சோ ராமசாமியின் முக்கியமான படைப்பு துக்ளக்தான். மிச்ச எல்லாம் அடுத்தபடிதான்.
இருந்த போதிலும் தமிழைப் பொறுத்த வரை அவர் ஒரு முக்கியமான நாடக எழுத்தாளர். அவரைத் தவிர வேறு யாரும் நையாண்டி, அதுவும் அரசியல் நையாண்டி (satire) சடையர் முயற்சி செய்ததாக தெரியவில்லை. அவரது அரசியல் நையாண்டி நாடகங்களும் நாவல்களும் – குறிப்பாக முகமது பின் துக்ளக் இன்னும் பொது நினைவில் இருக்கிறது.
எனக்குத் தெரிந்த வரையில் என்னைத் தவிர வேறு யாரும் சோவை எழுத்தாளராக, நாடக ஆசிரியராகப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் என் கண்ணில் அவர் கிரேக்க நாடக எழுத்தாளர் அரிஸ்டோஃப்னஸோடு ஒப்பிடக் கூடியவர். அரிஸ்டோஃபனஸும் சோவைப் போலவே அரசியல் நையாண்டியோடு சமூகப் பிரச்சினைகளை கலந்து கட்டி அடிப்பார்.
சோவுக்கு ஒரு எளிய சூத்திரம் உண்டு. ஒரு பிரச்சினையை எடுத்துக் கொள்வார். (விபசாரம், ஜாதி, நம் சட்ட அமைப்பில் நீதி கிடைப்பதில் உள்ள கஷ்டங்கள் மாதிரி) அதை விளக்குவது போல நாடகம் இருக்கும். அதில் யாராவது ஒருவர் நக்கல் அடித்துக் கொண்டே இருப்பார், கொஞ்சம் அசட்டுத்தனமான நகைச்சுவையாகத்தான் இருக்கும், அது கொஞ்சம் துருத்திக் கொண்டு தெரியும். சோ நடிக்க ஒரு பாத்திரம் வேண்டாமா? அன்றைய அரசியல் பிரச்சினைகளைப் பற்றி நிறைய அடிவெட்டு கமெண்ட் இருக்கும். அவ்வளவுதான், நாடகம் தயார்!
எனக்கு அசட்டுத்தனமான நகைச்சுவையாகத் தெரிவது அன்று சபா வட்டாரங்களில் தேவையாக இருந்திருக்கிறது. அந்தப் பாத்திரம்தான் நாடகம் சென்னை வட்டாரங்களில் வெற்றி அடைய முக்கியக் காரணம் என்று தோன்றுகிறது.
முகமது பின் துக்ளக் இந்த எளிய சூத்திரத்தை இன்னும் மேம்படுத்துகிறது. நக்கல் அடிக்கும் பாத்திரத்தை நாயகனாக்கிவிட்டார்! அதனால் நையாண்டியும் அடிவெட்டு கமெண்டுகளும்தான் துருத்திக் கொண்டு தனியாகத் தெரிவதில்லை, அவைதான் நாடகமே. விடுதலைப் போராட்டத்தின் லட்சியவாதம் மங்கி, சுயநலமும் தேர்தல் அரசியலும், வெட்டி சவால்களும் அதிகரித்திருக்கும் அரசியலை தன் களமாக எடுத்துக் கொள்கிறார்.
அன்றைய போராட்டங்களுக்கு அவர் சொல்லும் தீர்வுகள் அபாரம். ஹிந்தி மொத்த இந்தியாவிற்கும் பொது மொழியானால் அது தென்னிந்தியர்களுக்கு அநீதி, ஆங்கிலம் பொது மொழியானால் வட இந்தியர்களுக்குப் பிரச்சினை, சரி இருவருக்கும் வேண்டாம் பாரசீகமே இந்தியாவின் பொது மொழி! வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு தீர்வு வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்ப்போம் என்று பேசிக் கொண்டே இருப்பது. மந்திரி பதவிக்காக கட்சி தாவுகிறீர்களா, கட்சி தாவும் எல்லாரும் உதவி பிரதம மந்திரி!
