சுஜாதா ரசித்த அசோகமித்ரன் சிறுகதைகள்

asokamithran1978-இல் படிகள் என்ற சிற்றிதழுக்காக சுஜாதா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். பேட்டியில் அசோகமித்ரனைப் பற்றி ஒரு கேள்வி.
படிகள்: அசோகமித்திரனின் எந்தக் கதைகளை ரொம்ப ரசிக்கிறீர்கள்?

சுஜாதா: உதாரணமாக ‘வழி‘ ஒரு கதை. இன்னொன்று புலிக்கலைஞன், எலி, விமோசனம், நிறைய கதைகள்…

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம், அசோகமித்ரன் பக்கம்

தி. ஜானகிராமன் பற்றி அசோகமித்ரன்

thi_janakiramanசொல்வனத்தில் தி.ஜா. பற்றி அசோகமித்ரன் அளித்த ஒரு பேட்டி கண்ணில் பட்டது. சிறுகதைகளின் master என்றே தி.ஜா.வைப் பற்றி அவர் கருதினாலும், தி.ஜா.வின் admirer என்று தன்னைச் சொல்லிக் கொண்டாலும் தி.ஜா. பற்றி முடிவான கருத்தை இப்போது யாராலும் சொல்லிவிட முடியாது, இன்னும் காலம் வேண்டும் என்கிறார்.

asokamithranஅசோகமித்ரனின் அபிப்ராயங்களும் அவரது எழுத்தைப் போலவேதான் – எந்த அதீதத்துக்கும் அவர் போவதில்லை. யாரையாவது முழுதாகப் புகழ்வது என்பது அபூர்வமே. தன்னைப் பற்றியே அவர் பெருமிதம் கொள்பவரில்லை. தி.ஜா. அசோகமித்ரனின் கதைகளை விரும்பிப் படித்தார் என்பதையே இந்தப் பேட்டியில் போகிறபோக்கில் சின்னதாகச் சொல்கிறார், அவ்வளவுதான். மேலோட்டமாகப் படிப்பவர்கள் அதை கவனிக்காமல் தாண்டிவிடவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு மேதை உண்மையாக மனம் விட்டுப் பாராட்டுபவை சிறு வயதில் அவரைக் கவர்ந்த எழுத்துக்களும் சினிமாக்களும்தான் (கல்கியின் தியாகபூமி, எம்ஜிஆர்நம்பியார் கத்திச்சண்டை போடும் சர்வாதிகாரி திரைப்படம்…) என்பது பெரிய நகைமுரண்தான். (irony)

1950களில் தி.ஜா.வின் “சிகப்பு ரிக்‌ஷா” சிறுகதைத்தொகுதி கையில் கிடைத்ததாம். தி.ஜா.வின் எழுத்து அப்போதுதான் அறிமுகம் ஆயிற்றாம். “சிகப்பு ரிக்‌ஷா” சிறுகதைத் தொகுதி அவரைப் பெரிதாகக் கவராவிட்டாலும் சிறுகதைகளில்தான் தி.ஜா.வின் சாதனை என்கிறார். “Essentially a far better short story writer than a novelist” என்று குறிப்பிடுகிறார். அடுத்த, பாயசம், கண்டாமணி ஆகிய சிறுகதைகளைக் குறிப்பிடுகிறார். “ஏழ்மையை romanticize செய்யாமலும், இழிவு செய்யாமலும் – அவங்களோட சந்தோஷம், துக்கம் எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி ஜானகிராமனால பதிவு செய்ய முடிஞ்சுது” என்கிறார்.

தி.ஜா.வின் masterpiece என புகழப்படும் மோகமுள்ளிலேயே சில இடங்கள் சரியாக வரவில்லை என்கிறார். மோகமுள்ளை கொஞ்சம் எடிட் செய்யுமாறு இவரை தி.ஜா. கேட்டதாகவும், இவரால் முடியவில்லை என்றும் நினைவு கூர்கிறார். மரப்பசு மோசமான நாவல் என்பதை அவர் மறைத்தும் மறைக்காமலும் சொல்லுவதை – “மரப்பசு, நளபாகமெல்லாம் சரியா வரல. நளபாகத்துலேயாவது சில இடங்கள் நன்னா இருக்கும்” – நான் ரசித்தேன். அம்மா வந்தாள் நாவலில்தான் அவருக்கு நாவலின் form கைவந்தது என்று நினைக்கிறார். அவரது புகழ் பெற்ற நாவல்களை விட உயிர்த்தேன், மலர் மஞ்சம், செம்பருத்தியெல்லாம் நன்னாருக்குமாம்.

தி.ஜா.வின் நாடகங்களை படித்ததில்லை, பார்த்ததில்லை என்பதால் அவை என் பிரக்ஞையிலேயே இல்லை. என்றாவது படித்துப் பார்க்க வேண்டும். “நாலு வேலி நிலம்” சாதாரணமான கதை, அதை ரொம்ப நன்னா, தளுக்கா எழுதி இருக்கிறாராம். எஸ்.வி. சகஸ்ரநாமம்தான் நாலு வேலி நிலம், வடிவேலு வாத்தியார் முதலிய நாடகங்களை மேடையேற்றினார் என்றும் நாலு வேலி நிலத்தை திரைப்படமாகக் எடுத்து சகஸ்ரநாமம் பெரிதாக கையைச் சுட்டுக்கொண்டார் என்றும் தகவல் தருகிறார்.

