சக்கரவர்த்தித் திருமகன்

சக்கரவத்தித் திருமகன் இன்று ராமாயணம் என்ற பேரிலேயே பதிக்கப்படுகிறது. ஆனால் என்னை சக்கரவத்தித் திருமகன் என்ற பெயர்தான் கவர்கிறது. கல்கியில் இந்தப் பேரில்தான் ராஜாஜி தொடராக எழுதினார். பிறகு 1956-இல் பாரி நிலையம் இதே பேரில் மலிவு விலையில் (4 ரூபாய் விலை) வெளியிட்டது. வானதி பதிப்பகமும் பின் இதே பேரில் வெளியிட்டது என்று நினைவு. வானதி திருநாவுக்கரசிடம் எனக்கு ராயல்டி எல்லாம் முக்கியமில்லை, ஆனால் எல்லாரிடம் போய்ச் சேர வேண்டும், குறைந்த விலை வைக்கப் பார் என்று சொன்னாராம்.

ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது, பிரபலமாகவும் இருக்கிறது.

(அடிக்குறிப்பு: சக்கரவர்த்தித் திருமகன் என்ற பேர்தான் என்னைக் கவர்கிறது என்று சொல்லி இருந்தேன். எம்ஜிஆருக்கும் அதேதான். 1957-இல் ஒரு திரைபப்டத்துக்கு “சக்கரவர்த்தித் திருமகள்” என்று பேர் வைத்தார்!)

ராஜாஜியின் வார்த்தைகளிலேயே:

நாட்டுக்கு நான்‌ பல பணிகள்‌ செய்ததாக நண்பர்கள்‌ போற்றுவதுண்டு. அவற்றில் எல்லாம்‌ வியாசர்‌ விருந்தும்‌ சக்கரவர்த்‌தித் திருமகனும்‌ எழுதி முடித்ததுதான்‌ மேலான பணி என்பது என்‌ கருத்து

ராஜாஜி உன்னத மனிதர்தான், பெரிய தேசபக்தர்தான், பாகிஸ்தானைப் பிரித்துவிடுவது தவிர்க்க முடியாதது, சோஷலிசம் பல மோசமான விளைவுகளைக் கொண்டு வரும் என்றெல்லாம் யூகித்த பெரிய அறிவாளிதான், நல்ல நிர்வாகிதான், ஆனால் என் கருத்தும் இதுவே. வியாசர் விருந்தும், சக்கரவத்தித் திருமகனும்தான் இந்தியாவுக்கு – அதுவும் குறிப்பாக தமிழகத்துக்கு அவர் செய்த அதிமுக்கியப் பணி.

இது என் யூகம்தான்; என்னதான் நண்பர் என்றாலும் ஈ.வெ.ரா.வின் ராமாயணத்தைப் பற்றிய நயமற்ற பேச்சு அவருக்கு கொஞ்சமாவது கடுப்பேற்றி இருக்க வேண்டும். நீ ராமாயணத்தைப் படிக்காதே என்று சொல்கிறாயா, நான் படிக்க வைக்கிறேன் பார் என்றுதான் இந்தத் தொடரை எழுதினார் என்று நினைக்கிறேன். படிக்காதே என்று சொன்னவர், படி என்று சொல்பவர் இருவரில் யார் வெற்றி பெற்றார் என்பது தெளிவு.

சக்கரவத்தித் திருமகனுக்கு 1958-க்கான சாஹித்ய அகடமி விருது கொடுக்கப்பட்டது. சிறந்த புத்தகம்தான், ஆனால் அந்த விருதை ராஜாஜி நிராகரித்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன், விருது வால்மீகிக்குச் சேர வேண்டியது, வால்மீகியோ விருதுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்!

