அம்பைக்கு சாஹித்ய அகடமி விருது

2021க்கான சாஹித்ய அகடமி விருது அம்பைக்கு தரப்பட்டிருக்கிறது.  சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை புத்தகத்திற்காக. என்னவோ என் ஒன்றுவிட்ட அக்காவுக்கு விருது கிடைத்த மாதிரி சந்தோஷமாக இருக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை சிறுகதைத் தொகுப்பை முதல் முறையாகப் படித்தபோது எனக்கு 22 வயது இருக்கலாம். சுப்ரபாரதிமணியன் பரிந்துரையினால்தான் வாங்கினேன். பத்து பக்கம் படிப்பதற்குள் – முதல் சிறுகதையான வெளிப்பாடு – எனக்கு அப்போது இருந்த value system-த்தை தாக்கியது. குறிப்பாக எத்தனை தோசை சுட்டேன் என்று கணக்கெடுக்கும் வரி. “காதல் ஒருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து” என்ற கருத்து புரட்சி என்று நினைத்திருந்தது ஒரே கணத்தில் மாறி அதன் போதாமை புரிந்தது. கறுப்பு குதிரை சதுக்கம், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு எனக்கு மிகவும் பிடித்தமான சிறுகதைகள்.

பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி முதலியோர் இன்னொரு நல்ல சிறுகதை, எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமானதும் கூட.

அம்மா ஒரு கொலை செய்தாள் அவருக்கு பெரும்புகழ் பெற்றுத் தந்த  சிறுகதை. ஆனால் அது எனக்கு தேய்வழக்காகத்தான் தெரிந்தது. தோழி அருணா அதைப் புரிந்து கொள்ள நான் ஒரு பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டும், அப்போதுதான் புரியும் என்பார். 🙂

ஜெயமோகன் அம்மா ஒரு கொலை செய்தாள்,  கறுப்பு குதிரை சதுக்கம், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ஆகிய சிறுகதைகளை தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்ராவுக்கு அம்மா ஒரு கொலை செய்தாள் மற்றும் காட்டில் ஒரு மான்.

அவருக்கு ஏற்கனவே விருது கிடைத்திருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். ஏன் இத்தனை தாமதம் என்று தெரியவில்லை.  தாமதம் ஆனாலும் சரியான தேர்வு. தேர்வுக்குழுவினரான இமையம், பேராசிரியர் ராமகுருநாதன், முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு பாராட்டுக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அம்பை பக்கம், விருதுகள் பக்கம்

அம்பை

ஏப்ரல் மாத சொல்வனம் அம்பை சிறப்பிதழாக வந்திருக்கிறது. அப்போதே அம்பை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் விரும்பிய அளவுக்கு மீள்வாசிப்பு செய்யமுடியவில்லை. சரி நினைவிலிருப்பதை எழுதுவோம் என்றுதான் இதை எழுதுகிறேன்.

சொல்வனம் இதழில் வெங்கட் சாமிநாதன், எஸ்ரா, எம்.ஏ. சுசீலா, இ.பா. என்று பலரும் அம்பையைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். நல்ல எழுத்தாளரை கௌரவித்ததற்காக சொல்வனம் குழுவினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

அம்பையின் “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” புத்தகத்தை நான் முதன்முதலாக படித்தபோது எனக்கு இருபது இருபத்திரண்டு வயதிருக்கலாம். அது வரையில் பெண், பெண்ணிய எழுத்தாளர்கள் என்றாலே அய்யோ அய்யய்யோ என்று ஓடிவிடுவேன். சுப்ரபாரதிமணியன் அப்போதெல்லாம் செகந்தராபாத்தில் இருந்தார், வருஷாவருஷம் ஒரு புத்தகக் கண்காட்சி ஒன்றை கஷ்டப்பட்டு நடத்துவார். அவர் பரிந்துரையில் வாங்கிய புத்தகம். அதன் tattered copy இன்னும் கூட என் புத்தக அலமாரியில் எங்கோ இருக்கிறது. நான் குமுதம் விகடன் அவ்வப்போது கல்கி கலைமகள் என்று வாரப்பத்திரிகை படித்து வளர்ந்தவன். அன்று பிரபலமாக இருந்த லக்ஷ்மி, சிவசங்கரி போன்றவர்களின் எழுத்து எனக்கு மகா சின்னப்பிள்ளைத்தனமாகத்தான் தெரிந்தது. என் கண்ணில் முதன்முதலாகப் பட்ட பெண் என்ற அடைமொழி தேவையில்லாத பெண் எழுத்தாளர் அம்பைதான். அந்தப் புத்தகத்திலிருந்த பல கதைகள் என் முகத்தில் அறைந்தன.