முழுப் பேட்டியையும் படித்துப் பாருங்கள்; தி.ஜா.வைப் பற்றி தெரிந்து கொள்வதை விட அசோகமித்ரனைப் பற்றி அதிகமாகப் புரிந்து கொள்ளலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம், அசோகமித்ரன் பக்கம்

தொடர்புள்ள சுட்டிகள்:
பாயசம் சிறுகதை
மரப்பசு பற்றி ஆர்வி
நளபாகம் பற்றி ஆர்வி
அம்மா வந்தாள் பற்றி வெங்கட் சாமிநாதன்
சொல்வனத்தின் தி.ஜா. சிறப்பிதழ்

18-வது அட்சக்கோடு பற்றி அசோகமித்ரன்

மாதம் முடிய மூன்று நாள் இருக்கிறது. இந்த அரை வாரத்துக்கு எழுத்தாளர்கள் அவர்களது எழுத்துக்களைப் பற்றி சொன்னவற்றை பதிக்கப் போகிறேன். அசோகமித்ரனிலிருந்து ஆரம்பிக்கிறேன். ஹிந்து பத்திரிகையின் தமிழ் வடிவத்துக்கு நன்றி!

asokamithranஅசோகமித்ரனே எழுதிய கட்டுரை இது. வசதிக்காக இங்கே மீள்பதித்திருக்கிறேன்.

இன்று யோசித்துப் பார்க்கும்போது ஒரு வேளை, ‘18-வது அட்சக்கோடு‘ எழுத நேர்ந்ததில் நிர்ப்பந்தம் இருந்திருக்கிறதோ என்று ஓர் ஐயம் வருகிறது. அன்று வார மாதப் பத்திரிகைகளில் தொடர்கதை என்று ஒன்றாவது இருக்க வேண்டும். எனக்கு ‘அட்சக்கோட்டை’ தொடர்கதையாக மாற்றுவதில் சம்மதம் இல்லை. ஆனால் ஒத்துக்கொண்ட பிறகு எவ்வளவு நேர்த்தியாக அதைச் செய்து முடிப்பது என்பதில் கவனம் செலுத்தினேன்.

இந்துக்கள், இஸ்லாமியர்கள் இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்றுதான் என் திட்டம். அது நாவலில் பூர்த்தியாகவில்லை. முன்பும் பின்னரும் எழுதிய சிறுகதைகளில்தான் அந்த எண்ணம் பூர்த்தியாயிற்று. ‘ஐநூறு கோப்பை தட்டுகள்‘ சிறுகதையை முதல் அத்தியாயமாக வைத்துக்கொள்ள முடியுமா? ஏதேதோ பரிசோதனைகள் செய்த பின் இப்போது நாவல் ஓர் உருவம் பெற்றிருக்கிறது.

சுதந்திரத்துக்கு ஓர் ஆண்டு முன்னரே நிஜாம் ராஜ்யத்தில் வாழ்க்கை நடத்துவது கடினமாகப் போய்விட்டது. ஊரில் பாதி ஜனம் வெளியூர் போய்விட்டது. என் கூடப் படித்தவர்கள், விளையாடியவர்கள் சொல்லிக்கொண்டும் சொல்லாமலும் மறைந்துவிடுவார்கள். தெருவில் ஆறரை மணி, ஏழு மணிக்குப் பிறகு ஆட்களைப் பார்ப்பது அபூர்வம். நாங்கள் ஊருக்குச் சற்று வெளியே இருந்தோம். ஆனால் ஊர் மத்தியில் இருந்தவர்கள் எந்நேரமும் என்ன நடக்குமோ என்று கிலியில் இருந்தார்கள். எங்கள் சாரியிலேயே பன்னிரண்டு குடும்பங்களில் மூன்று குடும்பங்களில் ஒருவருக்கு ஒருவர் ஆகாது. ஆனால் இப்போது அவர்களே தகரக் கத்திகளையும் ஓட்டை துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு சுற்றிச் சுற்றி வருவார்கள்.

ஆனால் எல்லாரும் சேர்ந்து வாழ வேண்டும், இந்த நெருக்கடி நிரந்தரமானதல்ல என்பதை வலியுறுத்த வேண்டும் என்று திட்டமிட்டேன். அது ஓரளவு பூர்த்தியாகியிருக்கிறது. பிரிட்டனும் அமெரிக்காவும் ஜெர்மனியை நிர்மூலம் செய்தன. அந்நாடுகளுடன் அதே ஜெர்மனி வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்கிறது. இரு அணு குண்டுகளை வீசிய அமெரிக்காவுடன் மின்னணுக் கருவிகள் மூலம் ஜப்பான் போட்டி போடுகிறது. நிஜாம் ராஜ்யத்தில் பல தலைமுறைகள் சேர்ந்து வாழ்ந்த மக்கள் மீண்டும் அப்படி வாழ முடியாதா?

இன்று பல பிற்போக்குச் சக்திகள் உலவினாலும் ’18வது அட்சக்கோடு’ நாவலில் பரவிக் கிடந்த பீதி இன்றில்லை. நிஜாம் ராஜ்ஜியமும் அரசுமுமே இல்லை.


தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்
தொடர்புடைய சுட்டி: 18ஆவது அட்சக்கோடு

அசோகமித்ரனின் “இன்று”

asokamithranஇன்று ஒரு “சிறுகதை”த் தொகுப்பு. சில சிறுகதைகளைப் படிக்கும்போது சிறுகதைதானா இல்லை ஏதாவது கட்டுரையா என்று சந்தேகமாக இருந்தது. அசோகமித்ரன் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர்தான், ஆனால் அதே சமயம் எனக்கு அவர் ஒரு challenging எழுத்தாளரும் கூட. எத்தனையோ முறை என்னதான் சொல்ல வருகிறார் என்று புரியாமல் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறேன். குமுதத்தில் அவர் எழுதிய சிறுகதை ஒன்று (ஒற்றன் புத்தகத்தில் வரும் – பஸ்ஸுக்காக காத்திருப்பார், பஸ் அவருக்குப் பழகிய விதத்தில் இருக்காது.) பத்து வருஷங்களுக்குப் பிறகு தன்பாத் நகரத்தில் பஸ் தேடி ஒரு டிரக்கரில் ஏறிய நொடியில்தான் புரிந்தது. புகழ் பெற்ற காந்தி சிறுகதை எனக்கு சிறுகதையாகவே தெரிவதில்லை. ஆனால் புரியும்போது மண்டையில் டங் என்று அடி விழுகிறது, அந்த அனுபவத்துக்காகவே அவரை மிகவும் விரும்பிப் படிக்கிறேன்.

