பிடித்த சிறுகதை – செகாவ் எழுதிய Lady with a Dog

சிறுகதையைப் பொறுத்த வரையில் செகாவ் ஒரு மாஸ்டர். அவருடைய பல சிறுகதைகள் ஆரம்பம், முடிவு, முடிச்சு போன்ற ஃபார்முலாக்களில் அடங்குபவை அல்ல. அவரது சிறுகதைகளை வைத்துத்தான் சிறுகதை என்றால் என்ன என்று வரையறுக்க வேண்டும், வரையறைகளை வைத்துக் கொண்டு அவரிடம் மாரடிக்க முடியாது.

குறிப்பாக ஓரளவு பணம் உள்ள, உயர் மத்தியதர வர்க்க மனிதர்களை சித்தரிப்பதில் செகாவுக்கு இணை அவர்தான். உயர் மத்தியதர வர்க்கம் என்பது முற்றிலும் சரியல்லதான் (not quite accurate) – ஆனால் எனக்குத்தான் அதை விட சிறந்த வார்த்தைகள் கிடைக்கவில்லை. இந்த மனிதர்கள் அனேகமாக சமுதாயத்தில் மதிப்புள்ள ஒரு தொழில் செய்பவர்களாக இருக்கலாம் – உதாரணமாக, ஒரு டாக்டராக, வக்கீலாக, வங்கி நடத்துபவராக இருக்கலாம். ஓரளவு பணம் உள்ள மிராசுதார்களாக, ஆனால் பெரும் பணக்காரர்களோ அல்லது செல்வாக்குள்ள பிரபு குடும்பங்களில் பிறக்காதவர்களாக இருக்கலாம். அவர்களால் விடுமுறைக்கு கோடை நகரங்களுக்கு செல்ல முடியும். நடனம், நாட்டியம், இசை நிகழ்ச்சிகளுக்கு போக முடியும். வேட்டையாட செல்ல முடியும். உடலை வைத்து உழைக்கத் தேவை இல்லாதவர்கள்.

இந்த சிறுகதையும் அப்படிப்பட்ட இருவரைத்தான் சித்தரிக்கிறது. கதைக்கு ஆரம்பம் இருக்கிறது. முடிச்சு? இல்லை என்றுதான் சொல்வேன். முடிவு? அதுவும் கிடையாது என்றுதான் சொல்வேன். ஆனால் இதே கதையைப் படிக்கும் இன்னொருவர் முடிச்சும் முடிவும்தான் இருக்கின்றனவே என்றும் நினைக்கலாம்.

கதை என்று பெரிதாக எதுவுமில்லை. அர்த்தமற்ற வாழ்க்கையில் ஓரளவு சலிப்புற்ற நாயகன் குரோவ். நாயகி அன்னாவின் வின வாழ்விலும் பொருளில்லையா என்று செகாவ் பெரிதாக விவரிக்கவில்லை, எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இருவரும் ஒரு கோடை நகரத்தில் சந்திக்கிறார்கள். இருவரும் மணமானவர்கள். இருவருமே மணவாழ்வில் நிறைவற்றவர்கள். அவர்களுக்கு நடுவே உண்மையான, ஆழமான காதல் உருவாகிறது. ஆனால் என்றும் அவர்களால் இணைய முடியாது, விவாகரத்து என்பதெல்லாம் சாத்தியமில்லை. அவ்வளவுதான் கதை.

காதலின் அழுத்தம் மெதுமெதுவாக அதிகரிப்பது மிக அருமையாக சித்தரிக்கப்படுகிறது. குரோவ் அன்னாவைப் பார்க்க அவள் ஊருக்குப் போகும் காட்சி மிகப் பிரமாதமானது.

இதெல்லாம் ஒரு கதையா, ஒன்றுமே நடக்கவில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். நான் செகாவ் அல்லன், என்னால் முடிந்த விவரிப்பு இவ்வளவுதான்.

கதையைப் பல தளங்களில் படிக்கலாம். சாரமில்லாத வாழ்க்கையைத் தொடர்வதை விட வாழ்க்கைக்கு பொருள் தரக்கூடியதை என்ன விலை கொடுத்தேனும் செய்வது மேல் என்று புரிந்து கொள்ளலாம். அப்படி பொருள் தரும் செய்கை சமூகம் ஏற்காததாக இருக்கலாம். அதனால் என்ன என்று செகாவ் கேட்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு செய்கைக்கு நீங்கள் பெரும்விலை கொடுக்க நேரிடலாம், அதற்கு நீங்கள் தயாரா என்று செகாவ் கேட்கிறார என்றும் புரிந்து கொள்ளலாம். திரௌபதியை துகிலுரிய ஆணையிடுவது அநியாயம்தான், அக்கிரமம்தான், ஆனால் அதுதான் துரியோதனனின் வாழ்க்கையைப் பொருளுள்ளதாக ஆக்குகிறது என்றால் துரியோதனன் என்னதான் செய்வது? அதற்காக தான் தொடை உடைந்து இறக்க நேரிடலாம் என்று அவனுக்கு ஒரு கணம் கூட தோன்றி இருக்காதா என்ன?

காதல் – அது கூட வேண்டாம், இன்னொரு மனிதரோடு ஏற்படும் உண்மையான பந்தம் – மனிதர்களை எப்படி மாற்றுகிறது, அது எப்படி மனிதர்களுக்கு வாழ்க்கையை சாரமுள்ளதாக மாற்றுகிறது என்றும் படிக்கலாம். என் வயதில் பந்தங்கள் எல்லாம் உதிர்ந்து கொண்டிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தானோ என்னவோ பந்தங்களின் தேவை நன்றாகவே புரிகிறது.

அப்படி ஒன்றும் காவிய நிகழ்ச்சி அல்ல, இது சாதாரண mid-life crisisதான், ஆனால் அது மனிதர்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்று விவரிக்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம். அசோகமித்திரன் இந்தக் கதையை எழுதினால் அப்படித்தான் எழுதுவார் என்று தோன்றுகிறது. அவருக்கு அதன் அபத்தத்தைக் காட்டுவதில்தான் அதிக சுவை.

என் பணக்கார உறவினர் ஒருவர் மகனுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு ஒரு பதின்ம வயதுப் பெண்ணை மணம் புரிந்து கொண்டார். அதற்கான விலையை அவரது குடும்பம் இன்னும் தந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதுதான் அவர் வாழ்விற்கு பொருள் தரும் என்றால் அவர் என்னதான் செய்வது?

மீண்டும் சொல்கிறேன், செகாவ் ஒரு மாஸ்டர். அவரது சிறுகதைகளைத் தவறவே விடாதீர்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: செகாவ் பக்கம்

தொடர்புடைய சுட்டி: Lady with a Dog

செகாவின் ‘Chorus Girl’

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் செகாவ் முதல் வரிசையில் இருப்பவர். சிறு வயதிலேயே அவர் எழுத்து நல்ல இலக்கியம் என்று புரிந்துவிட்டது. ஆனால் இன்று மீண்டும் படித்துப் பார்க்கும்போது இதை இலக்கியம் என்று இன்றைய இளைஞர்கள் நினைப்பார்களா என்று சந்தேகமாக இருக்கிறது.

உதாரணமாக ஆண்டன் செகாவின் Chorus Girl சிறுகதையை எடுத்துக் கொள்ளுங்கள். ஆங்கில மொழிபெயர்ப்பு இங்கே. புதுமைப்பித்தன் தமிழில் மொழிபெயர்த்தது இங்கே.

ஒரு நாடகீயமான தருணம். சங்க காலத்திலிருந்தே தமிழர்களுக்கு பழக்கமான ஒரு தருணம். நாடகக்காரி ஒருத்தி. அவள்’பரத்தை’, ‘தலைவன்’ ‘தலைவி’யைத் தவிக்கவிட்டு இவளிடம் வந்து போய்க் கொண்டிருக்கிறான். இன்னும் சுலபமாகச் சொன்னால் கண்ணகி-கோவலன்-மாதவி. என்ன, இந்த மாதவி பலரிடம் பழகுபவள். ‘பரத்தை’யிடம் ‘தலைவி’ அதாவது மனைவி – புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பில் சொன்னால் குடும்ப ஸ்த்ரீ – என் கணவன் அலுவலகத்தில் பணத்தைத் திருடிவிட்டான், ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்கள், பணத்தைத் திருப்பிக் கொடு என்று அழுகிறாள். கணவன் பெரிதாக எதையும் கொடுத்துவிடவில்லை. இருந்தாலும் நாடகக்காரி குடும்ப ஸ்த்ரீ கொடுக்கும் அழுத்தத்தால் வேறு யார் யாரோ கொடுத்த பணத்தை எல்லாம் அவளுக்கு கொடுத்தனுப்புகிறாள். என் உத்தம மனைவியை போயும் போயும் உன்னைப் போன்ற ஒரு பரத்தை காலில் விழும் நிலைக்குக் கொண்டு வந்த நான் எப்பேர்ப்பட்ட கயவன், சீச்சீ தூத்தூ என்று கணவனும் போய்விடுகிறான். இவளுக்கு அழுகையாக வருகிறது. அவ்வளவுதான் கதை.

மூன்றே மூன்று பாத்திரங்கள்தான். கணவன், மனைவி, நாடகக்காரி. மூவரின் மனமும் எப்படி யோசிக்கிறது என்பது நன்றாகப் புரிகிறது. மனைவியை மொத்தமாக கை கழுவிவிடவில்லை என்றாலும் தான் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டதின் ஆங்காரம், கணவனுக்கு ஒரு ஆபத்து என்றதும் அச்சம், கணவனும் அவனுக்கு வேலையும் இல்லாவிட்டால் தான், தன் பிள்ளைகளின் எதிர்காலம் சூனியம்தான் என்ற பொருளாதார நிதர்சனம், அதைத் தவிர்க்க எத்தனை அவமான உணர்ச்சி இருந்தாலும் சமூக அந்தஸ்து இல்லாத இந்த நாடகக்காரியின் காலிலும் விழுவதற்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளுதல் என்று இரண்டு பக்கத்தில் அவளுடைய பெரிய சித்திரத்தைத் தீட்டி இருக்கிறார். கணவன் நாடகக்காரியால் கவரப்பட்டாலும் குடும்பப் பெண்ணான தன் மனைவி தன்னைக் காப்பாற்ற இந்த நாடகக்காரியின் வீட்டுக்கே வந்து அவளிடம் கெஞ்சுவதைப் பார்த்ததும் மனம் ‘திருந்திவிட்டான்’. இந்த சம்பிரதாயமான கதையில் நாடகக்காரியின் நிலை என்ன? இவள் யார், எப்படிப்பட்டவன் என்று தெரிந்தும் அவனாக வந்தான். மனைவி வயிறெரிந்து சபிப்பதைத் தாங்க முடியாமல் யார் யாரோ கொடுத்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொடுக்கிறாள். ஆனால் அவளுக்கு சமூக அந்தஸ்து இல்லை என்றால் இந்த சிஸ்டம் எப்படிப்பட்டது?

அதிலும் மனைவி புரியாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல் எல்லாப் பணத்தையும் உன்னிடம் கொடுத்துவிட்டான் என்று அழும் காட்சிகள் மெல்லிய நகைச்சுவை வேறு கதைக்கு மெருகேற்றுகின்றன.

ஒரு நாடகீய தருணத்தை மிகவும் subtle ஆக வெளிப்படுத்தி இருக்கும் கதை. அதெல்லாம் ஒரு மாஸ்டருக்குக்குத்தான் கை வரும். ஆனால் இந்தக் கதை இன்றைய இளைஞர்களுக்கு அப்பீல் ஆகுமா? நான் என் பெண்ணிடம் படிக்கச் சொல்லலாம், ஆனால் அவள் இப்போதெல்லாம் நான் பரிந்துரைத்தேன் என்றால் அதைப் படிக்க மாட்டேன் என்கிறாள். 🙂 இந்தத் தளத்தை படிப்பவர்களில் இளைஞர்கள் யாராவது இருந்தால், இல்லை உங்களுக்கு யாராவது இளைஞர்களைத் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: செகாவ் பக்கம்

செகாவின் “Seagull” (1896)

anton_chekovபாதி வாரம் மிச்சம் இருக்கிறது. எந்த வித தீமும் இல்லாமல் தோன்றியதை எழுதப் போகிறேன்.

