ஜெயமோகனின் யானை டாக்டர் (பகுதி 1, 2, 3)எனக்குப் பிடித்த புனைவுகளில் ஒன்று. ஊருக்கே பிடித்த புனைவுதான். அதன் நாயகரும் யானை டாக்டருமான டாக்டர் கே (கிருஷ்ணமூர்த்தி) உண்மை மனிதர் என்பது அந்தக் கதையின் கவர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
உள்ளூர் நூலகத்துக்குப் போனபோது தற்செயலாக கண்ணில் பட்ட புத்தகம் ஜேனி சோடோஷ் எழுதிய “Elephant Doctor“. “கதாபாத்திரங்களின்” பெயர்களை நினைவு வைத்துக் கொள்வது எனக்கு எப்போதுமே கொஞ்சம் கஷ்டம். வழக்கம் போலவே டாக்டர் கே என்றோ கிருஷ்ணமூர்த்தி என்றோ நினைவில்லை, யானை டாக்டர் என்றுதான் நினைவிருந்தது. அவரைப் பற்றிய புத்தகமோ என்று எடுத்துப் பார்த்தேன். இவர் பெயர் டாக்டர் கேகே (கே.கே. சர்மா). கே, கேகே என்ற பெயர்களில் குழம்பி ஜெயமோகனின் உண்மை நாயகன்தானாக்கும் என்று படித்துப் பார்த்தேன்.
இருவருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் அதிசயப்பட வைக்கின்றன. கேகே அஸ்ஸாமியர். கே தமிழர். கேகேவுக்கு குடும்பம் உண்டு. கேவுக்கு யானைகள்தான் குடும்பம் போலிருக்கிறது. கேகேவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. கேவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்காததுதான் யானை டாக்டர் சிறுகதையின் முன்புலம் (foreground). கேகேதான் மயக்கமருந்தை துப்பாக்கி போன்ற ஒரு கருவியின் மூலம் யானைகளுக்கு செலுத்துவதில் முன்னோடி. கே யானைகளின் சவப்பரிசோதனையின் முன்னோடி என்று யானை டாக்டர் கதையில் சொல்லப்படுகிறது. கேகே சர்க்கஸ் யானைகளின் பராமரிப்பு பரிசோதனைக் குழுவின் உறுப்பினர், சர்க்கஸ் யானைகளின் உடல் நலத்தைப் பேண பெரும் முயற்சிகள் எடுத்திருக்கிறார்; கே கோவில் யானைகளுக்கு “விடுமுறை” போல காட்டு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று போராடி வென்றிருக்கிறார். கேகே காட்டு யானைகளுக்கு மருத்துவம் பார்த்திருக்கிறார், ஆனால் அவரது பணி பொதுவாக பழக்கப்படுத்தப்பட்ட யானைகளுடன்தான். அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் யானைக்கு மதம் பிடித்துவிட்டது, ஆளைக் கொல்கிறது, அல்லது உடல்நிலை சரியில்லை என்றால் கேகேவைத்தான் அழைப்பார்களாம். கேவின் பணி காட்டு யானைகளுடன்தான் அதிகம் போலிருக்கிறது, தமிழகம்/கேரளப் பகுதிகளில் அவர்தான் யானை டாக்டர். யானை டாக்டர் புனைவில் கே அழுகிய சடலம் ஒன்றை ஆராயும்போது அவர் உடல் முழுதும் புழுக்கள்; ஒரு யானைக்கு எனிமா கொடுத்து 10-15 கிலோ யானை மலம் கேகே மேல் கொட்டி இருக்கிறது. கே வயதில் மூத்தவர் – 1929-இல் பிறந்திருக்கிறார். கேகே 1961-இல்.
ஜேனி சோடோஷின் புத்தகம் சிறுவர்களைத்தான் குறி வைத்து எழுதப்பட்டிருக்கிறது. ஜெயமோகனின் கதையைப் படித்திராவிட்டால் இதைப் புரட்டிக் கூட பார்த்திருக்கமாட்டேன். புத்தகம் பெரியவர்களுக்கு சுவாரசியப்படாது என்றுதான் தோன்றுகிறது.
ஆனாலும் தகவல்கள் எனக்கு சுவாரசியமாகத்தான் இருந்தன. சிறு வயதில் பழக்கப்படுத்தப்பட்ட யானை ஒன்றோடு சில வருஷம் வாழ்ந்ததால் யானை என்றால் கேகேவுக்கு கொள்ளை இஷ்டம். நன்றாகப் படித்திருக்கிறார், டாக்டராகப் போ என்று குடும்பத்தார் சொல்ல இவரோ கால்நடை மருத்துவம் பயின்றிருக்கிறார். யானை மருத்துவம் அப்போது படிக்கும் நிலையில் இல்லை. (கே எழுதி இருந்தால்தான் உண்டு என்று நினைக்கிறேன்.) இருந்தாலும் இவர் ஆடு/மாடு/நாய்/பூனைக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டே முனைவர் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். முதன்முதலாக யானைக்கு வைத்தியம் பார்க்கும் வாய்ப்பு, ஆனால் யானையை நெருங்க முடியாத நிலை. மிருகக்காட்சி சாலை அதிகாரியின் உதவியுடன் மயக்கமருந்து தரும் துப்பாக்கியை பழகிக் கொண்டு யானையை மயக்கம் அடைய வைத்து வைத்தியம் பார்த்திருக்கிறார். இவரது மைத்துனர், வனத்துறை அதிகாரி நாராயண் மதம் பிடித்த யானை ஒன்று மக்களைத் தாக்குகிறது என்று இவரை அழைக்க, இவர்கள் எல்லாரும் மயக்கமருந்து துப்பாக்கியோடு யானையை நெருங்கி இருக்கிறார்கள், யானை இவரது மைத்துனரை மிதித்தே கொன்றுவிட்டது. யானைகளுக்கு இலவச முகாம் எல்லாம் நடத்தி இருக்கிறார். மின்சாரம் தாக்கி காயம்பட்ட யானைகளுக்கு சிகிச்சை தந்து காப்பாற்றி இருக்கிறார். அவர் மருத்துவம் செய்த யானை ஒன்று 15-20 வருஷங்களுக்குப் பிறகு சர்க்கஸ் யானையாக இருக்கும்போதும் இவரை நினைவில் வைத்துக் கொண்டு துதிக்கையால் அணைத்துக் கொண்டிருக்கிறது!
மேன்மக்கள், வேறென்ன சொல்ல? சிறுவர் புத்தகமாக இருந்தாலும் என்னைப் போலவே நீங்களும் தகவல்களால் கவரப்படலாம். யானை டாக்டர் கதையைப் படிக்கவில்லை என்றால் தவறவிடாதீர்கள்!
(டாக்டர் கேயின் புகைப்படம் கிடைக்கவில்லை)
தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், இந்திய அபுனைவுகள், சிறுவர் புத்தகங்கள்
தொடர்புடைய சுட்டிகள்:
- யானை டாக்டர் சிறுகதை (பகுதி 1, 2, 3)
- டாக்டர் கே விக்கி குறிப்பு
- டாக்டர் கேகே தளம்
- ஜேனி சோடோஷ் தளம்