இலக்கியத்தில் எல்லைகள்

இலக்கியத்தில் எல்லைகள்

நண்பர்களே,

யதார்த்த வாழ்வின் நான்கு சம்பவங்களை முதலில் பார்ப்போம்.

ரயில் பயணம் ஒன்றில் சிறு குழந்தை ஒன்று தன் சகோதரன் வைத்துக்கொண்டிருந்த கைபேசியை கேட்டு தொடர்ந்து அழுதுக் கொண்டிருக்கிறது. சகோதரன் கைப்பேசியை சிறிது கொடுக்கிறான். சமாதானமான குழந்தையிடமிருந்து சில மணித் துளிகள் சென்றபின் கைபேசியை மீண்டும் பறித்துக் கொள்கிறான். குழந்தை மீண்டும் கதறி அழத் தொடங்குகிறது. சற்று சென்றபின் மீண்டும் கொடுத்து மீண்டும் பறித்துக் கொள்கிறான். குழந்தை மீண்டும் அழுகிறது. இந்தச் நிகழ்ச்சி அடுத்த 40 நிமிட இரயில் பயணத்தை நிறைக்கிறது.

யோஸமிட்டே அருவியின் மூலத்தை அடைய பார்வையாளர்களுக்கு மலைப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாக மூன்று மணி நேரம் மலை ஏறினால் உச்சியில் தடாகம் போன்ற அந்த இடத்தை அடையலாம். அங்கே மலைகளில் பனி உருக்கில் பற்பல வழிகளில் வந்த நீர் தடாகத்தின் மையத்தில் சற்றே அமைதி கொண்டு தேங்குவது போல் தோற்றமளிக்கிறது. மேலும் இடைவிடாது வரும் நீரினால் உந்தப்பட்டு வேகம் கொண்டு தாழ்வான பகுதியை நோக்கி நகர்ந்து ஒரு வெள்ளப் பெருக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது. பின்னர் தாழ்வான ஒரு பகுதியில் மேலும் வேகமும் சுழற்ச்சியும் கொண்டு முப்பது அடி அகல விளிம்பு ஒன்றினை அடைந்து தன்னுள் தேக்கிய சக்தி அனைத்தும் அதன் நுனியில் ஒருசேர விடுவிக்கப்பட்டு ஒரு பெரும் அருவியாக ஐம்பது அல்லது அறுபது அடி கீழே பாய்கிறது. பாயும் அருவியில் ஏற்படும் நீர் திவாலைககளும் சாரல்களும் ஒரு இருநூறு அடி ஆரத்தில் இருக்கும் மனிதர்களையும் மற்றும் அனைத்தையும்  நனைக்கின்றது. அருவியின் மேலே அமைந்த தடாகத்தை பாதுகாப்பு கம்பித் தடுப்புகள் வைத்து பார்வையாளர்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கிறார்கள். ஆண்கள் பெண்களாக பலரும் பார்த்து கொண்டிருந்த ஒரு பதின்ம வயது மாணவர் குழு அங்கே வருகின்றது. உறசாகத்தினால் பரவசமடைந்து கம்பித்தடுப்பின் நடுவில் நுழைந்து தண்ணீரில் நான்கைந்து மாணவர்கள் இறங்குகிறார்கள். தண்ணீரின் சுழற்ச்சி வெளியே தெரியாமல் கண்களை ஏமாற்ற நொடியில் மாணவர்கள் அதில் சிக்கித் தத்தளிக்கிறார்கள். பார்வையாளர்கள் முகத்தில் திகிலும் தண்ணீர்ல் சிக்கிய மாணவர்கள் முகத்தில் பீதியும் அறைய பாயும் தண்ணீர் அவர்களை வேகமாக விளிம்பை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தது. எங்கும் கூக்குரல்கள். அலறல்கள். அழுகைகள். தண்ணீரின் விளிம்பின் வழியாக அம்மாணவர்கள் ஒவ்வொருவராக கண்களிலிலிருந்து மறைய இரத்தம் உறைய செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள் பார்வையாளர்கள்.

மாபெறும் சபை ஒன்று. கல்வி கேள்விகளில் தேர்ந்தவர்கள் கூடும் சபை. பிரச்சனை ஒன்றுக்கு விடைத் தேடும் வகையில் உரையாடல் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. திடீரென்று ஒருவர் வெகுண்டு எழுகிறார். தன் காலணியை எடுத்து ஒருவரை நோக்கி எறிகிறார். ஃபைல்கள் பறக்கிறது. மைக் உடைகிறது. மேஜை எடைகற்கள் வீசப்படுகின்றன. இரத்தம் சிந்தப்படுகிறது. மறுநாள் தினசரிகள் தலைப்பு செய்திகளை தாங்கி வருகிறது. ‘சட்டசபையில் அமளி துமளி’.

நான்காவதாக இரு சகோதரர்கள் ஒரு தொழில் செய்கிறார்கள். தம்பி தமையனை தெய்வமாக வணங்குபவர். தம்பிக்கு ஒரு மகன். தமையன் நேர்மையானவர். ஆனால் முன்கோபி. உறவினர்களுக்கு அவர்கள் தினப் பிரச்ச்னைகளை தன் கையிலெடுத்து முடித்துக் கொடுத்து பாதுகாப்பு அளிப்பவர். அவருக்கென்று குழந்தைகள் கிடையாது. நாற்பது ஆண்டுகளாக தம்பி அண்ணனின் நிழலாக, வார்த்தையை கட்டளையாக ஏற்று நடப்பவர். அண்ணன் அவராக கொடுப்பதை தம்பி தன் வருமானமாக கொள்பவர். மக்கள் செல்வம் இல்லாத அண்ணன் தம்பியின் மகனை தன் மகனாக பாவித்து செல்லம் கொடுத்து வளர்த்து வருகின்றார். வாலிப வயதில் மகன் பெரியவரின் எதிர்பார்ப்பிலிருந்து தவறுகிறான். அவன் மேல் மிகுந்த சினம் கொள்கிறார் த்மையனார். தமையனுக்கு அந்திமக் காலம் நெருங்குகிறது. ஒரு நாள் வக்கீலை வர வழைக்கிறார். தொழிலில் எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத ஒரு உறவினருக்கு தன் சொத்துக்களை உரிமையாக்குகிறார். தன்னையும் அவரிடமே ஒப்படைக்கிறார். தமையனை என்றுமே தட்டிக் கேட்டிராத தம்பி அமைதியாக காட்சியிலிருந்து விலகுகிறார். ஊரில் மிகுந்த மரியாதையுடன் வாழ்ந்து வந்த அண்ணனிடம் பலரும் பழகுவதை நிறுத்திக் கொண்டனர். அவரும் தன் உயிர் போகும் வரையிலும் வீட்டிலிருக்கப் பிடிக்காமல் பெரும்பகுதி அருகிலிருந்த கோவில் மண்டபத்திலேயே வாழ்ந்து இறந்தார்.

இலக்கியத்திற்கு எந்த எல்லைகளிருக்க கூடாது?

கடந்த நூற்றாண்டுகளில் ஐரோப்பிய சூழ்நிலைகள் வரையப்பட்ட பல ஓவியங்கள் கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டது. மிகவும் பரவலாக அரியப்படும் ’லாஸ்ட் ஸப்பர்’ சங்கேத பாஷைகள் பேசுவதாக வதந்திகள் இருந்தன. மைக்கலேஞ்சலோ தயக்கத்துடனும் முழுச் சுதந்திரமற்ற சூழலில் ஓவியம் வரைந்ததாக அறியப்படுகிறது. பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் ஓவியம் பற்றிய புத்தகம் படிக்கிறோம். பி.ஏ.கே அவர்கள் தன் ஆய்வுக்கு என்ன ஓவியங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது வாசகர்களும் பொது மக்களும் ஆணையிட வேண்டுமா இல்லை அது அவரது விருப்பமா? பொது மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு வாதத்திற்கு எடுத்து கொண்டால் கூட அதன் சாத்தியக்கூறு மட்டுமே அது எத்தனை நடைமுறைக்கு ஒவ்வாத்தது என்பது புரியும். மேலும் ஓவியங்களை, ஓவியர்களின் திறமைகளையும் சிலாகித்தி எழுதும் ஒரே நோக்கத்திற்கு பல நோக்கம கற்பிப்பது நியாமாகாது. அவரின் அகவயமான விமர்சனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தினால் ஒருவருக்கு ஏற்புடையதாக இருக்கலாம் அல்லது ஏற்புடையது அல்லாததாக இருக்கலாம். அது வாசகர்களின் ரசனை, வாசிப்பு மற்றும் மன விசாலங்களை பொறுத்தது.  மேலும் நேர்மையான எழுத்து எனப்து பிறரை திருப்தி அடைய செய்யும் முயற்சி அல்ல.  அவரால் அவர் எழுதும் புத்தகத்திற்கு எவ்வளவு உண்மையாக இருக்கவேண்டும் என்பதே. வாசகர்களுக்கு அவர் கருத்துக்களை விவாதிக்க உரிமையுண்டு. ஆனால் அவரை இப்படிதான் எழுதவேண்டும் என்று கட்டுப்படுத்த உரிமை கிடையாது.

நான் ஒரு கதாசிரியன் என்னும் பட்சத்தில் எதைப் பற்றி எழுத வேண்டும் என்பதை தீர்மானிப்பவன் நானாகத்தானே இருக்க வேண்டும்? ஜெயமோகன் வெண்முரசில் இதை பற்றி எழுத வேண்டும், அதைப் பற்றி எழுத வேண்டும் என்றும் இதை எழுதக்கூடாது அதை எழுதக் கூடாது என்றும், ஏன், இவர் மகாபாரதத்தை பற்றி எப்படி எழுதலாம்? என்றும் பல்வேறு சராசரி விமரிசனங்கள் வைக்கப்படுகின்றன. முதலில் ஜெயமோகன் எதை எழுதலாம், எதை எழுதக் கூடாது என்று தீர்மானிப்பது அவராக மட்டும் அல்லவா இருக்க வேண்டும். இரண்டாவது எழுத்தாளர்களுக்கு எழுதச் சொல்லி கொடுப்பது போன்ற செயல்களை நாம் இன்னும் துணிச்சலாகவே செய்து கொண்டிருக்கிறோம். எத்தகைய அசட்டுத்தனம்  என்றுகூட புரிந்துக் கொள்ள முடியாத அசட்டுதனம் அல்லவா அது?

இலக்கியம் என்பது பல் பரிமாண கண்ணாடி பட்டகம். இலக்கியம் என்பது ஆழ்மனதின் உரையாடல்கள் செவ்வனே வார்த்தைகளால்  செதுக்கப்பட்ட ஒர் வாசக இன்பம். இலக்கியம் என்பது சிக்கலான நுண்ணுணர்வுகள் கடைந்தெடுக்கப்பட்ட ஒரு சித்திரம். இலக்கியம் என்பது நாம் நித்திய வாழ்வில் அறிந்திராத, சிந்தித்திராத கோணங்களை நமக்கு அறிமுகம் செய்து நம்மை அதன் எல்லைக்குள் அனுமதித்து  மேலும் நம் சிந்தனைகளை விரிக்கும், வளர்த்தெடுக்கும் ஒரு சிந்தனை தூண்டி. இலக்கியம் என்பது நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட காட்சிகளையும், கண்டிறாத களங்களையும் நம் முன் வளமான மொழியினால் படைத்து பரவசப்படுத்தும் ஒரு மென் போதை வஸ்து.  இலக்கியம் என்பது வரலாறு பதிவு செய்யாத, வரலாறு பதிவு செய்யமுற்படாத, வரலாறு பதிவு செய்ய முன்வராத, வரலாற்றால் பெரும்பாலும் செய்தியாக மட்டுமே பதிவு செய்யப்படும் நிகழ்ச்சிகளின் ஆழத்தின் மறைவில் இருக்கும் மனித உணர்வுகளை படம்பிடித்து அவற்றிர்க்கு  தகுந்த வெளியை உருவாக்கும் ஒரு தளம். இலக்கியம் என்பது வரலாறும் காலமும் விட்டுச் செல்லும் இடைவெளிகளை நிரப்பும் ஒரு மாபெரும் தொடர் முயற்சி.

ஜெயமோகனின் சமீப ஆக்கங்களிலோ, பிஏகே அவர்களின் ஆக்கங்களிலோ இந்த உணர்வு இடைவெளிகள் பூர்த்தி செய்யப்படும் பொழுது அவை சிறந்த இலக்கியப் படைப்புகளாக உருவாகி நம்மிடம் வந்தடைகின்றன. இப்படி சிறந்த படைப்புகளை ஒரு கலைஞன் உருவாக்க வேண்டுமென்றால் அவனுடைய சிந்தனைகள் தங்கு தடையின்றி திரள வேண்டும். அந்த எண்ண ஓட்டங்கள் தடையின்றி மொழியாக செதுக்கப்பட வேண்டும். மாறாக அவன் படைக்கும் ஒவ்வொரு சிந்தனையும், வார்த்தையும், ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு பத்தியும், ஒவ்வொரு பக்கமும் அவனுக்கு வாசகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று கவலை கொடுக்குமானால் அவனுடைய சிந்தனையில் மையக்கருத்து முதன்மை பெறாமல் லௌகீக விருப்பு வெறுப்புகள் அல்லவா ஆக்கிரத்திருக்கும்? அப்படியென்றால் அவனால் எப்படி சிறந்த இலக்கியம் படைக்க முடியும்? அப்படி வாசகர்களுக்கும், பொதுமக்களுக்கும் வசதியாகவும், அவர்கள் மனம் கோணாமலும் எழுதவேண்டுமென்றால் அது வணிக எழுத்தாக நம் முன் நகைக்குமே அன்றி பேரிலக்கியமாக ஒரு பொழுதும் உருவாகாது. மேலும் அப்படி எழுதுவது அந்த எழுத்துக்கு நியாமாக இருக்காது.

இலக்கியம் வடிக்க பல ஆற்றல்கள் வேண்டும். பல்வேறு அனுபவங்கள் வேண்டும். அதாவது ஆழ்மனதை, சிக்கலான நுண்ணுணர்வுகளை, சிந்தனை கோணங்களை, காட்சிகளை, களங்களை, வரலாறு தவறவிட்ட உணர்வு மூலை முடுக்குகளை நம் முன் இலக்கிய வடிவில் படைப்பதில் ஜெயமோகன், பிஏகே போன்ற இலக்கியவாதிகள்  துறை வல்லுனர்கள்.  மிகுந்த ஞானம் கொண்டவர்கள். இத்தகைய கருவிகளை ஒருசேர அடைந்த பின்னரே, பல ஆராய்ச்சிகளுக்கு பின்னரே, பல அனுபவத்திற்கு பின்னரே, தீர்க்கமான சிந்தனைக்கு பின்னரே வெண்முரசு என்ற ஒரு மாபெரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஜெயமோகன். இவருடைய இலக்கியத்தின் எல்லையை நாமா நிர்ணயிப்பது?

