்தின மோதிரம், கைக்குள் டப்பி (பொடி டப்பியா?), அக்கிள் (கைக்)குட்டை, வாட்ச், நெக்கில் (கழுத்தில்) செயின், ஜோடுகள், புனுகு ஜவ்வாது அணிந்து வருகிறான். இதுதான் அன்றைய ஸ்டைல் போலிருக்கிறது.

அவனிடம் சிப்பந்திகளாக சட்டுவாஜி (அப்படி என்றால்?), சோக்ரா, தவசுப்பிள்ளை, உக்காபர்தார் (ஹூக்காக்களை தயார் செய்பவர்), பெத்தபோயி (வீட்டு சாமான்களை சுத்தம் செய்பவர்), ரயிட்டர் (ரைட்டர், இவர்தான் சம்பளப் பட்டுவாடா செய்கிறவர் போலிருக்கிறது), தாருகா (சிப்பந்திகளின் மேலாளர் என்று நினைக்கிறேன்), கணக்கப் பிள்ளை, கோச்சுமான், வாட்ச்மேக்கர் (கடிகாரங்களுக்கு சாவி கொடுக்கும் பணியைச் செய்பவர்), பாரா சவுக் சேவகர் (வாயிற்காவல்), மஸால்ஜீக்கள் (வாசலில் லாந்தர் ஏற்றுபவர்கள்), பியூன்கள் என்று ஒரு பட்டாளமே வேலை செய்கிறது. இதில் உக்காபர்தார் சர்வசாதாரணமாக பான்சோத் (பெஹன்சோத், தமிழில் வக்காளவோழி) என்று வ்சனம் பேசுகிறார்! சிப்பந்திகள் திருடுகிறார்கள், ஆனால் எஜமானர் பொருட்படுத்துவதில்லை. டம்பாச்சாரி கணக்கரிடம் கைமாற்று வேண்டி இருந்தால் குஜராத்தி பேட்டையில் வாங்காதே, அவர்கள் ஒரே நாளில் எல்லா சொத்தையும் ஜப்தி செய்து அபகரித்துவிடுவார்கள் என்கிறான்.

முதல் காட்சியில் டம்பாச்சாரியின் நண்பர்கள் – குடிகேடன், ஜகஜாலப் புரட்டன், ஆயிரப் புளுகன், தலைப்பாகை மாற்றி, இன்சால்வெண்டு மேஸ்டர், டிஸ்கவுண்டு மேஸ்டர், பகல் வேஷக்காரன், கவிராஜசிங்கம் கதிரைவேல் பண்டிதர் – விருந்துண்ண வருகிறார்கள். டம்பாச்சாரியின் சிற்றப்பா. மகா கஞ்சனான பரமலோபன் அவர்களுடன் சண்டை போடுகிறான். ஆனால் டம்பாச்சாரி சுகங்களை அனுபவிக்க மட்டும் ஒரு சங்கமே அமைக்கத் திட்டமிடுகிறான். அவனை மயக்க வேண்டும் என்று மதனசுந்தரி என்ற தாசி திட்டம் போடுகிறாள். கும்பகோணம் ஐயர் தூது போகிறார். மதனசுந்தரிக்கு மிட்டா, ஜமீன், கம்பெனி பத்திரங்கள் எல்லாவற்றையும் விற்று, முன்னோர் கட்டிய சத்திரங்களை இடித்து, அதிலிருந்து உத்தரங்கள் எல்லாவற்றையும் எடுத்து மெத்தை வீடு கட்டித் தருகிறான். கவர்ச்சிக் காட்சிக்காக நீ நிர்வாணமாக நின்றுகொண்டு எனக்கு எண்ணெய் தேய்த்துவிடு என்கிறான். (பிற்காலத்தில் பாலாமணி அம்மாள் என்ற அன்றைய நட்சத்திர நாடக நடிகை தாராசசாங்கம் என்ற நாடகத்தில் பார்ப்பவர்களுக்கு உடையே இல்லாத மாதிரி தோன்றும் மெல்லிய உடை அணிந்து எண்ணெய் தேய்த்துவிடும் காட்சி படுபிரபலம் என்று எம்.ஆர். ராதா எங்கோ எழுதி இருப்பதாக நினைவு.)

பூரி, ரொட்டி, ஆப்பம், வெண்ணெய், முட்டை, டீ ஆகியவற்றை சாப்பிடுகிறார்கள். டீ என்றால் தேநீர்தானா என்று தெரியவில்லை! ரொட்டியை வெட்டு என்பதிலிருந்து அது இன்றைய unsliced bread ஆக இருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.

நண்பர்களில் ஆயிரப் புளுகன் என்ற பாத்திரம் பேசும் வசனம் –

அகப்பட்டவர்களை ஏமாற்றி அவர்களுக்கு ஆயிரம் பொய்களைச் சொல்லி ஜகஜல்லி அடித்து கையிலிருப்பதைத் தட்டிக் கொண்டு சடகோபம் வைத்து வருகிறேன்

ஏமாற்றுவதற்கு சடகோபம் வைப்பது என்று சொல்வதை இது வரை பார்த்ததில்லை. ஜல்லி அடிப்பது என்று சுஜாதாவைத் தவிர வேறு யாரும் பய்ன்படுத்திப் பார்த்ததில்லை.