இந்தத் தொகுப்பில் முதல் சிறுகதையின் பேர் “டால்ஸ்டாய்”. முதலில் டால்ஸ்டாயைப் பற்றி சம்பிரதாயமான ஒரு உரை. பிறகு இன்னொரு உரை. என்னடா எழவு இது என்று படித்துக் கொண்டே போனேன். கடைசி வரி –

“இந்த இரு உரைகளையும் சேர்த்துப் படித்தபோது அவனுக்கு சிரிப்பாக வந்தது. சிரித்து முடித்தபோது வருத்தமாகவும் இருந்தது.”

மனிதர் டால்ஸ்டாயைப் பற்றி எழுதவில்லை, இந்த உரைகளைக் கேட்கும் மனிதர்களைப் பற்றி, இந்த சிறுகதையைப் படித்துக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி எழுதி இருக்கிறார்! மேதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அற்புதமான நகைச்சுவை உணர்ச்சி உள்ளவர். “நாம் என்ன செய்ய வேண்டும்?” என்ற சிறுகதையில் எழுத்தாளர் ஹரிதாசனைப் பேட்டி காண்கிறார்கள். பேட்டி எடுப்பவர் ஹரிதாசன் எழுதிய கதை என்று எதையோ விவரிக்கிறார். அப்போதைய உரையாடல்.

இந்தக் கதையை நான் எழுதலே.
நீங்க எழுதலையா? ரொம்ப நல்ல கதை.
என்ன செய்யறது? நான் எழுதலை.”

Sarcasm கசப்பே இல்லாமல் வெளிப்படும் ஒரு அபூர்வ தருணம்!

குரூரமான நகைச்சுவையும் உண்டு. ஒரு ஆர்ப்பாட்டம், ஜனாதிபதி வருகை, ரகளை, போலீஸ், அப்பா, அம்மா, குழந்தைகள் உள்ள குடும்பம் பிரிந்துவிடுகிறது. குடும்பத் தலைவன் சுந்தரராமனின் மன ஓட்டம்

“எழும்பூர் ஸ்டேஷனில் இறங்கியது நல்லதாகப் போயிற்று. ஒரேயடியாக மின்சார ரயிலில் ஏறி பரங்கிமலை போய்விடலாம். குழந்தைகளை கடவுள் காப்பாற்றுவார்.”

அடுத்த வரி –

“கடவுள் காப்பாற்றினார், ஒரு குழந்தையில் காலைத் தவிர.”

இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த சிறுகதை(கள்) ஆக நான் கருதுவது “புனர்ஜென்மம்” மற்றும் அதன் தொடர்ச்சியான “இனி நாம் செய்ய வேண்டியதுதான் என்ன?”. புனர்ஜென்மத்தில் முதிர்கன்னி சீதா, ஏற்கனவே மணமான ஒருவனுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறாள். கசப்பும் மன அழுத்தமும் அதிகம் ஆக ஆக ஒரு நாள் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள். இதே கருவை எம்.வி. வெங்கட்ராம்பைத்தியக்காரப் பிள்ளை” என்ற அற்புதமான சிறுகதையில் எழுதி இருக்கிறார். எம்.வி.வி.யின் அணுகுமுறைக்கும் அசோகமித்ரனின் அணுகுமுறைக்கும் எத்தனை வித்தியாசம்! எம்.வி.வி. ஒரு மாஸ்டர்பீஸைப் படைத்திருக்கிறார் என்பது புரியாதவர்கள் இருக்க முடியாது. அசோகமித்ரனின் சிறுகதையை நானே என் இருபதுகளில் படித்திருந்தால் என்ன அழுமூஞ்சிக் கதைடா என்று விசிறி அடித்திருப்பேன். அவரது subtlety புரிந்திருக்காது.

ஆனால் இந்த இரண்டு சிறுகதைகளையும் ஒன்றாக எந்த வயதில் படித்திருந்தாலும் இரண்டாம் பகுதிக்கு சிரித்திருப்பேன். அதுவும் என் இருபதுகளில் வாய்விட்டு கபகபகபகபவென்று சிரித்திருப்பேன். சீதாவின் தற்கொலையைப் பற்றி ஒரு பொதுக் கூட்டம் இனி நாம் செய்ய வேண்டியதுதான் என்ன என்று விவாதிக்கிறது. வரதட்சணை வாங்க மாட்டேன் என்று கையெழுத்து வாங்குவோம் என்று ஒருவர் ஆலோசனை சொல்கிறார். அதை இன்னொருவர் வரதட்சணைக் கொடுமை கையெழுத்துப் போடவும் இயலாத எழுத்தறிவில்லாதவர்களால்தான் வளர்க்கப்படுகிறது என்று ஆட்சேபணை தெரிவிக்கிறார். அமைப்பாளரின் தீர்வு – கையெழுத்துப் போட முடியாதவர்களிடம் கைநாட்டு வாங்கிக் கொள்ளலாம், அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை!

இவற்றைத் தவிரவும் இன்னும் இரண்டு நல்ல சிறுகதைகள் உண்டு. “ஒரு மனிதனுக்கு வேண்டிய நிலம் எவ்வளவு?” டால்ஸ்டாயின் சிறுகதையை நினைவுபடுத்தும் தலைப்பு. இங்கே ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி – தமிழர் – தன் கடைசி நாட்களை டெல்லியில் தன் சொந்தங்களிடமிருந்து வெகு தூரத்தில், வயதான தியாகிகள் வசிக்கும் ஒரு ஹாஸ்டலில் கழிக்கிறார். டால்ஸ்டாய் எழுப்பும் அதே கேள்விதான், ஆனால் முற்றிலும் வேறான விடை. “நடனத்துக்குப் பின்” சிறுகதையில் அவசர நிலையின்போது பல கஷ்டங்களை அனுபவித்த சோமு இன்று தன் பழைய அரசியல் நண்பன் ஒருவனைப் பார்க்க வருகிறான்.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது, விலை 50 ரூபாய்தான். ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிட்டிருக்கிறார்கள். (மொழிபெயர்த்தவர் – சாந்தி சிவராமன்) அவர்களுடைய மார்க்கெட்டிங் blurb கீழே. நானே பரவாயில்லை, சிறுகதையா கட்டுரையா என்றுதான் குழம்பினேன். அவர்கள் ஒரு படி மேலே போய் இதை நாவலாக்கிவிட்டார்கள். 🙂

