அசோகமித்ரன் நினைவில்

ஃபேஸ்புக்கில் பார்த்த செய்தி நிறைவாக இருந்தது. ஆஹா என்று வியப்பதைத் தவிர வேறு எதுவும் எழுதப்போவதில்லை. தகவல் தந்த அழியாச்சுடர்கள் ராமுக்கு நன்றி!

அசோகமித்ரன் நினைவாக கடலூர் மாவட்டத்தில் ஒரு நீர்க்குளத்தை அவரது மகன் ரவிசங்கர் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்தியுள்ளனர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்

அசோகமித்ரன்: இந்தியா 1944-48

2017-இல் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்திருக்கிறது. அவர் எழுதிய கடைசி நாவலோ என்னவோ.

அசோகமித்ரன் இந்த நாவலில் கி.ரா. பாணி கதைசொல்லியாக உருவெடுத்திருக்கிறார். அத்தைப்பாட்டியோ, வயதான மாமாவோ தங்கள் சென்ற காலத்து வாழ்வைப் பற்றி கதையாக சொன்னால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது. யுத்தங்களுக்கிடையில் புத்தகம் படித்தபோதும் இப்படியேதான் உணர்ந்தேன். அவர் எழுத்தில் எப்போதும் சொல்லப்படுவதை விட சொல்லாமல் விடப்படுவதே அதிகம். ஆனால் இதில் அப்படி சொல்லாமல் விடப்பட்டது எதுவுமில்லை. எழுதியவர் யாரென்று தெரியாமல் படித்திருந்தாலும் இது அசோகமித்ரன் எழுத்து என்று தெரிந்திருக்கும், ஆனாலும் இது அவரது பாணிதானா என்று சில சமயம் தோன்றியது. மேலும் அவரது மெல்லிய, சில சமயம் குரூரமான, நகைச்சுவையும் இதில் குறைவாகத்தான் தெரிகிறது.

எப்படி இருந்தாலும் கதை நன்றாகவே இருந்தது, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

என்ன கதை? கணவன் இறந்து, மனைவியின் அண்ணா ஆதரவில் வளரும் குடும்பம். மூத்த மகன் சுந்தரத்தின் விருப்பம் கேட்கப்படாமல் மாமா பெண் பார்வதியோடு திருமணம். மாமா துறவி ஆகிவிட, சுந்தரம் குடும்பப் பொறுப்பை ஏற்கிறான். தம்பி மணியைப் படிக்க வைக்கிறான். 1944 வாக்கில் பம்பாய்க்கு குடிபெயர்கிறான். அம்மா வாழ்க்கையில் முதல் முறையாக குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறாள். மணி வேலைக்குப் போவதில் சில சிக்கல்கள். மணிக்கு குஸ்தி பயில்வான் வினாயக், அவன் தங்கை நிர்மலாவோடு நட்பு. இரு குடும்பங்களும் நெருக்கமாகின்றன. குடுமப்த்தின் உண்மையான தலைவியான அம்மாவே மணியை நிர்மலாவை மணந்து கொள்ளேன் என்கிறாள். மன்னி பார்வதியும் ஆமோதிக்கிறாள். ஆனால் நடக்கவில்லை.

இரண்டாம் பகுதியில் சுந்தரம் பயிற்சிக்காக அமெரிக்கா அனுப்பப்படுகிறான். அங்கே பணக்கார குடும்பத்தை சேர்ந்த, ஹார்வர்டில் உயர்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் பால்ய விதவை லட்சுமியை சந்திக்கிறான், அவளை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான், குடும்பத்திற்குத் தெரியாது. திரும்பி வருவது 1948-இல். விடுதலை கிடைத்தாயிற்று. சுந்தரத்தின் பதவி உயர்கிறது. மணிக்கு திருமணம் நடக்கிறது. ஆனால் இரண்டாம் திருமணம் பற்றி சொல்ல முடியாமல் தவிக்கிறான். கடைசியில் தன் துறவி மாமாவிடம் சொல்ல, மாமா இரண்டு மனைவிகளோடு வாழ் என்று ஆலோசனை சொல்கிறார். இதற்கிடையில் பார்வதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இரண்டு வாரத்தில் இறந்துவிடுகிறது. லட்சுமி அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து உங்கள் சுகதுக்கம் என் சுகதுக்கம் என்று அம்மாவிடம் சொல்வதோடு கதை முடிகிறது.

மணியின் சிக்கல்கள் முதல் பகுதி, சுந்தரத்தின் சிக்கல்கள் இரண்டாம் பகுதி.

அசோகமித்ரன் பல இடங்களில் தெரிகிறார். எத்தனை பிரச்சினை என்றாலும் அதை கூச்சல் போடாமல் எதிர்கொள்ளும் பாத்திரங்கள். உண்மையான நட்பின் சித்திரம், வினாயக் குடும்பத்துக்கு செய்யப்படும் உதவிகள். சுந்தரத்தின் இரண்டாவது திருமணம் பற்றி ரிஷிகேஷில் தெரிந்து கொள்ளும் பார்வதி ஒன்றுமே சொல்லாமல் இருந்துவிட்டு இரண்டு நாள் கழித்து பம்பாய்க்கு திரும்பிய பிறகு சுந்தரத்தின் அம்மாவைக் கட்டிக் கொண்டு கதறுவது. குழந்தை இறந்த செய்தி தெரிந்ததும் வந்து பார்க்கும் லட்சுமி உங்கள் சுகதுக்கம் என்னுடையவை என்று சொன்னதும் அது வரை பெரிதாக அழாத அம்மா லட்சுமியைக் கட்டிக் கொண்டு கதறுவது. லட்சுமியின் வீடு காந்தி வீட்டின் பக்கத்துத் தெருவில் இருப்பதும், லட்சுமி பத்து வயதில் விதவை ஆனதும் காந்தியின் அம்மா – ஆம் மகாத்மா காந்தியின் அம்மாவேதான் – அவளிடம் மொட்டை அடித்துக் கொண்டு ஜபம் செய்துகொண்டு வாழ்க்கையைக் கடத்தாதே என்று சொல்வது. சுந்தரம் அமெரிக்கா போகும்போது மடி ஆசாரம் பார்க்கும் அம்மாவை நிர்மலா இயல்பாகக் கட்டிக் கொண்டு ஆறுதல் சொல்வது. ஆசாரமான அம்மா மராத்திப் பெண்ணை மணம் செய்து கொள் என்று மணியிடம் சொல்வது. சொல்லிக் கொண்டே போகலாம்.

1944-48 பம்பாயில் வாழ்கிறார்கள். ஆனால் உலகப்போர், சுதந்திரப் போராட்டம் நடக்கிறது என்பதே இந்தக் குடும்பத்தின் பிரக்ஞையில் இல்லை என்பது மிகச் சிறப்பான சித்திரம். உப்பு புளி மிளகாய், ரேஷன், வாடகை, காலி செய்யமாட்டேன் என்று அட்டூழியம் செய்யும் குடித்தனக்காரர், அலுவலகத்துக்கு செல்ல ரயில், பஸ் இதுதான் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. போரால் அரிசி பருப்பு கிடைப்பதில் ஏற்படும் தட்டுப்பாடு விவரிக்கப்படுகிறது. பம்பாய் துறைமுகத்தில் கப்பலில் வெடிமருந்து வெடித்து ஏற்படும் நாசம் விவரிக்கப்படுகிறது, அவ்வளவுதான். அதாவது நேரடி பாதிப்பு மட்டுமே. அது ஒரு மாஸ்டர் டச்.

இதை தண்ணீர், மானசரோவர், கரைந்த நிழல்கள், ஒற்றன் போன்ற நாவல்களுக்கு அடுத்த படியில்தான் வைப்பேன். அதனால் ஒன்றும் குறைந்துவிடவில்லை, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்

அசோகமித்ரனின் “ஒற்றன்” – மீள்பதிவு

ஒரிஜினல் பதிவு 2010-இல் எழுதப்பட்டது.

அசோகமித்ரன் ஒரு மேதை. சந்தேகமே இல்லை.

அயோவா பல்கலைகழகம் உலக எழுத்தாளர்களை ஒரு ஆறேழு மாத காலம் செமினார் மாதிரி ஏதோ ஒன்றுக்கு அழைத்திருக்கிறது. தமிழுக்கு அசோகமித்திரன் என்ற தியாகராஜன் – டகரஜான் என்று ஜப்பானிய பெண் எழுத்தாளர் கஜுகோவால் அழைக்கப்படுபவர். சைவ உணவு கிடைக்காமல், சரியாக சமைக்கவும் தெரியாமல், காப்பி (அதுவும் அமெரிக்க காப்பி), கார்ன் ஃப்ளேக்ஸ், சீரியல், பாதி வெந்த சாதம் இவற்றை வைத்து காலம் தள்ளுபவர். அவரது அனுபவங்கள்தான் இந்த கதை.

கிண்டலும் நகைச்சுவையும் புத்தகம் பூராவும் இழைந்தோடுகிறது. நாலு வரிக்கு ஒரு முறையாவது புன்னகையாவது வந்தே தீரும். ஷூவில் இருக்கும் அட்டையை எடுக்காமல் ஷூ கடித்துவிடுகிறது. யாரோ ஒரு நண்பன் வீட்டுக்கு போனால் நண்பனின் காதலியின் கணவன் இவரை தன் மனைவியின் காதலன் என்று நினைத்து துப்பாக்கியால் சுட வருகிறான். பெருவை சேர்ந்த ஒரு எழுத்தாளர் சார்ட் போட்டு கதை எழுத திட்டம் இடுகிறார். எதியோப்பியாவை சேர்ந்த ஒரு எழுத்தாளர் இவரை உடும்பு பிடியாக பிடித்துக் கொள்கிறார்.

பி.ஜி. வுட்ஹவுசுக்கு இணையான நகைச்சுவை உணர்வு கொண்ட எழுத்தாளர் தமிழில் கிடையாது என்று நினைத்திருந்தேன். அவரை விட subtle, மென்மையான, மேன்மையான நகைச்சுவை.

ஒரு கதை – மனிதர் சான் ஃபிரான்சிஸ்கோ, மற்றும் பல இடங்களில் நிறைய நிகழ்ச்சிகளை ஒத்துக்கொண்டிருப்பார். ஒரு நண்பர் டென்வர் நகரத்தில் அவரை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு போவார். இவருக்கு ஏழு மணிக்கோ என்னவோ பஸ். பஸ் வராது. இவர் மனதில் பல எண்ணங்கள் ஓடும், நிகழ்ச்சி மிஸ் ஆகப் போகிறது, அடுத்த நிகழ்ச்சிக்கு அங்கிருந்து டிக்கெட், அதையும் இனி மேல் அட்டென்ட் செய்ய முடியாது, என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம். கடைசியில் பார்த்தால் பஸ் பஸ் மாதிரி இருக்காது, பெரிய ட்ரக் மாதிரி இருக்கும். இந்தக் கதையை நான் சிறு வயதில் குமுதத்தில் படித்தேன். ஒன்றுமே புரியவில்லை, இதெல்லாம் என்னடா கதை என்று அலுத்துக் கொண்டேன். பீஹாரில் முதல் முறை பஸ்சுக்காக காத்திருந்து ட்ரக்கர் என்று அங்கு அழைக்கப்பட்ட ஒரு வண்டியில் பயணம் செய்யும்போதுதான் இந்த கதை திடீரென்று எனக்கு புரிந்தது. அதற்கு பத்து வருஷம் ஆயிற்று!

உண்மையில் அந்தக் கதை புரிந்த தருணம்தான் நான் அசோகமித்திரனின் மேதமையை முதல் முறையாக உணர்ந்த தருணம். நான் அசோகமித்திரனின் பக்தன் ஆனது அந்தத் தருணத்தில்தான். பரமபக்தன் ஆனது பிரயாணம் சிறுகதையைப் படித்த தருணத்தில்.

ஒற்றன் எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் இடம் பெறுகிறது. ஆனால் ஆச்சரியம், ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் இல்லை. ஜெயமோகனே ஏன் என்று ஒரிஜினல் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். அவரது வார்த்தைகளில்:

இலக்கிய நகைச்சுவைக்கு நான் மூன்று அளவுகோல்களை வைப்பேன்.

1. மனிதசிந்தனைகளையும் செயல்களையும் நுட்பமாக அவதானித்து பதிவுசெய்தல் . உதாரணம் அபெ குபேங்கோ

2. உயர்தர அங்கதம். கேலி அல்ல. பகடி அல்ல. அங்கதம் தேவை. கேலியும் பகடியும் மேலோட்டமானவை. அங்கதம் மானுட வாழ்க்கையில் உள்ள அபத்தத்தை சித்தரிக்கிறது. உதாரணம் அந்தப் பூண்டு வாசனை.

3. எதிர்மறை தரிசனம். உன்னதமான மெய்மைத்தரிசனங்களை தலைகீழாக்கும் பார்வை. அந்த அம்சம் இக்கதைகளில் இல்லை என்பதனாலேயே இதை நான் அசோகமித்திரனின் சாதனை என்பதில்லை. அதற்கு அவரது பல கதைகள் உள்ளன.

