நாஸ்டால்ஜியா – சடன் கௌபாய் நாவல்கள்

பதின்ம வயதுகளில் சடன் நாவல்களை விரும்பிப் படித்திருக்கிறேன். சடன் Wild West என்று சொல்லப்பட்ட அமெரிக்காவின் அரிசோனா, டெக்சஸ், யூடா போன்ற மாநிலங்களில் ஒரு கௌபாய். அதிவேகமாக சுடக் கூடியவன். அரிசோனாவின் கவர்னரால் காவல் அதிகாரியாக (மார்ஷல்) நியமிக்கப்பட்டவன. ஆனால் அது ரகசியமாக இருக்கும். ஏதோ ஒரு சிறு ஊருக்கு சடன் வருவான். நிலத்தை, மாடுகளை வளைத்துப் போட நினைக்கும் “பெரிய” மனிதர்களின் சதிகளை, கொலை முயற்சிகளை மீண்டும் மீண்டும் முறியடிப்பான். அனேகமாக இன்னொரு பண்ணையில் (ranch) ஒரு கௌபாயாக சேருவான். அனேகமாக துப்பாக்கி இல்லாமல் வெறும் கைகளோடு ஒரு சண்டையாவது இருக்கும், அதில் தன்னை விட உருவத்தில் பெரிய, பலசாலியைத் தோற்கடிப்பான். பண்ணை முதலாளியின் மகளுக்கும் இன்னொரு கௌபாய்க்கும் நடுவே உள்ள காதலுக்கு உதவி புரிவான்.

பதின்ம வயதுகளில்தான் படிக்க முடியும் என்பதை மீண்டும் படித்துப் பார்த்தபோது நன்றாகப் புரிந்துகொண்டேன். ஏறக்குறைய தேவர் எடுத்த எம்ஜிஆர் படங்களைப் போன்ற கதைகள்தான். அதுவும் முகமூடி அணிந்த வில்லன் மீண்டும் மீண்டும் வருவார். ஆனால் இவற்றுக்கும் ஒரு cult following இருக்கிறது.

அந்த வயதிலும் சரி, இந்த வயதிலும் சரி கௌபாய்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொள்வதுதான் ஓரளவு பிடித்திருந்தது. அந்த வயதில் தவிர்த்தது, இந்த வயதில் ஓரளவு விரும்பிப் படித்தது நிலப்பரப்பின் சித்தரிப்புகள். நானே இரண்டு மூன்று முறை அரிசோனா, நெவாடா இங்கெல்லாம் சுற்றி இருப்பதால் சித்தரிப்புகள் இப்போதுதான் மனதில் பதிகின்றன.

இவற்றை 1930-களில் ஆலிவர் ஸ்ட்ரேஞ்ச் என்பவர் எழுதினார். அறுபதுகளில் ஃப்ரெடரிக் ஹெச். கிறிஸ்டியன் தொடர்ந்தார். விசித்திரம் என்னவென்றால் இவர்கள் இருவரும் ஆங்கிலேயர்கள். அமெரிக்காவைப் பார்த்ததே இல்லை!

அனேகமாக எல்லாம் ஒரே கதைதான் என்பதால் ஏதாவது ஒன்றைப் படித்தால் போதும். எதையாவது குறிப்பிட்டு சொல்லிதான் ஆக வேண்டுமென்றால் இந்த சீரிஸின் முதல் நாவலான Range Robbers-ஐ படிக்கலாம். கிறிஸ்டியன் எழுதியவற்றில் Sudden at Bay – கதை முழுவதுமே துப்பாக்கி சண்டைதான். கிறிஸ்டியன் கதைகளில் பின்புலத்தில் கொஞ்சம் வேறுபாடுகள் தெரியும்.