சரி. இலக்கியத்தின் எல்லை தான் என்ன? நாம் பள்ளியில் தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் (Survival of the fittest) என்று உயிரியல் விஞ்ஞானியின் கூற்றைப் பற்றி படித்திருக்கிறோம். அதுஎந்த சூழலில், எதற்க்காக அப்படி சொல்லப்பட்டது, எதற்கு அது பொருந்தும் என்று சற்றும் புரிந்துக் கொள்ளாமல்
, அதனை அலட்சியமாக துர்பிரயோகம்
செய்கிறோம். ஹெர்பர்ட் ஸ்பென்ஸர், தாமஸ் மால்தூஸ், ரிச்சர்ட் ஹோஃப்ஸ்டேடர் போன்ற அறிவு ஜீவிகள் நேச்சுரல் செலக்‌ஷன் என்பதை பொருளாத உலகிற்காக உருமாற்றி ’சமூக டார்வினிஸம்’ என்று அழைக்க அதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் நம் வசதிக்கு அடித்துப் பிடுங்கும் கீழ் நிலை செயல்களை ’டார்வினே சொல்லிவிட்டார்’ என்று கூறி நியாயப்படுத்த முயற்சிக்கிறோம். அதாவது பொருந்தாதவற்றிற்க்கு போலி வாதங்களை பொருத்தி ’தகுதி உள்ளது தப்பி பிழைக்குமென்று டார்வினே சொல்லியிருக்கிறாரே’ என்று கூவி நாம் மனித நேயத்தை பணயம் வைக்கிறோம்.

இப்படிதான் நம் கருத்து உரிமையையும் கையாண்டுள்ளோம். சாக்ரடிஸ் வாழ்ந்த பொழுது நினைத்ததை பேசிவிட முடியாது. அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசும் உரிமை, அரசை தட்டிக் கேட்கும் உரிமை மட்டும் தான் கருத்துரிமை. பின் வந்த காலத்தில் விவாதத்தின் மூலமாகவும், உயிரை பணயம் கேட்கும் போராட்டத்தின் மூலமாகவும் மேலும் சில விரிவான உரிமைகளை அதில் அடக்கி தற்போதை புரிதல்களுக்கு வந்தடைந்துள்ளாம். அந்தப் பாதையில் எங்கோ உள்ளே வந்துள்ள ‘எதை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எவருக்கு எதிராகவும்’ பேசும் முழுமையான கருத்துரிமையை கேட்க முனைகிறோம். அதாவது நாம் பிறரையோ, அவர்கள் கொள்கைகளையோ, நம்பிக்கைகளையோ வசை பாட, ஏளனம் செய்ய அவ்வுரிமையை கையில் எடுத்துக் கொண்டும் கருத்துரிமை வேண்டும் என்று கூவுகிறோம். எதற்க்காக இவ்வுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதை சிந்திக்கத் தவறி அதன் துர்பிரயோகத்தில் இரங்கியுள்ளோம்.

முதலில் குறிப்பிடபட்ட நான்கு சம்பவங்களை எடுத்துக் கொள்வோம். கைப்பேசியை அடைய விரும்பும் குழந்தை சிந்தனை என்னும் faculty வளர்வதற்கு முன்னரே இயற்க்கையாக உணர்வுகள் என்ற facultyஐ பெற்று கதறி அழுகிறது. சிந்தனை முழுமையாக வளராத பதின்ம வயது நிலையில் அருவி மூலத்தில் அமைந்த தடாகப் பெருக்கிலிறங்கிய இளைஞர் கூட்டம் அபாயம் என்று தெரிந்திருந்தும் இயற்கையான கட்டுப்பாடற்ற உணர்வுகளின் உந்துதல்களின் காரணமாக தங்கள் முடிவை அதி பயங்கரமாக சந்திக்கின்றனர். மாபெரும் சபையில் நன்கு சிந்திப்பதறகு பயிற்சி பெற்ற, சட்டங்களை இயற்றும் மக்கள் பிரதிநிதிகள் இயற்கையான ஆவேசம், ஆத்திரம் என்ற உணர்வுகளின் உந்துதல்களினால் வன்முறையை கடைபிடிக்கின்றனர். சிந்தித்து சிந்தித்து தன் உறவுகளை காத்துவந்த சகோதரர் எந்த தவறும் இழைக்காத தன் இளைய சகோதரரை இயல்பான ஏமாற்றம், மற்றும் கோபம் என்ற உணர்வுகளின் உந்துதல்களினால் இளைய சகோதரரின் வாழ்க்கைக்கும் மிகவும் அவசியப்படும் கால கட்டத்தில் அவரை கைவிடுகிறார்.

இப்படி அணைத்துக் காலகட்டங்களிலும்,   வாழ்க்கை கூறுகளிலும் மனிதனை உந்துவது இயற்கையான உணர்வுகள். சிந்தனை பின்னரே செயற்கையாக தோன்றுகிறது அல்லது வளர்த்தெடுக்கப்படுகிறது. அதாவது உணர்வுகள் என்பது இயற்க்கை. சிந்தனை என்பது செயற்கை. உணர்வுகள் தானாகவே கட்டுபாடற்று முன்னால் ஓடி வருவது. சிந்தனை மெதுவாக கட்டுப்படுத்தப்பட்டு நம்மாலும், பிறராலும் நம்மில் திணிக்கப்படுவது.

எல்லையற்ற கருத்துரிமைக்கு இடம் உண்டு என்று சொல்லும் மேற்கத்திய சமூகத்திலேயே அதன் போலி முகம் வெளிப்படுகிறது. 2001ல் செப்டம்பர் 12 அன்று உலகம் முழுவதும் பத்திரிக்கைகள் ஒருசேர முந்தைய தினம் நடந்த அதி பயங்கர சம்பவத்தை மிகவும் கவலையுடனும் வேதைனயுடனும் விவரித்தன. மத்திய கிழக்கு நாடுகளின் ஒன்றிலிருந்து வந்த ஒரு அரசு பத்திரிக்கை மட்டும் விமானம் சொருகப்பட்டு எரிந்துக்கொண்டிருக்கும் இரட்டை கோபுரம் ஒன்றின் புகைப்படத்துடன் முதல் பக்க எட்டு பத்தி தலைப்பாக ‘கடவுளின் தண்டனை’ என்று கேலியுடன் கொக்கரித்தது. இது பத்திரிக்கை கருத்துரிமை தானே என்று கருத்துரிமையை ஆதரிக்கும் சமூகங்கள் அலட்சியப்படுத்தியிருக்கலாம் அல்லவா? அணு குண்டை வீசவேண்டும் என்பது போன்ற விஷம் கக்கும் வெறுப்பு பேச்சுகளை நான் நேரடியாகவே கருத்துரிமை ஆதரிக்கும் சராசரி மக்கள் கூற கேட்டிருக்கிறேன். ஒரு தனிமனிதனின் துன்பத்திலோ, ஒரு சமூகத்தின் துன்பத்திலோ, ஒரு நாட்டின் துன்பத்திலோ பிறர் இன்பம் காண்பது எத்தனை மட்டமான ஸாடிஸம் என்பது நமக்கு தெரியாததல்ல. ஆனால் அதே சமயம் கருத்துரிமையை ஆதரிப்பவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களால் கருத்து கூறியதற்க்காக அந்த நாடே சின்னாபின்னமாக ஆக்கப்பட்டது நாம் அறிந்ததே.

சராசரி வாழ்விலே, நண்பர்களுடன், உறவினர்களுடன், அலுவலக சகாக்களுடன் நாம் ஒவ்வொரு நொடியிலும் உணர்வு ரீதியாகவே உந்தப்படுகிறோம். கற்றவர்கள் மற்றவர்கள் என்று பாகுபாடெல்லாம் இதில் இல்லை. இன்னும் இதனை புரிந்துக் கொள்ளமுடியாதவர்கள் ஊதிய மறுக்கப்படும் தருணத்தில் வருத்தம், கவலை, கோபம், இயலாமை என்று பல்வேறு உணர்வுகளால் நாம் அலைகழிக்கப்படுவதையாவது புரிந்துக் கொள்ளமுடியும்.

கட்டற்ற உணர்வுகளால் ஒருவர் உந்தப்படும் பொழுது அவரை கட்டுப்படுத்துவது அவரது சிந்தனை. உணர்வுகளையும் சிந்தனையையும் ஒன்றுக்கு ஒன்று முரணாக செயல்பட அனுமதித்து தெளிவான நிலையை எடுப்பதென்பது முழு வாழ்வின் மனப் பயிற்சி.  இந்தப் பயிற்ச்சிக்கு தன்னை அன்றாடம் உட்படுத்திக் கொள்பவர்கள் மிகச் சிலரே. எல்லையில்லா இலக்கியமோ அல்லது அபுணைவுகளோ அல்லது கார்ட்டூண்களோ இந்தச் சிலரின் ஜீரணிப்புக்கு பொருந்தும். ஆனால் நம்மில் பலர் இப்படியெல்லாம் பகுத்துப் பார்க்கும் பயிற்சி அற்றவர்கள். எளிமையானவர்கள். பெரும்பாலும் சிந்திக்கப் பயிற்சி பெற்றவர்களே படைப்புகளை உருவாக்குகிறார்கள். சிந்திக்க பயிற்சி பெறாதவர்களும் இந்த படைப்புகள் உருவாக்கப்படும் உலகத்தில் தேர்ந்த வாசக்ர்களுடன் வலம் வருகிறார்கள். எழுத்துகளில் எல்லைகள் மீறப்பட்டோ எலலைகள் மீறப்படுவதாக உணரப்பட்டோ இந்தப் பெரும்பான்மையான எளியவர்களின் உணர்வுகள் கொந்தளிப்படைகின்றன. எல்லை மீறப்பட்ட படைப்புகளின் படைப்பாளிகளுக்கு கொந்தளிப்பவர்களின் வன்முறை எல்லை மீறல்கள் பதிலாக அமைகின்றன. இந்த சம்பவங்களால் சிந்தனையாளர்கள் ஆவேசம் அடைகிறார்கள். முற்போக்குப் பாசறைக்கு பங்கம் வந்துவிட்டாதாக பரிதவிக்கிறார்கள். அதாவது இறுதியில் அவர்களும் உணர்வுகளில் சிக்குகிறார்கள். ஆகவே உணர்வுகள் உயிர் இருக்கும் வரையிலிருக்கும். உணர்வுக்கு எதிராக அறகூவல் விடுவது பேதமை.

மேலும் சிந்திக்க தெரியாதவர்கள் நிராயுதபாணிகள். சிந்திக்கத் தெரிந்தவர்கள் தங்கள் செயல்களை நியாப்படுத்த சிந்திக்கத் தெரியாதவர்களை சிந்திக்க அறைகூவல் விடுவது சம தள விளையாட்டரங்கத்தில் அல்ல. ஆச்சர்யம் என்னவென்றால் எல்லாவற்றையும் சிந்திக்க பயிற்சி பெற்றவர்கள் இந்த அடிப்படைகூட புலப்படாமல் அடம் பிடிப்பது தான். இது புரிந்தால் சார்லி ஹெப்டோக்களும், பெருமாள் முருகன்களும் தவிர்க்கப் பட்டிருக்கலாம். சரி. இதற்கு தீர்வு என்ன? திட்டதுடனோ, அரசியல் நோக்கிலோ எல்லைகள் மீறப்பட்டால் அதற்கு அவர்களே பொறுப்பு. ஆனால் விபத்தாக மீறப்பட்டால் நிச்சயம் அதற்கு வழியிருக்கிறது. எழுத்தாளர் சுஜாதா ’கருப்பு சிகப்பு வெளுப்பு’ என்ற தன்னுடை சரித்திர நாவலில் ஒரு வரியில் ஒரு சமூகத்தை சார்ந்த பெண்ணை வர்ணிக்க அது அந்தச் சமூகத்தில் பலரை கொந்தளிக்கச் செய்தது. சுஜாதா மிகவும் பண்பானவராக நடந்துக் கொண்டார். வருத்தம் தெரிவித்து அந்த சரித்திர தொடரை நிறுத்திக் கொண்டார். சமூகம் அதை ஏற்றுக் கொண்டது. இது தானே யதார்த்தம்?

ஜெயமோகன், பிஏகே போன்றவர்கள் பல கட்டுரைகளையும், இலக்கியங்களையும் மிகப் பொறுப்பாக படைத்துள்ளனர். மக்கள் உணர்வுகளை நன்றாக புரிந்துக் கொண்டதானால் தான் எல்லை மீற வேண்டிய வெளியில் எல்லைகளை மீறியும் எல்லை மீறப்படக்கூடாத வெளியில் மிகப் பொறுப்பாகவும் கவனச் சிதறல்கள் இல்லாமல் அவர்களால் வெண்முரசு, மேறகத்திய ஓவியங்கள் போன்ற மகத்தான பணிகளை செய்ய நமக்கு அளிக்க முடிகிறது. காப்பியத்தின் வெவ்வேறு வடிவங்களாகவே மகாபாரதத்தை பார்த்து கொண்டிருந்த நமக்கு முதல் முறையாக முழு இலக்கியமாக வெண்முரசு வெளிவரும் இந்த சமகாலத்தில் நாம் வாழ்வது ஒரு இலக்கிய அதிர்ஷ்டம் அல்லவா? ஆதாலால் நாம் தொட்டால் சிணிங்கியாக இல்லாமல் அவர்களுக்கு முழு ஆதரவு அளித்து அவர்களது பணியை தொடர விடுவோம்.

நன்றி.

(இது பாரதி தமிழ் சங்க நிகழ்ச்சியில் ஜூலை 2015ல் நான் ஆற்றிய -அல்லது ஆற்ற முயன்ற- உரை. ஒரு சில காரணங்களால் இந்த உரையை நான் முழுமையாகவும் செவ்வனேயும் ஆற்ற முடியவில்லை. கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு தெரியும்.)

முடிவை நோக்கி?

JK

எழுத்தாளர் ஜெயகாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். நிலைமை கவலைகிடம் என்ற தகவல்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.

அவருக்கு யூலஜி பற்றி ஒரு கருத்து உண்டு. மனிதர் யூலஜி என்றால் பாராட்ட வேண்டும் என்று ஒரு வரைமுறை கிடையாது என்று கூறியிருக்கிறார். அதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணவும் செய்திருக்கிறார். அண்ணாவின் யூலஜியில். அதை பல முறை இங்கே நாம் பதிந்திருக்கிறோம்.

ஜெயாகாந்தன் சந்தேகமில்லாமல் தன் கருத்துகளை முன்வைத்த ஒரு சமுதாய முற்போக்கு எழுத்தாளரே. அந்த முற்போக்கு எழுத்தில் எழுந்த நன்மைகள் சந்தேகமில்லாமல் பல. சந்தேகமில்லாமல் சில தீமைகளும் உண்டு. அந்த விளக்கங்கள் எல்லாம் இன்னொரு சமயம். ஆனால் என்னைக் கவர்ந்த எழுத்துக்களில் அவருடைய எழுத்துக்களும் உண்டு.

அவர் இன்னும் எழுதியிருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மிக “சிறிய” வயதில் நிறுத்திக் கொண்டார். கவனம் சிதறி வாழ்க்கைப் போராட்டத்தில் அரசியலுடன் சமரசம் செய்து அரசியலிலும் சில சமரசங்கள் செய்துள்ளார். ஆனால் தேவையிருக்கிறது. Free will என்று ஒன்று உண்மையில் உள்ளதா?

அவர் உடல்நலம் தேறி மீண்டும் எழுத்துலகை அலங்கரிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்… என்று சொன்னால் மருத்துவமனையிலிருந்து எழுந்து வந்து என்னுடைய பின்னங்கழுத்தில் ஒரு அடி வைப்பார். அது அவருக்குப் பிடிக்காத முகஸ்துதி என்பதால் இதைச் சொல்கிறேன்: முடிவு என்பது நாம் நம்மின் அகத்தையும் புறத்தையும் பிரயோகம் மற்றும் துர்ப்பிரயோகப் படுத்தியதால் இயற்க்கைக்கு கட்ட வேண்டிய வரி. அந்த வரியை நாம் கட்டித்தான் ஆக வேண்டும். வரியை பின்னகர்த்தாலும் (postpone). ஆனால் இயற்கை அதை வசூலிக்காமல் விடாது.  எனவே உடல் நலம் தேறினாலும் தேறாவிட்டாலும் மேலும் கஷ்டங்கள், உபாதைகள் அனுபவிக்கக்கூடாது என்று மட்டும் ஆசைப் பட்டுக் கொள்கிறேன். 80 வயதில் (மனதால் தாங்க முடியும் என்றாலும்) உடல் தடுமாறும்.