அதே பதிவிலேயே ஜெயமோகன் தான் இந்தப் புத்தகத்தை விரும்புவதையும் குறிப்பிட்டிருந்தார். அதாவது நல்ல புத்தகம், ஆனால் இதை விட அருமையாக அசோகமித்திரன் எழுதி இருக்கிறார் என்பது அவர் கருத்து. அவரது வார்த்தைகளில்:

சாதாரணமாக சொல்லக்கூடிய ஆக்கம் அல்ல. ஒற்றன் சிறுகதைகளாக வந்தது. பின்னர் நாவலாக ஆக்கப்பட்டது. சிறுகதைகளாக இரு கதைகள் மகத்தானவை. ஒன்று அந்த பூண்டு வாசனை கதை. இன்னொன்று இலாரியா. சுஜாதா அதைப் போன்ற ஒரு கதையை கற்பனையே செய்திருக்கமுடியாது…

நர்மதா பதிப்பகம், காலச்சுவடு பதிப்பகம் இரண்டும் வெளியிட்டிருக்கின்றன. காலச்சுவடு பதிப்பக வெளியீட்டில் இரண்டு அத்தியாயங்கள் அதிகப்படியாக இருக்கின்றன. வாங்குபவர்கள் காலச்சுவடு பதிப்பக புத்தகத்தை வாங்குங்கள்! இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சிவசங்கரா விளக்குகிறார்:

நர்மதா பதிப்பகத்தின் வெளியீட்டில் சேர்க்கப்படாத அந்த இரண்டு அத்தியாயங்கள் – “இப்போது நேரமில்லை” மற்றும் “அம்மாவின் பொய்கள்” என்று நினைக்கிறேன். 2003-04 காலகட்டத்தில் “ஒற்றன்” நாவலை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது, புத்தகத்தின் நீளத்தைக் கூட்டவேண்டி, தனிப் பிரசுரங்களாக இருந்த இவ்விரு அத்தியாயங்களும் புத்தகத்தில் மேலதிகமாக இணைக்கப்பட்டன

“ஒற்றன்”-இன் ஆங்கில மொழிபெயர்ப்பு “Mole!“.

நண்பர்கள் ராஜ் சந்திரா, ரெங்கசுப்ரமணி, சிமுலேஷன் மூவரும் இந்தப் புத்தகத்தை ரசித்திருக்கிறார்கள். ராஜ் சந்திரா தன்னுடைய டாப் டென்னில் இடம் பெறும் புத்தகம் என்கிறார். ரெங்காவின் பதிவு இங்கே. சிமுலேஷன் இந்த புத்தகத்தின் பரம ரசிகர். இங்கே அத்தியாயம் அத்தியாயமாக அலசி இருக்கிறார்.

ஆனால் இந்தத் தளத்தின் ஒரு காலத்திய சக பொறுப்பாளனான பக்ஸ் இதை பெரிதாக ரசிக்கவில்லை. அவனது வார்த்தைகளில்:

ஒற்றன் என்னைப் பொறுத்தவரை ஒரு லைட் கட்டுரை. பெரிதாக பாராட்டுவதற்கு இருப்பதாக தெரியவில்லை. சுஜாதவின் பிரிவோம் சந்திப்போம் பார்ட் 2 படித்தவுடன் என்ன தோன்றியதோ அது தான் தோன்றியது. தங்கள் அனுபவத்திற்கு வடிகால். ஆனால் சுஜாதா explicitஆக புனைக்கதையின் மூலம் சொல்லிய அமேரிக்க அனுபவத்தை, அசோகமித்ரனின் ஒரு 10 சதவிகிதம் travelogue, 20 சதவிகிதம் கதை போலவும், 70 சதவிகிதம் நகைச்சுவை கலந்த கட்டுரை மூலம் subtleஆக் கூறியிருக்கிறார். அதனால் இது பி.ச. வை விட மதிப்பு பெறுகிறது. “ஒற்றன்” என்ற தலைப்பு ஒரு அட்ராக்‌ஷன். அசோகமித்ரனின் பிரயாணம் போன்ற சிறுகதையை ஒப்பிடுகையில் இது சாதாரணப் படைப்பே.

பதிவை எழுதி பத்து வருஷம் ஆயிற்று, இந்தப் பத்து வருஷத்தில் அவனுடைய எண்ணமும் மாறி இருக்கலாம், என், ஜெயமோகன், ரெங்கா, ராஜ் சந்திரா, சிமுலேஷன் கண்களின் வழியாக அவனாலும் இந்தப் புத்தகத்தை பார்க்க முடிந்திருக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம்

அசோகமித்ரன் காப்பி அடித்த சிறுகதை – மீள்பதிவு

அசோகமித்ரனின் புனைவுகளில் பிரயாணம் என்ற சிறுகதை ஒரு உச்சம். அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது. அதைப் பற்றி இன்று ஜெயமோகனும் குறிப்பிட்டிருக்கிறார். ஜெயமோகன், எஸ்.ரா. இருவரும் இந்த சிறுகதையை தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்கள்.

அசோகமித்ரன் ஒரு ஜீனியஸ். அவருடைய எல்லா கதைகளும் எனக்கு புரிந்துவிடுவதில்லை. (பாவம் டல்பதடோ கதையில் என்னதான் சொல்ல வருகிறார்? பதினெட்டாவது அட்சக்கோடு கதையின் பாயின்ட் என்ன?) ஆனால் புரியும்போது மண்டையில் விளக்கு எரிகிறது, டங்டங் என்று மணி அடிக்கிறது. இந்த பிரயாணம் கதையையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் வேக வேகமாக படிப்பேன், ஒவ்வொரு வார்த்தையையும் ஊன்றிப் படிப்பவன் அல்லன். கடைசி வரிகளை படிக்கும்போது, ஊம்ம்? வாட்? என்று கேள்வி, மீண்டும் அந்த வரிகளைப் படித்தேன். வாத்யாரே, நீ மேதை! என்று தோன்றியது.

ஆனால் இதே மாதிரி ஒரு கதையை ஆங்கிலத்தில் படித்த நினைவும் வந்தது. கதையின் பெயர் The Boarded Window. எழுதியவர் அம்ப்ரோஸ் பியர்ஸ் (Ambrose Bierce). அசோகமித்ரன் காப்பி அடித்தாரா இல்லையா என்று தெரியாது. அவருக்கும் அதே கற்பனை வந்திருக்கலாம். இல்லை காப்பியே அடித்திருந்தாலும் அக்கறை லேது, ஏனென்றால் பியர்சை விட பல மடங்கு சிறப்பாக எழுதி இருக்கிறார். At the worst, you can say Asokamithran “transcreated”. “மறுபடைப்பு” என்பது காப்பி இல்லை. (பின்னே தலைப்பு ஏன் அசோகமித்ரன் காப்பி அடித்த கதை என்று இருக்கிறது என்று கேட்கிறீர்களா? எல்லாம் உங்கள் கவனத்தைக் கவரத்தான். :-))

பொதுவாக இப்படிப்பட்ட காப்பி, இல்லை ஒரே மாதிரி கரு உள்ள புனைவுகள் தமிழில் சுட்டிக் காட்டப்படுவதில்லை. கல்கி பிரேம்சந்தின் ஒரு கதையை – சால்ட் இன்ஸ்பெக்டர் என்று நினைக்கிறேன் – அதை புது ஓவர்சியர் என்ற பேரில் அப்படியே இறக்குமதி செய்திருக்கிறார்; புதுமைப்பித்தன் கல்கி காப்பி அடித்த கதைகள் என்று ஒரு பட்டியலே போட்டிருக்கிறார். சுஜாதா நோபல் பரிசு வென்ற நக்யுப் மஃபூஜின் ஒரு கதையை ஸ்ரீரங்கத்து கதையாக மாற்றி இருக்கிறார். இவை சுட்டிக் காட்டப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் – அதுதான் நேர்மையான அணுகுமுறை என்பது மட்டுமல்ல; தழுவி எழுதப்பட்ட கதையிலும் எவ்வளவு ஒரிஜினாலிடி இருக்கிறது என்பதும் தெரியும்.

பியர்சின் கதையை (ஆங்கிலத்தில்) கீழே கொடுத்திருக்கிறேன். காப்பிரைட் பிரச்சினை கிடையாது என்று நினைக்கிறேன், பியர்ஸ் மறைந்து நூறு வருஷம் இருக்கும். (அதாவது அசோகமித்திரன் பிறப்பதற்கு முன்னாலேயே பியர்ஸ் மறைந்துவிட்டார்.)

The Boarded Window by Ambrose Bierce

In 1830, only a few miles away from what is now the great city of Cincinnati, Ohio, lay a huge and almost endless forest.

The area had a few settlements established by people of the frontier. Many of them had already left the area for settlements further to the west. But among those remaining was a man who had been one of the first people to arrive there.

He lived alone in a house of logs surrounded on all sides by the great forest. He seemed a part of the darkness and silence of the forest, for no one had ever known him to smile or speak an unnecessary word. His simple needs were supplied by selling or trading the skins of wild animals in the town.

His little log house had a single door. Directly opposite was a window. The window was boarded up. No one could remember a time when it was not. And no one knew why it had been closed. I imagine there are few people living today who ever knew the secret of that window. But I am one, as you shall see.

The man’s name was said to be Murlock. He appeared to be seventy years old, but he was really fifty. Something other than years had been the cause of his aging.

His hair and long, full beard were white. His gray, lifeless eyes were sunken. His face was wrinkled. He was tall and thin with drooping shoulders – like someone with many problems.

I never saw him. These details I learned from my grandfather. He told me the man’s story when I was a boy. He had known him when living nearby in that early day.

One day Murlock was found in his cabin, dead. It was not a time and place for medical examiners and newspapers. I suppose it was agreed that he had died from natural causes or I should have been told, and should remember.

I know only that the body was buried near the cabin, next to the burial place of his wife. She had died so many years before him that local tradition noted very little of her existence.

That closes the final part of this true story, except for the incident that followed many years later. With a fearless spirit I went to the place and got close enough to the ruined cabin to throw a stone against it. I ran away to avoid the ghost which every well-informed boy in the area knew haunted the spot.

But there is an earlier part to this story supplied by my grandfather.

When Murlock built his cabin he was young, strong and full of hope. He began the hard work of creating a farm. He kept a gun – a rifle – for hunting to support himself.

He had married a young woman, in all ways worthy of his honest love and loyalty. She shared the dangers of life with a willing spirit and a light heart. There is no known record of her name or details about her. They loved each other and were happy.

One day Murlock returned from hunting in a deep part of the forest. He found his wife sick with fever and confusion. There was no doctor or neighbor within miles. She was in no condition to be left alone while he went to find help. So Murlock tried to take care of his wife and return her to good health. But at the end of the third day she fell into unconsciousness and died.

From what we know about a man like Murlock, we may try to imagine some of the details of the story told by my grandfather.

When he was sure she was dead, Murlock had sense enough to remember that the dead must be prepared for burial. He made a mistake now and again while performing this special duty. He did certain things wrong. And others which he did correctly were done over and over again.

He was surprised that he did not cry — surprised and a little ashamed. Surely it is unkind not to cry for the dead.

“Tomorrow,” he said out loud, “I shall have to make the coffin and dig the grave; and then I shall miss her, when she is no longer in sight. But now — she is dead, of course, but it is all right — it must be all right, somehow. Things cannot be as bad as they seem.”

He stood over the body of his wife in the disappearing light. He fixed the hair and made finishing touches to the rest. He did all of this without thinking but with care. And still through his mind ran a feeling that all was right — that he should have her again as before, and everything would be explained.

Murlock had no experience in deep sadness. His heart could not contain it all. His imagination could not understand it. He did not know he was so hard struck. That knowledge would come later and never leave.

Deep sadness is an artist of powers that affects people in different ways. To one it comes like the stroke of an arrow, shocking all the emotions to a sharper life. To another, it comes as the blow of a crushing strike. We may believe Murlock to have been affected that way.

Soon after he had finished his work he sank into a chair by the side of the table upon which the body lay. He noted how white his wife’s face looked in the deepening darkness. He laid his arms upon the table’s edge and dropped his face into them, tearless and very sleepy.

At that moment a long, screaming sound came in through the open window. It was like the cry of a lost child in the far deep of the darkening forest! But the man did not move. He heard that unearthly cry upon his failing sense, again and nearer than before. Maybe it was a wild animal or maybe it was a dream. For Murlock was asleep.

Some hours later, he awoke, lifted his head from his arms and listened closely. He knew not why. There in the black darkness by the side of the body, he remembered everything without a shock. He strained his eyes to see — he knew not what.

His senses were all alert. His breath was suspended. His blood was still as if to assist the silence. Who — what had awakened him and where was it!

Suddenly the table shook under his arms. At the same time he heard, or imagined he heard, a light, soft step and then another. The sounds were as bare feet walking upon the floor!

He was afraid beyond the power to cry out or move. He waited—waited there in the darkness through what seemed like centuries of such fear. Fear as one may know, but yet live to tell. He tried but failed to speak the dead woman’s name. He tried but failed to stretch his hand across the table to learn if she was there. His throat was powerless. His arms and hands were like lead.

