ஷோபா சக்தி சிறுகதை – One Way

வேலைப்பளு எதிர்பாராதவிதமாக அதிகமாகிவிட்டது. ஒரு வாரமாக எதையும் எழுத முடியவில்லை.

இப்போதும் பெரிதாக எழுதுவதற்கில்லை. ஷோபா சக்தியின் இந்தச் சிறுகதை எனக்குப் பிடித்திருந்தது. ஊகிக்க முடிந்த சிறுகதைதான்; ஆனால் அந்த அம்மா, அக்காக்கள் பாத்திரங்களில் என் குடும்பத்தையேதான் கண்டேன். ஊரில் அம்மா, வெளிநாட்டில் மகன்; இதில் எத்தனையோ கதைகள் எழுதலாம் என்று தெரிகிறது!

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஷோபா சக்தி பக்கம்

மைக்கேல் கானலி: Desert Star, ரெனீ பல்லார்ட் த்ரில்லர்கள்

Michael Connelly

ரெனீ பல்லார்ட் தொடர் நாவல்களில் அடுத்த நாவல் – Desert Star – வெளிவந்துவிட்டதால் முந்தைய பதிவை மேம்படுத்தி மீள்பதித்திருக்கிறேன்.

இந்த தொடரில் இது வரை ஐந்து நாவல்கள் வந்திருக்கின்றன. Late Show (2017), Dark Sacred Night (2018), Night Fire (2019), Dark Hours (2021), Desert Star (2022). ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் பரிந்துரைப்பது முதல் நாவலான Late Show-ஐத்தான். ஆனால் Night Fire, Dark Hours இரண்டுமே நல்ல நாவல்கள்தான்.

முந்தைய பதிவில் ரெனீக்கு நாயகத்தன்மை வந்துவிட்டது என்றும் எகானலியின் புகழ் பெற்ற பாத்திரமான ஹாரி போஷை இந்தத் தொடர் நாவல்களில் ஒரு துணைப்பாத்திரமாக இணைத்திருப்பது தொடர்ச்சியை எற்படுத்தும் புத்திசாலித்தனமான உத்தி என்றும் எழுதி இருந்தேன். ஹாரி இந்த நாவலில் முதன்மைப் பாத்திரம், ரெனீயை கொஞ்சம் பின்னால் தள்ளிவிடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இதுவே ஹாரி இடம் பெறும் கடைசி நாவலாக இருக்கும் என்று யூகிக்கிறேன். ஹாரி இறக்கப் போகிறார் என்கிற மாதிரி கோடி காட்டப்படுகிறது. ஹாரியின் வாரிசாக ரெனீயை முன் வைக்கப் போகிறார் என்று நினைக்கிறேன்.

இந்த நாவல்கள் ஆரம்பிக்கும் காலத்தில் ரெனீ முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி. அவரது மேலதிகாரி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க, இவர் புகார் செய்கிறார். புகாரை நிரூபிக்க முடியவில்லை. ரெனீ முக்கியத்துவம் இல்லாத ஒரு பதவிக்கு தூக்கி அடிக்கப்படுகிறார். இப்போது அவருடைய வேலை ஏறக்குறைய முதலுதவி மாதிரி. இரவில் நடக்கும் குற்றங்களை விசாரித்து முதல் அறிக்கை தருவது. பொழுது விடிந்ததும் அந்தக் குற்றங்களை செய்தது யார் என்று விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரும் பொறுப்பு பிற அதிகாரிகளுடையது. ரெனீ பகல் வேளைகளில் லாஸ் ஏஞ்சலஸின் கடற்கரையில் ஒரு கூடாரத்தில் தன்னுடைய நாயுடன்தான் வசிக்கிறார். இரவில் அலுவலகத்தில், தனது காரில் வாழ்கிறார்.

மீள்பதிப்பது புதிய நாவலான Desert Star-ஐப் படித்ததால்தான். முதலில் அதைப் பற்றி.

Deset Star நல்ல police procedural – அதாவது காவல் துறை எப்படி துப்பறிகிறது, எப்படிப்பட்ட process-களை கடைப்பிடிக்கிறது, அதன் நடைமுறை சிக்கல்கள் என்னென்ன என்று காட்டும் ஒரு நாவல். அதுவும் தீர்க்கப்படாத குற்றங்களை – cold cases – பல வருஷங்கள் கழித்து எப்படி மீண்டும் ஆரம்பித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது என்பதை நன்றாக விவரிக்கிறது. அனேகமான cold cases DNA matching மூலம்தான் தீர்க்கப்படுகின்றன.

இந்த நாவலில் ரெனீ இன்றைய cold case பிரிவின் அதிகாரி. ரெனீயும் ஹாரியும் இணைந்து தனியார் துப்பறியும் நிறுவனம் ஆரம்பிப்பதாக இருந்தார்கள், ஆனால் ரெனீயை காவல் துறையில் உனக்கு என்ன பதவி வேண்டுமோ தருகிறேன் என்று ஆசை காட்டி மீண்டும் காவல் துறைக்கு இழுத்துவிடுகிறார்கள். ஹாரிக்கு ரெனீ மேல் கொஞ்சம் கசப்பு இருக்கிறது. நகரசபை உறுப்பினர் ஜேக் பெர்ல்மன் ஆதரவு தருவதால் cold case துறை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது, அதற்கு ரெனீதான் பொறுப்பு. ஆனால் பட்ஜெட் இல்லை, அதனால் இந்தப் பிரிவில் ரெனீயைத் தவிர மற்றவர்கள் தன்னார்வலர்கள் – volunteers. அனேகமாக ஓய்வு பெற்ற முன்னாள் காவல் துறை அதிகாரிகள், எஃப்பிஐ அதிகாரிகள், அரசு வக்கீல்கள் போன்றவர்கள். ரெனீக்கு ஹாரி வேண்டும். ஹாரி ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருக்கும் ஒரு குற்றவாளியைப் – இரண்டு சிறுவர்கள் உட்பட்ட ஒரு குடும்பத்தையே கொலை செய்ததாக நம்பப்படுபவன் – தேட இதுதான் வாய்ப்பு என்று ஆர்வம் ஊட்டி ரெனீ ஹாரியை அழைத்துக் கொள்கிறாள். ஆனால் முதலில் பல வருஷங்களுக்கு முன் கற்பழித்துக் கொல்லப்பட்ட ஜேக் பெர்ல்மனின் தங்கை கேசை துப்பறிய வேண்டும், அப்போதுதான் ஜேக்கின் ஆதரவு தொடரும், அதற்குப் பிறகு ஹாரியின் கேஸைத் தொடரலாம் என்கிறாள். ஹாரியின் நல்ல insight-களால் ஜேக்கின் தங்கை கேசில் DNA கிடைக்கிறது; அந்த DNA இன்னொரு தீர்க்கப்படாத கேசிலும் கிடைக்கிறது. அதிசயத் தற்செயல் நிகழ்ச்சியாக ஜேக்கின் பழைய campaign button அந்த இன்னொரு கேசில் கிடைக்கிறது. ஜேக்கிற்கு நெருங்கிய யாரோதான் இரண்டு கொலையையும் செய்திருக்க வேண்டும் என்று சந்தேகம் எழுகிறது. சில தவறான ஊகங்களுக்குப் பின் உண்மையான குற்றவாளி யாரென்று தெரிகிறது.

இந்தப் பகுதியோடு நாவலை நிறுத்தி இருந்தால் நாவலில் நல்ல ஒருங்கமைதி (coherence) இருந்திருக்கும். ஆனால் ஹாரியை தீர்த்துக் கட்டிவிட்டு ரெனீயை முழு நாயகி ஆக்குவது என்று கானல் தீர்மானித்துவிட்டார் போலிருக்கிறது. அதனால் ஏறக்குறைய் ஒரு epilogue போல ஹாரி தன் கேசைத் தொடர்கிறான். மிகச் சுலபமாக குற்றவாளி எந்த ஊருக்கு தப்பி இருக்கிறான் என்று கண்டுபிடிக்கிறான். அங்கே குற்றவாளியைத் தானே கொல்கிறான். ஹாரிக்கு teriminal cancer என்று கதையை முடித்துவிடுகிறார்.

படிக்கலாம், ஆனால் ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் பரிந்துரைப்பது முதல் நாவலான Late Show-ஐத்தான். Night Fire, Dark Hours இரண்டுமே இதை விட நல்ல நாவல்கள்.