புத்தகத்தின் முதன்மை பலம் எளிமை. ராஜாஜிக்கே எளிமையாக எழுதுவது சரிதானா என்று சந்தேகம் இருந்திருக்கிறது. வால்மீகியையும் கம்பனையும் உரைநடைப்படுத்தினால் கவிதையின் அழகு முற்றிலும் போய்விடும் என்று நினைத்திருக்கிறார். அவரது லட்சிய உலகத்தில் டிகேசி போன்றவர்கள் ஒவ்வொரு பாடலாக எடுத்துக் கொண்டு அதை முதலில் ரசனை மிகுந்த உரைநடையில் விளக்கிவிட்டு பிறகு பாடலாகப் பாட வேண்டும், அதுவே கம்பனையும் வால்மீகியையும் முழுதாக கிரகித்துக் கொள்ளும் வழி. ஆனால் கவி அழகே இல்லாவிட்டாலும் கதாபாத்திரங்களின் சிறப்பையும் கதைப்பின்னலையும் வாசகர்களுக்குப் போய்ச் சேர வைக்க முடியும் என்றும் எண்ணி இருக்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே

சீதை, ராமன்‌, ஹனுமான்‌, பரதன்‌ இவர்களை விட்டால்‌ நமக்கு வேறு என்ன செல்வமோ நிம்மதியோ இருக்கிறது?

புத்த்கத்தின் இரண்டாவது பலம் ராமாயணத்தை பக்தி காவியமாக சித்தரிக்காமல் அதை மனிதர்களின் பிரச்சினைகளாக சித்தரிப்பது. ராஜாஜியே சொல்வது போல

வால்மீகி ராமாயணத்தில் எல்லாப்‌ பாத்திரங்களும்‌ அபூர்வ குணம் கொண்ட மானிடர்கள்‌. தெய்விகத்‌தன்மை இளம்‌ சூரியனைப்‌ போல லேசாக வீசுகிறது, அவ்வளவே. மானிட இயல்பு அதிகம்‌. பின்னால்‌ வந்த துளசிதாஸர்‌ காலத்‌தில்‌ பக்தி ரசம்‌ நடுப்பகல் போல்‌ விளங்குகிறது. வேறு எதற்கும்‌ இடமில்லாமல்‌ பூரண ஒளி பெற்றுவிட்டது. கம்பருடைய சித்திரத்தில்‌ பக்தி பிரதானமாகவே இருந்தாலும்‌ வால்மீகி சித்திரத்தினுடைய மானிட வண்ணம்‌ அழிந்து போகாமல்‌ பக்தியைப்‌ பின்னால்‌ எழில்‌ வீசும்படி வைத்து, மானிட சித்திரத்தை இன்‌னும்‌ பேரழகு படும்படி செய்திருக்கிறார்‌.

ராஜாஜி பெரிதும் வால்மீகியைத்தான் பின்பற்றி இருக்கிறார். அவ்வப்போது கம்பனை சேர்த்துக் கொள்கிறார். அபூர்வமாக துளசிதாசரை. அதனால் அனாவசிய சப்பைக்கட்டுக்கள் இல்லை. உன்னத மனிதர்கள், ஆனால் மனிதர்கள்தான் என்ற தொனி அடிநாதமாக இருக்கிறது. உதாரணமாக ஆரண்ய காண்டத்தில் விராதன் சீதையைப் பிடித்துக் கொள்கிறான். அது வரை கைகேயியைப் பற்றி ஒரு வார்த்தை தவறாகப் பேசாத ராமன், சீதையை அரக்கன் பிடித்துக் கொண்டதும்

ஐயோ லக்ஷ்மணா, பார்த்தாயா? எதையும்‌ பொறுக்கும்‌ என்னால்‌ இதைப்‌ பொறுக்க முடியவில்லையே! இதைத்‌ தெரிந்தே பாவி கைகேயி நம்‌மைக்‌ காட்டுக்கு அனுப்பினாளோ!

என்று அலறுகிறான். அவதார ராமன் அல்லன்! சாதாரணமாகக் காணப்படும் உன்னத மனிதன் ராமனே அல்லன்! சீதை மீதுள்ள அபரிமிதமான காதலால் நிலை தவறிய, தன் பலத்தையே உண்ராத ராமன்! இப்படி மனித உணர்வுகளை விவரித்து எழுதுவதால்தான், முரண்பாடுகள் நிறைந்த மனித இயல்பை மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டுவதால்தான் ராமாயணமே உயர்ந்த காவியமாக இருக்கிறது. அப்படிப்பட்ட முரண்பாடுகளையும், குறைகளையும் பக்தி மூலம் வடிகட்டிவிடாமல் எடுத்துச் சொல்லுவதில்தான் இந்தப் புத்தகத்தின் மகிமையே இருக்கிறது.