என் சரித்திரம் (தமிழ் ஆடியோ புத்தகம்)

Image
Itsdiff வானொலி ஸ்ரீ ஸ்ரீநிவாஸாவின் ஒலிப் புத்தகம் – தமிழில்
ImageImage
என் சரித்திரம் – தமிழ் தாத்தா Dr. உ வே சா
பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர் Dr. உ வே சா.தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர் இவர்.

இவரின் பிற ஒலி புத்தகங்கள்:

ஜெயமோகனின் ‘வெண்முரசு’

மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில்
10 வருடங்கள் – தினமும் இணையத்தில்
2014 புத்தாண்டு முதல்…

Venmurasu

வியாசனின் பாதங்களில் – ஜெயமோகன் .

இந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன்.
திட்டத்தை நினைத்தால் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது. ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள். ஆனால் எந்த பெரும் பயணமும் ஒரு காலடியில்தான் தொடங்குகிறது. தொடங்கிவிட்டால் அந்தக் கட்டாயமும், வாசகர்களின் எதிர்வினைகளும் என்னை முன்னெடுக்குமென நினைக்கிறேன். இப்போது தொடங்காவிட்டால் ஒருவேளை இது நிகழாமலேயே போய்விடக்கூடும்.
இது ஒரு நவீன நாவல். தொன்மங்களையும் பேரிலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்யும் இன்றைய இலக்கியப்போக்குக்குரிய அழகியலும் வடிவமும் கொண்டது. ஓர் இலக்கிய வாசகனுக்கு இது உள்விரிவுகளை திறந்துகொண்டே செல்லக்கூடும். ஆனால் எந்த ஒரு எளிய வாசகனும் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் வாசிக்கக்கூடியதாகவே இது இருக்கும். மகாபாரதத்தின் மகத்தான நாடகத்தருணங்களையே அதிகமும் கையாளும். அதன் கவித்துவத்தையும் தரிசனத்தையும் தீண்டிவிடவேண்டுமென்ற கனவுடன் இது எழும். வியாசனெழுதிய ஒவ்வொன்றையும் இன்று இங்கே என உள்வாங்கிக்கொள்ளவேண்டுமென இது முயலும்.
இந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.
 இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக! அவர்கள் தங்கள் வியாசனை எனதுவியாசனிலிருந்து கண்டுகொள்ள நேர்வதாக!
அன்புடன்

ஜெயமோகன்

www.jeyamohan.in

இவர்கள் இலக்கியத்தில் அறம்

(30 ஜூன் 2012 Fremont எழுத்தாளர் கௌரவிப்பு கூட்டத்தில் எனது உரை)

நண்பர்களே,

விதை ஒன்றை நான் அவதானித்த கொண்டிருந்த பொழுது வாழ்வியல் சார்ந்த ஒரு மேன்மையான உருவகத்தை அதனிடமிருந்து அறிந்து கொண்டேன். ஒரு விதை பூமிக்குள் விதைக்கப்படுகிறது. இரண்டு அங்கங்களுடன் அதன் வாழ்க்கை பயணம் துவங்குகிறது. இரண்டு வெவ்வேறு திசைகளில். ஒன்று, கீழ் திசை. தாழ்ந்த திசை. அது ஒரு இருண்ட இடம். புழுக்கமான இடம். இன்னும் சொல்லபோனால் புழுக்கள் நெளியும், ஜந்துக்கள் வசிக்கும் ஒரு இடம். அந்த விதை தனக்காக, தன்னை பூமியில் நிலைநிறுத்திக் கொள்ள, தன் சுயநலனுக்காக சஞ்சரிக்குமிடம். ஆனால் அதற்கு வேறு வழியில்லை. அப்படிதான் அது தன்னை நிலை நாட்டிக்கொண்டாக வேண்டியுள்ளது. பூமிக்குள் நடக்கும் அந்த போராட்டத்தில் மேலும் மேலும் வென்று, தன் இருத்தலை தாங்கி நிற்கும் உறுதியான வேர் பகுதியாக பரிணமிக்கிறது.

இரண்டாவது அங்கம் மேல் திசையில் வளர்கிறது. உயர்ந்த திசை. அது வெளிச்சமான இடம். காற்றோட்டம் நிறைந்தது. மகிழ்ச்சியான இடம். அது தன்னை பிறருக்காக அர்பணிக்குமிடம். அதாவது அது செடியாக வளரும் பொழுதே பிறருக்காக தன்னை அர்பணிக்க தொடங்குகிறது. விலங்குகள் முதல் மனிதர்கள் வரை தன்னை உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது. அது தன் இலைகளை தருகிறது. காய் கொடுக்கிறது, கனி கொடுக்கிறது. நிழல் கொடுக்கிறது. இறுதியில் மனிதன் தன்னை அழித்த பிறகும் பல வகையில் உதவிக்கொண்டிருக்கிறது. காகிதமாக, கதவாக, நாற்காலியாக, கட்டிலாக அல்லது எரிபொருளாக.

இது இயற்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை முறை. சராசரி மனிதர்களின் வாழ்க்கை இரண்டாவது அங்கம் இல்லாத ஒரு ஊணமுற்ற வாழ்க்கை. நல்ல ஒரு இலக்கியவாதியின் வாழ்க்கை ஊணமற்றது. அவன் உலக லௌகீகம் என்ற இருண்ட, புழுக்கமான இடத்தில் தன்னை நிலை நாட்டிகொள்ள ஒரு புறம் போராடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் உலகுக்காக தன்னை அர்பணிக்கவும் தொடங்கிவிடுகிறான். அந்த அர்பணிப்பின் பலனை அவன் மறைந்த பிறகும் உலகம் அனுபவிக்கிறது. அந்த அர்பணிப்பின் சமுதாய அங்கீகரிப்பே அவனுக்கு அது பெற்று தரும் பரிசுகளும், பதக்கங்களும்.

ஆனால் தவறிழைக்க வேண்டாம். நேர்மையான எழுத்தாளர்கள் தமிழை, இலக்கியத்தை எதிர்வரும் காலங்களுக்கு எடுத்து செல்பவர்கள். அது தான் அவர்களின் இலக்கு. அது மட்டுமே அவர்களின் இலக்கு. பரிசுகளையும், பதக்கங்களையும் இலக்காக கொண்டு ஒரு நாஞ்சில் நாடனோ, ஒரு பிஏ கிருஷணனோ தங்கள் இலக்கிய பயணத்தை மேற்கொள்ளவில்லை.  அவர்கள் தங்கள் எழுத்தின் உன்னதத்தையே இலக்காக கொண்டிருக்கிறார்கள். கலங்கிய நதி, தலை கீழ் விகிதம் என்றெல்லாம் இவர்கள் படைத்தது ஏதோ நான்கு பேருக்கு பொழுது போகட்டுமே, நமக்கும் பரிசு கிடைக்கட்டுமே என்பதற்காக அல்ல. அவை, தான் இழந்த அறத்தை நோக்கி சமுதாயத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள். அவர்களின் படைப்புகளை கூர்ந்து நோக்கும் பொழுது, அவை வாசகர்களின் நுண்ணுணர்வுகளுடன் உறவாடி, கலந்துறையாடி அவர்களின் வாழ்க்கையை அறம் நோக்கி திசை திருப்பும் முயற்சிகள் என்பது புலப்படும். அந்த முயற்சியின் உன்னதத்தையே தங்கள் இலக்காக கொண்டு பயணிக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் இதை Excellence என்று கூறுகிறார்கள். தூய இலக்கியவாதிகள் ஒரு பொழுதும் உன்னதத்தை அடைந்து விட்டதாக நினைக்க மாட்டார்கள். அவர்கள் மேலும் மேலும் மேன்மையை மேம்படுத்த போராடுகிறார்கள். அதாவது “Raising the Bar” என்கிறோமே-அதை அவர்களுக்கு அவர்களே செய்து கொள்கிறார்கள். வாசகர்களான நமக்கு இது ஒரு பெரும் கொடை. இது போன்ற படைப்பூக்கமே புதிய கதவுகளை நமக்கு திறக்கிறது. புதிய எல்லைகளை நம் முன் விரிக்கிறது. இதன் நன்மைகளை நாம் ஒரு சமுதாய சாத்தியமாக அமைத்துக் கொள்ள இலக்கிய வாசிப்பை ஒரு சமுதாயமாக வளர்த்துதெடுக்க வேண்டும்.

இவற்றை ஒரு தேர்ந்த வாசகன் புரிந்துக்கொள்ள முடியும். மற்றவர்களுக்கு, ஏன் இலக்கியம் பக்கம் கவனம் செலுத்தவேண்டும்? லௌகீகவாதிகளுக்கு இலக்கியம் எம்முறையில் தொடர்புடையது? அப்படியே ஒரு தொடர்பை கண்டுகொண்டாலும், எவ்விதத்தில் தான் அது நடைமுறைக்கு சாத்தியம்? என்ற கேள்விகளே மிஞ்சுகிறது. அதற்கு லௌகீகவாதிகள் தாங்கள் பயணம் செய்யும் வேகத்தடத்திலிருந்து மெதுதடத்திற்கு தடம் மாறி சிந்திக்கவேண்டும். இன்று நாம் இருப்பின் அச்சாக கருதுவது என்ன? அல்லும் பகலும் அனவரதமும் நாம் சிந்திப்பது பொருள்-பணம். அந்த பொருளை ஈட்டித்தரும் தொழிலையோ அல்லது அந்தத் தொழிலால் வரும் பொருளையோதான் நாம் வாழ்க்கையாக உருமாற்றி அறத்தை நம்மிடமிருந்து அறுத்தெறிந்து வாழ்க்கையே நாம் தொலைத்து நிற்கிறோம். அதை நாம் நம் வாழ்க்கையின் பின் பகுதிகளிலேயே உணர்கிறோம். ஏன் இப்படி நடக்கிறது?

பணத்தையே குறியாகக் கொண்டு வாழும் பொழுது அதற்கு இடைஞ்சலாக கருதி நாம் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை புறக்கணிக்கிறோம். பண்புகளை புறக்கணிக்கிறோம். பிறர் காட்டும் அன்பை புறக்கணிக்கிறோம். பிறரிடம் காட்ட வேண்டிய அன்பை புறக்கணிக்கிறோம். முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு நமது வாழ்க்கைமுறைகளையும் புறக்கணிக்கிறோம். நம் அடையாளத்தை புறக்கணிக்கிறோம். சொல்லப்போனால் இவற்றையெல்லாம் பிற்போக்கு என்று எள்ளி நகையாடி, இன்னும் மானுட உயர்பண்புகளையும், நம் அடையாளங்களையும் கடைபிடிப்பவர்களை அசௌகரியப் படுத்துகிறோம். அவமானப் படுத்துகிறோம். அந்த அசௌகர்ய, அவமானங்களால் மன வலுவற்ற சமுதாயத்தில் மெல்ல மெல்ல ஒட்டு மொத்த மக்களின் எண்ணங்களும் சீர்குலைந்து மானுட கலாச்சாரம் சிதைக்கப்பட்டு நாளடைவில் எப்படியும் வாழலாம் என்று நியாயப்படுத்தி, கடைபிடித்து, கடைபிடிக்கவைத்து சமுதாய அறத்தை வீழ்ச் செய்கிறோம்.

இப்பொழுது நாம் அப்படிப்பட்ட ஒரு புள்ளியில் தான் நின்று கொண்டிருக்கிறோம். சில தினங்களுக்கு முன்னர் நாஞ்சில் நாடனுடன், பி.ஏ.கேயுடனும் வெவ்வேறு சந்தர்பத்தில் உரையாடி கொண்டிருந்த பொழுது இருவருமே சமுதாய அறச் சரிவை பல வகையில் சிந்தித்து கொண்டிருப்பதாக கூறினார்கள். பல குணாதிசயங்களை பட்டியலிட்டார்கள்.

உதாரணமாக, தமிழர் ஒருவரின் வீட்டின் வழியே செல்லும் அறிமுகமில்லாத ஒருவன் வந்து தண்ணீர் கேட்டால் தண்ணீருக்கு பதில் மோர் கொடுக்கும் காலம் இருந்தது. வழிபோக்கன் ஒருவன் இரவு தங்க இடம் கேட்டால் வீட்டின் வாசல் பக்கம் உள்ள திண்ணையையாவது ஒழித்து கொடுக்கும் வழக்கம் இருந்த காலம் உண்டு. தமிழர்கள் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றிருந்த காலம் உண்டு. வீட்டிற்கு எவரேனும் வந்தால் அவரை உட்கார வைத்து பேசுவது வழக்கமாக இருந்தது.

இப்பொழுதெல்லாம் அறிமுகமில்லாதவன் ஆபத்தானவன் என்ற நொண்டிச்சாக்கை பேசி, நாம் முன் கதவை இரும்புத் தாழ் போடுகிறோம். ஆபத்து அன்றும் இருக்கத்தான் செய்தது. ஆனால் ஆபத்திற்கிடையே தான் அன்பை தக்கவைத்தார்கள். இது போன்ற அடிப்படை பண்பை தக்க வைத்தார்கள். மானுட அறத்தை தக்கவைத்தார்கள்.

இன்று நம் சமுதாய சூழலில் பலர் மாபெரும் சித்தாந்தவாதிகளின் வல்லமைக்கான சங்கற்பம், அப்ஜெக்டிவிஸம் போன்ற கருத்துகளை உள்நோக்கத்துடன் தங்கள் வசதிப்படி அறத்திற்கு எதிர்மறையாக திரித்தும், திரித்ததை வளர்த்தும் எடுத்து பரப்பி வருகிறார்கள். அப்படி பரப்பட்ட கொள்கைகளே மக்களிடம் ஊடுருவி இன்று சராசரி மக்கள் அறத்தை மறந்து சுயநலத்தை நியாயப்படுத்துகிறார்கள்.

இந்தப் போக்கை மறுபரிசீலனை செய்ய நம்மிடம் ஒரு கருவி இருக்கிறது. நாம் நம் தொழிலில் பலகாலங்கள் பணிபுரிந்த பிறகு Refresher course எனப்படும் வலுவூட்டும் ஆதரவு பயிற்சி கொடுக்கப்படும். இங்கு டிரைவிங் லைசென்ஸை புதுபிக்க வேண்டுமானால் கூட சில இடங்களில் இந்த வலுவூட்டுப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இன்றைய சமுதாய சூழலில், பள்ளியில் படித்த அறக் கல்வியை கடந்து  வயது வந்தபிறகு அறம் பற்றி முறையான கல்வி நமக்கு கிடைப்பதில்லை.  அந்த வெற்றிடத்தை அறத்தை பிரச்சாரம் செய்யும் நல்ல இலக்கியங்கள் நிரப்புகிறது. பிஏகே அவர்களின் கலங்கிய நதி ரமேஷ் சந்திரனாகட்டும், நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் சிவதானுவாகட்டும் வெறும் கதாபாத்திரங்கள் மட்டும் இல்லை. அவர்கள் அறத்தின் குறியீடு. அந்த இலக்கியங்கள் அறத்தின் சொல் வெளிப்பாடு. சங்க கால இலக்கியமான திருக்குறள், ஆத்திச்சுடி போன்றவற்றின் நவீன விரிவான வடிவம்.