முந்தைய பதிவு வசதிக்காக கீழே


கோவிட் காலம். ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை நடந்திருக்கிறது. காவல்துறை அடக்கி வாசிக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பட்ஜெட் வெட்டுக்கள், அதனால் பிரச்சினை வந்தால் சமாளியுங்கள், பிரச்சினையைத் தடுக்க முன்கூட்டியே முயல வேண்டாம் என்பது எழுதப்படாத விதி. ரெனீ இன்னும் இரவு நேர காவல் அதிகாரி. அதாவது இரவு நேரங்களில் நடக்கும் குற்றங்களை முடிந்த வரை சமாளிப்பது, இன்னும் நேரம் தேவைப்பட்டால் காலை பிற அதிகாரிகள் கேஸை எடுத்து மேலே நடத்துவார்கள், ரெனீக்கு அதற்கு மேல் அந்த பிரச்சினைகளில் தொடர்பில்லை. இப்போது பட்ஜெட் பிரச்சினைகளால் தன் இரவு நேர வேலையோடு சேர்த்து பெண்களை இரவு நேரங்களில் கற்பழிக்கும் இருவரை இன்னொரு அதிகாரியோடு சேர்ந்து துப்பறிந்து கொண்டிருக்கிறாள்.

2021 புத்தாண்டு பிறக்கும்போது ரோந்து போய்க் கொண்டிருக்கிறாள். புத்தாண்டைக் கொண்டாட லாஸ் ஏஞ்சலஸில் இரவு 12 மணிக்கு துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடுவது ஒரு வழக்கம். பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது போல. மேல்நோக்கி சுடப்பட்ட ஒரு குண்டு தலையில் பாய்ந்து ஒரு சிறு தொழிலதிபன் இறந்துபோகிறான். ரெனீ அது திட்டமிட்ட கொலை என்று கண்டுபிடிக்கிறாள். அப்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பல வருஷங்களுக்கு முன் இன்னொரு கொலையில் பயன்படுத்தப்பட்டது என்று தெரிகிறது. அந்தக் கொலையை விசாரித்தது ஹாரி போஷ். ஹாரி ரெனீக்கு உதவுகிறார். மேலும் துப்பறிவதில் இரண்டுமே கந்துவட்டி சம்பந்தப்பட்ட கொலைகள் என்று தெரிகிறது. மெதுமெதுவாக துப்பறிந்து சுட்டது கந்துவட்டிக்காரர்களுக்கு உதவும் ஒரு போலீஸ்காரன் என்று சந்தேகப்படுகிறார்கள். ஷூட்டர் போலீஸ்காரன் ரெனீயைக் கொல்ல முயற்சிக்கிறான், ஆனால் ரெனீ அவனைக் கொன்றுவிடுகிறாள். ஹாரியின் உதவியோடு கந்துவட்டிக்காரர்கள் எல்லாரையும் பிடிக்கிறார்கள்.

கற்பழிப்பு கேஸ் இன்னொரு சரடு. திறமையான போலீஸ் விசாரணை மூலம் கற்பழிக்கப்பட்ட பெண்களின் முன்னாள் கணவர்கள்/காதலர்கள் இந்தக் குற்றவாளிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கிறார்கள்.

இந்த இரண்டு சரடுகளுமே திறமையாக எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் நாவலை உயர்த்துவது கோவிட்/பட்ஜெட் பிரச்சினைகளால் காவல் துறை எப்படி பாதிக்கப்படுகிறது என்று சித்தரிப்பு. எனக்கெதுக்கு வம்பு என்று ஒதுங்கிப் போகும் மனநிலையின் சித்தரிப்பு. அதில் ரெனீ போன்ற சுறுசுறுப்பான அதிகாரிகள் சில சின்ன விதிமீறல்களை செய்ய வேண்டிய நிலை, அதனால் சந்திக்கும் பிரச்சினைகள். இவை மிகவும் நம்பகத்தன்மையோடு சித்தரிக்கப்படுகின்றன. உதாரணமாக ரெனீ தன்னைக் கொல்ல வருபவனைத்தான் கொல்கிறாள், அதற்கு நிறைய ஆதாரங்களும் இருக்கின்றன. இருந்தாலும் போலீஸ்காரனே கொலை செய்யும் ஷூட்டர் என்று தெரிந்தால் காவல்துறை கேவலப்படுமே என்று அதை அமுக்கப் பார்க்கிறார்கள்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொடரில் முந்தைய நாவல்கள்:

Late Show நாவலில் ஒரு நாள் இரவில் பெண் போல வேடமணியும் ஒரு ஆண் விபச்சாரியை யாரோ ஏறக்குறைய உயிர் போகும் வரை அடித்துப் போட்டு போயிருக்கிறார்கள், ரெனீ மருத்துவமனையில் சேர்க்கிறார். அதே இரவில் ஒரு நைட்கிளப்பில் ஒருவன் நாலைந்து பேரை சுட்டுத் தள்ளிவிட்டு தப்பி இருக்கிறான். இரண்டாவது கேசை விசாரிக்கும் உயர் அதிகாரி ரெனீயை பாலியல் தொந்தரவு செய்தவர். அவருக்கு ஒரு டீம் இருக்கிறது, அந்த டீமில் ரெனீயின் முன்னாள் பார்ட்னரும் ஒரு அங்கத்தினர். விபச்சாரியை அடித்தது யார் என்று துப்பறிவது விறுவிறுவென்று போகும் பகுதி; நைட்கிளப் கொலைகள் காட்டுவதோ பார்ட்னர்களுக்குள் உள்ள பந்தத்தை. நன்றாக எழுதப்பட்ட த்ரில்லர்.

Dark Sacred Night சுமார்தான். அதன் சுவாரசியம் ஹாரி போஷ் துணைப்பாத்திரமாக வருவதுதான்.

Night Fire இன்னொரு சிறந்த நாவல். இதிலும் ஹாரி போஷ் ஒரு துணைப்பாத்திரம். ஹாரி போஷின் குரு தன்னுடன் ஒரு கொலையின் ஃபைலை வைத்திருக்கிறார். அவர் இறந்ததும் யார் கொலையாளி என்று ஹாரியும் ரெனீயும் தேடுகிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு வீடற்ற ஒருவன் எரிக்கப்படுகிறான். ஒரு நீதிபதி கொல்லப்படுகிறார். அந்தக் கொலைகளை துப்பறிகிறார்கள். நல்ல த்ரில்லர்.

ஆனால் கானலியின் புகழ் பெற்ற பாத்திரம் ஹாரி போஷ்தான். மாத்யூ மக்கானகி நடித்து திரைப்படமாக வந்த Lincoln Lawyer திரைப்படத்தினால் மிக்கி ஹாலர் என்ற சீரிஸ் பாத்திரமும் இன்று பிரபலமாக இருக்கிறது. லிங்கன் லாயர் மிகக் கச்சிதமாக கட்டமைக்கப்பட்ட த்ரில்லர். ஆனால் ஹாரி போஷ் பாத்திரத்துக்குத்தான் நாயகத்தன்மை இருக்கிறது. கொலைகாரர்களை – தீய சக்திகளை – தீய சக்தி என்றால் பத்தவில்லை, evil-ஐ அழிப்பதுதான் போஷின் ஸ்வதர்மம். துப்பறிபவர்களுக்கு நம்பகத் தன்மையுடன் ஸ்வதர்மத்தை உருவாக்குவது கஷ்டம். அதனால்தான் முக்கால்வாசி துப்பறியும் கதை எழுதுபவர்கள் இதையெல்லாம் பற்றி கவலைப்படுவதில்லை. ஷெர்லக் ஹோம்ஸ் கூட இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அதே விழுமியங்களோடு துப்பறிந்தால் கொஞ்சம் செயற்கையாக இருக்கும். ஆனால் அப்படி உருவாக்கிவிட்டால் துப்பறியும் நிபுணர் நாயகனாக மாறிவிடுகிறார். வெகு சிலரே – ஹோம்ஸ், டாஷியல் ஹாம்மெட்டின் சாம் ஸ்பேட், ரேமண்ட் சாண்ட்லரின் ஃபிலிப் மார்லோ, டிக் ஃப்ரான்சிஸின் நாயகர்கள், இந்த ஹாரி போஷ், சாரா பாரட்ஸ்கியின் வி.ஐ. வார்ஷாவ்ஸ்கி – அப்படிப்பட்ட நாயகர்கள். இந்தப் பட்டியலில் ரெனீ ப்ல்லார்டும் சேர்ந்துவிட்டார்.

த்ரில்லர் விரும்பிகள் கானலியை அதுவும் ரெனீ பல்லார்ட் நாவல்களை நிச்சயமாகப் படிக்கலாம். பைசா வசூல்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

வெளி ரங்கராஜன் தேர்வுகள்

வெளி ரங்கராஜனைத் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக; நாடகத் துறையில் பெரிய கை. எழுத்தாளரும் கூட. அவர் புத்தகக் கண்காட்சியில் வாங்க விரும்பும் புத்தகங்கள் என்று ஃபேஸ்புக்கில் பார்த்தேன். அனேகமாக எதையுமே நான் கேள்விப்பட்டதில்லைதான்.