Then something most frightful happened. It seemed as if a heavy body was thrown against the table with a force that pushed against his chest. At the same time he heard and felt the fall of something upon the floor. It was so violent a crash that the whole house shook. A fight followed and a confusion of sounds impossible to describe.

Murlock had risen to his feet. Extreme fear had caused him to lose control of his senses. He threw his hands upon the table. Nothing was there!

There is a point at which fear may turn to insanity; and insanity incites to action. With no definite plan and acting like a madman, Murlock ran quickly to the wall. He seized his loaded rifle and without aim fired it.

The flash from the rifle lit the room with a clear brightness. He saw a huge fierce panther dragging the dead woman toward the window. The wild animal’s teeth were fixed on her throat! Then there was darkness blacker than before, and silence.

When he returned to consciousness the sun was high and the forest was filled with the sounds of singing birds. The body lay near the window, where the animal had left it when frightened away by the light and sound of the rifle.

The clothing was ruined. The long hair was in disorder. The arms and legs lay in a careless way. And a pool of blood flowed from the horribly torn throat. The ribbon he had used to tie the wrists was broken. The hands were tightly closed.

And between the teeth was a piece of the animal’s ear.

பியர்சின் கதை நான் எழுதும் கதை மாதிரி இருக்கிறது. கடைசி வரிகள் கிடைத்துவிட்டன, அந்த வரிகளை நோக்கி போகிறார், பில்டப் எல்லாம் அவ்வளவு சரியாக வரவில்லை. ஆனால் அசோகமித்ரன் கனகச்சிதமாக, ஒரு வரி அதிகம் இல்லாமல், ஒரு வரி குறைவாகவும் இல்லாமல் கதையை செதுக்கி இருக்கிறார். கதையின் இறுதியில் அய்யய்யோ என்று மனம் பதறுவது அவர் கதையில்தான் நடந்தது. பியர்சின் கதையில் அட, நல்ல முடிவு என்று தோன்றியது, அவ்வளவுதான்.

இரண்டையும் படித்தவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தக் கதைகளை எப்படி ஒப்பிடுவீர்கள்?

பிற்சேர்க்கை: உங்களுக்கு நினைவு வரும் காப்பிகளைப் பற்றி சொல்லுங்களேன்! (காப்பியும் படிக்கிற மாதிரி இருக்க வேண்டும். :-))

அசோகமித்திரன் இந்தக் கதையைப் பற்றி சொல்வது:

கதை மூலம் நான் என்ன சொல்ல முயற்சி செய்திருக்கிறேன் என்று அன்று விளங்கவில்லை. இன்று புரிகிறது: எவ்வளவு உயரிய குரு கிடைத்தாலும், சீடன் எவ்வளவுதான் முனைப்பாக இருந்தாலும் வாழ்க்கை சில தருணங்களில் அவனுக்கு முழுப்பயனை அளிக்க மறுத்துவிடுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன், தமிழ் சிறுகதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:

கல்கி vs தேவன் – அசோகமித்ரன் ஒப்பீடு

சில வருஷங்களுக்கு முன்னால் அசோகமித்திரன் கல்கியையும் தேவனையும் ஒப்பிட்டு எழுதிய ஒரு கட்டுரைக்கு சுட்டி கொடுத்திருந்தேன். மேலோட்டமான கட்டுரை என்று குறையும் பட்டிருந்தேன். அது அவர் காதில் பட்டதோ என்னவோ தெரியாது, நல்ல ஒப்பீடு ஒன்றை எழுதி இருக்கிறார். பசுபதி சாருக்கு நன்றி!

குறிப்பாக இந்தக் கருத்துக்களை நானும் (அனேகமாக) வழிமொழிகிறேன்.

கல்கி திடுக்கிடும் திருப்பங்களிலும் நாடகத்தனமான திருப்பங்களிலும் அவரது கதைகளை விரித்துச் சென்றார். அவருடைய பாத்திரங்கள் ஸ்டீரியோடைப்ஸ் என்ற பிரிவில் வரக் கூடியவை. அவற்றின் மேன்மை, சிறுமை, கயமை எல்லாமே ஒற்றைப் பரிமாணம் கொண்டவை. உயர்ந்த மதிப்பீடுகளையும் இலக்குகளையும் வைத்து எழுதினார் என்றாலும் கூட அவருடைய பாத்திரங்கள் பொம்மைத்தனம் கொண்டவை. ஆனால் அவர் தேர்ந்தெடுத்த பாத்திரங்கள் வாசகர் கற்பனையைத் தூண்டக் கூடியவை. சிவகாமி, நாகநந்தி போன்ற பாத்திரங்கள் வாசகர்களால் விரிவாக்கப்பட்டவை. கல்கியின் நிறையப் பாத்திரங்கள் அவருடைய பல இதரப் பாத்திரங்களை ஒத்திருக்கும். அவருக்கு முன்மாதிரியாக ஆங்கில, ஃப்ரெஞ்சு ஆசிரியர்களில் கூற வேண்டுமானால் வால்டர் ஸ்காட் மற்றும் அலெக்சாண்டர் டூமாசைக் கூறலாம்.

தேவன் கல்கியின் சமகாலத்தவரானாலும் இலக்கிய உத்திகளில் அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர். சாகசப் பார்வை தவிர்த்து யதார்த்தப் போக்கில் உலகையும் பாத்திரங்களையும் சித்தரிக்க முயன்றவர். இதனால் தேவனால் ஏராளமான பாத்திரங்களை படைக்க முடிந்தது. எல்லாப் பாத்திரங்களும் தனித்தனியானவை. தனித்தன்மை கொண்டவை. பழக்க வழக்கங்கள், பேச்சு முதலியவற்றில் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுபவை. இலக்கிய ரீதியாக கல்கியை விட உயரிய இடம் தேவனுக்கு அளித்தேயாக வேண்டும். கல்கி அளவுக்கு அவர் பிரபலம் அடைய முடியவில்லை என்றால் கல்கியின் கதைகள் இருந்த மயக்க அம்சம் (fantasy) தேவன் கதைகளிலும் பாத்திரங்களிலும் கிடையாது. கல்கியின் தொடர்கதைகளைப் படித்துவிட்டு சிவகாமி, விக்கிரமன், நந்தினி, நாகநந்தி என்று பலர் புனைபெயர் வைத்துக் கொண்டார்கள். சாம்பு என்றும் சந்துரு என்றும் ஜகன்னாதன் என்றும் சுதர்சனம் என்றும் யாரும் தன்னைப் புது நாமகரணம் செய்து கொள்ளவில்லை. இந்த விதத்தில் தேவன் சார்லஸ் டிக்கன்ஸ் வகை எனலாம்.

கல்கி, தேவன் இருவருக்கும் நிறைய நகைச்சுவை உண்டென்பார்கள். கல்கியுடையது கிண்டல் வகையைச் சார்ந்தது. தேவனுடையது மனித இயல்பின் வினோதங்களைச் சித்தரிப்பது.

அசோகமித்திரன் சொல்லும் குறைகளை எல்லாம் – பொம்மைத்தனம் உள்ள பாத்திரங்கள் இத்யாதி – கல்கி பொன்னியின் செல்வனில் தாண்டி இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அலை ஓசையிலும் தாண்ட முயற்சித்திருக்கிறார். ஆனால் அவரது 99 சதவிகிதம் சிறுகதைகளிலும் குறுநாவல்களிலும் தியாகபூமியிலும் கள்வனின் காதலியிலும் பார்த்திபன் கனவிலும், ஏன் சிவகாமியின் சபதத்திலும் கூட வரும் பாத்திரங்கள் பொம்மைத்தன்ம் உள்ளவையே. சி. சபதத்தில்தால் அவர் தனது எல்லைகளைத் தாண்ட முயற்சித்திருக்கிறார். பொ. செல்வனில் வெற்றி அடைந்திருக்கிறார்.

தேவனின் பாத்திரங்களிலும் அனேக ஸ்டீரியோடைப்கள் உண்டு. மிஸ்டர் வேதாந்தத்தின் சுவாமிக்கும் ஸ்ரீமான் சுதர்சனத்தின் முதலாளிக்கும் என்ன வித்தியாசம்? கோமதியின் காதலனில் இல்லாத ஸ்டீரியோடைப்பா? அவர் அனேகமாக எழுதியது வாரப் பத்திரிகை தொடர்களே, வணிக இலக்கியமே. சில சமயங்களில் வணிக எழுத்து இலக்கியமாகி விடுகிறது – துப்பறியும் சாம்புவைப் போல, ஸ்ரீமான் சுதர்சனத்தைப் போல. கல்கிக்கும் அதேதான். இருவருமே வணிக எழுத்தைத்தான் எழுத விரும்பினார்கள், பிரபலமாக இருக்க வேண்டும், நிறைய வாசகர்களை சென்றடைய வேண்டும் என்றுதான் விரும்பினார்கள். ஆனால் வாரப்பத்திரிகை எழுத்தின் தடைகளை, எல்லைகளை மீறி அவர்களது திறமை இலக்கியமாகப் பரிமளிக்கிறது என்றுதான் கருதுகிறேன்.

அக்கப்போர் வேண்டுமென்பவர்களுக்காக: கல்கி இருந்த வரை தேவன் விகடனில் தொடர்கதை எதுவும் எழுதவில்லையாம். தேவனின் பேர் இல்லாமல்தான் அவரது நிறைய எழுத்து வருமாம். விகடனில் வேலை செய்த பலருக்கும் கல்கி ஆசிரியராக இருந்தபோது சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை, தேவன் காலத்திலும் இது தொடர்ந்ததாம்.

அசோகமித்திரனின் ஒப்பீட்டை கட்டாயம் படித்துப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம், தேவன் பக்கம், கல்கி பக்கம்

அசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் அசோகமித்திரன் மீது வைத்திருக்கும் மதிப்பை விட ஜெயமோகன் பல மடங்கு அதிக மதிப்பு வைத்திருப்பவர். எனக்கு அசோகமித்திரன் வெறும் எழுத்தாளர் மட்டுமே. ஜெயமோகனுக்கு அவர் ரோல் மாடல். அவரது அறையில் இருக்கும் ஒரே எழுத்தாளரின் படம் அசோகமித்திரனுடையதுதான் என்று சொல்லி இருக்கிறார். வாசகராகவும் அவர் என்னை விடவும் அசோகமித்திரனை சிறப்பாக புரிந்து கொண்டிருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. அவர் என்னை விடவும் சிறப்பாகப் புரிந்து கொண்டிருப்பார் என்று நான் சொல்வது அவையடக்கத்தால் அல்ல. அவையடக்கம் பொய்க்கு ஒரு euphemism, பொய் சொல்லி எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. ஜெயமோகன் என்னை விடத் தேர்ந்த வாசகர் என்பதை நான் நன்றாகவே அறிவேன், அவ்வளவுதான்.

ஆனால் அசோகமித்திரனைப் பற்றி அவர் சமீபத்தில் முன் வைத்திருக்கும் கருத்துக்களை நான் வன்மையாக மறுக்கிறேன். அவருடைய தவறான அணுகுமுறையின் ஊற்றுக்கண் இந்த வரிகளில் முழுமையாக வெளிப்படுகிறது.

அசோகமித்திரனால் … வரலாற்றின் பெருந்தோற்றத்தை அளிக்கும் ஒரு நாவலை எழுதிவிடமுடியுமா? அல்லது அவ்வரலாற்றை பிறிதொன்றாக மாற்றி எழுதிவிடமுடியுமா? இவற்றினூடாகச் சென்று மானுடதரிசனம் ஒன்றை முன்வைக்க முடியுமா? முடியாது.

இது கேனத்தனமான கேள்வி. அடுத்த கேள்வி என்ன? பிராட்மனால் வேகமாக பந்து வீச முடியுமா என்று கேட்கப் போகிறாரா? பிராட்மனால் முடியாதுதான், அதனால் அவர் முழுமையான கிரிக்கெட் வீரர் இல்லை என்று முடிவெடுப்பாரா? ஜேசுதாசால் ஹிந்துஸ்தானி சங்கீதம் பாட முடியாது, அதனால் அவர் குறை உள்ள பாடகரா? பிகாசோ இம்ப்ரஷனிச முறையில் வரையவில்லை அதனால் அவரது மேதமை குறைப்பட்டதா? சரி விடுங்கள் ஜெயமோகனுக்கு கத்தி சண்டை போடத்தெரியாது, அதனால் அவரது மேதமை குறை உள்ளதா?

அசோகமித்திரன் எந்தப் பாணியில் எழுதுவார், எதைப் பற்றி எழுதுவார் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். ஜெயமோகன், வேண்டாம் டால்ஸ்டாய் ஏன் தண்ணீர் போன்ற ஒரு நாவல் எழுதவில்லை என்று கேட்பது எத்தனை பிதற்றலாக இருக்குமோ அதே அளவு பிதற்றல்தான் இது.

மேலும்

இப்போது சில ஆண்டுகளாக அசோகமித்திரன் கதைகளை உதாரணமாகக்கொண்டு ஒருவகையான மேட்டிமைவாதம் இலக்கியத்தில் மறைமுகமாக முன்வைக்கப்படுகிறது. அது நகர்சார் மேட்டிமைவாதம், உள்ளடங்கிய சாதிய மேட்டிமைவாதம். தங்களை அதிநுட்பர்களாகக் காட்டிக்கொள்ளும் முனைப்பின் ஒரு பகுதி. கூடவே நடுத்தரவர்க்க, நகர்ப்புற வாழ்க்கை அன்றி எதையும் அறியாத மொண்ணைத்தனத்தின் வெளிப்பாடு.