இலக்கியங்கள் நம் வாழ்க்கையை நாம் மறுபரிசீலனை செய்ய உதவுகிறது. இப்படிப்பட்ட இலக்கியங்களை நாம் தேடி அடைந்தால் மிகவும் சிறப்பு. ஏன் தேடி அடைகிறோம் என்றால் அதனை ஏற்றுக் கொள்ளும் மன முதிர்ச்சியையும் பக்குவத்தையும் ஓரளவு அடைந்துவிட்டோம் என்பதாலேயே. இது தவிர, சந்தர்ப்ப வசத்தால் இலக்கியம் நம்மை அடைந்தாலும் தவறொன்றுமில்லை. ஆனால் அதை இறுகப்பற்றிக் கொள்ளவேண்டும்.  இன்றைய சூழலில், சமகாலத்தில், நாஞ்சில் நாடன், பிஏகே போன்ற எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் படைப்புகளை கொண்டாடினால் அது சமூகத்தில் அறத்தை நாம் மீண்டும் சென்றடையும் ஒரு வழியாகும். அதுவே அவர்களின் எழுத்துக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி, பதக்கம், பரிசு.

நன்றி.

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் – 7

நாள் 12 – ஜூன் 30, 2012

இன்று பெரிய நாள். பிறபகல் 2 மணிக்கு ஃப்ரீமாண்ட் லைப்ரரியில் பி.ஏ.கிருஷ்ணன், நாஞ்சில், இருவருக்கு பாராட்டுப் பொது கூட்டம். மதிய உணவு எங்கள் இல்லத்தில் முடித்துவிட்டு செல்வதாக ஏற்பாடு. பதட்டம் மனதை மெதுவாக ஆக்ரமிக்க தொடங்கியது.

காலையில் எழுந்து மிக சுறு சுறுப்பாக மனைவிக்கு “சொதி” என்ற ஒரு உணவு சமாச்சாரம் செய்ய உதவிகள் செய்யவும், கடைகளுக்கு ஓடும் எர்ரண்ட் பாயாக இருக்கவும், பெண்ணை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்லவும் நேரம் சரியாயிற்று. PA கிருஷ்ணன் குடுமபம் (திருமதி ரேவதி கிருஷணன், மகன் சித்தார்த், சித்தார்த்தின் மனைவி வினிதா) காலை 11:30க்கு வந்தார்கள். பிஏகே என் மினி கலெக்‌ஷனைப் பார்வையிட்டார். ’வேற தமிழ் புக்ஸ் வச்சிருக்கீங்களா?” என்றார். மிகக் குறைவு என்று நினைத்தார் போலும். அவருடைய வாசிப்பு வேகத்திற்கு இதெல்லாம் மைக்ரோபியல். “சார் மாடியிலே கொஞ்சம் புக்ஸ் இருக்குது”என்றேன். சரி இந்த முறை இந்திய பயணத்தின் பொழுது அள்ளிக் கொண்டு வரவேண்டியது தான். கோவையில் ஹரன்பிரசன்னா போன்ற நணபர்களை பார்க்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

சாப்பிட்ட ஸூப்புடன் என் பதட்டமும் ஆவியாக ஆனது. தற்காலிக ரிலீஃப். புகைப்படங்களுக்கு அனைத்து பெர்ம்யூட்டேஷனையும் உபயோகித்தோம். ஆர்வி & குடுமபம், ராஜன் &  நாஞ்சில் மற்றும் திருமுடி, மணிராம் ஆகிய அனைவரும் சுமார் 12 மணிக்கு ஒரு காலிங் பெல்லில் இணைந்தார்கள். ஒருவித பரபரப்புடன் எல்லோரும் ஸூப்பிலிருந்து சாதம்  சொதி இஞ்சி சட்னி வழியாக பாயாசம் வந்தடைந்தார்கள். ராஜன் பரபரத்து திருமுடியை இழுத்துக் கொண்டு 1 மணிக்கு லைப்ரரியை நோக்கி ஓடினார். நானும் ஆர்வியும் எங்கள் பேச்சுகளை பிரிண்ட் எடுக்க மாடியை நோக்கி ஓடினோம். கிச்சனில் பெண்கள் எதற்கோ ஓடிக் கொண்டிருந்தார்கள். இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போல் அமைதியாக பிஏகேயும் நாஞ்சிலும் இலக்கிய உலகில் சஞ்சரித்தனர். காலச்சுவடு கண்ணன், நீல பத்மநாபன், ஜெயமோகன் என்றெல்லாம் காதில் விழுந்தது. எல்லாம் நல்ல விஷயம் தான்.

1:50க்கு நாஞ்சில், பிஏகே, நான், ஆர்வி நால்வரும் ஆர்வியின் மெர்சேடிஸ் பென்ஸில் கிளம்பினோம். ராஜன் போனில் இன்னும் 15 நிமிடம் தாமதிக்கச் சொன்னார். ”கிளம்பியாச்சே”. ஒரு லெவல் கிராஸிங்கில் டென்ஷனுடன் காத்திருந்த நாங்கள் ரிலாக்ஸ் ஆனோம். ஒரு ஏரியை சுற்றிவிட்டு லைப்ரரி சென்றடைந்தோம். லைப்ரரியில் மைக் செட் அரெஞ்ச்மெண்டெல்லாம் செய்ய வேண்டியதில்லை. ஆங்காங்கே இருக்கும். ஒரு சில வேலைகள் மட்டுமே. வரிசையாக சேர் போடுவது, பேனர் ஒட்டுவது போன்ற சமாச்சாரங்கள். கூட்டம் பரவாயில்லை. பாரதி தமிழ் சங்கத்தின் விழா. இந்த ஆண்டின் தலைவர் இட்ஸ்டிஃப் ஸ்ரீகாந்த். அவர் அறிமுகம் செய்ய அடுத்த இரண்டரை மணி நேரம் நல்ல பொழுதாக அமைந்தது. அதன் வீடியோ வடிவம் இந்த சீரிஸ் முடிந்ததும் வெளியிடுகிறோம். பாலாஜி, விசு, ஆர்வி, சுந்தரேஷ் ஆகியோரின் உரைகளின் எழுத்து வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. காவேரி, என்னுடையது எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. பிஏகே முதலில் பேசினார். பின்னர் நாஞ்சில். வீடியோவில் பார்க்கலாம்- சிறிது நாட்களுக்குப் பிறகு.

கூட்டம் முடிந்த பின்னர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நாஞ்சில், பிஏகே புத்தகங்கள் காணாமல் போயிருந்தது. டீ விநியோகிக்கப்பட்டது. ஒரு சமோசா, கட்லட் என்று போயிருந்தால் அரங்கு நிறைந்திருக்கும். வெளியில் வந்து எல்லோரும் எழுத்தாளர்களுடன் கூட்டத்திற்கு வந்தவர்கள் உரையாடினர். பிஏகே குடும்பத்தினர் விடை பெற்றனர். ராஜனும் நாஞ்சிலும் ஓய்வெடுக்கச் சென்றனர். விசு, அருண், பாலாஜி, நான், ஆர்வி வீட்டில் குழுமினோம். ராஜன், நாஞ்சில் 7 மணிக்கு வந்தார்கள். நாஞ்சில் என் உரை நன்றாக இருந்ததாகவும் நுணுக்கங்களுடன் இருந்ததாகவும் கூறினார். ஆனால் மெஸேஜ் ஆடியன்ஸை சென்று சேர்ந்திருக்கமா என்பதில் ஐயப்பட்டார். ஒரு மூன்று மணி ”மகிழ்ச்சி” கலந்த அரட்டை நண்பர்களிடையே. எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். சுந்தரேஷ் மிக மகிழ்ச்சியாக இருந்தார். ஹேப்பி ஹவர்ஸ்….!

நாள் 13 – ஜூலை 1, 2012
கிரேட்டர் லேக், மவுண்ட் சாஸ்தா

புதிய மாதம். பிஏகே தம்பதியினர், நாஞ்சில், ராஜன், சுந்தரேஷ் ஆகியோர் கட்டுச்ச்சோற்றுடன் ஹோண்டா வேனில் வடக்கு நோக்கி பயணம் செய்தனர். இரண்டு நாள் டூர். கிரேட்டர் லேக், மவுண்ட் ஷாஸ்தா. ராஜனிடமிருந்து கட்டுரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். (நேற்று ஜூலை 13) ”நீங்களே எழுதிவிடுங்கள், பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் எழுதிகிறீர்கள்” என்று ஐஸ் வைத்ததால் குளிர்ச்சி தாள முடியாமல் சில புகைப்படங்கள் மட்டும் இங்கே. சுந்தரேஷ், இந்த இடங்களெல்லாம் ”அனுபவிக்கணும், எழுதக்கூடாது” என்று ரேஞ்சில் பேசினார். வழியில்லை.

நாள் 14 – ஜூலை 2, 2012

இரவு 12க்கு திரும்பினார்கள். பாவம் நாஞ்சில். தூங்குவதற்கு கூட அவருக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை. அவருடைய வயதில் அவர் சலிக்காதது ஆச்சரியம்தான். மறுநாள் அதிகாலையில் துயில் எழவேண்டும்.

நாள் 15 – ஜூலை 3, 2012
லாஸ் ஏஞ்சலீஸ் – டிஸ்னிலாண்ட், யுனிவேர்ஸல் ஸ்டுடியோ

காலையில் 4:45க்கு கிளம்பி ராஜன் வீடு சென்றேன். நாஞ்சில் கிளம்பி காஃபி அருந்திக் கொண்டிருந்தார். முடித்ததும் 5:05 கிளம்பி சான் பிரான்ஸிஸ்கோ ஏர்போர்ட் சென்றோம். “தூங்க முடிந்ததா?” என்று கேட்டதற்கு ”ஒரு மணி நேரம்” என்றார். அசாத்தியம். விர்ஜின் அமெரிக்கவில் செக்கின் செய்து செக்யூரிட்டி செக் கடந்து கையசைத்தபின் ஆறரை மணி பக்கம் வீடு வந்து சேர்ந்தேன். ராஜேஷ் ஏர்போர்டிலிருந்து அப்படியே அவரை டிஸ்னிலாண்டுக்கு அழைத்துச் சென்றார். ஏற்கனவே டிஸ்னிலாண்ட் ஒரு ”டிரீம்லேண்ட்”. நாஞ்சில் தூக்கமினமை டிஸ்னிலாண்டை கனவுலகா நினைவுலகா என்று அறிந்துகொள்ளாதபடி செய்ய வாய்ப்பிருக்கிறது.

நாள் 16 – ஜூலை 4, 2012
இண்டிபெண்டன்ஸ் டே. விசுவும், அருணும் காரில் கிளம்பிச் சென்றார்கள். மறுநாள் யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ். விசு நீண்ட அறிக்கை தயார் செய்கிறேன் என்றார். இல்லை அவரும் இரட்டை கிளவிகளை தேடிக்கொண்டிருக்கிறாரா தெரியவில்லை.

நாள் 17 – ஜூலை 5, 2012

அன்று மாலை பாலாஜி வீட்டில் பிஏகே குடும்பத்தினருக்கும் நாஞ்சிலுக்கும் டின்னர் ஏற்பாடு. அதன் பொருள் கூத்து, கொண்டாட்டம், ”மகிழ்ச்சி”. விசுவும் அருணும் நாஞ்சிலை அழைத்துக் கொண்டு லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து சான் பிரான்ஸிஸ்கோவை நோக்கி கிளம்பியதுமே கார் டயர் பஞ்சர். பயணத்தில் அவரை மதியம் பட்னி போட்டு மாலையில் பேலோ ஆல்டோ வரை வந்து ஒரு க்ரேப் (crepe) ஜாயிண்டில் சாப்பாடு கொடுத்திருந்தார்கள். ஒரு வழியாக மாலை 5.45 க்கு வந்து என்னை பிக்-அப் செய்து கொண்டு ராஜன் வீட்டிற்கு சென்றோம். அவருக்கு லாஸ் ஏஞ்சலிஸ் பயணம் திருப்திகரமாக இருந்ததாகக் கூறினார். பொதுவாக குழந்தைகளை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதை வைத்து அவர் டிஸ்னிலாண்டை மிகவும் விரும்புவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் யுனிவேர்ஸல் ஸ்டுடியோஸ் அதை காட்டிலும் பிடித்திருந்தது என்றார்.

ஓய்வுக்கு பிறகு பாலாஜி வீட்டிற்கு படையெடுப்பு. பிஏகே குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் மீண்டும் சந்தித்தார்கள். அனேகமாக கடைசி கூட்டம் என்று நினைத்து வந்திருந்தார்கள். பிறகென்ன பாலாஜி வீடு ”மகிழ்ச்சி”புரம் தான். சரி பேசியதில் போனால் போகட்டும் என்று ஒரு விஷயத்தை சொல்கிறேன்.

ராஜீவ் கொலை வழக்கு பற்றி ஒரு விவாதம் வந்தது. முன்னாள் CBI இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் (நெல்லை ஜெபமனியின் மகன்) ரகோத்மன் காசு பண்ணுவதற்க்காக அந்த நூலை எழுதியிருக்கிறார், அவர் அந்த நூலில் இன்னும் சில உண்மைகள் வந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். ரகோத்மன் கார்த்திகேயன் மேல் இன்னும் கடுமையாகவும், உறுதியாகவும் வந்திருக்கலாம் என்பது அவரது தரப்பு. ரகோத்மன் ஒரு எல்லைக்குள் செயல்பட்டிருந்தாலும் சிறந்த ஆவணம் என்று நான் நினைக்கிறேன். ரகோத்மனின்  தரப்புபடி சிவராசனே இந்த சதியை உருவாக்கி செயல்படுத்தியவர் என்பதும் அனுமதிக்கு மட்டும் தான் பிரபாகரனிடம் சென்றார் என்றும் பிரபாகரன் விரைவிலேயே (தீர்க்கமாக பின்விளைவுகளை சிந்திக்காமல்) சதி திட்டத்திற்குக்கு பச்சைக்கொடி காட்டினார் என்பதும் என் புரிதல். அப்படி தான் தெளிவாக ரகோத்மன் முன் வைப்பதாக என் நினைவு. அதை பேசிக் கொண்டிருந்த பொழுது நாஞ்சில் பிஏகே போன்றவர்களின் விவேகமான பதில்களும், அதன் பின்னர் சில வாக்குவாதங்களும் எழுந்தன. மொத்தத்தில் தரமான நேரம்.

ஃபோட்டோ செஷன்ஸ் முடிந்து விடைப்பெற்ற பொழுது சுமார் 11 மணி.

நாள் 18 – ஜூலை 6, 2012

இன்று நாஞ்சில், ராஜன், நான் மூவரும் ரோகில் 17-மைல் டிரைவ் என்ற மாண்ட்ரே பகுதி கடற்கரைக்குச் சென்றோம். செல்லும் பொழுது பாஸ்டன் பாலாவை ராஜன் தொலைபேசியில் அழைத்து பேசினார். பாலா நாஞ்சிலிடமும் என்னிடமும் பேசினார். இந்த ”கலிஃபோர்னியாவில் நாஞ்சில்” கட்டுரை தொடர் நன்றாக வருகிறது என்றார். ItsDiff ரேடியோ நிகழ்ச்சியும் அருமையாக இருந்தது என்றார்.

வாயிலில் நுழைவுசீட்டு கொடுத்தவன் முறைத்தான். பேச மறுத்தான். பொதுவாக தங்கள் விருந்தினர்களை அன்பு வார்த்தைகளால் வரவேற்கும் இது போன்ற பொது சுற்றுலா ஈர்ப்புகளில் இந்த அனுபவம் புதிதாக இருந்தது. டிக்கட்டை வாங்கிக் கொண்டு நுழைந்தோம்.

