லக்ஷ்மி

(மீள்பதிவு, மூலப்பதிவு இங்கே)

சும்மா இருக்காமல் லக்ஷ்மியின் மிதிலாவிலாஸ் புத்தகத்தைத் திருப்பிப் படித்தேன். அதனால் இந்த மீள்பதிவு.

மிதிலாவிலாஸ் எளிய நாவல். ஆனால் இன்றும் இது போன்ற எளிய நாவல்களுக்கு வரவேற்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். தமிழில் பெண் எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்தக் கூடியவர்களின் (அனுராதா ரமணன், சிவசங்கரி, கமலா சடகோபன் என்று ஒரு நெடிய வரிசை இன்று ரமணி சந்திரன் வரை தொடர்கிறது) வழக்கமான சூத்திரத்திலிருந்து – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – கொஞ்சம் முன்னகர்ந்து “திருமணம் ஆகாத இளம் பெண்ணுக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” என்ற சூத்திரத்தை வைத்து இந்த நாவலை எழுதி இருக்கிறார். அன்றைய விகடன், கல்கி, கலைமகள் மாதிரி பத்திரிகைகளில் தொடர்கதையாக வந்திருக்க வேண்டும்.

மாமன் வீட்டில் வளரும் தேவகி ஏறக்குறைய வேலைக்காரிதான். அவளுக்கு மாமன் மகன் ஈஸ்வரன் மேல் ஈர்ப்பு, ஈஸ்வரனோ கிரிஜா பின்னால். தேவகியின் நல்ல குணம் எல்லார் மனதையும் மாற்றி, வேறென்ன, சுபம்தான்! சரளமாகப் போகும் நாவல், எந்த வித முடிச்சும் இல்லாவிட்டாலும் படிக்க முடிகிறது.

நாவலை மீண்டும் படிக்கும்போது தோன்றிக் கொண்டிருந்த விஷயம் இதுதான். இதே கதையை, இதே சம்பவங்களை தேவகியை சூழ்ச்சி செய்பவளாக, கிரிஜாவை நாயகியாக வைத்து எழுதலாம். வம்பு பேசும் மதனி மைதிலியை எல்லாரும் கொடுமைப்படுத்துவதாக வெகு சுலபமாக மாற்றிவிட முடியும். கிரிஜாவும் மைதிலியும் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் –  வீட்டின் சமையல் வேலையை கவனித்துக் கொண்டால் போதும்! அது சரி, காதலொருவன் காரியம் யாவிலும் கை கொடுப்பது வரைதான் புரட்சி எண்ணங்கள் கொண்ட பாரதியால் கூட யோசிக்க முடிந்தது.

ஆனாலும் மிதிலாவிலாஸ் ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்யத்தான் செய்திருக்கும். இன்றும் நாவலின் சரளம், சுலப்மாகப் படிக்கக் கூடிய தன்மை அதன் பலமாக இருக்கிறது. நாவலின் எந்த எதிர்மறைப் பாத்திரத்திமும் முழு வில்லன் இல்லை, ஏதாவது நல்ல குணம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி யாரையும் முழுதும் கறுப்பு வெள்ளையாக கறுப்பாக சித்தரிக்காததே அன்று பெரிய முன்னகர்தலாக இருந்திருக்க வேண்டும்.

லக்ஷ்மியின் சிறந்த நாவல்களில் ஒன்று. தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றது. தமிழில் வணிக நாவல்கள் அதுவும் பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் எப்படி பரிணமித்தன என்பதில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம்.


லக்ஷ்மி ஒரு காலத்தில் நட்சத்திர எழுத்தாளர். ஒரு பத்து வருஷங்களாவது பெண்களின் மன நிலையை உண்மையாக எழுத்தில் கொண்டு வந்தார். அவரும் ஒரு எளிய சூத்திரத்தைப் பயன்படுத்தினார் – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – இந்த சூத்திரத்தை அவர் ஐம்பதுகளின், அறுபதுகளின் மத்திய தர வர்க்க, வேலைக்கு போக ஆரம்பித்த பெண்களின் மனம் கவரும் வண்ணம் சித்தரித்தார். அவரும் சில சமயம் புரட்சி செய்து கல்யாணம் ஆகாதபோதும் இன்னல் வரும் (ஆனால் பழையபடி தீரும்) என்று சூத்திரத்தை மாற்றுவார், அதுவே அவருக்கு அதிகபட்சம். ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்தார் என்பதற்கு மேல் அவரைப் பற்றி சொல்ல எதுவுமே இல்லை. அவர் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய (வணிக) எழுத்தாளர் இல்லை.