என்கிறார். எனக்குத் தெரியாது, இருக்கலாம். அப்படிப்பட்ட மேட்டிமை வாதத்தை விமர்சிக்க ஜெயமோகனே தன்னை அறியாமல் மேட்டிமைவாதத்தை பயன்படுத்துகிறாரோ என்று தோன்றுகிறது. கடல் தேன் துளியை விடப் பெரியது என்பது மேட்டிமைவாதமேதான்.

ஜெயமோகன்

ஆனால் பார்வை, கதைச்சூழல் ஆகிய இரண்டினாலும் எல்லை வகுக்கப்பட்டது அசோகமித்திரனின் உலகம். அதில் பெரிய தத்துவ தரிசனங்கள் நிகழமுடியாது. ஒட்டுமொத்த வரலாற்றுச் சித்திரம் உருவாக முடியாது. கவித்துவம் மிகக்குறைந்த அளவிலேயே நிகழ முடியும். மானுட உள்ளத்தின் அரிதான சிடுக்குகளும் கொந்தளிப்புகளும் வெளிப்பட முடியாது. உலகமெங்கும் பேரிலக்கிய ஆக்கங்கள் இவற்றால் ஆனவை. அவற்றுக்கு வெளியேதான் அசோகமித்திரனின் உலகம் நிலைகொள்ளமுடியும்.ஒரு மாற்றாக.

என்கிறார். சில வரிகளை – அசோகமித்திரனின் உலகத்திற்கு எல்லைகள் உண்டு, அதில் ஒட்டுமொத்த வரலாற்று சித்திரம் இல்லை – என்பதை நானும் ஏற்கிறேன். ஆனால் அவரது உலகத்தில் பெரிய தத்துவ தரிசனங்கள் நிகழ முடியாதா? என்ன சொல்கிறீர்க்ள் ஜெயமோகன்? ‘காலமும் ஐந்து குழந்தைகளும்‘-இல் இல்லாத தத்துவ தரிசனமா? ‘பார்வை‘ சிறுகதையில் இல்லாத தரிசனமா? (அந்த சிறுகதையில் உள்ள தரிசனத்தை எனக்குக் காட்டிக் கொடுத்ததே நீங்கள்தான்) கவித்துவம் மிகக் குறைந்த அளவில் நிகழுமா? கவிதை அறியாத என்னையே அசோகமித்திரனின் எழுத்தில் உள்ள கவித்துவம் கவர்கிறது, நீங்கள் இப்படி சொல்கிறீர்களே? மானுட உள்ளத்தின் அரிதான சிடுக்குகளை மட்டுமே அசோகமித்திரன் எழுதி இருக்கிறார், அதுவே அவரது கதைக்களம், subtle சிடுக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டீர்களா என்ன? அசோகமித்திரனின் எழுத்து பேரிலக்கியம், அவர் எதற்காக பேரிலக்கியத்துக்கு வெளியே மாற்றாக நிற்க வேண்டும்?

இன்றைய இலக்கியம் இவ்வியல்புகளுக்கு நேர் எதிரானது. இவற்றை மறுத்து முன்னகர்வது. அவர் சென்றகாலத்தின் இலக்கியச் சாதனையாளர். இன்றைய எழுத்தின் முன்மாதிரியாக எவ்வகையிலும் அவரைக் கொள்ளவியலாது.

நான் இந்த கருத்தை கடுமையாக மறுக்கிறேன். அசோகமித்திரன் நவீனத்துவத்தின் முகம்தான். இன்றைய இலக்கியம் நவீனத்துவத்தை விட்டு நகர்ந்திருக்கிறதுதான். ஆனால் அவர் எல்லா காலத்துக்குமான சாதனையாளர். விக்டர் ஹ்யூகோவின் காலத்திற்குப் பிறகு இலக்கியம் Romanticism-த்தை விட்டு நகர்ந்தது என்பதால் ஹ்யூகோ சென்ற காலத்தின் இலக்கிய சாதனையாளர் என்று சொல்ல மாட்டீர்கள். ஷேக்ஸ்பியர் நாடகம் போலக் கூடத்தான் இன்று யாரும் எழுதுவதில்லை, அதனால் ஷேக்ஸ்பியர் காலாவதி ஆகிவிடவில்லை. நாளை உணர்ச்சி கொந்தளிக்கும் எழுத்தை விட்டு கூட இலக்கியம் நகரலாம். அதற்காக நீங்கள் நேற்றைய உலகின் இலக்கிய சாதனையாளர் ஆகிவிட மாட்டீர்கள், என்றைக்குமான சாதனையாளராகத்தான் நின்றிருப்பீர்க்ள்.

Current literary trends – nay, current literary fads – cannot determine literary achievement.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம்

அசோகமித்திரனுக்கு மிகைப்படுத்தப்பட்ட அஞ்சலி – ஜெயமோகன்!

எனக்கு யூட்யூப் உரைகளையோ, ஆடியோ பதிவுகளையோ உட்கார்ந்து கேட்கும் பொறுமை கிடையாது. ஆனால் ஜெயமோகனின் அஞ்சலி உரை நெகிழ வைத்தது. அசோகமித்திரன் போன்ற ஒரு மாபெரும் எழுத்தாளர் எத்தனை லௌகீக சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது, கார் டிரைவராக, அலுவலகத்தில் ஏறக்குறைய ஒரு பியூனாக வேலை செய்து, மனைவி அப்பளம் போட்டு விற்று வாழ்க்கையின் தேவைகளை சமாளித்தது என்று கேட்கும்போது இத்தனை தடைகளை மீறி இலக்கியம் படைத்திருக்கிறாரா என்று அசோகமித்திரன் மேல் உள்ள மரியாதை மேலும் மேலும் அதிகரித்தது. அசோகமித்திரன் என்ற எழுத்தாளர் மாபெரும் மேதை என்றால் அசோகமித்திரன் என்ற மனிதர் மாபெரும் லட்சியவாதி என்று தோன்ற வைத்த உரை. இந்த மாபெரும் லட்சியவாதியின் எழுத்தில் அவ்வப்போது தெரியும் நிராசை, cynicism எல்லாவற்றுக்கும் இந்தத் தடைகள்தான் ஊற்றுக்கண்ணோ?

ஆனால் அசோகமித்திரனின் மகன் ராமகிருஷ்ணன் இவை தகவல் பிழைகள் என்று மறுத்திருக்கிறார். அவருக்கு குசும்பு அதிகம். ஜெயமோகன் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று தகவல் கொடுத்தால் அது அவரது தவறான ‘கருத்து’ என்கிறார். என் தந்தை காரோட்டக் கற்றுக் கொள்ள முயன்றார், ஆனால் கற்றுக் கொள்ளவில்லை என்று அசோகமித்திரனின் மகனே சொல்லும்போது அசோகமித்திரன் இந்துமதியின் குழந்தைகளை காரில் வைத்து ஓட்டிக் கொண்டு சென்றதை தானே பார்த்ததாக ஜெயமோகன் சொல்வது நடந்திருக்க வாய்ப்பில்லைதான். கார் சரியாக ஓட்டத் தெரியாதவரை யாரும் ட்ரைவராக வைத்துக் கொள்ளப் போவதில்லை.

தன் எழுத்தில் மிகைப்படுத்துதல் இருக்கவே கூடாது, அடக்கியே வாசிக்க வேண்டும் என்று காலம் பூராவும் முயன்ற ஒரு எழுத்தாளருக்கு செலுத்தும் அஞ்சலி மிகைப்படுத்தப்பட்டிருப்பது நகைமுரணாகத்தான் இருக்கிறது.

ஆனால் ஜெயமோகனுக்கு அசோகமித்திரன் மேல் உள்ள மரியாதையை நான் நேருக்கு நேர் பேச்சில் பல முறை கேட்டிருக்கிறேன். அது போலித்தனமற்ற, உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் உண்மையான உணர்வு என்பதை அவர் பேசுவதை ஒரு முறை கேட்டிருந்தால் கூட, அல்லது அசோகமித்திரனைப் பற்றி அவர் எழுதி இருக்கும் ஒரு கட்டுரையைப் படித்தால் கூட தெள்ளத் தெளிவாக புரியும். ஜெயமோகன் எங்கோ எதையோ கேட்டிருக்கலாம், அதை இன்னும் கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்லிவிட்டார் என்பது அவரது உணர்வைப் பொய்யாக்கிவிடாது. அட சுவாரசியத்துப்படுத்துவதற்காக தெரிந்தேதான் சொன்னார் என்றே வைத்துக் கொள்வோமே, அது அவர் சொல்லும் மற்ற 99 விஷயங்களையும் பொய்யாக்கிவிடுமா என்ன?

அவர் சொன்னது தவறு, தகவல் பிழை என்று சுட்டிக் காட்டுங்கள். சரி அவர் மனதறிந்து தன் அஞ்சலி கவனிக்கப்பட வேண்டும், பேசப்பட வேண்டும் என்பதற்காக பொய்யே சொன்னார் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் அசோகமித்திரனை என்ன கொச்சைப்படுத்திவிட்டார், கேவலப்படுத்திவிட்டார்? அசோகமித்திரன் கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்துவிட்டாரா? அவருடைய புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்று அவருக்கு எக்கச்சக்கமாக ராயல்டி வந்ததா? அவர் இப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்று ஜெயமோகன் சொல்கிறார்; இல்லை இல்லை அவர் இப்படி கஷ்டப்படவில்லை, வேறு மாதிரி கஷ்டப்பட்டார் என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறீர்கள், அவ்வளவுதானே! இந்தத் தகவல் பிழை, அல்லது பொய், அவரது உரை தரும் உணர்வை மாற்றுகிறதா என்ன?

ஆனால் இணையத்தில் வரும் கமெண்டுகளைப் பார்த்தால் இத்தனை காழ்ப்பா என்று தோன்றத்தான் செய்கிறது. அசோகமித்திரன் குடும்பத்தினர் கூட அவரைப் போலவே அடக்கித்தான் வாசிக்கிறார்கள், ஆனால் கிடைத்தது சான்ஸ் என்று நிறைய பேர் – குறிப்பாக விமலாதித்த மாமல்லன் – குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயமோகனுடன் எனக்கு கடந்த ஓரிரு வருஷங்களில் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருக்கின்றன. என் மதிப்பிற்குரிய சில நெருங்கிய நண்பர்களுக்கு அவரோடு மனவிலக்கே ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அந்த மனஸ்தாபங்கள் நான் மதிக்கும் மனிதர்களில் ஜெயமோகனும் ஒருவர் என்ற நிலையை எந்த விதத்திலும் மாற்றவில்லை. அவரும் மனிதர்தான், விண்ணிலிருந்து நேராக இறங்கி வந்த தெய்வம் அல்லர், அவருடைய அணுகுமுறையிலும் தவறுகள் ஏற்படக் கூடும் என்பதைத்தான் இந்த மனஸ்தாபங்கள், மிகைப்படுத்தல்கள் எனக்கு காட்டுகின்றன.

ஆனால் ஜெயமோகனின் சாதனைகளில் பத்து சதவிகிதமாவது செய்த பிறகுதான் எனக்கு அவரை குறை கூறும் அருகதை வரும் (அவரைக் குறை கூறும் அருகதை, அவரது கருத்துகளை விமர்சிப்பதற்கான அருகதை அல்ல) என்று நான் உறுதியாக நம்புகிறேன். அப்படி குறை கூறும் அருகதை இன்று இருந்திருந்தாலும் இதை உணர்ச்சிவசப்பட்ட ஒரு தருணத்தில் தான் கேட்ட விஷயத்தை தவறுதலாக கண்டேன் என்று சொல்லிவிட்டார் என்று மேலேதான் போயிருப்பேன். சாதனைகள் என்று நான் இங்கே சொல்வது இலக்கியத்துக்கு ஆக்கபூர்வமான ஒரு இயக்கத்தை உருவாக்கி வழி நடத்தி செல்வதைத்தான், அவரது எழுத்தை அல்ல. அவரது எழுத்தின் தரத்தில் ஒரு சதவிகிதத்தை அடைந்தால் அதுவே எனக்கு பெரிய சாதனை.

என்ன,

நான் அடைந்த நினைவுப்பதிவு மற்றும் என் காட்சிப்பதிவு பிழையாக இருக்கலாமென்றும் ஒப்புகிறேன்

என்று அரைகுறையாக இருக்கலாம், நடந்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லாமல், ஆம் தவறுதலாக சொல்லிவிட்டேன் என்று அவர் சொல்லி இருக்கலாம் இருக்க வேண்டும்.

