1955-இல் சாஹித்ய அகடமி விருதுகள் ஆரம்பித்திருக்கின்றன. தமிழுக்கான முதல் விருது ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய தமிழின்பம் என்ற புத்தகத்துக்கு கொடுக்கப்பட்டது. மின்புத்தகம் இங்கே.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். தமிழின்பம் பிள்ளைவாள் ஆற்றிய பல உரைகள், பத்திரிகைகளில் எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பு. பிள்ளை தமிழறிஞர். அவரது தமிழ் அலங்காரத் தமிழ். சுகமான நடை. கேட்பதற்கு சுவையாக இருந்திருக்கும். ஆனால் அங்கும் இங்கும் பாடல்களை எடுத்து விளக்குவதற்கு எதற்கு விருது?
தமிழ் சாஹித்ய அகடமி விருதுகளின் பிரச்சினையே இதுதான். படைப்புகளை விட அவற்றைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளுக்குதான் பரிசு அதிகமாகக் கிடைத்தது. அதுவும் முதல் 25 வருஷங்களில் இதுதான் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருந்தது. விமர்சனங்கள், விளக்கங்கள், அறிமுகங்கள் முக்கியமானவைதான். ஆனால் அறிமுகத்தை விட படைப்பல்லவா முக்கியம்?
என் கண்ணில் சாஹித்ய அகடமி விருதுகள் முக்கியமானவை. அதுவும் இந்தியா போன்ற பல மொழிகள் பழக்கத்தில் இருக்கும் நாட்டில் ஒரு மொழியில் இலக்கியம் வேற்று மொழிக்காரர்களுக்கு பரிச்சயம் ஆவதற்கு சாஹித்ய அகடமி விருதுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. புத்தகத்துக்கு விருது என்றால் அடுத்தபடி மொழிபெயர்க்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். வேற்று மொழியினரைப் போய்ச் சேரும் என்று நப்பாசைப்படலாம். நம்மூரில் ராமலிங்கம் எழுதிய உரைநடை வளர்ச்சி, தண்டாயுதம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்றெல்லாம் சாஹித்ய அகடமி விருது கொடுக்கிறார்கள். உரைநடையை நன்றாகப் படித்த வேற்றுமொழியினருக்கு உரைநடை எப்படி வளர்ந்தது என்று தெரிந்து கொள்ள ஆர்வமிருக்கலாம். வேதநாயகம் பிள்ளை முதல் நாவலை எழுதினார் என்று தெரிந்து கொண்டு என்ன லாபம்? என்ன சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதவா வேற்று மொழியினர் இந்த மாதிரி புத்தகங்களை படிக்கிறார்கள்? பிரதாப முதலியாரின் சரித்திரத்தைப் படித்தால்தானே தமிழ் இலக்கியம், உரைநடை எப்படி பரிணமித்தது என்று புரிந்து கொள்ளலாம்? நம்மூரில்தான் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் புத்தகத்துக்கு முதலில் விருது கொடுத்துவிட்டு நாலைந்து வருஷம் கழித்துத்தான் புதுக்கவிதை புத்தகம் ஒன்றுக்கு முதன்முதலாக விருது கொடுக்கும் முட்டாள்தனம் எல்லாம் நடக்கிறது.
சாதனையாளர்களை அங்கீகரிப்பதற்காகவும் விருது கொடுக்கப்படலாம். அதுவும் முக்கியமே, ஆனால் என் கண்ணில் அது இரண்டாம் பட்சம்தான். தமிழில் பல முறை அப்படி நடந்துவிடுகிறது. பாரதிதாசனுக்கு கொடுப்போம், சமீபத்தில் என்ன புத்தகம் வந்ததோ அதற்குக் கொடுத்துவிடுவோம், அது பிசிராந்தையார் மாதிரி வெட்டியாக இருந்தாலும் பரவாயில்லை என்று நடக்கிறது.
சேதுப்பிள்ளைக்கு அப்படித்தான் விருது கொடுக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அதுவும் அவரது வானொலி உரைகள், கூட்டத்தில் பேசியவை, தீபாவளி மலருக்காக எழுதியவை என்று பலதையும் கலந்து கட்டி ஒரு புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள். அதற்கு விருது வேறு.
ஆனால் ஒன்று. பிள்ளைவாளிள் புத்தகம் ஆங்கிலத்தில், பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அது பயனுள்ளதாக இருந்திருக்கும். சங்கப் பாடல்கள், சிலப்பதிகாரம், தேவாரம், கம்பன், குற்றாலக் குறவஞ்சி, பாரதி என்று பலருக்கும் நல்ல அறிமுகமாக இருந்திருக்கும். ஏன், இன்றைய தமிழனுக்குக் கூட பயனுள்ளதாக இருந்திருக்கும். ஒரு வேளை அப்படி நினைத்துத்தான் பரிசு கொடுத்தார்களோ என்னவோ.
பிள்ளைவாள் அவரது trademark பாணியில் இயற்கைக் காட்சிகள், சிலம்பின் காலம், வள்ளல்கள், கர்ணன்-கும்பகர்ணன், குகன்-கண்ணப்ப நாயனார், பாரதி பாடல்கள் என்று பல தலைப்பில் பேசி எழுதி இருக்கிறார். நிச்சயமாகப் படிக்கலாம். இப்படி சுகமான தமிழில் சுவையாக விடாமல் பேசியதும் எழுதியதும்தான் அவரது முக்கியப் பங்களிப்பு. இதற்கு பரிசு ஏன் என்பதுதான் விளங்கவில்லை. புதுமைப்பித்தன் போய் சில வருஷம் ஆகிவிட்டதுதான், ஆனால் கு.ப.ரா., தி.ஜா., க.நா.சு. எல்லாரும் எழுதிக் கொண்டிருந்தார்களே? குறைந்த பட்சம் கல்கி, பாரதிதாசனுக்காவது கொடுத்திருக்கலாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்
தொடர்புடைய சுட்டி: தமிழின்பம் மின்பிரதி
Like this:
Like ஏற்றப்படுகின்றது...