ஷெர்லக் ஹோம்ஸின் தங்கை

ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதியவர் ஆர்தர் கானன் டாயில் என்பது தெரிந்ததே. டாயில் இருக்கும்போதே வேறு பலரும் ஷெர்லாக்கை வைத்து கதைகள் எழுத ஆரம்பித்தார்கள் என்பது அவ்வளவாகத் தெரியாத விஷயம். இன்றைக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் பின்புலத்தில் கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. என் கருத்தில் யாரும் டாயில் தரத்துக்கு வரவில்லைதான். இருந்தாலும் இவற்றில் பல எனக்கு சுவாரசியமாகத்தான் இருக்கின்றன. நான் ஷெர்லாக் ஹோம்சின் பரமரசிகன், ஏதாவது சின்ன விஷயம் நன்றாக இருந்தாலும் எனக்குப் பிடித்துவிடும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

எனோலா ஹோம்ஸ் (Enola Holmes) கதைகள் பதின்ம வயதினருக்காக எழுதப்பட்டவை. நாலு கழுதை வயதாகிவிட்டாலும் எனக்கும் கொஞ்சம் பிடிக்கும். திரைப்படமாகப் பார்த்த பிறகுதான் (Enola Holmes – 2020, Enola Holmes 2 – 2021) கதைகளைத் தேடிப் பிடித்து படித்தேன். இந்தத் தொடரின் கவர்ச்சி அன்றைய பெண்களின் சமூக நிலையை கோடி காட்டுவதுதான். அதை விரும்பித்தான் நான்சி ஸ்ப்ரிங்கர் இந்தக் கதைகளை எழுதியும் இருக்கிறார்.

இந்தத் தொடரின் சட்டகமும் எனக்கு சுவாரசியமாக இருந்தது. எனோலா ஹோம்ஸ் ஷெர்லாக் மற்றும் மைக்ராஃப்டின் 14 வயது தங்கை. அப்பா இல்லை. அம்மா வீட்டிலேயே படிக்க வைக்கிறாள், ஆனால் சம்பிரதமாயமான பள்ளிப் படிப்பு அல்ல. 14-ஆம் பிறந்த நாள் அன்று அம்மா அவளைத் தனியாக விட்டுவிட்டு போய்விடுகிறாள். இப்போது மைக்ராஃப்ட்தான் எனோலாவின் பாதுகாவலர் (guardian). பெண்கள் இரண்டாம் நிலை குடிமகன்(ள்)களாகக் கருதப்பட்ட காலம். எனோலாவை சம்பிரதாயமான பள்ளி, திருமணம் என்ற பாதையில்தான் மைக்ராஃப்டும் ஷெர்லாக்கும் திட்டமிடுகிறார்கள், ஆனால் எனோலாவுக்கு தன் சுதந்திரத்தை இழக்க கொஞ்சமும் விருப்பமில்லை. அம்மாவும் அவள் சுதந்திரமாக இருக்க விரும்பினால் உதவும் என்ற என்று நிறைய பணம் அவளுக்காக எற்பாடு செய்திருக்கிறாள். எனோலா லண்டனுக்கு தப்பி ஓடிவிடுகிறாள். மைக்ராஃப்டும் ஷெர்லாக்கும் அம்மாவையும் தங்கையையும் தேடுகிறார்கள். ஆணாதிக்க உலகம், பெண்களைப் பற்றி இருவருக்கும் நல்ல புரிதல் இல்லை. மீண்டும் மீண்டும் எனோலா ஷெர்லாக்கே தவற விடும் துப்புகளை கண்டுபிடிக்கிறாள். அவர்களிடமிருந்து தப்பிக் கொண்டே இருக்கிறாள். ஷெர்லாக்கும் எனோலாவும் தொடரில் சந்திக்கும் பல இடங்கள் புன்னைக்கை வைக்கின்றன.

படிக்கக் கூடிய பொழுதுபோக்கு நாவல்கள். திரைப்படங்களும் எனக்கு சுவாரசியமாக இருந்தன. புத்தகங்களைத் தேடிப் பிடித்து படித்தேன். நான் பதின்ம வயதிலிருந்து வளரவே இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது…

புத்தகங்களைப் பற்றி சிறு குறிப்புகள் கீழே…


முதல் நாவலில் – Enola Holmes and the case of the Missing Marquess (2006) – அம்மாவுடன் பிணக்கு இருப்பதால் பல வருஷங்களாக மைக்ராஃப்டும் ஷெர்லக்கும் எனோலாவைப் பார்த்ததே இல்லை. எனோலாவை வழக்கமாக பெண்கள் படிக்கும் பள்ளிக்கு அனுப்ப மைக்ராஃப்ட் முயல எனோலா வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். ஷெர்லக் மட்டுமே அவளிடம் கொஞ்சம் பாசம் வைத்திருக்கிறார், அவளை விடாமல் தேடுகிறார். எனோலா தற்செயலாக பிரபு வம்ச வாரிசு ட்யூக்ஸ்பரி கடத்தப்பட்டிருக்கும் வழக்கில் ஈடுபடுகிறாள், அவனைக் காப்பாற்றுகிறாள். லண்டனின் ஏழை மக்களின் வாழ்வு அவளை மிகவும் பாதிக்கிறது. சகோதரர்களுக்குத் தெரியாமல் லண்டனில் வாழ்கிறாள், இரவில் தன்னால் முடிந்த அளவுக்கு ஏழைகளுக்கு உணவளிக்கிறாள்.

அடுத்த நாவலான Case of the Left Handed Lady-இல்(2007) கதைப்பின்னல், மர்மம் எல்லாம் சுமார்தான். ஆனால் எனோலாவைத் தேடும் ஷெர்லக், ஷெர்லக்கிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருக்கும் இனோலா என்ற சட்டகம்தான் கதையை சுவாரசியப்படுத்துகிறது. இந்த நாவலில் எனோலா காணாமல் போனவர்களைத் தேடுவதையே தன் “தொழிலாக” மேற்கொள்கிறாள். மெஸ்மரிசம் மூலம் ஒரு இளம் பெண்ணை – சிசலி – தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு வில்லனை முறியடிக்கிறாள்.

Case of the Bizaree Bouquets-இல் (2008) டாக்டர் வாட்சனை பைத்தியம் என்று ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வில்லன் அடைத்துவிடுகிறான். வாட்சனைக் காணவில்லை என்று ஷெர்லக் தேடுகிறார். எனோலாவும். எனோலாவால் வாட்சனின் மனைவிக்கு வரும் பூங்கொத்துகளில் உள்ள செய்தி புரிகிறது. அதைப் பிடித்துக் கொண்டு வாட்சனின் நிலையை கண்டுபிடிக்கிறாள். ஆனால் வாட்சனை விடுவிக்க அவளால் முடியாது. இதே நேரத்தில் மைக்ராஃப்ட் எனோலாவும் அவள் அம்மாவும் பத்திரிகை விளம்ப்ரங்கள் (personals) மூலம் அவ்வப்போது தொடர்பு கொள்வதைப் புரிந்து கொண்டு எனோலாவைப் பிடிக்க அம்மா மாதிரி விளம்பரம் கொடுக்கிறார். எனோலா மைக்ராஃப்டின் தந்திரத்தைப் புரிந்து கொண்டு இந்தப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சந்திக்கலாம் என்று பதில் விளம்பரம் கொடுக்கிறாள். வாட்சன் விடுதலை!

Case of the Peculiar Pink Fan-இல் (2008) மீண்டும் சிசலி. சிசலிக்கு கட்டாயத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சிசலி சம்மதிக்காததால் அவளை சிறை வைத்திருக்கிறார்கள். தற்செயலாக இதில் தலையிடும் எனோலா; சிசலியை விடுவிக்க ஷெர்லக்கின் உதவியை சிசலியின் அம்மா கேட்டிருக்கிறாள். எனோலா எப்படி வில்லன்களை முறியடிக்கிறாள் என்பது சுவாரசியமாக இருக்கிறது.

Case of the Cryptic Crinoline-இல் (2009) ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்! நைட்டிங்கேலின் பழைய கடிதம் ஒன்று இன்று சர்ச்சையைக் கிளப்பக் கூடும். அந்தக் கடிதம் தன்னிடம்தான் இருக்கிறது என்பதே தெரியாத திருமதி டப்பர்; அவர் வீட்டில்தான் எனோலா வாடகைக்கு குடியிருக்கிறாள். கடிதத்தைத் தேடும் வில்லன்கள் டப்பரை கடத்துகிறார்கள். எப்படி எனோலா டப்பரைக் காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை.

Case of the Gypsy Goodbye-இல் (2010) ஒரு பிரபு குடும்பத்துப் பெண் கடத்தப்படுகிறாள். எனோலா, ஷெர்லக், மைக்ராஃப்ட் மூவரும் அவளை கண்டுபிடிக்கிறார்கள். இதற்கிடையில் இவர்களின் அம்மாவின் இறப்புச் செய்தி கிடைக்கிறது. அண்ணன்மார் இருவரும் எனோலாவின் தனித்தன்மையை ஒரு வழியாக உணர்கிறார்கள்.

Case of the Black Barouche-இல் (2021) ஷெர்லக்கும் எனோலாவும் சேர்ந்து தன் மனைவியை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சிறை வைத்திருக்கும் வில்லனை முறியடிக்கிறார்கள்.

Case of the Elegant Escapade-இல் (2022) மீண்டும் சிசலி. சிசலியையும் அவள் அம்மாவையும் கொடுமைக்கார அப்பா சிறை வைக்கிறான். எனோலா அவளை மீட்கிறாள். ஷெர்லக் சில மனத்தடைகள் இருந்த போதும் உதவி செய்கிறார். கடைசி காட்சியில் எனக்கு ஒரு கேஸில் உதவி செய் என்று எனோலாவைக் கேட்கிறார்!

மீண்டும் சொல்கிறேன், இவை பத்து பனிரண்டு வயது சிறுவர்களை குறி வைத்து எழுதப்பட்ட புத்தகங்கள்தான். ஷெர்லக் ஹோம்சுக்கு பெண்கள் உலகம், உணர்வுகள், பழக்க வழக்கங்கள் பற்றி இருக்கும் blind spot, லண்டனைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஷெர்லக்கிடம் தப்பி லண்டனிலேயே வாழும் எனோலா என்ற சட்டகம் (framework) அந்தக் கால பெண்கள் நிலை பற்றி தெரியும் கீற்றுச் சித்திரம் ஆகியவற்றால் நான் ரசித்தேன். திரைப்படங்களும் எனக்குப் பிடித்திருந்தன…

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் கதைகள்

ஷோபா சக்தி: எம்ஜிஆர் கொலை வழக்கு

ஷோபா சக்தியை நான் அதிகமாகப் படித்ததில்லை. ஆனால் தமிழ்நாட்டில் வாழ்ந்தால் நிச்சயம் நிறைய வாங்கிக் குவித்திருப்பேன், படித்திருப்பேன். அது என்னவோ மின்பிரதிகளை வாங்குவதிலும் படிப்பதிலும் ஒரு விசித்திர மனத்தடை. காகிதமாக வாங்கி வீட்டில் குப்பையாக குவிந்து கிடந்தால்தான் திருப்தியாக இருக்கிறது. நல்ல வேளையாக இந்தப் புத்தகம் நூலகத்தில் கிடைத்தது…

ஷோபா சக்தியின் பெரும் பலம் அவதானிப்பு. அவரால் சிறு விவரிப்புகள் மூலம் ஒரு காட்சியை கண் முன்னால் கொண்டு வர முடிகிறது. சம்பிரதாயமான கதை – ஆரம்பம், சிக்கல், கடைசி சில வரிகளில் திருப்பம் – என்பது பல சமய்ம் இல்லை. உச்சம் என்று அவர் கொண்டு வருவது உக்கிரமான காட்சியாக இருக்கிறது. அவரது கதைகளை ஓரிரு வரிகளில் சுருக்குவது கஷ்டமாக இருக்கிறது. இந்தத் தொகுப்பிலும் சில சிறுகதைகளை விவரிக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்…

அவரது பல சிறுகதைகளில் மெல்லிய (subtle) ஆன black humor வெளிப்படுகிறது. அசோகமித்திரன் அளவுக்கு இல்லைதான், ஆனால் அந்தப் பாணி. கூர்மையான அவதானிப்புகளால், அபத்த நிகழ்ச்சிகளால் வெளிப்படும் நகைச்சுவை.