அம்பையின் சிறுகதைகளில் மிகச் சிறந்ததாக நான் கருதுவது வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. ராஜஸ்தானி குடும்பத்தின் சமையலறையை வைத்து காலம் காலமாக ஒடுக்கப்படும் பெண், அதை பெண்கள் அதை ஏற்றுக் கொள்ளும், எதிர்கொள்ளும், circumvent செய்யும் விதங்களை மிகச் சிறப்பாக காட்டிவிடுகிறார். அபாரமான சிறுகதை, தமிழ் மட்டுமல்ல, உலக அளவில் நான் படித்த சிறந்த சிறுகதைகளில் ஒன்று.

பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி முதலியோர் என்னை பாதித்த சிறுகதைகளில் ஒன்று. அதைப் பற்றி இங்கே.

தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை வெளிப்பாடு.

நாப்பது வருஷத்துல ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை…

என்ற ஒரு வரி எனக்கு என்றும் மறக்காது. I realized how much I take my mother for granted in the instant I read that sentence. இந்த வரியை ஜெயமோகன் கிண்டலடிப்பார். 🙂 இன்று வரை அதில் கிண்டலடிக்க என்ன இருக்கிறது என்று புரிந்ததில்லை. அவரிடமே கேட்டும் இருக்கிறேன். 🙂

டக்கென்று இந்தக் கணம் நினைவு வரும் அருமையான சிறுகதைகள் கறுப்பு குதிரை சதுக்கம் மற்றும் மல்லுக்கட்டு.அம்பையின் குரல் எப்போதும் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கும். ஆனால் மல்லுக்கட்டு மிகவும் subtle ஆக எழுதப்பட்ட சிறுகதைகளில் ஒன்று.

ஆனால் பெரிதும் சிலாகிக்கப்படும் அம்மா ஒரு கொலை செய்தாள் சிறுகதையை நான் பெரிதாக ரசித்ததில்லை. தேய்வழக்காகத் (cliche) தெரிந்தது. தோழி அருணா ஒரு முறை நான் பெண்ணாகப் பிறந்திருந்தால் அந்தக் கதையை ஒரு வேளை புரிந்து கொண்டிருக்கலாம் என்று சொன்னார். அடுத்த ஜன்மத்தில்தான் பார்க்க வேண்டும்.

ஜெயமோகன் அம்மா ஒரு கொலை செய்தாள், கறுப்பு குதிரை சதுக்கம், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ஆகிய சிறுகதைகளை தன் seminal சிறுகதை பரிந்துரைகளில் தேர்ந்தெடுத்திருக்கிறார். எஸ்ரா அம்மா ஒரு கொலை செய்தாள் மற்றும் காட்டில் ஒரு மான் சிறுகதைகளை தமிழின் சிறந்த 100 சிறுகதைகளில் இரண்டாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அம்பையின் பெண்ணிய நோக்கு, முற்போக்கு அரசியல் நிலை சில சிறுகதைகளில் வலுவான பிரச்சார நெடியாக வெளிப்படத்தான் செய்கிறது. உதாரணமாக புனர். அது என் ஆண் பார்வையின் கோளாறாக இருந்தாலும் இருக்கலாம்.

அம்பையின் சமீபத்திய சிறுகதைகளில் தென்படும் ஒரு கரு முதுமையை எதிர்கொள்வது. சில கஷ்டமான, தனிப்பட்ட முறையில் நான் எதிர்கொள்ள விரும்பாத கேள்விகளை சாம்பல் மேல் எழும் நகரம் போன்ற சிறுகதைகளில் கேட்கிறார். ஆனால் குரல் உரத்து ஒலிக்கிறது, அதனால் முழுமை கூடவில்லை என்று கருதுகிறேன்.

அம்பையின் பல சிறுகதைகளை இங்கே படிக்கலாம்.

அம்பைக்கு என் மனப்பூர்வமான நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அம்பை பக்கம்

அம்மாவுக்கா எனக்கா?

என் அப்பா இறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆயிரம்தான் பிள்ளைகள் இருந்தாலும் அம்மாவின் இழப்பு பெரியது. அகவுலக இழப்பு மட்டுமல்ல, புறவுலக இழப்பும் அம்மாவுக்கு கவலை தருவது. வெளியுலகத் தொடர்புகள் அனைத்தையும் – குறிப்பாக பணவிஷயம் எல்லாவற்றையும், பேப்பர்காரனுக்கு பணம் தருவது முதல் வங்கியில் பணம் எடுப்பது வரை அப்பாதான் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவுக்கு தன்னால் இவற்றை கவனிக்கமுடியுமா என்ற அச்சம். 55 வருஷ வாழ்க்கைமுறையை மாற்றிக் கொள்வது சுலபமான காரியம் அல்ல.

அப்பா இறந்த முதல் வாரம் சுற்றி என்ன நடக்கிறது என்பதே எனக்கு சரியாகத் தெரியவில்லை. துக்கம், அம்மாவின் அச்சங்களைப் பற்றிய மன உளைச்சல், பற்றாக்குறைக்கு அமெரிக்காவில் சில பிரச்சினைகள். திடீரென்று அம்பை எழுதிய ஒரு சிறுகதை நினைவு வந்தது – பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி முதலியோர். அந்தச் சிறுகதை அம்மாவுக்கு தைரியம் தரும் என்று தோன்றியது. அம்பையைத் தொடர்பு கொண்டு அதற்கு மின்பிரதி கிடைக்குமா என்று கேட்டேன். சிறுகதையை ஸ்கான் செய்து அனுப்பினார்.

அம்மா படித்துவிட்டு ஒன்றும் சொல்லவில்லை. ஏற்கனவே படித்திருக்கிறேன் என்று மட்டும் சொன்னாள்.

எனக்கு அப்போது அந்த சிறுகதையை மீண்டும் படிக்கும் மனதிடம் இல்லை. நேற்றுதான் மீண்டும் படித்தேன். நான் கேட்டது என்னை தைரியப்படுத்திக் கொள்ளத்தானோ என்று தோன்றியது. அம்மா சமாளித்துக் கொள்வாள், அம்மாவுக்கென்று ஒரு உலகம், பிள்ளைகளை மட்டும் சார்ந்து இருக்காத ஒரு வாழ்வு இருக்கிறது என்று எனக்கு மீண்டும் சொல்லிக் கொள்ளத்தான் அந்தச் சிறுகதையைத் தேடினேனோ என்னவோ தெரியவில்லை.

மீள்வாசிப்பில் என் மாமியாரையும் கண்டுகொண்டேன். என் மாமியாருக்கு பாட்டுக்களால் நிறைந்த ஒரு உலகம் இருக்கிறது. அந்த உலகம் இருக்கும் வரையிலும் எதுவும் அவரை அசைத்துக் கொள்ள முடியாது.

சிறுகதை archive.org தளத்தில் கிடைக்கிறது. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

அம்பைக்கு என் மனப்பூர்வமான நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: அம்பை பக்கம்

தொடர்புடைய சுட்டி: பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி முதலியோர்

அம்பையைப் பற்றி வெங்கட் சாமிநாதன்

(திருத்தப்பட்ட மீள்பதிப்பு)

வெ.சா.வின் இன்னொரு கட்டுரையும் கண்ணில் பட்டது. அம்பையைப் பற்றிய நல்ல அறிமுகம். முன்பு திண்ணையில் வந்த சில சுட்டிகளோடு சேர்த்து மீண்டும் பதித்திருக்கிறேன்.

அம்பையைப் பற்றி வெங்கட் சாமிநாதன் எழுதிய இந்த தொடர்பதிவு (பகுதி 1, பகுதி 2)கண்ணில் பட்டது. சுவாரசியமான கட்டுரை. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

பெண்ணிய எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் அம்பைதான். அம்பையின் “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” சிறுகதைத் தொகுப்பு எனக்கு ஒரு eye-opener. ஆணும் பெண்ணும் சமம் என்று எத்தனை பேசினாலும் அப்படி இல்லைதான். வாழ்நாளில் எத்தனை தோசை சுட்டாள் என்ற கேள்வி இன்று பலராலும் கேலி செய்யப்படுகிறது. ஆனால் அதில் கேலி செய்ய என்ன இருக்கிறது?