அசோகமித்திரனை நான் கொச்சைப்படுத்துகிறேன், விளம்பரம் தேடுகிறேன் என்றெல்லாம் அவரது குடும்பத்தினர் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்

என்பது இன்னொரு தகவல் பிழை என்று தோன்றுகிறது. ஃபேஸ்புக்கில், இணையத்தில் அப்படி எதுவும் காணப்படவில்லை. சில முறை ஜெயமோகன் அவரது பதிவுகளுக்கு ஒரு எடிட்டர் மற்றும் fact-checker வேண்டுமென்று தோன்ற வைப்பார், அப்படிப்பட்ட ஒரு தருணம் இது.

நான் இப்படி இது சின்ன விஷயம்தான் என்று எண்ணுவதை என் மதிப்பிற்குரிய, நெருங்கிய நண்பர்கள் சிலர் வன்மையாக மறுக்கிறார்கள், என் மேல் கொஞ்சம் வருத்தப்படுகிறார்கள். என்ன செய்ய, என் சிந்தனை முறை அப்படித்தான்.

பின்குறிப்பு:
மனஸ்தாபங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும், அசோகமித்திரன் பற்றி அவர் சொல்லி இருக்கும் சில கருத்துகளிலிருந்தும் நான் பெரிதும் வேறுபடுகிறேன்.

சென்னையின் பிராமண வட்டம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனங்களால் ஆனது. அவை நம் காலத்தில் வாழ்ந்த மேதையை கைவிட்டன என்பது வரலாறு

என்று எழுதி இருக்கிறார். பிராமணர்கள் அசோகமித்திரன் பிராமணர் என்ற காரணத்தால் அவருக்கு உதவி செய்திருக்க வேண்டுமா என்ன? எஸ்.எஸ். வாசனுக்கு அசோகமித்திரன் பிராமணர் என்ற காரணத்தால் அவர் மீது ஒரு soft corner இருந்திருக்க வேண்டுமா? ஏன் ஏவிஎம் செட்டியார் அவரது புத்தகங்களைப் பதித்திருந்தால் கசக்குமா? அப்படி அவரை பிராமணர் என்பதற்காக சென்னை பிராமண வட்டம் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று ஜெயமோகன் கருதினால் திராவிட இயக்கத்து ‘இழிமகன்கள்’ அவரை பிராமணர் என்பதற்காக நிராகரிப்பதில் என்ன தவறு காண்கிறார்? இன்று இணையத்தில் இந்த விஷயத்துக்காக அவரைக் கழுவி கழுவி ஊற்றுவதில் முதல் இடம் விமலாதித்த மாமல்லனுக்குத்தான். வி. மாமல்லனின் அணுகுமுறை எனக்கு இசைவானது அல்ல. ‘ங்கொய்யால எங்கிட்டயா! உங்க எல்லாரையும் தோலுரித்து உங்க உண்மை சொரூபத்தை காட்டுவேண்டா!’ என்பதெல்லாம் ஒவ்வொரு சின்னத் தவறையும் ஊதிப் பெருக்க வைக்கிறது. ஆனால் அவர் தன் மனதுக்கு நேர்மையாக மட்டுமே கருத்துகளைத் தெரிவிக்கிறார் என்பதிலோ, சின்னதோ பெரியதோ, தவறைத்தான் பொதுவாக சுட்டிக் காட்டுவார் என்பதிலோ எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவரும் பரீக்‌ஷா ஞானியும் எந்த பிராமண வட்டத்தின் குற்ற உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. சுத்தப் பிதற்றல்.

பின்-பின்குறிப்பு: தமிழ் எழுத்தாளர்களில் இருவர் – புதுமைப்பித்தன், அசோகமித்திரன் – மேதைகள் என்று ஜெயமோகன் தன் அஞ்சலியின் ஆரம்பத்தில் சொல்கிறார். மூன்று மேதைகள் – ஜெயமோகனையும் சேர்த்து – என்பது என் அபிப்ராயம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம், ஜெயமோகன் பக்கம்

அசோகமித்ரன் மறைவு

அசோகமித்ரனை நான் சந்தித்ததில்லை. சந்திக்க முயன்றது கூட இல்லை. முன்னே பின்னே தெரியாதவர்கள் வந்து தொந்தரவு கொடுப்பதை மரியாதைக்காக வெளியே சொல்லாமல் சகித்துக் கொள்வார் என்று நினைப்பு. ஆனால் அவரைத்தான் என் மனதுக்கு நெருக்கமான எழுத்தாளராக எப்போதும் உணர்ந்திருக்கிறேன். இன்று பெரும் இழப்பு ஏற்பட்ட மாதிரி உணர்கிறேன்.

அவரை எனக்குப் பிரியமானவராக உணர்ந்த கணம் நன்றாக நினைவிருக்கிறது. என் சிறு வயதில் – அசோகமித்ரனைப் பற்றி எந்தவிதப் பிரக்ஞையும் இல்லாத வயதில் – குமுதத்தில்? (இல்லை வேறு ஏதாவது வாரப் பத்திரிகையா?) ஒற்றன் நாவலின் ஒரு பகுதியைப் படித்தேன். மனிதர் டென்வரில் இருந்து சான் ஃப்ரான்சிஸ்கோ போக பஸ் பிடிக்க வேண்டும். நண்பர் பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டுப் போய்விட்டார். ஏழு மணிக்கோ என்னவோ பஸ். பஸ்ஸைக் காணோம். சான் ஃப்ரான்சிஸ்கோவுக்கு நேரத்துக்குப் போகவில்லை என்றால் எல்லா திட்டங்களும் பாழாகிவிடும். நண்பர்களுக்கு நிறைய சிரமம் ஏற்படும். இறக்கிவிட்ட நண்பரோ போய்விட்டார். புது இடம், என்ன செய்வது? ஏழு மணிக்கு லாரி மாதிரி ஒரு வண்டி வருகிறது. ட்ரைவர் பஸ்ஸுக்காக காத்திருக்கிறாயா, இதுதான் பஸ் என்கிறார். அவ்வளவுதான் கதை. இதெல்லாம் ஒரு கதையா என்ற கடுப்பு ஏற்பட்டது. என் இருபத்தைந்து வயதில் பீஹார் மாகாணத்தில் தன்பாதிலிருந்து சிந்திரிக்கு செல்ல பஸ்ஸுக்கு காத்திருந்த போது பெரிய ட்ராக்டர் மாதிரி ஒரு வண்டி வந்து இதுதான் பஸ் என்று எனக்குப் புரிந்த அதே கணத்தில்தான் இந்தக் கதை புரிந்தது. என்றோ எப்போதோ படித்த கதை அப்போது சரியாக நினைவு வந்து புரியவும் புரிந்தது எனக்கே அதிசயமாகத்தான் இருக்கிறது. இந்தக் கணத்தைத்தான் கதையாக எழுதி இருக்கிறார் என்று தெரிந்தபோது இத்தனை நுணுக்கமாக, நுட்பமாக ஒருவர் வாழ்க்கையைப் பார்த்திருக்கிறார் என்று ஏற்பட்ட பிரமிப்புதான் எனக்கும் அவருக்கும் உள்ள ‘உறவின்’ தொடக்கப் புள்ளி.

அவருடைய பிரபலம் ஆகாத பல கதைகளுக்கு நான் பரம ரசிகன். திருப்பம் கதையில் கிராமத்தானுக்கு நகரத்தில் கார் ஓட்டும் கலை கைவரும் அந்த ஒரு கணத்தைப் பற்றி எழுதி இருப்பார். என் வாழ்விலும் அப்படி ஒரு கணம் உண்டு. அப்படி சில பல திறமைகள் கைகள் வந்த ஆறேழு கணங்கள் எனக்கு உண்டு. இருவர் என்ற குறுநாவல் எனக்கு மிகவும் பிடித்தமானது. வைத்தீஸ்வரன் கோவில் தாசிக்கும் அவளை வைத்திருந்தவன் மகனுக்கும் உள்ள பந்தம் பற்றிய கதை.

புகழ் பெற்ற பிரயாணம் கதையின் கடைசி வரியின் தாக்கம் என்றைக்கும் மறக்கப் போவதில்லை. ‘வாத்யாரே, நீ மேதை!’ என்று தோன்றிய கணம்.

எனக்கு இப்போது எழுதவே பிடிக்கவில்லை. என் வருத்தத்தை யாருக்காக ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறேன்? வாத்யாரே, நீ மேதை என்பதோடு முடித்துக் கொள்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம், அஞ்சலிகள்

அசோகமித்ரன் பேட்டி

விகடன் தடம் இதழில் வந்திருக்கிறது. மிகவும் நல்ல பேட்டி. நிறைவாழ்வுக்குப் பிறகு எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாத பெருசு. விகடனுக்கு நன்றி!

asokamithran86 வயது அசோகமித்திரன்! எங்களை எதிர்பார்த்து பால்கனியில் நின்றிருந்தார். பார்த்துச் சிரித்து, கைகளை வாஞ்சையோடு அசைத்து, மேலே வரச் சொன்னார். கதவை முறையாகச் சாத்தி, மின்விசிறியை அளவாக வைத்து, மிக மிக மெல்லிய குரலில் நலம் விசாரிக்கிறார். ஜன்னலுக்கு வெளியே சில நொடிகள் வெறித்துப் பார்த்தவர், “பக்கத்துக் கட்டடத்தில ரெண்டு பறவைகள் இருந்துச்சு. ஒண்ணு எங்கோ காணாமப் போயிடுத்து. சில நாட்களாவே அதைத் தேடி விடாம சத்தம் போட்டுட்டிருந்த இன்னொரு பறவையையும் இன்னிக்குக் காலையில இருந்து காணல. இந்த அமைதி என்னவோ பண்ணுது” என்றார். அந்த அமைதியை உணர்ந்தோம். பின், மௌனம் கலைத்தோம். தன் நினைவு அடுக்குகளிலிருந்து தேடித் தேடிக் கோத்து சொற்களாக்கி வெகு நிதானமாகப் பேசுகிறார் அசோகமித்திரன்.

‘உடம்புக்கு முடியாமப் போனதுக்கப்புறம் ஞாபகங்கள் எல்லாம் குறைஞ்சு போயிடுத்து. இருபது முப்பது வருஷ நினைவுகள் இப்போ என்னிட்டயே இல்லை. பல விஷயங்களை நினைவுபடுத்தவும் கஷ்டமா இருக்கு. இப்போ முதுகுத் தண்டும் பிரச்னை கொடுத்துட்டது. அப்பப்போ எந்திரிக்க முடியலை. உப்பு சத்து உடம்புல ரொம்ப குறைஞ்சு போச்சு. எதுவுமே நினைவுல சரியா நிக்கறதில்லை.’

‘மறந்துபோனவற்றில் இருந்து எதையேனும் நினைவுபடுத்த முயல்கிறீர்களா?’

‘இல்லை. ஸ்ட்ரெய்ன் பண்ண முடியலை. அப்படி முக்கியத்துவமான நினைவுகளும் என் கடந்த கால வாழ்க்கையில இல்லையே!’

‘இரவில் கனவுகள் வருகின்றனவா?’

‘ஒன்பதரை மணிக்குப் படுத்துடுவேன். மாத்திரை சாப்பிடுறதுனால, தூக்கம் வந்திரும். ஆனா, காலை வரைக்கும் தூங்க முடியாது. ரெண்டரை மணிக்கு விழிப்பு வந்துடுறது. அதுக்கப்புறமான இடைப்பட்ட நேரத்தில கனவுகள் வருது. மனசுக்குக் கஷ்டம் தர்ற, அவதி தர்ற கனவுகளாக வருது.”

‘எப்படியான கனவுகள்?’

‘அந்தக் காட்சிகளை வெளக்கிச் சொல்ல முடியலை. ஆனா, அந்த மொத்தக் கனவையும் ஒரு உணர்வா சொல்லணும்னா, ரொம்பக் கஷ்டப்படுத்துகிற கனவுகள். திறந்திருக்கிற கதவைச் சாத்தணும்னு தோணும். ஆனா, எழுந்திருக்க முடியாது. அந்த மாதிரி கனவுகள் அதிகமா வரும். அந்த ஜோடிப் பறவைகளைப் பத்தி சொன்னேன்ல, நான் இந்த ரூம்ல ஃபேன் பயன்படுத்தறது இல்ல. எங்கே ஜன்னல் திறந்திருந்து, பறவைங்க உள்ளே வந்து ஃபேன்ல அடிபட்ருமோனு ஒரு பயம். இதெல்லாம் சேர்ந்து, மனசை சங்கடப்படுத்தும்படியான கனவுகள் நிறைய வருது.’

‘இது வரை எழுதிய உங்களது படைப்புகள் குறித்து நிறைவாக உணர்கிறீர்களா?’

‘இல்லை. பலர் என் படைப்பை வாசிக்கறது சந்தோஷம்தான். ஆனா, அதுக்காக எதையோ பெருசா சாதிச்சிட்டதா நான் நினைக்கலை. அப்படி பெருசா ஒண்ணும் சொல்றதுக்கில்லை.’