பின் எதற்காக இதைப் பகிர்கிறேன்? அவர் புத்தகங்களை வாங்கிக் குவிப்பது பற்றி சொல்லி இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் அட்சரலட்சம் பெறும் என்பதால்தான். நானும் அப்படியேதான் உணர்கிறேன் என்பதால்தான். இப்படி உணர்பவர் சஹிருதயர் என்பதால்தான். என் மனதில் இருப்பதை எனக்கே தெளிவாக்கி இருக்கிறார், அவருக்கு ஒரு ஜே!

அன்றாட வாழ்க்கைப் போக்கில் படிப்பதற்கான நேரம் குறைந்துவிட்டாலும் நேரமும், மனநிலையும் இருக்கும்போது புத்தகங்கள் அருகில் இருப்பதையே விரும்புகிறேன். எந்த நேரத்திலும் ஏதாவது புத்தகத்திலிருந்து என்னுடைய செயல்பாடுகளுக்கு நான் உத்வேகம் பெற முடியும்.

வாங்க விரும்பும் புத்தகங்கள் என்று அவர் போட்டிருக்கும் பட்டியல் வசதிக்காக கீழே:


  1. நொய்யல் – தேவிபாரதி
  2. சொல்லக்கூடாத உறவுகள் – சூசன் ஹாதோர்ன் (தமிழில்:சசிகலா பாபு)
  3. எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – அனுராதா ஆனந்த்
  4. கடவுள்,பிசாசு,நிலம் – அகர முதல்வன்
  5. ஆக்காண்டி – வாசு முருகவேல்
  6. தேரிக்காதை – பெளத்த பிக்குணிகளின் பாடல்கள் (அ.மங்கை)
  7. திரை இசையில் தமிழிசை – நிழல் திருநாவுக்கரசு
  8. கழுமரம் – முத்துராசா குமார்
  9. இருட்டியபின் ஒரு கிராமம் – ஜி.குப்புசாமி
  10. பெருமைக்குரிய கடிகாரம் – ஜே.பி.சாணக்யா
  11. ஸ்ரீனிவாச ராமானுஜம் கட்டுரைகள் – எதிர்
  12. அல்லங்காடிச் சந்தைகள் – யவனிகா ஸ்ரீராம்
  13. வேட்டை (நாவல்) -லஷ்மி சரவணகுமார்
  14. அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது – பெருந்தேவி

இவை நான் படிக்க விரும்புபவை.வாங்கி படிக்காமல் இருப்பவை அதிகம் இருந்தாலும் இவை உடன் இருப்பதை நான் விரும்புகிறேன்.எந்த நேரத்திலும் இவைகளை நான் படிக்க இயலும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்

அனேகமாக ஒவ்வொரு மாட்டுப் பொங்கலுக்கும் வாடிவாசல் பற்றிய பதிவை மீள்பதித்துக் கொண்டிருக்கிறேன். அது சரி, மாட்டுப் பொங்கல் என்றால் வாடிவாசல் பற்றி எழுதாமல் எப்படி?

மாட்டுப் பொங்கல் என்றால் எப்போதும் நினைவு வருவது வாடிவாசல் குறுநாவல்தான். ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி.சு. செல்லப்பா எழுதியது. விறுவிறுப்பான கதை. கதையில் முடிச்சு கிடிச்சு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு – செல்லாயி சல்லிக்கு – இரண்டு கிழக்கத்தியான்கள் – பிச்சி, மருதன் – வருகிறார்கள். பிச்சியின் அப்பா அம்புலித்தேவன் ஜல்லிக்கட்டை நடத்தும் ஜமீன்தாரின் காரிக் காளையால் குத்துப்பட்டு இறந்து போனார். அதற்கு பழி வாங்கும் விதமாக காளையை அடக்க வருகிறார்கள். ஜெயிக்கிறார்களா, காளையால் குத்துப்படுகிறார்களா, ஜமீன்தாரின் மனநிலை என்ன இதுதான் கதை. ஒரு எழுபது எண்பது பக்கம்தான் இருக்கும்.

எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஜல்லிக்கட்டு உலகத்தை, மறவர்களின் வீரத்தை, அவர்களது நெறிகளை, மிக அருமையாக வடிவ கச்சிதத்தோடு விவரிக்கும் குறுநாவல். நான் ஜல்லிக்கட்டெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் செல்லப்பா அந்த உலகத்தை நம் கண்ணெதிரில் நிறுத்துகிறார். இந்த ஒரு கதையே அவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைநிறுத்த போதுமானது. இன்று யோசித்துப் பார்த்தால் வடிவ கச்சிதம்தான் இந்தக் குறுநாவலை உயர்த்துகிறது என்று தோன்றுகிறது.

வாடிவாசலை ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:

வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும்’ என்ற அசரீரிக் குரல் தமிழ் மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

இந்த நூலின் ஆங்கில மொழியாக்கத்தை Oxford University Press வெளிக்கொண்டு வரப்போகிறது என்று நண்பர் ஹேம்கன் தகவல் தருகிறார். இப்போது வந்துவிட்டது. கல்யாணராமன் மொழிபெயர்த்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் திரைப்படமாகிறதாம்.

தோழி அருணாவின் குறிப்புகள்: எனக்கு 14-15 வயது இருக்கும் பொழுது என் அப்பா வாங்கும் ஒரு சிறுபத்திரிகையில் (காலச்சுவடு என நினைக்கிறேன்) முதன் முதலாக வாடிவாசல் படித்தேன். எனக்கு மிக மன எழுச்சியை வழங்கிய கதை. கதையா, குறுநாவல்/ நாவலா என்று பாகுபாடு பார்க்கவெல்லாம் அப்பொழுது தெரியவில்லை. பிச்சி, மருதன் அவர்களிடம் உடனடி சினேகம் கொள்ளும் கிராமத்து பெருசு, வெல்ல முடியாத காளையை இவன் அடக்க வேண்டும் என ஒருபுறமும் ஆனால் ஒரு வேளை அடக்கி விடுவானோ என்ற பதட்டமுமாய் அவனை அடக்க அழைக்கும் ஜமீந்தார் என கதாபாத்திரங்களை சில பக்கங்களில் வெகு கச்சிதமாகக் காட்டுவார் செல்லப்பா. சிறிது நாள் முன் செய்த மீள்வாசிப்பிலும் என்னை வெகுவாக ஈர்த்தது.

ஜல்லிக்கட்டைப் பற்றிய அவர் அளிக்கும் வர்ணனை ஒரு சித்திரம் போல் என் மனதில் நான் முதல் முறை படித்ததில் இருந்தே பதிந்து விட்டது. அட்டையில் உள்ள ஓவியம் முதன் முறை வேறு மாதிரி இருந்ததோ எனத் தோன்றுகிறது. கோட்டோவியமாக பார்த்த ஞாபகம்.

பாரதிராஜா ஒருவேளை தமிழ் இலக்கியம் படிக்கிறார் என நினைகிறேன். மண்வாசனையில் வரும் ஜல்லிக்கட்டு காளையை கொல்லும் இடம் இப்புத்தகத்தையும், கு.ப.ரா.வின். வீரம்மாளின் காளை சிறுகதையையும் கோபல்ல கிராமத்தில் பெண்ணின் நகைக்காக அவளை தண்ணீரில் சாகடிக்கும் இடம் முதல் மரியாதையையும் ஞாபகப்படுத்துகிறது.

வாடிவாசல் பற்றி அசோகமித்ரன் எழுதியது இங்கே. என் ரசனையோடு நிறைய ஒத்துப் போகும் நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம் இங்கே. வாடிவாசல் புத்தக விளம்பரம் – அன்றும் இன்றும்.

இன்னும் ஒரு சிறந்த ஜல்லிக்கட்டு சிறுகதை – கு.ப.ரா. எழுதிய வீரம்மாளின் காளை. அவரது நல்ல சிறுகதைகளில் ஒன்று. கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: செல்லப்பா பக்கம்

பொங்கல் சிறுகதை: லா.ச.ரா.வின் மண்

பொங்கல் வாழ்த்துக்கள்!