  1. Range Robbers: (1930) சடன் இந்த நாவலில்தான் தன் மனைவி நொரீனை சந்திக்கிறான். சடனும் அவன் நண்பர்களும் ஒருவர் காலை ஒருவர் வாரிக் கொள்வது நன்றாக வந்திருக்கும். கதை எல்லாம் முக்கியமில்லை.
  2. Law o’ the Lariat: (1931) எல்லா நாவல்களும் ஒரே ஃபார்முலா என்பதால் பெரிதாக விவரிக்கப் போவதில்லை. இந்த முறை சடன் முகமூடிக் கொள்ளையர்களை சமாளிக்கிறான்.
  3. Sudden: (1933) எல்லா நாவல்களும் ஒரே ஃபார்முலா என்பதால் பெரிதாக விவரிக்கப் போவதில்லை. இந்த முறை(யும்) சடன் முகமூடிக் கொள்ளையர்களை சமாளிக்கிறான்.
  4. Marshal of the Lawless: (1933) தான்தான் சடன் என்று சொல்லிக் கொண்டு இன்னொரு வில்லன் கொள்ளை கொலை செய்கிறான். உண்மை சடன் அவனை எப்படிப் பிடிக்கிறான் என்று கதை
  5. Sudden: Outlawed: (1934) சடனின் பின்புலம் – எப்படி சடன் தன் பழிவாங்குவதை ஆரம்பிக்கிறான், எப்படி அவனுக்கு குற்றவாளி என்ற பேர் வருகிறது என்ற கதை.
  6. Sudden: Goldseeker: (1937) இந்த முறை டகோடாவில் ஒரு தங்கச் சுரங்கத்தை திருட நினைக்கும் வில்லன். தங்கச் சுரங்கம் என்றால் சரியாக வரவில்லை, ஆற்றில் தங்கத் துகள்கள் அடித்துக் கொண்டு வருகின்றன, அவற்றை மணலை அரித்து எடுக்க வேண்டும்.
  7. Sudden Rides Again: (1938) இந்த முறை முகமூடி அணிந்து பண்ணை வாரிசு போல நடிக்கும் வில்லன். தேவர்-எம்ஜிஆர் படத்தில் அசோகன் வில்லனாக வருவதைப் போல.
  8. Sudden Takes the Trail: (1940) இந்த முறை பண்ணக்கு வாரிசாக நடித்து பண்ணையைத் திருட முயற்சிக்கும் வில்லன்.
  9. Sudden Makes War: (1942) அதே சண்டையிடும் இரு பண்ணைகள். அதே மாதிரி சின்னப் பண்ணையின் வாரிசுக்கும் பெரிய பண்ணை வீட்டுப் பெண்ணுக்கும் ஈர்ப்பு. அதே மாதிரி நியூ யார்க்கிலிருந்து ஒரு வில்லன். அதே மாதிரி சின்னப் பண்ணையில் வேலைக்கு சேரும் சடன். இந்த முறை சின்னப் பண்ணையின் பெரியப்பா சேர்த்து வைத்து புதையலைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.
  10. Sudden Plays a Hand: (1950) இந்த முறை பெரிய பண்ணை ஒன்றின் வாரிசைத் தேடுகிறார்கள். அந்த வாரிசு பெண், அவளுக்கு விருப்பமில்லாத திருமண உறவு. அவள் கணவன் எப்படி அவள் மனதை வெல்கிறான், சடன் அவனுக்கு எப்படி உதவுகிறான் என்று கதை.
  11. ஃபிரடெரிக் கிறிஸ்டியன்: Sudden Strikes Back: (1966) ஃப்ரெடெரிக் கிறிஸ்டியன் அதே பாத்திரங்களை வைத்து சடன் நாவல்களை மீண்டும் எழுதினார். சிறந்தது இதுதான். வில்லன் இளம் பெண்ணின் பண்ணையைத் திருட முயற்சிக்கிறான்.
  12. ஃபிரடெரிக் கிறிஸ்டியன்: Sudden: Troubleshooter: (1967) அதே ஃபார்முலாதான். ஊரில் பிரச்சினை என்று கேள்விப்பட்டு வரும் சடன் அங்கே ஒரு இளைஞனை சந்திக்கிறான். இளைஞன் ஒரு இளைஞியை சந்திக்கிறான். ஒரு வேகமாக சுடும் வில்லன். சடன் மீது கொலைப்பழி விழுகிறது. விசாரிக்க கவர்னரே வருகிறார். தண்டம்.
  13. ஃபிரடெரிக் கிறிஸ்டியன்: Sudden at Bay (1968): வித்தியாசமான கதை. இதில் கதை முழுவதும் இரு குழுக்களின் துப்பாக்கி சண்டைதான்.
  14. ஃபிரடெரிக் கிறிஸ்டியன்: Sudden, Apache Fighter (1969): செவ்விந்தியர்களோடு சடனின் போராட்டம்தான் கதை முழுவதும். அவர்களால் கடத்தபபடும் ஒரு பெண்ணை விடுவிக்கிறான்.
  15. ஃபிரடெரிக் கிறிஸ்டியன்: Sudden, Dead or Alive! (1970): இந்த முறை மெக்சிகோவில் ஒரு குழுவினரோடு போராட்டம்.