ராஜாஜி மனம் உருகி வழிபடும் ராமனே ஆனாலும் தவறு தவறுதான், எந்த விதமான சப்பைக்கட்டுகளும் இல்லை. உதாரணமாக

வாலியின்‌ இந்தக்‌ குற்றச்‌சாட்டுக்கு ராமன்‌ என்ன பதில்‌ சொல்ல முடியும்‌ ? ஏதோ சொன்னதாகவும்‌ அதைக்‌ கேட்டு வாலி சமாதானப்பட்டதாகவும்‌ வால்மீகி ராமாயணத்தில்‌ சொல்லப்படுகிறது. அதில்‌ சாரம்‌ இல்லை என்று விட்டுவிட்டேன்‌. பெரியோர்கள்‌ மன்னிப்பார்கள்‌. ராமாவதாரத்தில்‌ ஆண்டவனும்‌ தேவியும்‌ சகிக்க வேண்டிய துக்கங்களில்‌ இந்தத்‌ தவறும்‌ பழியும்‌ ஒன்று.

மீண்டும் ராஜாஜியின் வார்த்தைகளில்:

ராமனுடைய நற்குணங்களை விட்டுவிடாமல்‌ ராமனிடம்‌ கண்ட குறைகளைத்‌ தாம்‌ அகற்றினால்‌ யார்‌ வேண்‌டாம்‌ என்று கூறுவார்கள்‌?

அங்கங்கே கம்பன் எங்கெல்லாம் வால்மீகியிடமிருந்து வேறுபடுகிறான் என்பதையும் அழகாக விளக்குகிறார். உதாரணமாக சூர்ப்பனகை அறிமுகம். வால்மீகிக்கு அது கதையை முன்னகர்த்தும் ஒரு சம்பவம். அதனால் ராமன் சூர்ப்பனகையிடம் தேவையில்லாமல் கடுமையாக நடந்து கொள்வது போலத் தோன்றுகிறது. ஆசை கொண்டாள், அதைச் சொன்னாள், ராமன் அவளை நீ லக்ஷ்மணனிடம் முயன்று பார் என்று சொல்வதெல்லாம் இன்றைய விழுமியங்களின்படி அனாவசியமாகச் சீண்டுவது போல கூடத் தோன்றலாம். கம்பனோ அதை அழகாகச் செதுக்கி வடிவமைத்திருக்கிறான். சூர்ப்பனகை அழகிய பெண் போல உரு மாறி வருவதும் – ‘திங்களிற் சிறந்தொளிர்‌ முகத்தள்‌ செவ்வியள்‌ பொங்கொளி விசும்பினில் பொலியத்‌‘ தோன்‌றுவதும் சீதையைப் பார்த்து இவள் உருமாறி வந்த அரக்கி என்று சொல்வதும் அருமையான நகாசு வேலை!

அவர் எடுத்தாளும் கம்பன் பாடல்கள் பல அழகானவை. கவிதை அலர்ஜி உள்ள எனக்கே கற்பூர வாசனை தெரிகிறது.

தடுத்(து) இமையாமல் இருந்தவர் தாளில்
மடுத்ததும் நாண்நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினை யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்!

முழுப்பாடலுமே பிரமாதம் என்றாலும் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்! என்ற ஒரு வரி போதும் கம்பனின் கவித்துவத்தைக் காட்ட.

தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது; சூழ்ச்சியின் அரக்கர்
மாய வானவர் பெற்ற நல்வரம் உண்மையாலும்
ஆய அந்தணர் இயற்றிய அருந்தவத்தாலும்

கைகேயியின் தூய சிந்தை திரிந்தது வானவர் பெற்ற நல்வரத்தால் என்பது எத்தனை நயமான சிந்தனை!

நதியின்‌ பிழையன்று நறும்புனலின்மை; அற்றே
பதியின்‌ பிழையன்று; பயந்து நமைப்‌ புரந்தான்‌
மதியின்‌ பிழையன்று; மகன் பிழையன்று; மைந்த?
விதியின்‌ பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டதென்றான்

இந்தக் கவிதையை என்றாவது என்னால் ஆங்கிலத்தில் கவிதையாகவே மொழிபெயர்க்க முடிந்தால் அன்றுதான் ஆங்கிலம் எனக்கு கை வந்தது என்று நினைப்பேன்.