வேறு சில பொங்கல் தருணங்களிலும் இந்தக் கதையை பகிர்ந்திருக்கிறேன். அப்போது சொந்த வாழ்க்கையின் இழப்புகள், ஆங்காரம் எல்லாம் லா.ச.ரா.வின் மண் சிறுகதையை நினைவு கூர வைத்தன. இந்த முறை ஆங்காரம் எல்லாம் கொஞ்சம் நீர்த்துப் போயிருக்கிறது, கலக்கி இருக்கிறார் என்பதால் பகிர்கிறேன்.

ஆனால் பொங்கல் புனைவு என்றவுடன் இப்போதெல்லாம் முதலில் நினைவு வருவது மண் சிறுகதைதான். மங்கல நாளில் இத்தனை ஆங்காரத்தை வெளிப்படுத்தும் கதையை பகிர்வது தேவையா என்றெல்லாம் கேட்கக் கூடாது. லா.ச.ரா.வே பாற்கடல் என்ற சிறுகதையில் எழுதிய சில வரிகளை நினைவில் கொள்ளுங்கள்!

குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயேதான்…

மண் லா.ச.ரா.வின் பிரமாதமான சிறுகதைகளில் ஒன்று. கதைச் சுருக்கம் எல்லாம் எழுதி அதை நீங்கள் படிப்பதை விட நேராக சிறுகதையைப் படிப்பது உத்தமம். இது வரை படித்ததில்லை என்றால் கட்டாயம் தவறவிடாதீர்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

செந்தூரம் ஜெகதீஷ் பரிந்துரைகள்

தமிழில் இலக்கியத் தரம் உள்ள புனைவுகளைப் படிப்பவர்களுக்கு செந்தூரம் ஜெகதீஷ் பற்றிய அறிமுகம் தேவை இல்லை. கிடங்குத் தெரு என்ற நல்ல நாவலை எழுதியவர். புத்தகப் பிரியர், அதனாலேயே சஹிருதயர். ஃபேஸ்புக்கில் சமீபத்தில் தன் தமிழ் நாவல் பரிந்துரைகளை தொகுத்திருந்தார். 70 நாவல்கள் இருக்கின்றன, ஆனால் வரிசை மாறலாம் என்று அவரே சொல்லி இருக்கிறார்.

போலித் தன்னடக்கம் எதுவும் இல்லாமல் கிடங்குத்தெருவை தனது பட்டியலில் சேர்த்திருக்கிறார். அதற்காகவே அவருக்கு என் பாராட்டுகள்!

அவருடைய தேர்வுகளில் சில எனக்கு உறுத்துகின்றன என்பதையும் பதிவு செய்துவிடுகிறேன். சங்கர்லால் நாவல்களை எல்லாம் நான் ஏழு வயது சிறுவர்களுக்குக் கூட பரிந்துரைக்க மாட்டேன்.

இவை நான் படித்தது நினைவில் நின்ற படைப்புகள்தான். லா.ச.ரா., பூமணி, சோ. தருமன், எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி, ஷோபா சக்தி, ம.வே. சிவகுமார், ரமேஷ் பிரேம், ஜீ. முருகன் உட்பட ஏராளமான பலர் எழுதிய நாவல்களை மறுவாசிப்பு செய்ய வேண்டும். அவற்றை இப்பட்டியலில் நண்பர்கள் சேர்த்து கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்கு உட்பட்ட படைப்பாளர்கள், ஈழத்து எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள் பற்றியும் அவசியம் குறிப்பிட வேண்டும். இது எனது சமையல் பருக்கைதான். புதிய வாசகர்களுக்குப் பயன்படலாம். கண்ட குப்பைகளை படித்து நேரத்தை விரயம் செய்ய வேண்டாம். விரைவில் எல்லா நாவல்களைப் பற்றிய தனி புத்தகம் வெளியிட வேண்டும் என்று ஆசை

என்று சொல்லி இருக்கிறார். புத்தகத்தை வாங்க ஒரு வாசகன் ரெடி!

வசதிக்காக அவரது பட்டியலை இங்கே மீள்பதித்திருக்கிறேன்.


சிறந்த தமிழ் நாவல்கள் எனது பரிந்துரை. (வரிசை மாறலாம்.)

  1. சுந்தர ராமசாமி – ஜே.ஜே. சில குறிப்புகள்
  2. சம்பத் – இடைவெளி
  3. அசோகமித்திரன் – கரைந்த நிழல்கள்
  4. நா. பார்த்தசாரதி – குறிஞ்சி மலர்
  5. நா. பார்த்தசாரதி – நெற்றிக்கண்
  6. ஜெயகாந்தன் – பாரீசுக்குப் போ
  7. ஜெயகாந்தன் – ரிஷிமூலம்
  8. தி. ஜானகிராமன் – மோகமுள்
  9. அசோகமித்திரன் – தண்ணீர்
  10. ஜி. நாகராஜன் – நாளை மற்றும் ஒரு நாளே
  11. தஞ்சை பிரகாஷ் – கள்ளம்
  12. சுஜாதா – என் இனிய இயந்திரா
  13. சுஜாதா – மீண்டும் ஜீனோ
  14. பிரபஞ்சன்மானுடம் வெல்லும்
  15. பிரபஞ்சன் – வானம் வசப்படும்
  16. ஆதவன் – என் பெயர் ராமசேஷன்
  17. ஆதவன் – காகித மலர்கள் ஆதவன்
  18. எம்.வி.வெங்கட்ராம் – காதுகள்
  19. எம்.வி. வெங்கட்ராம் – அரும்புகள்
  20. எம்.வி. வெங்கட்ராம் – நித்யகன்னி
  21. சி.சு. செல்லப்பா – சுதந்திர தாகம் மூன்று பாகங்கள்
  22. பாலகுமாரன் – புருஷ விரதம்
  23. பாலகுமாரன் – மெர்க்குரிப் பூக்கள்
  24. ஜெயமோகன்விஷ்ணுபுரம்
  25. ஜெயமோகன் – பின் தொடரும் நிழலின் குரல்
  26. ஜெயமோகன் – கொற்றவை
  27. சாரு நிவேதிதா – ராஸலீலா
  28. சாரு நிவேதிதா – எக்ஸைல் சாரு நிவேதிதா
  29. பா. ராகவன் – இறவான்
  30. நாஞ்சில் நாடன் – எட்டுத் திக்கும் மதயானை
  31. நீல. பத்மனாபன் – பள்ளிகொண்டபுரம்
  32. நீல. பத்மனாபன் – உறவுகள்
  33. தமிழ்நதி – பார்த்தீனியம்
  34. செ. கணேசலிங்கன் – அந்நிய மனிதர்கள்
  35. சா. கந்தசாமிசாயாவனம்
  36. ஃபிரான்சிஸ் கிருபா – கன்னி
  37. நகுலன்- வாக்குமூலம்
  38. விட்டல் ராவ் – போக்கிடம்
  39. க.நா.சு.பொய்த்தேவு
  40. க.நா.சு. – பித்தப்பூ
  41. க.நா.சு – அவதூதர்
  42. ஆ. மாதவன் – கிருஷ்ணப்பருந்து
  43. ந. சிதம்பர சுப்பிரமணியன் – மண்ணில் தெரியுது வானம்
  44. இதயன் – நடைபாதை
  45. இந்திரா பார்த்தசாரதிகுருதிப்புனல்
  46. இந்திரா பார்த்தசாரதி – ஏசுவின் தோழர்கள்
  47. கரிச்சான் குஞ்சு – பசித்த மானிடம்
  48. ர.சு. நல்ல பெருமாள் – குருஷேத்திரம்
  49. கி. ராஜநாராயணன் – கோபல்ல கிராமம்
  50. சி.ஆர். ரவீந்திரன் – ஈரம் கசிந்த நிலம்
  51. ஸ்ரீவேணுகோபாலன் – திருவரங்கன் உலா 4 பாகங்கள்
  52. ப. சிங்காரம் – புயலிலே ஒரு தோணி
  53. ஆர். ஷண்முகசுந்தரம் – நாகம்மாள்
  54. தமிழ்வாணன் – சங்கர்லால் நாவல்கள்
  55. தோப்பில் முகமது மீரான் – துறைமுகம்
  56. தோப்பில் முகமது மீரான் – ஒரு கடலோர கிராமத்தின் கதை
  57. வண்ணநிலவன் – கடல்புரத்தில்
  58. பா. வெங்கடேசன் – வாரணாசி
  59. ரா. கணபதி – காற்றினிலே வரும் கீதம்
  60. பட்டுக்கோட்டை பிரபாகர் – தொட்டால் தொடரும்
  61. விந்தன் – பாலும் பாவையும்
  62. கிருத்திகாவாசவேஸ்வரம்
  63. ஹெப்சிபா ஜேசுதாசன் – புத்தம்வீடு
  64. சுந்தர ராமசாமி – ஒரு புளிய மரத்தின் கதை
  65. ராஜ சுந்தரராஜன் – நாடோடித் தடம்
  66. சுஜாதா – கனவுத் தொழிற்சாலை
  67. சுஜாதா – கரையெல்லாம் செண்பகப்பூ
  68. தி. ஜானகிராமன் – அம்மா வந்தாள்
  69. தி. ஜானகிராமன் – மரப்பசு
  70. இமையம் – கோவேறு கழுதைகள்
  71. தொ.மு.சி. ரகுநாதன் – பஞ்சும் பசியும்
  72. செந்தூரம் ஜெகதீஷ் – கிடங்குத் தெரு