அவரது பின்புலம் – ஈழ விடுதலைப் போராளி, பாரிசில் அகதி – அவரது கதைகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. இதுவும் அவருக்கு ஒரு பெரிய பலம்.

எம்ஜிஆர் கொலை வழக்கு என்று பார்த்ததும முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் என்றுதான் முதலில் நினைத்தேன். எம்ஜிஆர் – அதாவது எம்ஜிஆரின் ரசிகர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் கதையை விவரிப்பது கஷ்டம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பில் எனக்குப் பிடித்த சிறுகதை திரு. முடுலிங்க. ஏறக்குறைய கதையின் இறுதியில்தான் முடுலிங்க என்றால் அ. முத்துலிங்கம் என்றும் சிறுகதையில் வரும் ஊரான கொக்கோ வில்லி உண்மையில் கொக்குவில் என்றும் புரிந்தது. புரிந்த கணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முத்துலிங்கத்தின் கதாபாத்திரம் ஒருவர் கண்ணில் முத்துலிங்கம் எப்படித் தெரிவார்? அதை அருமையாக எழுதி இருக்கிறார். கதையின் பாணியும் எனக்கு முத்துலிங்கமே எழுதுவது போலத்தான் இருந்தது. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

வெள்ளிக்கிழமை சிறந்த சிறுகதை. பாரிஸின் மெட்ரோ நிலையம் ஒன்றின் அருகில் 50-55 வயதானவர் ஒருவர் வெள்ளிக்கிழமை மாலையில் பிச்சை எடுக்கிறார். அதில் கிடைத்த பணத்தை வைத்து ஒரு குத்துவிளக்கு வாங்குகிறார். மெட்ரோ நிலையத்தில் அதை ஏற்றுகிறார், சீர்காழியின் பாட்டு ஒன்றை டேப் ரெகார்டரில் போடுகிறார். அப்புறம்?

விலங்குப் பண்ணை கூர்மையான அவதானிப்புகள் உள்ள கதை. ஏழைச் சிறுவன். சாப்பாட்டுக்கு கஷ்டம். பள்ளி வேளையில் அனேகமாக பசியோடுதான் இருப்பான். ஆனால் கெத்துக்காக தன் வசதியானவன் என்று பொய் சொல்லுக் கொள்வான். இன்னொரு ஏழைச் சிறுவனை, பசிக்கிறது என்று உண்மையைச் சொல்பவனோடு நட்பு ஏற்படுகிறது. பசியின் விவரிப்பு இந்தக் கதையை என் கண்ணில் உயர்த்துகிறது.

தமிழ் என்ன சொல்ல வருகிறார் என்று யோசிக்க வைத்த சிறுகதை. நாயகன் தான் பல நாடுகளில் பார்த்த வேசிகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகிறார். தமிழில் ஆணுறைகளைப் பற்றிய ஒரு சுவர் அறிவிப்பைப் பார்த்ததும் அப்படிப்பட்ட சுவர் அறிவிப்புகளைப் பற்றி எழுதிய அப்பாவின் நினைவு வருகிறது. வாழ்க்கை என்னதான் மாறினாலும் சிறு வயது நினைவுகள் அழியாது என்கிறாரா? (சில மாதங்களுக்கு முன் செந்தமிழ் நாடென்னும் போதினிலே பாட்டைக் கேட்கும்போது கண்ணீர் பெருகியது!) அப்பாவின் நினைவால் குற்ற உணர்வா? புலிகள் வேசிகளுக்கு மரண தண்டனை அளித்த நினைவுகளால் ஏற்பட்ட அச்சமா? எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்…

ரம்ழான் சிறுகதை ஒரு கற்பனைத் திரைப்படத்தை விவரிக்கிறது. நல்ல திரைக்கதையாக வரக் கூடியது. Crossfire சிறுகதை புலிகள் என்று உண்மையாகவோ பொய்யாகவோ குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருக்கும் சிறை, “முறையீடு” செய்யும் தமிழ்க்கார மந்திரி என்று சில நல்ல் அவதானிப்புகளை உடையது. F இயககம், குண்டு டயானா சிறுகதைகளில் மெல்லிய black humor நன்றாக வெளிப்படுகிறது. உதாரணமாக ஒவ்வொரு இயக்கத்துக்கும் A இயககம், B இயககம் என்று பேர் வைத்துக் கொண்டே போனால் மிஞ்சுவது F என்ற எழுத்துதான். பரபாஸ் சிறுகதையை விவரிப்பது கஷ்டம். கடைசி சில வரிகளில் அதன் தளமே மாறிவிடுகிறது. அனாயாசமாக நாலு வரியில் ஒரு மாயத்தன்மையைக் கொண்டு வந்துவிடுகிறார். திடீரென்று ஏன் இந்தக் கிராமம் அழிந்துவிட்டது, யார் இத்தனை நாள் திருடினார்கள், தண்டிக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தானா என்று கேள்விகள் எழுகின்றன…

சில கதைகள் இணையத்தில் கிடைக்கின்றன. யானைக்கதையின் கறுப்பு நகைச்சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கருங்குயில் நல்ல சிறுகதை. பாப்லோ நெருடா தன் சுயசரிதையில் இலங்கையில் ஒரு பறைய ஜாதிப் பெண்ணுடன் வலிந்து உறவு கொண்டதாக எழுதி இருக்கிறார், அதைத்தான் இவரும் சிறுகதையாக எழுதி இருக்கிறார். One Way, கண்டிவீரன் ஆகியவை எனக்குப் பிடித்த சிறுகதைகள். வர்ணகலா என் கண்ணில் சுமார்தான்.

ஈழ எழுத்தாளர்கள் என்று குறுகிய அடையாளம் எல்லாம் ஷோபா சக்திக்குப் போதாது. வசதிக்காக அப்படி குறுக்கினால், அவரை முத்துலிங்கத்துக்கு அடுத்த இடத்தில் வைப்பேன். என்னைப் பொறுத்த வரை அவர் முக்கியத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அவ்வளவுதான்.

இந்தத் தொகுப்பைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஷோபா சக்தி பக்கம்

தொடர்புடைய சுட்டி: தமிழ் விக்கி பக்கம்

எழுத்தாளர் சோ ராமசாமி

ChoRamaswamyசோ ராமசாமியின் முக்கியமான படைப்பு துக்ளக்தான். மிச்ச எல்லாம் அடுத்தபடிதான்.

இருந்த போதிலும் தமிழைப் பொறுத்த வரை அவர் ஒரு முக்கியமான நாடக எழுத்தாளர். அவரைத் தவிர வேறு யாரும் நையாண்டி, அதுவும் அரசியல் நையாண்டி (satire) சடையர் முயற்சி செய்ததாக தெரியவில்லை. அவரது அரசியல் நையாண்டி நாடகங்களும் நாவல்களும் – குறிப்பாக முகமது பின் துக்ளக் இன்னும் பொது நினைவில் இருக்கிறது.

எனக்குத் தெரிந்த வரையில் என்னைத் தவிர வேறு யாரும் சோவை எழுத்தாளராக, நாடக ஆசிரியராகப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் என் கண்ணில் அவர் கிரேக்க நாடக எழுத்தாளர் அரிஸ்டோஃப்னஸோடு ஒப்பிடக் கூடியவர். அரிஸ்டோஃபனஸும் சோவைப் போலவே அரசியல் நையாண்டியோடு சமூகப் பிரச்சினைகளை கலந்து கட்டி அடிப்பார்.

சோவுக்கு ஒரு எளிய சூத்திரம் உண்டு. ஒரு பிரச்சினையை எடுத்துக் கொள்வார். (விபசாரம், ஜாதி, நம் சட்ட அமைப்பில் நீதி கிடைப்பதில் உள்ள கஷ்டங்கள் மாதிரி) அதை விளக்குவது போல நாடகம் இருக்கும். அதில் யாராவது ஒருவர் நக்கல் அடித்துக் கொண்டே இருப்பார், கொஞ்சம் அசட்டுத்தனமான நகைச்சுவையாகத்தான் இருக்கும், அது கொஞ்சம் துருத்திக் கொண்டு தெரியும். சோ நடிக்க ஒரு பாத்திரம் வேண்டாமா? அன்றைய அரசியல் பிரச்சினைகளைப் பற்றி நிறைய அடிவெட்டு கமெண்ட் இருக்கும். அவ்வளவுதான், நாடகம் தயார்!

எனக்கு அசட்டுத்தனமான நகைச்சுவையாகத் தெரிவது அன்று சபா வட்டாரங்களில் தேவையாக இருந்திருக்கிறது. அந்தப் பாத்திரம்தான் நாடகம் சென்னை வட்டாரங்களில் வெற்றி அடைய முக்கியக் காரணம் என்று தோன்றுகிறது.

முகமது பின் துக்ளக் இந்த எளிய சூத்திரத்தை இன்னும் மேம்படுத்துகிறது. நக்கல் அடிக்கும் பாத்திரத்தை நாயகனாக்கிவிட்டார்! அதனால் நையாண்டியும் அடிவெட்டு கமெண்டுகளும்தான் துருத்திக் கொண்டு தனியாகத் தெரிவதில்லை, அவைதான் நாடகமே. விடுதலைப் போராட்டத்தின் லட்சியவாதம் மங்கி, சுயநலமும் தேர்தல் அரசியலும், வெட்டி சவால்களும் அதிகரித்திருக்கும் அரசியலை தன் களமாக எடுத்துக் கொள்கிறார்.

அன்றைய போராட்டங்களுக்கு அவர் சொல்லும் தீர்வுகள் அபாரம். ஹிந்தி மொத்த இந்தியாவிற்கும் பொது மொழியானால் அது தென்னிந்தியர்களுக்கு அநீதி, ஆங்கிலம் பொது மொழியானால் வட இந்தியர்களுக்குப் பிரச்சினை, சரி இருவருக்கும் வேண்டாம் பாரசீகமே இந்தியாவின் பொது மொழி! வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு தீர்வு வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்ப்போம் என்று பேசிக் கொண்டே இருப்பது. மந்திரி பதவிக்காக கட்சி தாவுகிறீர்களா, கட்சி தாவும் எல்லாரும் உதவி பிரதம மந்திரி!

சிறந்த அரசியல் நையாண்டி நாடகம். ராஜாஜியைக் கூட விட்டுவைக்கவில்லை. ராஜாஜி போன்ற ஒருவர், கருணாநிதியை நினைவுபடுத்தும் ஒருவர், கம்யூனிஸ்டுகளின் பிரதிநிதியாக ஒருவர், இந்திரா காந்தியை நினைவுபடுத்தும் ஒருவர். எல்லாரையும் வாரு வாரு என்று வாருகிறார். ராஜாஜி “உங்களுக்கெல்லாம் எது நல்லது என்று உங்களுக்குத் தெரியாது, எனக்குத்தான் தெரியும்” என்கிறார். அன்றைய தி.மு.க. பேச்சாளர்கள் பாணியில் உதார் விடும் மேடைப் பேச்சு! தோழர்கள் ரஷ்யாவைப் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அதே நேரத்தில் சோ நாடகங்களின் பிரச்சினையும் தெளிவாகத் தெரியும். நாடகத்தின் சமகாலத்தனம் (contemporariness). நாடகம் வந்த காலத்தில்  அவர் எண்ணி இருந்த உள்குத்து எல்லாம் பார்ப்பவர்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும். என்னால் ராஜாஜியையும் கருணாநிதியையும் அடையாளம் காண முடிகிறது. ஆனால் தோழர்களின் பிரதிநிதி யார் என்று தெரியவில்லை. அடுத்த தலைமுறைக்கு கருணாநிதி மட்டும்தான் அடையாளம் தெரியும், ராஜாஜி கூட தெரியப் போவதில்லை. அரிஸ்டோஃபன்சுக்கும் இதே பிரச்சினை உண்டு. அவர் நாடகங்களில் க்ளியான் என்ற கிரேக்க அரசியல்வாதி சகட்டுமேனிக்கு கிண்டல் செய்யப்படுவார். நமக்கோ க்ளியான் என்று ஒருவர் இருந்தார் என்பதே இந்த நாடகங்களின் மூலம்தான் தெரியும். முக்கால்வாசி கிண்டல் புரியப் போவதில்லை…

சோவே கதாநாயகனாக நடித்து இயக்கிய திரைப்படம். நல்ல திரைப்படமும் கூட.