தூய வாசகம் சொன்ன தோன்றலை
தீய கானகம் திருவின் நீங்கி முன்
போயினான் தன் முன் போந்துளான் என
ஆய காதலால் அழுது புல்லினாள்

கோசலை தூய வாசகம் சொன்ன பரதனைப் பார்ப்பது தீய கானகம் போயிருக்கும் ராமனே திரும்பி வந்தது போலிருக்கிறது என்று அழுவதை விட உன்னதமான காட்சி அபூர்வம்.

முன்னை நும் குல முதலுளோர்கள்தாம்
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்
மன்னர் மன்னவா! என்று வாழ்த்தினாள்
உன்ன உன்ன நைந்துருகி விம்முவாள்

கோசலை பரதனை “மன்னர் மன்னவா” என்று வாழ்த்துவதை விட உளம் நிறைய வைக்கும் பாடல் ஏது?

இலக்குவ! உலகம்‌ ஓர்‌ ஏழும்‌ ஏழும்‌ நீ
கலக்குவை என்பது கருதினால்‌ அது
விலக்குவதரிது அது விளம்பல்‌ வேண்டுமோ?
புலக்குறிததொரு பொருள்‌ புகலக்‌ கேட்டியால்‌

தம்பியர் இருவரையும் புரிந்து வைத்திருக்கும் ராமன்!

அவ்வப்போது பெரிசு நமக்கு கதை சொல்வது போலவே கொஞ்சம் விளக்கங்கள் தருகிறார். உதாரணமாக அகலிகையைப் பற்றி சொல்லும்போது எப்பேர்ப்பட்ட குற்றத்துக்கும் மன்னிப்பு உண்டு என்பதைத்தான் இந்தக் கதை காட்டுகிறது என்று விளக்கம் தருவதெல்லாம் just charming. இன்னொரு இடத்தில் ஆரண்ய காண்டத்தில் பத்து வருஷம் ராமனும் சீதையும் லக்ஷ்மணனும் சுகமாக வாழ்ந்தனர் என்று சொல்லிவிட்டு

பத்து ஆண்டுகளை ஒரு அத்தியாயத்தில்‌ முடித்து விடுகிறேனே என்று குறைப்படலாகாது. சந்தோஷமாகவும்‌ சுகமாகவும்‌ கழியும்‌ காலம்‌ இலக்கியத்தில்‌ சுருக்கமாகத்தான்‌ முடியும்‌

என்கிறார்! Absolutely charming aside!

பாலகாண்டத்தில் பகீரதன் பகீரதப் பிரயத்தனம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்த கதையை எளிமையாக, அதே நேரத்தில் மிகச் சிறப்பாக விவரிக்கிறார். கங்கையின் வேகத்தைத் தாங்க சிவன் தன் சடையில் அவளை ஏந்திக் கொண்டாராம், கங்கையால் வெளியே வரமுடியவில்லையாம், சடைக்குள் சிறைப்பட்டாளாம், அதாவது ஹிமாலயத்தின் குகைகளுக்குள் கங்கை நதி இருந்ததாம் என்கிறார். கவித்துவமான கற்பனை. விஸ்வாமித்ரரின் ஃப்ளாஷ்பாக் இப்படி பல முன்கதைகளை கொண்டு வருவது புத்தகத்திற்கு பெரிய கவர்ச்சி.

பல் நூறாண்டுகள் வாய்மொழிக் கதையாக இருந்ததையே வால்மீகி காவியமாக்கினார் என்றே ராஜாஜியும் கருதுகிறார். கம்பனும் முன்பு மூவர் பாடிய ராமாயணத்தை நான் தமிழ்ப்படுத்துகிறேன் என்கிறான். மற்ற இருவர் யாரோ தெரியவில்லை.

அப்புறம் இருக்கவே இருக்கிறது, ராமாயணம் தன்னளவில் உயர்ந்த காவியம். அதை என் போன்ற பாமரன் நாளைக்கு ஸ்வாஹிலியில் மொழிபெயர்த்தால் கூட கெடுத்துவிட முடியாது. ராமாயணத்தை விட உயர்ந்த காவியம் என் கண்ணில் மகாபாரதம் மட்டுமே. (மகாபாரதத்தைப் பற்றிய என் கருத்துக்களை நீங்கள் முழுதாக நம்பிவிடக் கூடாது, எனக்கு மகாபாரதத்தின் மீது இருக்கும் அபரிமிதமான பித்தே என் கருத்தை உருவாக்கலாம்). உலகின் எந்த மொழியிலும் (எனக்குத் தெரிந்த வரை) இப்படி இரண்டு காவியங்கள் அமையவில்லை என்றே கருதுகிறேன்.

