ஷேக்ஸ்பியரின் Merchant of Venice

shakespeare_portrait

மீள்பதிவு, சிறு திருத்தங்களுடன்.

Merchant of Venice எனக்குப் பிடித்த ஷேக்ஸ்பியர் நாடகங்களில் ஒன்று.  பொதுவாக எனக்கு ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்கள்தான் பிடித்திருக்கின்றன. இன்பியல் நாடகங்களில் இதையே மிகச் சிறந்ததாகக் கருதுகிறேன், Hamlet, Macbeth, Julius Ceaser, Romeo and Juliet, Richard III வரிசையில் வைக்கிறேன்.

எல்லாருக்கும் தெரிந்த கதைதான், அதனால் கதைச்சுருக்கம் எல்லாம் எழுதி நேரத்தை வீணடிக்கப் போவதில்லை. நாடக சாத்தியங்களைப் பற்றி மட்டும்தான் எழுதப் போகிறேன்.

ஷைலக் சிறந்த நடிகர்களுக்காகவே உருவாக்கப்பட்ட பாத்திரம்.

I am a Jew. Hath not a Jew eyes? Hath not a Jew hands, organs, dimensions, senses, affections, passions; fed with the same food, hurt with the same weapons, subject to the same diseases, healed by the same means, warmed and cooled by the same winter and summer as a Christian is? If you prick us do we not bleed? If you tickle us do we not laugh? If you poison us do we not die? And if you wrong us shall we not revenge? If we are like you in the rest, we will resemble you in that. If a Jew wrong a Christian, what is his humility? Revenge. If a Christian wrong a Jew, what should his sufferance be by Christian example? Why, revenge. The villainy you teach me I will execute, and it shall go hard but I will better the instruction.

போன்ற வசனங்களைக் கேட்க வேண்டும். அந்த அதிர்ஷ்டம் எனக்கு இது வரை இல்லை.

merchant_of_veniceபோர்ஷியாவாக நடிக்க கொஞ்சம் குறும்புத்தனம் உள்ள கண்கள் வேண்டும்.

Tarry a little, there is something else. This bond doth give thee here no jot of blood; The words expressly are “a pound of flesh.”

என்று உணர்ச்சியே இல்லாத முகத்தில் கண்கள் மட்டும் பிரகாசிக்க ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிக்கும் குரலில் பேசினால் பிரமாதமாகத்தான் இருக்கும். என் கணவன் எந்த நிலையில் நான் கொடுத்த மோதிரத்தை அடுத்தவருக்குக் கொடுக்கமாட்டார் என்று போர்ஷியா சொல்லும் இடத்தில் மணமானவர்கள் புன்னகைக்காமல் இருக்க முடியாது.

போர்ஷியா ஷைலக்கின் திட்டத்தை முறியடிக்கும் நீதிமன்றக் காட்சிதான் நாடகத்தில் உச்சம் என்றாலும், பல காட்சிகள் – போர்ஷியாவின் “சுயம்வரக்” காட்சிகள், மோதிரம் எங்கே என்று போர்ஷியாவும் நெரிசாவும் தங்கள் கணவன்மார்களை உலுக்குவது எல்லாமே நல்ல நாடகத்தன்மை உள்ள காட்சிகள்.

பல உபகாட்சிகள் – ஷைலக் “A second Daniel come to judgment!” என்று சொல்வதை க்ராஷியானோ மீண்டும் மீண்டும் திருப்பிச் சொல்வது, தன் மகள் ஒரு கிருஸ்துவ இளைஞனோடு ஓடிவிடுவதை எதிர்கொள்ளும் ஷைலக் எல்லாமே ரசிக்க வைக்கும் காட்சிகள்.

அடுத்த நிலை பாத்திரங்களில் பசானியோ, க்ராஷியானோ ஓரளவு நடிக்க ஸ்கோப் உள்ளவை. ஆனால் அன்டோனியோ, போர்ஷியாவின் “தோழி” நெரிசா எல்லாம் ஏறக்குறைய props-தான். அவர்களை விட சில சிறு பாத்திரங்கள் நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளவை. போர்ஷியாவின் “சுயம்வரத்திற்கு” வரும் மொராக்க இளவரசன், வெனிசின் அதிபர் (duke) என்று சிலவற்றைச் சொல்லலாம்.

படியுங்கள். இணையத்தில் கிடைக்கிறது. முடிந்தால் பார்த்துவிடுங்கள். அல் பசினோ ஷைலக்காக நடித்து ஒரு திரைப்படம் கூட வந்திருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஷேக்ஸ்பியர் பக்கம்

தேவனூரு மஹாதேவா: ஆர்எஸ்எஸ் ஆளா மட்டு அகலா

தேவனூரு மஹாதேவா கன்னட எழுத்தாளர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். குசும பாலே என்ற நாவலுக்காக சாஹித்ய அகடமி விருது பெற்றவர்.

மஹாதேவா ஆர்எஸ்எஸ் ஆளா மட்டு அகலா என்ற சிறு நூலை 2022-இல் பதித்திருக்கிறார். “ஆளா மட்டு அகலா” என்றால் ஆழம் மற்றும் அகலம் என்று நினைக்கிறேன்.

மஹாதேவா ஆர்எஸ்எஸ் எதிர்ப்பாளர். புத்தகத்தின் முதல் பகுதியில் கோல்வால்கர், சவர்க்கார் போன்றவர்களை மேற்கோள் காட்டுகிறார். சில மேற்கோள்கள் மட்டும் பதிவின் கடைசியில்.

ராஜேந்திர பிரசாத் ஹிந்து மத சார்புடையவர் என்று அங்கும் இங்கும் படித்திருக்கிறேன். அவர் சொல்கிறார்

I have been informed of the plans by the RSS to stir up trouble among the masses. They have got a number of men dressed as Muslims and looking like Muslims who are to create trouble with the Hindus by attacking them and thus inciting the Hindus
(Ref: Dr. Rajendra Prasad to Sardar Patel (March 14, 1948) cited in Neerja Singh (ed.), Nehru-Patel: Agreement Within Difference— Select Documents & Correspondences 1933-1950, NBT, Delhi, p. 43)

காந்தி இறந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை, பிரசாத்துக்கு காந்தி தெய்வம், அந்த கோபம் இப்படி வெளிப்பட்டிருக்கலாம்தான்.

திப்பு சுல்தான் குடகுப் பகுதியில் ஹிந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆர்எஸ்எஸ் கணக்குப்படி 69000 ஹிந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனராம். குடகுப் பகுதியில் அந்தக் காலத்தில் மக்கள் தொகையே 69000தான், இத்தனை பேரை மதம் மாற்றி இருந்தால் இன்று குடகுப்பகுதி முஸ்லிம்கள் நிறைந்தல்லவா இருக்க வேண்டும், 15% சதவிகித முஸ்லிம்கள்தான் என்று கேட்கிறார். 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் குடகில் 69000 பேர்தான் மக்கள் தொகை என்று எப்படித் தெரிய வந்தது என்று தெரியவில்லை. ஒரு வேளை திப்பு சுல்தான் காலத்தில் மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதோ என்னவோ.

ஜெயப்பிரகாஷ் நாராயண் நெருக்கடி நிலை காலத்தில் சிறை வைக்கப்பட்டபோது சிறைவாசத்தின்போது அவரின் கண்காணிப்பாளராக இருந்து பின்னாளில் நண்பராக மாறியவர் அன்றைய கலெக்டர் தேவசகாயம். 1977-இல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது வாஜ்பேயி, அத்வானி போன்றவர்கள் தாங்கள் ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிவிடுவதாக ஜேபியிடம் சொன்னார்கள், பிறகு ஏமாற்றிவிட்டார்கள், ஜேபி இவர்கள் ஏமாற்றியதை தன்னிடம் சொல்லி வருத்தப்பட்டார் என்று தேவசகாயம் பேட்டி கொடுத்திருக்கிறாராம். இந்தக் காலகட்டத்தில் நான் சிறுவன். ஹிந்து பத்திரிகையில் கிரிக்கெட் பத்திகளைத்தான் தினமும் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்படி சொன்னதாக எங்கும் படித்த நினைவில்லை. மாறாக முன்னாள் ஜனசங்க உறுப்பினர்கள் ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகமாட்டேன் என்று சொன்னதால் தான் கட்சி பிளவுபட்டு ஆட்சி கவிழ்ந்தது. அதுவும் நானாஜி தேஷ்முக் போன்றவர்கள் இப்படி ஒத்துக் கொண்டிருக்க வாய்ப்பே இல்லை. ஜேபி யதார்த்தமாக போகிற போக்கில் ஏதாவது சொல்லி இருக்கலாம்.