  தொகுக்கப்பட்ட பக்கம்: சாகச நாவல்கள்

லூயி லமூரின் “கௌபாய்” நாவல்கள்

Louis_L'AmourWestern genre எழுத்தாளர்களில் லமூர்தான் மிகவும் பிரபலமானவர் என்று நினைக்கிறேன். அனேகமாக எல்லா புத்தகங்களும் டைம்பாஸ், பதின்ம வயதில் படிக்க ஏற்ற புத்தகங்கள்தான். வேகமாக துப்பாக்கியை எடுத்து சுடுவது பெரிய சாகசமாகத் தெரிந்த காலம். மேலும் அவரது கதைகளின் நாயகன் எப்போதும் மக்கள் அதிகமாக இல்லாத இடத்தில் – காடு, மலை, குகை போன்ற இடங்களில் தனியாகவோ இல்லை மனைவி குடும்பத்தோடோ, இல்லை வெகு சில கௌபாய்களோடோ வாழ விரும்புபவன். அப்படிப்பட்ட இடங்கள் கான்க்ரீட் காடுகளில் வாழ்ந்த பதின்ம பருவங்களில் – காடும் மலையும் சில மைல் தூரத்தில் இருந்தாலும் சுலபமாகப் போய் வர முடியாத காலங்கள் – படிக்கும் ஆவலைத் தூண்டின.

எல்லாம் டைம் பாஸ்தான் என்றாலும் விதிவிலக்கு Sackett Brand (1965). ஸாக்கெட் பெருகுடும்பம் (clan) அவரது நாவல்களில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு motif. ஒரு ஸாக்கெட்டுக்கு பிரச்சினை என்று தெரிந்தால் அந்தப் பேர் உள்ள மற்றவர்கள் அவனுக்கு உதவி செய்ய கிளம்பி வந்துவிடுவார்கள். இந்த நாவலில் அந்தப் பெருகுடும்பத்து பந்தம் வாசகனை திருப்திப்படுத்தும் வகையில் வெளிப்படுகிறது.

இன்னொன்றைப் படிக்க வேண்டுமென்றால் Hondo. திரைப்படமாகவும் வந்தது.

லமூரின் வேறு புத்தகங்களும் திரைப்படமாக வந்திருக்க வெண்டும். எவை என்று தெரியவில்லை.

Ride the Dark Trail (1972) நாவலில் லோகன் சாக்கெட் தன் அத்தை எமிலி டாலனை அவளது மாட்டு மேய்ச்சல் நிலங்களிலிருந்து துரத்தும் வில்லன்களை முறியடிக்கிறான்.

North to the Rails நாவலில் அன்றைய அமெரிக்காவின் சட்டம் ஒழுங்கு நிறைந்த இடங்களில் வளரும் நாயகன் டாம் சாண்ட்ரி வேறுவித விழுமியங்கள் உள்ள வெஸ்டர்ன் பகுதிகளி எப்படி சமாளிக்கிறான் என்று போகும் கதை.

இதைத் தவிர பத்து பதினைந்து ஸாக்கெட் நாவல்கள், சான்ட்ரி பெருகுடும்பத்து நாவல்கள் இருக்கின்றன. அனேகமாக எதையும் படிக்க வேண்டியதில்லை. கிட்டத்தட்ட நூறு நாவல்களை எழுதி இருக்கிறார். நான் விவரிக்கப் போவதில்லை.

ஒரு சுவாரசியமான விஷயம் – அவரே அவரது சில நாவல்களை குப்பை என்று ஒதுக்கிவிடுகிறார். அவர் ஹாப்பலாங் காசிடி நாவல்கள் (Rustlers of the West Fork) சிலவற்றையும் எழுதி இருக்கிறார். ஆனால் அவை ‘கூலிக்கு’ எழுதப்பட்ட குப்பை என்று பிற்காலத்தில் அவற்றை வெறுத்து ஒதுக்கி இருக்கிறார். அவருடைய எழுத்தாளன் என்ற பெருமிதம் நிறைந்த சுயபிம்பத்துக்கு ஒத்து வரவில்லை!