சோ நிறைய நாடகங்களை எழுதி இருக்கிறார். முகமது பின் துக்ளக் தவிர  உண்மையே உன் விலை என்ன, சாத்திரம் சொன்னதில்லை, யாருக்கும் வெட்கமில்லை ஆகியவற்றை முக்கியத் தமிழ் நாடகங்கள் வரிசையில் வைப்பேன். இவை சிந்தனையை தூண்டும் நாடகங்கள். பெர்னார்ட் ஷாவுக்கும் சோவுக்கும் ரொம்ப தூரம்தான், ஆனால் இவை ஷா பாணியில் எழுதப்பட்டவை.

சாத்திரம் சொன்னதில்லை நாடகத்தைத்தான் அவரது சிறந்த நாடகமாகக் கருதுகிறேன். விரிவாக இங்கே.

உண்மையே உன் விலை என்ன நல்ல நாடகம். பெண்ணைக் கற்பழிக்க முயலும் பணக்கார வாலிபன், அவளைக் காப்பாற்ற வாலிபனைத் தாக்கும் டாக்சி ஓட்டுனர். வாலிபன் இறந்துவிடுகிறான். ஓட்டுனர் கிறிஸ்துவர். பாவமன்னிப்பு கேட்டுவிட்டு சரணடையப் போகிறான். பாதிரியார் நீ செய்தது தவறில்லை, நீ சரணடைய வேண்டாம் என்கிறார். அவன ஒளித்து வைக்கிறார். வாலிபனின் அப்பா தன் பையனைக் கொன்றவனை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று துடிக்கிறார். உண்மைகள் நீதிமன்றத்தில் வெளிவந்தால் வாலிபனுக்கு நிச்சயமாக விடுதலை கிடைத்துவிடும். பணத்தை வைத்து பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவள் குடும்பத்தையும் வில்லன் விலைக்கு வாங்குகிறார். பதவியை வைத்து வக்கீலையும், அவரிடத்தில் இருக்கும் சாட்சிகளையும். உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு ஓட்டுனருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் நண்பரை. நீதிமன்றங்களில் உண்மையை நிலைநிறுத்த என்ன விலை கொடுக்க வேண்டி இருக்கிறது, பணம், செல்வாக்கு எத்தனை தூரம் போகும் என்பதை சிறப்பாக எழுதி இருக்கிறார். முத்துராமன், அசோகன், ஸ்ரீகாந்த், விஜயகுமார் என்று பலரும் நடித்து சோ இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்தது, நல்ல திரைப்படமும் கூட.

யாருக்கும் வெட்கமில்லை அவரது இன்னொரு நல்ல நாடகம். இந்த முறை விபச்சாரத்தை பிரச்சினையாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஏன் விபச்சாரம் நடக்கிறது, பெண்களை எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று அலசுகிறார். அவரது இயக்கத்தில் ஜெயலலிதா, சிவகுமார், ஸ்ரீகாந்த் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

அவரது பிற முயற்சிகளில் சர்க்கார் புகுந்த வீடு நாவல் சிறந்த அரசியல் நையாண்டிகளில் ஒன்று. எம்ஜிஆர்-கருணாநிதி அரசியல், அன்றைய முக்கியஸ்தர்கள் ம.பொ.சி., அன்று இதயம் பேசுகிறது என்ற பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்த மணியன், அன்றைய உழவர் போராட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்திய நாராயணசாமி நாயுடு, மக்கள் குரல் என்ற பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்த டி.ஆர்.ஆர். என்று பலரையும் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் வகையில் தாக்குகிறார். ம.பொ.சி.யும் மணியனும், டி.ஆர்.ஆரும் எம்ஜிஆரை முகஸ்துதி செய்யும் காட்சி ஒன்று இன்றும் நினைவிருக்கிறது. எம்ஜிஆருக்கு போடப்படும் மாலை அவரை லேசாக குத்திவிடும், அவர் வாய்க்குள் ஏதோ முனகுவார். உடனே ம.பொ.சி. இப்போது எம்ஜிஆர் தன்னிச்சையாக அம்மா என்று முனகினாரா இல்லை அண்ணா என்று முனகினாரா என்று மணியனையும் டி.ஆர்.ஆரையும் கேட்பார். அம்மா என்று பதில் சொன்னால் அப்படி என்றால் எம்ஜிஆருக்கு அண்ணா இரண்டாம் பட்சமா என்று கேள்வி வரும். அண்ணா என்றால் அம்மா இரண்டாம் பட்சமா என்று கேள்வி வரும். இப்படி மாட்டிவிட்டாரே என்று இருவரும் திருதிருவென்று முழிப்பார்கள். கடைசியில் வந்தது வரட்டும் என்று மணியன் அண்ணா என்று பதில் சொல்லிவிடுவார். அதற்கு ம.பொ.சி. அதுதான் சரி, ஏனென்றால் அன்னை சத்யா எம்ஜிஆருக்கு மட்டும்தான் அன்னை, ஆனால் அண்ணாதுரையோ தமிழர்களுக்கெல்லாம் அன்னை என்று முடித்துவிடுவார். அன்றைய ஜால்ராத்தனத்தை அருமையாக சித்தரித்திருப்பார்!

கந்தசாமி, ரகுநாத ஐயர் உட்பட்ட ஐந்து குடும்பங்களின் வரவு செலவை அரசே ஏற்று நடத்தும். எம்ஜிஆருக்கு ஏதோ கோபம் வந்து பால், மளிகை எந்தக் கணக்கையும் தீர்க்க பணம் தரவே மாட்டார்கள். இவர்கள் இருவரும் நாராயணசாமி நாயுடுவிடம் சென்று கடன் தொல்லைக்கு என்ன செய்யலாம் என்று கேட்பார்கள். நாயுடு பொதுவாக வாங்கின கடனைத் திருப்பித் தரக் கூடாது என்பதுதான் நம்ம கொள்கை என்பார். இந்த வரிக்கு நீங்கள் சிரித்தீர்கள் என்றால் நீங்கள் எண்பதுகளில் பத்திரிகை படித்தவர் என்று அர்த்தம்!

மேலும் விரிவாக இங்கே

கூவம் நதிக் கரையினிலே மூன்று பகுதியாக வந்திருக்கிறது. சர்க்கார் புகுந்த வீடு நாவலின் தொடர்ச்சி.
முதல் பகுதியில் ரகுநாத ஐயர் அரசியலில் நுழைகிறார். அவருக்கு ஜக்கு என்ற பேட்டை ரவுடிதான் எல்லாம். வழக்கம் போல கலைஞர், எம்ஜிஆர், இந்திரா, ராஜீவ், என்று எல்லாரையும் சகட்டு மேனிக்கு கிண்டல் அடிக்கிறார். கதை என்றெல்லாம் யோசிக்கவே கூடாது. இதை எல்லாம் அனுபவிக்கனும், ஆராய்ச்சி செய்யக் கூடாது! இரண்டாம் பகுதியில் ஐயர் முதல்வராகிறார். அவருக்கு ஊழல் செய்வது எப்படி, சும்மா பேசி பேசியே காலத்தை ஓட்டுவது எப்படி என்று கற்றுத் தரப்படுகிறது. மூன்றாம் பகுதியில் எல்லாரும் இறந்து போய் எமலோகம் போகிறார்கள். அங்கேயும் கிங்கரர்களை வைத்து அரசியல்!

அவர் எழுதிய மகாபாரதம் பாரதத்துக்கு நல்ல அறிமுகம். எனக்கு அன்றும் இன்றும் என்றும் ராஜாஜியின் வியாசர் விருந்துதான் முதல் இடத்தில் இருக்கிறது என்றாலும் இதுவும் படிக்கக் கூடிய நல்ல அறிமுகம்தான். அவரது முக்கியப் பங்களிப்புகளில் ஒன்று எனக் கருதுகிறேன்.

எங்கே பிராமணன் ஓரளவு புகழ் பெற்ற நாவல். வர்ணாசிரம தர்மம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல என்று வலிமையான வாதங்களை முன்வைக்கிறார். படித்த காலத்தில் பிராமண ஜாதியில் பிறந்தவர்கள் பிராமணர்கள் இல்லை என்ற கருத்து புரட்சிகரமாக இருந்தது. (எனக்கு பதின்ம வயதிலேயே அந்த எண்ணம்தான், நாம் நினைப்பது போலவே இவரும் எழுதி இருக்கிறாரே என்று கொஞ்சம் நல்லெண்ணம்…)

துக்ளக் படம் எடுக்கிறார் என்றும் ஒரு புத்தகம் உண்டு. எழுபதுகளின் இறுதியில் “எட்டு வயதுப் பையன் நாலாங்கிளாஸ் பரீட்சை எழுதுகிறான்” என்ற கதையை ஜெகன்மோகினி புகழ் விட்டலாச்சார்யா, எம்ஜிஆரை மறைமுகமாகத் தாக்கி கருணாநிதி கதை வசனம் எழுதிய படங்கள் (நாயகன் ஜெய்ஷங்கர்), சாமி படமாக எடுத்துத் தள்ளிய கே.எஸ். கோபாலகிருஷ்ணன், சிவாஜி படங்களை இயக்கிக் கொண்டிருந்த கே. விஜயன், பாலசந்தர், கிராமப் படமாக எடுத்துக் கொண்டிருந்த பாரதிராஜா, சோ,  கலைப்பட இயக்குநர் ஒருவர் எல்லாரும் அவரவர் பாணியில் திரைக்கதையாக மாற்றுகிறார்கள். இது என் தலைமுறைக்கும் முந்தைய தலைமுறையினர் மிகவும் அனுபவித்து ரசித்த ஒன்று. நானும்தான். இன்றைய இளைஞர்களும் கூட ரசிக்கலாம். எழுதியது சோவேதானா இல்லை துக்ளக் டீமா என்று சரியாகத் தெரியவில்லை.

அவரது சில படைப்புகளைப் பற்றி சிறு குறிப்புகள் கீழே:

மெட்ராஸ் பை நைட் என்ற நாடகத்தை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். சென்னையின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம். பார்த்தபோது பிடித்திருந்தது.

ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்ட்: ஒரு கற்பழிப்பு வழக்கு; வழக்கு தொடுப்பதில் குறியாக இருப்பவர்கள் ஒரு சமூக சேவகி, ஒரு சினிமா இயக்குனர், ஒரு பத்திரிகை ஆசிரியர், மற்றும் ஒரு கல்லூரி பேராசிரியர். குற்றம் சாட்டப்பட்டவனுக்காக ஆஜராகும் வக்கீல் இவர்களது உண்மையான நோக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் (சமூக சேவகி இந்த வழக்கை நடத்தினால் தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று நினைக்கிறாள். இயக்குனருக்கு இந்த நிகழ்ச்சியை கதையாக வைத்து, சம்பந்தப்பட்ட பெண்ணையே நாயகியாகப் போட்டு படம் எடுத்தால் காசு பார்க்கலாம் என்ற எண்ணம்; பத்திரிகை ஆசிரியருக்கு அந்த கதையை எழுத ஆசை; பேராசிரியருக்கு அந்தப் பெண் மேல் ஒரு கண், ஆனால் அதை வெளியே சொல்லாமல் அந்த ஆண் மேல் ஆசை மாதிரி நடி என்று சொல்லி இருக்கிறார்.) கடைசியில் வக்கீலுக்கு ஒரு குழப்பம் (dilemma); பல காரணங்கள் இருந்தாலும் குற்றம் செய்ததற்கு பொறுப்பு அவன்தானே? இல்லை சமூகம்தான் காரணமா? நல்ல கேள்வி, பதில் இல்லாமல் விட்டுவிடுகிறார்.

நல்ல கருத்துள்ள நாடகம், ஆனால் சிறப்பாக வரவில்லை.