பிராமணன் தலை, க்ஷத்ரியன் கை, வைசியன் தொடை, சூத்திரன் கால் என்ற சுலோகம் பிராமணன் உயர்ந்தவன் என்று சொல்கிறது என்று எளிய வாதத்தை முன் வைக்கிறார். தலை ஒஸ்தி என்றாலாவது என்ன நினைக்கிறார் என்று புரிகிறது. காலை விட கை என்ன உசத்தி? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

மோடி ஸ்விஸ் வங்கிகளிலிருந்து ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்சம் கொண்டு வருவேன் என்றாரே, எங்கே அந்தப் பணம் என்று கேட்கிறார். நியாயமான கேள்விதான். ஆனால் இது வரை எந்தக் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்றி இருக்கிறது? கர்நாடகாவில் காங்கிரஸ் முதல்வர்கள் எல்லாரும் சத்தியசந்தர்களா என்ன? இல்லை ரூபாய்க்கு 3 படி அரிசி போட்டாச்சா?

ஆர்எஸ்எஸ்தான் மோடியைக் கட்டுப்படுத்துகிறது, மோடி வெறும் பொம்மைதான் என்கிறார். ஆர்எஸ்எஸ்ஸுக்கும் பாஜகவுக்கும் உள்ள உறவு மர்மமாகத்தான் இருக்கிறது. ஆர்எஸ்எஸ் ஒத்துக் கொள்ளாவிட்டால் யாரும் தலைவர் ஆகிவிடமுடியாது, ஆனால் பொதுவாக நிர்வாகத்தில் தலையிடாது என்று தோன்றுகிறது. உண்மையாகவே இருந்தாலும் நான் நினைப்பதற்கும் ஆதாரம் இல்லை, மஹாதேவா நினைப்பதற்கும் அவர் எதுவும் ஆதாரங்களைத் தரவில்லை.

பள்ளிப் புத்தகங்களில் திப்பு பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடினார் என்பது கூட இருட்டடிப்பு செய்யப்படுகிறதாம். பௌத்தமும் ஜைனமும் ஹிந்து மதத்தின் ஒரு பகுதி என்று சித்தரிக்கப்படுகின்றனவாம். முரளி மனோகர் ஜோஷி ஜோசியத்தை கல்லூரிப் படிப்பாக்கிவிட்டதோடு நிற்கவில்லையாம், புத்ரகாமேஷ்டி யாகம் எப்படி செய்வது என்பதெல்லாம் கல்லூரிப் பாடமாக்கினாராம். அடப் பாவிங்களா!

கர்நாடக அரசு Karnataka Religious Freedom Protection Bill 2021 என்ற புதிய சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறதாம். அதில் மத சுதந்திரம், உரிமை, பாதுகாப்பு பற்றி ஒரு வரி கூட இல்லையாம். மாறாக மதமாற்றத்தை தடை செய்வது பற்றித்தான் பக்கம் பக்கம் இருக்கிறது என்று கிண்டல் அடிக்கிறார்.

Women, Dalits, people of unsound mind who cannot make decisions, people with disabilities and children are treated the same in the Act

என்கிறார். சரியாக இருந்தால் பெரிய அநியாயம்தான்.

மஹாதேவாவின் வாதங்கள் பல எனக்கு பலவீனமாகத் தெரிகின்றன. ஆனால் புத்தகத்தின் முதல் அத்தியாயம் – சவர்க்கார், கோல்வால்கர் மேற்கோள்கள் – வலுவானவையே. மேற்கோள்கள் out of context ஆக எடுத்தாளப்பட வாய்ப்பு இருக்கிறதுதான். ஆனாலும் இவற்றில் உண்மையே இலலாமல் இருக்கவும் வாய்ப்பில்லை.

இவற்றை நிராகரிப்பதே ஆர்எஸ்எஸ் முன் நகர வழி. ஆர்எஸ்எஸ் தலைமைக்கு அது கஷ்டம்தான், சாவர்க்கரும் கோல்வால்கரும்தான் ஹிந்துத்துவத்தின் முதன்மை சிற்பிகள். ஆனால் அவர்களும் நேராக திருப்பதி கர்ப்பக்கிரகத்திலிருந்து இறங்கி வந்துவிடவில்லை. எத்தனைதான் விதந்தோதினாலும் அவர்களும் மனிதர்கள்தான், அவர்கள் கண்ணோட்டத்திலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். இந்த மேற்கோள்கள் அவற்றைத்தான் காட்டுகின்றன. இவற்றை நிராகரிப்பதில் தயக்கம் காட்டவே கூடாது, அப்போதுதான் அரசியல் ஹிந்துத்துவத்தைப் பற்றிய மனத்தடை குறையும் என்று நான் கருதுகிறேன்.

புத்தகம் இங்கே கிடைக்கிறது


கோல்வால்கர் வர்ணாசிரம தர்மமே ஹிந்து மதம் என்று நம்பி இருக்கிறார்.

Golwalkar’s God: “There is a need for a living God who can arouse all the energy within us. That’s why our elders said: “Our society is our God…Hindu race is itself the (embodiment of) the Viraata Purusha (the Vedic first/primordial man), a form of the omnipotent”. Although they did not use the word ‘Hindu’, the description below that appears in the Purusha Sukta clarifies this – Sun and the moon are the eyes of the Lord, after mentioning that the stars and the skies originate from his navel – it goes on to describe the brahmin as his head, the king as his arms, the Vaishyas, his thighs and the Shudra, his feet. The people who follow this four-category system constitute the Hindu race, and our God. That is what is meant here
(Ref: Golwalkar, Chintana Ganga, 3rd Reprint, p.29


கோல்வால்கருக்கு மனுஸ்மிருதி பற்றி பெருமிதம்தான். அந்தப் பெருமிதத்தில் நான் தவறு எதுவும் காணவில்லை. மனுஸ்மிருதியில் நான் ஆட்சேபிக்கும் பல பகுதிகள் இருக்கின்றன, ஆனால் அப்படி ஒரு சட்டம்/நியதி தொகுக்கப்படுவது அறிவுத்தளத்தில் பெரும் சாதனையே. ப்ளேடோ பூமிதான் உலகத்தின் மையம் என்று பெரிய அறிவியலை உருவாக்கினார், அது தவறு என்று நிறுவப்பட்டதுதான். ஆனால் அதுவும் அறிவுத் தளத்தில் பெரும் சாதனைதான், இல்லையா? இன்றும் மனுஸ்மிருதியை – குறிப்பாக ஜாதிக் கோட்பாட்டை – ஏற்கமாட்டோம் என்று வெளிப்படையாக சொல்லாதவர்களைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் சாவர்க்கருக்கு மனுஸ்மிருதி ஹிந்து மதத்தின் முக்கிய புனித நூல்; ராமாயணம், மகாபாரதம் எல்லாம் பின்னால்தான் இருக்கிறது. மனுஸ்மிருதியை புனித நூல் என்று கருதுவதே வியப்பாக இருக்கிறது, அதற்கு ராமாயணம் மகாபாரதம் உபநிஷதம் அத்வைதம் எல்லாவற்றுக்கும் மேலான இடம் தருவதை என்னால் சுத்தமாகப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

In our Hindu Rashtra (State), after the Vedas, the Manusmriti is the holiest religious text
(Ref: V.D.Savarkar, ‘Women in Manusmriti’ Savarkar Samagra, Vol. 4, Prabhat Publishers, Delhi)


There are only two courses open to the foreign elements, either to merge themselves in the national race and adopt its culture, or to live at its mercy so long as the national race may allow them to do so and to quit the country at the sweet will of the national race. That is the only sound view on the minorities’ problem. That is the only logical and correct solution
(Ref: Golwalkar’s ‘We or our nationhood defined’, 1939)

அதாவது இந்தியாவில் இருக்கும் முஸ்லிம் கிறிஸ்துவர் எல்லாரும் ஹிந்துக்களின் தயவில் வாழும் இரண்டாம் நிலை குடிமகன்கள். அது என்னங்க இந்த லாஜிக் எல்லாம் அமெரிக்க வம்சாவளி இந்தியர்களுக்கு பொருத்திப் பார்க்க முடியவில்லை? அமெரிக்க அதிபர் தீபாவளி வாழ்த்து சொன்னால் ஹிந்துத்துவர்கள் எல்லாம் இத்தனை குஷிப்படுகிறீர்கள்? நீங்கள் எல்லாரும் அமெரிக்கக் கலாசாரத்தோடு ஒன்றிப் போங்கள், தீபாவளியாவது மண்ணாவது, எல்லாரும் கிறிஸ்துமஸைக் கொண்டாடுங்கள், அப்படித்தான் கோல்வால்கர் சொல்லி இருக்கிறார் என்று ஒரு ஹிந்துத்துவரும் சொல்வதில்லையே?