Today
Ashokamitran
ISBN:978-81-8368-384-5 Page :88 Rs. 100
Ashokamitran’s Today—translated from his Tamil novel Indru—is an avant garde departure from traditional forms of writing. The novel strings together a number of genres such as narrative fiction, poetry, lectures and a newspaper interview to produce a rare amalgam of fiction and recent history. The condition of freedom fighters in free India, social evils like dowry, corruption and crass commercialism, institutions like marriage and politics are highlighted as problems that occupy centre stage today. The period chosen for such delineation is immediately before and after the imposition of a national emergency by Prime Minister Indira Gandhi. Anger, persecution, lack of compassion and tolerance find their counterpoint in a father figure-perhaps a veiled reference to the Father of the Nation whose dreams lie shattered in the present. Today is also for all time. Its concerns are universal, its people are of flesh and blood. It raises serious questions about the validity of the value systems governing our lives in an increasingly complex world. It is without doubt a trailblazer in post-modern Tamil literature. Translated from Tamil by Shanti Sivaraman

சின்னப் புத்தகம், கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்

அசோகமித்ரன் என்ற ஆளுமை

asokamithranஅசோகமித்ரனின் எழுத்தைப் படித்தவர்கள் ஏதாவது ஒரு கதையிலாவது, ஏதாவது ஒரு இடத்திலாவது, “வாத்யாரே, நீ மேதை!” என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். அவர் தமிழில் நோபல் பரிசு தரத்தில் எழுதிய ஒருவர் என்பதெல்லாம் தெரிந்ததுதான். என்னைப் பொறுத்த வரையில் அவர் தமிழின் மூன்று ஜீனியஸ் எழுத்தாளர்களில் ஒருவர். (மற்றவர்கள் – புதுமைப்பித்தன், ஜெயமோகன்).

அவரது ஆளுமையையும் அவரது எழுத்திலிருந்தே யூகிக்கலாம். வாழ்வின் உணர்ச்சிகரமான, நாடகீய தருணங்களை ஆல் இந்தியா ரேடியோ செய்தி வாசிப்பாளர் மாதிரி உணர்ச்சியே இல்லாத நடையில் ரத்தினச் சுருக்கமாக எழுதுவார். அந்தத் தருணங்களை வெளியிலிருந்து பார்த்து ஆவணப்படுத்துபவர் போன்ற தொனியில்தான் அவரது கதைகள் இருக்கின்றன. அவர் வாழ்க்கையும் அப்படித்தான் இருந்திருக்கிறது. எழுத்துக்காக ஜெமினி ஸ்டுடியோ வேலையை விட்டார். காகிதம் வாங்கப் பணம் இல்லாமல் அச்சடித்த காகிதங்களின் பின்பக்கம் எல்லாம் நுணுக்கி நுணுக்கி எழுதுவாராம். அப்பளம் விற்றிருக்கிறாராம். சாவி அலுவலகத்தில் எடுபிடியாக பணியாற்றி இருக்கிறாராம். ஆனால் இதையெல்லாம் பேசும்போது யாரோ மூன்றாம் மனிதனுக்கு வந்த பிரச்சினை மாதிரி தொனியில்தான் பேசுவார்.

அசோகமித்ரனின் பேட்டி காலச்சுவடு பத்திரிகையில் வந்திருக்கிறது. அவரது ஆளுமை ரத்தினச் சுருக்கமாக இந்த வரிகளில் வெளிப்படுகிறது.

தேவிபாரதி+சுகுமாரன்: தண்ணீரில் வரக்கூடிய சாயா, டீச்சர், மானசரோவரில் வரக்கூடிய ஜம்பகம் எல்லோருமே மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் சக்தியின் குறியீடு போல் தோன்றுகிறது.
அசோகமித்ரனின் பதில்: எனக்கு நீங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. நீங்களாக அதிகப்படியான அர்த் தத்தை ஏற்றிவிடுகிறீர்கள். அவை எல்லாம் வெறும் கதைகள், ஐயா. அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் இல்லை.

அவரது ஆளுமையின் இன்னொரு சுவாரசியமான பக்கம் அவரது ரசனை. 1930, 31இல் பிறந்தவர். சிறு வயதில் அவருக்குப் பிடித்துப் போன சினிமாக்கள், கதைகள் மீது அவருக்கு இன்னும் ஒரு soft corner உண்டு. அவருக்குப் பிடித்த சினிமாக்களில் கத்திச் சண்டை போடும் வீரர்கள் இருக்க வேண்டும். அதுவும் தமிழ் சினிமாவாக இருக்க வேண்டும். சர்வாதிகாரி (1950) திரைப்படத்தைப் பற்றி பேசும்போது என்னதான் எர்ரால் ஃப்ளின், ரொனால்ட் கோல்மன் சண்டைகளைப் பார்த்தாலும் எம்ஜிஆரும் நம்பியாரும் தமிழ் பேசிக் கொண்டு வாள் வீசும்போதுதான் திருப்தியாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். கல்கியின் தியாகபூமியை தனக்குப் பிடித்த பத்து தமிழ் நாவல்களில் ஒன்று என்று சொல்லி இருக்கிறார். இந்தப் பேட்டியிலும் வரிந்து கட்டிக் கொண்டு கல்கியின் எழுத்தின் நல்ல கூறுகளை முன் வைக்கிறார். அதே நேரத்தில் அவற்றின் தரம் என்னவென்று அவருக்கு நிச்சயமாகத் தெரியும். இது அவருக்கு மட்டுமல்ல, அனேகமாக எல்லாரும் அப்படித்தான். பள்ளிப் பிராயத்தில் ஹரிகேன் விளக்கு வெளிச்சத்தில் இரவு முழுதும் படித்த ஜே.ஆர். ரங்கராஜுவின் “ராஜாம்பாள்” நாவலைப் பற்றி கல்கி விலாவாரியாக எழுதி இருக்கிறார். க.நா.சு.வுக்கும் ராஜாம்பாள் பிடித்தமான நாவல். எனக்கும் இரும்புக்கை மாயாவி, பி.ஜி. உட்ஹவுஸ், அலிஸ்டர் மக்ளீன் மாதிரி நான் ஆரம்ப காலத்தில் விரும்பிப் படித்த நாவல்களின் மீது ஒரு soft corner உண்டு. ரசனைக்கும் தரத்துக்கும் நடுவே உள்ள இந்த இடைவெளி is just fascinating!