சம்பவாமி யுகே யுகே: லஞ்சம் தலை விரித்தாடுவதால் பகவான் நாராயணன் சம்பவாமி யுகே யுகே என்று சொன்ன மாதிரி மீண்டும் பிறந்து வருகிறார். ஆனால் அவரைப் பைத்தியம் என்று சொல்லி உள்ளே தள்ளி விடுகிறார்கள். நன்றாக வரவில்லை.

சட்டம் தலை குனியட்டும் நாடகத்தில் பணக்காரர்களால் சட்டம் வளைக்கப்படுவதைப் பற்றி எழுதுகிறார். சுமாராக இருக்கிறது.

வாஷிங்டனில் நல்லதம்பி: அரசியல்வாதி நல்லதம்பி (கருணாநிதிதான்) அமெரிக்கா சென்று போராட்டங்கள் நடத்தி ஜனாதிபதி ஆகி நயாகராவில் படகு விடும் திட்டம், அடுக்குமாடி இடிப்பு திட்டம் எல்லாவற்றையும் கொண்டுவருகிறார். படிக்கலாம்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் நாடகத்தில் எமலோகத்தில் கிங்கரர்களை வைத்து அரசியல் செய்து அங்கும் ஒரு தி.மு.க. போன்ற அரசியல்வாதி குழப்பம் செய்கிறார். படிக்கலாம்.

எங்கே போகிறாய்: சோழர் காலத்தவர் ஒரு தீவில் பல நூறு வருஷங்களுக்கு முன் செட்டில் ஆகி அங்கே அன்றைய தமிழ் கலாச்சாரத்தோடு வாழ்கிறார்கள். கப்பல் கவிழ்ந்து ஒரு எம்.எல்.ஏ., இரண்டு இளைஞர்கள், ஒரு குப்பத்து ஆள் அங்கே போய் சேர்கிறார்கள். அப்புறம் வழக்கமான வசனங்கள். தவிர்க்கலாம்.

எஸ்.வி. சேகர் ஸ்டைலிலும் கதையே இல்லாமலும் சிரிப்பே வராமலும் சில நகைச்சுவைக் கதைகளை எழுதி இருக்கிறார். கல்கியில் தொடராக வந்த ஒரு யாரோ இவர் யாரோ (1967) உதாரணம்.

அவரது பிற நாடகங்களில் நான் சின்ன வயதில் பார்த்தவை நேர்மை உறங்கும் நேரம். அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லிக் கொண்டே அதை சுத்தம் செய்யத் தேவையான உழைப்பைத் தர மறுக்கும் “அறிவுஜீவிகளைத்” தாக்குவார். வந்தேமாதரம் A Tale of Two Cities நாவலின் உல்டா. மனம் ஒரு குரங்கு Pygmalion நாடகத்தின் உல்டா (திரைப்படமாகவும் வந்தது).

என் கண்ணில் அவரது முக்கியப் பங்களிப்பு இதழியலாளராகத்தான். ஆனால் என்னைத் தவிர வேறு யாருக்கும் அவர் எழுத்தாளராகத் தெரிவதே இல்லை, அவரது இதழியல் பங்களிப்பு இந்த முகத்தை மொத்தமாக அமுக்கிவிட்டது என்பதுதான் சோகம். எழுத்தாளராக அவரது முக்கியப் பங்களிப்பு சில நாடகங்களிலும் அரசியல் நையாண்டிப் படைப்புகளிலும்தான் இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

சக்கரவர்த்தித் திருமகன்

சக்கரவத்தித் திருமகன் இன்று ராமாயணம் என்ற பேரிலேயே பதிக்கப்படுகிறது. ஆனால் என்னை சக்கரவத்தித் திருமகன் என்ற பெயர்தான் கவர்கிறது. கல்கியில் இந்தப் பேரில்தான் ராஜாஜி தொடராக எழுதினார். பிறகு 1956-இல் பாரி நிலையம் இதே பேரில் மலிவு விலையில் (4 ரூபாய் விலை) வெளியிட்டது. வானதி பதிப்பகமும் பின் இதே பேரில் வெளியிட்டது என்று நினைவு. வானதி திருநாவுக்கரசிடம் எனக்கு ராயல்டி எல்லாம் முக்கியமில்லை, ஆனால் எல்லாரிடம் போய்ச் சேர வேண்டும், குறைந்த விலை வைக்கப் பார் என்று சொன்னாராம்.

ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது, பிரபலமாகவும் இருக்கிறது.

(அடிக்குறிப்பு: சக்கரவர்த்தித் திருமகன் என்ற பேர்தான் என்னைக் கவர்கிறது என்று சொல்லி இருந்தேன். எம்ஜிஆருக்கும் அதேதான். 1957-இல் ஒரு திரைபப்டத்துக்கு “சக்கரவர்த்தித் திருமகள்” என்று பேர் வைத்தார்!)

ராஜாஜியின் வார்த்தைகளிலேயே:

நாட்டுக்கு நான்‌ பல பணிகள்‌ செய்ததாக நண்பர்கள்‌ போற்றுவதுண்டு. அவற்றில் எல்லாம்‌ வியாசர்‌ விருந்தும்‌ சக்கரவர்த்‌தித் திருமகனும்‌ எழுதி முடித்ததுதான்‌ மேலான பணி என்பது என்‌ கருத்து

ராஜாஜி உன்னத மனிதர்தான், பெரிய தேசபக்தர்தான், பாகிஸ்தானைப் பிரித்துவிடுவது தவிர்க்க முடியாதது, சோஷலிசம் பல மோசமான விளைவுகளைக் கொண்டு வரும் என்றெல்லாம் யூகித்த பெரிய அறிவாளிதான், நல்ல நிர்வாகிதான், ஆனால் என் கருத்தும் இதுவே. வியாசர் விருந்தும், சக்கரவத்தித் திருமகனும்தான் இந்தியாவுக்கு – அதுவும் குறிப்பாக தமிழகத்துக்கு அவர் செய்த அதிமுக்கியப் பணி.

இது என் யூகம்தான்; என்னதான் நண்பர் என்றாலும் ஈ.வெ.ரா.வின் ராமாயணத்தைப் பற்றிய நயமற்ற பேச்சு அவருக்கு கொஞ்சமாவது கடுப்பேற்றி இருக்க வேண்டும். நீ ராமாயணத்தைப் படிக்காதே என்று சொல்கிறாயா, நான் படிக்க வைக்கிறேன் பார் என்றுதான் இந்தத் தொடரை எழுதினார் என்று நினைக்கிறேன். படிக்காதே என்று சொன்னவர், படி என்று சொல்பவர் இருவரில் யார் வெற்றி பெற்றார் என்பது தெளிவு.

சக்கரவத்தித் திருமகனுக்கு 1958-க்கான சாஹித்ய அகடமி விருது கொடுக்கப்பட்டது. சிறந்த புத்தகம்தான், ஆனால் அந்த விருதை ராஜாஜி நிராகரித்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன், விருது வால்மீகிக்குச் சேர வேண்டியது, வால்மீகியோ விருதுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்!

புத்தகத்தின் முதன்மை பலம் எளிமை. ராஜாஜிக்கே எளிமையாக எழுதுவது சரிதானா என்று சந்தேகம் இருந்திருக்கிறது. வால்மீகியையும் கம்பனையும் உரைநடைப்படுத்தினால் கவிதையின் அழகு முற்றிலும் போய்விடும் என்று நினைத்திருக்கிறார். அவரது லட்சிய உலகத்தில் டிகேசி போன்றவர்கள் ஒவ்வொரு பாடலாக எடுத்துக் கொண்டு அதை முதலில் ரசனை மிகுந்த உரைநடையில் விளக்கிவிட்டு பிறகு பாடலாகப் பாட வேண்டும், அதுவே கம்பனையும் வால்மீகியையும் முழுதாக கிரகித்துக் கொள்ளும் வழி. ஆனால் கவி அழகே இல்லாவிட்டாலும் கதாபாத்திரங்களின் சிறப்பையும் கதைப்பின்னலையும் வாசகர்களுக்குப் போய்ச் சேர வைக்க முடியும் என்றும் எண்ணி இருக்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே

சீதை, ராமன்‌, ஹனுமான்‌, பரதன்‌ இவர்களை விட்டால்‌ நமக்கு வேறு என்ன செல்வமோ நிம்மதியோ இருக்கிறது?

புத்த்கத்தின் இரண்டாவது பலம் ராமாயணத்தை பக்தி காவியமாக சித்தரிக்காமல் அதை மனிதர்களின் பிரச்சினைகளாக சித்தரிப்பது. ராஜாஜியே சொல்வது போல

வால்மீகி ராமாயணத்தில் எல்லாப்‌ பாத்திரங்களும்‌ அபூர்வ குணம் கொண்ட மானிடர்கள்‌. தெய்விகத்‌தன்மை இளம்‌ சூரியனைப்‌ போல லேசாக வீசுகிறது, அவ்வளவே. மானிட இயல்பு அதிகம்‌. பின்னால்‌ வந்த துளசிதாஸர்‌ காலத்‌தில்‌ பக்தி ரசம்‌ நடுப்பகல் போல்‌ விளங்குகிறது. வேறு எதற்கும்‌ இடமில்லாமல்‌ பூரண ஒளி பெற்றுவிட்டது. கம்பருடைய சித்திரத்தில்‌ பக்தி பிரதானமாகவே இருந்தாலும்‌ வால்மீகி சித்திரத்தினுடைய மானிட வண்ணம்‌ அழிந்து போகாமல்‌ பக்தியைப்‌ பின்னால்‌ எழில்‌ வீசும்படி வைத்து, மானிட சித்திரத்தை இன்‌னும்‌ பேரழகு படும்படி செய்திருக்கிறார்‌.

ராஜாஜி பெரிதும் வால்மீகியைத்தான் பின்பற்றி இருக்கிறார். அவ்வப்போது கம்பனை சேர்த்துக் கொள்கிறார். அபூர்வமாக துளசிதாசரை. அதனால் அனாவசிய சப்பைக்கட்டுக்கள் இல்லை. உன்னத மனிதர்கள், ஆனால் மனிதர்கள்தான் என்ற தொனி அடிநாதமாக இருக்கிறது. உதாரணமாக ஆரண்ய காண்டத்தில் விராதன் சீதையைப் பிடித்துக் கொள்கிறான். அது வரை கைகேயியைப் பற்றி ஒரு வார்த்தை தவறாகப் பேசாத ராமன், சீதையை அரக்கன் பிடித்துக் கொண்டதும்

ஐயோ லக்ஷ்மணா, பார்த்தாயா? எதையும்‌ பொறுக்கும்‌ என்னால்‌ இதைப்‌ பொறுக்க முடியவில்லையே! இதைத்‌ தெரிந்தே பாவி கைகேயி நம்‌மைக்‌ காட்டுக்கு அனுப்பினாளோ!

என்று அலறுகிறான். அவதார ராமன் அல்லன்! சாதாரணமாகக் காணப்படும் உன்னத மனிதன் ராமனே அல்லன்! சீதை மீதுள்ள அபரிமிதமான காதலால் நிலை தவறிய, தன் பலத்தையே உண்ராத ராமன்! இப்படி மனித உணர்வுகளை விவரித்து எழுதுவதால்தான், முரண்பாடுகள் நிறைந்த மனித இயல்பை மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டுவதால்தான் ராமாயணமே உயர்ந்த காவியமாக இருக்கிறது. அப்படிப்பட்ட முரண்பாடுகளையும், குறைகளையும் பக்தி மூலம் வடிகட்டிவிடாமல் எடுத்துச் சொல்லுவதில்தான் இந்தப் புத்தகத்தின் மகிமையே இருக்கிறது.

ராஜாஜி மனம் உருகி வழிபடும் ராமனே ஆனாலும் தவறு தவறுதான், எந்த விதமான சப்பைக்கட்டுகளும் இல்லை. உதாரணமாக

வாலியின்‌ இந்தக்‌ குற்றச்‌சாட்டுக்கு ராமன்‌ என்ன பதில்‌ சொல்ல முடியும்‌ ? ஏதோ சொன்னதாகவும்‌ அதைக்‌ கேட்டு வாலி சமாதானப்பட்டதாகவும்‌ வால்மீகி ராமாயணத்தில்‌ சொல்லப்படுகிறது. அதில்‌ சாரம்‌ இல்லை என்று விட்டுவிட்டேன்‌. பெரியோர்கள்‌ மன்னிப்பார்கள்‌. ராமாவதாரத்தில்‌ ஆண்டவனும்‌ தேவியும்‌ சகிக்க வேண்டிய துக்கங்களில்‌ இந்தத்‌ தவறும்‌ பழியும்‌ ஒன்று.