ராமாயணத்தின் பெரும் பலம் மனிதர்களின் தேர்வுகளைக் காட்டுவது. இரண்டு வழியுமே சரிதான் என்றால் எதைத் தேர்ந்தெடுபப்து? விபீஷணன் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறான், கும்பகர்ணன் மற்றதை. ராமன் காட்டுக்குப் போக மறுத்திருந்தால் அதில் என்ன தவறு? அப்பாவின் மரணத்துக்கு அவனே காரணம், he should have read between the lines என்று கூட வாதிடலாம். தசரதன் வாக்காவது மண்ணாவது போடி என்று மறுத்திருக்கக் கூடாதா? அவர்களது தேர்வுகள் – இந்த மாதிரி தேர்வுகள் மகாபாரதத்தில் இன்னும் அதிகம் – காவியத்தை பெரிதும் உயர்த்துகின்றன…

அதுவும் பரதனின் கதாபாத்திரம்! ஆயிரம் ராமர், ஆயிரம் சீதை, ஆயிரம் ஹனுமன், ஆயிரம் கும்பகர்ணன், இந்திரஜித், ராவணன், ஏன் கிருஷ்ணன், கர்ணன், பீமன், பீஷ்மர், துரோணர், அர்ஜுனன் கூட நின்கேழ் ஆவரோ! ராஜாஜியே சொல்வது போல

சக்கரவர்த்‌தித்‌ திருமகனும்‌ பரதனும்‌ ஆண்டவனுடைய திருவவதாரம்‌ என்றாலும்‌ சரி, இல்லை இவர்கள்‌ வால்மீகி முனிவருடைய கற்பனைச்‌ சிருஷ்டியாகவே இருந்தாலும்‌ சரி, முனிவருக்கு அதற்காகக்‌ கோயில்‌ கட்டித்‌ தலைமுறை தலைமுறையாகப்‌ பூஜிக்கத்‌ தகும்‌

ராமாயணத்தில்தான் எத்தனை அற்புதமான காட்சிகள்! எத்தனை காட்சிகளை நம் வாழ்விலும் அனுபவித்திருப்போம்!

ராமனுக்கு பட்டாபிஷேகம் என்று கூனி சொன்னதும் கைகேயி முத்து மாலையைப் பரிசாகத் தருவதும், ராமனுக்குப் பிறகு எப்படியும் பரதனும் நூறாண்டு அரசனாக இருப்பான், எதற்காக கோள் சொல்கிறாய் என்று வெகுளித்தனமாக கூனியிடம் கேட்கும் இடம் கைகேயியின் பாத்திரத்தை நாலு வரியில் காட்டிவிடுகிறது.

தசரதன் தான் சாபம் பெற்ற கதையைச் சொல்லும்போது மகனை இழந்த முதியவர்கள் தெரியாமல் செய்த தவறு, அதனால் நீ இப்போது பிழைத்தாய் என்று சொல்லும் இடம் எந்தத் துக்கத்திலும் நியாய உணர்ச்சி மங்கிவிடாத இரு பெரியவர்களைக் காட்டுகிறது.

சீதை மரவுரியை எப்படிக் கட்டிக் கொள்வது என்று தெரியாமல் ராமனை சொல்லிக் கொடுக்கும்படி கேட்பதும் ராமன் அவளது பட்டாடைக்கு மேலாகவே மரவுரியைக் கட்டிவிடுவதும் எத்தனை charming ஆன காட்சி! என் தலைமுறையில் ஸ்பூனாலும் ஃபோர்க்காலும் எப்படி சாப்பிடுவது என்று கணவனிடம் கற்றுக்கொண்ட மனைவிகள் உண்டு.

கௌசல்யா ராமன் காட்டுக்குப் போனான், உம்மைத் திட்டக் கூடாது ஆனாலும் கோபத்தை அடக்க முடியவில்லை என்று தசரதனிடம் சொல்வது போல் நம் வாழ்க்கையில் எத்தனை முறை வேண்டியவர்களைக் கண்டிக்கவும் முடியாமல் கண்டிக்காமல் இருக்கவும் முடியாமல் தவித்திருப்போம்!

கைகேயி பக்கத்தில் நிற்க முடியவில்லை, “துன்னரும் துயர் கெடத் தூய கோசலை பொன்னடி தொழ” வர வரும் பரதனிடம் கௌசல்யா நான் உடன்கட்டை ஏற வேண்டும் அதற்கு சித்தம் செய் என்று சொல்லிவிட்டு அடுத்த வரியில் என்னை ராமனிடம் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடு என்று மாற்றி மாற்றிப் பேசுவது – கவி மனித சுபாவத்தை நன்கு உணர்ந்தவர்! அதுவும் கௌசல்யா பரதனின் உள்ளம் புரிந்ததும் தூய வாசகம் சொன்ன தோன்றலை பார்ப்பது காட்டுக்குப் போனவனே திரும்பி வந்தது போலிருக்கிறது என்று அழுவதும் இந்தக் குலத்து முன்னோர்களை நீ விஞ்சிவிட்டாய், “மன்னர் மன்னவா!” என்று பரதனை மனம் நிறைந்து வாழ்த்தி அழைப்பதும் – என்ன சொல்லட்டும்!

லக்ஷ்மணன் சித்ரகூடத்தில் கட்டிய குடிசையைப் பார்த்துவிட்டு இதை நீ எங்கு கற்றாய் என்று ராமன் வியப்பது! ஐஃபோனில் என்னால் பேசத்தான் முடியும், வேறு செயலிகளை எப்படி செயல்படுத்துவது என்று என் மனைவியும் பெண்களும்தான் கற்றுத் தந்திருக்கிறார்கள், அப்போதெல்லாம் மனம் நிறைந்திருக்கிறேன்.

என் பொருட்டு நீ புல் மேல் படுத்தாய். நான் இதைக் கண்டும் உயிருடன் இருக்கிறேன். கிரீடமும் சூட்டிக் கொள்ள வேண்டுமாம்! என்று பரதன் வருந்தும் இடம் இன்னொரு அற்புதம். புல் படுக்கையிலிருந்து கிரீடத்துக்குத் தாவும் மனம்!

லக்ஷ்மணன் பரதன் ராமன் மீது படையெடுத்து வருகிறான் என்று ஆத்திரப்படும் இடம்; அயோத்தியின் படை ராமனைத் தாக்க சம்மதிக்குமா என்று கூடத் தோன்றவில்லை, அடிமனதில் இருக்கும் கோபமும் வருத்தமும் அவன் கண்ணை மறைக்கிறது! ராமன் அவனைப் பார்த்து சிரிப்பதும் லக்ஷ்மணன் உண்மையை உணர்ந்து வெட்கப்படுவதும் நயமான காட்சி.

பரதன் ராமனிடம் இன்ன பேச வேண்டும், இப்படி வாதிட வேண்டும் என்று மனதுக்குள் ஆயிரம் ஒத்திகை பார்த்துவிட்டு ராமனைப் பார்த்ததும் எல்லாம் மறந்துபோய் ஓடி அவன் காலில் விழும் காட்சி! கௌசல்யாவிடமும் ஏன் குகனிடமும் பரத்வாஜ மகரிஷியிடமும் கூட தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளான பரதன் ராமனிடம் ஒரு வார்த்தையும் விளக்கும் தேவையை உணராதது, சொல்லிக் கொண்டே போகலாம்.

சூர்ப்பனகையின் கோபமும் ஆங்காரமும் தன்னை நிராகரித்து சகோதரர்களான கர தூஷணரைக் கொன்ற ராமன் மீதல்ல; தன்னை அங்கவீனம் செய்த லக்ஷ்மணன் மீதல்ல. சீதை மீதுதான், கர தூஷணரைக் கொன்றான், என் மூக்கை அரிந்தான் என்றெல்லாம் “சந்தை அடைத்தாலும்” சீதையைப் பற்றிய ஆசையைக் கிளப்பிவிடுவதுதான் சூர்ப்பனகையின் குறிக்கோள் என்று விளக்குவது மனித மனத்தின் அற்புதக் காட்சி. ராவணனும் மறுக்கும் மாரீசனிடம் அதே சாக்குபோக்குகளைச் சொல்வது இன்னொரு பிரமாதமான காட்சி. (சந்தை அடைப்பது என்பது ராஜாஜியே பயன்படுத்தி இருக்கும் சொல்வடை)

எப்போதும் அவசரப்பட்டு முடிவெடுக்கும் லக்ஷ்மணன் மாயமான் என்று எச்சரிப்பதும் எப்போதும் நிதானமாக முடிவெடுக்கும் ராமன் மாயமானைத் துரத்துவதும் எத்தனை நயமான முரண்!

ராமன் போனால் நீ என்னை அடையலாம் என்று பார்க்கிறாயா, இதற்காகத்தான் வனத்திற்கு எங்களுடன் வந்தாயா, பரதனோடு சேர்ந்து சூழ்ச்சியா என்று சீதை பேசும் இடம் பரதன் தவறே செய்யாதவன் என்று தெரிந்திருந்த போதிலும் ஆழ்மனதில் பரதன் மீது இருக்கும் ஆங்காரத்தை அழகாகக் காட்டுகிறது.

ராமன் அசோகமரமே சீதையைப் பார்த்தாயா, புலியே நீ பார்த்தாயா என்று புலம்புவது இன்னொரு அற்புதமான இடம்.

லக்ஷ்மணன் சீதையின் ஆபரணங்களில் காலில் அணிவதையே முதலில் அடையாளம் காண்பது இன்னொரு ரசமான இடம்.

தாரை வாலியின் பிணத்தைத் தழுவிக் கொண்டு அழும்போது சுக்ரீவன் தன்னால்தான் இந்தத் துயரம் என்று கலங்குவதும் மனித இயல்புதான்.

ஹனுமனின் லங்கையை அடைய கடலைத் தாண்டும்போது அவன் நிழலைப் பிடித்திழுத்து நிறுத்தும் பூதம் சிறந்த அறிவியல் புனைவுக்கான கற்பனை.

ஹனுமன் சீதையை தன்னை நம்ப வைப்பதற்காக ராம கதையை அவள் கேட்கும்படி சொல்வது, அதுவும் சீதையைப் பிரிந்த பிறகு என்ன நடந்தது – ஹனுமனை புத்திமதாம் வரிஷ்டம் என்று சொல்வது சரிதான் என்கிறார் ராஜாஜி, நானும் ஆமோதிக்கிறேன்.

ராவணன் சீதைக்கு ஒரு வருஷம் கெடு வைத்துவிட்டு மந்திராலோசனையில் சீதை தன்னிடம் ஒரு வருஷ அவகாசம் கேட்டாள் என்று சொல்வது மிக அருமை.

சுக்ரீவன் விபீஷணன் தன் அண்ணனுக்கே துரோகம் செய்கிறான், அவனை நம்பக் கூடாது என்று வாலியின் கதியை மறந்துவிட்டுப் பேசும் இடம் பிரமாதம்! அப்படி சுக்ரீவன் சொல்லும்போது ராமன் லக்ஷ்மணனைப் பார்த்து அவர்கள் இருவர் மட்டுமே உணரக் கூடிய வகையில் புன்னகைத்தானாம்!

இன்று போய் நாளை வாராய் என்று சொல்லும் காட்சிக்கு இணையான வீரமும், கருணையும் ததும்பும் காட்சி ஏதுமில்லை.

சொல்லிக் கொண்டே போகலாம், மீள்வாசிப்பில் கண்ணில் பட்ட இடங்களை எல்லாம் எழுதி இருக்கிறேன், மீண்டும் படித்தால் விட்டுப்போன இன்னும் பல இடங்கள் தென்படும்!

பல முறை எளிய உரைநடைப் புத்தகமே இப்படி மனதைக் கவர்ந்திருக்கிறதே, கம்பன் பாடல்களில் பாதியாவது புரியாதா, படித்துப் பார்க்கலாமே என்று தோன்றி இருக்கிறது. கம்பனானாலும் சரி, எந்தக் கொம்பனானாலும் சரி, சிறு வயதில் மனதில் ஆழப்பதிந்துவிட்ட ராஜாஜியின் புத்தகத்துக்கு மனதில் இருக்கும் இடத்தைப் பிடிக்க முடியாது என்றும் தோன்றுகிறது!

தொகுக்கப்பட்ட பக்கம்: ராமாயணப் பக்கம்