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

ராஜேஷ்குமார்: சுயசரிதை

நான் ராஜேஷ்குமார் புத்தகங்களை அதிகமாகப் படித்ததில்லை. அவரோ ஆயிரத்துக்கும் மேல் புத்தகங்கள் எழுதி இருக்கிறார். நானும் கண்டதையும் படிப்பவன். தமிழ் வணிக எழுத்தில் ஆர்வம் உள்ளவன். குற்றப் பின்னணி நாவல்களை விரும்பிப் படிப்பவன். பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, இந்திரா சௌந்தரராஜன் எல்லாரையும் படித்திருக்கிறேன். அது என்னவோ ராஜேஷ்குமாரைப் படிப்பதில் மட்டும் ஒரு விசித்திரமான மனத்தடை. எப்படியும் எனக்குப் பிடிக்கப் போவதில்லை என்ற ஒரு நினைப்பு. படித்த வெகு சிலவற்றில் எதுவும் மனதில் நின்றதும் இல்லை. என்றாவது ஒரு நாள் ஒரு பத்து நாவல்களைப் படித்துவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன், பார்ப்போம்.

ஆனால் அவரது சுயசரிதை – என்னை நான் சந்தித்தேன் – நிச்சயமாக சுவாரசியமாக இருக்கிறது. சாதாரண மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த ராஜகோபால் வழக்கமான படிப்பு, அரசு வேலை என்றுதான் முயன்றிருக்கிறார். மிகத் துரதிருஷ்டமான நிகழ்ச்சிகளால் அரசு வேலை இரண்டு முறை தட்டிப் போகிறது. சிறுகதை எழுதிப் பார்க்கிறார். குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து தொழில் செய்கிறார். பத்திரிகைகள் – குமுதம், விக்டன் முதல் படியில், கல்கி, குங்குமம், இதயம், சாவி என்று பல அடுத்த நிலையில் – கொடி கட்டிப் பறந்த காலம். குமுதத்திற்கு 127 கதைகள் அனுப்பி இருக்கிறார், ஒன்று கூட பிரசுரம் ஆகவில்லை. ரா.கி. ரங்கராஜனை நேரில் சந்தித்து ஏன் என்று கேட்டிருக்கிறார். ரங்கராஜன் 127 கதைகளா என்று அதிர்ச்சி அடைகிறார். ஒரு கதை பிரசுரம் ஆகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பேர் கிடைக்கிறது. மாத நாவல் எழுதுகிறார். தொடர்கதைகள். எஸ்.ஏ.பி., சாவி, எஸ். பாலசுப்ரமணியன் மீது பெரிய மரியாதை தெரிகிறது. பாக்கெட் நாவல் அசோகனோடு தொடர்பு. அசோகன் இவருக்கென்றே தனியாக க்ரைம் நாவல் என்ற மாத இதழை ஆரம்பிக்கிறார். தமிழின் முதன்மை வணிக எழுத்தாளர்களில் ஒன்றாக உருவெடுக்கிறார்.

ராஜேஷ்குமாரின் உழைப்பு வியக்க வைக்கிறது. மாத நாவல்தானே, 60-70 பக்கம்தான் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு லட்சம் பக்கங்களாவது எழுதி இருக்க வேண்டும். பத்திரிகை உலகில் நுழைய, அங்கீகாரம் கிடைக்க, பெரிய நட்சத்திரம் ஆக உருவாக அவரது விடாமுயற்சியும், பத்திரிகைகளுக்கு என்ன வேண்டும், வாசகர்கள் எதை விரும்புவார்கள் என்று மீண்டும் மீண்டும் கணித்து அதை சரியாகத் தந்ததும்தான் காரணங்கள். எனக்குப் பிடிக்கப் போவதில்லை என்று நான் நினைப்பது பத்து நாவல் படித்துப் பார்த்த பிறகு ஊர்ஜிதம் ஆகலாம், ஆனால் அதில் அவருக்கு எந்தக் குறைவும் இல்லை. அது என் மனத்தடையாக இருக்கலாம், அவர் எனக்கான எழுத்தாளராக இல்லாமல் போய்விடலாம். ஆனால் அதெல்லாம் அவரது ஆகிருதியை எந்த விதத்திலும் குறைத்துவிடப் போவதில்லை.

யாரையும் குறையே சொல்லவில்லை என்று பார்த்தேன். கல்கி பத்திரிகைக்குள் நுழையவே முடியவில்லை போலிருக்கிறது. திரை உலகில் நிறைய ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் பெயர்களை வெளிப்படையாகச் சொல்லவில்லை. இது 24 காரட் துரோகம் என்ற புத்தகமாக வந்திருக்கிறது.

நான் முகம் பார்த்த கண்ணாடிகள் என்ற புத்தகத்தில் அவர் சந்தித்த பெரும் தலைகளைப் பற்றி எழுதி இருக்கிறார். காமராஜரைப் பார்க்க மாணவர் அணி என்று கூட்டம் சேர்த்து இவரையும் அழைத்துப் போனார்களாம். காமராஜர் காலேஜை கட் அடித்துவிட்டு வந்தீர்களா என்று கண்டித்து திருப்பி அனுப்பிவிட்டாராம். அதை விட சுவாரசியம், 1960களில் ஆளுக்கு நூறு ரூபாய் தருகிறேன் என்று இவரை அழைத்துப் போயிருக்கிறார்கள். குறைந்தது 5000 ரூபாயாவது தன் கெத்தை காட்ட செலவழித்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. ஏது இத்தனை பணம்?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: ரெங்கசுப்ரமணி விமர்சனம்

ஹாரி பாட்டர்

ஹாரி பாட்டர் இன்று ஒரு பண்பாட்டுச் சின்னமாகவே ஆகிவிட்டது. நான் Prisoner of Azkaban வெளியான பிறகுதான் படிக்க ஆரம்பித்தேன். முதலில் இருந்த சூடு (Sorcerer’s Stone, Chamber of Secrets) பின்னால் குறைந்துவிட்டாலும் எனக்கு பிடித்தமான கதைகள்தான். திருமணம் ஆன பிறகு இந்தக் கதைகளை என் ஆறேழு வயது மருமகன்/மருமகள்களுக்கு சொல்லித்தான் நான் ஒரு கூல் மாமா ஆனேன். 🙂

எழுதிய ஜே.கே. ரௌலிங் உலகின் மிகப் பெரிய பணக்கார எழுத்தாளராக இருப்பார். பில்லியனர். புத்தகம் எக்கச்சக்கமாக விற்றது. திரைப்பட உரிமைக்கும் நிறைய பணம் பெற்றார். ஹாரி பாட்டருக்குப் பிறகு ராபர்ட் கால்ப்ரெய்த் என்ற புனைபெயரில் துப்பறியும் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்.

ஒரு விதத்தில் பார்த்தால் ஹாரி பாட்டர் கதைகள் School Stories ஆகத்தான் ஆரம்பித்தன – குறிப்பாக Sorcerer’s Stone உட்ஹவுசின் பள்ளிக் கதைகளை அமானுஷ்ய பின்புலத்தில் வைத்து மீண்டும் எழுதப்பட்டதுதான். அதில் நிறைய முடிச்சுகளைப் போட்டு அதைப் பின்னால் வரும் நாலைந்து புத்தகங்கள் அவிழ்க்கின்றன.

எனக்கு மிகவும் பிடித்தவை Sorcerer’s Stone மற்றும் Chamber of Secrets. Prisoner of Azkaban-ஐயும் சேர்த்துக் கொள்ளலாம். For sheer inventiveness. ஹாக்வார்ட்ஸ் பள்ளி, மந்திரப் பொருட்களின் சந்தையான டியகான் சந்து, sorting hat, quidditch விளையாட்டு, தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளும் வித்தைகளின் ஆசிரியர்கள், அதிலும் குறிப்பாக கில்டராய் லாக்ஹார்ட், பாம்புகளோடு பேசும் திறமை, polyjuice potion, basilisk, வேறு மிருகங்களாக மாறும் திறமை, patronus charm, தொடரிலேயே சிறந்த வில்லன் ஆகிய டோலரஸ் உம்ப்ரிட்ஜ், மந்திரக் கஷாயங்கள் (potions) செய்வதில் பிஸ்தா மாணவரின் குறிப்புகள் உள்ள பழைய புத்தகங்களை வைத்து ஹாரி அந்த வகுப்பில் கலக்குவது என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவையே இந்தக் கதைகளை நமது நினைவில் வைத்திருக்கும்.