அம்பையின் சிறுகதைகளில் எனக்குப் பிடித்தவை வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு. அம்மா ஒரு கொலை செய்தாள் கதை சிலாகிக்கப்படுகிறது, ஆனால் அது எனக்கு ஒரு cliche ஆகத் தெரிகிறது. என்றாவது மீள்வாசிப்பு செய்துவிட்டு எழுத வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அம்பை பக்கம்

அம்பையின் பேட்டி

ambaiஅம்பை ஜெயமோகன் இருவர் பேரும் இப்போது நிறைய அடிபடுகிறது. ஆனால் அதற்கும் நான் எழுத நினைத்த பதிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனக்குப் பிடித்த ஒரே பெண்ணிய எழுத்தாளர் அம்பைதான். நான் கொடுக்க நினைத்ததெல்லாம் அம்பையின் ஒரு நல்ல பேட்டிக்கான சுட்டி.

ஏதாவது வம்பு பார்க்கலாம் என்று இங்கே வந்திருப்பவர்களை முழுமையாக ஏமாற்ற விரும்பவில்லை அதனால் ரத்தினச் சுருக்கமாக: வாரப் பத்திரிகைகளின் விளைவோ என்னவோ, என் தலைமுறைக்காரர்களுக்கு பெண் எழுத்தாளர்கள் என்றால் லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி, அனுராதா ரமணன், ரமணி சந்திரன் போன்றவர்கள்தான் நினைவுக்கே வருகிறார்கள். இல்லாவிட்டால் பெண் கவிஞர்கள் – குட்டி ரேவதி, கனிமொழி என்று சில பல பேர்கள் நினைவு வருகின்றன. (நான் கவிதையைக் கண்டாலே ஓடிவிடும் ஜாதி, இந்தக் கவிஞர்கள் எல்லாம் எழுதியதில் ஒரு வார்த்தை கூட படித்ததில்லை, எதிர்காலத்தில் படிக்கவும் வாய்ப்பு குறைவு.) சிவசங்கரி மாதிரி சிலர் இலக்கியம் படைக்க முயற்சி செய்திருந்தாலும், லக்ஷ்மி மாதிரி சிலர் ஒரு காலத்தின் தேவையை பூர்த்தி செய்திருந்தாலும், “பெண்” எழுத்தாளர்களை நான் அனேகமாக நிராகரிக்கிறேன்.

இந்தப் பின்புலத்தில் ஜெயமோகன் சொல்வது அனேகமாக சரிதான். பார்க்கப் போனால் நல்ல எழுத்தாளர்களுக்கு “பெண்” என்ற அடைமொழியே அனாவாசியமானது. எனக்குத் தெரிந்து அப்படி அடைமொழி அனாவசியமாக இருக்கும் பெண் எழுத்தாளர்கள் அம்பை, கிருத்திகா, ஹெப்சிபா ஜேசுதாசன், பாமா நால்வர்தான். வாசந்தியையும், இந்துமதியின் ஒரே ஒரு நாவலையும் – தரையில் இறங்கும் விமானங்கள் – இரண்டாம் பட்டியலில் வைக்கலாம். திலகவதி, சிவகாமி, சல்மா, ராஜம் கிருஷ்ணன், உமா மஹேஸ்வரி ஆகியோரை நான் அதிகம் படித்ததில்லை, அவர்கள் முதல் வரிசையிலோ இரண்டாவது வரிசையிலோ இடம் பெற சாத்தியம் உண்டு என்று தோன்றுகிறது. அம்பை குறிப்பிடும் சூடாமணி, அனுத்தமா, எனக்கு charming ஆகத் தெரியும் குமுதினி, வை.மு. கோதைநாயகி எல்லாம் இரண்டாம் பட்டியலில் கூட இடம் பெற வாய்ப்பில்லை. நல்ல ஆண் எழுத்தாளர்கள் என்று பார்த்தால் ரொம்பவும் யோசிக்காமல் ஒரு இருபது முப்பது பேராவது தேறும். யோசித்தால் ஐம்பது வரைக்கும் போகலாம்.