”சார், நம் நாட்டில் பகுதியில் இன்முகத்தோடு வரவேற்ப்பார்களா?” என்றேன்.
”ஏண்டா இங்கெல்லாம் வரீங்கன்னுதான் நினைப்பாங்க”

கடற்கரையிலே அமர்ந்து கொண்டு (முன்னர் ராஜன், ஆர்வி, அருணா, ஜெயமோகன் மற்றும் நான் உட்கார்ந்து சாப்பிட்ட அதே இடத்தில்) பழங்கள் மட்டுமே புசித்தோம். டேஜா வூ (Deja vu).

பின்னர் ஒரு ப்யோம் (Marine Biome) பகுதியை பார்வையிட்டோம். பல உயிரினங்கள். அந்த இடத்தில் தான் பல தளங்களில் பலர் இன்று ஜெயமோகனை வசை பொழிய உபயோகப்படுத்தும் அந்த பைனாக்குலர் புகைப்படத்தை நான் மூன்று வருடங்களுக்கு முன் எடுத்திருந்தேன். ராஜன் நினைவு படுத்தினார். அந்த பாக்கியத்தை நாஞ்சில் வசையாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற பெருந்தன்மையில் அதே பைனாக்குலர் குளோஸப்.

இரண்டு மணிக்கெல்லாம் அங்கே சுற்றி விட்டு திரும்பினோம்.

”சார் ஒரு பாராட்டுக்கூட்டம் என்று ஒரு இலக்கியவாதியை அழைத்து வந்து அவரை பாராட்டி விட்டு சந்தடி சாக்கில் அவரின் குறைகளை மேடையில் சொல்லலாமா? ஒரு புத்தக மீட்டிங்கில் சொல்லலாம் என்று தெரிகிறது”
”அது மரபல்ல. ஆனால் சிலர் செய்கிறார்கள்.”

3:30க்கு சாண்டா கிளாராவில் காஸ்ட்கோ அருகில் இருக்கும் ”ஸ்வீட் டொமேடோ”வில் லஞ்ச் பஃபே. ராஜன் ஐடியா அது.  நுழையும் பொழுது இரண்டு தட்டில் காய்கறிகள் எடுத்துக் கொண்டு உள்ளே நுழையவேண்டும். சாலட் பாருக்கு திரும்ப முடியாது. உள்ளே இருக்கும் பல வகை ஸூப், ஃபொக்கேஷியா, கார்ன் கேக், பாயில்ட் பொடேடோ, இத்யாதிகள்…ஐஸ்கீரிம், போன்றவைகள் – எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் கொண்டு போய் உட்கார்ந்தோம். பெரிய ட்ரே நிறைய சூடாக குக்கிகளை (பிஸ்கட் போன்றது ஆனால் சிறிது தடித்தது) எடுத்துக் கொண்டு அன்புடன் ஒரு பணிப்பெண் பரிமாறினாள். எங்கள் சோர்வுக்கு அது இதமளித்தது.

நாஞ்சில் “இங்கே சாப்பிடறதையும் பார்க்கிறதையும் வைத்து ஒரு புத்தகமே எழுதலாம்” என்றார்.

இது போன்று “ஃப்ரெஷ் சாய்ஸ்” என்று ஒரு உணவு சங்கிலியும் இருக்கிறது. முடித்து விட்டு வெளியே வந்தோம். பக்கத்திலிருந்த காஸ்கோவில் நுழைந்தோம். ஒவ்வொரு பகுதியில் உள்ள பொருட்களையும் அவை அடுக்கப்பட்டிருந்த நேர்த்தியையும் பார்வையிட்டார் நாஞ்சில். மதுபான பிரிவில் அடுக்கபட்டிருந்தவற்றை “ஒரு கலைகூடம் மாதிரியில்ல இருக்கு” என்றார். ஒரு சுற்று சுற்றிவிட்டு வீட்டிற்கு திரும்பினோம்.

மாலை 7:30 மணி
ராஜனும், நாஞ்சிலும் வீட்டிற்கு வந்தார்கள். பெரும் டின்னர் ஏற்பாட்டெல்லாம் இல்லை. என் மனைவி குடும்பமாக ஆசி வாங்கவேண்டும் என்ற விருப்பபட்டாள். அப்படியே உணவிற்கு ஏற்பாடும் செய்தாள். நாஞ்சிலுக்கு பிடித்த டோக்ளாவும், பெசரட்டும் (அடை போன்றது). பாலாஜியும் அவர் மனைவி அருணாவுடன் நாஞ்சிலின் ஐடச்சை (iTouch) தயார் செய்து கொண்டு வந்தார். விசுவும், அருணும் புத்தகம் ஒன்றை பரிசளிக்க வந்தார்கள். அனைவரும் உணவு அருந்தினோம். சுக்கு வென்னீர் குடித்த பிறகு விடைப் பெற்றார்கள்.

நாள் 19 – ஜூலை 7, 2012

காலை 3:45க் கண் விழித்து ராஜனின் வீடு நோக்கி சென்றேன். எல்லோரும் கிளம்பியிருந்தார்கள். ஹ்யூஸ்டன் ஃப்ளைட் 6:50க்கு. பாலாஜியின் மினி வேனில் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையம் நோக்கி கிளமிபினோம். முன்னர் சிக்கல் ஒன்றை பற்றி சொல்லியிருந்தார் நாஞ்சில். ஒரு நாள் முழுவதும் மண்டையை குழப்பியபிறகு அதற்கு எனக்கு ஒரு யோசனை தோன்றியிருந்தது. அவர் ஷூ அணிந்துக் கொண்டிருந்த பொழுது அவசரமாக அதை கூறினேன். அதைப் பற்றி சிந்திப்பதாக சொன்னார்.

வீட்டிலிருந்து கிளம்பி ஒரு நூறு மீட்டர் சென்ற பொழுது “ராஜன் கேமிராவை எடுத்து கொண்டீர்களா?” என்றேன்.

“இல்லை எடுத்துட்டு வந்திடவா?”

“அதல்லாம் வேண்டாம், போகலாம்” மெல்லிய படபடப்புடனும் இனம் புரியாத உணர்ச்சிகளுடனும் நாஞ்சில். ஏதோ புரிந்தது. என் மனதில் ஒரு பாரம் ஏறத் தொடங்கியிருந்தது. பொது விஷயங்கள் சிலவற்றை பேசி விமான நிலையத்தை அடைந்து ”யுனைட்டட்” வரிசையில் சென்று நின்றோம். பாலாஜி இருபதைந்து டாலர்கள் கொடுத்து பெட்டியை செக்கின் செய்து விட்டு வெளியே வந்த பொழுது 45 நிமிடங்களே இருந்தன. வேகமாக செக்யூரிட்டி செக்கினுள் சென்று அவர் கணிபொறி, பெல்ட், ஷூ இவற்றை எக்ஸ்ரே மெஷின் பெல்ட்டில் வைத்துவிட்டு ஃப்ரிஸ்க் செய்ய உடன்பட்டார். மீண்டும் அனைத்தையும் மாட்டிகொண்டு எங்களைப் பார்த்து கையை அசைத்தார்.

கண்ணாடியை கழற்றி முகத்தை துடைப்பது போலிருந்தது. இல்லை என் பிரம்மையா?

எங்கள் மனதில் வெறுமையை நிரப்பிவிட்டு விமானத்தின் கேட்டை நோக்கிச் செல்லும் கூட்டத்தில் கரைந்தார் நாஞ்சில் நாடன் என்ற சுப்ரமணியன்.

(முற்றும்)

பின்குறிப்பு – நான் முதலில் சொன்னது போல் என்ன பேசினோம் என்பதை நினைவு வைத்து எழுதுவது ஒரு பக்கம், எல்லாவற்றையும் பிரசுரிக்க முடியுமா என்ற அரசியல் காரணம் இன்னொரு பக்கம் – சரி அப்படியே எழுதினாலும் அது சாத்தியமா? பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் பிரசுரித்தால் இன்னும் 50 அத்தியாயங்கள் ஓடியிருக்கும்.

மேலும் ஒரு முழு நேர எழுத்தாளன் வேண்டுமானால் ஸ்வாரஸ்யம் குறையாமல் இதை செய்யமுடியும்.  நான் எழுத்தாளனும் இல்லை. அதற்கு உண்டான திறமையும், திராணியும் அட்லீஸ்ட் இன்றைய நிலைமையில் இல்லை. ”இதெல்லாம் எவன் கேட்டான், இதை எதற்கு எழுதுகிறீர்கள்” என்பவர்களுக்காக எழுதியதல்ல இது. நுண்ணுணர்வுகள் எஞ்சியிருப்பவர்களுக்காக எழுதப்பட்டது இது.

பின் குறிப்பிற்கு பின் குறிப்பு – என்ன பேசினோம் என்பதை எழுத சொன்ன பலருக்கு – ”சட்டியில் இருந்தால் தானே ஆபிஸில் வரும்” என்று நான் சொன்னால் அது ஜெயமோகனின் ”பேடபாதம்”. ஆம், ஆஃபீஸில் அல்லது ஆஃபிஸ் டைமில் வைத்து அவசரமாக எழுதினால் இப்படி அரைகுறைதான். என்றாலும் முடிந்த அளவிற்கு எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன். என்னுடைய நோக்கம் என்ன நடந்தது என்பதை ஆவணப்படுத்துவதே தவிர நாஞ்சிலாகட்டும் பிஏகேயாகட்டும் – அவர்கள் பேசியதை ஆவணப்படுத்துவதல்ல.

ஒரு அனுபவத்தை கொடுத்த மனத்திருப்தியுடன் முடித்துக் கொள்கிறேன்.

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -6

நாள் 11 – ஜூன் 29, 2012

இன்று தம்பி முத்துகிருஷ்ணன், பிஏகே தம்பதியினர் மற்றும் நாஞ்சிலை சான் பிரான்சிஸ்கோ டியாங்க் மியூசியம் மற்றும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.  குறிப்பு அனுப்பினார்.  ஆனால் இதில் அவர் இந்த நாட்களில் என்ன பேசினார் என்பதும் அடங்கியிருக்கிறது.

முத்துக் கிருஷ்ணன் பதிவு இது
(முத்து கிருஷணன் இணைய தளத்திலும், நாஞ்சில் நாடன் தளத்திலும் முழுமையாகவும், ஜெயமோகன் இணைய தளத்திலும் இதற்கு சுட்டியும் இருக்கிறது). இதோ இங்கும் முழுமையாக. படித்து முடிக்கும் பொழுது முத்துகிருஷணன் கட்டுரையை எல்லோரும் மனப்பாடமே செய்திருப்பார்கள்.

நாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும்

நாஞ்சில் நாடன் என்ற ஆளுமையுடன் பழக பல மணிக்கூறுகள் – மூன்று தினங்கள் அவர் உரையாற்ற கேட்டும், ஒரு நாள் முழுவதும் அவருடன் ஊர் சுற்றிக் கொண்டும் – அமெரிக்கவில் வாய்ப்பு கிடைத்தது.

நாஞ்சில் நாடன் எதை போல் நேர்ப் பழக்கத்தில் தோற்றமளிக்கிறார்? அவருடைய கதைகளை போலவா? கட்டுரைகளைப் போலவா? சராசரி பயணியாகவா? அல்லது இவையெல்லாம்மில்லாத வேறொரு ஆளுமையாகவா?

ஃப்ரீமான்ட் (Fremont) நகரத்தில் முதல் நாள் கம்பராமயணம் கலந்துரையாடலுக்கு அவர் வீட்டினுள் நுழையக் கண்ட பொழுது, மிக தயக்கத்துடன் புதியவர்களை கண்டு வணக்கம் சொல்லும் ஒரு எளிய மனிதராகத் தான் தோன்றினார். தன்னிடம் கேட்கப் படாத கேள்விகளுக்கு வலிய சென்று அவர் பதிலுரைத்து நான் காணவேயில்லை. சின்ன தகவல் முதற்கொண்டு எல்லாவற்றையும் சிறு தயக்கமின்றி அடுத்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். வெளியிடங்களில் தான் காண்பதை உள்வாங்கிக் கொண்டே, சில நேரங்களில் பாக்கெட்டில் வைத்திருந்த கனக்கச்சிதமான ஒரு நோட்டு புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார்.

இதிலிருந்து வெகுவாக வேறுபடும் முகம் கம்பனை பாடும் பொழுது நாஞ்சிலுக்கு வருவதுண்டு. அவரே சொல்வதை போல கம்பன் அவருடைய ‘Passion’. அதன் பொருட்டே கம்பராமயணத்தை பாடும் பொழுதும் அதைப் பற்றி பேசும் பொழுதும் அவரின் பேச்சிலும், முகத்திலும் பரவசம் தெரிந்தது. கம்பராமயணம் செய்யுளை வாசிக்கும் பொழுது ஒரு பாவம், அதை விவரிக்கும் பொழுது வேறொரு பாவம். முதலாவது பாவம் இரண்டாவதை விட கொஞ்சம் தூக்கல். என் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு எதிலும் இப்படி ஒரு மணி நேரம் ஒரு ஆசிரியரை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு, அவர் சொல்வதை இடைவெளியில்லாமல் மனதில் வாங்கியதில்லை. கும்பகர்ணனுக்கும் இராவணனுக்கும் நடக்கும் உரையாடல் பகுதியில் அதை உணர்ந்து அன்னிச்சையாக அவரின் மேல் வைத்த பார்வையை விலக்கிக் கொண்டேன். அது ஒரு அனுபவம்.

இதை என்னல் நிச்சயமாக சொல்ல முடியும், ஏனென்றால் மூன்றாவது நாள் சங்கக் கவிதைகளை பற்றி அவர் உரையாற்றும் பொழுது ஆசிரியருக்கும் சரி, மாணவனுக்கும் சரி, அவ்வனுபவம் நிகழவில்லை.

நாஞ்சில் நாடனின் கட்டுரைகள் பெரும்பாலும் தான் வாழ்கின்ற சமூகத்தை பற்றியும், அவற்றை நோக்கியும் பேசுபவை. ஒரு தனி மனிதனாக, தன் சமூகத்தின் மேல் அக்கறை கொண்டவராக அவர், மிகவும் முன்னேறிய நாட்டில் சுற்றி அலையும் பொழுது, தொடர்ந்து அதை தன் நாட்டுடன் ஒப்பிட்டுக் கொண்டே வந்தார். எங்கும் தட்டுப்படில்லாத சில்லரை, கேட்டால் வழி சொல்லும் சக மனிதர், பிரம்மாண்டமான பாலம், தூய்மையான சுற்றுப்புரம் என பல காட்சிகளை (பெரிதோ, சிறிதோ…) ஒப்பிட்டு நோக்கி வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தார். “One who cares the most is the one who suffers the most” என்பது உண்மையானால், அவருடை இந்த பயணத்தில் அடி மனதில் ஒரு வலியை உணர்ந்து கொண்டே இருந்ததாகவே நான் யூகிக்கிறேன். ஹூவர் அணையை பற்றி சிலாகித்து பேசும் பொழுது, “எவ்வளவு பெருசா கட்டிருக்கான்” என்ற ஆரம்ப வரியை தொடர்ந்து, “எவ்வளவு சுத்தமா வச்சிருக்காங்க!!! யாரும் ஒரு ப்ளாஸ்டிக் பாட்டில் அங்க தூக்கி போடுறதில்ல…” என்ற இரண்டாவது வரி தொடர்ந்து வந்தது அவரிடமிருந்து. இதே தொனியில் அவர் மிகவும் அனுபவித்த மற்ற இடங்களில் நின்ற பொழுதும் ஒரு வரி, தன் நாட்டை ஒப்பிட்டு வந்து கொண்டேயிருந்தது.