மீண்டும் ராஜாஜியின் வார்த்தைகளில்:

ராமனுடைய நற்குணங்களை விட்டுவிடாமல்‌ ராமனிடம்‌ கண்ட குறைகளைத்‌ தாம்‌ அகற்றினால்‌ யார்‌ வேண்‌டாம்‌ என்று கூறுவார்கள்‌?

அங்கங்கே கம்பன் எங்கெல்லாம் வால்மீகியிடமிருந்து வேறுபடுகிறான் என்பதையும் அழகாக விளக்குகிறார். உதாரணமாக சூர்ப்பனகை அறிமுகம். வால்மீகிக்கு அது கதையை முன்னகர்த்தும் ஒரு சம்பவம். அதனால் ராமன் சூர்ப்பனகையிடம் தேவையில்லாமல் கடுமையாக நடந்து கொள்வது போலத் தோன்றுகிறது. ஆசை கொண்டாள், அதைச் சொன்னாள், ராமன் அவளை நீ லக்ஷ்மணனிடம் முயன்று பார் என்று சொல்வதெல்லாம் இன்றைய விழுமியங்களின்படி அனாவசியமாகச் சீண்டுவது போல கூடத் தோன்றலாம். கம்பனோ அதை அழகாகச் செதுக்கி வடிவமைத்திருக்கிறான். சூர்ப்பனகை அழகிய பெண் போல உரு மாறி வருவதும் – ‘திங்களிற் சிறந்தொளிர்‌ முகத்தள்‌ செவ்வியள்‌ பொங்கொளி விசும்பினில் பொலியத்‌‘ தோன்‌றுவதும் சீதையைப் பார்த்து இவள் உருமாறி வந்த அரக்கி என்று சொல்வதும் அருமையான நகாசு வேலை!

அவர் எடுத்தாளும் கம்பன் பாடல்கள் பல அழகானவை. கவிதை அலர்ஜி உள்ள எனக்கே கற்பூர வாசனை தெரிகிறது.

தடுத்(து) இமையாமல் இருந்தவர் தாளில்
மடுத்ததும் நாண்நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினை யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்!

முழுப்பாடலுமே பிரமாதம் என்றாலும் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்! என்ற ஒரு வரி போதும் கம்பனின் கவித்துவத்தைக் காட்ட.

தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது; சூழ்ச்சியின் அரக்கர்
மாய வானவர் பெற்ற நல்வரம் உண்மையாலும்
ஆய அந்தணர் இயற்றிய அருந்தவத்தாலும்

கைகேயியின் தூய சிந்தை திரிந்தது வானவர் பெற்ற நல்வரத்தால் என்பது எத்தனை நயமான சிந்தனை!

நதியின்‌ பிழையன்று நறும்புனலின்மை; அற்றே
பதியின்‌ பிழையன்று; பயந்து நமைப்‌ புரந்தான்‌
மதியின்‌ பிழையன்று; மகன் பிழையன்று; மைந்த?
விதியின்‌ பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டதென்றான்

இந்தக் கவிதையை என்றாவது என்னால் ஆங்கிலத்தில் கவிதையாகவே மொழிபெயர்க்க முடிந்தால் அன்றுதான் ஆங்கிலம் எனக்கு கை வந்தது என்று நினைப்பேன்.

தூய வாசகம் சொன்ன தோன்றலை
தீய கானகம் திருவின் நீங்கி முன்
போயினான் தன் முன் போந்துளான் என
ஆய காதலால் அழுது புல்லினாள்

கோசலை தூய வாசகம் சொன்ன பரதனைப் பார்ப்பது தீய கானகம் போயிருக்கும் ராமனே திரும்பி வந்தது போலிருக்கிறது என்று அழுவதை விட உன்னதமான காட்சி அபூர்வம்.

முன்னை நும் குல முதலுளோர்கள்தாம்
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்
மன்னர் மன்னவா! என்று வாழ்த்தினாள்
உன்ன உன்ன நைந்துருகி விம்முவாள்

கோசலை பரதனை “மன்னர் மன்னவா” என்று வாழ்த்துவதை விட உளம் நிறைய வைக்கும் பாடல் ஏது?

இலக்குவ! உலகம்‌ ஓர்‌ ஏழும்‌ ஏழும்‌ நீ
கலக்குவை என்பது கருதினால்‌ அது
விலக்குவதரிது அது விளம்பல்‌ வேண்டுமோ?
புலக்குறிததொரு பொருள்‌ புகலக்‌ கேட்டியால்‌

தம்பியர் இருவரையும் புரிந்து வைத்திருக்கும் ராமன்!

அவ்வப்போது பெரிசு நமக்கு கதை சொல்வது போலவே கொஞ்சம் விளக்கங்கள் தருகிறார். உதாரணமாக அகலிகையைப் பற்றி சொல்லும்போது எப்பேர்ப்பட்ட குற்றத்துக்கும் மன்னிப்பு உண்டு என்பதைத்தான் இந்தக் கதை காட்டுகிறது என்று விளக்கம் தருவதெல்லாம் just charming. இன்னொரு இடத்தில் ஆரண்ய காண்டத்தில் பத்து வருஷம் ராமனும் சீதையும் லக்ஷ்மணனும் சுகமாக வாழ்ந்தனர் என்று சொல்லிவிட்டு

பத்து ஆண்டுகளை ஒரு அத்தியாயத்தில்‌ முடித்து விடுகிறேனே என்று குறைப்படலாகாது. சந்தோஷமாகவும்‌ சுகமாகவும்‌ கழியும்‌ காலம்‌ இலக்கியத்தில்‌ சுருக்கமாகத்தான்‌ முடியும்‌

என்கிறார்! Absolutely charming aside!

பாலகாண்டத்தில் பகீரதன் பகீரதப் பிரயத்தனம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்த கதையை எளிமையாக, அதே நேரத்தில் மிகச் சிறப்பாக விவரிக்கிறார். கங்கையின் வேகத்தைத் தாங்க சிவன் தன் சடையில் அவளை ஏந்திக் கொண்டாராம், கங்கையால் வெளியே வரமுடியவில்லையாம், சடைக்குள் சிறைப்பட்டாளாம், அதாவது ஹிமாலயத்தின் குகைகளுக்குள் கங்கை நதி இருந்ததாம் என்கிறார். கவித்துவமான கற்பனை. விஸ்வாமித்ரரின் ஃப்ளாஷ்பாக் இப்படி பல முன்கதைகளை கொண்டு வருவது புத்தகத்திற்கு பெரிய கவர்ச்சி.

பல் நூறாண்டுகள் வாய்மொழிக் கதையாக இருந்ததையே வால்மீகி காவியமாக்கினார் என்றே ராஜாஜியும் கருதுகிறார். கம்பனும் முன்பு மூவர் பாடிய ராமாயணத்தை நான் தமிழ்ப்படுத்துகிறேன் என்கிறான். மற்ற இருவர் யாரோ தெரியவில்லை.

அப்புறம் இருக்கவே இருக்கிறது, ராமாயணம் தன்னளவில் உயர்ந்த காவியம். அதை என் போன்ற பாமரன் நாளைக்கு ஸ்வாஹிலியில் மொழிபெயர்த்தால் கூட கெடுத்துவிட முடியாது. ராமாயணத்தை விட உயர்ந்த காவியம் என் கண்ணில் மகாபாரதம் மட்டுமே. (மகாபாரதத்தைப் பற்றிய என் கருத்துக்களை நீங்கள் முழுதாக நம்பிவிடக் கூடாது, எனக்கு மகாபாரதத்தின் மீது இருக்கும் அபரிமிதமான பித்தே என் கருத்தை உருவாக்கலாம்). உலகின் எந்த மொழியிலும் (எனக்குத் தெரிந்த வரை) இப்படி இரண்டு காவியங்கள் அமையவில்லை என்றே கருதுகிறேன்.

ராமாயணத்தின் பெரும் பலம் மனிதர்களின் தேர்வுகளைக் காட்டுவது. இரண்டு வழியுமே சரிதான் என்றால் எதைத் தேர்ந்தெடுபப்து? விபீஷணன் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறான், கும்பகர்ணன் மற்றதை. ராமன் காட்டுக்குப் போக மறுத்திருந்தால் அதில் என்ன தவறு? அப்பாவின் மரணத்துக்கு அவனே காரணம், he should have read between the lines என்று கூட வாதிடலாம். தசரதன் வாக்காவது மண்ணாவது போடி என்று மறுத்திருக்கக் கூடாதா? அவர்களது தேர்வுகள் – இந்த மாதிரி தேர்வுகள் மகாபாரதத்தில் இன்னும் அதிகம் – காவியத்தை பெரிதும் உயர்த்துகின்றன…

அதுவும் பரதனின் கதாபாத்திரம்! ஆயிரம் ராமர், ஆயிரம் சீதை, ஆயிரம் ஹனுமன், ஆயிரம் கும்பகர்ணன், இந்திரஜித், ராவணன், ஏன் கிருஷ்ணன், கர்ணன், பீமன், பீஷ்மர், துரோணர், அர்ஜுனன் கூட நின்கேழ் ஆவரோ! ராஜாஜியே சொல்வது போல

சக்கரவர்த்‌தித்‌ திருமகனும்‌ பரதனும்‌ ஆண்டவனுடைய திருவவதாரம்‌ என்றாலும்‌ சரி, இல்லை இவர்கள்‌ வால்மீகி முனிவருடைய கற்பனைச்‌ சிருஷ்டியாகவே இருந்தாலும்‌ சரி, முனிவருக்கு அதற்காகக்‌ கோயில்‌ கட்டித்‌ தலைமுறை தலைமுறையாகப்‌ பூஜிக்கத்‌ தகும்‌

ராமாயணத்தில்தான் எத்தனை அற்புதமான காட்சிகள்! எத்தனை காட்சிகளை நம் வாழ்விலும் அனுபவித்திருப்போம்!

ராமனுக்கு பட்டாபிஷேகம் என்று கூனி சொன்னதும் கைகேயி முத்து மாலையைப் பரிசாகத் தருவதும், ராமனுக்குப் பிறகு எப்படியும் பரதனும் நூறாண்டு அரசனாக இருப்பான், எதற்காக கோள் சொல்கிறாய் என்று வெகுளித்தனமாக கூனியிடம் கேட்கும் இடம் கைகேயியின் பாத்திரத்தை நாலு வரியில் காட்டிவிடுகிறது.

தசரதன் தான் சாபம் பெற்ற கதையைச் சொல்லும்போது மகனை இழந்த முதியவர்கள் தெரியாமல் செய்த தவறு, அதனால் நீ இப்போது பிழைத்தாய் என்று சொல்லும் இடம் எந்தத் துக்கத்திலும் நியாய உணர்ச்சி மங்கிவிடாத இரு பெரியவர்களைக் காட்டுகிறது.

சீதை மரவுரியை எப்படிக் கட்டிக் கொள்வது என்று தெரியாமல் ராமனை சொல்லிக் கொடுக்கும்படி கேட்பதும் ராமன் அவளது பட்டாடைக்கு மேலாகவே மரவுரியைக் கட்டிவிடுவதும் எத்தனை charming ஆன காட்சி! என் தலைமுறையில் ஸ்பூனாலும் ஃபோர்க்காலும் எப்படி சாப்பிடுவது என்று கணவனிடம் கற்றுக்கொண்ட மனைவிகள் உண்டு.

கௌசல்யா ராமன் காட்டுக்குப் போனான், உம்மைத் திட்டக் கூடாது ஆனாலும் கோபத்தை அடக்க முடியவில்லை என்று தசரதனிடம் சொல்வது போல் நம் வாழ்க்கையில் எத்தனை முறை வேண்டியவர்களைக் கண்டிக்கவும் முடியாமல் கண்டிக்காமல் இருக்கவும் முடியாமல் தவித்திருப்போம்!