jeyamohanஜெயமோகனின் பிரச்சினையே அவர் எந்த வித இனிப்புப் பூச்சும் இல்லாமல் உண்மையைப் பேசுவதுதான். சச்சின் டெண்டுல்கர் யுவ்ராஜ் சிங் இரண்டாம் தர பாட்ஸ்மன் என்று சொன்னால் அது தவறில்லை; (நான் சொன்னால் கூடத் தவறில்லை) ஆனால் சச்சின் அப்படி சொல்லமாட்டார். ஜெயமோகனோ பூசி மெழுகுவதில்லை. உண்மையை ஒரு patronizing attitude-உடன் எழுதிவிடுகிறார். எழுத்தை objective ஆக அளக்க முடிவதில்லை, விமர்சனங்கள் எல்லாமே subjective-தான். அதனால் ஜெயமோகனின் விமர்சனங்களை தனி மனிதத் தாக்குதலாக எடுத்துக் கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது. இரண்டு மூன்று மாதத்துக்கு ஒரு முறை எதையாவது கொளுத்திப் போட்டுவிடுகிறார்.

அம்பையோ ஆண்கள் பெண்களை patronize செய்கிறார்கள், women are taken for granted என்று பல காலமாக கனன்று கொண்டிருப்பவர். அந்தக் கோபம்தான் அவரது சிறுகதைகளை உயர்த்துகிறது. அவருக்கு ஜெயமோகன் என்ன சொல்கிறார் என்பதை விட ஒரு ஆண் இப்படி சொல்கிறார் என்பது முக்கியமாகிவிட்டது என்று நினைக்கிறேன். அதனால்தானோ என்னவோ ஜெயமோகன் சொல்வதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் பெண்களின் உருவத்தை, அழகை வைத்து ஜெயமோகன் பெண்களின் படைப்புகளை நிராகரிக்கிறார் என்ற ஒரு கூட்டறிக்கையில் கையெழுத்திட்டிருக்கிறார். காலம் காலமாக பெண் எழுத்தாளர்களை இளக்காரமாகப் பார்க்கிறார்கள் என்ற கோபம் அவரை இந்த முட்டாள்தனமான அறிக்கையில் கையெழுத்திட வைத்திருக்கிறது. சிவசங்கரிக்கும் சாண்டில்யனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை (இப்படி அவர் நேரடியாகச் சொல்லவில்லை, நானாக இரண்டு பெயர்களை பயன்படுத்தி இருக்கிறேன்.), ஆனால் வித்தியாசம் பார்க்கிறார்கள் என்பது அவர் கட்சி. காலம் காலமாக ஆணாதிக்க சமுதாயம், எழுத்தாளர்களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு கிடைத்திருக்கப் போகிறது? ஆண் எழுத்தாளர்களோடு ஒப்பிட்டால் கொஞ்சம் இளக்காரமாகத்தான் பார்க்கப்பட்டிருப்பார்கள். அதை விளக்கி அவர் வேறு ஒரு கட்டுரை எழுத, அம்பை வேறு தளத்திற்குப் போகிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் ஜெயமோகன் அம்பையின் ஊடக தந்திரம் என்றெல்லாம் எழுதி இருப்பது அதிகப்படி. ஜெயமோகனை விட சிறந்த வாசகரை நான் கண்டதில்லை, அவரால் அம்பை பேசுவது வேறு விஷயம், (ஆனால் தொடர்புள்ள விஷயம்) என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது உண்மையில் பேரதிசயம். அது சரி போகிறவன்(ள்) வருகிறவன்(ள்) எல்லாம் கூப்பிட்டுத் திட்டுகிறார்களாம், அதற்கு அம்பை பொறுப்பு இல்லை என்றாலும் கோபம் வரத்தான் செய்யும்.

என்னைப் பொருட்படுத்தி இந்த இரண்டு பேரில் யார் பதில் எழுதினாலும் எனக்கு நல்ல மண்டகப்படி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

பிற்சேர்க்கை: ஜெயமோகன் மண்டகப்படி எல்லாம் உன் நண்பர்களே பார்த்துக் கொள்வார்கள் என்று delegate செய்துவிட்டார். அம்பை தனிப்பட்ட உரையாடல் ஒன்றில் பெண் எழுத்தாளர்களுக்கு சலூகை எதையும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் வேறு அளவுகோல்களைப் பயன்படுத்துவதைத்தான் எதிர்க்கிறேன் என்று வலியுறுத்தினார்.

என் கண்ணோட்டத்தில் அம்பையின் இலக்கியப் பங்களிப்புக்கு ஜெயமோகன் அளிப்பதை விட உயர்ந்த இடம் என்பதையும் தெளிவுபடுத்திவிடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அம்பை பக்கம்