சிறந்த அரசியல் நையாண்டி நாடகம். ராஜாஜியைக் கூட விட்டுவைக்கவில்லை. ராஜாஜி போன்ற ஒருவர், கருணாநிதியை நினைவுபடுத்தும் ஒருவர், கம்யூனிஸ்டுகளின் பிரதிநிதியாக ஒருவர், இந்திரா காந்தியை நினைவுபடுத்தும் ஒருவர். எல்லாரையும் வாரு வாரு என்று வாருகிறார். ராஜாஜி “உங்களுக்கெல்லாம் எது நல்லது என்று உங்களுக்குத் தெரியாது, எனக்குத்தான் தெரியும்” என்கிறார். அன்றைய தி.மு.க. பேச்சாளர்கள் பாணியில் உதார் விடும் மேடைப் பேச்சு! தோழர்கள் ரஷ்யாவைப் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
அதே நேரத்தில் சோ நாடகங்களின் பிரச்சினையும் தெளிவாகத் தெரியும். நாடகத்தின் சமகாலத்தனம் (contemporariness). நாடகம் வந்த காலத்தில் அவர் எண்ணி இருந்த உள்குத்து எல்லாம் பார்ப்பவர்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும். என்னால் ராஜாஜியையும் கருணாநிதியையும் அடையாளம் காண முடிகிறது. ஆனால் தோழர்களின் பிரதிநிதி யார் என்று தெரியவில்லை. அடுத்த தலைமுறைக்கு கருணாநிதி மட்டும்தான் அடையாளம் தெரியும், ராஜாஜி கூட தெரியப் போவதில்லை. அரிஸ்டோஃபன்சுக்கும் இதே பிரச்சினை உண்டு. அவர் நாடகங்களில் க்ளியான் என்ற கிரேக்க அரசியல்வாதி சகட்டுமேனிக்கு கிண்டல் செய்யப்படுவார். நமக்கோ க்ளியான் என்று ஒருவர் இருந்தார் என்பதே இந்த நாடகங்களின் மூலம்தான் தெரியும். முக்கால்வாசி கிண்டல் புரியப் போவதில்லை…
சோவே கதாநாயகனாக நடித்து இயக்கிய திரைப்படம். நல்ல திரைப்படமும் கூட.
சோ நிறைய நாடகங்களை எழுதி இருக்கிறார். முகமது பின் துக்ளக் தவிர உண்மையே உன் விலை என்ன, சாத்திரம் சொன்னதில்லை, யாருக்கும் வெட்கமில்லை ஆகியவற்றை முக்கியத் தமிழ் நாடகங்கள் வரிசையில் வைப்பேன். இவை சிந்தனையை தூண்டும் நாடகங்கள். பெர்னார்ட் ஷாவுக்கும் சோவுக்கும் ரொம்ப தூரம்தான், ஆனால் இவை ஷா பாணியில் எழுதப்பட்டவை.
சாத்திரம் சொன்னதில்லை நாடகத்தைத்தான் அவரது சிறந்த நாடகமாகக் கருதுகிறேன். விரிவாக இங்கே.
உண்மையே உன் விலை என்ன நல்ல நாடகம். பெண்ணைக் கற்பழிக்க முயலும் பணக்கார வாலிபன், அவளைக் காப்பாற்ற வாலிபனைத் தாக்கும் டாக்சி ஓட்டுனர். வாலிபன் இறந்துவிடுகிறான். ஓட்டுனர் கிறிஸ்துவர். பாவமன்னிப்பு கேட்டுவிட்டு சரணடையப் போகிறான். பாதிரியார் நீ செய்தது தவறில்லை, நீ சரணடைய வேண்டாம் என்கிறார். அவன ஒளித்து வைக்கிறார். வாலிபனின் அப்பா தன் பையனைக் கொன்றவனை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று துடிக்கிறார். உண்மைகள் நீதிமன்றத்தில் வெளிவந்தால் வாலிபனுக்கு நிச்சயமாக விடுதலை கிடைத்துவிடும். பணத்தை வைத்து பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவள் குடும்பத்தையும் வில்லன் விலைக்கு வாங்குகிறார். பதவியை வைத்து வக்கீலையும், அவரிடத்தில் இருக்கும் சாட்சிகளையும். உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு ஓட்டுனருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் நண்பரை. நீதிமன்றங்களில் உண்மையை நிலைநிறுத்த என்ன விலை கொடுக்க வேண்டி இருக்கிறது, பணம், செல்வாக்கு எத்தனை தூரம் போகும் என்பதை சிறப்பாக எழுதி இருக்கிறார். முத்துராமன், அசோகன், ஸ்ரீகாந்த், விஜயகுமார் என்று பலரும் நடித்து சோ இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்தது, நல்ல திரைப்படமும் கூட.