கைகேயி பக்கத்தில் நிற்க முடியவில்லை, “துன்னரும் துயர் கெடத் தூய கோசலை பொன்னடி தொழ” வர வரும் பரதனிடம் கௌசல்யா நான் உடன்கட்டை ஏற வேண்டும் அதற்கு சித்தம் செய் என்று சொல்லிவிட்டு அடுத்த வரியில் என்னை ராமனிடம் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடு என்று மாற்றி மாற்றிப் பேசுவது – கவி மனித சுபாவத்தை நன்கு உணர்ந்தவர்! அதுவும் கௌசல்யா பரதனின் உள்ளம் புரிந்ததும் தூய வாசகம் சொன்ன தோன்றலை பார்ப்பது காட்டுக்குப் போனவனே திரும்பி வந்தது போலிருக்கிறது என்று அழுவதும் இந்தக் குலத்து முன்னோர்களை நீ விஞ்சிவிட்டாய், “மன்னர் மன்னவா!” என்று பரதனை மனம் நிறைந்து வாழ்த்தி அழைப்பதும் – என்ன சொல்லட்டும்!

லக்ஷ்மணன் சித்ரகூடத்தில் கட்டிய குடிசையைப் பார்த்துவிட்டு இதை நீ எங்கு கற்றாய் என்று ராமன் வியப்பது! ஐஃபோனில் என்னால் பேசத்தான் முடியும், வேறு செயலிகளை எப்படி செயல்படுத்துவது என்று என் மனைவியும் பெண்களும்தான் கற்றுத் தந்திருக்கிறார்கள், அப்போதெல்லாம் மனம் நிறைந்திருக்கிறேன்.

என் பொருட்டு நீ புல் மேல் படுத்தாய். நான் இதைக் கண்டும் உயிருடன் இருக்கிறேன். கிரீடமும் சூட்டிக் கொள்ள வேண்டுமாம்! என்று பரதன் வருந்தும் இடம் இன்னொரு அற்புதம். புல் படுக்கையிலிருந்து கிரீடத்துக்குத் தாவும் மனம்!

லக்ஷ்மணன் பரதன் ராமன் மீது படையெடுத்து வருகிறான் என்று ஆத்திரப்படும் இடம்; அயோத்தியின் படை ராமனைத் தாக்க சம்மதிக்குமா என்று கூடத் தோன்றவில்லை, அடிமனதில் இருக்கும் கோபமும் வருத்தமும் அவன் கண்ணை மறைக்கிறது! ராமன் அவனைப் பார்த்து சிரிப்பதும் லக்ஷ்மணன் உண்மையை உணர்ந்து வெட்கப்படுவதும் நயமான காட்சி.

பரதன் ராமனிடம் இன்ன பேச வேண்டும், இப்படி வாதிட வேண்டும் என்று மனதுக்குள் ஆயிரம் ஒத்திகை பார்த்துவிட்டு ராமனைப் பார்த்ததும் எல்லாம் மறந்துபோய் ஓடி அவன் காலில் விழும் காட்சி! கௌசல்யாவிடமும் ஏன் குகனிடமும் பரத்வாஜ மகரிஷியிடமும் கூட தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளான பரதன் ராமனிடம் ஒரு வார்த்தையும் விளக்கும் தேவையை உணராதது, சொல்லிக் கொண்டே போகலாம்.

சூர்ப்பனகையின் கோபமும் ஆங்காரமும் தன்னை நிராகரித்து சகோதரர்களான கர தூஷணரைக் கொன்ற ராமன் மீதல்ல; தன்னை அங்கவீனம் செய்த லக்ஷ்மணன் மீதல்ல. சீதை மீதுதான், கர தூஷணரைக் கொன்றான், என் மூக்கை அரிந்தான் என்றெல்லாம் “சந்தை அடைத்தாலும்” சீதையைப் பற்றிய ஆசையைக் கிளப்பிவிடுவதுதான் சூர்ப்பனகையின் குறிக்கோள் என்று விளக்குவது மனித மனத்தின் அற்புதக் காட்சி. ராவணனும் மறுக்கும் மாரீசனிடம் அதே சாக்குபோக்குகளைச் சொல்வது இன்னொரு பிரமாதமான காட்சி. (சந்தை அடைப்பது என்பது ராஜாஜியே பயன்படுத்தி இருக்கும் சொல்வடை)

எப்போதும் அவசரப்பட்டு முடிவெடுக்கும் லக்ஷ்மணன் மாயமான் என்று எச்சரிப்பதும் எப்போதும் நிதானமாக முடிவெடுக்கும் ராமன் மாயமானைத் துரத்துவதும் எத்தனை நயமான முரண்!

ராமன் போனால் நீ என்னை அடையலாம் என்று பார்க்கிறாயா, இதற்காகத்தான் வனத்திற்கு எங்களுடன் வந்தாயா, பரதனோடு சேர்ந்து சூழ்ச்சியா என்று சீதை பேசும் இடம் பரதன் தவறே செய்யாதவன் என்று தெரிந்திருந்த போதிலும் ஆழ்மனதில் பரதன் மீது இருக்கும் ஆங்காரத்தை அழகாகக் காட்டுகிறது.

ராமன் அசோகமரமே சீதையைப் பார்த்தாயா, புலியே நீ பார்த்தாயா என்று புலம்புவது இன்னொரு அற்புதமான இடம்.

லக்ஷ்மணன் சீதையின் ஆபரணங்களில் காலில் அணிவதையே முதலில் அடையாளம் காண்பது இன்னொரு ரசமான இடம்.

தாரை வாலியின் பிணத்தைத் தழுவிக் கொண்டு அழும்போது சுக்ரீவன் தன்னால்தான் இந்தத் துயரம் என்று கலங்குவதும் மனித இயல்புதான்.

ஹனுமனின் லங்கையை அடைய கடலைத் தாண்டும்போது அவன் நிழலைப் பிடித்திழுத்து நிறுத்தும் பூதம் சிறந்த அறிவியல் புனைவுக்கான கற்பனை.

ஹனுமன் சீதையை தன்னை நம்ப வைப்பதற்காக ராம கதையை அவள் கேட்கும்படி சொல்வது, அதுவும் சீதையைப் பிரிந்த பிறகு என்ன நடந்தது – ஹனுமனை புத்திமதாம் வரிஷ்டம் என்று சொல்வது சரிதான் என்கிறார் ராஜாஜி, நானும் ஆமோதிக்கிறேன்.

ராவணன் சீதைக்கு ஒரு வருஷம் கெடு வைத்துவிட்டு மந்திராலோசனையில் சீதை தன்னிடம் ஒரு வருஷ அவகாசம் கேட்டாள் என்று சொல்வது மிக அருமை.

சுக்ரீவன் விபீஷணன் தன் அண்ணனுக்கே துரோகம் செய்கிறான், அவனை நம்பக் கூடாது என்று வாலியின் கதியை மறந்துவிட்டுப் பேசும் இடம் பிரமாதம்! அப்படி சுக்ரீவன் சொல்லும்போது ராமன் லக்ஷ்மணனைப் பார்த்து அவர்கள் இருவர் மட்டுமே உணரக் கூடிய வகையில் புன்னகைத்தானாம்!

இன்று போய் நாளை வாராய் என்று சொல்லும் காட்சிக்கு இணையான வீரமும், கருணையும் ததும்பும் காட்சி ஏதுமில்லை.

சொல்லிக் கொண்டே போகலாம், மீள்வாசிப்பில் கண்ணில் பட்ட இடங்களை எல்லாம் எழுதி இருக்கிறேன், மீண்டும் படித்தால் விட்டுப்போன இன்னும் பல இடங்கள் தென்படும்!

பல முறை எளிய உரைநடைப் புத்தகமே இப்படி மனதைக் கவர்ந்திருக்கிறதே, கம்பன் பாடல்களில் பாதியாவது புரியாதா, படித்துப் பார்க்கலாமே என்று தோன்றி இருக்கிறது. கம்பனானாலும் சரி, எந்தக் கொம்பனானாலும் சரி, சிறு வயதில் மனதில் ஆழப்பதிந்துவிட்ட ராஜாஜியின் புத்தகத்துக்கு மனதில் இருக்கும் இடத்தைப் பிடிக்க முடியாது என்றும் தோன்றுகிறது!

தொகுக்கப்பட்ட பக்கம்: ராமாயணப் பக்கம்

லக்ஷ்மி

(மீள்பதிவு, மூலப்பதிவு இங்கே)

சும்மா இருக்காமல் லக்ஷ்மியின் மிதிலாவிலாஸ் புத்தகத்தைத் திருப்பிப் படித்தேன். அதனால் இந்த மீள்பதிவு.

மிதிலாவிலாஸ் எளிய நாவல். ஆனால் இன்றும் இது போன்ற எளிய நாவல்களுக்கு வரவேற்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். தமிழில் பெண் எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்தக் கூடியவர்களின் (அனுராதா ரமணன், சிவசங்கரி, கமலா சடகோபன் என்று ஒரு நெடிய வரிசை இன்று ரமணி சந்திரன் வரை தொடர்கிறது) வழக்கமான சூத்திரத்திலிருந்து – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – கொஞ்சம் முன்னகர்ந்து “திருமணம் ஆகாத இளம் பெண்ணுக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” என்ற சூத்திரத்தை வைத்து இந்த நாவலை எழுதி இருக்கிறார். அன்றைய விகடன், கல்கி, கலைமகள் மாதிரி பத்திரிகைகளில் தொடர்கதையாக வந்திருக்க வேண்டும்.

மாமன் வீட்டில் வளரும் தேவகி ஏறக்குறைய வேலைக்காரிதான். அவளுக்கு மாமன் மகன் ஈஸ்வரன் மேல் ஈர்ப்பு, ஈஸ்வரனோ கிரிஜா பின்னால். தேவகியின் நல்ல குணம் எல்லார் மனதையும் மாற்றி, வேறென்ன, சுபம்தான்! சரளமாகப் போகும் நாவல், எந்த வித முடிச்சும் இல்லாவிட்டாலும் படிக்க முடிகிறது.

நாவலை மீண்டும் படிக்கும்போது தோன்றிக் கொண்டிருந்த விஷயம் இதுதான். இதே கதையை, இதே சம்பவங்களை தேவகியை சூழ்ச்சி செய்பவளாக, கிரிஜாவை நாயகியாக வைத்து எழுதலாம். வம்பு பேசும் மதனி மைதிலியை எல்லாரும் கொடுமைப்படுத்துவதாக வெகு சுலபமாக மாற்றிவிட முடியும். கிரிஜாவும் மைதிலியும் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் –  வீட்டின் சமையல் வேலையை கவனித்துக் கொண்டால் போதும்! அது சரி, காதலொருவன் காரியம் யாவிலும் கை கொடுப்பது வரைதான் புரட்சி எண்ணங்கள் கொண்ட பாரதியால் கூட யோசிக்க முடிந்தது.

ஆனாலும் மிதிலாவிலாஸ் ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்யத்தான் செய்திருக்கும். இன்றும் நாவலின் சரளம், சுலப்மாகப் படிக்கக் கூடிய தன்மை அதன் பலமாக இருக்கிறது. நாவலின் எந்த எதிர்மறைப் பாத்திரத்திமும் முழு வில்லன் இல்லை, ஏதாவது நல்ல குணம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி யாரையும் முழுதும் கறுப்பு வெள்ளையாக கறுப்பாக சித்தரிக்காததே அன்று பெரிய முன்னகர்தலாக இருந்திருக்க வேண்டும்.

லக்ஷ்மியின் சிறந்த நாவல்களில் ஒன்று. தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றது. தமிழில் வணிக நாவல்கள் அதுவும் பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் எப்படி பரிணமித்தன என்பதில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம்.