ஒரு காவிரியைப் போல என்ற நாவலுக்கு சாஹித்திய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. இந்தப் புத்தகத்துக்கு விருது கொடுத்து தமிழ் இலக்கியத்தை கேவலப்படுத்தி இருக்கிறார்கள்.

மிதிலாவிலாஸ், ஸ்ரீமதி மைதிலி, பெண் மனம் போன்ற புத்தகங்கள் அவர் எழுதியவற்றில் சிறந்தவை என்று சொல்லலாம். ஆனால் கறாராகப் பார்த்தால் அவை எல்லாமே வீண்தான்.

அவருடைய எழுத்துகளை 2009-இல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது, ஆனால் அவரது வாரிசுகள் இதை மறுத்துவிட்டார்கள். (இன்னும் புத்தகங்கள் விற்று நல்ல ராயல்டி வருகிறது போலும்!)

ஜெயமோகன் அவரது காஞ்சனையின் கனவு, அரக்கு மாளிகை ஆகியவற்றை தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்த்திருக்கிறார். இந்தப் பதிவையே ஜெயமோகன் சொன்னார் என்பதால் “அரக்கு மாளிகை” பற்றி எழுதலாம் என்றுதான் ஆரம்பித்தேன். ஜெயமோகன் தனது seminal பட்டியலில் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு நாவலையும் பற்றி நாலு வரி எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. ஆனால் என் கண்ணில் அவ்வளவு worth இல்லை. எண்ணி நாலே நாலு வரிதான் எழுத முடியும். அதனால் இதை லக்ஷ்மியைப் பற்றிய பதிவாக மாற்றிவிட்டேன்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் ஜெயமோகன் பரிந்துரைக்கும் அரக்கு மாளிகை, இருவர் உள்ளம் திரைப்படமாக வந்த பெண் மனம், மிதிலாவிலாஸ், ஸ்ரீமதி மைதிலி இவற்றில் ஏதாவது ஒன்றைப் படிக்கலாம்.

ஜெயமோகன் பரிந்துரைக்கும் அரக்கு மாளிகையில் வழக்கமான நாயகி. தாத்தா இறக்கிறார். பணக்கார பெரியப்பாவுக்கு அவளை வீட்டில் வைத்துக் கொள்ள இஷ்டமில்லை. வேலைக்குப் போன இடத்தில் முதலாளியம்மாவின் கணவன் அசடு வழிகிறான். அதாவது வழக்கமான பிரச்சினைகள். இன்னொரு வீட்டில் governess மாதிரி ஒரு வேலை. அங்கே வழக்கமான அழகான இளைஞனோடு வழக்கமான காதல். சதி செய்யும் அவன் சித்தி. இதற்கு மேலும் இதைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

பெண் மனம்: (1946): ஏழைப் பெண் சந்திராவை தன் பண பலத்தால் ஜகன்னாதன் மணக்கிறான். அவள் தன்னை விரும்பவில்லை என்று தெரியும்போது ஒதுங்கிப் போக பார்க்கிறான். கடைசியில் இருவரும் இணைகிறார்கள். “உங்களுக்கு என் உடல்தானே வேண்டும்? எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் என் உள்ளம் கிடைக்காது” என்று சந்திரா முதல் இரவில் சொல்வது அந்நாளில் பேசப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. சிவாஜி, சரோஜாதேவி, எஸ்.வி. ரங்காராவ், எம்.ஆர். ராதா நடித்து கருணாநிதி வசனத்தில் இருவர் உள்ளம் என்று சினிமாவாகவும் வந்தது.

ஒரு காவிரியைப் போல: இந்த முறை தென்னாப்பிரிக்கப் பெண். அவளுக்குப் பல இன்னல்கள். கடைசியில் காதல் நிறைவேறுகிறது. இதற்கெல்லாம் சாகித்ய அகாடமி பரிசா?

ஸ்ரீமதி மைதிலி அவரது வழக்கமான கதைதான். மைதிலியை அடக்கி ஆளும் எல்லாரும் கடைசியில் மைதிலியிடம் உதவி பெறுகிறார்கள்.

அவருடைய இன்னும் சில புத்தகங்கள் பற்றி:

அத்தை: அந்தக் காலத்து தொடர்கதை ஃபார்மட்டுக்கு நன்றாகவே பொருந்தி வரும்.இந்த முறை பணக்கார அண்ணனை எதிர்த்து ஏழையை மணக்கும் பத்தினிக்கு பல இன்னல்கள்.