Seagull செகாவின் புகழ் பெற்ற நாடகங்களுள் ஒன்று.

நாம் எவரும் தர்க்க அறிவால் மட்டுமே வழிநடத்தப்படுவதில்லை. உடனடியான சந்தோஷத்துக்காக, வாழ்வில் விறுவிறுப்பு வேண்டுமென்பதற்காக “தவறான” பாதையை, பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கலாம் என்று தெரிந்தும் தேர்ந்தெடுப்பது மனித இயல்பின் கவர்ச்சிகளுள் ஒன்று. நம்மில் யார் இரண்டு நாளில் பெரிய பரீட்சை இருந்தும் சினிமா பார்க்காமல் இருக்கிறோம்? சமர்த்தாக, சாதுவாக இருக்கும் ஆணை விட கொஞ்சமாவது அயோக்கியத்தனம் இருக்கும் ஆண்களால்தான் பெண்கள் கவரப்படுகிறார்கள். ஆண்களும் அப்படித்தான்.

seagullசெகாவ் இதைத்தான் மிக அருமையாக இந்த நாடகத்தில் காட்டுகிறார். சிறு நகரம் ஒன்றில் இளம்பெண் நீனாவுக்கு நடிக்க வேண்டும் என்று கொஞ்சம் ஆசை இருக்கிறது. தன்னை உண்மையாக விரும்பும் ட்ரெப்லெவை விட்டுவிட்டு ஓரளவு பிரபலமான எழுத்தாளன் ட்ரிகாரினோடு வாழ வீட்டை விட்டு ஓடிப் போகிறாள். ட்ரிகாரினுக்கு தன் மேல் உண்மையான விருப்பம் இல்லை, ஏதோ பொழுதுபோக்குக்காக என்று அவளுக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் ஏதோ கொஞ்ச நாள் தன்னுடன் வாழ்ந்துவிட்டு பிறகு அவளை ஏறக்குறைய மறந்துவிடும் ட்ரிகாரினுக்காக அவள் எதையும் தர தயாராக இருக்கிறாள். ட்ரெப்லெவைப் பற்றிய குற்ற உணர்ச்சி மட்டும்தான் அவளுக்கு இருக்கிறது.

ஒரு விதத்தில் பார்த்தால் நாடகம் முழுவதும் நிறைவேறாத ஆசைகள்தான். மெட்வடெங்கோ மாஷாவை விரும்ப, மாஷா ட்ரெப்லெவை விரும்ப, ட்ரெப்லெவ் நீனாவை விரும்ப, நீனா ட்ரிகாரினை விரும்ப, ட்ரிகாரின் யாரையும் விரும்புவதில்லை.

நீனாவுக்கு counterpoint ஆக ட்ரெப்லெவை விரும்பும், ஆனால் ட்ரெப்லெவின் பிரக்ஞையில் தான் இல்லை என்பதை உணர்ந்து safe ஆக பள்ளி ஆசிரியன் மெட்வடெங்கோவை மணக்கும் மாஷாவை முன்வைக்கிறார். மாஷாவின் தேர்வு சரியா இல்லை நீனாவின் தேர்வு சரியா என்பதை பக்கம் பக்கமாகப் பேசலாம். ஆனால் எந்த முடிவுக்கும் வருவதற்கில்லை.

ட்ரிகாரின் கடற்பறவை ஒன்றை எந்தக் காரணமும் இல்லாமல் சும்மா சுட்டுக் கொல்வதை இதற்கு metaphor ஆகக் காட்டுகிறார். அதை அவ்வளவு வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா என்று எனக்கு கேள்வி உண்டு. என் கண்ணில் அது நாடகத்துக்கு செயற்கைத்தன்மையை அளிக்கிறது, கொஞ்சம் வலிந்து புகுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் நடிக்கப்படும்போது அது நாடகத்துக்கு தேவையாக இருக்கலாம்.

செகாவ் ஒரு மாஸ்டர் என்பதற்கு இந்த நாடகம் போதும். இணையத்தில் கிடைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: செகாவ் பக்கம், நாடகங்கள்