நாசிசம், ஃபாசிசம் எல்லாம் ஹிந்துத்துவர்களுக்கு 1940-இல் கூட உவப்பாய்த்தான் இருந்திருக்கிறது. இது சாவர்க்கர் கூற்று. ஜப்பானியர்களோடு நின்று போராடிய சுபாஷ் போஸ் கூட அப்படி உணர்ந்திருப்பாரா என்று தெரியவில்லை.

The very fact that Germany and Italy has so wonderfully recovered and grown so powerful as never before at the touch of Nazi or fascist magical wand is enough to prove that these ideologies were the most appropriate tonics their health demanded.
(Ref: V.D.Savarkar’s presidential address at the 1940 Hindu Mahasabha in Madurai)

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: மின்பிரதி

வாசந்தியின் சில புத்தகங்கள்

(மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு)

வாசந்திக்கு இதழியலாளர் என்ற ஒரு முகமும் உண்டு. இந்தியா டுடே பத்திரிகையின் தமிழ்ப் பதிப்புக்கு சில ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். அப்போது கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் அருகாமையில் இருந்து பார்த்திருக்கிறார். அந்த நினைவுகளை வைத்து தமிழகத்தின் அரசியல் சூழலை Cutouts, Castes and Cine Stars (2006) என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார். அதைப் படித்ததால்தான் மூலப்பதிவை மேம்படுத்தி மீள்பதித்திருக்கிறேன்.

Cutouts, Castes and Cine Stars சராசரி தமிழனுக்கு புதியதாக எதையும் சொல்லிவிடப் போவதில்லை. தினமும் நாளிதழ் படிக்கிறோம், பத்திரிகை பார்க்கிறோம், தொலைக்காட்சியில் செய்திகளை கேட்கிறோம். அவற்றை எல்லாம் ஒருங்கமைதியோடு தொகுத்து எழுதுவதைப் போலத்தான் இந்தப் புத்தகம் இருக்கிறது. ஆனால் மற்ற மாநில இந்தியர்களுக்கு நிச்சயமாக தமிழகத்தின் அரசியல் சூழலைப் புரிய வைக்கும். ஈ.வே.ரா.வின் தாக்கம், காங்கிரஸின் அழிவு, தி.மு.க. எப்படி குடும்பக் கட்சியாக மாறியது, கருணாநிதி-எம்ஜிஆர்-ஜெயலலிதா என்ற முக்கோணம், வெளிப்படையான ஜாதி அரசியல் எப்படி பா.ம.க.வோடு ஆரம்பிக்கிறது, தலித்கள் எப்படி “இடை ஜாதிகளால்” இன்னும் பின் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை நன்றாக விவரிக்கிறது. இன்று கட்சி சார்பற்ற பொதுப்புத்தி இந்த நிகழ்ச்சிகளை எப்படிப் பார்க்குமோ, அதுதான் இந்தப் புத்தகம். தமிழர்களும் படிக்கலாம், ஆனால் பிற மாநில மனிதர்களுக்கு இன்னும் பயனுடையதாக இருக்கும்.

Vaasanthiஎழுத்தாளர் வாசந்தியை இலக்கியவாதி அல்லது வணிக எழுத்தாளர் என்று சுலபமாக வகைப்படுத்திவிட முடியவில்லை. இலக்கியவாதி என்றால் எங்கோ கடைசி வரிசையில் நிற்கிறார். வணிக எழுத்தாளர் என்று பார்த்தால் பொருட்படுத்தக் கூடிய வணிக எழுத்தாளர். இந்தப் பதிவுக்காக அவரது சில பல புத்தகங்களைப் படிக்கும் வரையில் நானும் அவரைப் பெண் எழுத்தாளர் என்றுதான் வகைப்படுத்தி இருந்தேன், லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி வகையறா, ஆனால் அந்த வரிசையில் முதல்வர் என்றுதான் நினைத்திருந்தேன். நிச்சயமாக இல்லை, கிருத்திகா, அம்பை, பாமா, ஹெப்சிபா ஜேசுதாசன் அளவுக்கு வரவில்லை என்றாலும் அவருக்கு பெண் எழுத்தாளர் என்ற அடையாளம் தேவையில்லை. எழுத்தாளர் என்று சொன்னால் போதும்.

ஜெயமோகன் இவரது மௌனப்புயல், ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன நாவல்களை தனது இரண்டாம் வரிசை இலக்கியப் பட்டியலிலும், ஜெய்ப்பூர் நெக்லஸ், நிற்க நிழல் வேண்டும் ஆகிய நாவல்களை தன் பரப்பிலக்கியப் பட்டியலிலிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார். என்னைப் பொறுத்த வரை நிற்க நிழல் வேண்டும், மூங்கில் பூக்கள் இரண்டும் இலக்கியம். ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன குறுநாவல் வணிக நாவல் இல்லைதான், ஆனால் பெரிய இலக்கியமும் இல்லை.

வாசந்தியின் பாத்திரங்கள் பொதுவாக மேல்மட்டத்தவர்கள். ஓரளவு மென்மையானவர்கள். ஓரளவு சிந்திக்கக் கூடியவர்கள். ஆனால் திருப்பி திருப்பி வருபவர்கள். அதனால் முதல் சில நாவல்களுக்குப் பிறகு அலுத்துவிடுகிறார்கள். என் பதின்ம வயதில் அவரது பாத்திரங்கள் எதற்கெடுத்தாலும் ஓ போடுவதால் அவரது புத்தகங்களைப் பார்த்தாலே ஓ என்று கிண்டல் செய்வேன்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது மூங்கில் பூக்கள் என்ற குறுநாவலைத்தான். மிசோரத்தில் டீச்சராக வேலை செய்யும் தமிழ்ப் பெண். ராணுவ அதிகாரி ராஜீவுடன் காதல், உறவு. அவள் வகுப்பில் “டெரரிஸ்ட்” தலைவர் லால்கங்காவின் மகன் சுங்கா வந்து சேருகிறான். டெரரிஸ்ட் தலைவர் என்றாலும் லால்கங்கா மிசோரத்தில் சாதாரணமாக புழங்குபவர். சுங்கா தொல்லை தரும் மாணவன் என்று அவனுக்கு பெயர் இருக்கிறது. உண்மையில் அவன் சாதாரணமான, அழகை ரசிக்கும் மாணவன். தன் அப்பா மீது கொஞ்சம் வெறுப்பு வேறு. டீச்சருக்கும் அவனுக்கும் நட்பு ஏற்படுகிறது. பொறாமை கொண்ட ராஜீவ் சுங்கா மீது ஜீப்பை ஏற்றி கொன்றுவிடுகிறான். டீச்சருக்கு அங்கிருந்து தப்பிக்க வேண்டிய நிலை. மிஜோரத்திலிருந்து ஷில்லாங் வந்து விமானம் ஏறும்போது அவளுக்கு தனக்கு ஜீப் கொடுத்து உதவியது லால்கங்காதான் என்று தெரிய வருகிறது.

மிஜோரப் பின்புலம், அழகான பூக்கள், அன்பு ஆகியவற்றை வைத்து ஒரு நல்ல கதை பின்னி இருக்கிறார். இது மலையாளத்தில் பத்மராஜன் இயக்கி கூடெவிடே என்ற திரைப்படமாகவும் வந்தது.