நாயக்கர் மக்கள்: பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. நாயக்கரின் மகன் அவரது எதிரியின் பெண்ணை காதலிக்கிறான். நாயக்கரின் மகளும் மாப்பிள்ளையும் சேராமல் இருக்க மாப்பிள்ளையை ஒரு தலையாக காதலித்த பெண் சூழ்ச்சி செய்கிறாள். கோர்வையாக இருக்கிறது, தொடர்கதை வடிவத்துக்குப் பொருந்தி வரும், அவ்வளவுதான்.

பண்ணையார் மகள்: பண்ணையாரும் மனைவியும் பிரிகிறார்கள். மகள் ஏழ்மையில் வளர்கிறாள், அப்பா பெரிய பண்ணையார் என்றே தெரியாது. அம்மா இறக்க, பெண் சொத்துக்கு வாரிசாக, மானேஜர் சொத்தை ஆட்டையைப் போடப் பார்க்க… இதற்கு மேல் கதையை யூகிக்க மாட்டீர்களா என்ன? தொடர்கதை வடிவத்துக்கு ஐம்பது அறுபதுகளில் பொருந்தி வந்திருக்கும், அவ்வளவுதான்.

சூரியகாந்தம்: வழக்கமான அவரது நாவல்தான், இருந்தாலும் வந்த காலத்தில் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும். இந்த முறை கஷ்டப்பட்டு வளர்க்கும் அத்தையை வில்லியின் மயக்கத்தில் எதிர்த்துப் பேசிவிட்டு திருந்தும் மருமகன். அவனுக்கு ஊனமுற்ற ஒரு முறைப்பெண், சதி செய்யும் மாற்றாந்தாய் என்று வழக்கமான பாத்திரங்கள்.

அவள் ஒரு தென்றல், ஜெயந்தி வந்தாள், கை மாறியபோது, கூறாமல் சன்யாசம், குருவிக்கூடு, மோகனா மோகனா, மோகினி வந்தாள், நீதிக்கு கைகள் நீளம், நிகழ்ந்த கதைகள், ராதாவின் திருமணம், சீறினாள் சித்ரா, உறவு சொல்லிக் கொண்டு, உயர்வு, வசந்தத்தில் ஒரு நாள், வேலியோரத்தில் ஒரு மலர், விடியாத இரவு போன்ற குறுநாவல்களையும் சமீபத்தில் மூலப்பதிவை எழுதும்போது படித்தேன். இவையெல்லாம் இன்று தண்டமாகத தெரிந்தாலும் ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

கங்கையும் வந்தாள்: நாயகனை ஏமாற்றும் நாயகியின் அப்பா. நாயகன்-நாயகிக்கு தமிழ் நாவல் வழக்கப்படி காதல், ஆனால் வெளியே சொல்லவில்லை. அப்பாவை பழிவாங்க நாயகியை மணந்து பிறகு தள்ளி வைக்கிறான். குழந்தை. குழந்தை முகம் பார்த்து அவன் மனம் மாறுகிறது. சுத்த தண்டம்.

காஷ்மீர் கத்தி: தவறான முறையில் பிறந்த பையன் குப்பத்தில் வளர்கிறான், அவனது பிரச்சினைகள். படிக்கலாம்.

கூண்டுக்குள்ளே ஒரு பச்சைக்கிளி: தண்டம். பெரிய மனிதர் தேவநாதன் உண்மையில் குரூரமானவர். தன்னை மணந்து கொள்ள மறுக்கும் இளம் பெண்+காதலனை உயிரோடு ஒரு அறையில் பூட்டிவிடுகிறார். ஆனால் வேலைக்காரன் வைரவன் தப்ப வைக்கிறான்.

முருகன் சிரித்தான்: பணக்கார, திமிர் பிடித்த டாக்டர் கணவன், மாமியார்; விவாகரத்து வரை விஷயம் போய்விடுகிறது. தற்செயலாக ஒரு விபத்து ஏற்பட, குடும்பம் இணைகிறது. தண்டம்.

ரோஜா வைரம்: தண்டம் என்ற ஒரு வார்த்தைக்கு மேல் இதைப் பற்றி எழுதும் எதுவும் அனாவசியம். For the record, தென்னாப்பிரிக்காவில் வைர வியாபாரம் செய்ய முயற்சிக்கும் ஒரு குடும்பம்.