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்

அசோகமித்ரன் பரிந்துரைகள்

இது நண்பர் செல்வராஜின் பதிவு.

asokamithranஅசோகமித்திரன் டாப் 10 நாவல்களாக “காலக்கண்ணாடி” என்ற கட்டுரை நூலில் குறிப்பிடும் நாவல்கள்

 1. பிரதாப முதலியார் சரித்திரம்
 2. கமலாம்பாள் சரித்திரம்
 3. தியாகபூமி
 4. மண்ணாசை
 5. நாகம்மாள்
 6. வாழ்ந்தவர் கெட்டால்
 7. தில்லானா மோகனாம்பாள்

8-10 இடங்களுக்கு அவர் பரிந்துரைக்கும் நாவல்கள்

 1. அசடு
 2. அவன் ஆனது
 3. உயிர்த்தேன்
 4. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
 5. ஒரு புளியமரத்தின் கதை
 6. கரிக்கோடுகள்
 7. காகித மலர்கள்
 8. நினைவுப் பாதை
 9. பள்ளிகொண்டபுரம்
 10. கிருஷ்ணப் பருந்து
 11. நதிமூலம்
 12. சுதந்திர பூமி

படைப்பாளிகளின் உலகம்” என்ற கட்டுரை நூலில் இந்திய விடுதலைக்குப் பின் வெளியான தமிழ் நாவல்களின் மைல் கற்கள் என குறிப்பிடும் நாவல்கள்

 1. மோகமுள்
 2. அசுரகணம்
 3. அறுவடை
 4. ஒரு புளியமரத்தின் கதை
 5. தலைமுறைகள்
 6. கரைந்த நிழல்கள்
 7. மலரும் சருகும்
 8. அம்மா வந்தாள்
 9. காகித மலர்கள்
 10. தந்திரபூமி
 11. கடல்புரத்தில்

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம், பரிந்துரைகள், மற்றும் Guest Posts

தொடர்புடைய சுட்டிகள்: அசோகமித்ரன் பரிந்துரைகள் 1, 2, கோபியின் பதிவு

அசோகமித்திரனின் “யுத்தங்களுக்கிடையில்”

asokamithranபுத்தகம் புத்தக கண்காட்சியில் வாங்கியது. கடலூர் சீனுவிற்கும், சாமிற்கும் தெரியும் நான் அ.மியின் முதன்மை வாசகி என்று. கண்டிப்பாக வாங்கிருங்க என்றார்கள். நர்மதாவில் போய் கேட்டோம். சிப்பந்திக்கு அப்படி ஒரு புத்தகம் இருப்பதே தெரியவில்லை. அவரை விடாமல் தொடர்ந்து ஒரு வழியாக வாங்கினோம். இவ்வாரம் சொல்வனத்தில் வந்திருக்கும் நேர்காணலில் நாவல்கள் பற்றி அ.மி இப்படி சொல்கிறார்:

நாவல் வடிவத்துக்கே சில குறைகள் உண்டு. அது நீளமா போயிடறதாலயே, கதையை வேறே வேற காலகட்டங்கள் சொல்றதாலயே, அதுலே கொஞ்சம் பிழைகள் வருவதற்கான சாத்தியங்கள் உண்டு. பர்ஃபக்ட் நாவல்னு தேர்ந்தெடுக்கறது ரொம்ப கஷ்டம். உலக இலக்கியத்திலே எனக்கு தெரிஞ்ச அளவிலே, அப்படி பர்ஃபெக்ட்னா – சின்ன நாவல்கள்லதான் கண்டுபிடிக்க முடியறது

arunaநாவல் சார்ந்த வடிவத்தைப் பற்றிய அ.மியின் கருத்து அவர் எழுதும் நாவல்களில் பிரதிபலிக்கிறது. இந்த நாவல் 159 பக்கங்களில் அடங்கி விடுகிறது. விலை 60 ரூபாய்.

ஒரே குடும்பத்தின் கதையை வேறு வேறு உறுப்பினர்களே திரும்பத் திரும்ப நினைவு கூறும் தொடர் உத்தியில் சொல்லப்படும் நாவல். எளிதாக புரிய வைக்க வேண்டும் என்றால் தமிழில் ஆய்த எழுத்து சினிமாவில் பயன்படுத்தியது போன்ற உத்தி. முதலில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் அ.மி விட்டுச் செல்லும் ரொட்டித் துண்டின் தடத்தை பின் தொடர்ந்தால் சட்டென்று நமக்கும் புரிந்து விடுகிறது. உறவுகளின் நூல். ஒரு கிராமத்தில் படிப்பை மட்டுமே நம்பி பிழைக்கும், ரொம்ப சாமர்த்தியம் எல்லாம் இல்லாத 16 குழந்தைகள் பிறந்த, 8 குழந்தைகளே தங்கிய ஒரு கீழ் மத்திய தர பிராமண குடும்பத்தின் உறுப்பினர்கள் தங்களின் மிகச் சாதாரணமான வாழ்க்கையை, பெரிதான உணர்ச்சி வெளிப்பாடுகளோ, மானுட தரிசனங்களோ எல்லாம் இல்லாமல் நினைவு கூர்கிறார்கள்.