ஆனால் அவ்வுணர்வுகள் எவ்வகையிலும் பயணத்தின் அனுபவத்தை இடை மறிக்காமல் கவனித்துக் கொண்டார் என்றே தோன்றியது. இடைவெளியில்லாமல் அமெரிக்காவில் பயணம் செய்து கொண்டிருந்தாலும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வெளிக்காட்சிகளை காண்பதற்கு ஆயுத்தமாகவே இருந்தார். இந்நாட்டின் நூலகங்களையும், பிள்ளைகளுக்கு படிக்க கிடைக்கும் புத்தகங்களையும், அதற்கு பெற்றோர்கள் அளிக்கும் ஊக்கத்தையும் தமிழ் நாட்டிற்கு ஒப்பு நோக்கும் பொழுது, நாஞ்சில் அவருடைய காரமான கட்டுரைகளாக மாறினார் என்று சொல்ல வேண்டும் (அங்கதம் தவிர்த்து…). அவர் பேசக் கேட்ட நான்கு நாட்களுமே நூலகங்கள் குறித்த தன்னுடைய அங்கலாய்ப்பை சொல்லிக் கொண்டேயிருந்தார். அதே போல் சராசரி தமிழ் மனதின் சமூக அக்கறையின்மை, இயலாமை, சீர்கேடு எல்லவற்றையும் கடுமையாக சாடி, இறுதியில் அவைகளுக்கு புறக்காரணங்களுக்கு சமமாக தனி மனிதனின் ஒரு வகை மனக் கோளாறும் காரணம் என்ற முடிவுக்கு வந்து விட்டார் என்று தெரிந்தது.

இன்று தமிழின் பழம்பெரும் நூல்களின் மறுபதிப்புகளின் நிலையென்ன, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்றுத் தரப்படும்  தமிழின் தரமென்ன, அதை விட முக்கியமாக கற்றுக் கொடுப்பவரின் தரமென்ன, வெளிச்சப்படுத்தப் படாமல் போன தமிழ் ஆர்வலர்களும் அவர்தம் படைப்புகளின் நிலையென்ன என்று கேள்விகளும், பதில்களும், எதிர்வினைகளும் அவர் மனதில் குவிந்து கிடக்கிறது. இவையெல்லாம் நேர் பேச்சில் அவருடைய கட்டுரைகளை போலவே, ஆனால் அங்கதமின்றி ஒரு படி அக்கறை கூடி, ஒலிக்கிறது.

நாஞ்சில் நாடன் தன் கதைகளாக காட்டிக் கொண்ட தருணங்கள் மிக சில. கம்பராமாயணம் உரையின் இரண்டாம் நாள் தொடக்கத்தில், சூடிய பூ சூடற்க தொகுப்பில் உள்ள தன்ராம் சிங் என்ற கதையில் வரும் கூர்க்கா கதாபத்திரங்களை பற்றி பேசுகையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். குறிப்பாக அந்த கூர்க்காக்கள் தம் குடும்பத்தில் ஒருவர் இறந்த சேதியை கொண்டுவரும் கடிதத்தை வாரக்கடைசியில் கடற்கரையில் கூடி உட்கார்ந்து, துக்கம் பகிர்ந்து, இறுதியில் எரிப்பதை சொல்லும்பொழுது அவர் குரல் உடைந்தது. அவர் உருவாக்கிய கதை மாந்தரை, அவர் குரலால், அதே மனவெழுச்சியுடன் உயிர்த்தெழக் கேட்டது மறக்கவியலா தருணம். ஒருவகையில் அன்று மிக எழுச்சியுடன் வெளிப்பட்ட கம்பனின் இராவணன் கதாபாத்திரத்திற்கு மேலே சொல்லப்பட்ட நிகழ்ச்சி ஒரு முகாந்திரமாக அமைந்தது என்று நினைக்கிறேன்.

ஹிந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசையில் மிகுந்த ஆர்வமுள்ளவர் என்பது அவரிடம் வலிந்து பேச்சுக் கொடுத்தாலன்றி தெரியாது. அவர் காரில் ஸான் ஃரான்ஸிஸ்கோவிற்கு போகும் பொழுது, P.A.கிருஷ்ணனிடம் தற்பொழுது யார் நன்றாக பாடுகிறார்கள், தனக்கு பிடித்தமான பாடகர்கள் யார் என விரிவாக சில நேரம் பேசிக் கொண்டிருந்தார். எவ்வளவு நேரம் பேசினார் என்பதைக் காட்டிலும், மிக அமைதியாகவும் தெளிவாகவும் அவருடைய பார்வைகளை சொன்னது மூலம் இசை மேல் உள்ள ஈடுபாடு விளங்கிற்று. ஆனால் கேட்டாலன்றி, எதிரில் இருப்பவற்கு இசையில் பரிச்சயமானவர் என்றாலன்றி அவராக அதைப் பற்றி பேச மாட்டார் என்றே நான் விளங்கிக் கொண்டேன்.

அடுத்தது சொல்லப்பட வேண்டியது, தவிர்க்கவே இயலாதது நாஞ்சில் நாடனும் உணவும். பொதுவாக பலருக்கு பரிச்சயமானது என்றாலும் கூட அதை தொடாமல் தாண்டிச் செல்ல இயலாது. சமீப காலமாக சைவத்திற்கு மாறி விட்டலும், நாஞ்சில் நாடனுக்கு அமெரிக்காவில் சாகசத்திற்கு பலவித உணவு வகைகள் கிடைத்தன என்று தான் சொல்ல வேண்டும். தனிப் பேச்சில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால் இன்னும் பல நாட்களுக்கு (சில மாதங்களுக்கு கூட..) கோவையில் அவர் வீட்டில் இரவுணவில் பல சோதனை முயற்சிகள் நடைபெறும் என்பதே. குறைந்த செலவில், துரிதமாக, சத்தான, நிறைந்த உணவு சிலவற்றை செய்வதெப்படி என கற்றுக் கொண்டார் என்பது உறுதி. போனால் போகட்டும் என நினைத்து உருளை கிழங்கை வைத்து பொடிமாஸ் போல ஒன்றை எப்படி சீக்கிரம் செய்வது என்று கோல்டன் கேட் பிரிட்ஜ் அடியில் எனக்கும் போதித்தார். (“ அப்புறம் எப்படி சார் உருளை வேகும்” என நான் கேட்க, அவரும் திருமதி.P.A.கிருஷ்ணனும் ஒன்று சேர்ந்து, “முதல்ல உருளைய வேக வச்சிட்டு தான் இதெல்லாம் செய்யவே ஆரம்ப்பிக்கணும்” என்று தண்ணி தெளித்து விட்டு, போதனையை நிறுத்திக் கொண்டது வேறு கதை…).

இங்குள்ள Starbucks சங்கிலி காபி கடையில் அவர்கள் தரும் லாட்டே (Latte) காப்பியை சில ‘பக்குவங்கள்’ சொல்லி அவர்கள் கையாலேயே தனக்கு பிடித்தமானதாக மாற்றிவிட்டார் என்பதை ஸாவ்ஸலிட்டோ (Sausolito) கடற்கரையில் பார்த்தேன். வடகிழக்கு அமெரிக்காவில் ஆரம்பித்து ஏறத்தாழ ஒரு மாதம் இதை செய்துவருகிறார் என நினைக்கிறேன். ஸான் ஃப்ரான்ஸிஸ்கோவிலிருந்து திரும்பி வரும் பொழுது, மாலை பொழுதின் உச்ச கட்ட நெரிசலில் பின் இருக்கையிலிருந்த P.A.கிருஷ்ணன் மற்றும் துணைவியாருக்கு சரியான முறையில் ரச வடை செய்வதெப்படி என்பதை முந்தின நாள் ஊறப் போடுவதிலிருந்து ஆரம்பித்து இறுதியில் அதை சாப்பிடும் பொழுது நாக்கில் தொடங்கி வயிற்றில் அடங்குவது வரை அதன் சுவை எப்படி இருக்கும் என சொல்லிக்கொண்டு வந்தார். இனி அந்த ரச வடை தவிர்த்து வேறு சாப்பிட்டால் எனக்கு திருப்தி படாது. ஒவ்வொன்றாக சொல்வதைக் காட்டிலும் இப்படிச் சொல்லலாம். டோஃநட்ஸ் (Doughnuts), மெபிள் ஸிரப் ஊற்றிய பான் கேக் (pan cakes), ஸாலட், சான்ட்விச், வீட்டுச் சாப்பாடு, சரவணா பவன் சாப்பாடு என நாஞ்சில் உண்ட உணவின் ருசி அவரை சுற்றி பொங்கி வழிந்து கொண்டேயிருந்தது.

தீர்க்கமான கருத்துக்களும், விமர்சனங்களும், எதிர்வினைகள் இருப்பினும் நாஞ்சில் நாடன் சக எழுத்தாளர்களை பற்றி குறைவாகவே பேசினார், முக்கியமாக விமர்சனங்களை. ஆனால் அதை குறிப்பிட்டு கேட்டால் மிகவும் ஆணித்தரமாக என்ன நினைக்கிறாரோ அதை தயக்கமின்றி சொன்னார். தான் ஒரு எளுத்தாளராக இருப்பதாலோ அல்லது இலக்கிய சூழலில் தனக்கு ஒவ்வாத சூழ்நிலை நிலவுவதாலொ அவர் தேவையற்ற ‘gossip’ஐ தவிர்ப்பதாகவே நான் புரிந்துக் கொண்டேன்.

அவர் பேசக் கேட்ட நான்கு நாட்களில் ஒப்பு நோக்க அவர் தொடாத விஷயம் என்று ஒன்றுண்டென்றால் அது தத்துவம் அல்லது சித்தாந்தம் என்று சொல்வேன். அவருடைய வயதிற்கும், வாசித்த நூல்களுக்கும், மேற்கொண்ட பயணங்களுக்கும், கடந்து சென்ற வாழ்கை அனுபவங்களுக்கும் சாரமாக ஏதோவொரு சித்தாந்ததில்/ தத்துவத்தில் சார்பு ஏற்பட்டு விட வாய்ப்புள்ளது. உரையாடல்களில் அது மறைமுகமாக கூட வெளியில் தெரிந்து விடும், அதுவும் மிக வெளிப்படையான நாஞ்சில் நாடனை போன்றவரிடம் நிச்சயமாக. ஒன்று நான் கண்டு கொள்ளவில்லை அல்லது கண்டதும், கேட்டதும் தாண்டி வேறொன்றுமில்லை என்பது தான் அவரின் கண்டடைதலாக இருக்கக் கூடும்.

இறுதியாக, நாஞ்சில் நாடன் அவருடைய கட்டுரையாகவா, கதைகளாகவா, ஒரு பயணியாகவா அல்லது மற்றொரு ஆளுமையாகவா தெரிகிறார் என்று ஆரம்பித்த கேள்வி. உண்மையில், அதற்கான பதிலை என்னால் கூற இயலாது. எனக்கு கிடைத்த நேரம் போதாமல் இருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆனால், நாஞ்சில் நாடன் தன்னை ‘எதுவாகவும்’ காட்டிக் கொள்ள முயற்சிக்காதவர் என்று தீர்க்கமாக சொல்வேன்.

ரெட்வுட் சிட்டியிலிருந்து, ஃப்ரீமான்டிற்கான பயணத்தில், டம்பார்ட்டன் பாலத்தில் (Dumbarton Bridge) காரில் போகும் பொழுது நாஞ்சி நாடன், “இந்த ஊருல புருஷனும் பொண்டாட்டியுமா குடும்பம் நடத்திட்டு, அங்க இந்தியாவுல பெத்தவங்களுக்கு செலவுக்கு பணம் அனுப்பிட்டு நல்ல படியா வாழணும்னா எவ்வளவு சம்பாதிக்கணும்?”

அதுவும் கூட நாஞ்சில் நாடன் தான்.

மாலை 8:15
ஆர்வியும் நானும் சென்று ராஜன், முத்துகிருஷ்ணன், பாலாஜி மற்றும் நாஞ்சிலுடன் ராஜன் வீட்டில் சேர்ந்து கொண்டோம். பெண்கள் அணி முன்னரே ஃபிரீமாண்டில் புதிதாகத் திறந்திருக்கும் சரவணபவன் சென்றிருந்தார்கள். 8:15க்கு வரச்சொல்லியிருந்தார்கள். அதனால் 8:30 சென்றோம். கூட்டம் ஜேஜே. உடனே இடம் கிடைக்காததால் சற்று அருகிலிருக்கும் உழவர் சந்தை ஒன்றினுள் நுழைந்து பொழுது போக்கினோம். மரபணுவுடன் விளையாடி விளைவிக்கப்பட்ட மற்றும் ஆர்கானிக் காய்கரிகள் பளபளத்தது.

பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே இடம் கிடைத்துவிட்டதாக தகவல் வந்தது. அமர்ந்தோம். சுந்தரேஷ் சேர்ந்து கொண்டார். நாஞ்சில் ரவா ஆனியன் சாப்பிட்டார். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ஆகியோர்களின் ஆர்டட்களிலினால் தாக்கப்ப்ட்டிருந்த சர்வ் செய்தவர் ”டென்ஷன்” என்று முகத்தால் சொன்னார். நாஞ்சில் அவருடைய பதட்டத்தைப் பார்தது ஹோட்டலுக்கு நல்லது அல்ல என்றார். உணவில் தேங்காய் சட்னி எண்ணைத்தேங்காயில் பண்ணியிருக்கிறார்கள். சாப்பாடு குவாலிட்டி சுமார் ரகம் என்றார்.

ராஜன் வீட்டிற்கு போய் ராஜன், அவர் மனைவி, நான், என் மனைவி நாஞ்சிலிடம் பேசிக்கொண்டிருந்தோம். நாஞ்சில் களைப்படைந்தவுடன் வீட்டிற்கு கிளம்பினோம். நேரம் இரவு 11:30.

(தொடரும்)

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -5

நாள் 7 – ஜூன் 25, 2012
ஃப்ரீமாண்ட், மில்பீட்டஸ் நூலகங்கள், கம்பராமாயணம் இறுதிப்பகுதி

நாஞ்சிலுக்கு ஓய்வு நாள். அனேகமாக. கம்பராமாயணம் – 3 மட்டும் தான் இன்று. நான் சுமார் பத்து மணிக்கு நாஞ்சிலைப் பார்க்க சென்றேன் கையில் மூன்று கதைகளோடு. எல்லாம் சிலிக்கன் ஷெல்ஃபில் வெளிவந்த கதைகள் தான். முன்னர் இரண்டாவது கதைப்பற்றி தனிமடலில் ஜெயமோகன் கருத்து தெரிவித்திருந்தார். எங்கே நான் அழுதுவிடுவேனோ என்று நினைத்து ”சுமார்” என்று ஜெயமோகன் சொல்லி கதை எப்படி எழுதவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அசோகமித்ரனின் பிரயாணம் என்ற கதை, கதை எழுதுவதில் இருக்கும் எனக்கிருந்த ஒரு பெரிய முடிச்சை அவழித்தது. மூன்றாவது கதையை எழுதும் பொழுது இந்த இரு படிப்பினையும் அப்ளை செய்திருந்தேன்.  பின்னூட்டமிட்ட வாசகர்கள் உப்பிலி, சாரதா மற்றும் ஆர்வி கருத்துகள் மூலம் ஓரளவு வந்திருக்கிறது என்று எடுத்துக் கொண்டேன். நாஞ்சிலிடம் validate செய்து பார்க்கலாம் என்ற ஐடியாவில் “சார் வாசித்து சொல்லுங்க” என்று ”தண்டனை” கொடுத்தேன். ஏற்றுக்கொண்டார்.

