சிறு திருத்தங்களுடன் மீள்பதிவு. ஒரிஜினல் பதிவு இங்கே.
கார்ன்வெல்லின் நாவல்களுக்கு நான் பரம ரசிகன். அவர் காட்டும் உலகம் – போர் வீரர்களின் உலகம் – இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று நம்மை நினைக்க வைக்கிறது.
இத்தனைக்கும் இவை வணிக நாவல்கள்தான். நேரடியாக சொல்லப்படும் சாகசக் கதைகள்தான். Subtlety என்ற பேச்சே கிடையாது. ஆனால் ஏதோ ஒன்று – நம்பகத்தன்மையா, சுவாரசியமா, இன்று இல்லாத வேறொரு உலகமா – அவற்றை இலக்கியத்துக்கு அருகே கொண்டு செல்கின்றன. இத்தனைக்கும் இந்தியப் பின்புலம் உள்ள சில கதைகளில் அவரது ஆராய்ச்சியின் குறைபாடுகள் தெரிகின்றன, அவரே சில முன்/பின்னுரைகளில் சரித்திரத்தை என் வசதிக்காக மாற்றிக் கொண்டேன் என்று ஒத்துக் கொள்கிறார்.
ஆர்தர் நாவல்களின் பின்புலம் சரித்திரம் இல்லை. தொன்மம். ஆர்தர் என்று ஒரு அரசன் இருந்ததற்கு சரித்திர ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் ராமனும் கிருஷ்ணனும் தெய்வங்களாக்கப்பட்ட நிஜ மனிதர்கள் என்று நம்புவதற்கு இருக்கும் சாத்தியக் கூறுகளைப் போலத்தான் ஆர்தரும் தொன்மமாகிவிட்ட நிஜ மனிதன் என்றுதான் அனேகர் நினைக்கிறார்கள்.
ஆர்தர் நாவல்களின் இன்னொரு சுவாரசியம் இவை அந்தத் தொன்மத்தை மறுவாசிப்பு செய்வதுதான். உதாரணமாக தொன்மங்களில் வரும் லான்சிலாட் மாவீரன், உன்னத மனிதன். இதில் வரும் லான்சிலாட் ‘சூதர்களிடம்’ பணம் கொடுத்து தன் வீர சாகசங்களைப் பற்றி கதைகளைப் பரப்புகிறான், போர் என்று வந்தால் ஓடிவிடுகிறான்!
மிகச் சுருக்கமாக ஆர்தர் தொன்மம் – ஆர்தர் தான் இளவரசன் என்று தெரியாமல் வளர்க்கப்படுகிறான். உண்மையான இளவரசன் மட்டுமே எடுக்கக் கூடிய, வேறு யாராலும் உருவ முடியாத, பாறையில் செருகி இருக்கும் வாளை உருவி இங்கிலாந்தின் அரசனாகிறான். கினிவரை மணக்கிறான். அவனுக்கு ‘ராஜகுருவாக’ மந்திரவாதி மெர்லின். லட்சிய வீரர்களை தனது Round Table-இல் அணிவகுக்க வைக்கிறான். அவர்கள் கொடியவர்களை எதிர்க்கிறார்கள். ஏசுவின் ரத்தம் சேகரிக்கப்பட்ட கோப்பையான Holy Grail-ஐத் தேடி அலைகிறார்கள். ஆனால் லான்சிலாட்-கினிவருக்கு தொடர்பு ஏற்படுகிறது. உறவினனான மார்ட்ரெட் ஆர்தரை எதிர்த்துப் போரிடுகிறான். ஆர்தர் இறக்கவில்லை என்றும் அவலான் என்ற தீவில் உறங்குவதாகவும் இங்கிலாந்துக்கு அபாயம் ஏற்பட்டால் மீண்டு வந்து போரிடுவான் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தக் கதைகளிலோ ஆர்தர் கிறிஸ்துவனே அல்ல. Holy Grail ஆங்கிலேயர்களின் தொல்மதத்தின் கடவுள் ஒருவர் கொடுத்தப் புனிதப் பொருள், ஏசுவுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தத் தொல்மதத்துக்கும் கிறிஸ்துவ மதத்துக்கும் தகராறு. கிறிஸ்துவர்கள் அந்தத் தொல்மதத்தை அழிக்க வேண்டும், எல்லாரையும் கிறிஸ்துவர்களாக்க வேண்டும் என்று இடைவிடாமல் போராடிக் கொண்டே இருக்கிறார்கள். தொல்மதத்தினர் நீ யாரை வேண்டுமானாலும் கும்பிடு, எல்லா மதங்களுக்கும் இடம் உண்டு என்று நினைக்கிறார்கள். மெர்லின், அவனது சிஷ்யை நிம்யூ இருவரும் புனிதப் பொருள்களை எல்லாம் ஒன்று சேர்த்து சடங்குகளை செய்தால் தொல்மதக் கடவுள்கள் மீண்டு வந்து இங்கிலாந்தை சொர்க்கபுரி ஆக்குவார்கள் என்று நம்புகிறார்கள்.
இந்தக் கதைகளில் வரும் ஆர்தர் ‘பிரிட்டிஷ்காரன்’. இன்றைய தென் இங்கிலாந்து பகுதிகளில் ஒரு அரசை நிர்வாகிக்கிறான். அவனுடைய எதிரி சாக்சன்கள். கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் வாழ்பவர்கள். பிரிட்டிஷ் அரசுகளை ஒன்றிணைத்து சாக்சன்களை எதிர்க்க முயற்சிக்கிறான்.
ஆர்தர் முந்தைய அரசன் ஊதர் பெண்ட்ராகனுக்கு முறையான வழியில் பிறக்காத மகன். கதையில் ஆரம்பத்தில் அவன் நேர்வழி வாரிசு மார்ட்ரெடுக்கு பாதுகாவலனாக பொறுப்பேற்கிறான். ஆர்தருக்கு அரசாளும் ஆசையே இல்லை. மாவீரனாக இருந்தாலும் அவன் கனவு எல்லாம் அரசு பொறுப்புகளை உதறிவிட்டு தானுண்டு தன் நிலமுண்டு, அதில் விவசாயம் செய்து வாழ்வோம் என்பதுதான். ஆனால் அவன் காலம் எல்லாம் சாக்சன்கள், பிரிட்டிஷ் எதிர்களை சமாளிப்பதிலேயேதான் செல்கிறது. அரசு என்பது மக்களுக்காக என்று நினைக்கும் அபூர்வப் பிறவியாக இருக்கிறான், வலிமையானவனுக்குத்தான் நீதி என்றூ இருக்கக் கூடாது என்பதை முடிந்தவரை அமுல்படுத்துகிறான்.
கதை டெர்வல் என்ற வீரனின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுகிறது. புனித டெர்வல் என்று கிறிஸ்துவ மதத்தில் ஒரு புனிதர் உண்டு, அவர்தான் இவர்.
கதையின் பெரிய பலம் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு. டெர்வல், டெர்வலின் காதலி, ஆர்தரின் நம்பிக்கையான வீரர்கள், கினிவர், மெர்லின் என்று பலரும் மிகச் சிறப்பான பாத்திரங்கள். பொன்னியின் செல்வனின் பாத்திரங்களோடு ஒப்பிடக் கூடிய தரத்தில் இருக்கின்றன.
இரண்டாவதாக போர்களின் சித்தரிப்பு. கேடயச் சுவர் (shield wall) உத்தி விவரிக்கப்படுவதை குறிப்பாகச் சொல்ல வேண்டும். பல போர்களைச் சொல்லலாம் என்றாலும் முதல் நாவலான Winter King (1995)-இன் இறுதியில் வரும் லுக் பள்ளத்த்தாக்குப் போரைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
மூன்றாவதாக அன்றைய வாழ்க்கையின் சித்தரிப்பு. உதாரணமாக என்னதான் போர் என்றாலும் அறுவடைக்காலத்தில் போரிட முடியாது, வீரர்கள் எல்லாம் வயலுக்குப் போய்விடுவார்கள்.
ஹிந்துத்துவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். எப்படி அன்றைய கிறிஸ்துவ மதம் மற்ற மதங்களை அழித்தது என்பது விவரிக்கப்படும் பகுதிகள் அவர்கள் கட்டாயமாக ரசிப்பார்கள்.
மூன்று புத்தகங்கள் வந்திருக்கின்றன. Winter King (1995), Enemy of God (1996), Excalibur (1998)
மறுவாசிப்பு என்றால் பெரிய கேள்விகள் எழுப்பப்பட வேண்டும் என்பதெல்லாம் இல்லாமல் சுவாரசியம், நம்பகத்தன்மை, வாழ்க்கை முறையைக் காட்டுவது என்பதோடு நிறுத்திக் கொள்கிறார். அதுவே பிரமாதமாகத்தான் இருக்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் கார்ன்வெல் பக்கம்