2022-இல் – குறிப்பாக ஆண்டின் பின்பகுதியில் – மனச்சோர்வு எல்லாம் ஒரு வழியாக குறைய ஆரம்பித்திருக்கிறது. வீட்டிலிருந்து நடந்து போகும் தூரத்தில் இருக்கும் நூலகத்துக்கு ஐந்து வருஷங்கள் கழித்து முதல் முறையாகச் சென்றேன். 🙂 அங்கே போனால் நான் வாங்கிக் கொடுத்த தமிழ்ப் புத்தகங்களைக் காணோம், தூக்கிக் கடாசிவிட்டார்கள் போலிருக்கிறது. இரண்டு மூன்று வருஷம் கழித்து ஒரு (மகாபாரதச்) சிறுகதை – பிரதிபிம்பம் – எழுதினேன், அது சொல்வனம் இதழில் பதிவாயிற்று.
ஆனால் படிப்பும் குறைந்துவிட்டது. சிறிய எழுத்துக்களைப் படிக்கவே முடிவதில்லை, வரவர அச்சுப் புத்தகங்களைப் படிக்க இது ஒரு மனத்தடையாக இருக்கிறது.
இந்த வருஷம் நான் படித்த மிகச் சிறந்த புத்தகம் அல்பேர் காம்யூ எழுதிய Stranger (1942). என் கண்ணில் மியூர்சால்ட் நாயகத் தன்மை உடையவன் அவன் வாழ்க்கையின் என்னென்னவோ நடக்கிறது, அவ்வளவுதான். ஏன் நடக்கிறது, எதற்காக கொலை செய்தான் என்று கேள்விக்கெல்லாம் அர்த்தமே இல்லை. வெறுமையான வாழ்க்கை போல சித்தரித்துவிட்டு அப்படி வாழ்பவன் நாயகன் என்று உணர வைப்பதில்தான் கம்யூவின் திறமை இருக்கிறது. மியூர்சால்ட் ஏன் கொலை செய்கிறான்? கோபத்தால் அல்ல. பகையால் அல்ல. பின் எதற்காக? கடுமையான வெயிலால்தான்; கண்ணைக் கூச வைக்கும் பிரகாசமான சூரிய ஒளியால்தான்; வியர்வை ஓடுவதால்தான். இதை நீங்களே உணர்ந்தால்தான் உண்டு, வார்த்தைகளில் சொல்லி மாளாது.
இந்த வருஷம் மிகவும் ரசித்துப் படித்த படைப்பு டம்பாச்சாரி விலாசம் (1847). கண்ணும் கொஞ்சம் பிரச்சினை, மின்பிரதியின் தரமும் கொஞ்சம் குறைவு, அதனால் தம் கட்டித்தான் படிக்க வேண்டி இருந்தது. நாடகத்தின் நடையும், மொழியும், முன்னோடித் தன்மையும், அன்றைய சமுதாயத்தைப் பற்றிய குறுக்குவெட்டுப் பார்வையும் எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தன. இலக்கியம், நாடகம், தமிழின் வரலாறு ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.
பிடித்துப் படித்த இன்னொரு பழைய நாவல் பொற்றொடி (1911). பெண் கல்வியை வலியுறுத்தும் முன்னோடி நாவல். எனக்குப் பிடித்த அம்சம் கொஞ்சம் கூட லாஜிக் பற்றி கவலைப்படாமல் பெருசு கதை சொல்வது போல எழுதப்பட்டிருப்பதுதான். உதாரணமாக “கொலை” நடந்த பத்து நாட்களுக்குள் புலன்விசாரணை, வழக்கு, கீழ்கோர்ட்டில் தீர்ப்பு, மேல் கோர்ட்டில் அப்பீல், அங்கும் தீர்ப்பு, எல்லா “குற்றவாளிகளுக்கும்” சிறை. பத்து நாட்களுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டவன் திரும்பி வந்தும் விடுகிறான்!
புதுமைப்பித்தன் ஒரு மேதை என்பதை நான் என் பதின்ம வயதிலிருந்தே உணர்ந்திருக்கிறேன். அவரது பல சிறுகதைகளை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். என் அம்மாவோடு பதின்ம வயதுகளில் உட்கார்ந்து அலசி இருக்கிறேன். அவரது சிறுகதைகளில் எனக்குத் தெரியாத நுட்பமா என்று என் ஆழ்மனதில் சின்ன கர்வம் இருந்தது. அ. முத்துலிங்கம் அதை நான்கு வரிகளில் உடைத்துவிட்டார். அவர் பரிந்துரைத்த பொய்க்குதிரை சிறுகதையை நான் எளிமையான சிறுகதை என்றுதான் கருதி இருந்தேன். அந்தக் கதையில் தெரியும் உண்மையான சோகம் முத்துலிங்கம் எடுத்துச் சொன்ன பிறகுதான் எனக்குப் புலப்பட்டது. அது சரி, முத்துலிங்கம் போன்ற ஜாம்பவானுக்கே பத்து முறை படித்த பிறகுதான் அது தெரிந்ததாம், என்னைப் போன்ற அரை வேக்காட்டுக்கு அது தெரியாமல் போனதில் என்ன வியப்பு? வியப்பு ஒன்றுதான் – இலக்கியத்தைப் பற்றி எனக்கு யாராவது எடுத்துச் சொல்லி புரிந்துவிடுவது அபூர்வம், இவர் எழுதிய நாலு வரி படித்தவுடன் மீண்டும் சிறுததையைத் தேடிப் படிக்கவும் வைத்தது, புரியவும் புரிந்துவிட்டது.
எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு கேள்வி உண்டு. எங்கோ தமிழகத்துக்கு வடகிழக்கு மூலையில் இருக்கும் திருப்பதி போன்ற ஒரு சிறு ஊர் எப்படி தமிழகத்தின் வட எல்லையாக இருக்க முடியும்? திருப்பதிக்கு நூறு கிலோமீட்டர் கிழக்கே எது வட எல்லை? மேற்கே? பழவேற்காடுதான் தமிழகத்தின் வட எல்லை, அல்லது மதனபள்ளிதான் தமிழகத்தில் வட எல்லை, அல்லது உடுப்பிதான் தமிழகத்தின் வட எல்லை என்றால் எப்படி உணர்வோம்? இதே கேள்வியை சுப்பு ரெட்டியார் வடவேங்கடமும் திருவேங்கடமும் புத்தகத்தில் எழுப்பி இருப்பதைப் படிக்கும்போது சரி நாம் முழுமுட்டாள் இல்லை என்று உணர்ந்தேன். ரெட்டியார் இன்றைய திருப்பதி வேறு, வட எல்லையாக சொல்லப்பட்ட திருவேங்கடம் வேறு என்று நிறுவுகிறார்.
இந்த வருஷம் படைப்புகளில் எனக்கே பிடித்திருந்தவை, முக்கியமானவை என்று நான் கருதுவன:
சிங்காரவேலு பாலசுப்ரமணியம் பல ஜாம்பவான்களின் சிறுகதைகள் யூட்யூபில் பதிவேற்றுகிறார். என் சிறுகதைகளைக் கூட விடவில்லை. அவருக்கு என் மனமார்ந்த நன்றி!
இந்த வருஷம் மகிழ்ச்சி தந்த செய்திகள் – பாவண்ணனுக்குக் கிடைத்த இயல் விருது, கி.ரா.வுக்கு ஸ்டாலின் அரசு சிலை வைத்திருப்பது.
இந்த வருஷத்துக்கான சாஹித்ய அகடமி விருது மு. ராஜேந்திரனின் காலா பாணி புத்தகத்துக்கு கிடைத்திருக்கிறது. சுப்ரபாரதிமணியன் இன்னும் இந்த விருதைப் பெறவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது. விஷ்ணுபுரம் விருது சாரு நிவேதிதாவுக்கு.
பா. செயப்பிரகாசம், தெளிவத்தை ஜோசஃப், பீட்டர் ப்ரூக், ஜாக் ஹிக்கின்ஸ், நாகசாமி ஆகியோரை இந்த ஆண்டு இழந்தோம்.
தமிழ் விக்கி இந்த ஆண்டின் சாதனைகளில் ஒன்று. நானும் கொஞ்சம் பங்களிக்க முயன்றேன், ஆனால் ஜெயமோகனின் வேகத்தில் பத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட எனக்கில்லை என்பது கொஞ்சம் மனச்சோர்வை ஏற்படுத்திவிட்டது. ஏற்கனவே கொஞ்சம் பிரச்சினைகள். இந்த ஆண்டாவது பங்களிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.
என் பெண்ணுக்காக குறுந்தொகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று நினைத்தேன், 8 பாடல்களோடு நிற்கிறது. இந்த வருஷமாவது…
குறைவாக இருந்தாலும் 2022-இல் படித்த, மீண்டும் படித்த நல்ல/சுவாரசியமான படைப்புகளின் பட்டியல்.
வகை | படைப்பாளி | படைப்பு | குறிப்புகள் |
---|---|---|---|
நாவல் | லூயி லமூர் | Sackett Brand | Western |
காலின் டெக்ஸ்டர் | Last Bus to Woodstock | Mystery | |
தேவன் | ஸ்ரீமான் சுதர்சனம் | ||
அல்பேர் காம்யூ | Stranger | இந்த வருஷம் படித்த மிகச் சிறந்த படைப்பு | |
ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் | There is a Hippie on the Highway | நான் படித்த முதல் ஆங்கில நாவல் | |
ஜெயகாந்தன் | பிரம்மோபதேசம் | ||
ராஜாஜி | திக்கற்ற பார்வதி | ||
ஜாக் ஹிக்கின்ஸ் | Eagle Has Landed | ||
தமிழ்பிரபா | பேட்டை | ||
ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம் பிள்ளை | பொற்றொடி | ||
அபுனைவு | க.நா.சு. | படித்திருக்கிறீர்களா? | அழிசி பதிப்பகம் மீள்பதித்திருக்கிறது |
அரவிந்தன் நீலகண்டன் | கொஞ்சம் தேனீர் கொஞ்சம் ஹிந்துத்துவம் | ||
ராம்நாராயண் | Third Man | கிரிக்கெட் புத்தகம் | |
ராஜாஜி | திண்ணை ரசாயனம் | ||
நாகசாமி | Art of Tamil Nadu, மாமல்லை | ||
நாடகம் | ஷேக்ஸ்பியர் | Richard III | |
சிறுகதை | புதுமைப்பித்தன் | பொய்க்குதிரை | |
ஜெயமோகன் | யானை டாக்டர் (பகுதி 1, 2, 3) | ||
ம.ந. ராமசாமி | கதை உலகில் ஒரு மேதை | ||
சுஜாதா | திமலா | அறிவியல் சிறுகதை | |
சுஜாதா | தமிழாசிரியர் | அறிவியல் சிறுகதை | |
பா. செயப்பிரகாசம் | நிஜமான பாடல்கள் | ||
பா. செயப்பிரகாசம் | வளரும் நிறங்கள் | ||
தெளிவத்தை ஜோசஃப் | மீன்கள் | ||
தெளிவத்தை ஜோசஃப் | மழலை | ||
தெளிவத்தை ஜோசஃப் | அம்மா | ||
கவிதை | ஆலங்குடி வங்கனார் | கழனி மாஅத்து | குறுந்தொகை 8 |
தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்