சிறிது நேரம் தமிழ் டைப் கிளாஸ் எடுத்துவிட்டு ”ஈவ்னிங் பார்க்கிறேன்” என்று சொல்லிக் கிளம்பினேன். செல்வி ஃப்ரீமாண்ட், மில்பீட்டஸ் லைப்ரரிகளுக்கு அழைத்து சென்றிருக்கிறார். பிரமித்து, ஒப்பு நோக்கி, வெறுத்து போயிருந்தார் நாஞ்சில். “எங்காவது உட்கார்ந்து அழவேண்டும்” என்று தோன்றியிருக்கிறது அவருக்கு. தமிழ்நாட்டின் எதிர்கால சந்ததியர்கள் மீது அவருக்கு கவலை பிறந்தது.

மாலை 7 மணிக்கு வந்தார். கதைகளை படித்து விட்டதாகவும் பின்னர் டிஸ்கஸ் செய்யலாம் என்றும் கூறினார். கம்பராமாயணம் கூட்டத்திற்கு ஒரு 25லிருந்து 30பேர்கள் வந்திருந்தார்கள். நாஞ்சில் ஆரம்பித்த உடன் “இன்று கம்பராமாயனம் தவிர பிற சங்க இலக்கியங்கள் பற்றி பேசுகிறேன்’ என்றார். (இந்த மூன்று நாள் செஷன்களும் பின்னர் வீடியோவாக வெளியிடுகிறோம்). அருமையான பேச்சு. என்ன பேசினார் என்பது வீடியோக்களில். முடிவில் ஒரு சிறிய அன்பளிப்பு அளிக்கப்பட்டது. சேவை, டோக்ளா, சப்பாத்தி, சப்ஜி, பல வகை வெரைட்டி ரைஸ் என்று உணவு வகைகள். சித்ரா ”சுக்கு வென்னீர்” கொடுத்தாள். செவிக்கு இடப்பட்ட உணவுடன் வயிறுக்கு இடப்பட்ட உணவும் செரிக்கத் தொடங்கியிருந்த பொழுது அனைவரும் விடைப்பெற்றனர்.

நாள் 8 – ஜூன் 26, 2012.
யோசமிட்டே (Yosemite)

இன்று பாலாஜியுடனும் கீதா கிருஷ்ணனுடனும் யோசமிட்டே நீர்வீழ்ச்சி, காடு, மலைக்கு சென்றார் நாஞ்சில். கீதா கிருஷணன் கார் ஓட்டியிருக்கிறார். என்ன கார் என்று தெரியவில்லை. பாலாஜியிடம் குறிப்பு கேட்டேன். XXXக்கு கிளம்பினோம். YYYப் பார்த்தோம் ZZZ சாப்பிட்டோம் என்று தான் குறிப்பு கொடுக்க முடியும். பேசிய எதையும் எழுத முடியாது என்றார். நான் மட்டும் பிரம்மாசூத்திரமா எழுதுகிறேன்? சரி நம்மிடம் கை வந்த கற்பனை அல்லது கப்ஸா கலை இருக்கிறது. எடுத்து விடலாமா? அதற்க்காக சுத்தமாக போகமலேயே சென்றது போல் எழுதுவது அநியாயம் என்பதால், அவர் வந்தவுடன் கேட்ட கேள்வியும், பதிலும் இங்கே- “சார் எப்படி இருந்தது?” “டிவைன், அருவியில் தண்ணீர் வந்தது, உயரமான அருவிகள். அடர்ந்த காடுகள். குப்பைகளிலில்லை. எப்படி மெயிண்டெயின் பண்ணுகிறார்கள்!”. பரவாயில்லை. இது பாலாஜி கொடுத்ததை விட கொஞ்சம் அதிக தகவல்.

எனக்கு சற்று கவலை அளித்த விஷயம் எப்பொழுது திரும்பப்போகிறார்கள் என்பது. ஏனென்றால் மறுநாள் 6:30க்கு கிளம்பவேண்டும். சுமார் 11 மணிக்கு திரும்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

நாள் 9 – ஜூன் 27, 2012
இட்ஸ் டிஃப் வானொலி

காலை 6:30 மணிக்கு ராஜனும் நாஞ்சிலும் ஹோண்டா அக்கார்டில் வந்து பிக் அப் செய்து கொள்ள Standord Universityயை நோக்கிச் சென்றோம். KZSU ஸ்டுடியோவில் தமிழ் ஒலிபரப்பை காலை 6 மணி முதல் 9 மணி வரை புதன் கிழமை தோறும் கடந்த எட்டு வருடங்களாக நடத்தி வருகிறார் ஸ்ரீ என்ற Srikanth Srivatsava. அமெச்சூர் ரேடியோ என்றாலும் பிரொஃபெஷ்னல் குவாலிட்டிக்கு முயற்சி செய்து வருகிறார். தமிழக FM சானலை விட தேவலாம், பல நாட்களில். அவர் கல்கியின் பொன்னியன் செல்வன், பார்த்திபன் கனவு போன்ற நாவல்களை ஆடியோ வடிவத்தில் கொடுத்து வருகிறார்.

ஸ்டுடியோவிற்கு வந்துவிட்டேன் – விசு தொலைப்பேசியில் சொன்னார். அவருக்கு இரண்டாவது நிகழ்ச்சி. இரண்டு வாரங்களுக்கு முன்னர் பி.ஏ. கிருஷ்ணன் அவர்களை பேட்டிக் கண்டோம். முன்னதாக நானும் ராஜனும் சில நிகழ்ச்சிகள் அளித்துள்ளோம். எனக்கு ஒன்றரை வருடமாக ஒரு 4 நிமிட செக்மெண்ட் ஓடுகிறது. இந்த முன் அனுபவங்களை வைத்து தான் நாங்கள் நாஞ்சிலை இண்டெர்வியூ பண்ண புறப்பட்டிருக்கிறோம். 2009ல் ஜெயமோகனையும் விட்டு வைக்கவில்லை.

7 மணிக்கு ஸ்டுடியோவில் இரண்டு முறை பெல் அழுத்தி காத்திருந்தோம். ஒரே மனிதர் தான் இயக்குகிறார். ஸ்ரீ உள்ளே வானொலியில் பேசுவது கேட்டது. கேப் பார்த்து கதவைத் திறந்தார். பேனல் (நாங்கள் நான்கு பேர்) கான்ஃபெரன்ஸ் ரூமில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு செட்டில் ஆகியது. 7:30க்கு காத்திருந்தோம். எஞ்சினியரிங் கண்ட்ரோல் ரூமிலிருந்து கண்ணாடி வழியாக சைகை செய்து ஸ்ரீ கான்ஃபெரன்ஸ் ரூமில் “ON THE AIR” விசையை அழுத்தியதும் ஸ்ரீ மற்றும் ராஜனின் ”நாஞ்சில் நாடன் என்ற எழுத்தாளர்” அறிமுகத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. நேயர்களுக்கு பெருத்த ஏமாற்றம். ஔவையாரை புல்லரிக்க வைத்து பேரானந்தத்தில் உண்மத்த நிலையை அடைய வைக்கும் ”அறம் செய்ய விரும்பு மவனே ஆஆஆஆஆ…..த்திச்சுடி” போன்ற தேவகானங்களை போடாத ஸ்ரீகாந்தையை ”நாஞ்சிலாம் நாஞ்சில்” என்று சபித்தார்கள்.

சாகித்ய அகடெமி பெற்ற நாஞ்சிலை மக்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பாவம் பிஸியாக விஜய் அஜித் சினிமா பார்த்துக் கொண்டிருப்பார்கள். நாஞ்சில் சம்பத், நாஞ்சில் மனோகரன், நாஞ்சில் நாடன் என்பது போன்ற பெயர்களில் உள்ள  ராகெட் சைன்ஸை புரிந்துகொள்வது நேயர்கள் மண்டையை சூடு ஏற்றியிருக்கிறது என்பது தெரியவந்ததால் இந்த அறிமுகம் தேவையிருந்தது. நாஞ்சில்களிடம் ஆறு வித்யாசம் கண்டுபிடிப்பதை காட்டிலும் அலுவலகத்திற்கு போய் இண்டர்நெட் பிரவுஸ் பண்ணுவது சாலச் சிறந்தது என்ற நம்பிக்கை கொண்டவர்கள் வானொலியின் டுயூனரை திருக்க ஆரம்பித்தார்கள்.

அமோகமாக 1 1/2 மணி நேரம் சென்றது. எளிமையாகவும் அருமையாகவும் பதில் சொல்லி வந்தார் நாஞ்சில். ராஜன், விசு, நான் ரவுண்டில் கேள்வி கேட்க ஸ்ரீ நேயர்களின் கேள்விகளை சேனல் செய்தார். இந்த ப்ரோக்ராமின் archives, itsdiff.com இணைய தளத்தில் ஏற்றப்படும் என்று ஸ்ரீ கூறியிருக்கிறார். அவர் ஏற்றியவுடன் இங்கே தொடர்பு கொடுக்கிறேன். செட்டப் செய்து தான் இதற்கெல்லாம் ஆள் சேர்க்கவேண்டியிருக்கிறது. அப்படியும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ராஜன் சொல்ல மறந்த கதை (நாஞ்சிலின் தலை கீழ் விகிதங்கள்) என்ற திரைபடத்திலிருந்து பாடல் ஒலிபரப்பி பார்த்தார். பாட்டை கேட்டுவிட்டு அன்பு நேயர்கள் ரேடியோவை ஆஃப் செய்து விட்டார்கள்.

9 மணிக்கு நிகழ்ச்சி முடிந்ததும் நாஞ்சில் “நல்ல அனுபவம்” என்றார். அவருக்கு முதல் அனுபவம். புகைப்படம் எடுத்து ஸ்ரீக்கு நன்றி தெரிவித்து திருப்தியுடன் கிளம்பினோம். ஆனந்த கோனார் (பாலாஜி) “பிண்ணிட்டீங்க சார்” என்று போனில் தன் வெங்கலத்தில் கூறினார். 9:45க்கு வீட்டிற்கு அருகில் இறங்கி கொண்டேன்.

மாலை 4 மணி

ராஜன் வீட்டிற்கு சென்ற பொழுது தூங்கி ரெஸ்ட் எடுத்து புத்துணர்ச்சியுடன் இருந்தார். ராஜன் டிவியில் மலையேறும் டாக்குமெண்ட்ரி போட்டுக் காண்பித்தார். கிளம்புவதற்கு முன் திங்களன்று கொடுத்த கதை பற்றி பேசினார் நாஞ்சில். முதல் ”கதை” (மெட்ரோ) ஒரு சம்பவமே தவிர கதை அல்ல என்றார். இரண்டாவது கதை (குழி) ”20 வருடத்திற்கு முன்னால் ஓகேயாக இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது சரிப்படாது” என்றார். மூன்றாவது (குருவி மூளை) ”ஒரு வித்யாசமான கதை. நல்லா வந்திருக்கிறது” என்றார். சில திருத்தங்கள் சொன்னார்.

4:30க்கு நிஸான் ரோகில் அருகில் கயோட்டி பார்க் எனப்படும் எங்கள் வாக்கிங் ஸ்தலத்திற்கு சென்று காலார நடந்து மனதார பேசினோம். துரதிர்ஷடம் எதையும் வெளியே பகிர முடியாது – பேச ஆரம்பித்தால் பலர் மேல், பலக் குழுக்கள் மேல், பல அமைப்புகளின் மேல் அன்பு. மலை பாங்கான இடம். நாஞ்சிலுக்கு மூச்சு திணறியது. அதற்கு மேல் அவரை மலை மேல் ஏற்ற விரும்பவில்லை. திரும்பினோம். தலையில் “திராவிடம் ஆர்யம் தனி நாடு தனியாத நாடு மார்க்சிஸம் வயிறு உப்பிஸம்” என்று முரசு கொட்டிற்று.

7:30 மணி

ஆர்வி வீட்டினுள் நான், மனைவி, மகள் நுழைந்த பொழுது பிஏ கிருஷணன் அன்புடன் வரவேற்றார். நாஞ்சில் ராஜன் உள்பட பல நணபர்கள் குழுமியிருந்தனர். பிஏகே ஒரு அருமையான மனிதர். என்ன பண்ணிக் கொண்டிருந்தார்கள்?. அதையும் எழுத முடியாதபடி ராஜன் நேற்று (ஜூலை 10) ஃபோனில் எனக்கு செக் வைத்தார். இப்படிப் போனால் இந்த இடத்தில் நாங்கள் குழுமினோம் பேசினோம் பிரிந்தோம், மீண்டும் குழுமினோம் பேசினோம் பிரிந்தோம் என்று சொல்லிவிட்டு மங்கலம் பாட வேண்டியது தான். இருந்தாலும் ”கிடச்ச கேப்பில் புகுவதே மறத்தமிழனின் வீரம்” என்பதால் இது: கயோட்டி குன்றுகளில் தலையில் நிறைந்திருந்த அழுத்தங்கள் சில விஷேச கலவையில் கரைத்து அகற்றப்பட்டது. பிஏகிருஷ்ணன் மற்றும் குடுமபம், நாஞ்சில், ராஜன் குடும்பம், பாலாஜி குடும்பம், என் குடும்பம் தவிர சுந்தரேஷ், விசு, அருண், உப்பிலி ஆகியோர் ஆர்வி-ஹேமா தயாரித்திருந்த உணவு வகைகளை பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தோம். பிரிந்து செல்லும் பொழுது இரவு சுமார் 1:30.

நாள் 10 – ஜூன் 28, 2012

இன்று நாஞ்சிலின் நண்பரின் பெண் சித்ரா வந்து அழைத்து கொண்டு போனார். Intel நிறுவனம், இங்குள்ள் பள்ளி ஆசிரியை இருவருடன் சந்திப்பு, சான் ஓஸே டெக் மியூசியம், IMAX படக் காட்சி போன்றவை பார்த்ததாக பின்னர் கூறினார். மாலையில் பே ஏரியா தமிழ் மனற வாசகர்களுடன் சந்திப்பு. நாஞ்சில் தளத்தில் இது பற்றி ஒரு கட்டுரையிருக்கிறது.

(தொடரும்)

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -4

நாள் 5 – ஜூன் 23, 2012
ஹூவர் அணை, கிராண்ட் கேன்யன்

காலை 8:30. அனைவரும் ரெடி. லாஸ் வேகஸ் மெக்டானல்ட்ஸ் ஒன்றில் பிரேக்ஃபாஸ்ட். ஒரு 45 நிமிட கார் பயணம். லேக் மீட் கண்ணில் பட்டதுமே வீடியோவை சுழலவிட்டார் நரேன். ஃபோட்டோக்களும் உண்டு. ராஜேஷ் நல்ல கேமரா ஒன்று வைத்திருந்தார். நாஞ்சிலுக்கு ஹூவர் டாம் விவரிக்கப்பட்டது. காரிலிருந்து டாம் சுவரில் இறங்கினோம். சுவற்றில் தான் சாலை போட்டிருக்கிறார்கள். ராஜேஷ் அரிஸோனாவில் பார்க் செய்தார். அணைக்கட்டு சுவர் நெவாடா, அரிஸோனா இரண்டு மாநிலத்தையும் பிரிக்கிறது. அனைக்கட்டு சுவற்றிலிருந்த “கைப்பிடி சுவற்றை விட்டு விலகவும்” என்ற வாசகம் எழுதப்பட்ட இடத்தில் இருந்து எட்டிப்பார்த்து அணைக்கட்டை பார்வையிட்டார் நாஞ்சில். நாங்களும் தான். “பிளாஸ்டிக் பாட்டில், பாலித்தீன் பாக்கெட், செருப்பு, பக்கெட், கண்ணாடி பாட்டில், மரக் குச்சிகள், இலைகள், அட்டைப்பெட்டிகள் இதெல்லாம் நம்மூர் ஏரிகளிலும் அணைகளிலும் மிதக்கும். ஒரு தூசி இல்லையே. நீல நிறத்தில் தண்ணீர் சுத்தமாக இருக்கிறதே” என்றார்.