எனக்கு இதைத்தான் ஜெயமோகன் தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்க்க நினைத்து தவறுதலாக ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன குறுநாவலைக் குறிப்பிட்டுவிட்டாரோ என்று ஒரு சந்தேகம் உண்டு.

மற்ற நாவல்களில் கடைசி வரை எனக்கு ஓரளவு பிடித்த நாவல். அப்பாவோடு வாழும் டாக்டர் பெண். தான் மகனாகப் பிறக்கவில்லை என்று அப்பாவுக்கு கொஞ்சம் வருத்தம் உண்டு என்று அவளுக்குத் தெரிகிறது. அது chip on the shoulder ஆக இருக்கிறது. அவளுடைய மனநிலையை நன்றாக சித்தரித்திருக்கிறார்.

சிறை என்ற நாவலும் பரவாயில்லை. மும்பை குண்டுவீச்சு பின்னணியில் ஒரு நிரபராதி நிருபன் மாட்டிக் கொள்கிறான்.

கடை பொம்மைகள் என்ற நாவலையும் குறிப்பிடலாம். பெண் குழந்தை வேண்டாமென்று நிராகரிக்கப்பட்ட குழந்தையை வெள்ளைக்கார அம்மா ஒருவர் எடுத்து வளர்க்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அது பெண் குழந்தைகளுக்கான இல்லமாகவே மாறிவிடுகிறது. வளர்ந்த பெண் தனக்குப் பிறகு இந்த இல்லத்தை எடுத்து நடத்துவாள் என்று அந்த வெள்ளைக்கார அம்மா எதிர்பார்க்க, இவள் உள்ளம் தடுமாறுகிறது.

ஆகாச வீடுகள் என்ற நாவலும் எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. கிராமம், அக்ரஹாரம். ஆணாதிக்கம். மாமா சபேசனுக்கு தன் எட்டு வயது மகன் ராஜு மீது அதீத அன்பு, அதை வெளிப்படுத்தத் தெரியாமல் திட்டிக் கொண்டே இருப்பார்.

யுகசந்தி என்ற நாவலும் எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. சம்பிரதாயமான பிராமணக் குடும்பம். முதல் பையன் போலந்துக்காரியை மணந்து கொள்கிறார். இரண்டாமவர் ஒரு முஸ்லிம் பெண்ணை. முதல் பையன் ஐம்பது வயதுக்கப்புறம் இன்னொரு பெண்ணோடு போய்விடுகிறார். விதவை அம்மா, முதல் பையனின் பெண் என்று கதாபாத்திரங்கள். நடுவில் இடதுசாரி சார்புடைய வள்ளியின் கிளைக்கதை.

டைம் பாஸ் என்ற அளவில் ஆர்த்திக்கு முகம் சிவந்தது (நேபாளத்தில் ஒரு பணக்காரக் குடும்ப இளைஞனுக்கு முதுகெலும்பு முறிந்துவிடுகிறது. பார்த்துக் கொள்ளப் போகும் தமிழ்நாட்டு நர்சுக்கும் அவனுக்கும் காதல்), அக்னிக்குஞ்சு (வீண் சந்தேகத்தால் பிரிந்த அம்மா-அப்பா பெண்ணுக்கு பதினெட்டு வயதாகும்போது சமாதானம் ஆகிறார்கள்), இடைவெளிகள் தொடர்கின்றன (ஒரு கல்லூரி நகரம். அங்கே புது லைப்ரரியனாக வரும் அழகான இளம் பெண். எல்லார் பிரச்சினைகளையும் தீர்க்கிறாள்), காதலெனும் வானவில் (அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் குடும்பத்தின் பதின்ம வயதுப் பெண்), மீண்டும் நாளை வரை (அவசரப்பட்டு சந்தேகப் பிராணி கணவனை மணக்கும் பெண் அவனைப் பிரிந்து சொந்தக் காலில் நிற்கிறாள்), நான் புத்தனில்லை (மேல் தட்டு குடும்பத்தின் அம்மா இன்னொருவனை விரும்புகிறாள்), நழுவும் நேரங்கள் (அப்பாவின் முன்னாள் காதலி, இந்நாள் தோழியால் குடும்பத்தில் குழப்பம். தோழிக்கு கான்சர். மகள் எல்லாரையும் ஒன்று சேர்க்கிறாள்), பொய்யில் பூத்த நிஜம் (சேர்ந்து வாழும் பெண்ணையும் மகனையும் விபத்தில் பட்ட அடியால் மறந்து போகும் ஆண்), சந்தியா (பெற்றோர்களின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் நார்வே செல்லும் பெண் அந்தக் கலாசாரத்தின் வெறுமையைப் புரிந்து கொள்வது), வசந்தம் கசந்தது (குடும்பத்தைப் புறக்கணிக்கும் அரசியல் தலைவி மீண்டும் குடும்பத்தில் ஒன்றுவது), வீடு வரை உறவு (ஒரு சம்பல் கொள்ளைக்காரனின் – டாகுவின் – மனமாற்றம்), வேர்களைத் தேடி (உயர் மத்தியதரக் குடும்பம். விவாகரத்து ஆன பெண். அயோத்தியாக் கலவர பின்புலம்), யாதுமாகி (அதே பத்தினிக்கு இன்னல் வரும் ஃபார்முலா, அதே பெண்களை யாரும் புரிந்து கொள்வதில்லை புலம்பல். நடப்பது கொஞ்சம் மேல்தட்டு குடும்பங்களில். ராதிகாவுக்கு ப்ரமோஷன் கிடைப்பதை புருஷன் விரும்பவில்லை. ஆணாதிக்கக் குடும்பம். எதிலோ தொடர்கதையாக வந்திருக்க வேண்டும், உதவி ஆசிரியர் யூஸ்லெஸ். ஒரு பாத்திரத்தின் பெயர் பாதியில் மாறிவிடுகிறது, அதை புத்தகமாகப் போட்ட பிறகும் யாரும் கவனிக்கவில்லை) ஆகிய நாவல்/குறுநாவல்கள் இருக்கின்றன.

தவிர்க்க வேண்டியவை எல்லைகளின் விளிம்பில் (மேல்மட்ட ஊழல் அதிகாரியின் பெண்ணை மணக்கும் மத்தியதர வர்க்க பாலு, அவனுடைய புதுமைப்பெண் தங்கை மாலு) இன்றே நேசியுங்கள் (முதலாளியால் கொலை செய்யப்பட்ட யூனியன் லீடரின் மனைவிக்கு நூல் விடும் முதலாளியின் வாரிசு).

தவிர்க்க வேண்டிய இன்னொரு குறுநாவல் ஜனனம் அதைத் தனியாக குறிப்பிட காரணம் ஒன்றுதான். இது “யாரோ எழுதிய கவிதை” என்று சிவகுமார், ஜெயஸ்ரீ, ராஜேஷ் நடித்து ஸ்ரீதர் இயக்கத்தில் திரைப்படமாக வந்தது. என் போதாத காலம், நான் அதைப் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் அம்னீஷியா என்பது பரவலாக பயன்படுத்தப்பட்ட ஒரு உத்தி. இந்த கதையிலும் அதுதான். விபத்து, ஒரு அழகான பெண் மட்டும் தப்பிக்கிறாள். அவளுக்கு அம்னீஷியா வந்து பேர் கூட மறந்து போக வேண்டுமே? போகிறது. வைத்தியம் பார்க்கும் டாக்டருக்கும் அவளுக்கும் காதல் வர வேண்டுமே! வருகிறது. அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்க வேண்டுமே? ஆகி இருக்கிறது. அவளைத் தேடும் கணவனுக்கு அவளுக்கு காதல் ஏற்பட்ட பிறகுதான் அவள் இருக்கும் இடம் தெரிய வேண்டுமே? தெரிகிறது. அவளைத் தேடி வரும் கணவன் அவள் காதலைக் கண்டு விலகுவதோடு கதை முடிகிறது. புத்தகமே cliched என்னும்போது சினிமாவை மட்டும் குறை சொல்லி பயனில்லை. மலையாளத்தில் பத்மராஜன் இயக்கி இன்னிலே என்ற திரைப்படமாகவும் வந்தது.