யாருக்கும் வெட்கமில்லை அவரது இன்னொரு நல்ல நாடகம். இந்த முறை விபச்சாரத்தை பிரச்சினையாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஏன் விபச்சாரம் நடக்கிறது, பெண்களை எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று அலசுகிறார். அவரது இயக்கத்தில் ஜெயலலிதா, சிவகுமார், ஸ்ரீகாந்த் நடித்து திரைப்படமாகவும் வந்தது.
அவரது பிற முயற்சிகளில் சர்க்கார் புகுந்த வீடு நாவல் சிறந்த அரசியல் நையாண்டிகளில் ஒன்று. எம்ஜிஆர்-கருணாநிதி அரசியல், அன்றைய முக்கியஸ்தர்கள் ம.பொ.சி., அன்று இதயம் பேசுகிறது என்ற பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்த மணியன், அன்றைய உழவர் போராட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்திய நாராயணசாமி நாயுடு, மக்கள் குரல் என்ற பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்த டி.ஆர்.ஆர். என்று பலரையும் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் வகையில் தாக்குகிறார். ம.பொ.சி.யும் மணியனும், டி.ஆர்.ஆரும் எம்ஜிஆரை முகஸ்துதி செய்யும் காட்சி ஒன்று இன்றும் நினைவிருக்கிறது. எம்ஜிஆருக்கு போடப்படும் மாலை அவரை லேசாக குத்திவிடும், அவர் வாய்க்குள் ஏதோ முனகுவார். உடனே ம.பொ.சி. இப்போது எம்ஜிஆர் தன்னிச்சையாக அம்மா என்று முனகினாரா இல்லை அண்ணா என்று முனகினாரா என்று மணியனையும் டி.ஆர்.ஆரையும் கேட்பார். அம்மா என்று பதில் சொன்னால் அப்படி என்றால் எம்ஜிஆருக்கு அண்ணா இரண்டாம் பட்சமா என்று கேள்வி வரும். அண்ணா என்றால் அம்மா இரண்டாம் பட்சமா என்று கேள்வி வரும். இப்படி மாட்டிவிட்டாரே என்று இருவரும் திருதிருவென்று முழிப்பார்கள். கடைசியில் வந்தது வரட்டும் என்று மணியன் அண்ணா என்று பதில் சொல்லிவிடுவார். அதற்கு ம.பொ.சி. அதுதான் சரி, ஏனென்றால் அன்னை சத்யா எம்ஜிஆருக்கு மட்டும்தான் அன்னை, ஆனால் அண்ணாதுரையோ தமிழர்களுக்கெல்லாம் அன்னை என்று முடித்துவிடுவார். அன்றைய ஜால்ராத்தனத்தை அருமையாக சித்தரித்திருப்பார்!
கந்தசாமி, ரகுநாத ஐயர் உட்பட்ட ஐந்து குடும்பங்களின் வரவு செலவை அரசே ஏற்று நடத்தும். எம்ஜிஆருக்கு ஏதோ கோபம் வந்து பால், மளிகை எந்தக் கணக்கையும் தீர்க்க பணம் தரவே மாட்டார்கள். இவர்கள் இருவரும் நாராயணசாமி நாயுடுவிடம் சென்று கடன் தொல்லைக்கு என்ன செய்யலாம் என்று கேட்பார்கள். நாயுடு பொதுவாக வாங்கின கடனைத் திருப்பித் தரக் கூடாது என்பதுதான் நம்ம கொள்கை என்பார். இந்த வரிக்கு நீங்கள் சிரித்தீர்கள் என்றால் நீங்கள் எண்பதுகளில் பத்திரிகை படித்தவர் என்று அர்த்தம்!
மேலும் விரிவாக இங்கே
கூவம் நதிக் கரையினிலே மூன்று பகுதியாக வந்திருக்கிறது. சர்க்கார் புகுந்த வீடு நாவலின் தொடர்ச்சி.