வேறு ஒரு பேட்டியில் ஒரு கட்டத்தில் அ.மி.யின் அடக்கமான பதில்களில் பொறுமையிழந்து ஒரு நண்பர், “எழுத்து என்பது ஆன்மீகமான தேடல் அல்லவா?” என்று உணர்ச்சியுடன் கேட்டார். சற்றே அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்த அ.மி

எனக்கு இந்த ஆன்மீகம், தேடல் போன்ற வார்த்தைகளில் எல்லாம் நம்பிக்கையில்லை. சொல்லப் போனா அந்த மாதிரி வார்த்தைகளே எனக்குக் கொஞ்சம் பயம். பாருங்கோ, நான் ஒரு நல்ல டூத் பேஸ்ட்டையே ரொம்பக் காலமா தேடிண்டிருக்கேன் அதுவே இன்னும் கிடைச்ச பாடில்ல, இதுல ஆன்மிகமெல்லாம் எப்படித் தேடறது

என்று சிரிக்காமல் சொன்னார். கேள்வி கேட்ட நண்பர் உட்பட அனைவரும் வெடித்துச் சிரித்தார்கள்.

Yuddhangalukkidaiyilஅவர் சித்தரிக்கும் வாழ்க்கையும் அதில் வரும் கதாபாத்திரங்களும் இந்த கருத்தையே முன் வைக்கிறார்கள். தம் வாழ்க்கையைப் பற்றி பிழைத்துக் கிடைக்கும் நோக்கில் மட்டுமே அணுகும் மனிதர்கள், சாதரணர்கள். அ.மி இப்புத்தகத்தின் முன்னுரையில் சொல்வது போல் இவ்வாழ்வும் யுத்தம்தான்.

ஆனாலும், தன் மேல் திருடன் என்ற பழி வந்து விடுமோ என்று பயந்து மூலையில் அமர்ந்து உயிரை விடும் இரண்டாவது அண்ணா, தன் கல்யாணத்தால் வீட்டை விட்டு வெளியேறும் மூத்தார் பையனுக்கு சொத்துக்களை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று பாதுகாக்கும், தன் அண்ணன் மகனை தத்தெடுத்து அவனுக்கு ஒரு வாழ்க்கையை கொடுக்கும் இளம் விதவை சீதா, தன் மகனை இழந்த நொடியில் தன் துஷ்ட அம்மாவின், அவள் இழப்பின் வலியை ஒரு நொடி நேரம் நினைக்கும் ராமேசன், தன் தம்பியை ஊருக்கு கூட்டிக் கொண்டு போகும் பொழுது அவனை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் ராகவன், மொழியும், மனிதர்களும் அன்னியமான ஊரில் சென்றடைந்து அங்கே எளிய நட்பையும், பிழைக்க தையலையும், ஊறுகாய் போடும் வழிகளையும் எல்லாம் சத்தமில்லாமல் கண்டடையும் பெண்கள், தன் தம்பிகளுக்கும் ரெயில்வேயில் வேலை வாங்கி கொடுத்து அவர்களை வழி நடத்தும் பாலு என பிழைப்பிற்காக புலம் பெயரும், இவ்வாழ்வில் பிழைப்பைத் தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாவிட்டாலும் அதிலும் சின்ன சின்ன லட்சியங்களை சுமக்கும், அதை லட்சியம் போன்ற வார்த்தைகளால் எல்லாம் நினைக்காத ஒரு தலைமுறையின் உழைப்பின், தியாகத்தின், பொறுப்பின் கதை.

நம் அனைவரின் வாழ்க்கையையும் திரும்பி பார்த்தால் நம் முந்தைய தலைமுறைக்காரர்களுக்கு இதே போல் ஒரு கதை இருப்பது நிச்சயம். அந்த வாழ்க்கையின் கதையை அவர்கள் மிகச் சாதாரணமாக தாண்டியும் செல்வார்கள். நாவலில் நுண்விவரங்களெல்லாம் பெரிதாக கிடையாது. அவர் வரைந்து காட்டுவது ஒரு மெல்லிய கோட்டுச் சித்திரம். அதன் உள்ளே இருக்கும் அடர்த்தியான வாழ்க்கை நம் கற்பனைக்கே விடப்படுகிறது. சொல்வதை விட சொல்லாமல் விடுவதே நிறைய. அ.மியின் மெல்லிய, கூரிய நகைச்சுவை அவதானிப்புகள் நாவல் நெடுக.

முன்னும் பின்னுமாக சொல்லப்படுவதால் கொஞ்சம் கவனத்துடன் படித்தால்தான் நன்றாக புரியும். ஆனால் புத்தகத்தில் பெயர்கள் சில இடங்களில் தப்பாக அச்சிடப்பட்டிருப்பது முதலில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எடிட்டிங் இன்னும் நன்றாக அடுத்த பதிப்பிலாவது செய்யலாம்.

சிறு நாவல், கடகடவென்று படித்து விடலாம் தான். ஆனால் எல்லா அ.மியின் எழுத்துக்களையும் போல கூர்ந்து படித்தலும், மற்றொருமுறையும் படித்தலும்தான் அவர் சொல்லாமல் விடும் அனைத்தையும் உள்வாங்க உதவும்.


ஆர்வியின் குறிப்பு: அருணாவின் விவரிப்பைப் படிக்கும்போது எனக்கு என் அப்பா தலைமுறைக் குடும்பங்கள் – குறிப்பாக என் பெரியப்பா நினைவு வருகிறது. புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அருணா பதிவுகள், அசோகமித்ரன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
புத்தகம் பற்றி நண்பர் ரெங்கசுப்ரமணி
புத்தகம் பற்றி ஆவணப்பட இயக்குனர் அம்ஷன்குமார் – அம்ஷன்குமாரும் ஆய்த எழுத்து திரைப்படத்தைப் பற்றி குறிப்பிடுவதும் இரண்டு முறையாவது படிக்க வேண்டும் என்று சொல்வதும் ஆச்சரியம்!