லமூரின் நாவல்களை நம்மில் பலரும் குப்பை என்று ஒதுக்கலாம். Sackett Brand தவிர மற்றவற்றை நான் அப்படித்தான் ஒதுக்குகிறேன். ஆனால் என் பதின்ம பருவத்தின் கனவுலகத்தில் கௌபாய் என்றால் மாடுகளை மேய்ப்பவன் அல்ல; தலையில் தொப்பி, இடைக்கு கீழே பெல்ட், அவற்றில் இரு துப்பாக்கிகள், அந்த துப்பாக்கிகளால் வேகமாகச் சுடும், குதிரைகளில் பெரிய புல்வெளிகள், மலைகள், ஏன் பாலைவனங்களைக் கூட கடக்கும் நாயகர்களுக்கு இடமிருந்தது. அந்த கனவுக்கு தீனி போட்டவர்களில் லமூரும் ஒருவர். அதற்காக அவருக்கு ஒரு ஜே!

தொகுக்கப்பட்ட பக்கம்: சாகச நாவல்கள்

எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவன் மூலக்கதையை எழுதிய ரஃபேல் சபாடினி

rafael_sabatiniசபாடினியை இரண்டு காரணங்களுக்காக தமிழர்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று, இவர்தான் சாண்டில்யனின் inspiration. இரண்டாவது எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலக்கதை(கள்) இவருடையதுதான். Captain Blood மற்றும் Sea Hawk நாவல்களின் சம்பவங்களை ஒன்றினைத்துத்தான் அந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. Captain Blood, Sea Hawk, Scaramouche போன்ற புத்தகங்கள் பெருவெற்றி பெற்றவை. Captain Blood, Scaramouche இரண்டு கதைகளையும் நான் சாகசக் கதைகளில் minor classics என்றே கருதுகிறேன்.

சாகசங்களை கட்டுக்கோப்பான கதைப்பின்னலாக மாற்றுவது இவரது தனித்திறமை. பத்து பனிரண்டு வயதினர் நன்றாக ரசிப்பார்கள்.

கேப்டன் ப்ளட் சீரிஸில் மூன்று புத்தகங்கள் இருக்கின்றன. Captain Blood (1922), Captain Blood Returns (1931), Fortunes of Captain Blood (1936). ப்ளட் ஒரு டாக்டர். இங்கிலாந்து ராஜாவை எதிர்த்த ஒரு வீரனுக்கு சிகிச்சை செய்வதால் அவர்களோடு சேர்த்து அவரும் மேற்கிந்தியத் தீவுகளில் அடிமையாக விற்கப்படுகிறார். அங்கே எஜமான் வீட்டுப் பெண்ணோடு காதல். தீவை கொள்ளையடிக்க வரும் கொள்ளையர்களை முறியடித்து தப்பிக்கிறார். தானே ஒரு கடற்கொள்ளையனாக மாறுகிறார். (இதுதான் ஆயிரத்தில் ஒருவனின் முதல் பாதி என்பது நினைவிருக்கலாம். நம்பியாரோடு போடும் சண்டையும் ஒரு புத்தகத்தில் வருகிறது.) அவரது வீர தீர சாகசங்கள்தான் மூன்று புத்தகங்களிலும். முதல் புத்தகத்திலேயே இங்கிலாந்தின் ராஜா இவரையே தீவுக்கு கவர்னர் ஆக்கி கடற்கொள்ளை பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டுகிறார்.

Sea Hawk (1915) ஆ. ஒருவன் திரைப்படத்தில் ஜெயலலிதாவை ஏலம் எடுக்கும் காட்சி இங்கிருந்துதான் உருவப்பட்டிருக்கிறது.

Scaramouche (1921) சிறப்பாக தொகுக்கப்பட்ட கதை. ஃப்ரெஞ்சுப் புரட்சியின் காலத்தில் பிரபு ஒருவனுக்கும் ஒரு வக்கீலுக்கும் தகராறு ஏற்படுகிறது. ஜன்மப்பகையாகவே மாறுகிறது. கடைசியில் ட்விஸ்ட். (கல்கியின் மகுடபதியிலும் இதே கருதான்). Scaramouche the Kingmaker (1931) நாவல் இதே நாயகனை வைத்து கொஞ்சம் இழுவையாக எழுதப்பட்ட நாவல். ஃப்ரெஞ்சுப் புரட்சி காலத்தில் நாயகனின் சாகசங்கள்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Captain Blood.