அவருக்கு பிடித்திருந்தது. ஒப்பு நோக்கி பார்த்து மனம் நொந்தார். சகிப்பு தன்மையை வளர்த்துக் கொள்வதைத் தவிர வழியில்லையா?. அவருக்கு அரசாங்கத்தை மட்டும் குறை சொல்வதில் உடன்பாடு இல்லை. “பாலித்தீன் கவரை போடு, செருப்பை போடுன்னு அரசாங்கம் சொல்லிச்சா? அவங்களுகால்ல தோணனும். டிஸிப்ளின் கிடையாது. அரசாங்கத்தை எதிர்த்து வேலையில்லை அது இதுன்னு போராட ரெடியாயிருப்பான். இன்னைக்கு தமிழ்நாட்ல ஒருத்தங்கூட வயிற்றுப் பிழைப்புக்கு கஷ்டப் படவேண்டாம் ஒழுங்கா வேலை செஞ்சான்னா. அவ்வளவு வேலை இருக்கு. சொல்லப் போனா வேலைக்கு ஆள் கிடைக்காது. மத்த மாநிலத்து காரன் இங்கே வந்து பிழைப்பு தேடுகிறான். சோம்பேறிகளைத் தவிர இன்னைக்கு எல்லோருக்கும் ஒரு வழி இருக்கு.” நாஞ்சில் ஒரு பிரக்மாட்டிக் மனிதர் என்பது அவருடன் பேச பேச தெரிய வந்தது.

மொத்தம் 17 டர்பைன்கள். நெவாடா பகுதியில் 8 அரிஸோனாவில் 9. உள்ளே அழைத்து செல்லவில்லை. அங்கே போனால் இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும். அவரும் பல ஹைட்ரொ எலக்ட்ரிக் அணைகட்டுகளை பார்த்திருக்கிறேன் என்றார். அங்கிருந்த படியே மேலே செல்லும் பைபாஸ் சாலையை பார்த்துக் கொண்டிருந்தோம். கிளம்பினோம். ”நாம் பைபாஸில் போகமாட்டோம், இப்படியே பிடித்து போய்விடுவோம்” என்று அணைக்கட்டிலிருந்து அரிஸோனா போகும் பாதையை நான் சுட்டினேன். அரிஸோனா ரஸ்தாவை அடைத்திருந்தார்கள். ஒரு மைல் சென்றபிறகு பெரிய சாலை அடைப்பான்கள் எங்களை தடுத்து திருப்பிவிட்டது.

பைபாஸை பிடித்து கிராண்ட் கேன்யான் தென் விளிம்பை நோக்கி செலுத்தினார் ராஜேஷ். 3 மணி நேர பயணம். வழியில் மதியம் சாப்பாடு. ஒரு இன்ஸ்யூரன்ஸ் ஏஜண்டின் அலுவலகத்தின் முன் காரை நிறுத்தி ராஜன் அன்று காலையில் வைத்த சாதத்தை வத்தக்குழம்புடன் சாப்பிட்டு – அதன் சுவையினால் ஈர்க்கப்பட்டு மேலும் கொஞ்சம் வத்தக் குழம்பு போட்ட படியால் உண்டான – வயிற்றெரிச்சலை மில்க் ஷேக் வாங்கி அணைத்தேன். நாஞ்சிலும் மற்றவர்களும் கொண்டு வந்திருந்த புதினா மோரை குடித்து அணைத்தார்கள். அந்த இன்ஸ்யூரன்ஸ் அலுவலகத்தின் முற்றத்தின் ஒரு ஓரத்தில் பெரும் குப்பை கூழம் ஒன்று. நாங்கள் சேர்த்த குப்பைகளை அதில் கொட்டிவிட்டு போய்விடலாமா என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது. மனசாட்சி இடம் தரவில்லை. அத்துமீறி நுழைந்து சாப்பிட்டதும் இல்லாமல் குப்பையையும் கொட்டிவிட்டு போவதா? அதை காட்டிலும் காமிரா வைத்திருப்பார்களோ என்ற பயம் வேறு. நரேன் விடாப்பிடியாக எல்லா குப்பைகளையும் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த காஸ் ஸ்டேஷன் குப்பைதொட்டிக்கு பயணம் செய்தார். “எல்லாம் பயம்தான்” என்றார் நாஞ்சில். இந்தியாவில் சிவிக் சென்ஸ் வளர ”தேவை பயம்” என்ற தர்க்கம் ஊர்ஜிதம் ஆகிக் கொண்டிருந்தது.

கிராண்ட் கேன்யன் IMAX முதலில் செல்லவேண்டும். பார்த்துவிட்டு விரைவில் லாஸ் வேகஸ் சென்றால் சிறிது சீக்கிரம் தூங்கலாம் என்றது என் மனக் கணக்கு. ராஜேஷ் வேறு உலகத்திலிருந்தார். Sunset பார்க்கலாம் என்றார். சரி தான் இன்றைக்கும் லேட் தான் என்று மனம் முடிவு செய்தது. IMAX தியேட்டருக்கு டிக்கட் எடுத்து உள்ளே நுழைந்தோம். கொலராடோ நதி சுழல்களில் (rapids) நாங்கள் திக்குமுக்காடியது, ஹெலிகாப்டரில் கிராண்ட் கேன்யனின் மலைகளுக்குள் நதியை ஒட்டி தாழ்வாக பறந்தது, செவ்விந்தியர்களுள் ஓரினம் இன்னொரு இனத்தை அழித்தொழித்ததைப் பார்த்தது – என்று ஒரு உயர் ரக அனுபவத்தை அடைந்துக் கொண்டிருந்த பொழுது என் அருகில் உட்கார்ந்திருந்த ராஜன் அதை விட ஒரு உயர் ரக அனுபவத்திலிருந்தார் – மெலிதான குறட்டை ஒலியுடன். நிம்மதியின் விலை அறுபது டாலர் என்று நினைத்துக் கொண்டேன்.

வெளியே வந்த நாஞ்சில் “IMAX IMAXன்னு நீங்க பேசிட்ட வந்தப்ப ஐபாட், ஐஃபோன் போல ஏதோ ஒரு பொருள்ன்னு நினைச்சேன். தலை சுத்ற மாதில்ல இருக்கு. க்ரேட் எக்ஸ்பீரியன்ஸ்” எனறார். கிராண்ட் கேன்யன் பார்க்கினுள் நுழைந்த பொழுது கிட்டதட்ட மாலை ஐந்து மணி. வெயில் உரைத்தது. பார்க் பண்ணிவிட்டு விளிம்பிற்கு சென்றோம். காட்சியில் நாஞ்சில் பரவசமானார். தன்னை இழந்து பார்த்துக் கொண்டேயிருந்தார். (இதை நாஞ்சிலே அவரது கட்டுரைகளில் வர்ணிக்கட்டும்) பின்னர் வழக்கமான ஃபோட்டோ படலம். இன்னும் சில ரிம்களில் நின்று விட்டு இயற்க்கையின் முன் உண்டான சிறுமையுடன் மனமில்லாமல் திரும்பினோம்.

மீண்டும் டிரைவ், மீண்டும் சாலை. மீண்டும் ஹூவர் டாம் பைபாஸ். எங்கும் நிறுத்தவில்லை. மீண்டும் லாஸ் வேகஸ். ஒரு பள்ளத்தாக்கில் தீ கணலாக மொத்த லாஸ் வேகஸும். அருமையான காட்சி. சர்க்கஸ் சர்க்கஸை அடைந்த பொழுது சுமார் பத்து. ஓய்வு. ஸ்காட்ச். பின்னர் ஸ்ட்ரிப்பை தொட்ட பொழுது இரவு 11:45. கிட்டதட்ட ”நடுநிசி“ 12 மணி. ஆனால் நம் மனதில் வரும் பிடி சாமி நடுநிசி அல்ல. பெருந் திருவிழா நடுநிசி. ராஜன் கால் வலி என்று சொல்லி எங்களுடன் வரவில்லை. ராஜேஷ் பெல்லாஜியோவில் எங்களை இறக்கிவிட்டு பார்க்கிங் தேடி சென்றார். அப்பொழுது நாங்கள் பேசி கொண்டிருந்த சமாச்சாரம் ஈழப்போர், தனித் தமிழ்நாடு கோரிக்கைகள் பற்றியது. (முன்னரே சொன்னது போல் அதை நான் டிஸ்கஸ் செய்யப் போவதில்லை). மனதின் எரிமலை ஜாகீர் உசேன் பிண்ணனி தபலாவினால் அடங்கி ”நம்பவைக்கும்” (முன்பு ஏ ஆர் ரஹ்மான் இசை) எரிமலைக் காட்சி கண் முன் தோன்றியது. கடைசி ரன். மக்கள் கூட்டம் ஆரவாரித்தது. காஸலின் எரிக்கப்படுவதால் உண்டான சூடு தாக்கியது. காட்சி ஒன்றும் பெரிய பிரமாதமெல்லாம் இல்லை. ராஜேஷ் வந்து சேர, எல்லோரும் இரவு உணவுக்காக டென்னிஸ் சென்றோம். நாஞ்சில் சீஸில் முங்கிய நாச்சோஸ் சாப்பிட்டார். முடிந்து சிறிது சுற்றினோம்.

சுறுசுறுப்பாக ”பாவ நகரம்” (Sin City) பாவங்களை செய்து கொண்டிருந்தது. வழியெங்கும் பாவம் செய்ய எங்களை சீட்டுக் கட்டு அட்டையில் பெண்கள் அழைத்தார்கள். சிரித்தோம். அசட்டு சிரிப்பா என்பது ஃபோட்டோக்களில் தெரிந்திருக்கலாம். பாவம் செய்ய மறுத்து காரில் ஏறி லாஸ் வேகஸை ஒரு சுற்று சுற்றி வரலாம் என்று ராஜேஷ் சொன்னார். சரி என்றோம். பாவக்கூடங்களை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் காரில் ஏறி உடகார்ந்ததும் நாஞ்சில் தூங்கினார். நான் தூங்கினேன். நரேனும் தூங்கியிருப்பார் என்று நினைக்கிறேன். கண் விழித்த பொழுது சர்க்கஸ் சர்க்கஸில் காரை பார்க் செய்து கொண்டிருந்தார் ராஜேஷ் வெறுப்புடன். மணி மீண்டும் அதிகாலை சுமார் 4.

நாள் 6 – ஜூன் 24, 2012

காலை 9 மணிக்கெல்லாம் செக் அவுட் செய்தாகி மாண்டலே பே (Mandalay Bay) வந்தோம். பிரேக் பாஸ்ட் பஃபே. 25 வெள்ளிகள். (டாலர்). விதம் விதமான உணவு. நன்றாக சாப்பிடுபவர்களுக்கு இங்கு ஒரு பெரிய அனுபவம் காத்திருக்கிறது. நான் பேன்கேக்கள் ஆப்பிள் க்ரேப்புகளை (crepe) தட்டில் நிரப்பிக் கொண்டு வந்த பொழுது எல்லோர் தட்டிலேயும்- இரண்டு மூன்று தட்டுகள் – கலர் கலராக வித விதமாக உணவு வகைகள். ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டோம். மூன்று நான்கு முறை உணவு பாருக்கு பயணம். காலையில் கேக், ஐஸ்கிரீம் என்று ஒன்று விடவில்லை.

ஒரு வழியாக சாப்பிட்டு வெளியே வந்தோம். ராஜேஷ் வெள்ளிக்கிழமை இரவில் திருமணம் செய்து, ஞாயிறன்று டைவர்ஸ் பெறும் மாண்டலே பேக்குள் இருக்கும் ஒரு சர்ச் சர்வீஸை பார்க்க அழைத்துச் சென்றார். எதிர்காலத்துக்காக குறித்துக் கொண்டோம். மாண்டலே பே செயற்கை கடற்கரையில் (Mandalay Bay Beach) நீச்சலுடைகளுடன் ஆண் பெண் குழந்தைகள் கண்ணாடி வழியாக தெரிந்தார்கள். மணி கிட்டதட்ட மதியம் 12.  வெளியே வரும் பொழுது தலையற்ற ஒரு பிரம்மாண்ட சிலை ஒன்று பார்த்தோம். கீழே “—–” என்று பொறிக்கபட்டிருந்தது. 1915-20களின் உச்சத்தில் இருந்த ஒரு இடதுசாரி போராளி-தலைவர். ஃபோட்டோ இருக்கிறது.  ராஜேஷ் “அடுத்தது எங்கே போகலாம்?” என்றார். ”சான் பிரான்ஸிஸ்கோவிற்கு” என்றேன். நாஞ்சில் புரிந்து கொண்டு ”சரி போகலாம்” என்றார். ராஜேஷ் ”அதுக்குள்ளவா?” என்றார்.

ராஜேஷுக்கு லாஸ் வேகஸை பிரிய மனம் இல்லை. அவரை கட்டாயப்படுத்தி மீண்டும் சர்க்கஸ் சர்க்கஸ் சென்று நரேனை கார் பார்க்கில் விட்டு விடைப்பெற்று ஃப்ரீவேயை தொட்ட இருபது நிமிடத்தில் ட்ராஃபிக் ஜாம். சம்பாஷனைகளில் மூழ்கினோம். ஒரு வழியாக ரெஸ்ட் ஏரியா வந்த பொழுது சாப்பிடவில்லை. இன்னும் சாப்பிட்டால் பிரச்சனைதான். நான் இந்தப் பயணத்தில் முதல் முறையாக ஓட்டுனரானேன். டிராஃபிக், மெதுபயணம் என்று இந்த விஷயங்களிலின் மேல் இருந்த அனைத்து ஆத்திரத்தையும் ஆக்ஸிலரேட்டர் என்ற அப்பாவி வஸ்துவின் மேல் செலுத்தினேன். கார் 90 மைலிருந்து 100 மைலில் (160 கிலோமீட்டரில்) சீறியது. ராஜேஷை பேக்கர்ஸ்ஃபீல்டில் இறக்கிவிட்டு மறுபடியும் அதே வேகம். நாஞ்சில் சிறிது தூங்கினார். விவசாய நிலத்தில் நேர்த்தியாக அமைந்த மரங்கள் சாலை ஒரங்களில் வந்து கொண்டேயிருந்தது. நானும் ராஜனும் சொந்த கதைகள், வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் சொத்து வாங்கி அதனால் நொந்த கதைகள் சில பேசினோம். நான் முன் செல்லும் காரை கட் செய்ததால் அவன் ஹாங்க்கில் சபித்தது போதாதென்று அருகில் வந்து வாய் வழியாகவும் சபித்தான். செடுஞ்சாலைகளில் நடக்கும் இந்த மௌண நாடகத்தை ஜன்னல் வழியாக பார்த்து ஆனால் புரியாமல் “அவன் ஏதோ சொல்றானே” என்று அப்பாவியாக நாஞ்சில் எங்களிடம் கூறினார். ராஜன் “ரோட் ரேஜ்” என்றார். நான் நிதானமடைந்து கண்ணாடி வழியாக மன்னிப்பு கேட்டு அதன் பின் மெதுவாக 85ல் வீடு வந்து சேர்ந்த பொழுது இரவு 9:30 மணி. “சீக்கிரமா வந்திட்டீங்க?” என்று மனைவி கரண்டியை எடுத்தாள்.

தோசை சுடுவதற்க்காக.

(தொடரும்)