தவிர்க்க வேண்டிய இன்னொரு குறுநாவல் வேர் பிடிக்கும் மண். நண்பன் இரண்டு பெண்களை மணந்து வாழ்வதைக் கண்டு ஏற்கனவே மணமான ரமேஷுக்கும் கொஞ்சம் நப்பாசை. கரெக்டாக அவன் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று கதை போகிறது. இது பாலகுமாரனை குறி வைத்து எழுதப்பட்ட புத்தகம் என்று ஒரு கிசுகிசுவை எங்கோ படித்திருக்கிறேன். வம்பு பேசும் ஆசையில்தான் இதை தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

தேடல் என்று சிறுகதை நினைவிருக்கிறது. பல இன்னல்கள் கண்ட பத்தினி மனநிலை பிறழ்ந்துவிடும் என்று போகும். ஏன் நினைவிருக்கிறது என்றே தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: விக்கி குறிப்பு

ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமாரின் சுயசரிதையைப் படித்தபோது அவரது சில புத்தகங்களையாவது படித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பத்து புத்தகம் என்று இலக்கு, ஒன்பதில் நிறுத்திவிட்டேன். இத்தனைக்கும் அவரது மாத நாவல்களை 10-15 நிமிஷத்தில் படித்துவிட முடிகிறது. 🙂

படித்த பிறகு ராஜேஷ்குமார் எனக்கான எழுத்தாளர் அல்லர் என்பது தெளிவாகத் தெரிந்தது. 12, 13 வயதில் படித்திருந்தால் ஒரு வேளை நானும் ரசித்திருக்கலாம். (அப்போது ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரையை விரும்பிப் படித்தது போல). ஆனால் எனக்கு ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் எப்படியோ அப்படி ராஜேஷ்குமார் பலருக்கும் இருக்க வாய்ப்புண்டு என்பது தெளிவாகத் தெரிகிறது. எனக்கு சேஸ் நாவல்கள் மீது இன்றும் ஒரு soft corner இருக்கிறது, அது எனக்கு புதிய உலகங்களை அறிமுகம் செய்ததற்காக, ஆங்கிலப் புத்தகங்களை படிப்பதில் இருந்த மனத்தடையை குறைத்தற்காக. அது போலவே ராஜேஷ்குமாரின் புத்தகங்களும் பலருக்கும் புதிய உலகங்களை அறிமுகம் செய்து வைத்திருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. படிப்பதை இலகுவாக்க வாய்ப்பிருக்கிறது. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ஆகியோரை விட அவரது தளம் இன்னும் விசாலமானது என்று தோன்றுகிறது. இதனால்தான் அவர் தமிழிம் முக்கிய வணிக எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கிறார்.

ஆயிரக்கணக்கில் நாவல்கள் எழுதி இருக்கிறாராம். மாத நாவல்தான், 70-80 பக்கம்தான் என்று வைத்துக் கொண்டாலும் லட்சம் பக்கமாவது எழுதி இருப்பார். சாதனைதான்.

நான் படித்த அவரது சில நாவல்களைப் பற்றி சிறு குறிப்புகள் கீழே:

உயிரோசை, வெல்டன் விவேக், விலகு விபரீதம் சரளமாகப் போகும் குறுநாவல்கள். உயிரோசையில் சுகாதாரமற்ற ஊசி போடப்பட்டதால் இளைஞனுக்கு எய்ட்ஸ் நோய். அவன் டாக்டர்களைக் கொல்ல வேண்டுமென்று அலைகிறான். கடைசியில் ஒரு திடுக்கிடும் திருப்பம். வெல்டன் விவேக்கில் ட்ரோன் தொழில் நுட்பத்தை வைத்து கொலைகள். விலகு விபரீதத்தில் ஊரில் வழிப்பறி, பின்னால் யார் என்று முடிச்சு.

ஊமத்தம் பூக்கள் கொஞ்சம் நன்றாக வந்திருக்கலாம். காட்சிகளுக்கு இடையே கட் செய்வது குழப்பத்தைத்தான் உண்டாக்குகிறது.

வணக்கத்துக்குரிய குற்றம், உதடுகள் சுடும், வெல்வெட் கில்லர், தொட்டவனை விட்டதில்லை எல்லாம் பஸ்ஸில் படிக்கும் அளவுக்குத்தான் வொர்த். அதுவே கொஞ்சம் தாட்சணியம் பார்த்துத்தான் சொல்கிறேன். வ. குற்றம் குறுநாவலில் பணக்காரப் பெண்ணை “காதலிக்கும்” கால்நடை மருத்துவருக்கு அந்தப் பெண்ணின் சித்தியோடு தொடர்பு. டகால் டகால் என்று கொலை செய்கிறார்கள். கடைசியில் மாட்டிக் கொண்டு இறக்கிறார்கள். உ. சுடும் குறுநாவலில் வைரங்களை விழுங்கி விமானத்தில் கடத்துகிறார்கள். வெ. கில்லர் குறுநாவலில் ஓட்டப் பந்தய வீராங்கனை ஒலிம்பிக்கில் பங்கு கொள்வதைத் தடுக்க சதி. தொ. விட்டதில்லை குறுநாவலில் சண்டிகருக்கு வேலைக்குப் போகும் நர்ஸ் இரண்டு கொலைகளில் சிக்கிக் கொள்கிறாள்.

படித்தவற்றில் மிகவும் மோசமானது திகில் ரோஜா. பக்கத்துக்குப் பக்கம் திடுக்கிடும் திருப்பம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டி: ராஜேஷ்குமார் விக்கி குறிப்பு

ஜான் ஸ்டைன்பெக்: Of Mice and Men

The best laid plans of mice and men gang aft agley

நான் முதன்முதலாகப் படித்த ஜான் ஸ்டைன்பெக் புத்தகம் இதுதான். 21-22 வயதில் படித்தேன் என்று நினைக்கிறேன். மிகவும் எளிய கதை என்று தோன்றியது. இந்த மாதிரி அற்பக் கதைகளை எழுதுபவரா ஸ்டைன்பெக் என்று அவரை மேலும் படிப்பதற்கு மனத்தடை ஏற்பட்டுவிட்டது. Grapes of Wrath படிப்பதை இத்தனை வருஷமாகத் தள்ளிப் போட்டிருக்கிறேன்.

ஸ்டைன்பெக் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். பக்கத்து ஊர்க்காரர். சாலினாஸ் 75 மைல் தூரம்தான். இன்னும் நெருங்கிய ஊரான பாலோ ஆல்டோவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர் (பட்டப் படிப்பை முடிக்கவில்லை). மாண்டரே நகரத்தின் பின்புலத்தில் Cannery Row என்ற நாவலை எழுதி இருக்கிறார். Grapes of Wrath அவரது மாஸ்டர்பீஸ் என்று கருதப்படுகிறது.

சிறிய புத்தகம்; திருப்பிப் படித்துத்தான் பார்ப்போமே என்று எடுத்தேன். முதல் பத்து பக்கங்களிலேயே என்னைக் கட்டிப் போட்டுவிட்டது. என் முந்தைய வாசிப்பின் போதாமை நன்றாகப் புரிந்தது. இப்போது அலமாரியில் Grapes of Wrath-ஐத் தேட வேண்டும்.

என்னைக் கவர்ந்தது அவரது நுட்பமான எழுத்து – craft. கலை என்பதை விட திறமை என்றுதான் சொல்ல வேண்டும். உரையாடல்கள், நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக அவை கதையின் முடிவை நோக்கிச் செலுத்துகின்றன. தேவை இல்லாத காட்சி என்று எதுவுமே இல்லை. வேலை செய்ய வேண்டிய பண்ணைக்குப் போகாமல் ஆற்றங்கரையில் இரவு தங்குகிறார்களா, அது பின்னால் ஒரு காட்சியில் பிணைக்கப்படுகிறது. வீட் (Weed) என்ற சிறு நகரத்திலிருந்து ஜார்ஜும் லென்னியும் தப்பித்து ஓடி வருகிறார்கள் என்று ஒரு முன்கதை சொல்லப்படுகிறதா, அது பின்னால் ஒரு காட்சியில் பிணைக்கப்படுகிறது. வயதான நாயை கருணைக் கொலை செய்கிறார்களா, அதுவும்.