முதல் பகுதியில் ரகுநாத ஐயர் அரசியலில் நுழைகிறார். அவருக்கு ஜக்கு என்ற பேட்டை ரவுடிதான் எல்லாம். வழக்கம் போல கலைஞர், எம்ஜிஆர், இந்திரா, ராஜீவ், என்று எல்லாரையும் சகட்டு மேனிக்கு கிண்டல் அடிக்கிறார். கதை என்றெல்லாம் யோசிக்கவே கூடாது. இதை எல்லாம் அனுபவிக்கனும், ஆராய்ச்சி செய்யக் கூடாது! இரண்டாம் பகுதியில் ஐயர் முதல்வராகிறார். அவருக்கு ஊழல் செய்வது எப்படி, சும்மா பேசி பேசியே காலத்தை ஓட்டுவது எப்படி என்று கற்றுத் தரப்படுகிறது. மூன்றாம் பகுதியில் எல்லாரும் இறந்து போய் எமலோகம் போகிறார்கள். அங்கேயும் கிங்கரர்களை வைத்து அரசியல்!
அவர் எழுதிய மகாபாரதம் பாரதத்துக்கு நல்ல அறிமுகம். எனக்கு அன்றும் இன்றும் என்றும் ராஜாஜியின் வியாசர் விருந்துதான் முதல் இடத்தில் இருக்கிறது என்றாலும் இதுவும் படிக்கக் கூடிய நல்ல அறிமுகம்தான். அவரது முக்கியப் பங்களிப்புகளில் ஒன்று எனக் கருதுகிறேன்.
எங்கே பிராமணன் ஓரளவு புகழ் பெற்ற நாவல். வர்ணாசிரம தர்மம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல என்று வலிமையான வாதங்களை முன்வைக்கிறார். படித்த காலத்தில் பிராமண ஜாதியில் பிறந்தவர்கள் பிராமணர்கள் இல்லை என்ற கருத்து புரட்சிகரமாக இருந்தது. (எனக்கு பதின்ம வயதிலேயே அந்த எண்ணம்தான், நாம் நினைப்பது போலவே இவரும் எழுதி இருக்கிறாரே என்று கொஞ்சம் நல்லெண்ணம்…)
துக்ளக் படம் எடுக்கிறார் என்றும் ஒரு புத்தகம் உண்டு. எழுபதுகளின் இறுதியில் “எட்டு வயதுப் பையன் நாலாங்கிளாஸ் பரீட்சை எழுதுகிறான்” என்ற கதையை ஜெகன்மோகினி புகழ் விட்டலாச்சார்யா, எம்ஜிஆரை மறைமுகமாகத் தாக்கி கருணாநிதி கதை வசனம் எழுதிய படங்கள் (நாயகன் ஜெய்ஷங்கர்), சாமி படமாக எடுத்துத் தள்ளிய கே.எஸ். கோபாலகிருஷ்ணன், சிவாஜி படங்களை இயக்கிக் கொண்டிருந்த கே. விஜயன், பாலசந்தர், கிராமப் படமாக எடுத்துக் கொண்டிருந்த பாரதிராஜா, சோ, கலைப்பட இயக்குநர் ஒருவர் எல்லாரும் அவரவர் பாணியில் திரைக்கதையாக மாற்றுகிறார்கள். இது என் தலைமுறைக்கும் முந்தைய தலைமுறையினர் மிகவும் அனுபவித்து ரசித்த ஒன்று. நானும்தான். இன்றைய இளைஞர்களும் கூட ரசிக்கலாம். எழுதியது சோவேதானா இல்லை துக்ளக் டீமா என்று சரியாகத் தெரியவில்லை.
அவரது சில படைப்புகளைப் பற்றி சிறு குறிப்புகள் கீழே:
மெட்ராஸ் பை நைட் என்ற நாடகத்தை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். சென்னையின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம். பார்த்தபோது பிடித்திருந்தது.
ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்ட்: ஒரு கற்பழிப்பு வழக்கு; வழக்கு தொடுப்பதில் குறியாக இருப்பவர்கள் ஒரு சமூக சேவகி, ஒரு சினிமா இயக்குனர், ஒரு பத்திரிகை ஆசிரியர், மற்றும் ஒரு கல்லூரி பேராசிரியர். குற்றம் சாட்டப்பட்டவனுக்காக ஆஜராகும் வக்கீல் இவர்களது உண்மையான நோக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் (சமூக சேவகி இந்த வழக்கை நடத்தினால் தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று நினைக்கிறாள். இயக்குனருக்கு இந்த நிகழ்ச்சியை கதையாக வைத்து, சம்பந்தப்பட்ட பெண்ணையே நாயகியாகப் போட்டு படம் எடுத்தால் காசு பார்க்கலாம் என்ற எண்ணம்; பத்திரிகை ஆசிரியருக்கு அந்த கதையை எழுத ஆசை; பேராசிரியருக்கு அந்தப் பெண் மேல் ஒரு கண், ஆனால் அதை வெளியே சொல்லாமல் அந்த ஆண் மேல் ஆசை மாதிரி நடி என்று சொல்லி இருக்கிறார்.) கடைசியில் வக்கீலுக்கு ஒரு குழப்பம் (dilemma); பல காரணங்கள் இருந்தாலும் குற்றம் செய்ததற்கு பொறுப்பு அவன்தானே? இல்லை சமூகம்தான் காரணமா? நல்ல கேள்வி, பதில் இல்லாமல் விட்டுவிடுகிறார்.