தொகுக்கப்பட்ட பக்கம்: சாகசக் கதைகள்

ஆஸ்கார் விருது பெற்ற Revenant-இன் மூலக்கதை

revenantபுத்தகத்தைப் படித்துவிட்டுத்தான் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், அதனால் இன்னும் திரைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் திரைப்படமாக்க நல்ல கதை. காடும் மலையும் ஆறும் மாபெரும் கரடிகளும் செவ்விந்தியர்களும் குதிரைகளும் துப்பாக்கிகளும் படிப்பதை விட பார்க்க அருமையான பின்புலத்தை ஏற்படுத்தும்.

Revenant என்றால் பழி வாங்குதல் என்று அர்த்தமாம். கதையில் பிரமாதமாகச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் ஹ்யூ தனியாக விடப்படும் இடம் காவிய சாத்தியங்கள் உடையது.

கதைச் சுருக்கம் வேண்டும் என்பவர்களுக்காக: அமெரிக்க (வெள்ளையர்கள்) குழு ஒன்று வேட்டையாடி விலைமதிப்புள்ள தோல்களை (furs) கொண்டு வரச் செல்கிறது. செவ்விந்தியர்களால் பிரச்சினை. அனுபவம் உள்ள மூத்த வேட்டைக்காரன் ஹ்யூ க்ளாஸ் ஒரு பெரும் கரடியால் (grizzly) தாக்கப்பட்டு குற்றுயிரும் கொலையுயிருமாக சாகக் கிடக்கிறான். ஹ்யூ இறந்த பிறகு அவனை அடக்கம் செய்துவிட்டு வா என்று இரண்டு பேரை அவனுடன் விட்டுவிட்டு குழு தன் பயணத்தைத் தொடர்கிறது. வாய்ப்பு கிடைத்ததும் ஹ்யூவின் துப்பாக்கி, கத்தி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவனை அம்போ என்று விட்டுவிடுகிறார்கள். பழி வாங்க உயிர் வாழ வேண்டும். உயிர் வாழ ஹ்யூவின் போராட்டம்தான் கதை.

michael_punkeஹ்யூ க்ளாஸ் நிஜ மனிதன். அந்தக் காலத்தில் அவனை உண்மையாகவே கரடி தாக்கியது. அவனை அம்போ என்று விட்டுவிட்டு இருவர் போனதும் நடந்த சம்பவம்தான். ஹ்யூ உயிர் பிழைத்து பழி வாங்க முயன்றதும் நடந்ததுதான். இரண்டு ‘வில்லன்களில்’ ஜிம் ப்ரிட்ஜர் பதின்ம வயதினன். பிற்காலத்தில் அவனும் ஒரு திறமையான explorer ஆனான். மைக்கேல் புன்கே (இவரது பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தெரியவில்லை) இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து 2002-இல் இதை புனைகதையாக எழுதி இருக்கிறார்.

இந்தக் கதை உண்மைச் சம்பவங்களின் மீது புனையப்பட்டது என்பது இதை எனக்கு மேலும் attractive ஆக்குகிறது. ஆனால் திரைப்படமாகப் பாருங்கள் என்றுதான் பரிந்துரைப்பேன். இத்தனைக்கும் நான் இன்னும் திரைப்படத்தைப் பார்க்கவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: சாகச நாவல்கள்

தொடர்புடைய சுட்டி:
Revenant பற்றிய ஐஎம்டிபி குறிப்பு
ஹ்யூ க்ளாஸ் பற்றிய விக்கி குறிப்பு

வினோதத் திருடன் நிக் வெல்வெட்

nick_velvetஎட்வர்ட் டி. ஹோக் மர்மக் கதை எழுத்தாளர். அந்த வட்டாரத்தில் ஓரளவு பிரபலமானவர்.

அவரது சீரிஸ் நாயகன் நிக் வெல்வெட். வெல்வெட் திருடன். ஆனால் அவன் பணம், நகை, விலை உயர்ந்த பொருட்கள் எதையும் திருடமாட்டான். பயனற்ற பொருட்களை, பண மதிப்பில்லாத பொருட்களை மட்டும்தான் திருடுவான். வினோதத் திருட்டுகள். அவை யாருக்காவது அந்த நேரத்தில் தேவைப்படுகிறது, அதற்காக நிறையப் பணம் கொடுத்து இவனைத் திருடித் தர வேலைக்கு அமர்த்துகிறார்கள். உதாரணமாக ஒரு நீச்சல் குளத்திலிருந்து தண்ணீரைத் திருடித் தரும்படி ஒரு வேலையை ஏற்றுக் கொண்டு முடித்துத் தருகிறான். இன்னொரு கதையில் சினிமா ஷூட்டிங்கில் பயன்படுத்தப்படும் ஒரு prop – எலி பொம்மையைத் திருட வேண்டி இருக்கிறது. ஒரு பைசா நாணயம் (அபூர்வ நாணயம் அல்ல), சர்க்கஸ் போஸ்டர் ஒன்று, மிருகக் காட்சி சாலியிலிருந்து ஒரு புலி, ஒரு பூனை, ஒரு பேஸ்பால் டீம், வீட்டிலிருந்து வெளியே போடப்படும் குப்பை, பண மதிப்பே இல்லாத ஒரு கிரீடம் என்று பலவற்றைத் திருடித் தருகிறான். ஒரு கதையில் அவனே ‘திருடப்படுகிறான்’! எல்லாக் கதைகளிலும் இவற்றை ஏன் திருட வேண்டி இருக்கிறது என்று அவனே கண்டுபிடித்துத்தான் பிரச்சினைகளிலிருந்து மீள வேண்டி இருக்கிறது.

edward_d_hochநிக் வெல்வெட் கதைகள் எதையும் நான் நல்ல சாகசக் கதை என்றோ, நல்ல துப்பறியும் கதை என்றோ வகைப்படுத்தமாட்டேன். அவற்றைக் காப்பாற்றுவது அவன் திருடும் பொருட்கள்தான். இவற்றைத் திருடி என்ன பயன் என்று யோசிக்க வைக்கும் அந்த ஒரு நிமிஷம்தான் இந்தக் கதைகளின் கவர்ச்சி. அது உங்களையும் கவரும் என்றால் மட்டும் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சாகசக் கதைகள்

கடல் சாகசக் கதைகள் – காப்டன் ராமேஜ்

dudley_popeகடல் சாகசக் கதைகள் என்றால் நினைவு வருவது ரஃபேல் சபாடினி, பாட்ரிக் ஓ’ப்ரையன், மற்றும் சி.எஸ். ஃபாரஸ்டர்தான். அவர்கள் வரிசையில் டட்லி போப் எழுதும் ராமேஜ் நாவல்களையும் நிச்சயமாக வைக்கலாம்.

ராமேஜ் பெரிய பிரபு குடும்பத்தில் பிறந்தவன். பெரும் பணக்காரக் குடும்பம் வேறு. நெப்போலியன் காலத்தில் கடற்படையில் சேர்ந்தவன். அவன் அப்பாவும் புகழ் பெற்ற அட்மிரல், சில பல பிரச்சினைகளால் கடற்படையிலிருந்து விலக வேண்டியதாகிவிட்டது. அந்தப் பிரச்சினைகள் இவனுக்கும் பல எதிரிகளை கடற்படையில் உருவாக்கி இருக்கிறது. ராமேஜின் பெரிய பலம் அவன் துணைவர்கள். அவனோடு எப்போதும் பணியாற்றும் மாஸ்டர் சவுத்விக், டாக்டர் பவன், கடற்படை வீரர்கள் ஜாக்சன், ஸ்டாஃப்போர்ட், ரோஸ்ஸி எல்லாரும் திறமையானவர்கள், அவனுக்காக உயிரையே கொடுப்பார்கள். கடல்புறாவின் அமீர், கூலவாணிகன் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

முதல் நாவலில் – Ramage – அவன் ஒரு சாதாரண லெஃப்டினன்ட். அவனுடைய மேலதிகாரிகள் எல்லாரும் கொல்லப்பட அவன் தலைவனாகிறான். ஒரு சின்ன படகில் வோல்டெரா என்ற சின்ன நாட்டின் அரசியை நெப்போலியனின் படைகளிடமிருந்து மீட்டு ஆங்கில கடற்படையிடம் ஒப்படைக்கிறான். அவனுடைய எதிரிகள் அவன் கோழை என்று ஒரு கோர்ட் மார்ஷியல் நடத்த நெல்சனின் உதவியோடு தப்பிக்கிறான். அரசியும் அவனும் காதலில் விழுகிறார்கள். அதற்குப் பிறகு பல போர்க்களங்கள், சண்டைகள்.

சாண்டில்யனின் நாவல்களோடு ஒப்பிட்டால் இவை உண்மையிலேயே சாகசங்கள். சாண்டில்யனின் எழுத்துக்கள் அனைத்து அவர் படித்த புத்தகங்களிலிருந்து வந்தவையே. அவர் குதிரை மீது ஒரு நாளும் ஏறி இருக்கமாட்டார், காய்கறி நறுக்கக் கூட கத்தியை பயன்படுத்தி இருக்கமாட்டார், சென்னையிலேயே வாழ்ந்தாலும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கூட சுற்றிப் பார்த்திருக்க மாட்டார். டட்லி போப் போன்றவர்கள் ஓரளவாவது கப்பல்களில் சுற்றி, விவரிக்கப்படும் இடங்களைப் பார்த்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவரால் காற்றையே நம்பி இருந்த பாய்மரக் கப்பல்களின் காலத்தை நம்பகத்தன்மையோடு விவரிக்க முடிகிறது. Tacking போன்றவற்றை ஓரளவாவது புரிய வைக்க முடிகிறது. கப்பல்களின் இட நெருக்கடியை, பீரங்கிகளை எப்ப்டி வைத்து போரிட வேண்டும் என்பதை, கப்பல் காப்டன்களின் சர்வாதிகாரத்தை, அவர்களின் தனிமையை எல்லாம் நம்பும்படி சொல்ல முடிகிறது.

பதின்ம வயதில் படிக்க வேண்டிய புத்தகங்கள். இப்போதும் படிக்கலாம். ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் Governor Ramage RN (1973) அல்லது Ramage’s Diamond (1976) படியுங்கள். முன்னதில் ஒரு convoy எப்படி செல்ல வேண்டும் என்பது நன்றாக விவரிக்கப்படுகிறது. பின்னதில் கப்பல்களின் உதவியோடு பீரங்கிகள் மலை மீது ஏற்றப்படுகின்றன.

அனுபந்தம் – இது வரை வந்த ராமேஜ் நாவல்கள்

ramage_touch

 1. Ramage (1965): முதல் கதை இதுதான். ராமேஜ் ஒரு கப்பலில் சின்ன அதிகாரி. போரில் மேலதிகாரிகள் எல்லாரும் இறந்துவிட, பொறுப்பு ராமேஜ் தலையில் விழுகிறது. இத்தாலியின் ஒரு சின்ன அரசின் ராணி கியான்னாவைக் காப்பாற்ற வேண்டும். அவனது டீம் -மாலுமி சவுத்விக், வீரர்கள் ஜாக்சன், ஸ்டாஃபோர்ட், ராஸ்ஸி – இங்கே பாதி உருவாகி விடுகிறது. கியான்னாவுடன் காதல், ராமேஜின் அப்பா மீது உள்ள விரோதத்தால் ராமேஜின் மீது கோழைத்தனத்துக்காக கோர்ட் மார்ஷியல் என்று கதை போகிறது.
 2. Ramage and the Drumbeat (aka Drumbeat) (1968): செயின்ட் வின்சென்ட் கடற்போரில் நெல்சன் புதிய முறைகளில் போரிடுகிறார். ராமேஜ் அதைப் புரிந்து கொண்டு தன் சிறு கப்பலை ஸ்பெயினின் ஒரு பெரிய கப்பல் மீது இடிக்கிறான். ராமேஜின் கப்பல் சுக்குநூறானாலும் பெரிய கப்பலுக்கு ஏற்படும் சேதங்களால் அது தப்ப முடியவில்லை.
 3. Ramage and the Freebooters (aka The Triton Brig) (1969)
 4. Governor Ramage RN (1973): போர்க்கப்பல்களின் பாதுகாப்புடன் செல்லும் வணிகக் கப்பல்கள். அதில் ஒரு எதிரிக் கப்பல் நுழைந்துவிடுகிறது…
 5. Ramage’s Prize (1974)
 6. Ramage and the Guillotine (1975): ஃப்ரான்சுக்கு ஒற்று வேலை செய்யப் போகிறான்.
 7. Ramage’s Diamond (1976): மேற்கிந்தியத் தீவுகளில் ஃப்ரான்சின் அதிகாரத்தில் இருக்கும் ஒரு தீவு. அதை ராமேஜின் கப்பல் முற்றுகை இடுகிறது. பக்கத்தில் இருக்கும் இன்னொரு ஆளில்லாத தீவையும் கைப்பற்றி அதில் ஒரு மலையின் மீது பீரங்கியை ஏற்றுகிறார்கள்.
 8. Ramage’s Mutiny (1977)
 9. Ramage and the Rebels (1978)
 10. Ramage Touch (1979)
 11. Ramage’s Signal (1980): மத்தியதரைக் கடலில் பல சிக்னல் டவர்களை ஃப்ரான்ஸ் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ராமேஜ் இவற்றைக் கைப்பற்றி தவறான சிக்னல்களைக் கொடுத்து எதிரிக் கப்பல்களைக் கைப்பற்றுகிறான்.
 12. Ramage and the Renegades (1981): கியான்னாவும் ராமேஜும் பிரிகிறார்கள். தென்னமரிக்கா பக்கத்தில் ஒரு ஆளில்லாத தீவை இங்கிலாந்தின் வசப்படுத்த ராமேஜ் அனுப்பபடுகிறார். அங்கே கடற்கொள்ளையர் ஒரு கிழக்கிந்தியக் கம்பெனி கப்பலை கைப்பற்றி இருக்கிறார்கள். ராமேஜ் கப்பலை மீட்கிறான், தன் மனைவி சாராவை முதல் முறையாக சந்திக்கிறான்.
 13. Ramage’s Devil (1982): இங்கிலாந்து-ஃப்ரான்ஸுக்கு நடுவில் ஏற்பட்ட சமரசம் உடைந்து மீண்டும் போர்! ஆனால் ராமேஜும் சாராவும் தேனிலவுக்காக அப்போது ஃப்ரான்சின் ஒரு பழைய பிரபு குடும்பத்து வீட்டில் தங்கி இருக்கிறார்கள். ஒரு சின்னக் கப்பலைக் கைப்பற்றி தப்புகிறார்கள். அந்தப் பிரபு ஒரு சிறைத் தீவுக்கு அனுப்பப்பட, ராமேஜ் அவரை மீட்கிறான்.
 14. Ramage’s Trial (1984): போன நாவலில் மனைவியை இங்கிலீஷ் சானலில் ஒரு சின்னக் கப்பலில் விட்டுவிட்டு ராமேஜ் விரைய வேண்டி இருக்கிறது. மனைவி இங்கிலாந்து திரும்பவில்லை, என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. மன உளைச்சலோடு ராமேஜ் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து திரும்பும்போது ஒரு மூத்த காப்டன் மிகவும் வினோதமாக நடந்து கொள்கிறான். ராமேஜ் அந்தக் காப்டனை கைதில் வைக்கிறான். மூத்த அதிகாரியை அவமதித்த குற்றத்துக்காக கோர்ட் மார்ஷியல் நடக்கிறது. அதிகாரிக்கு மன்நிலை பிறழ்ந்துவிட்டது தெரிய வந்து ராமேஜ் விடுதலை ஆகிறான்.
 15. Ramage’s Challenge (1985): ராமேஜுக்கு இந்த முறை இத்தாலியில் சிறை வைக்கப்பட்டிருக்கும் மூத்த கப்பற்படை, ராணுவ அதிகாரிகளை விடுவிக்கும் பணி. மனைவி சாராவையும் விடுவித்துக் கொள்கிறான்.
 16. Ramage at Trafalgar (1986): இந்த முறை நெல்சனின் அணியில் சேர்ந்து ட்ரஃபால்கர் போரில் பங்கேற்கிறார்கள்.
 17. Ramage and the Saracens (1988):
 18. ஆஃப்ரிக்க கடல் கொள்ளையர்கள் சிசிலியிலிருந்து ஆட்களை கடத்தி அடிமைகள் ஆக்குகிறார்கள். நட்பு நாடான இங்கிலாந்தின் கேப்டன் ராமேஜ் அடிமைகளை மீட்கிறார். கியான்னா திரும்பி வருகிறாள்.

 19. Ramage and the Dido (1989)

தொகுக்க வேண்டிய பக்கம்: சாகச நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: டட்லி போப் – விக்கி குறிப்பு