தலைப்பாகை மாற்றி காப்பிரைட்டுகளைத் திருடுவான் என்று ஒரு வரி வருகிறது. அப்படி என்றால் 1850களுக்கு முன்பே காப்பிரைட் சட்டங்கள் வழக்கில் இருந்திருக்கின்றன.

கவிராஜ பண்டிதர்

ஆசுபத்திரியில் கடிக்கவிடுவது அட்டை

என்று ஒரு இடத்தில் சொல்கிறார். அட்டைகளை கடிக்கவிட்டு மாசுள்ள ரத்தத்தை வெளியேற்றுவது அப்போதும் பழக்கத்தில் இருந்திருக்கிறது.

நண்பர்களுக்கு ஏற்படுத்திய விருந்தில் சீஸ்கேக், ஸ்பஞ்ச் கேக், பட்டர் கேக், ஃப்ரெஞ்சு மகரூன், மாகரோனி, ஃபிங்கர்கேக், மஃபின் பரிமாறப்படுகின்றன. இவற்றில் அனேகமானவற்றை நான் அமெரிக்கா வந்த பிறகுதான் கேள்வியே பட்டேன். 1850களிலேயே இவை சென்னையில் கிடைத்தனவா?

தாசி மதனசுந்தரிக்கு அவள் தாய் சொல்லித் தரும் உத்திகளில் ஒன்று –

மார்பின் மீதும் எந்தன் உத்தரீயம் போடு ஒரு பக்கம் தெரியவே

டம்பாச்சாரிக்கு கடன் கொடுப்பவர்களில் கோமுட்டி செட்டியார் புல்லையா செட்டியும் ஒருவர். அவர் எப்படி முன்னேறினார் என்பதை விவரிக்கிறார்.

முருக்கிலை தைத்து விற்றும் ஊசற்பட்டாணி விற்றும்
சரக்குள மளிகை வைத்தும் சராப்பு பேரங்கள் செய்தும்…

முதல் முதல் அரிசி போட்டு முருக்கிலை வாங்கி தைத்து விற்று துட்டாக்கி அந்தத் துட்டுக்கு பட்டாணி வாங்கி வறுத்து விற்றுப் பணமாக்கி அந்தப் பணத்துக்கு மிளகாய் புளி வாங்கி விற்று ரூபாயாக்கி, அந்த ரூபாய்க்கு கருமாந்திரத்தில் கொடுக்கப்பட்ட வஸ்திரங்களை குச்சிலிக் கடையில் பார்ப்பார் கொண்டு வந்து விற்க, அதுகளை வாங்கி ஜவுளி பேரம் செய்து ரூபாயை வராகனாக்கி அந்த வராகனைக் கொண்டு சராப்புக் கடை வைத்து வாங்கும்போது ஒன்பது மாற்றை ஏழு மாற்றுப் பொன்னென்றும் விற்கும்போது ஏழு மாற்றை ஒன்பது மாற்றென்றும் சொல்லி விற்று மேற்படி வராகன் மொத்தத்தை ஆயிரம் பதினாயிரம் லட்சமாகப் பெருக்கி அதைக் கோடிக்கணக்காக்க பேராசை பூண்டு டம்பாச்சாரிக்கு டிஸ்கவுண்டு கடன் கொடுத்து ஏமாந்து போக புல்லைய செட்டியார் வருகிற விதம் காண்க

கடன் கொடுக்கும் இன்னொருவர் கப்பல் வியாபாரம் செய்யும் ஷேக் மீரா லப்பை. லப்பை வியாபாரம் செய்யும் பொருட்களில் ஒன்று மயிர்முளைஞ்சான் கட்டை (வசம்பாம்!). இன்னொன்று குண்டி கிளிஞ்சாலும் கிளியாத முத்து வண்ணச் சேலை. அதைத் தவிர முத்து, பவளம், கோமேதகம், புஷ்பராகம், பச்சை, கெம்புக்கல், வைடூரியம், சீப்பு சிக்காங்கோல், சவுரி மயிர், குங்குமப்பூ, கோரோஜனம், ஜாதிக்காய், சாபத்திரி, லவங்கம், மொட்டைக் கொப்பரை, ருத்திராட்சம் என்று எல்லாவற்றையும் இறக்குமதி செய்கிறார். கடன் திருப்பி வரவில்லை என்றதும் வக்காளவோளி, கண்டாரோளி, தாயோளி என்றெல்லாம் டம்பாச்சாரியை திட்டுகிறார். இருவரும் டம்பாச்சாரி மீது கேஸ் போட, “படித்த” லாயர் துபாஷி அவர்களை சுலபமாக ஏமாற்றுகிறார்.

பண்டாரங்கள் பத்ரகிரி பாணியில்

ஆங்காரம் உள்ளெழுப்பி ஐம்புலனில் மனம் செல்ல
தூங்காமல் வேசியுடன் சுகித்திருப்பது எக்காலம்?

என்று பாடுகிறார்கள்.

நாடகத்தின் நடுவில் சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார் எழுதிய சமையல் நூலை வாங்கி நண்பர்களுக்குக் கொடுப்போம் என்று ஒரு வரி வருகிறது. சமையல் புத்தகங்கள் வர ஆரம்பித்துவிட்டன் போலிருக்கிறது!

முன்னோடி நாடகம். ஆனால் நாடகத்தில் அதைத் தவிரவும் கவர்கிறது. பிரதாப முதலியார் சரித்திரம் போல. கறாராகப் பார்த்தால் காலாவதி ஆகிவிட்டதுதான், ஆனால் I found it charming. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.