நல்ல கருத்துள்ள நாடகம், ஆனால் சிறப்பாக வரவில்லை.
சம்பவாமி யுகே யுகே: லஞ்சம் தலை விரித்தாடுவதால் பகவான் நாராயணன் சம்பவாமி யுகே யுகே என்று சொன்ன மாதிரி மீண்டும் பிறந்து வருகிறார். ஆனால் அவரைப் பைத்தியம் என்று சொல்லி உள்ளே தள்ளி விடுகிறார்கள். நன்றாக வரவில்லை.
சட்டம் தலை குனியட்டும் நாடகத்தில் பணக்காரர்களால் சட்டம் வளைக்கப்படுவதைப் பற்றி எழுதுகிறார். சுமாராக இருக்கிறது.
வாஷிங்டனில் நல்லதம்பி: அரசியல்வாதி நல்லதம்பி (கருணாநிதிதான்) அமெரிக்கா சென்று போராட்டங்கள் நடத்தி ஜனாதிபதி ஆகி நயாகராவில் படகு விடும் திட்டம், அடுக்குமாடி இடிப்பு திட்டம் எல்லாவற்றையும் கொண்டுவருகிறார். படிக்கலாம்.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் நாடகத்தில் எமலோகத்தில் கிங்கரர்களை வைத்து அரசியல் செய்து அங்கும் ஒரு தி.மு.க. போன்ற அரசியல்வாதி குழப்பம் செய்கிறார். படிக்கலாம்.
எங்கே போகிறாய்: சோழர் காலத்தவர் ஒரு தீவில் பல நூறு வருஷங்களுக்கு முன் செட்டில் ஆகி அங்கே அன்றைய தமிழ் கலாச்சாரத்தோடு வாழ்கிறார்கள். கப்பல் கவிழ்ந்து ஒரு எம்.எல்.ஏ., இரண்டு இளைஞர்கள், ஒரு குப்பத்து ஆள் அங்கே போய் சேர்கிறார்கள். அப்புறம் வழக்கமான வசனங்கள். தவிர்க்கலாம்.
எஸ்.வி. சேகர் ஸ்டைலிலும் கதையே இல்லாமலும் சிரிப்பே வராமலும் சில நகைச்சுவைக் கதைகளை எழுதி இருக்கிறார். கல்கியில் தொடராக வந்த ஒரு யாரோ இவர் யாரோ (1967) உதாரணம்.
அவரது பிற நாடகங்களில் நான் சின்ன வயதில் பார்த்தவை நேர்மை உறங்கும் நேரம். அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லிக் கொண்டே அதை சுத்தம் செய்யத் தேவையான உழைப்பைத் தர மறுக்கும் “அறிவுஜீவிகளைத்” தாக்குவார். வந்தேமாதரம் A Tale of Two Cities நாவலின் உல்டா. மனம் ஒரு குரங்கு Pygmalion நாடகத்தின் உல்டா (திரைப்படமாகவும் வந்தது).
என் கண்ணில் அவரது முக்கியப் பங்களிப்பு இதழியலாளராகத்தான். ஆனால் என்னைத் தவிர வேறு யாருக்கும் அவர் எழுத்தாளராகத் தெரிவதே இல்லை, அவரது இதழியல் பங்களிப்பு இந்த முகத்தை மொத்தமாக அமுக்கிவிட்டது என்பதுதான் சோகம். எழுத்தாளராக அவரது முக்கியப் பங்களிப்பு சில நாடகங்களிலும் அரசியல் நையாண்டிப் படைப்புகளிலும்தான் இருக்கிறது.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்
தொடர்புடைய சுட்டிகள்:
- சோ ராமசாமி – ஒரு மதிப்பீடு
- சாத்திரம் சொன்னதில்லை நாடகம்
- சர்க்கார் புகுந்த வீடு நாவல்