கதையின் கருவும் பிரமாதம். உறவு, நட்பு, பந்தம் ஆகியவற்றுக்கு நாம் ஒவ்வொருவரும் அந்தரங்கத்தில் ஏங்கத்தான் செய்கிறோம். உண்மையான உறவும் பந்தமும் கிடைத்துவிட்டால் அதைத் தக்க வைத்துக் கொள்ள நிறையவே விலை கொடுப்போம். விலை கொடுக்கிறோம் என்பதே தோன்றுவதில்லை, அது ஒரு விலையாகவே தெரிவதில்லை. நிகழ்காலத்தில் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் எதிர்காலத்தில் நிம்மதியான வாழ்வு என்று ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவும் நண்பர்களுக்குள்ளோ, கணவன் மனைவிக்குள்ளோ, பெற்றோர் பிள்ளைகளுக்குள்ளோ, அண்ணன் தங்கைக்குள்ளோ உறவினருக்குள்ளோ பகிர்ந்து கொள்ளப்பட்டால் அந்த உறவு மிக முக்கியமாக மாறிவிடுகிறது. அந்தக் கருவை அற்புதமாக விவரித்திருக்கிறார்.

ஒரு வகையில் பார்த்தால் இது நாஞ்சில் நாடனின் உலகம். என்ன நாஞ்சில் நாடனின் பாத்திரங்களுக்கு சொந்த ஊர், அங்கே பந்தங்கள் என்று வலுவான பின்புலம் இருக்கும். இங்கே இரண்டு வேரில்லாத நண்பர்கள்.

என்ன கதை? லென்னி மனதளவில் குழந்தைதான், ஆனால் உடல்ரீதியாக பெரிய பலசாலி. அவனது நண்பன் ஜார்ஜ். லென்னியை தாய் குழந்தையைப் பார்த்துக் கொள்வது போல, ஏன் செல்ல மிருகத்தைப் பார்த்துக் கொள்வது போல பார்த்துக் கொள்கிறான். லென்னிக்கு மிருதுவான எல்லாவற்றையும் தடவிக் கொடுப்பதில் மிகுந்த ஆசை. பூனை, நாய், முயல், ஏன் எலியைக் கூட தடவிக் கொடுப்பான். ஆனால் தன் பலம் தனக்கே தெரியாது, அதனால் கொஞ்சம் அழுத்திவிடுவான், அவை இறந்தே போய்விடும். வீட் என்ற சிறுநகரத்தில் ஒரு பெண் அணிந்திருந்த ஆடையைத் தடவ முயற்சி செய்கிறான், அவள் கத்துகிறாள். இவன் பயந்துபோய் இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறான். ஊரே இவர்களைத் துரத்த எப்படியோ தப்பிக்கிறார்கள். இப்போது இன்னொரு பண்ணையில் வேலைக்கு சேர்கிறார்கள்.

லென்னிக்கும் ஜார்ஜுக்கும் ஒரே கனவுதான். எப்படியாவது சொந்தமாக கொஞ்சம் நிலம் வேண்டும், அதில் விவசாயம் செய்து, கால்நடை வளர்த்து நிம்மதியாக வாழ வேண்டும். லென்னிக்கு அந்த சின்னப் பண்ணையில் முயல்களை வளர்க்க வேண்டும், அவற்றை செல்லமாகத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஜார்ஜுக்கு அப்படி ஒரு பண்ணையைத் தெரியும். ஆறேழு மாதம் வேலை செய்து சம்பளத்தைச் சேர்த்தால் வாங்கிவிடலாம். ஆனால் இது வரை முடியவில்லை. லென்னி அந்தப் பண்ணையை விவரிக்கும்படி ஜார்ஜிடம் மீண்டும் மீண்டும் கேட்பதும் ஜார்ஜ் விளக்குவதும், லென்னி இல்லாவிட்டால் தான் நிம்மதியாக இருப்பேன் என்று ஜார்ஜ் அலுத்துக் கொள்வதும், லென்னி ஏதாவது தவறு செய்தால் உன்னை முயல்களிடம் அண்டவிடமாட்டேன் என்று மிரட்டுவதும் poignant ஆக இருக்கிறது.

புதிதாக வேலைக்குச் சேரும் இடத்தில் லென்னியிடம் நீ வாயைத் திறக்காதே, வம்பில் மாட்டிக் கொண்டால் நம் கனவு நிறைவேறாது என்று ஜார்ஜ் எச்சரிக்கிறான். ஆனால் முதலாளியின் மகன் கர்லி – சமீபத்தில் திருமணமானவன் – தன் “ஆண்மையை” நிறுவ லென்னியை சண்டைக்கு இழுக்கிறான். லென்னி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க ஜார்ஜ் அவனை கட்டுப்படுத்துகிறான். இவர்கள் கனவைப் பற்றி தெரிந்து கொள்ளும் காண்டி என்ற பண்ணை ஆள் – ஒரு கையை இழந்தவன் – என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது, நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன், என்னால் கடுமையாக உழைக்க முடியாது, ஆனால் உதவியாக இருப்பேன் என்று சொல்கிறான். சிறிது தயக்கத்திற்குப் பிறகு இருவர் மூவராகிறார்கள். ஒரு மாதத்தில் தேவையான பணத்தைப் புரட்டிவிடலாம் என்று எண்ணுகிறார்கள்

கர்லியின் மனைவி தனிமையில் இருக்கிறாள். கணவனோடு அவளுக்கு செட்டாகவில்லை. அவ்வப்போது பண்ணை ஆட்களிடம் பேசுகிறாள். அது கர்லிக்கு இன்னும் ஆங்காரத்தை கிளப்புகிறது.

பண்ணையில் ஒரே ஒரு கறுப்பன்; கூனன். க்ரூக்ஸ் என்ற பெயர். அவனை எல்லாரும் தள்ளியே வைக்கிறார்கள். பண்ணை ஆட்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு அவன் வரக்கூடாது, யாரும் அவன் இருக்கும் அறைக்குப் போகமாட்டார்கள். ஒரு நாள் பண்ணையில் வேலை செய்யும் எல்லாரும் – லென்னியையும் காண்டியையும் தவிர மற்றவர்கள் – டவுனுக்குப் போகிறார்கள். அப்போது கறுப்பு-வெள்ளை எல்லாம் புரியாத லென்னி அந்தக் கறுப்பனின் அறைக்குப் போகிறான். நிறம் ஒன்றாலேயே தனிமைப்பட்டிருக்கும் க்ரூக்ஸ் லென்னி மீது இங்கே வராதே என்று எரிந்து விழுகிறான். லென்னிக்குப் புரியவே இல்லை. பிறகு லென்னி தன் கனவுப் பண்ணையைப் பற்றி சொல்கிறான். இதெல்லாம் நடக்காத விஷயம், இப்படித்தான் எல்லாரும் சொல்வார்கள், ஆனால் யாரும் செய்ததில்லை என்று அஸ்து பாடிவிட்டு, நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன் என்று வேண்டுகிறான். மனதைத் தொட்ட இடங்களில் இது ஒன்று. நடக்க வாய்ப்பில்லைதான், ஆனால் நடந்தால்? தானும் தனியனாக வாழாமல் நண்பர்களோடு வாழ முடிந்தால்?

அவர்கள் பேசும்போது கர்லியின் மனைவி அங்கு வருகிறாள், தான் நடிகை ஆகி இருக்கலாம், இங்கே தனிமை, இந்த மாதிரி ஒரு அரைப் பைத்தியத்தோடும், கறுப்பனோடும் மனம் விட்டுப் பேசுவதே பெரிய விடுதலையாக இருக்கிறதே என்று அலுத்துக் கொள்கிறாள். அதுவும் poignant ஆன ஒரு காட்சி.

லென்னிக்கு மிருதுவான பொருட்களைத் தடவிக் கொடுப்பதில் ஆசை என்று தெரிந்ததும் என் தலை முடியைத் தடவிப் பார் என்கிறாள். லென்னி தடவ ஆரம்பிக்கிறான், அவள் நிறுத்தச் சொன்னால் லென்னிக்கு எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை. அழுத்துகிறான், அவள் இறந்து போகிறாள்.