அசோகமித்ரன் எழுதிய “இன்று”

asokamithranசில சமயம் அசோகமித்ரனின் படைப்புகள் எனக்குப் புரிவதில்லை. ஆனால் இப்போதோ இந்தப் புத்தகம் – இன்று – தொகுக்கப்பட்டிருக்கும் விதமே எனக்குப் புரியவில்லை. சில சிறுகதைகள்; ஒரு சிறுகதை தலைப்பில் சம்பந்தம் இல்லாத மூன்று கதைகள். இதை யார் தொகுத்தது, ஏன் இப்படித் தொகுத்திருக்கிறார் என்றுதான் மனதில் எண்ணங்கள் ஓடுகின்றன.

இந்தத் தொகுப்பில் பிரமாதமாக வெளிப்படுவது அசோகமித்ரனின் நகைச்சுவை உணர்ச்சி. உதாரணத்துக்கு ஒன்று – வரதட்சணைக்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்தும் குழு. ஒரு கலந்துரையாடலில் ஒருவர் வரதட்சணை அதிகமாக வாங்குவது படிக்காதவர்கள் என்று ஆட்சேபிக்க, இன்னொருவர் சொல்கிறார் – “அது ஒன்றும் பெரிய விஷயமில்லை – கைநாட்டு வாங்கிக் கொள்ளலாம்.” நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன்.

இன்னொரு இடத்தையும் சொல்லியே ஆக வேண்டும். எழுத்தாளர் ஹரிதாசனை பேட்டி காணும் நிருபர் அவர் எழுதிய ஒரு கதையை நினைவு கூர்கிறார். “பிரமாதமான கதை” என்கிறார். ஹரிதாசன்: “இந்தக் க்தையை நான் எழுதல”. நிருபர்: “நீங்க எழுதலயா? ரொம்ப நல்ல கதை.” “என்ன செய்யறது, நான் எழுதல!”

எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டத்தைப் பற்றி சின்ன சின்ன பத்திரிகைச் செய்திகளாக வருகிறது. அதில் காமராஜ் மறைவைப் பற்றி ஒரு வரி – “தி.மு.க.வை ஆரம்பித்ததே காமராஜர்தானோ என்று சந்தேகப்படும்படியாக “உடன்பிறப்புகளுக்கு” முரசொலியில் கருணாநிதியின் கடிதங்கள்”.

எனக்கு இவற்றில் மிகவும் பிடித்த சிறுகதை புனர்ஜென்மம். பேரிளம்பெண் சீதா; ஏற்கனவே மணமான ஒருவனோடு தொடர்பு. அவன் இவளையும் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறான். சீதா தற்கொலை. இதை எழுதும்போது என் போதாமை எவ்வளவு பெரியது என்று தெரிகிறது. கதைச் சுருக்கத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய? படித்துப் பாருங்கள் என்றுதான் சொல்ல முடியும். இந்தச் சிறுகதை இணையத்தில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ராம், சீக்கிரம் அழியாச்சுடர்களில் பதியுங்கள்!

முன்னர் குறிப்பிட்ட எழுத்தாளர் பேட்டி ஒரு சிறுகதையில் வரும் மூன்று சரடுகளில் ஒன்று. இன்னொரு சரட்டில் குழந்தைகளைத் தவறவிடும் அப்பா நினைத்துக் கொள்கிறார் – “கடவுள் காப்பாற்றுவார்”. சரடு அடுத்த வரியில் முடிகிறது – “கடவுள் காப்பாற்றினார், ஒரு குழந்தையின் காலைத் தவிர.” அது எப்படி அய்யா ஒரு வரியில் இவ்வளவு குரூரம்? கதை வேறு தளத்துக்கே போய்விடுகிறது!

தொகுப்பில் முதல் கதையான டால்ஸ்டாய் அவரது புகழ் பெற்ற “காந்தி” சிறுகதையைப் போல அமைக்கப்பட்டிருக்கிறது. டால்ஸ்டாயைப் பற்றி இரு கட்டுரைகள் – அவற்றைப் படித்துவிட்டு கடைசியில் ஒருவன் சிரிக்கிறான். எனக்கு இன்னும் “காந்தி” சிறுகதையே புரியவில்லை, இது எங்கே?

அவரது அற்புதமான நகைச்சுவை உணர்ச்சிக்காக பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்

அசோகமித்ரன் எழுதிய “பயாஸ்கோப்”

asokamitran2பயாஸ்கோப் அசோகமித்ரன் சினிமா பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அசோகமித்ரனின் சினிமா ரசனை பொதுவாக அவரது இளமைப் பருவத்தில் பார்த்த சாகச சினிமாவினால் உருவானது. அவருக்குப் பிடித்த எர்ரால் ஃப்ளின் திரைப்படங்கள், எம்ஜிஆர் நம்பியார் சண்டை போடும் சர்வாதிகாரி போன்ற திரைப்படங்களுக்கும் அவரது எழுத்து பாணிக்கும் ஸ்னானப் ப்ராப்தி கூட கிடையாது. (அவர் கலைப் படங்களை வெறுத்தார் என்றில்லை, ஆனால் இந்த மாதிரி படங்களைப் பற்றி எழுதும்போது அவர் அடையும் உற்சாகம் தெளிவாகத் தெரியும்.) இந்த முரண்பாடு எப்போதுமே என்னை வியக்க வைக்கும் விஷயம். சமயத்தில் அவர் இந்த மாதிரி படங்களை நக்கல் அடிக்கிறார், நமக்குத்தான் புரியவில்லை என்று தோன்றுவதும் உண்டு. 🙂 (குறிப்பாக பஹூத் தின் ஹுவே பற்றி அவர் எழுதி இருக்கும் கட்டுரை.)