உயிரே ஓடி வா: இன்னொரு தண்டம். பணக்காரப் பெண் ரேவதியை அவள் எழுதிய காதல் கடிதங்களை வைத்து முகுந்தன் ப்ளாக்மெயில் செய்கிறான். ரேவதியை மனம் செய்து கொள்ளப்போகும் சிவகுருவும், சிவகுருவின் அம்மாவும் அவனை பரவாயில்லை போ என்று துரத்துகிறார்கள்.

வீரத்தேவன் கோட்டை: தண்டம். இரண்டு குடும்பங்கள் எதிரிகள், வழக்கம் போல வாரிசுகளிடம் காதல், அப்புறம்தான் தெரிகிறது காதலன் வீரத்தேவன் எதிரி குடும்பத்தில் பிறந்து இங்கே வளர்கிறான் என்று.

விசித்திரப் பெண்கள்: சிறுகதைத் தொகுப்பு. எதுவும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சிறுகதை இல்லை. ஆனால் மொத்தமாகப் படிக்கும்போது பழைய விகடன்/கல்கி/கலைமகள் இதழ்களைப் புரட்டுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.

அவரது புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோது மறைந்த சேதுராமன் எழுதிய அறிமுகம் கீழே.


சேதுராமன் தரும் புதிய தகவல்: “அண்மையில் லக்ஷ்மியின் சகோதரர் திரு. ராகவனுடனும், மருமகள் திருமதி மகேஸ்வரனிடமும் பேசினேன். லக்ஷ்மியின் வாரிசுகள் தமிழ்நாடு அரசின் நாட்டுடைமைக்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்”.

சமுதாயத்தில் எத்துணைதான் படித்திருந்தாலும், பெண்ணுக்குச் சம உரிமை இல்லை; பெண்கள் சரி நிகர் சமான நிலை பெற வேண்டும் என்பதே குறிக்கோள். பெண் பிரச்சினை, உரிமையே மையக் கருத்து. பெண்ணின் பெருமை பேசுவதே, அருமை பாராட்டுவதே அடித்தளம். இல்லத்தின் உயிர் நாடியே பெண்தான் என்பது. குடும்பச் சிக்கல்களை அலசுவது. பெண்மையின் மென்மை உணர்வுகள்/ஆண்மையின் வன்மை உணர்ச்சிகள், இவற்றின் உரசல்களால் உருவாகும் நிகழ்ச்சிகளைப் பின்னித் தருபவர்; அதேசமயம் நமது தமிழ் மரபினையும், இந்தியப் பண்பாட்டினையும் உயிராகப் பேணி எழுதி வருபவர் – அவர் தான் லக்ஷ்மி என்கிற டாக்டர் எஸ்.திரிபுரசுந்தரி (மது.ச. விமலானந்தம்)

சிதம்பரத்தை அடுத்துள்ள அம்மாபேட்டை என்ற சிறு கிராமத்தில் 1921ம் வருஷம் மார்ச் மாதம் 21 தேதி பிறந்தவர் லக்ஷ்மி. பெற்றோர் திருச்சி ஜில்லா தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீனிவாசன், பட்டம்மாள் என்ற சிவகாமி. உடன் பிறந்தவர்கள் ஐவர், நான்கு சகோதரிகள், ஒரு தம்பி.

தொட்டியம் தொடக்கப் பள்ளியிலும், முசிறி உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற லக்ஷ்மி, தனது உயர் நிலைக் கல்வியைத் திருச்சியிலுள்ள ஹோலி க்ராஸ் கல்லூரியில் தொடர்ந்தார். காரணம் ஐந்தாவது ஃபாரம் படிப்பை முடித்து எஸ்.எஸ்.எல்.சி வகுப்புக்குப் போக வேண்டிய சமயம், முசிறிப் பள்ளியின் தலைமையாசிரியர் “ஆண்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளியில் தொடர்ந்து வயது வந்த ஒரு பெண்ணைப் படிக்க அனுமதிக்க முடியாது” என்றதால்தான். சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், முறையிட்டு, விடுதி வசதியைப் பெற்றார் லக்ஷ்மி. தமிழில் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் ஆண்டு ஒரு பரிசையும் பெற்றார். இண்டர் முடித்தவுடன் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சென்னையிலுள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பினார். முதலில் காத்திருப்புப் பட்டியலில் இருந்தபோதிலும் இவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.