லென்னி என்ன செய்வான்? ஜார்ஜ் எப்படி சமாளிக்கிறான்? இதுதான் கடைசிக் காட்சி.

ஸ்டைன்பெக் இந்த நாவலில் முக்கியப் பாத்திரங்கள் போல பண்ணை ஆளாக வேலை பார்த்தாராம். அதனால்தானோ என்னவோ அவர் காட்டுவது மெய்நிகர் உலகமாக இருக்கிறது. இன்றும் இருக்கும் உலகம்தான் என்று தோன்றுகிறது.

ஸ்டைன்பெக் இந்த சிறு நாவலை மிகத் திறமையாக எழுதி இருக்கிறார். பாத்திரப் படைப்பு, தனிமை, பந்தம், நட்பு, கனவு, உறவு எல்லாவற்றையும் மிக அருமையாக கொண்டு வந்திருக்கிறார். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜான் ஸ்டைன்பெக் பக்கம்

அஞ்சலி: பேராசிரியர் பசுபதி

பேராசிரியர் பசுபதி மறைந்த செய்தி கொஞ்சம் திடுக்கிட வைத்தது. பைபாஸ் சர்ஜரி என்று சொல்லி இருந்தார், ஆனால் பதிவுகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. இதோ வந்துவிடுவார் என்றுதான் நினைத்திருந்தேன். என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

பார்த்ததில்லை, பேசியதில்லை, இணையம் மூலமாகத்தான் பழக்கம். ஆனாலும் மிகவும் வருத்தம் தந்த செய்தி. சஹிருதயர் என்றே உணர்ந்திருந்தேன். இருபது வருஷம் முன்னால் பிறந்திருந்தால் என் ரசனை ஏறக்குறைய அவரைப் போலத்தான் இருந்திருக்கும். இருபது வருஷம் பிந்திப் பிறந்திருந்தால் அவர் ரசனை என்னைப் போலத்தான் இருந்திருக்கும்.

அவரது தளத்தைப் படிப்பது எப்போதும் ஆர்வம் ஊட்டும் ஒன்று. பழைய பத்திரிகைகளின் சிறந்த ஆவணம். எங்கிருந்துதான் இத்தனை பத்திரிகைகளை பிடிக்கிறாரோ என்று வியந்திருக்கிறேன்.

கவிதை இயற்றிக் கலக்கு, சங்கச் சுரங்கம் என்ற புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

என் போன்றவர்களுக்கு இணையம் மூலமாகத்தான் பழக்கம். ஆனால் அவருக்கு வேறு ஒரு பக்கமும் உண்டு. பசுபதி கிண்டி பொறியியல் கல்லூரி ஆரம்பித்து பிறகு சென்னை ஐஐடி, பிறகு யேல் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பொறியாளர். பிறகு டோரண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். Professor Emeritus என்ற நிலைக்கு உயர்ந்தார்.

இந்த இழப்பிலிருந்து மீள ஆண்டவன் அவர் குடும்பத்துக்கு பலத்தை அருளட்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

செந்தூரம் ஜெகதீஷ் எழுத்தாளர் பட்டியல்

செந்தூரம் ஜெகதீஷ் கிடங்குத்தெரு என்ற சிறந்த நாவலை எழுதியவர். புத்தகப் பிரியர். (என்னை எல்லாம் புத்தகப் பிரியன் என்று சொல்பவர்கள் இவரைப் பார்க்க வேண்டும், இவர் வேற லெவல்).

ஃபேஸ்புக்கில் சிறந்த எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் போட்டிருக்கிறார், பிறகு சிறந்த (மறைந்த) எழுத்தாளர் வரிசை என்று தெளிவுபடுத்தினார். ஆனால் வேதநாயகம் பிள்ளை, ராஜம் ஐயர், மாதவையா, தேவன் ஆகியோரை ஏன் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.

அவரது தேர்வுகளில் இலக்கிய எழுத்தாளர்கள் என்று நான் கருதுபவர்களில் எனக்கு அனேகமாக இசைவுதான். ஆனால் வணிக நாவல்களைப் பொறுத்த வரையில் நிறையவே கருத்து வேறுபாடு இருக்கிறது, வணிக எழுத்தாளர் தேர்வுகளில் கணிசமானவை எனக்கு தேறாது.

நான் கேள்வியே பட்டிராத சில எழுத்தாளர்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இதயன், கோ. கேசவன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, அஃக். பரந்தாமன் ஆகிய பேர்களை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

ஓவர் டு செ. ஜெகதீஷ்!


And Finally. தமிழின் சிறந்த எழுத்தாளர் வரிசை.

  1. பாரதியார்
  2. புதுமைப்பித்தன்
  3. மௌனி
  4. கு.ப.ரா.
  5. ந. பிச்சமூர்த்தி
  6. எம்.வி. வெங்கட்ராம்
  7. சி.சு. செல்லப்பா
  8. க.நா.சு.
  9. பி.எஸ். ராமையா
  10. ந. சிதம்பரசுப்பிரமணியன்
  11. கரிச்சான் குஞ்சு
  12. வ.ரா.
  13. வ.வே.சு. அய்யர்
  14. தொ.மு.சி. ரகுநாதன்
  15. சம்பத்
  16. பிரமிள்
  17. அசோகமித்திரன்
  18. சுந்தர ராமசாமி
  19. ஜெயகாந்தன்
  20. நா. பார்த்தசாரதி
  21. கி. ராஜநாராயணன்
  22. ஜி. நாகராஜன்
  23. கிருஷ்ணன் நம்பி
  24. ஆ. மாதவன்
  25. அரு. ராமனாதன்
  26. கு. அழகிரிசாமி
  27. ஆதவன்
  28. சார்வாகன்
  29. சாண்டில்யன்
  30. கல்கி
  31. மு. தளையசிங்கம்
  32. கிருத்திகா
  33. ஹெப்சிபா ஜேசுதாசன்
  34. ரஸவாதி
  35. தி. ஜானகிராமன்
  36. ஜாவர் சீதாராமன்
  37. ஜெகசிற்பியன்
  38. மஞ்சேரி ஈஸ்வரன்
  39. மயிலை சீனி. வேங்கடசாமி
  40. வெ. சாமிநாத சர்மா
  41. பி.ஸ்ரீ.
  42. த.நா. குமாரசாமி
  43. த.நா. சேதுபதி (த.நா. சேனாபதியை சொல்கிறார்)
  44. தி.ஜ.ர.
  45. ப. சிங்காரம்
  46. லா.ச. ராமாமிர்தம்
  47. சுஜாதா
  48. பிரபஞ்சன்
  49. ரசிகமணி டி.கே.சி
  50. ஸ்வாமிநாத ஆத்ரேயன்
  51. கி.அ. சச்சிதானந்தன்
  52. தமிழ்வாணன்
  53. தஞ்சை ப்ரகாஷ்
  54. தோப்பில் முகமது மீரான்
  55. வல்லிக்கண்ணன்
  56. கோவை ஞானி
  57. விந்தன்
  58. வெங்கட் சுவாமிநாதன்
  59. செ. கணேசலிங்கன்
  60. அறந்தை நாராயணன்
  61. அஃக் பரந்தாமன்
  62. பாலகுமாரன்
  63. சுப்ரமண்ய ராஜு
  64. ஸ்டெல்லா புரூஸ்
  65. கைலாசபதி
  66. டேனியல் கே.
  67. கோபி கிருஷ்ணன்
  68. இதயன்
  69. சா. கந்தசாமி
  70. ஆர். சூடாமணி
  71. மகரிஷி
  72. எஸ். பொன்னுதுரை
  73. அ.கா. பெருமாள்
  74. சிட்டி
  75. ஆர். ஷண்முகசுந்தரம்
  76. திரிலோக சீதாராம்
  77. தி.சா. ராஜு
  78. வேதசகாயகுமார்
  79. வெங்கடேஷ் சக்கரவர்த்தி
  80. செ. யோகநாதன்
  81. தனுஷ்கோடி ராமசாமி
  82. ஐராவதம் மகாதேவன்
  83. சங்கர்ராம்
  84. ந. முத்துசாமி
  85. ஸ்ரீவேணுகோபாலன்
  86. வை. கோவிந்தன்
  87. சிலம்பொலி செல்லப்பன்
  88. சாவி
  89. சோ
  90. கோமல் சுவாமிநாதன்
  91. சுப்புடு
  92. பி.வி.ஆர்.
  93. ராஜேந்திரகுமார்
  94. சி.என். அண்ணாதுரை
  95. கலைஞர்
  96. ம.வே. சிவகுமார்
  97. தெளிவத்தை ஜோசஃப்
  98. கௌதம நீலாம்பரன்
  99. அகிலன்
  100. கோ. கேசவன்
  101. பா. ஜெயப்பிரகாசம்
  102. ஜெயந்தன்