s_s_vasanஇந்தக் கட்டுரைகளின் ஹீரோ எஸ்.எஸ். வாசன்தான். வாசன் அசோகமித்ரனை மரியாதையாக நடத்தவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தக் கட்டுரைகளில் தெரியும் வாசன் மிகத் திறமையான முதலாளி. அவருக்கு சினிமா மட்டுமே தொழில் இல்லை, அதனால் சினிமாவில் அவருக்கு முழு கவனம் இல்லை, அப்படி கவனம் செலுத்தியபோதெல்லாம் பெரும் வெற்றி பெறுகிறார் என்ற சித்திரம் கிடைக்கிறது. விளம்பர யுத்திகளின் மன்னராக இருந்திருக்கிறார். மனஸ்தாபம் கொண்டிருந்த கல்கியை அவ்வையார் திரைப்படத்துக்கு அழைத்து அவர் மூலம் நல்ல விமர்சனம் பெற்றது, ராஜாஜியை எப்படியோ தாஜா செய்து படத்தைப் பார்க்க வைத்து ராஜாஜி பார்த்த படம் என்று செய்தி கொடுத்து படத்தை பெரும் வெற்றி பெறச் செய்தது என்று பல. (ராஜாஜி படம் மோசம் என்று தனது டைரியில் எழுதி வைத்திருப்பது அசோகமித்ரன் பாணி irony!)

bioscopeபல இடங்களில் அடக்கி வாசிக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் மனிதருக்கு நக்கல் அதிகம். அது அங்கங்கே வெளிப்படுகிறது. உதாரணமாக தமிழ் சினிமாவைப் பற்றி ஒரே வாக்கியத்தில் சொல்கிறார்.

தமிழ்த் திரைப்படங்களை கிண்டல் செய்ய அவ்வளவு ஆற்றல் தேவையில்லை. படத்தின் கதைச் சுருக்கத்தை எழுதினால் போதுமானதாக இருக்கும்.

பராசக்தியைப் பற்றி அவர் நக்கல் அடிப்பது பிரமாதம். அவர் வார்த்தைகளில்: 

பராசக்தி தமிழ்த் திரைப்படம் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதுவே சினிமாவிற்குரிய சிந்தனைப் போக்கை தமிழ் சினிமா உலகில் வெகு தூரம் பின் தள்ளிவிட்டது. புணர்ச்சிக்குப் பின் ஆணைக் கொன்று தின்றுவிட்டு முட்டையிடலுக்கு பின் தானும் மடிந்துவிடும் ஒரு கொடூர வகைப் பூச்சி போல ‘பராசக்தி’ சினிமாவையும் பின் தள்ளிவிட்டு தமிழ் மேடை நாடகத்தையும் குற்றுயிர் கொலையுயிருமாகச் செய்துவிட்டது.

அவரோடு எனக்கு இசைவில்லை என்பதையும் மீறி புன்னகைக்க வைக்கிறது. மைல் கல் ஒரு pyrrhic victory என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.

கூர்மையான அவதானிப்புகள். அவரது பாணி irony. (உதாரணமாக பல ஸ்டண்ட்கள் செய்து புகழ் பெற்ற கே.டி. ருக்மணியை வயதான காலத்தில் எஸ்.வி. ஸஹஸ்ரநாமம் வீட்டில் சந்திப்பது) ஆனால் இவை எல்லாம் மேலோட்டமான கட்டுரைகளே. படித்தே ஆக வேண்டிய புத்தகம் என்று சொல்வதற்கில்லை.

கிழக்கு பதிப்பகம் 2006-இல் வெளியிட்டிருக்கிறது. சில கட்டுரைகள் வேறு தொகுப்புகளிலும் வந்திருக்கின்றனவாம். விலை நூறு ரூபாய்.

இந்தப் புத்தகம் அசோகமித்ரன் பிரியர்களுக்காக. தமிழ் சினிமா, அதுவும் பழைய தமிழ் சினிமா பிரியர்களுக்காக. எனக்கு இரண்டு தகுதியும் உண்டு. அதனால் பிடித்திருக்கிறது.


தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம், சினிமா பக்கம்

தொடர்புள்ள பதிவு: ரெங்கசுப்ரமணியின் பதிவு

அசோகமித்ரன் பற்றி அர்விந்த் அடிகா

asokamithranஅடிகாவின் இந்தக் கட்டுரையைப் படித்தபோது நிறைவாக இருந்தது. அசோகமித்திரன் மாதிரி ஒரு ஜீனியஸுக்கு சரியான அங்கீகாரம் இன்னும் கூட கிடைக்கவில்லை என்பது எனக்கு பெரிய குறை. நோபல் பரிசு பெற வேண்டியவர் – இன்னும் ஞானபீட விருது, அட ஒரு பத்மபூஷன், பத்மஸ்ரீ கூட இன்னும் கொடுக்கப்படவில்லை. தமிழில் நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்கும் சின்னக் கூட்டம் கூட அவருடைய வீச்சை முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை.

arvind_adigaஅடிகா தமிழ் பேசுவார் படிப்பார் என்பது எனக்கு செய்தி. அசோகமித்ரனை ரசிப்பவர் என்பது அவர் மீது என் மரியாதையை உயர்த்துகிறது. White Tiger புத்தகம் படித்துப் பார்க்க வேண்டும். ஆனால் அவரது ஒரு கமெண்ட் – “(Is he) a mascot for those who argue that this country’s best writing is hidden away in languages other than English?” என்னை ஆச்ச்சரியபடுத்துகிறது. இது ஒரு கேள்வியா? இந்தியர்கள் ஆங்கிலத்தில் எழுதியவற்றில் பொருட்படுத்தக்கூடிய புத்தகங்கள் மிகக் குறைவு என்பது மேலோட்டமாகப் பார்த்தாலே தெரியுமே!

அடிகாவுக்கு தலை வழுக்கை என்பதில் ஒரு அல்ப சந்தோஷம்!

அசோகமித்திரன் ஜெயமோகனை தனக்குப் பிடித்த சமகால எழுத்தாளர் என்று சொல்வது இன்னொரு சின்ன சந்தோஷம். ஆனால் ஜெயமோகன் மணிரத்னம் போன்றவர்களின் சகவாச தோஷத்தால் நேரத்தை வீணடிக்கிறார் என்று குறைப்பட்டுக் கொள்கிறார்!


தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம்