ஆங்கில மர்மப் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கும் முன் சங்கர்லால் எங்களுக்கு பெரிய ஹீரோ. அதுவும் எஸ்.எஸ். 66 என்ற நாவலை மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். இன்றும் தேடிக் கொண்டிருக்கும் ஒரே தமிழ்வாணன் புத்தகம் அதுவே. ஆனால் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூவாகத்தான் சங்கர்லால் இருந்திருக்க வேண்டும்.
சில சங்கர்லால் புத்தகங்கள் இணையத்தில் கிடைத்தன. நாஸ்டால்ஜியாவால் படித்துப் பார்த்தேன். பத்து வயதில் என் பெண்கள் பள்ளியில் Young Author போட்டிக்காக பள்ளியில் எழுதிய கதைகளே இதை விடப் பரவாயில்லை. ராஜேஷ்குமார், சுபா போன்றவர்கள் இவருக்கு எவ்வளவோ தேவலாம். சங்கர்லால் பின்தொடரும் ஒருவர் மறைந்துவிடுகிறாரா? பிரச்சினையே இல்லை, சங்கர்லால் எங்காவது தேனீர் அருந்தப் போனால் அங்கே அவரும் உட்கார்ந்திருப்பார். இதில் அந்தக் காலத்து பதின்ம வயதினரைக் கவர சங்கர்லால் ஹாங்காங், டோக்கியோ, நியூ யார்க் என்று ஊர் ஊராகப் போகிறார். அங்கே போய் ஒன்றும் கிழிக்கமாட்டார், தேனீர் பருகுவார், அவ்வளவுதான். அந்த ஊருக்கு மர்மத்துக்கும் (கதையில் என்ன மர்மம் என்பதைக் கண்டுபிடிப்பதுதான் பெரிய மர்மம்) தொடர்பே இருக்காது.
ஆனால் 40-45 வருஷங்களுக்கு முன் ஹாங்காங், டோக்கியோ பற்றி எழுதப்பட்டவை ஆவலைத் தூண்டின என்பதும் உண்மையே. கார்களை வாடகைக்கு எடுக்கலாம் (rental cars), எல்லா நாடுகளிலும் செல்லுபடியாகும் ட்ரைவிங் லைசன்ஸ் (International Driving License), ஸ்போர்ட்ஸ் கார்களின் பேர்கள் (ஃபோர்ட் மஸ்டாங்), நிர்வாண நடனம் (strip tease) போன்றவற்றை விவரிப்பது ஆர்வமூட்டியது.
தமிழ்வாணனுக்கு ஒரு முத்திரை உண்டு. பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர் வைப்பார். இன்மொழி, மலையரசு, சொல்லழகன் மாதிரி. அவர்களும் நல்ல தமிழில் பேசுவார்கள் – “துன்பம் கொள்ள வேண்டாம்”, “தாழ்வில்லை” மாதிரி. இன்று கவர்வது அந்த ஒரு அம்சமே.
இருப்பதில் சுமாரான (குறு)நாவல்கள் என்று இருண்ட இரவுகள், டோக்கியோ ரோஜா ஆகியவற்றை சொல்லலாம். பிற படைப்புகளுடன் ஒப்பிடும்போது பரவாயில்லையே தவிர, எந்த விதத்திலும் படிக்க வேண்டியதில்லை. ஆனால் ரொம்ப சின்ன வயதில் – ஒரு ஏழெட்டு வயதில் – அப்பீல் ஆகக் கூடும்.
நான் மீண்டும் படித்த தண்டமான சங்கர்லால் நாவல்களில் சில: ஆந்தை விழிகள், ஹலோ சங்கர்லால், இன்னொரு செருப்பு எங்கே?, கொலை எக்ஸ்ப்ரஸ், மர்ம மனிதன், மர்மத் தீவு (1974), நாற்பதினாயிரம் ரூபாய், ரகசியம், சங்கர்லால் வந்துவிட்டார், விடியாத இரவுகள் மற்றும் பெர்லினில் சங்கர்லால், ஜெனீவாவில் சங்கர்லால், ஹாங்காங்கில் சங்கர்லால் (1975), நேபிள்சில் சங்கர்லால், நியூ யார்க்கில் சங்கர்லால், பாரிசில் சங்கர்லால்.
பற்றாக்குறைக்கு சங்கர்லாலுக்கு அடுத்தபடி தமிழ்வாணனே துப்பறியும் கதைகள் வரத் தொடங்கின. எம்ஜிஆர் துப்பறியும் படங்களே தேவலாம். சிகாகோவில் தமிழ்வாணன், டயல் தமிழ்வாணன், ஃப்ராங்க்ஃபர்ட்டில் தமிழ்வாணன், ஹவாயில் தமிழ்வாணன் எல்லாம் உலக மகா தண்டம். தண்டங்களில் சிறந்தது கெய்ரோவில் தமிழ்வாணன்.
சங்கர்லால் வராத நாவல்களும் உண்டு. மணிமொழி நீ என்னை மறந்துவிடு போன்ற நாவல்களை நாம் மறந்துவிடுவது நலம். இரும்புக்கை மனிதன், கதவு திறந்தது கை தெரிந்தது, மருதமலைச் சாரலிலே, மலையில் மறைந்த மனிதன், முரட்டுப்பெண், நடுவிரல், ஒரு குரல், பேய், பேய் மழை, பெயர் இல்லாத தெரு, விலகி நில் ஆகியவை அறுபதுகளின் ஜெய்ஷங்கர் படம் மாதிரி இருக்கின்றன. என்னைத் தேட வேண்டாம் குற்றப் பின்னணி இல்லாத புத்தகம், இவர்தான் எழுதினாரா என்ற வியப்பைத் தவிர வேறு எதுவுமில்லை.
ஆனால் தமிழ்வாணன் எல்லாத் துறைகளிலும் முயற்சி செய்தது அந்தக் காலத்தில் கொஞ்சூண்டு inspiration ஆகவும் இருந்தது. கல்கண்டு என்ற பத்திரிகை நடத்தினார், திரைப்படம் தயாரித்திருக்கிறார், மணிமேகலை பிரசுரம் கண்ட மேனிக்கு எல்லா துறைகளிலும் புத்தகம் வெளியிட்டது – “தேனீ வளர்ப்பது எப்படி”, “தேள்கடிக்கு மருந்து” மாதிரி. உடலுறவு பற்றி கூட புத்தகம் எழுதி இருப்பதாக மூத்த மாணவர்கள் பேசிக் கொள்வார்கள்.
தமிழ்வாணன் தமிழ் வணிக எழுத்தின் வரலாற்றில் அடிக்குறிப்பாக வரக் கூடிய இதழாளர். ஆனால் பொருட்படுத்தப்பட வேண்டிய எழுத்தாளர் அல்லர். நாஸ்டால்ஜியாவுக்காக “எஸ்.எஸ். 66”-ஐயும், ஒரு வேளை ஏதாவது உருப்படியாக எழுதி இருப்பாரோ என்ற சந்தேகத்துக்காக “கட்டபொம்மன் கொள்ளைக்காரனா?” என்ற புத்தகத்தையும் தேடிக் கொண்டிருக்கிறேன். யாரிடமாவது மின்பிரதி இருந்தால் கொடுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக நாவல்கள்
தொடர்புடைய சுட்டி: தமிழ் விக்கி குறிப்பு
இவருடைய கலெக்ஷன் எங்கள் வீட்டில் இருக்கிறது. எஸ் எஸ் 66 அதில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! ஆறு அழகிகள் (ஒப்பிலான்), கைதி எண் 116, நடுவிரல், போன்றவை என் நினைவில் நிற்பவை. விண்ணில் மறைந்த விமானங்கள் இவர்தானா என்று நினைவில்லை. இவர் கல்கண்டை விட்டு விகடனில் ஒரு தொடர் எழுதினர் என்று நினைவு.. மலர்க்கொடி உன்னை மறப்பதெப்படி என்று ஞாபகம். இவர் எழுதிய கருகிய கடிதம் அக்கதையில் ஹோலோக்ராம் முப்பரிமாண உருவம் பற்றி எழுதி இருப்பார்.. இதை சுஜாதா தனது கொலையுதிர்காலம் கதையில் கூட பயன்படுத்தி இருப்பார். தமிழ்வாணன் பல்பொடி கூட தயாரித்து விற்றார். நூறு ஆண்டுகள் வாழ்வதெப்படி என்று புத்தகம் எஹுதி 54 வயதில் மறைந்தார்! நிறைய நிறைய மனனலக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். அத்தனையையும் என் அப்பா பைண்ட் செய்து வைத்திருக்கிறார்!! கட்டபொம்மன் கொள்ளைக்காரனா, மற்றும் எஸ் எஸ் 66 கிடைத்தால் எனக்கும் சொல்லவும்! அல்லது எனக்கும் தரவும்!!
LikeLike
https://archive.org/details/kattabomman
LikeLike
ஸ்ரீராம், பல்பொடி கூட விற்றார் என்பது சமீபத்தில்தான் தெரிந்தது. மனிதர் எதையும் விடவில்லை போலிருக்கிறது. நூறு ஆண்டுகள் வாழ்வது எப்படி என்று புத்தகம் எழுதியவர் 54 வயதில் மறைந்தது நகைமுரண்தான். விண்ணில் மறைந்த விமானங்கள் என்று முத்து காமிக்ஸ் ஒரு இதழ் வந்தது, லாரன்ஸ்-டேவிட் என்று நினைவு. தமிழ்வாணனும் எழுதி இருக்கலாம், அவர் பாணி தலைப்புதான்.
LikeLiked by 1 person
https://archive.org/details/kattabomman
LikeLike
இந்த இணைப்புகளின் வழியே அந்த கட்டபொம்மன் புத்தகத்தை நுணுக்கி நுணுக்கி படித்து கொள்ள முடியும்
LikeLike
மிக்க நன்றி.
LikeLike
“கட்டபொம்மன் கொள்ளைக்காரனா” சுட்டிக்கு நன்றி ஸ்பரிசன்! படித்துப் பார்க்க வேண்டும்…
LikeLike
https://archive.org/details/kattabomman/page/n3/mode/2up
கட்டபொம்மன் கொள்ளைக்காரன்
LikeLike
1967-இல் நான் பள்ளியிறுதி வகுப்பு படித்த போது, என்னைத் தூய தமிழ் எழுதத் தூண்டிய முதல் மனிதர் தமிழ்வாணன் என்பேன். அவருடைய வடமொழி கலவா எழுத்துக்காகவே சுவாரசியம் பார்க்காமல், அனைத்து நூல்களையும் நூலகத்தில் அமர்ந்து படித்தேன். பி சி கணேசன், அப்துற்றகீம் போன்றோர் தன் ‘வளர்ச்சிப் புத்தகங்களும்’ அக்காலத்தில், தூண்டுகோலாக இருந்தது என்னவோ உண்மைதான். பிற்காலத்தில், எழுத்தின் அழுத்தம், மேன்மை, பொருட்செறிவு, உள்ளீடு போன்றவற்றைப் பற்றி உணர ஆரம்பிக்கையில் தாகம் அதிகரித்து பிற எழுத்துக்களை மனம் நாட ஆரம்பித்தது.
ஒவ்வொரு காலத்தில் ஒரு தளம்!
LikeLike
மனோ, இன்னொரு சங்கர்லால் வாசகரைப் பார்ப்பது மகிழ்ச்சி!
LikeLike
நூலகத்தில் எப்போதோ படித்தவை. ஆறு, ஏழு படிக்கும் போது சுமாராகத் தோன்றியது. ராஜேஷ் குமார் பக்கம் கூட வர முடியாது. எப்படியோ ஒரு புத்தகம் வீட்டிற்கு வந்திருக்கின்றது. மெலே ஸ்ராம் சொன்ன அந்த ஹாலோக்ராம் நாவல். மாது சங்கர்லால் படும் துன்பங்களைப் பார்த்து கண்ணீர் விடும் காட்சி அப்பப்பா. சங்கர்லாலுக்கு தேனீர், தமிழ்வாணனுக்கு குளுக்கோஸ் மாத்திரை. ஜேம்ஸ்பாண்ட் படத்தின் துர்கனவுகள்.
LikeLike