“உங்களுடைய எழுத்துகளை ‘அதிகம் அதிர்ந்து பேசாதவை’ என்று சுந்தர ராமசாமி ஒருமுறை சொல்லி இருக்கிறார். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

‘வேண்டாமே! அதிர்வு எதுக்கு? யாருடைய எழுத்தும் இப்படித்தான் இருக்கணும்னு கிடையாதே. ஒவ்வொரு காலகட்டத்திலும் இலக்கியத்துக்கான பொதுக்குணமா ஒன்றைக் குறிப்பிடுவாங்க. அது காலத்துக்கும் மாறிக்கிட்டே இருக்கும். அதேசமயம், அதிகமா இல்லேன்னாலும் அதிர்ந்து பேசுற விஷயங்கள் என்னோட எழுத்திலயும் இருக்கத்தான் செய்யுது.

‘உங்களுடைய புனைவுகளில் நீங்கள் இருக்கிறீர்களா?’

‘நானே கதாநாயகனாகவா?’

‘ஆமாம். அல்லது ஒரு பாத்திரமாகவேனும்…’

‘என் வாழ்க்கை சார்ந்து, என் குடும்பம் சார்ந்து, நிறைய விஷயங்களைப் பயன்படுத்தியிருக்கேன். என் சகோதர, சகோதரிகளோட வாழ்க்கைச் சூழ்நிலைகளைப் புனைவா எழுதி இருக்கேன். ஆனா, ஒரு கதையில இடம் பெறக் கூடிய தகுதியுள்ள கதாபுருஷனா என்னை நான் நினைச்சுப் பார்த்ததே இல்லை. ஒரு கதாநாயகனா ஆகறதுக்கான ஆற்றல் என்கிட்ட இல்லை. கதை சொல்றவனா இருந்துட்டா, போதும்னு நினைக்கிறேன்.’

‘உங்கள் கதைகளிலும், மேடைப் பேச்சுகளிலும் ஒரு மெல்லிய நகைச்சுவை உணர்வு இருக்கும். அதை எப்படிக் கைக்கொண்டீர்கள்?’

“எனக்குத் தெரியலை. அந்தந்த இடங்களில் உண்மையைச் சொல்றேன் (சிரிக்கிறார்). ஒரு பெரிய அரங்கம்; நிறையக் கூட்டம். ஏராளமான கலைஞர்கள். அந்தக் கூட்டத்துக்கு இளையபாரதி இரண்டு புத்தக வெளியீடுனு சொல்லி என்னைக் கூப்பிட்டிருந்தார். ஆனா, உண்மையில அது வேறொரு கூட்டம். நிறையப் பேர் வந்திருந்தாங்க. புத்தக வெளியீட்டுக்கா இவ்வளவு கூட்டம்னு நினைச்சு ஆச்சர்யப்பட்டேன். கலைஞர் வந்திருந்தார். கூட இருந்தவங்க எல்லாரும் எழுந்து போய் கலைஞரோட கையைப் பிடிச்சு, வணக்கம் சொல்லி, கால்ல விழுந்து என்னென்னமோ பண்ணினாங்க. எனக்கு அப்படிச் செய்ய முடியலை. அதெல்லாம் கூட எனக்குப் பிரச்னையா இல்ல. அந்த ஹால்ல ஏர்கண்டிஷன் ஓடுது. பக்கத்துலயே ஒரு ஃபேனும் ஓடுது. குளிர் நடுக்குது. தாங்க முடியலை. எனக்குப் பொன்னாடை போர்த்தினாங்க. ‘அப்பாடா! சரியான நேரத்துல போர்த்தினீங்க. இந்த இடத்துல இந்தப் பொன்னாடை ரொம்பத் தேவையா இருக்கு’னு சொன்னேன். பல சமயங்களில் உண்மைதான் பெரிய நகைச்சுவையா இருக்கு.”

‘கவிதைகள் ஏன் உங்களுக்குப் பிடிப்பது இல்லை?’

“அப்படியெல்லாம் இல்லை. நான் வாசிச்ச பல கவிதைகளில் அலட்சியமா எழுதப்பட்ட மாதிரியான ஒரு தொனி, தோற்றம் இருக்கு. எல்லாரையும் அப்படி எழுதுறாங்கன்னு சொல்லலை. சில பேருக்கு சில விஷயங்கள் பிடிக்கும்; சில பேருக்குப் பிடிக்காது. ‘உனக்கு ஏன் அது பிடிக்கலை?’னு கேட்கக் கூடாது இல்லையா? எனக்கு என்னவோ ஆரம்பத்துல இருந்தே கவிதைகள் மேல ஈடுபாடு இல்லை”

பாரதியை உங்களுக்குப் பிடிக்கும் என்று சொன்னீர்களே…?’

‘பாரதியோட சில வரிகள் எனக்குப் பிடிக்கும். நல்ல உழைப்பு, அசாத்தியமான சிந்தனை எல்லாம் அவர்கிட்ட இருந்தது. கண்ணம்மா பாடல்கள், கண்ணன் பாடல்கள் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். அவர் பாடல்கள்ல ஒரு ஒழுங்கு இருந்தது. அதையெல்லாம் இப்போ இருக்கற கவிதைகள்ல எதிர்பார்க்க முடியாது. ஞானக்கூத்தன் எனக்கு ரொம்ப நல்ல நண்பர். ஆரம்பத்துல அவரோட கவிதைகள்ல வர்ற ஐடியாக்களுக்காக, (அரசாங்கக் கட்டடத்தில் முதல் தூக்கம் போட்ட நாள்) போஷிச்சிருக்கேன். அப்புறம், அன்று வேறு கிழமை நல்லா இருந்தது. அதுக்கு மேல எனக்கு அவர் கவிதைகள் மேல ஒண்ணும் தோணலை.’

‘இசை கேட்பது உண்டா?’

‘ஒரு காலத்துல நானே பஜன் பாடல்கள் எல்லாம் பாடிட்டிருந்தேன். இப்போ விட்டுப் போயிடுத்து. இசையில நாட்டம் உண்டு. ஆனா, இசை கேட்பதற்கு அதுக்கான சூழலும் வசதியும் வேணுமே. கிராமபோன் வந்தப்போ அது எங்ககிட்ட இருந்தது. சில ரெக்கார்ட்ஸும் கூட இருந்தது. இப்ப ரேடியோ வெச்சிருக்கேன். அதோ இருக்கு பாருங்க’ – (மேசையில் இருக்கும் ஒரு சிறிய ரேடியோவைக் காட்டுகிறார்.)

‘இப்போவும் கையால்தான் எழுதுகிறீர்களா?’

‘நான்கைந்து வருஷமா கம்ப்யூட்டர்ல எழுதறேன். யூனிகோட்ல எழுதறதுக்குச் சொல்லிக் குடுத்திருக்காங்க. கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனா, திருத்தவும் எடிட் பண்ணவும் இது ரொம்ப வசதியா இருக்கு.’

‘இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து உங்களை எழுதத் தூண்டுகிற விஷயம் எது?’

‘பாசிபிளிட்டீஸ்! ஒரு விஷயம் இப்படி நடப்பதற்குப் பதிலா, இப்படி நடந்தா என்ன ஆகும்னு ஒரு பாசிபிளிட்டியை யோசிப்பேன். குறிப்புகள் எழுதி வைக்கறதும் உண்டு. வாழ்க்கையில பாசிபிளிட்டீஸ்தான் ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்னு நினைக்கிறேன். வெவ்வேறு மனிதர்கள், அவர்களின் வெவ்வேறு சுபாவங்கள், அவர்கள் வாழும் வெவ்வேறு சூழல்கள்… அதையெல்லாம் மாற்றிப் போட்டு இவருக்கு இந்த சூழ்நிலையில இப்படி நடந்தா என்னாகும்னு யோசிக்கறதுலதான் கதை உருவாகுது. பாசிபிளிட்டீஸ் இருக்கிற வரை கதைகள் இருக்கும். எழுதிக்கிட்டே இருக்கலாம்.’

‘சிறுகதை வடிவம் காலாவதி ஆகிவிட்டதா? இனி, புதிய வடிவத்துக்குத்தான் போக வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?’

‘இல்லை. ஏற்றுக் கொள்ள முடியாது. அதுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கும். ஆனா, ரொம்பப் பெரிய இடம் இருக்கும்னு சொல்ல முடியாது. முன்பு, சிறுகதைகளுக்காகவே பத்திரிகைகள் நடத்தப்பட்டன. பி.எஸ்.ராமையா, அவரோட மணிக்கொடியில சிறுகதைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு இதழில் நான்கைந்து கதைகள் வரும். ஆனால், இப்போ ஆனந்த விகடன்லயே வாரம் ஒரு கதைதான் வெளியிடுறாங்க. அப்போ, வருஷத்துக்கு அதுல 52 கதைகளைத்தானே எழுத முடியும்? இலக்கியத்தின் எந்த வடிவத்தையும், கவிதை வடிவத்தையும் கூட, காலாவதியாகி விட்டதுனு சொல்ல முடியாது.’

‘தமிழ்ச் சிறுகதை, நாவல் உலகில், அந்த வடிவங்களைக் கௌரவம் செய்தவர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்?’

கு.ப.ரா.வைச் சொல்லலாம். ரொம்பக் குறைவாத்தான் எழுதினார். ஆனால், ரொம்ப மகத்தான சிறுகதைகளை எல்லாம் எழுதியிருக்கார். அப்புறம் புதுமைப்பித்தன். அவர் எழுதின சிறுகதை ஒண்ணைப் படிச்சுட்டுதான் நான் எழுதவே வந்தேன். அதை அவர்தான் எழுதினார்னும் அப்போ எனக்குத் தெரியாது. தலைப்பு நினைவில் இல்லை. சாமியாரான ஒருத்தன் அவன் ஏன் உண்மையில் சாமியாரா இல்லை என்பதை நுட்பமாகப் புலப்படுத்தும் கதை. அப்போ வந்த, கலைமகள்கு.ப.ரா., க.நா.சு., பிச்சமூர்த்தி எல்லாம் தொடர்ந்து எழுதினாங்க. கி.வா.ஜ. அதன் ஆசிரியராக இருந்தார். புதுமைப்பித்தன் எழுதின காஞ்சனை கதையை யார் யாரோ வெளியிட்டிருக்காங்க. ஆனா, கலைமகள் வெளியிட்ட காஞ்சனை அவ்வளவு சுத்தமா இருக்கும். அதுக்குக் காரணம், கி.வா. ஜகந்நாதன்தான்.’

‘கு.ப.ரா., புதுமைப்பித்தன் சொன்னீர்கள். அதற்குப் பிறகான காலகட்டத்தில், உங்களுக்குப் பின்னால் வந்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களாக யாரைச் சொல்வீர்கள்?’

சா. கந்தசாமி ஒரு விசேஷமான எழுத்தாளர். அவர் எந்தப் பின்புலமும் இல்லாமல் இலக்கியத்துக்குள் வந்தவர். நானாவது கல்லூரிக்கெல்லாம் போயிருக்கேன். உலக இலக்கியத்துல பரிச்சயம் உண்டு. ஜி. நாகராஜன் மாதிரியான எழுத்தாள நண்பர்களும் எனக்கு உண்டு. ஆனா, சா. கந்தசாமிக்கு அப்படியெல்லாம் கிடையாது. சுயமாகவே எழுதினார். திறமையான வேற சிலரும் இருக்காங்க…’ (மௌனமாகிறார்).

‘இன்றைக்கு எழுதுகிறவர்களில்?’

‘இன்றைக்கு எல்லாருமே நல்லா எழுதுகிறாங்க. General Proficiency அதிகமாகிடுச்சி. எந்தப் பத்திரிகையையும் எடுத்துப் பாருங்க, ரொம்ப நல்லா எழுதுறாங்க. வெகுஜனப் பத்திரிகைகள்ல கூட நிறைய நல்ல கதைகள் வெளியாகுது. எல்லா கதைகளும் தீவிரமான புனைவுகளைப் போல நம்மை வேற ஒரு உலகத்துக்கு, அனுபவத்துக்கு அழைச்சுட்டுப் போகிறதான்னு நீங்க கேட்கலாம். ஆனா, படிக்கிற அரை மணி நேரத்துக்கு நல்ல பொழுதுபோக்கா இருக்கிறதே! எனக்குப் பிடிச்சிருக்கு. இன்னிக்கு பத்திரிகைகள்ல வர்ற ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பகுதிகள் கூட சென்சிபிளாவும் ரொம்ப புத்திசாலித்தனமாவும் இருக்கு.’

‘பெண் படைப்பாளிகளில் குறிப்பிடத் தகுந்தவர்கள்?’

ஆர். சூடாமணி. இப்போ கூட அவங்களுக்கு நூற்றாண்டு விழா எடுத்தாங்க. ரொம்ப நல்ல குணம் அவங்களுக்கு. குமுதினினு ஒரு எழுத்தாளர் இருந்தாங்க. அவங்களுக்குக் காது கேட்காது. அவ்வளவு இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலயும் எழுதினாங்க. தாகூரின் பல படைப்புகளை மொழிபெயர்த்திருக்காங்க. முன்பைவிட இப்போ நிறைய பேர் எழுதறாங்க. சல்மா, தமயந்தியெல்லாம் நல்லா எழுதுறாங்க. விமர்சனமும் இருக்கு. ஆனா, இப்போ யாரையும் விமர்சிக்கிற மனநிலையில நான் இல்லை.’

போரும் அமைதியும், கரமசோவ் பிரதர்ஸ் போன்ற அளவில் பெரிய அதே சமயம் க்ளாசிக் தன்மையுடைய தமிழ் நாவல்கள் பற்றி?’