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

க.நா.சு. புதுமைப்பித்தனை சந்திக்கிறார்

க.நா.சு. மணிக்கொடி அலுவலகத்துக்கு முதல் முறையாகப் போகிறார், தன் கதைகளை பிரசுரிப்பார்களா என்று தெரிந்து கொள்ள. அங்கே பி.எஸ். ராமையாவையும் புதுமைப்பித்தனையும் சந்திக்கிறார். இரண்டும் நிமிஷம் பேசிய பிறகு க.நா.சு.வும் தங்கள் கோஷ்டிதான், தேறாத கேஸ் என்று புதுமைப்பித்தன் தீர்ப்பு சொல்லிவிடுகிறார்! சுட்டி இங்கே.

அழிசி ஸ்ரீனிவாச கோபாலனுக்கும் அழியாச்சுடர்களுக்கும் நன்றி!

சுட்டி கொடுத்தால் போதும்தான், ஆனால் இதை சிலிகன் ஷெல்ஃபிலும் பதித்து வைக்க வேண்டும் என்று ஒரு நப்பாசை. அதனால் கீழே கட் பேஸ்ட் செய்திருக்கிறேன்.


முதல் தடவை புதுமைப்பித்தனைச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. மணிக்கொடி காரியாலயத்தில் ஒரு சனிக்கிழமை நண்பகல் பன்னிரண்டு மணிக்கு கதைகள் கொடுத்தால் அவர்கள் போடுவார்களா என்று கேட்கப் போயிருந்தேன். 1935 நவம்பர் என்று எண்ணுகிறேன். மழை பெய்து ஓய்ந்திருந்தது.

இரண்டு ஆசாமிகளைச் சந்தித்தேன். ஒருவர் கண்ணால் பயமுறுத்துகிறவராக இருந்தார். ஒருவர் பல்லால் பயமுறுத்துகிறவராக இருந்தார். இருவரும் பயமுறுத்துகிறவர்களாகத்தான் அப்போது தோன்றினார்கள். கண் பி. எஸ். ராமையா என்றும், பல் சொ. விருத்தாசலம் என்கிற புதுமைப்பித்தன் என்றும் அறிந்துகொண்டேன்.

“ராசா கதை எழுதப் போறாக, என்ன சொல்றீக?” என்று பல் கண்ணைக் கேட்டது.

“எழுதட்டுமே. நமக்கென்ன ஆட்சேபம்?” என்றது கண்.

“கதை போட்டால் ஏதாவது பணம் கொடுப்பதுண்டா?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டேன். சொ.வி. கடகடவென்று உள்பற்களும் தெரிய சிரிக்க ஆரம்பித்துவிட்டார். கண் ஆசிரியராக லட்சணமாகப் பதில் சொல்லிற்று. “மணிக்கொடியில் கதை போட நீங்கள்தான் பணம் கொடுக்க வேண்டும். நாங்கள் கதைகளை விலை கொடுத்து வாங்குவதில்லை” என்றார்.

“விலைமதிப்பில்லாத கதைகளாக எழுதுங்கள்” என்றது பல்.

“போன இதழில் ‘சில்பியின் நரகம்’ என்று ஒரு கதை வந்ததே… படித்தீரா?” என்று கேட்டது கண்.

“நல்ல கதை. படித்தேன். அதனால்தான் என் கதையையும் போடுவீர்களா என்று கேட்க வந்தேன்?”

“நல்ல கதைகளாக நான் ஒருவன் எழுதுகிறேனே, போதாதா?” என்று கேட்டது பல்.

“அவர்தான் அந்தக் கதையின் ஆசிரியர்.”

“அப்படியா? சந்தோஷம் உங்களைச் சந்தித்ததில்.”

“அப்படிச் சொல்லு ராசா!” என்றது பல்.

இது ‘ஹோப்லெஸ் கேஸ்’ என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும்போது மூன்றாவது ஆசாமி ஒருவர் உள்ளே வந்தார். நல்ல சிவப்பாக, நல்ல உயரமாக, எடுப்பான மூக்குடன், தீட்சண்யமான கண்களுடன், பல்லுக்கும் கண்ணுக்கும் நல்ல காண்ட்ராஸ்ட்.

“இவர் என் ஆர்டிஸ்ட். கே. பாஷ்யம் ஆர்யா” என்றது கண்.

ஆர்யா என்று அவர் சொன்னது ஆர்.ஏ. என்று எனக்குக் காதில் விழுந்தது. ஆர்.ஏ. என்றால் கலை உலகில் ராயல் அகேடெமிசியன் என்பதன் சுருக்கம். கதைகளுக்குப் பணம் தராத பத்திரிகை ஒரு ஆர்.ஏ.யை வேலைக்கு…

“‘ஆர்யா’ என்கிற புனைப்பெயரில் சித்திரங்கள் போடுகிறார். பெரிய ஆர்டிஸ்ட். ஆனால் அதைவிடப் பெரிய தேசபக்தர். பாஷ்யம் சட்டையைத் தூக்கிக் காட்டுங்கள்.” என்று ராமையா பாஷ்யத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்குப் பழக்கப்பட்டவர் போல ஆர்யா தன் சட்டையைக் கழுத்துவரைத் தூக்கிக் காட்டினார். விரல் மொத்தம் குறுக்கும் நெடுக்குமாகத் தழும்புகள் – கசையடித் தழும்புகள். நான் பிரமித்துப்போய் நின்றேன். ஒவ்வொரு தழும்பும் ஒன்பது வாய்களுடன் ‘நீயும் இருக்கிறாயே’ என்று கேட்பது போலத் தோன்றிற்று.

என் பிரமிப்பை நீக்குவதற்கே போல பல் சொல்லிற்று, அவருடைய பேடண்ட் கடகடச் சிரிப்புடன். “என்ன ராசா? பேச்சு வரவில்லை? அவர் தழும்புகள் அவர் முதுகில் தெரிகின்றன. எங்கள் தழும்புகள் உள்ளத்தில் இருப்பதனால் வெளியே தெரிவதில்லை. பாரதியார் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ராசாவே!”

“படித்திருக்கிறேன்.”

“ஹா! ஹா! கேள்விப்பட்டது மட்டுமில்லை. படித்தும் இருக்கிறார் மனுஷன். இதுவும் நம்மைப்போலத் தேறாத கேஸ் என்றுதான் தோன்றுகிறது ராமையா” என்றார்.

இப்படியாக நானும் அன்று தேறாத கேஸாக ‘மணிக்கொடி’ கோஷ்டியில் சேர்ந்துகொண்டேன். உள்ளத்தில் உள்ள வெளியே தெரியாத தழும்புகள், தேறாத கேஸ், பணமில்லாத இடைவிடாத இலக்கிய சேவை என்கிற விஷயங்கள் எல்லாம் தொடருகின்றன. மகாராஜர்கள் ராமையாவும் சொ.வி.யும் போய்விட்டார்கள். நான், அலாஸ் – இருக்கிறேன். சில சமயம் சொ.வி. நல்ல அதிருஷ்டக்காரர். சீக்கிரம் போய்விட்டார் என்று எனக்குத் தோன்றுவதுண்டு

முன்றில் இதழ் 5 (க.நா.சு. நினைவு மலர்)

பின்குறிப்பு: வேலை மும்முரத்தில் இந்தப் பக்கம் வரமுடியவே இல்லை, இனி மேலாவது கொஞ்சம் ரெகுலராக எழுத வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், புதுமைப்பித்தன் பக்கம்