Sorcerer’s Stone, Chamber of Secrets இரண்டையும் தனிப் புத்தகங்களாக படிக்கலாம். Prisoner of Azkaban, Goblet of Fire-ஐயும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் Order of Phoenix, Half-Blood Prince, Deathly Hallows மூன்றும் தொடர்ச்சியாகத்தான் படிக்க முடியும். அதுவும் திரைப்படங்கள் வர ஆரம்பித்த பிறகு எழுதப்பட்ட புத்தகங்கள் visual ஆக சிந்திக்கப்பட்டு, திரைப்படக் காட்சி அமைப்பு நன்றாக வர வேண்டும் என்று சிந்தித்து எழுதப்பட்டவை போலிருக்கின்றன. உதாரணமாக அரைப்பிணமான உயிர்கள் டம்பிள்டோரையும் ஹாரியையும் தாக்கும் காட்சி, அரைக்குருட்டு ட்ராகன் மீது ஏறி வங்கியிலிருந்த் தப்பிப்பது போன்ற காட்சிகளை சொல்லலாம். மேலும் ஹாரியின் நண்பர்களான ஹெர்மோயின், ரான் ஆகியோரின் பங்களிப்பு போகப் போக குறைந்து கொண்டே போகிறது. அது கதைகளின் கவர்ச்சியைக் குறைக்கிறது. பிற்காலப் புத்தகங்களில் பதின்ம வயது “காதல்” காட்சிகள் கொடுமை, மகா போர். திடீரென்று மில்ஸ் அண்ட் பூன் கதை போல அங்கங்கே ஒரு அத்தியாயம் வரும்.

அதனால் எனக்கு Sorcerer’s Stone, Chamber of Secrets இரண்டும்தான் முதல் படியில் இருக்கின்றன. அதற்கடுத்த படியில் Prisoner of Azkaban. பிறகு Goblet of Fire. அப்புறம் கடைசி புத்தகமான Deathly Hallows. அடுத்தபடி Half-Blood Prince. கடைசியாக Order of Phoenix.

Sorcerer’s Stone அருமையாக ஆரம்பிக்கிறது. பெற்றோரை ஒரு வயதில் இழக்கும் ஹாரி. சித்தி வீட்டில் வளர்கிறான். சித்தியும் சித்தப்பாவும் மூளி அலங்காரி ரேஞ்சில் ஹாரியை நடத்துகிறார்கள். சில அதிசய நிகழ்ச்சிகள் நடக்கின்றன, உதாரணமாக ஹாரியிடம் ஒரு பாம்பு பேசுகிறது. 11 வயதில் ஹாரிக்கு கடிதம் வருகிறது. அதை அவனிடம் தராமல் சித்தப்பா தட்டிப் பறிக்க, அலை அலையாக கடிதங்கள் வந்து கொட்டுகின்றன. யாராலும் தடுக்க முடியவில்லை. ஹாரி தான் மந்திர சக்தி உள்ளவன், மந்திர உலகத்தில் பிரபலமானவன் என்று தெரிந்து கொள்கிறான். தீய மந்திரவாதி வோல்டமோர்ட்டுக்கு ஹாரியால்தான் இறப்பு என்று தெரிகிறது. ஹாரி ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும்போதே அவனைக் கொல்ல வருகிறான். ஆனால் ஹாரியின் பெற்றோர் தங்கள் உயிரைக் கொடுத்து அவனைக் காப்பாற்றுகிறார்கள். அம்மாவின் உயிர்த்தியாகம் வோல்டமோர்ட்டை “கொன்றுவிடுகிறது”. தீய சக்திகள் தோற்பதால் மந்திர உலகம் நிம்மதி அடைகிறது.

ஹாரி ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் சேர்கிறான். ஹாக்வார்ட்ஸ் பகுதி வுட்ஹவுஸின் பள்ளிக் கதைதான். ரான், ஹெர்மோயினி என்ற உயிர் நண்பர்கள். ட்ராகோ என்ற ஒரு ‘எதிரி’. ஸ்னேப் என்ற ஆசிரியருக்கு அவனைக் கண்டாலே ஆகவில்லை. தலைமை ஆசிரியர் டம்பிள்டோர் அவனுக்கு father figure ஆக இருக்கிறார். க்விடிச் விளையாட்டில் அவனுக்கு இயற்கையாகத் திறமை இருக்கிறது. வோல்டமோர்ட் இறக்கவில்லை, தன் சக்திகளை இழந்து மற்றவரின் உதவி இல்லாமல் வாழ முடியாத நிலை. அவன் க்விரல் என்ற ஆசிரியரோடு ஒட்டிக் கொண்டு தன் சக்திகளை மீட்க முயற்சிக்கிறான். ஹாரி, ரான், ஹெர்மோயினி மூவரும் க்விரல்-வோல்டமோர்ட்டின் முயற்சிகளைத் தோற்கடிக்கிறார்கள்.

Chamber of Secrets நாவலில் ஒரு டைரிதான் வில்லன். அதில் வோல்டமார்ட்டின் உயிரின், சக்தியின் ஒரு பகுதி இருக்கிறது. அது ரானின் தங்கை ஜின்னியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் அடியில் எங்கோ உறங்கும் ஒரு பெரும் பாம்பை தான் நினைக்கும்போது வெளியே வரச் செய்கிறது. அந்தப் பாம்பை நேரடியாகப் பார்த்தால் இறப்புதான். ஆனால் பார்ப்பவர்கள் எல்லாரும் அதன் பிம்பத்தைப் பார்க்கிறார்கள் அதனால் சிலையாக மாறிவிடுகிறார்கள். இதில் வெட்டி பந்தா காட்டும் ஆசிரியர் லாக்ஹார்ட் நடுவில் கலக்குகிறார்.

Prisoner of Azkaban நாவலில் ஹாரியின் அப்பாவின் உயிர் நண்பனாக இருந்த, ஆனால் ஹாரியின் பெற்றோரை வோல்டமோர்ட்டுக்கு காட்டிக் கொடுத்த குற்றத்துக்காக சிரியஸ் ப்ளாக் சிறையிலிருந்து தப்பிவிடுகிறான். ஹாரி தாக்கப்படுவான் என்று எல்லாரும் அஞ்சுகிறார்கள். இன்னொரு பிரமாதமான பாத்திரமான லூபின் ஹாரிக்கு ஆசிரியராக வருகிறார். லூபின் ஒரு werewolf. லூபின், ஹாரியின் அப்பா ஜேம்ஸ், சிரியஸ், ரானின் செல்ல எலி, ஸ்னேப் ஆகியோரை வைத்து ஒரு அருமையான முடிச்சு அவிழ்கிறது.

Goblet of Fire-இலிருந்துதான் இந்தத் தொடரின் சுமார்த்தானம் ஆரம்பிக்கிறது. இந்தப் புத்தகத்தின் நீளமும் கொஞ்சம் அதிகம். ஹாக்வார்ட்ஸ் போன்ற இன்னும் இரண்டும் மந்திரப் பள்ளிகளுடன் போட்டிகளை நடத்துகிறது. ஹாரி போட்டியில் கலந்து கொள்ள பேரே கொடுக்கவில்லை, ஆனால் அதிசயமாகச் சேர்க்கப்படுகிறான். இது அத்தனையும் வோல்டமோர்ட்டை மீண்டும் சக்திகளோடு எழுப்ப நடக்கும் சதி என்று தெரிகிறது. வோல்டமோர்ட் உயிர் பெறும் காட்சி திகில் கிளப்புகிறது. ஆனால் அந்த உச்சக்கட்டத்துக்கு செல்வதற்கு முன் இழுக்கிறார். ஸ்னேப் வோல்டமோர்ட்டுக்காக டம்பிள்டோரிடம் வேலை செய்யும் ஒற்றனா, இல்லை டம்பிள்டோருக்காக வோல்டமோர்ட்டிடம் ஒற்று வேலை பார்க்கிறாரா என்ற கேள்வி இருக்கிறது.

Order of Phoenix இந்தத் தொடரின் போரடிக்கும் புத்த்கம். இத்தனைக்கும் இந்தத் தொடரின் மிகச் சிறந்த வில்லனான் டோலரஸ் இதில்தான் வருகிறார். டோலரஸ் டம்பிள்டோரை கீழே தள்ளி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகிறார். அவர் ஹாரிக்கு கொடுக்கும் டார்ச்சர்கள்தான் நாவலின் சிறந்த பகுதி.

Half-Blood Prince-இல் வோல்டமோர்ட்டின் திட்டம் வெளியாகிறது. அந்தக் காலத் திரைப்படங்களில் மந்திரவாதியின் உயிர் ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு பெட்டியில் உள்ள வண்டில் இருப்பது போல வோல்டமோர்ட் தன் உயிரை ஏழு பங்காகப் பிரித்து பல இடங்களில் வைத்திருக்கிறான். அதை அழிக்க டம்பிள்டோர் பாடுபடுகிறார். அவருக்கு ஹாரி உதவுகிறான். ஹாரி ஒரு பழைய பாடப்புத்தகத்தின் பிரதியை வைத்துக் கொண்டு potions வகுப்பில் கலக்குவது நன்றாக வந்திருக்கும். ஸ்னேப் டம்பிள்டோரைக் கொல்கிறார்.

Deathly Hallows-இல் எல்லா முடிச்சுகளும் அவிழ்கின்றன. வோல்டமோர்ட் இப்போது மந்திர உலகை ஆள்கிறான். ஆனால் ஹாரி, ஹெர்மோயினி, ரான் போன்ற சிலர் இன்னும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். வோல்டமோர்ட்டின் உயிரின் பங்குகள் ஒவ்வொன்றாக அழிக்கப்படுகின்றன. கடைசி போரில் ஹாரியின் தரப்பு வெல்கிறது. நாவலின் சிறந்த பகுதிகள் ட்ராகன் மீதேறி வங்கியிலிருந்து தப்பிக்கும் காட்சி, டோலரஸின் நகை கைப்பற்றப்படும் காட்சி

Fantastic Beasts தொடர் திரைப்படங்களின் – Fantastic Beasts and Where to Find ThemThe Crimes of Grindelwald திரைக்கதைகளும் புத்தகங்களாக வந்திருக்கின்றன. சுமார். இதெல்லாம் படமாகப் பார்த்தால்தான் நன்றாக இருக்கும்.

இவற்றைத் தவிர சின்ன சின்ன followup படைப்புகள் – Fantastic Beasts and Where to Find Them, Quidditich through the Ages, Tales of Beedle the Bard, Harry Potter: The Prequel – எல்லாம் இருக்கின்றன. Fantastic Beasts போன்றவற்றை திரைப்படமாக பார்ப்பது உத்தமம். படிப்பதெல்லாம் பரம ரசிகர்களுக்குத்தான். ஹாரியின் கௌரவ சித்தப்பா ரீமஸ் லூபின், அதிபயங்கர வில்லி டோலரஸ் உம்ப்ரிட்ஜ்,  ஹாக்வார்ட்ஸ் பள்ளி ஆசிரியர்கள் மினர்வா மக்கொனகல், சிபில் ட்ரெலானி, ஹொரேஸ் ஸ்லக்ஹார்ன், க்விரல், சில்வானஸ் கெட்டில்பர்ன்,  ஹாக்வார்ட்ஸின் விஷமக்கார பேய் பீவ்ஸ் போன்றவற்றின் பின்புலத்தைப் பற்றி கதை/கட்டுரையாக வெளியிட்டிருப்பது ஓரளவு படிக்கலாம். ஆனால் சிறந்த spinoff படைப்பு Harry Potter and the Cursed Child. படிக்கவும் ஏற்றது.

FanFiction – அதாவது வாசகர்கள் தங்கள் கற்பனையை ஓடவிட்டு மறுவாசிப்பு செய்வது – ஆயிரக்கணக்கில் உண்டு. Potion Master’s Nephew-வை குறிப்பிட்டு சொல்லலாம்.

Ickabog என்று ஒரு சிறுவர் கதையும் உண்டு.

இந்த நாவல்களைப் படிக்கும்போது அந்தக் காலத்தில் அம்புலிமாமாவைப் படித்து பரவசம் அடைந்த சிறுவன் என்னுள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என்று தெளிவாகத் தெரிந்தது. அதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

ஒரே ஒரு புத்தகம் படித்துப் பார்க்க வேண்டுமென்றால் Sorcerer’s Stone, Chamber of Secrets இரண்டில் ஒன்றைப் படிக்கலாம். போகப் போக சூடு குறைந்துவிட்டாலும் தொடரே படிக்கக் கூடியதுதான். சோம்பேறிகள் திரைப்படங்களைப் பார்த்துக் கொள்ளலாம், அவையும் நன்றாக வந்திருக்கின்றன.

தொகுக்கப்பட்ட பக்கம்: Young Adult Fiction

எஸ்விவி பற்றி க.நா.சு.

படித்திருக்கிறீர்களா புத்தகம் பற்றி சில முறை எழுதி இருக்கிறேன். எனக்கு அது ஒரு seminal புத்தகம். செகந்தராபாத் புத்தகக் கண்காட்சி ஒன்றில் வாங்கிய கையோடு அங்கேயே வராந்தாவில் படித்தேன், படித்து முடித்தவுடன் அதில் குறிப்பிட்டிருந்த புத்தகங்களைக் கண்காட்சியில் தேடினேன். கிடைத்தது எஸ்விவி எழுதிய உல்லாச வேளை ஒன்றுதான். படிக்கும்போது பிடித்திருந்தது. 20-25 வருஷங்களுக்குப் பிறகு மீள்வாசிப்பில் வெறும் fluff என்றும் தோன்றியது.

அதனால் ஒரு குறைவுமில்லை. க.நா.சு.வின் ரசனையும் என் ரசனையும் வேறு. ஆனால் புத்தகங்களை க.நா.சு. அணுகும் முறையும் நான் அணுகும் முறையும் ஒன்றுதான். அதனால் பசுபதி சார் தளத்தில் இந்தக் கட்டுரையைப் பார்த்தவுடன் சந்தோஷமாக இருந்தது. வசதிக்காக கீழேயும் பதித்திருக்கிறேன். பசுபதி சாருக்கு நன்றி!


தினசரி பழகி, விருப்பும் வெறுப்பும் கொள்கிற மனிதர்களை அறிகிற அளவுக்கு அவர்களையும் நாம் அறிந்து கொள்ள எஸ்.வி.வி.யின் மேதை நமக்கு உதவுகிறது. எவ்வளவு நுட்பமாக எல்லாவற்றையும் கவனித்து, சுலபமாக மனத்தில் பதியும்படியாக விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் எஸ்.வி.வி.! ஹாஸ்யமாக எழுதியதால்தான் அவருக்குப் பெருமை என்று சொல்லமுடியாது. உண்மைக்கும் கலைக்கும் விரோதமில்லாமல், முரண்பாடில்லாமல், அந்த ஹாஸ்யத்தைக் கையாள முடிந்தது என்பதுதான் எஸ்.வி.வி. யின் தனிச்சிறப்பு.

உல்லாச வேளை என்கிற நூலை நாவல் என்று சொல்வதா? கதைத் தொகுப்பு என்று சொல்வதா? வெறும் கட்டுரைகள் என்று சொல்வதா? மூன்றுமே சொல்லலாம். இலக்கியத்தில் அது எந்த வகுப்பில் சேரும் என்பது பற்றி எஸ்.வி.வி.க்கு ஒரு போதும், தன் எந்த எழுத்திலுமே கவலையிருந்ததில்லை. கலை என்கிற ஞாபகமே அற்ற ஒரு கலைஞர் அவர். இலக்கிய நண்பர்கள் கூட்டமொன்றில் அவர் தான் எழுதுகிறது எப்படி? என்பதைப் பற்றி விவரித்துச் சொன்னார்:

“பேனாவை எடுக்கும்போது எனக்கு என்ன எழுதப் போகிறேன் என்றே தெரியாது. கதைத் திட்டமோ , கதாநாயகன், நாயகியின் பெயரோ என் மனத்திலிராது. சட்டென்று ஏதாவது ஒரு பெயர் வரும். அவன் ஸ்டேஷனுக்குப் போவான். ஸ்டேஷனுக்குப் போய் என்ன செய்வான்? டிக்கெட் வாங்குவான். எந்த ஊருக்கு? ஏதாவது ஒரு ஊருக்கு. தனக்கா? தனக்காகவும் இருக்கலாம், வேறு யாருக்காகவும் இருக்கலாம். அது ரெயில் கிளம்பும்போது தெரிந்திருந்தால் போதுமே! கதாநாயகி அநேகமாக அவன் அறிந்தவளாகவே இருப்பாள். ஆனால், அவளைக் கதாநாயகியாக அதுவரை அறிந்திருக்கமாட்டான் அவன். நான் மனசு வைத்தால்தான் அறிந்துகொள்ள முடியும்…”

எஸ்.வி.வி.யை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து பிரித்து வைத்தன அவருடைய கண்களும் காதுகளும் என்று சொன்னால் அது மிகையல்ல. காண்பது பூராவையும் கண்ணில் வாங்கவும், கேட்பது பூராவையும் கொச்சை மொழி அந்தரார்த்தங்கள் உள்படக் காதில் வாங்கவும் அவருக்கு ஒரு சக்தியிருந்தது. தான் பார்த்ததையும் கேட்டதையும் அப்படி அப்படியே அழகு பெறச் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார் எஸ். வி. வி.

நாம் நேரில் அறிந்து கொண்டவர்களையே பல சமயங்களில் எஸ்.வி.வி.யின் எழுத்துக்களிலும் அறிந்து கொள்கிறோம். ஒரு திடமான பழங்கால அறிவுடனும், அநுபவ முதிர்ச்சியுடனும் இன்றைய வாழ்க்கையின் விசேஷங்களை, முக்கியமல்லாவிட்டாலும் அநுபவிக்கக் கூடிய அதிசயங்களை, எடுத்துச் சொன்னவர் எஸ்.வி.வி. இதைத் தினசரி பேச்சுத் தமிழில் சொன்னார் என்பதும், இயற்கையாகவுள்ள ஒரு ஹாஸ்யத்துடனும் சொன்னார் என்பதும் தனி விசேஷங்கள்தான்.

நேற்று – இன்று என்கிற இரண்டு தத்துவங்களுக்குமிடையே இவ்வுலகில் என்றுமே போராட்டம் நடந்து கொண்டுதான் வருகிறது. மனோதத்துவ நிபுணர்கள், தகப்பன் பிள்ளை, தாய் மகன் என்கிற உறவுகள் சிநேக உறவுகள் அல்ல, வெறுப்பு உறவுகளே என்று நிரூபிக்க இந்தக் காலத்தில் வெகுவாக முயன்று ஓரளவு வெற்றியும் பெற்று விட்டார்கள். மனோதத்துவம் என்கிற கானல் நீரிலே எஸ்.வி.விக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. அவர் கொண்டுள்ள முடிவுகளும் வற்புறுத்துகிற தன்மைகளும் வாழ்க்கையை நேர்ப் பார்வை பார்த்து அவர் அறிந்து கொண்டவை. ஆனால் நேற்று – இன்று என்கிற தத்துவத்தின் போராட்டத்தை அவரைப்போல தம் தலைமுறைக்கு விவரித்துள்ளவர்கள் வேறு யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். போராட்டம் என்றோ, தத்துவம் என்றோ, இது பெரிய விஷயம் என்றோ சொல்லாமல் (உணராமல் என்று கூடச் சொல்லலாம்) லேசாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறார்.

எஸ்.வி.வி. ஒரு கலைஞர். அவர் எந்த விஷயத்தை எடுத்துக் கையாளலாம், எந்த விஷயத்தைக் கைவிட்டு விட வேண்டுமென்று யாரும் சட்டம் விதிக்க முடியாது. எதுவும், எவ்வளவு சிறிய விஷயமுமே, அவர் நோக்குக்கு உட்பட்டதுதான் – கலைக்கு அஸ்திவாரம்தான்.

உல்லாச வேளையில் நாம் அறிந்து கொள்கிறவர்கள் எல்லோரும் நம்மை விட்டு அகலாத தோழர்கள். முகத்தைச் சுளிக்காமல் நாம் எங்கு சென்றாலும் நம்முடன் கூட வருவார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

முப்பது வருஷங்களுக்கு முன் நான் கோவையில் இண்டர்மீடியேட் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது எஸ்.வி.வி. என்கிற மூன்று எழுத்துக்கள் கொண்ட பெயருடன் ஒருவர் தன் முதற் கட்டுரையை ஹிந்துப் பத்திரிகையில் வெளியிட்டார். ஆங்கிலத்தில்தான் எழுதினார் என்றாலும், அது முழுக்க முழுக்கத் தமிழ்க் கட்டுரைதான் என்றே சொல்லலாம். தமிழன் ஆங்கிலம் எழுதினால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஆங்கிலத்தில் ஆசை கொண்டிருந்த எனக்கு அப்போது தோன்றியது. எஸ்.வி.வி. ஒரு ஏழெட்டு வருஷங்களுக்குப் பிறகு தமிழில் எழுதத் தொடங்கினார். அதனால் இன்றையத் தமிழ் இலக்கியம் ஒரு தனி வளம் பெறவே செய்திருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம்

Die Hard திரைப்படத்தின் மூலக்கதை

Die Hard பெருவெற்றி பெற்ற திரைப்படம். ப்ரூஸ் வில்லிஸை நட்சத்திரமாக மாற்றிய திரைப்படம் இதுதான். வெளியான காலத்தில் பார்த்தபோது இருக்கை நுனிக்கு கொண்டுவந்தது. சமீபத்தில் கூட அதே கருதான் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் அடிப்படை.

திரைப்படம் ராடரிக் தோர்ப் (Roderick Thorp) எழுதிய Nothing Lasts Forever (1979) நாவல்தான். நாவலுக்கும் திரைப்படத்துக்கும் சில மேலோட்டமான வித்தியாசங்கள் இருந்தாலும் திரைப்படம் ஏறக்குறைய நாவலைத்தான் அடியொற்றிச் செல்கிறது.

திரைப்படம் வெளியாகி 30-35 வருஷங்கள் இருக்கும். அதனால் கதை சுருக்கமாக: ஜோ லேலண்ட் (திரைப்படத்தில் ஜான் மக்ளேன்) தீவிரவாத இயக்கங்களை முறியடிக்க திட்டம் வகுத்துத் தரும் ஆலோசகர். 55-60 வயது இருக்கலாம் (திரைப்படத்தில் 35-40). தன் மகளைப் (திரைப்படத்தில் மனைவி) பார்க்க லாஸ் ஏஞ்சலஸ் வருகிறார். அலுவலகத்திற்கு (அடுக்கு மாடிக் கட்டிடம்) செல்கிறார். கழிவறைக்குச் செல்லும்போது கட்டிடம் தீவிரவாதிகளால் கைப்பற்றப்படுகிறது. இவர் இருப்பது தெரியவில்லை. அதைப் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு தீவிரவாதியாகத் தாக்குகிறார். அவர்களது ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களோடு போரிடுகிறார். அனேகமாக எல்லாரையும் காப்பாற்றினாலும் அவரது மகளைக் காப்பாற்ற முடியவில்லை.

நாவலின் சிறந்த பகுதி அதன் சண்டைக் காட்சிகள்தான். அவை அப்படியே திரைப்படத்திலும் வருகின்றன. மேல்தூக்கி (lift) மீது வெடிகுண்டு, தீயணைக்கும் தண்ணீர்க் குழாயை வைத்துக் கொண்டு கீழ்மாடி ஒன்றுக்கு தாவுவது, காலணிகள் இல்லாததால் எதிரி கண்ணாடியை உடைத்து அதன் மீது லேலண்டை நடக்க வைப்பது, கீழே இருக்கும் காவல்துறை அதிகாரி இவரை அதட்டுவது, காவல்துறையின் கவனத்தை ஈர்க்க மாடி கண்ணாடி பலவற்றை உடைப்பது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

திரைப்படம் பல “தேவை” இல்லாத காட்சிகளை வெட்டிவிடுவதால் ஒருங்கமைதி (cohesive) இன்னும் நன்றாக இருக்கிறது. மேலும் ப்ரூஸ் வில்லிஸ் நன்றாக நடித்திருப்பார். வில்லன் ஆலன் ரிக்மனும். அதனால் திரைப்படமா, நாவலா என்றால் திரைப்படத்தைப் பாருங்கள் என்றுதான் பரிந்துரைப்பேன். ஆனாலும் நாவல் படிக்கக் கூடிய ஒன்றுதான்.

பின்குறிப்பு: இந்த நாவல் தோர்ப் எழுதிய Detective (1966) என்ற நாவலில் தொடர்ச்சி. அதுவும் ஃப்ராங்க் சினாட்ரா நடித்து திரைப்படமாக வந்தது. இதிலும் சினாட்ராவே நடிக்க வேண்டும் என்று தோர்ப் விரும்பினாராம், ஆனால் சினாட்ரா மறுத்துவிட்டாராம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டி: ராடரிக் தோர்ப் பற்றி விக்கி குறிப்பு