‘மகா நாவல்கள்னு சிறப்பிக்கப்படுற எல்லா படைப்புகளையும் இப்போ மறுபரிசீலனை செய்யணும். அது அவசியம்னு நினைக்கிறேன். என் வரையில் இந்த மகா நாவல்களோட சிகரம்னு கருதப்படுற போரும் அமைதியும் எனக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது. இந்த மகா நாவல்கள்லாம் அந்தக் காலகட்டத்தோட பிரசுரத் தேவையால உருவாக்கப் பட்டவையோனு சந்தேகப்படுறதுண்டு. போரும் அமைதியும் மூலநூல் ஆசிரியராலேயே பலமுறை திருத்தப்பட்டது. அது மட்டுமில்லாம உள்ளே ரெண்டு பின்னுரைகளை வேறு கொடுத்திருக்காங்க. எந்தப் படைப்பிலக்கியமும் என்னைப் பொறுத்தவரை முன்னுரை, பின்னுரை இல்லாம, அதன் அளவிலேயே அது சிறந்து விளங்கணும்னு சொல்வேன்.

‘தமிழிலும் மகா நாவல்கள் எழுதப்பட்டிருக்கு. சுந்தர ராமசாமியின், குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’, ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல்’ அவர் இப்போ எழுதிட்டு வர்ற மகாபாரதத் தொடர் நாவல்கள், பூமணியின் அஞ்ஞாடி இதெல்லாம் என் நினைவுக்கு வருது. இன்னும் பல இருக்கலாம். புனைகதைங்கிறது மகிழ்ச்சிக்காகப் படிக்கப்படுறது. படிக்கிறதுக்கே அதிக உழைப்பு தேவைப்படுறபோது, எழுத்தாளனோட இலக்கு பற்றி சந்தேகம் வருது. ஜோ டி குரூஸின் ரெண்டு படைப்புகளும் (ஆழிசூழ் உலகு, கொற்கை) மகா நாவல்கள்தான். பல நாட்கள் உழைத்துத்தான் அதைப் படிக்க முடிஞ்சது. இன்றைய மனநிலையில ஒரு வாசகனை வியர்வை சிந்த வைக்காம ஓர் உயரிய நிலையில உற்சாகம் (இது சோகத்துக்கும் பொருந்தும்) தருகிற படைப்புகளா எழுதப்படணும்னு விரும்புவேன். இதையே எல்லாரும் ஏத்துக்கணும்னு நான் வற்புறுத்த மாட்டேன். வாசிப்புங்கிறது முழுச் சுதந்திரத்தோட நாம செய்ய வேண்டிய ஒரு விஷயம்.’

‘சிறுகதை, குறுநாவல், நாவல் இவற்றுக்கு உங்களது இலக்கணம் என்ன?’

‘கறாரா இதை வரையறுக்க முடியாது. இதில நமக்கு சமரசப் பார்வை தேவை. சிலர் தங்களோட ஒரு சிறுகதைக்கு பல ஆயிரம் சொற்களை எடுத்துக்கிறாங்க. சிலர் சில நூறு சொற்களை எடுத்துக்கிறாங்க. பல சம்பவங்கள், பல கதாபாத்திரங்கள்னு ஓரளவுக்கு மேல் விரிஞ்சிட்டுப் போகிற கதைகளை சிறுகதையிலிருந்து குறுநாவல், நாவல்னு பிரிக்கலாம்.

தமிழ் உரைநடையில படைப்பிலக்கியம் உருவானதே ரொம்பத் தாமதமாத்தானே. முதல் தலைமுறைக் கதாசிரியர்களுக்கு அவங்களோட வாசகர்கள் யார்னே தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்ல. அவங்க எழுதின நூல்களை அவங்களோட வாரிசுகள் பள்ளிப் பாடப் புத்தகமா மாத்துறதை விரும்பினாங்க. கேட்க ஆச்சர்யமா இருக்கலாம். பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் ரெண்டாவது மூணாவது பதிப்பிலேயே பாட நூல்களா திருத்தப்பட்டுருச்சு.’

‘ஒரு படைப்பு அந்தப் படைப்பாளியின் உரிமையின்றித் திருத்தப்படலாமா?’

“இப்பல்லாம் பலர் இணையத்தில அவங்க நினைக்கிறதையெல்லாம் எழுதிடுறாங்க. எடிட்டிங்கிற விஷயத்தை இந்தத் தலைமுறை கத்துக்கணும். ஒரு கதையில பத்திரிகையாசிரியர் செய்ற சிறுசிறு திருத்தங்களை நாம அனுமதிக்கணும். எழுத்தாளர்கள் தங்களோட எழுத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கிற விஷயமா இதைப் பாக்கக் கூடாது. எந்தப் படைப்பானாலும், அது ஒரு நல்ல எடிட்டர் பார்வைக்கு உட்படுவது நல்லது. செய்தி, கருத்து, கிண்டல், கவிதை, படைப்பிலக்கியம்னு மிகச் சிறப்பா வெளியிடுறதுல புகழ் பெற்றது நியூ யார்க்கர் வாரப் பத்திரிகை. அந்தப் பத்திரிகையைத் தோற்றுவித்த ஹரால்ட் ராஸ் ஒரு முறை சொன்னார். ‘யார் வேண்டுமானாலும் எழுத்தாளராகிடலாம். ஆனா, மிகக் கூர்மையான அறிவு உடையவங்கதான் பத்திரிகை ஆசிரியராக முடியும்.'”

‘இதுவரை உங்களுக்குக் கிடைத்ததில் சிறந்த அங்கீகாரம் என்று எதைக் கருதுகிறீர்கள்?’

சாந்தோம் அவார்டுனு ஒண்ணு கிடைச்சது. இதுல பணம், காசெல்லாம் ஒண்ணும் கிடையாது. என் படைப்புகளை மதிப்பீடு செஞ்சு ஒரு கேடயம் குடுத்தாங்க. அதை முக்கியமான அங்கீகாரமா நான் நினைக்கிறேன். அந்த அமைப்புக்கு டைரக்டரா சுந்தர்ராஜன்னு ஒருத்தர் இருந்தார். அவர் ஜெனீவா போயிட்டார். அவர் போனதுக்கு அப்புறமா அந்த விருது வழங்கப்படுறதில்லை. நகுலன், சி.மணி, க.நா.சு.-வுக்கெல்லாம் இந்த விருது கொடுத்தாங்க. இதுல சுவாரஸ்யம் என்னன்னா, ஒரு திரைப்படத்துக்கும்கூட இந்த விருது கொடுத்தாங்க… ரஜினிகாந்த் நடிச்ச படம், அதுலகூட ஒரு பாட்டு வருமே, ‘சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா’னு (நினைவுபடுத்திக் கொள்கிறார்) ராஜா சின்ன ரோஜா! அந்தப் படத்துக்கும் பரிசு கொடுத்தாங்க. (சிரிக்கிறார்).”

‘நீங்கள் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த காலத்தில், உங்களுக்குப் போட்டியாக யாரையாவது நினைத்தது உண்டா?’

“போட்டினு யாரையும் நெனைச்சது கிடையாது. நண்பர்கள் நிறைய கிடைச்சாங்க. வா.மு. சேதுராமன் அப்படிக் கிடைச்சவர்தான். அவரோட சகோதரர் இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ல வேலை பார்த்துட்டிருந்தார். அவருக்கு என் படைப்புகள்லாம் ரொம்பப் பிடிச்சிருந்தது. அவர்தான் ஆரம்பத்தில் என் புத்தகங்களை அச்சிடத் தேவையான உதவிகளைச் செய்தார். அவரோட உதவியால்தான் வாழ்விலே ஒரு முறை நூல் வெளியாச்சு. அதுக்குக் கொஞ்சம் வரவேற்பு கிடைச்சது. புத்தகம் வித்துடுச்சு. அதை வெச்சு இன்னும் சில நாட்கள் புத்தகம் வந்தது. அப்புறம், ஆங்கிலத்துல நிறைய வர ஆரம்பிச்சுது. ஆங்கிலத்துல எழுதும்போது, ரெமுனரேஷனும் ஜாஸ்தி. அப்போ நான் ஜெமினியில பார்த்த வேலையை விட்டிருந்த நேரம். கொஞ்சம் மனசு வேதனையோடதான் விட்டேன். அப்போ ஆங்கிலத்துல எழுதறது கொஞ்சம் கை கொடுத்தது.

எனக்கும் ஜி. நாகராஜனுக்குமான நட்புக்கு நியூ யார்க்கர் பத்திரிகையும் ஒரு காரணம். ஒரு சமயம், ‘நியூயார்க்கர்ல எனக்கு ஒரு கதை வந்துட்டா போதும்’னார். ‘அமெரிக்கப் பத்திரிகையான நியூ யார்க்கர்ல உங்க கதை வரணும்கிறீங்க, நீங்க இடதுசாரியாச்சே!’ன்னேன். ‘இடதுசாரியா இருந்தா என்ன, பத்திரிகையை நல்லா நடத்துறாங்க’ன்னார். ‘நான் வருஷத்துக்கு ஒரு கதை அனுப்பறேன்’னு சொன்னேன். ‘நானும் அனுப்பறேன்’னு அவர் சொன்னார். இப்படி எங்க நட்பு வளர்ந்தது. அவர் எனக்காக கணையாழியில எல்லாம் எழுதியிருக்கார். இந்த மாதிரி நட்புதான் உண்டே தவிர, போட்டினு யாரையும் நினைச்சது இல்லே.”

‘நீங்கள் ஏன் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதவில்லை?’

‘இல்லையே, ஆங்கிலத்துல நிறைய எழுதியிருக்கேனே! இது வரை பத்துப் புத்தகம் வந்திருக்கு. தொகுக்கப்படாம நூத்துக்கும் மேலான கட்டுரைங்க இருக்கு. எக்ஸ்பிரஸ்ல, ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை ரைட்டர்ஸ் நோட்னு ஒண்ணு போடுவாங்க. அதுல நிறைய எழுதியிருக்கேன். ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஸ்டேட்ஸ்மேன், நேஷனல் ஹெரால்டு, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லினு நிறைய எழுதியிருக்கேன்.’

‘நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற இஸங்கள் சார்ந்த விஷயங்களில் நீங்கள் பெரிதும் பங்கெடுத்துக்கொள்ளவில்லையே?’

‘இரண்டாம் உலக யுத்தம் முடிஞ்ச பிறகு, ஐரோப்பிய நாடுகள் சிதைஞ்சு போயிருந்துச்சு. கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்குற முயற்சியில சில இலக்கியக் கொள்கைகளை உருவாக்குனாங்க. எனக்குத் தெரிஞ்சு அறுபது, எழுபதுகள்ல ஆலன் ரோப் கிரியேங்கிற எழுத்தாளர் திரும்பத் திரும்ப உதாரணமாகச் சொல்லப்பட்டார். அவருடைய நாவல்களையெல்லாம் சினிமாவாக் கூட எடுத்தாங்க.

என் வரையில பின்நவீனத்துவ நூல்களைப் பத்தி முக்கியமான அறிமுகங்கள் இல்லை. நிறைய பாலியல் சலுகைகள் எடுத்துக்கிட்டு எழுதப்பட்ட படைப்புகள் பின்நவீனத்தோட சேர்க்கப்படுது. நவீனத்துவம், பின் நவீனத்துவம்னு கால வரிசைப்படி எடுத்துக்கிட்டா, பல நவீனப் படைப்புகளைக் காட்டிலும் உயர்ந்த படைப்புகள் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டிருக்கு. இதுக்கு மேல விரிவா ஆய்வாளர்கள்தான் பேசணும்.’

‘சாகித்ய அகாடமி, ஞானபீட விருதுகள் குறித்து?’

“நான் குறை சொல்லப்போறதில்லை. வருஷாவருஷம் சாகித்ய அகாடமியில மொழிக்கு ஒரு ஆள் வீதம், 24 பேருக்கு விருது கொடுத்துடுறாங்க. ஆனா, இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு இந்த எண்ணிக்கை போதாது. ஞானபீட விருது வடநாட்டுக்காரங்க கொடுக்கிறது. விருதுனு யோசிச்ச உடனே அவங்க கண்ணுக்கு அங்க உள்ள வயசான முகங்கள்தான் முதல்ல நினைவுக்கு வரும். அதையெல்லாம் தாண்டி எப்பவாவது தென்னிந்தியப் பக்கம் வர்றது உண்டு. அதனால, யாரையும் குறை சொல்லிப் பிரயோசனமில்லை. கிடைச்சா சரி, கிடைக்கலைன்னாலும் அதுக்காக வருத்தப்படக் கூடாது. நான் வருத்தப்பட்டதில்லை.

உரைநடைக்காரர்களுக்காவது எப்படியோ அங்கீகாரம் கிடைச்சிடுது. இந்த கவிஞர்கள் பாடுதான் கொஞ்சம் கஷ்டம். அவங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கிறதில்லை. ஒருவகையில் விருதுகள் என்கிறதே லாட்டரி மாதிரிதான். லிஸ்ட்ல தகுதியான பத்துப் பேரு இருப்பாங்க. ஆனா, பத்துப் பேருக்கும் கொடுக்க முடியாதே. யாராவது சொல்லலாம், ‘நீ வாங்கிட்டே, அதனால குறை சொல்லாம இருக்கலாம்’னு. நான் அந்த விருதை வாங்காதப்பவும் குறை சொல்லலை. வந்தப்பவும் அதைப் பெருசா நினைக்கலை.’