முதல் ஆறு மாதங்கள் ப்ரி-ரிஜிஸ்ட்ரேஷன் ஸ்டான்லியிலும், கல்லூரியில் வசதிகள் இல்லாததால், அனாடமி, ஃபிசியாலஜி படிப்பை மதராஸ் மருத்துவக் கல்லூரியில் இரண்டு வருஷங்கள் தொடர்ந்து, மூன்றாம் வருஷப் படிப்பைத் தொடர ஸ்டான்லி திரும்பினார். இவர் மருத்துவம் படித்த காலம் இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். அதன் தாக்கங்கள் எப்படியிருந்தன என்பதை கதாசிரியையின் கதை என்ற தமது சுயசரிதத்தில் விவரமாக எழுதியிருக்கிறார். மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள எழுத்தின் உதவியை நாடினார். அக்காலத்தில் ஆனந்த விகடன் காரியாலயம் ஸ்டான்லிக்கு அருகே ப்ராட்வேயில்தான் இருந்தது. இதைப் பற்றி திருமதி பட்டம்மாள் வாசன் நினைவு கூர்கிறார்:

ஒரு நாள் லக்ஷ்மி ஃபோன் பண்ணினா. “நான் கதையெல்லாம் எழுதுவேன், உங்கள் கணவரைப் பார்த்துப் பேச வேண்டும், உதவி செய்வீர்களா?” நீ ஆஃபீசுக்குப் போனால் அவரைப் பார்க்கலாம் என்றேன். அவரிடம் “டாக்டருக்குப் படிக்க வேண்டும், எங்களுக்கு இப்போது நிதி வசதி சரியாயில்லை. என்னுடைய கதைகள் சிலதைக் கொண்டு தருகிறேன். பிரசுரித்துப் பண உதவி செய்தால் சந்தோஷப்படுவேன்” என்று கேட்டிருக்கிறாள். நல்ல கதைகள் என்றால் பிரசுரிப்போம் என்று சொன்ன வாசன், பின்னர் கதைகள் தரமாக இருக்கவே பிரசுரம் செய்து உதவினார்.

டாக்டர் படிப்பு முடித்ததும் லக்ஷ்மியின் குடும்பம் சென்னையிலேயே குடியேறிற்று. தங்கைகள் கல்யாணம் பொறுப்பேற்று நடத்தி முடித்தார். 1955ம் வருஷம் தானும் கண்ணபிரான் என்ற தென்னாப்பிரிக்கத் தமிழரை திருமணம் செய்துகொண்டார். சென்னையிலுள்ள அடையாறு தியோசாஃபிகல் சொசைட்டியில்தான் இந்தத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் லக்ஷ்மி இருபத்திஇரண்டு வருஷங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்தார். மகப்பேறு வைத்தியராகப் பணியாற்றினார். இத்தம்பதிகளுக்கு மகேஸ்வரன் என்ற ஒரு பிள்ளை.

1966ம் வருஷம் கண்ணபிரான் இறந்தது லக்ஷ்மியை மிகவும் பாதித்தது. இருப்பினும் அங்கேயே தன் வாழ்க்கையைத் தொடர்ந்த லக்ஷ்மி 1977ம் வருஷம் சென்னை திரும்பினார். என்ன காரணமாகவோ அதன் பிறகு அவர் தொடர்ந்து எழுதவில்லை. மகேஸ்வரனையும் மருத்துவப் படிப்பில் சேர்த்து அவரையும் மருத்துவராக்கினார்.

பதினான்கு வயதிலேயே எழுத ஆரம்பித்த லக்ஷ்மி நாற்பத்திஐந்து ஆண்டுகள் படைப்பிலக்கியம் செய்து ஆயிரத்துக்கும் மேலான சிறுகதைகள், நூற்றுக்கும் மேலான நாவல்கள் வெளியிட்டுள்ளார். மருத்துவம், மகப்பேறு போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் பவானி (1940). பெண் மனம் (1946), மிதிலா விலாஸ் என்ற இரு நாவல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசையும், ஒரு காவிரியைப் போல 1984ல் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றன. காஞ்சனையின் கனவு, பெண் மனம் என்ற நாவல்கள் காஞ்சனா, இருவர் உள்ளம் என்ற தலைப்புகளுடன் மூன்று தென்மொழிகளில் திரைப் படங்களாயின. இருவர் உள்ளம் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியது முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி.

லக்ஷ்மியின் மறைவு 1987ம் வருஷம் ஜனவரி மாதம் ஏழாம் தேதி சென்னையில். அவரது மறைவு குறித்து ஆனந்த விகடனில் (25-1-1987 – மீள் பதிப்பு ஆனந்த விகடன் 11-3-2009) பட்டம்மாள் வாசன் நினைவு கூர்வது:

வாழ்க்கையில் நிறையச் சிரமப்பட்டிருந்தாலும், அவ பேசறப்போ சிரிச்சுண்டேதான் பேசுவா. சாகித்ய அகாடமி பரிசு வாங்கியதும் என்னைத் தேடி வந்து சொன்னது எனக்குப் பெருமையா இருந்தது. சமீபத்திலே எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தபோது ‘என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணப் போறேன்’ என்று ரொம்ப சந்தோஷமாச் சொன்னாள். அவ சாகும்போது, அந்த ஒரே பிள்ளையும் துரதிர்ஷ்டவசமா கிட்டக்க இல்லாம எங்கேயோ இங்கிலாந்திலேயா இருக்கணும்னு நினைச்சபோது என் மனசுக்கு கஷ்டமாயிருந்தது.”

சொல்லும்போதே திருமதி பட்டம்மாள் வாசனின் குரல் தழுதழுத்துக் கண்கள் பனித்தன.

லக்ஷ்மியின் படைப்புகள் வருமாறு:
அழகின் ஆராதனை — அவள் தாயாகிறாள் — அசோகமரம் பூக்கவில்லை — அடுத்த வீடு — அரக்கு மாளிகை — அதிசய ராகம் — அத்தை — அவளுக்கென்று ஒரு இடம் — அவள் ஒரு தென்றல் — இரண்டாவது மலர் — இவளா என் மகள் — இரண்டு பெண்கள் — இரண்டாவது தேனிலவு — இனிய உணர்வே என்னைக் கொல்லாதே — இருளில் தொலைந்த உண்மை – இன்றும் நாளையும் – உறவுகள் பிரிவதில்லை — உயர்வு — உறவின் குரல் — ஊன்றுகோல் — என் வீடு — என் மனைவி — ஒரு காவிரியைப் போல (சாகித்திய அகாதெமி பரிசு 1984) — ஒரு சிவப்பு பச்சையாகிறது

கடைசி வரை — கங்கையும் வந்தாள் — கதவு திறந்தால் — கதாசிரியையின் கதை (இரண்டு பாகங்கள்) — கழுத்தில் விழுந்த மாலை — கணவன் அமைவதெல்லாம் — காஷ்மீர் கத்தி — காளியின் கண்கள் — கூறாமல் சன்னியாசம் — கூண்டுக்குள்ளே ஒரு பைங்கிளி — கை மாறிய போது — கோடை மேகங்கள் — சசியின் கடிதங்கள் — திரும்பிப் பார்த்தால் — துணை — தை பிறக்கட்டும் — தோட்டத்து வீடு — நதி மூலம் — நல்லதோர் வீணை — நாயக்கர் மக்கள் — நிற்க நேரமில்லை – நியாயங்கள் மாறும்போது — நிகழ்ந்த கதைகள் — நீலப்புடைவை — நீதிக்குக் கைகள் நீளம் — பண்ணையார் மகள் – பவளமல்லி — பவானி (முதல் நாவல்) — புனிதா ஒரு புதிர் — புதை மணல் — பெயர் சொல்ல மாட்டேன் — பெண் மனம் (தமிழ் நாடு அரசு பரிசு) — பெண்ணின் பரிசு — மரகதம் — மனம் ஒரு ரங்க ராட்டினம் — மண் குதிரை — மருமகள் — மறுபடியுமா? — மாயமான் — மீண்டும் வசந்தம் – மீண்டும் ஒரு சீதை — மீண்டும் பிறந்தால் — மீண்டும் பெண் மனம் – முருகன் சிரித்தான் — மோகத்திரை

ராதாவின் திருமணம் — ராம ராஜ்யம் — ரோஜா வைரம் — வனிதா — வசந்திக்கு வந்த ஆசை — வடக்கே ஒரு சந்திப்பு — வாழ நினைத்தால் — வீரத்தேவன் கோட்டை — வெளிச்சம் வந்தது — ஜெயந்தி வந்தாள் — ஸ்ரீமதி மைதிலி

தகவல் ஆதாரம்:
1. தமிழ் இலக்கிய வரலாறு – மது.ச.விமலானந்தம்
2. லக்ஷ்மியின் கதாசிரியையின் கதை – பூங்கொடிப் பதிப்பகம் 1985
3. ஆனந்த விகடன் கட்டுரை (11-3-2009)
4. வலைத்தளக் கட்டுரைகள்


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
காஞ்சனையின் கனவு
தமிழ் விக்கி குறிப்பு