லக்ஷ்மி ஒரு காலத்தில் நட்சத்திர எழுத்தாளர். ஒரு பத்து வருஷங்களாவது பெண்களின் மன நிலையை உண்மையாக எழுத்தில் கொண்டு வந்தார். அவரும் ஒரு எளிய சூத்திரத்தைப் பயன்படுத்தினார் – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – இந்த சூத்திரத்தை அவர் ஐம்பதுகளின், அறுபதுகளின் மத்திய தர வர்க்க, வேலைக்கு போக ஆரம்பித்த பெண்களின் மனம் கவரும் வண்ணம் சித்தரித்தார். அவரும் சில சமயம் புரட்சி செய்து கல்யாணம் ஆகாதபோதும் இன்னல் வரும் (ஆனால் பழையபடி தீரும்) என்று சூத்திரத்தை மாற்றுவார், அதுவே அவருக்கு அதிகபட்சம். ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்தார் என்பதற்கு மேல் அவரைப் பற்றி சொல்ல எதுவுமே இல்லை. அவர் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய (வணிக) எழுத்தாளர் இல்லை.

ஒரு காவிரியைப் போல என்ற நாவலுக்கு சாஹித்திய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. இந்தப் புத்தகத்துக்கு விருது கொடுத்து தமிழ் இலக்கியத்தை கேவலப்படுத்தி இருக்கிறார்கள்.

மிதிலாவிலாஸ், ஸ்ரீமதி மைதிலி, பெண் மனம் போன்ற புத்தகங்கள் அவர் எழுதியவற்றில் சிறந்தவை என்று சொல்லலாம். ஆனால் கறாராகப் பார்த்தால் அவை எல்லாமே வீண்தான்.

அவருடைய எழுத்துகளை 2009-இல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது, ஆனால் அவரது வாரிசுகள் இதை மறுத்துவிட்டார்கள். (இன்னும் புத்தகங்கள் விற்று நல்ல ராயல்டி வருகிறது போலும்!)

ஜெயமோகன் அவரது காஞ்சனையின் கனவு, அரக்கு மாளிகை ஆகியவற்றை தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்த்திருக்கிறார். இந்தப் பதிவையே ஜெயமோகன் சொன்னார் என்பதால் “அரக்கு மாளிகை” பற்றி எழுதலாம் என்றுதான் ஆரம்பித்தேன். ஜெயமோகன் தனது seminal பட்டியலில் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு நாவலையும் பற்றி நாலு வரி எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. ஆனால் என் கண்ணில் அவ்வளவு worth இல்லை. எண்ணி நாலே நாலு வரிதான் எழுத முடியும். அதனால் இதை லக்ஷ்மியைப் பற்றிய பதிவாக மாற்றிவிட்டேன்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் ஜெயமோகன் பரிந்துரைக்கும் அரக்கு மாளிகை, இருவர் உள்ளம் திரைப்படமாக வந்த பெண் மனம், மிதிலாவிலாஸ், ஸ்ரீமதி மைதிலி இவற்றில் ஏதாவது ஒன்றைப் படிக்கலாம்.

ஜெயமோகன் பரிந்துரைக்கும் அரக்கு மாளிகையில் வழக்கமான நாயகி. தாத்தா இறக்கிறார். பணக்கார பெரியப்பாவுக்கு அவளை வீட்டில் வைத்துக் கொள்ள இஷ்டமில்லை. வேலைக்குப் போன இடத்தில் முதலாளியம்மாவின் கணவன் அசடு வழிகிறான். அதாவது வழக்கமான பிரச்சினைகள். இன்னொரு வீட்டில் governess மாதிரி ஒரு வேலை. அங்கே வழக்கமான அழகான இளைஞனோடு வழக்கமான காதல். சதி செய்யும் அவன் சித்தி. இதற்கு மேலும் இதைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

பெண் மனம்: (1946): ஏழைப் பெண் சந்திராவை தன் பண பலத்தால் ஜகன்னாதன் மணக்கிறான். அவள் தன்னை விரும்பவில்லை என்று தெரியும்போது ஒதுங்கிப் போக பார்க்கிறான். கடைசியில் இருவரும் இணைகிறார்கள். “உங்களுக்கு என் உடல்தானே வேண்டும்? எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் என் உள்ளம் கிடைக்காது” என்று சந்திரா முதல் இரவில் சொல்வது அந்நாளில் பேசப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. சிவாஜி, சரோஜாதேவி, எஸ்.வி. ரங்காராவ், எம்.ஆர். ராதா நடித்து கருணாநிதி வசனத்தில் இருவர் உள்ளம் என்று சினிமாவாகவும் வந்தது.

ஒரு காவிரியைப் போல: இந்த முறை தென்னாப்பிரிக்கப் பெண். அவளுக்குப் பல இன்னல்கள். கடைசியில் காதல் நிறைவேறுகிறது. இதற்கெல்லாம் சாகித்ய அகாடமி பரிசா?

ஸ்ரீமதி மைதிலி அவரது வழக்கமான கதைதான். மைதிலியை அடக்கி ஆளும் எல்லாரும் கடைசியில் மைதிலியிடம் உதவி பெறுகிறார்கள்.

அவருடைய இன்னும் சில புத்தகங்கள் பற்றி:

அத்தை: அந்தக் காலத்து தொடர்கதை ஃபார்மட்டுக்கு நன்றாகவே பொருந்தி வரும்.இந்த முறை பணக்கார அண்ணனை எதிர்த்து ஏழையை மணக்கும் பத்தினிக்கு பல இன்னல்கள்.

நாயக்கர் மக்கள்: பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. நாயக்கரின் மகன் அவரது எதிரியின் பெண்ணை காதலிக்கிறான். நாயக்கரின் மகளும் மாப்பிள்ளையும் சேராமல் இருக்க மாப்பிள்ளையை ஒரு தலையாக காதலித்த பெண் சூழ்ச்சி செய்கிறாள். கோர்வையாக இருக்கிறது, தொடர்கதை வடிவத்துக்குப் பொருந்தி வரும், அவ்வளவுதான்.

பண்ணையார் மகள்: பண்ணையாரும் மனைவியும் பிரிகிறார்கள். மகள் ஏழ்மையில் வளர்கிறாள், அப்பா பெரிய பண்ணையார் என்றே தெரியாது. அம்மா இறக்க, பெண் சொத்துக்கு வாரிசாக, மானேஜர் சொத்தை ஆட்டையைப் போடப் பார்க்க… இதற்கு மேல் கதையை யூகிக்க மாட்டீர்களா என்ன? தொடர்கதை வடிவத்துக்கு ஐம்பது அறுபதுகளில் பொருந்தி வந்திருக்கும், அவ்வளவுதான்.

சூரியகாந்தம்: வழக்கமான அவரது நாவல்தான், இருந்தாலும் வந்த காலத்தில் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும். இந்த முறை கஷ்டப்பட்டு வளர்க்கும் அத்தையை வில்லியின் மயக்கத்தில் எதிர்த்துப் பேசிவிட்டு திருந்தும் மருமகன். அவனுக்கு ஊனமுற்ற ஒரு முறைப்பெண், சதி செய்யும் மாற்றாந்தாய் என்று வழக்கமான பாத்திரங்கள்.

அவள் ஒரு தென்றல், ஜெயந்தி வந்தாள், கை மாறியபோது, கூறாமல் சன்யாசம், குருவிக்கூடு, மோகனா மோகனா, மோகினி வந்தாள், நீதிக்கு கைகள் நீளம், நிகழ்ந்த கதைகள், ராதாவின் திருமணம், சீறினாள் சித்ரா, உறவு சொல்லிக் கொண்டு, உயர்வு, வசந்தத்தில் ஒரு நாள், வேலியோரத்தில் ஒரு மலர், விடியாத இரவு போன்ற குறுநாவல்களையும் சமீபத்தில் மூலப்பதிவை எழுதும்போது படித்தேன். இவையெல்லாம் இன்று தண்டமாகத தெரிந்தாலும் ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

கங்கையும் வந்தாள்: நாயகனை ஏமாற்றும் நாயகியின் அப்பா. நாயகன்-நாயகிக்கு தமிழ் நாவல் வழக்கப்படி காதல், ஆனால் வெளியே சொல்லவில்லை. அப்பாவை பழிவாங்க நாயகியை மணந்து பிறகு தள்ளி வைக்கிறான். குழந்தை. குழந்தை முகம் பார்த்து அவன் மனம் மாறுகிறது. சுத்த தண்டம்.

காஷ்மீர் கத்தி: தவறான முறையில் பிறந்த பையன் குப்பத்தில் வளர்கிறான், அவனது பிரச்சினைகள். படிக்கலாம்.

கூண்டுக்குள்ளே ஒரு பச்சைக்கிளி: தண்டம். பெரிய மனிதர் தேவநாதன் உண்மையில் குரூரமானவர். தன்னை மணந்து கொள்ள மறுக்கும் இளம் பெண்+காதலனை உயிரோடு ஒரு அறையில் பூட்டிவிடுகிறார். ஆனால் வேலைக்காரன் வைரவன் தப்ப வைக்கிறான்.

முருகன் சிரித்தான்: பணக்கார, திமிர் பிடித்த டாக்டர் கணவன், மாமியார்; விவாகரத்து வரை விஷயம் போய்விடுகிறது. தற்செயலாக ஒரு விபத்து ஏற்பட, குடும்பம் இணைகிறது. தண்டம்.

ரோஜா வைரம்: தண்டம் என்ற ஒரு வார்த்தைக்கு மேல் இதைப் பற்றி எழுதும் எதுவும் அனாவசியம். For the record, தென்னாப்பிரிக்காவில் வைர வியாபாரம் செய்ய முயற்சிக்கும் ஒரு குடும்பம்.

உயிரே ஓடி வா: இன்னொரு தண்டம். பணக்காரப் பெண் ரேவதியை அவள் எழுதிய காதல் கடிதங்களை வைத்து முகுந்தன் ப்ளாக்மெயில் செய்கிறான். ரேவதியை மனம் செய்து கொள்ளப்போகும் சிவகுருவும், சிவகுருவின் அம்மாவும் அவனை பரவாயில்லை போ என்று துரத்துகிறார்கள்.

வீரத்தேவன் கோட்டை: தண்டம். இரண்டு குடும்பங்கள் எதிரிகள், வழக்கம் போல வாரிசுகளிடம் காதல், அப்புறம்தான் தெரிகிறது காதலன் வீரத்தேவன் எதிரி குடும்பத்தில் பிறந்து இங்கே வளர்கிறான் என்று.

விசித்திரப் பெண்கள்: சிறுகதைத் தொகுப்பு. எதுவும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சிறுகதை இல்லை. ஆனால் மொத்தமாகப் படிக்கும்போது பழைய விகடன்/கல்கி/கலைமகள் இதழ்களைப் புரட்டுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.

அவரது புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோது மறைந்த சேதுராமன் எழுதிய அறிமுகம் கீழே.


சேதுராமன் தரும் புதிய தகவல்: “அண்மையில் லக்ஷ்மியின் சகோதரர் திரு. ராகவனுடனும், மருமகள் திருமதி மகேஸ்வரனிடமும் பேசினேன். லக்ஷ்மியின் வாரிசுகள் தமிழ்நாடு அரசின் நாட்டுடைமைக்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்”.

சமுதாயத்தில் எத்துணைதான் படித்திருந்தாலும், பெண்ணுக்குச் சம உரிமை இல்லை; பெண்கள் சரி நிகர் சமான நிலை பெற வேண்டும் என்பதே குறிக்கோள். பெண் பிரச்சினை, உரிமையே மையக் கருத்து. பெண்ணின் பெருமை பேசுவதே, அருமை பாராட்டுவதே அடித்தளம். இல்லத்தின் உயிர் நாடியே பெண்தான் என்பது. குடும்பச் சிக்கல்களை அலசுவது. பெண்மையின் மென்மை உணர்வுகள்/ஆண்மையின் வன்மை உணர்ச்சிகள், இவற்றின் உரசல்களால் உருவாகும் நிகழ்ச்சிகளைப் பின்னித் தருபவர்; அதேசமயம் நமது தமிழ் மரபினையும், இந்தியப் பண்பாட்டினையும் உயிராகப் பேணி எழுதி வருபவர் – அவர் தான் லக்ஷ்மி என்கிற டாக்டர் எஸ்.திரிபுரசுந்தரி (மது.ச. விமலானந்தம்)

சிதம்பரத்தை அடுத்துள்ள அம்மாபேட்டை என்ற சிறு கிராமத்தில் 1921ம் வருஷம் மார்ச் மாதம் 21 தேதி பிறந்தவர் லக்ஷ்மி. பெற்றோர் திருச்சி ஜில்லா தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீனிவாசன், பட்டம்மாள் என்ற சிவகாமி. உடன் பிறந்தவர்கள் ஐவர், நான்கு சகோதரிகள், ஒரு தம்பி.

தொட்டியம் தொடக்கப் பள்ளியிலும், முசிறி உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற லக்ஷ்மி, தனது உயர் நிலைக் கல்வியைத் திருச்சியிலுள்ள ஹோலி க்ராஸ் கல்லூரியில் தொடர்ந்தார். காரணம் ஐந்தாவது ஃபாரம் படிப்பை முடித்து எஸ்.எஸ்.எல்.சி வகுப்புக்குப் போக வேண்டிய சமயம், முசிறிப் பள்ளியின் தலைமையாசிரியர் “ஆண்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளியில் தொடர்ந்து வயது வந்த ஒரு பெண்ணைப் படிக்க அனுமதிக்க முடியாது” என்றதால்தான். சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், முறையிட்டு, விடுதி வசதியைப் பெற்றார் லக்ஷ்மி. தமிழில் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் ஆண்டு ஒரு பரிசையும் பெற்றார். இண்டர் முடித்தவுடன் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சென்னையிலுள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பினார். முதலில் காத்திருப்புப் பட்டியலில் இருந்தபோதிலும் இவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.

முதல் ஆறு மாதங்கள் ப்ரி-ரிஜிஸ்ட்ரேஷன் ஸ்டான்லியிலும், கல்லூரியில் வசதிகள் இல்லாததால், அனாடமி, ஃபிசியாலஜி படிப்பை மதராஸ் மருத்துவக் கல்லூரியில் இரண்டு வருஷங்கள் தொடர்ந்து, மூன்றாம் வருஷப் படிப்பைத் தொடர ஸ்டான்லி திரும்பினார். இவர் மருத்துவம் படித்த காலம் இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். அதன் தாக்கங்கள் எப்படியிருந்தன என்பதை கதாசிரியையின் கதை என்ற தமது சுயசரிதத்தில் விவரமாக எழுதியிருக்கிறார். மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள எழுத்தின் உதவியை நாடினார். அக்காலத்தில் ஆனந்த விகடன் காரியாலயம் ஸ்டான்லிக்கு அருகே ப்ராட்வேயில்தான் இருந்தது. இதைப் பற்றி திருமதி பட்டம்மாள் வாசன் நினைவு கூர்கிறார்:

ஒரு நாள் லக்ஷ்மி ஃபோன் பண்ணினா. “நான் கதையெல்லாம் எழுதுவேன், உங்கள் கணவரைப் பார்த்துப் பேச வேண்டும், உதவி செய்வீர்களா?” நீ ஆஃபீசுக்குப் போனால் அவரைப் பார்க்கலாம் என்றேன். அவரிடம் “டாக்டருக்குப் படிக்க வேண்டும், எங்களுக்கு இப்போது நிதி வசதி சரியாயில்லை. என்னுடைய கதைகள் சிலதைக் கொண்டு தருகிறேன். பிரசுரித்துப் பண உதவி செய்தால் சந்தோஷப்படுவேன்” என்று கேட்டிருக்கிறாள். நல்ல கதைகள் என்றால் பிரசுரிப்போம் என்று சொன்ன வாசன், பின்னர் கதைகள் தரமாக இருக்கவே பிரசுரம் செய்து உதவினார்.

டாக்டர் படிப்பு முடித்ததும் லக்ஷ்மியின் குடும்பம் சென்னையிலேயே குடியேறிற்று. தங்கைகள் கல்யாணம் பொறுப்பேற்று நடத்தி முடித்தார். 1955ம் வருஷம் தானும் கண்ணபிரான் என்ற தென்னாப்பிரிக்கத் தமிழரை திருமணம் செய்துகொண்டார். சென்னையிலுள்ள அடையாறு தியோசாஃபிகல் சொசைட்டியில்தான் இந்தத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் லக்ஷ்மி இருபத்திஇரண்டு வருஷங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்தார். மகப்பேறு வைத்தியராகப் பணியாற்றினார். இத்தம்பதிகளுக்கு மகேஸ்வரன் என்ற ஒரு பிள்ளை.

1966ம் வருஷம் கண்ணபிரான் இறந்தது லக்ஷ்மியை மிகவும் பாதித்தது. இருப்பினும் அங்கேயே தன் வாழ்க்கையைத் தொடர்ந்த லக்ஷ்மி 1977ம் வருஷம் சென்னை திரும்பினார். என்ன காரணமாகவோ அதன் பிறகு அவர் தொடர்ந்து எழுதவில்லை. மகேஸ்வரனையும் மருத்துவப் படிப்பில் சேர்த்து அவரையும் மருத்துவராக்கினார்.

பதினான்கு வயதிலேயே எழுத ஆரம்பித்த லக்ஷ்மி நாற்பத்திஐந்து ஆண்டுகள் படைப்பிலக்கியம் செய்து ஆயிரத்துக்கும் மேலான சிறுகதைகள், நூற்றுக்கும் மேலான நாவல்கள் வெளியிட்டுள்ளார். மருத்துவம், மகப்பேறு போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் பவானி (1940). பெண் மனம் (1946), மிதிலா விலாஸ் என்ற இரு நாவல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசையும், ஒரு காவிரியைப் போல 1984ல் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றன. காஞ்சனையின் கனவு, பெண் மனம் என்ற நாவல்கள் காஞ்சனா, இருவர் உள்ளம் என்ற தலைப்புகளுடன் மூன்று தென்மொழிகளில் திரைப் படங்களாயின. இருவர் உள்ளம் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியது முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி.

லக்ஷ்மியின் மறைவு 1987ம் வருஷம் ஜனவரி மாதம் ஏழாம் தேதி சென்னையில். அவரது மறைவு குறித்து ஆனந்த விகடனில் (25-1-1987 – மீள் பதிப்பு ஆனந்த விகடன் 11-3-2009) பட்டம்மாள் வாசன் நினைவு கூர்வது:

வாழ்க்கையில் நிறையச் சிரமப்பட்டிருந்தாலும், அவ பேசறப்போ சிரிச்சுண்டேதான் பேசுவா. சாகித்ய அகாடமி பரிசு வாங்கியதும் என்னைத் தேடி வந்து சொன்னது எனக்குப் பெருமையா இருந்தது. சமீபத்திலே எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தபோது ‘என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணப் போறேன்’ என்று ரொம்ப சந்தோஷமாச் சொன்னாள். அவ சாகும்போது, அந்த ஒரே பிள்ளையும் துரதிர்ஷ்டவசமா கிட்டக்க இல்லாம எங்கேயோ இங்கிலாந்திலேயா இருக்கணும்னு நினைச்சபோது என் மனசுக்கு கஷ்டமாயிருந்தது.”

சொல்லும்போதே திருமதி பட்டம்மாள் வாசனின் குரல் தழுதழுத்துக் கண்கள் பனித்தன.

லக்ஷ்மியின் படைப்புகள் வருமாறு:
அழகின் ஆராதனை — அவள் தாயாகிறாள் — அசோகமரம் பூக்கவில்லை — அடுத்த வீடு — அரக்கு மாளிகை — அதிசய ராகம் — அத்தை — அவளுக்கென்று ஒரு இடம் — அவள் ஒரு தென்றல் — இரண்டாவது மலர் — இவளா என் மகள் — இரண்டு பெண்கள் — இரண்டாவது தேனிலவு — இனிய உணர்வே என்னைக் கொல்லாதே — இருளில் தொலைந்த உண்மை – இன்றும் நாளையும் – உறவுகள் பிரிவதில்லை — உயர்வு — உறவின் குரல் — ஊன்றுகோல் — என் வீடு — என் மனைவி — ஒரு காவிரியைப் போல (சாகித்திய அகாதெமி பரிசு 1984) — ஒரு சிவப்பு பச்சையாகிறது

கடைசி வரை — கங்கையும் வந்தாள் — கதவு திறந்தால் — கதாசிரியையின் கதை (இரண்டு பாகங்கள்) — கழுத்தில் விழுந்த மாலை — கணவன் அமைவதெல்லாம் — காஷ்மீர் கத்தி — காளியின் கண்கள் — கூறாமல் சன்னியாசம் — கூண்டுக்குள்ளே ஒரு பைங்கிளி — கை மாறிய போது — கோடை மேகங்கள் — சசியின் கடிதங்கள் — திரும்பிப் பார்த்தால் — துணை — தை பிறக்கட்டும் — தோட்டத்து வீடு — நதி மூலம் — நல்லதோர் வீணை — நாயக்கர் மக்கள் — நிற்க நேரமில்லை – நியாயங்கள் மாறும்போது — நிகழ்ந்த கதைகள் — நீலப்புடைவை — நீதிக்குக் கைகள் நீளம் — பண்ணையார் மகள் – பவளமல்லி — பவானி (முதல் நாவல்) — புனிதா ஒரு புதிர் — புதை மணல் — பெயர் சொல்ல மாட்டேன் — பெண் மனம் (தமிழ் நாடு அரசு பரிசு) — பெண்ணின் பரிசு — மரகதம் — மனம் ஒரு ரங்க ராட்டினம் — மண் குதிரை — மருமகள் — மறுபடியுமா? — மாயமான் — மீண்டும் வசந்தம் – மீண்டும் ஒரு சீதை — மீண்டும் பிறந்தால் — மீண்டும் பெண் மனம் – முருகன் சிரித்தான் — மோகத்திரை

ராதாவின் திருமணம் — ராம ராஜ்யம் — ரோஜா வைரம் — வனிதா — வசந்திக்கு வந்த ஆசை — வடக்கே ஒரு சந்திப்பு — வாழ நினைத்தால் — வீரத்தேவன் கோட்டை — வெளிச்சம் வந்தது — ஜெயந்தி வந்தாள் — ஸ்ரீமதி மைதிலி

தகவல் ஆதாரம்:
1. தமிழ் இலக்கிய வரலாறு – மது.ச.விமலானந்தம்
2. லக்ஷ்மியின் கதாசிரியையின் கதை – பூங்கொடிப் பதிப்பகம் 1985
3. ஆனந்த விகடன் கட்டுரை (11-3-2009)
4. வலைத்தளக் கட்டுரைகள்


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
காஞ்சனையின் கனவு
தமிழ் விக்கி குறிப்பு

எனக்கு மிகவும் பிடித்த காதல் பாட்டு

(மீள்பதிவு)

இன்று (மீண்டும்) எங்கள் மணநாள். ஹேமாவுக்காக மீண்டும் அதே பாட்டு. பதின்ம வயதிலேயே பிடித்துப் போய்விட்ட பாட்டு. பீட்டில்ஸ் எனக்குப் பிடித்த இசைக்குழுவாக இருப்பதற்கு இந்தப் பாடல் ஒரு முக்கியக் காரணம். ஹேமாவுக்கும் பிடித்த பாட்டு. ஒரே ஒரு வருத்தம், அறுபத்துநாலில் அல்ல, நாற்பத்துநாலிலேயே வழுக்கை!

பாடல் வரிகள்:

When I get older, losing my hair
Many years from now
Will you still be sending me a valentine
Birthday greetings, bottle of wine?

If I’d been out till quarter to three
Would you lock the door?
Will you still need me, will you still feed me
When I’m sixty-four?

You’ll be older too
And if you say the word
I could stay with you

I could be handy, mending a fuse
When your lights have gone
You can knit a sweater by the fireside
Sunday mornings go for a ride

Doing the garden, digging the weeds
Who could ask for more?
Will you still need me, will you still feed me
When I’m sixty-four?

Every summer we can rent a cottage in the Isle of Wight
If it’s not too dear
We shall scrimp and save
Grandchildren on your knee
Vera, Chuck and Dave

Send me a postcard, drop me a line
Stating point of view
Indicate precisely what you mean to say
Yours sincerely, wasting away

Give me your answer, fill in a form
Mine for evermore
Will you still need me, will you still feed me
When I’m sixty-four?
Ho!

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்