‘ஒரு சமூகத்துக்குக் கற்பனை எவ்வளவு அவசியம்?’

‘எந்தச் சமூகத்துக்கும் ரொம்பவே அவசியம். கற்பனை இருந்தாதான், நாம எதைப் பத்தியும் திட்டமிட முடியும். சராசரி ஆட்களுக்கோ, எழுத்தாளர்களுக்கோ மட்டுமில்ல, ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்துக்கும் கூட கற்பனை தேவைப்படுது. தண்ணீர்ப் பற்றாக்குறையில, வாரத்துக்கு ரெண்டு முறைதான் மக்களுக்குத் தண்ணீர் கொடுக்க முடியுது. அதை எப்படிச் சமாளிக்கலாம்னு ஓர் அதிகாரி யோசிச்சார்னா, அதைத் திட்டமிடுறதுக்குக் கற்பனை தேவை. கற்பனை என்பது ஏதோ கதை சொல்றவங்களுக்கு மட்டுமான சமாசாரம் கிடையாது.’

‘சமீபத்தில் தாங்கள் எழுதிய ஆகாகான் மாளிகை நாடகம் காந்தியின் மீது ஒரு விமர்சனப் பார்வையை முன்வைக்கிறதே?’

‘காந்தி மட்டுமில்லை, உலகத்துல எவ்வளவு பெரிய மனுஷங்களா இருந்தாலும், அவங்களோட வரலாற்றை, தத்துவத்தை, பங்களிப்பை மறுபரிசீலனை செய்யணும்னுதான் சொல்வேன். காந்தி, நேரு போன்றவங்களே சில தவறுகளைச் செஞ்சிருக்காங்க. ஒரு காலத்தில மகா மனிதர்களா தோற்றமளிச்சவங்களே, இன்னிக்குப் பல தவறுகள் செஞ்சவங்களா விமர்சிக்கப்படுறதைத்தான் நாம அன்றாடம் பாக்குறோமே!

பல கோடி மக்களோட நலனை தனது முதன்மையான அக்கறையாக நெனைச்ச காந்தி, அவரோட குடும்பத்துக்கிட்ட அந்த அக்கறையைக் காட்டலை. ஆகாகான் மாளிகையில நிமோனியா நோயில் படுத்திருக்கிறாங்க கஸ்தூரிபா. அப்போதான் பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்டிருந்துச்சு. அதை கஸ்தூரிபாவுக்குக் கொடுக்கலாம்னு தேவதாஸ் காந்தி ஏற்பாடு செய்றார். ஆனா, காந்தி மறுத்துடுறாரு. காந்தியின் மூத்த மகன் ஹரிலால் விரும்பிய இங்கிலாந்துக் கல்வியை காந்தி தடுத்துடுறார். விளைவு, தந்தைக்கும் மகனுக்கும் கடைசி வரைக்கும் பகை. இதுல வினோதம் என்னன்னா, காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அதே வருஷத்துல ஹரிலாலும் இறந்துபோயிட்டார்.’

‘எழுதுவதில் எந்த விஷயம் மிகவும் சவாலானது என்று நினைக்கிறீர்கள்? அந்த மாதிரி சவால் என்று ஏதாவது இருக்கிறதா?’

“சில பேர் சொல்றாங்க, ‘இது சவால், அது சவால்’னு. எழுதறதுல சவால்னு என்ன இருக்கு? வாழ்க்கையை நடத்துறதுதான் சவால். வாழ்க்கையில எதிர்ப்படும் சின்னச் சின்ன விஷயங்கள்தான் சவால். திடீர்னு ஆயிரம் ரூபா, ஐந்நூறு ரூபா நோட்டு செல்லாதுங்கறாங்க, ஆதார் கார்டு அது இதுனு என்னென்னமோ வேணும்றாங்க. இதெல்லாம்தான் சவாலா இருக்கு.’

‘ஏதாவது சோஷியல் மீடியாவைப் பயன்படுத்துகிறீர்களா?’

‘ஃபேஸ்புக் பார்க்கறதுண்டு. நான் இப்போ இருக்கறது ஒரு மகன் வீட்டில். இன்னொரு மகன் வேளச்சேரியில இருக்கார். மற்றொரு மகன் பாம்பேயில இருக்கார். உறவுக்காரங்களோட தகவல் பரிமாறிக்க, பிறந்த நாட்கள்ல வாழ்த்து சொல்ல ரொம்ப உதவியா இருக்கு. ஆனாலும், எனக்கு ஃபேஸ்புக்ல பெரிய ஈடுபாடு வரல.’

‘அன்றாடச் செய்திகளை அப்டேட் செய்துகொள்கிறீர்களா? தொலைக்காட்சி பார்ப்பதுண்டா?’

‘சாயங்காலத்தில டி.வி. செய்திகள தவறாமப் பார்த்திடுவேன். ரேடியோ செய்திகளை மிஸ் பண்ணிடாமக் கேட்பேன். பத்து நிமிஷத்தில அன்றைய நாளோட மொத்த நடப்புகளையும் சுருக்கிச் சொல்லிடுறாங்கல்ல. அப்புறம், கிரிக்கெட்டும் விரும்பிப் பார்க்கிறதுண்டு.’

‘விவசாயம் நசிந்து மக்கள் சென்னைக்கு வந்து குவிகிறார்கள். நீங்கள் பார்த்த அந்த நாள் சென்னைக்கும் இப்போதைய சென்னைக்கும் வித்தியாசம் எப்படி இருக்கிறது?’

‘அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருக்கு. இதைத் தவிர்க்க முடியாது. இந்த மாற்றத்தை மறுக்க முடியாது. நீங்க சொல்றீங்க, விவசாயம் இல்லாமப் போயிட்டுதுன்னு. விவசாயம்லாம் இருக்கு. அப்போ விவசாயம் செய்யறதுக்கு 100 பேர் தேவைன்னா, இன்னிக்கி நாலைஞ்சு பேரைவெச்சு செஞ்சுடலாம். விவசாய முறை மாறிடுச்சு.’

‘ஆனா, விவசாயிகளோட நிலை மாறவே இல்லையே. சமீபத்துலகூட பலர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்களே..?’

‘அது ரொம்ப ரொம்ப வருத்தப்படக்கூடிய விஷயம்தான். கொஞ்சமா சொந்த நிலம், சிலருக்கு அதுவும் கிடையாது. பாசனத்துக்கு தண்ணிப் பிரச்னை, வங்கிக் கடன்னு சமாளிக்கிறது கஷ்டம்தான். ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு.’

‘உங்களை வாழ்க்கை முழுக்க உறுத்திக்கொண்டே இருக்கும் கேள்வி ஏதேனும் இருக்கா?’

‘அப்படிப்பட்ட ஒரு பெரிய சிந்தனையாளன் இல்லப்பா நான். சில சூழ்நிலைகளை, சில நபர்களை மாத்திப் போட்டுக் கதை எழுதறதைத் தவிர, பெருசா ஒண்ணும் நான் சிந்திச்சிடலை. நம்ம வரைக்கும் நாம சரியா இருக்கணும். ஒவ்வொருத்தருக்குமே அவங்கவங்களுக்கான சமூகப் பொறுப்பு, தனி மனிதப் பொறுப்பு இருக்கு. பிறர் மனம் வருந்தற மாதிரி எதுவும் செஞ்சுடக் கூடாது அது ஒண்ணுதான் எனக்குத் தோணிக்கிட்டே இருக்கிற விஷயம். எண்பத்தஞ்சு வயசுல என்ன பெரிய உறுத்தல் இருக்கப் போகுது எனக்கு?’

‘படைப்பு அரசியல் என்று எதையாவது உங்கள் எழுத்தில் வைத்திருக்கிறீர்களா?’

‘அரசியலா? அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. அது தேவையும் இல்லைனு நினைக்கிறேன்.’

‘உங்கள் படைப்புகள் மூலமாக என்ன செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள்?’

‘பெருசா எதுவும் பண்ணலை. பெருமையா எதுவும் சொல்ல முடியாது. வாழ்க்கையில நல்லா உக்காந்து எழுதி பொழுதுபோக்கியிருக்கேன். (சிரிக்கிறார்) நான் எழுதினதை சில பேர் படிச்சிருக்காங்க. அவ்வளவுதான்.’

‘சமீபத்தில் என்ன சினிமா பார்த்தீர்கள்?’

‘சமீபத்தில் இல்லை. கடைசியாக நானும் என் மகனுமாக ஜுராசிக் பார்க் பார்த்தோம். அப்போ சத்யம் தியேட்டர் வேற மாதிரி இருந்தது. இப்போ எல்லாம் மாறிப் போச்சு. எனக்கு இந்த கபாலி படத்தை முழுசா பார்த்துடணும்னு ஒரு ஆசை. அதுல ரஜினிகாந்த் கையில ஒரு புஸ்தகம் (My Father Balaiah) வெச்சிருப்பார். நான் அந்தப் புத்தகம் பத்தி எழுதியிருக்கேன். ரொம்ப நல்ல புத்தகம் அது.’

‘முதுமையை எப்படி உணர்கிறீர்கள்?’

‘நடக்க முடியலை. தூங்க முடியலை. தொடர்ந்து உட்கார முடியலை. இதுதானே முதுமை?’

‘முதுமைப் பருவத்துக்கு என்று ஏதாவது ஒரு சௌகரியம், அல்லது நல்ல விஷயம் இருக்கா?’

‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை.’

‘கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?’

‘எனக்கு சில சாமியார்களோட நல்ல பழக்கம் உண்டு. இந்த யோகம் – ஹடயோகம், ராஜயோகம்னு எதை எடுத்துக்கிட்டாலும், அதற்குண்டான கடவுளை நம்பிப் போகலாம் என்கிற நிலை இருக்கு. ஆனா, ரொம்ப தெய்வீகமா, பக்தியா நான் செய்யறது கிடையாது. அதுக்கும் கூட கொஞ்சம் வசதி வேண்டியிருக்கு.’

‘அப்படி என்றால் உங்களுக்கு பக்தியில் ஈடுபாடு இல்லை என்று எடுத்துக்கொள்ளலமா?’

‘ஈடுபாடு இல்லைன்னாலும்… (யோசிக்கிறார்) சில மந்திரங்களுக்கு நம்ம மனதை நிதானப்படுத்தறதுக்கான சாத்தியம் இருக்கு. மந்திரங்கள் மேல எனக்கு ஈடுபாடு உண்டு. அது மனதை சாந்தப்படுத்துது’

‘வாழ்வில் பணம் எவ்வளவு முக்கியத்துவமானது என்று நினைக்கிறீர்கள்?’

‘இப்போ என் தேவைகளை என் மகன்கள் கவனிச்சிக்குறாங்க. அப்போ, பணம் இல்லாததனால, என்னோட பெரிய பையனை 12-வதுக்கு அப்புறம் நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ்லதான் சேர்க்க முடிஞ்சுது. அதுக்குக் கூட அக்னிபுத்திரன்னு ஒரு கவிஞர்தான் உதவினார். பணம் முக்கியமானதுதான். வந்தா நல்லது, வரலைன்னா என்ன செய்ய முடியும்?’

‘உங்களை மிகவும் பாதித்த ஒரே ஒரு புத்தகம் என்றால் எதைச் சொல்ல விரும்புவீர்கள்?’

இரு நகரங்களின் கதை (Tale of two cities). நான் எட்டாவது படிக்கிறப்போ பள்ளியில் துணைப் பாட நூலாக இருந்துச்சு. அதுதான் வாசிக்கிற பழக்கத்தைத் தூண்டுச்சு. என்னை எழுதவும் தூண்டுச்சு.’

‘புதுசா எழுத வருபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி?’

‘எழுதணும்னு வர்றவங்க, சொல்ல நெனைக்கிறதை அழுத்தம் திருத்தமா தெளிவா எழுதணும். அதுதான் என்னுடைய ஆசை. மத்தபடி, அவங்கவங்களோட கற்பனை, ஆற்றல் அதுக்குள்ளல்லாம் நான் போக விரும்பலை. முடிஞ்ச வரைக்கும் நம்ம மொழிக்கு நாம மரியாதை செய்யணும்.’

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்

அசோகமித்ரனின் ஆதர்சங்கள்

asokamithranஎனக்கு அசோகமித்ரன் ஆதர்ச புருஷன். அவருக்கு? அவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் வந்தது எப்படி, யார் அவரை வழி நடத்தினார்கள், யாரைப் பார்த்து அவர் வியப்புறுகிறார் (அவருடைய பள்ளி/கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அவரது அப்பா அவரை ஆரம்பத்தில் வழி நடத்தி இருக்கிறார்கள்; க.நா.சு.வை மேதை என்கிறார்) என்றெல்லாம் இந்தக் கட்டுரையில் பேசுகிறார். கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம