எஸ்.வி. சஹஸ்ரநாமம் – தமிழ் நாடகங்களில் பாரதி

எஸ்.வி. சஹஸ்ரநாமம் பெயர் நினைவிருந்தால் உங்களுக்கு நாற்பது வயதாவது இருக்க வேண்டும். மிக இயல்பான நடிகர். திரைப்படங்கள் மூலம்தான் இன்று கொஞ்சமாவது நினைவில் இருக்கிறார், ஆனால் நாடகம் நாடகம் என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

பசுபதி சார் தளத்தில் அவர் 1981-இல் எழுதிய ஒரு கட்டுரை கிடைத்தது, அவருக்கு நன்றி! பாரதியை அவர் எப்படி எல்லாம் தனது நாடகங்களில் பயன்படுத்திக் கொண்டார் என்று எழுதி இருக்கிறார். பாரதிக்கும் முன்னால் இருந்த நாடக உலகம் பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கிறார்.

கனபரிமாண காட்சி முறையை அவரது நாடகம் ஒன்றில் கலை இயக்குனர் கலாசாகரம் ராஜகோபால் அறிமுகப்படுத்தினாராம். அது என்ன என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்!

வசதிக்காக கட்டுரையை தட்டச்சி இருக்கிறேன். ஓவர் டு சஹஸ்ரநாமம் சார்!


தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் சீடர்களான டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் நான் சேர்ந்த புதிதில் அநேகமாக எல்லா நாடகங்களும் புராண, இதிகாச வகைகளாக இருந்தன. அத்துடன் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடியனவாகவும் இருந்தன. பிறகு கால மாறுதலுக்கேற்ற வகையில் சமுதாயச் சீர்திருத்த நாடகங்கள் மேடைக்கு வர காரணமாக இருந்தவர் நாடக மேதை எம். கந்தசாமி முதலியார் அவர்கள்தான். நடிகர் எம்.கே. ராதா அவர்களின் தந்தை.

நான் கம்பெனியில் சேரும்போது அவர் இருக்கவில்லை. பிறகு வந்து சேர்ந்தார்கள். அவரால் தயாரான சமூக நாடகங்கள் ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, மோகனசுந்தரம், ஆனந்தகிருஷ்ணன்; இவ்வளவும் ஜே.ஆர். ரங்கராஜு அவர்களால் நாவல் வடிவத்தில் எழுதப்பட்டவை. வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல் மேனகாவும் கந்தசாமி முதலியார் அவர்களால்தான் மேடையில் நாடகமாக ஆக்கப்பட்டது. அவர்தான் எனது குரு. நாடக ஆசிரியர். எனக்கு நல்ல பாத்திரங்களை அளித்து அதிலே, பயிற்சி அளித்து பிறர் பாராட்டைப் பெறும் பாக்கியமும் நான் பெறுவதற்கு காரணமாய் இருந்தவர் திரு எம். கந்தசாமி முதலியார் அவர்கள்தான்.

தேசீய விடுதலைப் போராட்டம் மும்முரமாகத் தொடங்கியபோது சமுதாயத்தின் ஒரு பகுதியான கலைஞர்களும் தங்கள் தொழில் மூலம் தேசீயப் போராட்டத்துக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். நாடகங்கள் எதுவானாலும் தேசியக் கிளர்ச்சிக்குத் தேவையான பணிகளில் மக்கள் மனத்தைப் பண்படுத்தும்படியாக தங்கள் நடிப்பு, இசை அனைத்தையும் பயன்படுத்தலானார்கள். தேசியப் போராட்டத்தில் தமிழகத்துக் கலைஞர்களுக்கு பெரும் பங்குண்டு. பாரதியாரின் பல பாடல்கள் நாடகங்களில் பாடப்பட்டன.

1946-ஆம் ஆண்டில் என்.எஸ்.கே. நாடக சபாவை நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அப்பொழுது புதிதாக நாடகம் போட வேண்டும் என்ற எண்ணத்தில் திரு. ப. நீலகண்டன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். “தியாக உள்ளம்” என்ற ஒரு கதையைக் குழுவில் படித்துக் காண்பித்தார். அந்தக் கதை கருத்துடையதாகவும் விடுதலைப் போராட்ட எழுச்சிக்குத் தூண்டுவதாகவும் இருந்தது. இரண்டொரு பாத்திரங்களை புதிதாக உருவாக்கி “நாம் இருவர்” என்று அந்நாடகத்துக்கு பெயரிட்டு தயாரிக்க ஏற்பாடு செய்தோம். இதில் இடம் பெற்ற பாரதியின் பாடல்கள் வெற்றிக்கு வழி காட்டின. இந்தச் சமயத்தில் மகாத்மா காந்தியடிகள் சென்னை வந்திருந்தார்கள். அப்போது பிரார்த்தனைக் கூட்டத்தில் நாங்கள் குழுவுடன் கலந்து கொள்வோம். எந்த நேரமும் புதிய நாடகத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே இருக்கும் எனக்கு மகாத்மா தரிசனமும் நாடக வெற்றிக்கான வழியைக் காட்டியது. அதன் பலன்… மூன்று நான்கு காட்சிகளும் தேசியப் பாடல்களும் ஒரு சகோதரியின் பாகமும் உருவாகின. மகாத்மாவின் சிலையும் நாடகத்தில் முக்கியப் பங்கேற்றது. நாடகம் மிக வெற்றிகரமாக மேடை ஏறியது.

அன்று அந்த நாடகத்துக்குத் தலைமை ஏற்று, நாடகத்தை மிக மிக அழகாக ரசித்துப் பாராட்டி ஆசிரியரையும் கலைஞர்களையும் வாழ்த்தியவர் திரு. வ.ரா. அவர்கள். அவரைச் சந்திப்பதற்கு முன்னால், எனது எண்ணங்களில் கலக்கமும், செயலிலே தடுமாற்றமும், பார்வையில் சூன்யமும் இருந்தன. அந்தப் பெரியாரின் நட்பும் உறவும் கிடைத்த பின் எனது எண்ணங்களில் தெளிவு ஏற்பட்டது; செயலிலே நிதானம் ஏற்பட்டது; பார்வையிலே பிரகாசம் ஏற்பட்டது.

இதற்குப் பிறகு திரு. ப. நீலகண்டன் அவர்களால் கொடுக்கப்பட்டது “இரத்த சோதனை” என்ற ஒரு நாடகம். அதை ஆதாரமாகக் கொண்டு பல மாற்றங்களுடன் “பைத்தியக்காரன்” என்ற நாடகத்தை உருவாக்கினோம். இந்த நாடகத்தின் மூலம் திரைப்படத்திலும் நான் முக்கிய பாத்திரமேற்று நடித்து, திரைக்கதை வசனமும் எழுதியதில் வெற்றியும் புகழும் கிடைத்தன; திரைப்பட வாழ்க்கைக்கு இது வழிகாட்டியது.

திரைப்படத்தில் நடிப்பதும், நாடகத்தில் நடிப்பதுமாகச் சில நாட்கள் சென்றன. திரைப்படத்து வருமானம் நாடக மேடையில் புதிய முறையில் நாடகங்களை நடத்தவும், காட்சிகளை அமைப்பதற்கும் உதவியாக இருந்தது.

1952-ஆம் ஆண்டு எங்களது சொந்தக் குழுவான சேவா ஸ்டேஜ் நாடக சபா ஆரம்பிக்கப்பட்டது. இலக்கியத் தரம் படைத்த பல எழுத்தாளர்களை நாடக ஆசிரியராக அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பைப் பெற்றோம். அந்த வரிசையில் திரு என்.வி. ராஜாமணி, திரு. தி. ஜானகிராமன், குகன், கு. அழகிரிசாமி, திரு. கோமல் சுவாமிநாதன், திரு. தாமரைமணாளன், திரு. மல்லியம் ராஜகோபால், திரு. எம்.கே. மணி சாஸ்திரி, திரு. கௌசிக் போன்றவர்கள்.

திரு. கலாசாகரம் ராஜகோபால் அவர்கள் கலை இயக்குனராக பணி மேற்கொண்டு, புதிய முறையில் காட்சி அமைப்புகளில் பலரும் பாராட்டும்படி சாதனைகள் செய்தார். கனபரிமாண காட்சி முறையை முதன்முதலில் தமிழக மேடைக்கு அறிமுகம் செய்து வைத்தார். நாடகத்தில் சுழலும் காட்சியையும் அமைத்துக் கொடுத்தார்.

தமிழகத்தில் முதன்முறையாக “நாடகக் கல்வி நிலையம்” ஒன்று ஆரம்பித்து, நடிப்பு – நாடகத் தயாரிப்பு – நாடகம் எழுதுவது – நாடகக் காட்சி அமைப்பு, என்று நான்கு பிரிவுகளை ஏற்படுத்தி, அதில் 16 மாணவ மாணவியர் பயிற்சி பெற வழி செய்தோம். அதில் தோன்றியவர்தான் இன்று புகழடைந்துள்ள நாடக ஆசிரியர் கோமல் சுவாமிநாதன். நடிகையர் வரிசையில் டி.கே. வசந்தாவும் தேர்ச்சி படைத்தவர் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்கு பெருமை உண்டு.

இந்த நாடகக் கல்வி நிலையத்தில் நடிப்புப் பயிற்சி அளிப்பது என்னுடைய கடமையாக இருந்தது. எனது வெகு நாளைய ஆசை மஹாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை மேடை ஏற்ற வேண்டும் என்பது. அதற்காக நானாகவே மஹாகவியின் கவிதைகளில் வர்ணனைகளை எல்லாம் நீக்கிவிட்டு, நாடக உணர்ச்சிகளுக்கு வேண்டிய உரையாடல்களை மட்டும் தொகுத்து, கல்வி நிலைய மாணவர்களுக்கு மொழிப் பயிற்சிக்கு வலிமை ஊட்டுவதற்காகப் பயன்படுத்தினேன்.

இந்தக் கவிதை நாடகப் பயிற்சி நடக்கும் சமயம் அமரர் அவ்வை சண்முகம் அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் வகுப்பு முடிந்து போகும்போது, என்னிடம் தனியாகக் கூப்பிட்டு, இந்தக் கவிதை நாடகத்தை, தொழில்முறை நாடகம் நடத்தும் உங்கள் நடிகர்களைக் கொண்டு மேடை ஏற்றினால் பெருமையாக இருக்குமே எனத் தெரிவித்தார். பிறகு இதே கவிதை நாடகத்தை திரு. பி.எஸ். ராமையா அவர்களிடம் கொடுத்து தொழில் நடிகர்களான நாங்கள் நடிப்பதற்கேற்ற முறையில் நாடக உணர்ச்சியும் பண்பாடும் மெருகேற்றித் தொகுத்தளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டபடி அவரும் செய்து கொடுத்தார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற ஆதரவுடன் நாடகத்தை அரங்கேற்றம் செய்தோம். இது வரை எங்களுக்குக் கிடைக்காத பாராட்டும் வாழ்த்துக்களும் மஹாகவியின் கவிதை நாடகத்தில் நாங்கள் பெற்றோம். அமரர் அவ்வை சண்முகத்துக்கு எனது மானசீகமான அஞ்சலியை நான் இப்போதும் செலுத்திக் கொள்ளுகிறேன்.

இந்த மஹாகவியின் பாஞ்சாலி சபதம் எங்களுக்குத் தமிழகத்தில் மட்டுமல்ல, பம்பாய், கல்கத்தா, டில்லி போன்ற நகரங்களிலெல்லாம் பெருமையும், புகழும் ஏற்படக் காரணமாக இருந்தது. டில்லி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பான முதல் தமிழ் நாடகம் என்ற சிறப்பையும் அடைந்தது. கல்கத்தாவில் மஹாகவி தாகூர் நூற்றாண்டு விழாவில் இந்த நாடகம் நடத்தும் நல்வாய்ப்பையும் பெற்றோம். பெரிய அளவில் அரங்கம் அமைத்திருந்தார்கள். நாடகம் முடிந்ததும் பல வங்காள ரசிகர்கள், கலைஞர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மேடையில் உள்ளே வந்து, எங்களை நேரடியாகப் பாராட்டினார்கள். அவர்கள் “எங்களுக்கு மொழி தெரியாவிட்டாலும், இனிமையான சொற்களை இசை போலக் கேட்க முடிந்தது, காட்சிகளும் நடிப்பும், வெகுவாக எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின, இந்த நாடகம் எங்கள மனத்தில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும்” என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள்.

தென்னகமும் வடநாடும் மட்டுமல்லாமல் பாரதியார் கவிதை மூலம் என்னுடன் ரஷ்யாவுக்கும் பயணமானார். ஆம்! 1961-ஆம் ஆண்டில் பாரதீய நாட்டிய சங்கத்தார் நாடகக் கலையை அறிவது சம்பந்தமாக கலைத் தூதுக்குழு ஒன்றை ரஷ்யாவுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தனர். அதில் தமிழகத்தின் சார்பில் என்னைத் தேர்ந்தெடுத்திருந்தனர். என்னுடன் வங்காள நாட்டு மின்சார நிபுணரான திரு. தபன் சென் அவர்களும் உடன் வந்தார்கள். இவர் மத்திய சர்க்காரது நாடகப் பயிற்சிப் பள்ளியில் சிறந்த நாடகத் தயாரிப்பாளர். நான் வயதில் மூத்தவனாக இருந்தபடியால் என்னை அந்தக் கலைத் தூதுக்குழுவின் தலைவராக அனுப்பி வைத்தார்கள்.

ரஷ்யா செல்லும்போது பாரதியின் கவிதை நாடகமான பாஞ்சாலி சபதத்தை எங்கள் குழு நடிகர்களைக் கொண்டு டேப்பில் ஒலிப்பதிவு செய்து எடுத்துப்போய் மாஸ்கோ வானொலி நிலையத்தில் கொடுத்தேன். அதற்கு அவர்கள் உடன் ஒரு தொகையையும் கொடுத்துவிட்டார்கள். இரு முறை பாஞ்சாலி சபதத்தை ஒலிபரப்பியதாக என் ரஷ்ய நண்பர் திரு. செம்பியன் அவர்கள் எனக்குத் தகவல் தெரிவித்தார்கள்.

பாஞ்சாலி சபதம் கவிதை நாடகம் வெளிநாட்டிலும் எனக்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ளது.

எனது நாடகக்கலை அனுபவத்தில் எத்தனையோ பட்டங்கள், பாராட்டுக்கள் கிடைத்துள்ளன என்றாலும் திருச்சியில் 1959-ஆம் ஆண்டில் கலை இலக்கியப் பெருமன்றம் ஆதரவில் பாஞ்சாலி சபதம் நாடகம் நடைபெறும்போது அவர்கள், செப்பேடு தகட்டில் “பாரதிக் கலைஞன்” என்று பொறுத்துக் கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் கரத்தால் பாராட்டி வழங்கச் செய்ததை நான் இன்னும் பெரிதாக மதித்துப் போற்றி வருகிறேன்.

பாரதியாருக்கு நாடக உணர்வுகள் மிகுதியாக இருந்திருக்கின்றன. பாஞ்சாலி சபதம் இரண்டாவது சூதாட்டச் சருக்கம் ஆரம்பிக்கும் முன் கடவுள் வாழ்த்து வருகிறது. அது நாடகக் கலைக்கு இலக்கணம் யாத்துள்ளதைப் போலுள்ளது. அதை இங்கே எடுத்துக் சொல்ல விரும்புகிறேன்.

தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே
கவிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல் கண்ணீர்த்
துளிவர உள்ளுருக்குதல் இங்கிவை எல்லாம் நீ அருளும் தொழில்களன்றோ!
ஒளிவளருன் தமிழ்வாணீ! அடியேனேற் கிவையனைத்தும் உதவுவாயே!

நாடக உணர்வுகளைத் தட்டி எழுப்பவும் மஹா கவிஞர் தவறவில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம், தமிழ் நாடகங்கள்

பிடித்த கவிதை – பாரதியின் ஊழிக்கூத்து

வெடிபடு மண்டத்திடி பல தாளம் போட – வெறும்
வெளியில் ரத்தக் களியொடு பூதம் பாட – பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடும் ஒலியிற் கூட – களித்து
ஆடுங்காளீ! சாமுண்டீ! கங்காளீ!
அன்னை! அன்னை! ஆடுங்கூத்தை
நாடச் செய்தாய் என்னை

ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக – பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக – அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்தோடே
முடியா நடனம் புரிவாய்! அடுதீ சொரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங்கூத்தை
நாடச் செய்தாய் என்னை

பாழாம் வெளியும் பதறிப்போய் மெய் குலைய – சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய – அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோஹோவென்றலைய – வெறித்து
உறுமித் திரிவாய், செருவெங்கூத்தே புரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங்கூத்தை
நாடச் செய்தாய் என்னை

சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டி – சட்டச்
சடசட சட்டென உடைபடு தாளங்கொட்டி – அங்கே
எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டி – தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்
அன்னை! அன்னை! ஆடுங்கூத்தை
நாடச் செய்தாய் என்னை

காலத்தொடு நிர்மூலம்படு மூவுலகும் – அங்கே
கடவுள் மோனத்தொளியே தனியாய் இலகும் – சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் – கையை
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக் கூத்திடுவாய்!
அன்னை! அன்னை! ஆடுங்கூத்தை
நாடச் செய்தாய் என்னை


இந்தக் கவிதையை மொழிபெயர்க்க முடியாது என்றுதான் தோன்றுகிறது…

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

ரா.அ. பத்மநாபனின் பாரதி புத்தகங்கள்

ரா.அ. பத்மநாபன் முன்னோடி பாரதி ஆய்வாளர். பாரதியோடு பழகியவர்களைத் தேடிப் பிடித்து பேட்டி எடுத்திருக்கிறார். பாரதியின் எழுத்துக்களை தேடி இருக்கிறார். கையெழுத்துப் பிரதி, கேட்டவர் நினைவு கூர்ந்தது எல்லாவற்றையும் ஆவணப்படுத்த முயற்சி எடுத்திருக்கிறார். இணைய வசதி இல்லாத காலத்தில், இன்றுள்ள தொடர்பு சாதனங்கள் இல்லாத காலத்தில் இது எத்தனை கடினம் என்பதை இன்று உணர்வதே கஷ்டம். அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சித்திரபாரதி அவரது தலைசிறந்த முயற்சி. குவளைக்கண்ணன், பரலி சு. நெல்லையப்பர், மண்டையம் ஸ்ரீனிவாசாச்சாரியார், பாரதியோடு பாண்டிச்சேரியில் பழகியவர்கள், அவருக்கு சிறிய, பெரிய அளவில் ஆதரவு தந்தவர்கள், ஏன் அவருக்கு உதவியாக இருந்த வேலைக்கார அம்மணி அம்மாக்கண்ணு, அவரது மகன்கள் எல்லாரையும் தேடிப் பிடித்து பேசி பேட்டி எடுத்து புகைப்படமும் எடுத்திருக்கிறார். இந்தப் புத்தகம் இப்போது அச்சில் இருக்கிறதா என்று தெரியவில்லை…

பாரதி புதையல் பாரதியின் எழுத்துக்களை – குறிப்பாக தொகுக்கப்படாத எழுத்துக்களை ஆவணப்படுத்த அவர் எடுத்த முயற்சி. கையெழுத்துப் பிரதிகளைக் கூட விடாமல் தேடி இருக்கிறார்.

என்ன பிரதிபலனை எதிர்பார்த்து இப்படி உழைத்தார்? மேன்மக்கள்…

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

(பழைய) சினிமாவில் பாரதியார் பாடல்கள்

இந்த யூட்யூப் சுட்டியில் பல அரிய பாரதி பாடல்கள் கிடைக்கின்றன. குறிப்பாக டி.ஆர். மஹாலிங்கம் குரலில் “மோகத்தைக் கொன்றுவிடு“, எம்எல்வி குரலில் “சுட்டும் விழிச்சுடர்தான்” மற்றும் “கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்” ஆகியவற்றை நான் முன்னே கேட்டதில்லை, பரிந்துரைக்கிறேன். Usual suspects ஆன “சின்னஞ்சிறு கிளியே“, டி.ஆர். மகாலிங்கம் குரலில் “சோலை மலரொளியோ“, கப்பலோட்டிய தமிழன் படத்தில் திருச்சி லோகநாதன் குரலில் பாடங்கள் எல்லாம் இருக்கவே இருக்கின்றன. தேவநாராயணன் என்பவரை நான் முன்னே பின்னே கேட்டதே இல்லை, உச்சரிப்பிலிருந்தும் பாடும் பாணியிலிருந்தும் தெலுங்கர் என்று யூகிக்கிறேன், “மங்கியதோர் நிலவினிலே” பாடல் charming ஆக இருந்தது.

கட்டாயம் பாருங்கள்/கேளுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

வெள்ளைக்காரன் சொன்னால்தான் பாரதி கவிஞன்

இன்று பாரதி பிறந்த நாள். இன்று அவர் தமிழகத்தில் ஒரு icon ஆக இருந்தாலும் வாழ்ந்த காலத்தில் படாதபாடு பட்டிருக்கிறார். அவரையே கவிதை எழுத வேண்டாம், உரைநடையில் எழுதும் என்று சொன்ன பத்திரிகை ஆசிரியர் வெள்ளைக்காரன் பாராட்டியதும் கவிதை எழுதும் என்று கேட்டுக் கொண்டாராம். தமிழ்க் கவிதைக்கு வெள்ளைக்காரன் சர்ட்டிஃபிகேட் வேண்டி இருந்திருக்கிறது.

பத்திரிகை ஆசிரியர் யார் என்று தெரியவில்லை, பாரதியிடம் கவிதைகளை கேட்டு வாங்கிய கசின்ஸ் என்ற ஆங்கிலேயரைப் பற்றியும் நான் முன்னால் கேள்விப்பட்டதில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்!

பாரதிதாசன் தேன்கவிகள் தேவை என்ற கவிதையில் விவரிக்கிறார்.

 

பொழுது விடியப் புதுவையிலோர் வீட்டில்
விழி மலர்ந்த பாரதியார் காலை வினை முடித்து
மாடிக்குப் போவார் கடிதங்கள் வந்திருக்கும்
வாடிக்கையாக வரும் அன்பரெல்லாம் வந்திருப்பார்
சென்னைத் தினசரியின் சேதி சில பார்ப்பார்
முன்னாள் அனுப்பிய கட்டுரையும் பாட்டும்
சரியாய்ப் படிந்ததுண்டா இல்லையா என்று
வரி மேல் விரல் வைத்து வாசிப்பார் ஏட்டை

அதன் மேல் அடுக்கடுக்காய் ஆரவாரப் பண்!
நதிப்பெருக்கைப் போற்கவிதை நற்பெருக்கின் இன்ப ஒலி
கிண்டல்கள்! ஓயாச் சிரிப்பைக் கிளப்புகின்ற
துண்டு துணுக்குரைகள்! வீரச் சுடர்க் கதைகள்!
என்னென்ன பாட்டுக்கள்! என்னென்ன பேச்சுக்கள்!
பன்னத் தகுவதுண்டோ நாங்கள் பெறும் பாக்கியத்தை?

வாய் திறப்பார் எங்கள் மாக்கவிஞர் நாங்களெல்லாம்
போய் அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம்
தாம்பூலம் தின்பார், தமிழ் ஒன்று சிந்திடுவார்
காம்பிற் கனிச்சாறாய்க் காதலின் சாற்றைப்
பொழிகின்ற தன்மையால் எம்மைப் புதுக்கி
அழிகின்ற நெஞ்சத்தை அன்பில் நனைத்திடுவார்

மாடியின் மேல் ஓர் நாள் மணி எட்டரை இருக்கும்
கூடிக் கவிச்சுவையைக் கொள்ளையிடக் காத்திருந்தோம்
பாரதியார் வந்த கடிதம் படித்திருந்தார்
சீரதிகம் கொண்டதொரு சென்னைத் தினசரியில்
ஆசிரியர் போட்ட கடிதம் அதுவாகும்
வாசித்தார் ஐயர் மலர் முகத்தில் வாட்டமுற்றார்

“என்னை வசனம் மட்டும் நித்தம் எழுதென்று
சென்னைத் தினசரியின் ஆசிரியர் செப்புகின்றார்
பாட்டெழுத வேண்டாமாம் பார்த்தீரா அன்னவரின்
பாட்டின் பயனறியாப் பான்மையினை” என்றுரைத்தார்

பாரதியார் உள்ளம் பதைபதைத்துச் சோர்வென்னும்
காரிருளில் கால்வைத்தார் ஊக்கத்தால் மீண்டுவிட்டார்
“பாட்டின் பயனறிய மாட்டாரோ நம் தமிழர்?
பாட்டின் சுவையறியும் பாக்கியந்தான் என்றடைவார்?”
என்று மொழிந்தார் இரங்கினார் சிந்தித்தார்
“நன்று மிக நன்று, நான் சலிப்பதில்லை” என்றார்
நாட்கள் சில செல்ல நம்மருமை நாவலரின்
பாட்டின் சுவையறிவோர் பற்பல பேராகிவிட்டார்

ஆங்கிலம் வல்ல கசின்ஸ் என்னும் ஆங்கிலவர்
“நீங்கள் எழுதி நிரப்பும் சுவைக்கவியை
ஆங்கிலத்தில் ஆக்கி அகில அரங்கேற்றுகின்றேன்
பாங்காய் எனக்குப் பாட்டெழுதித் தாருங்கள்”
என்று வரைந்த கடிதத்தை எங்களிடம்
அன்றளித்தார், எம்மை அபிப்பிராயம் கேட்டார்

“வேண்டும் எழுதத்தான் வேண்டும்” என்றோம், பாரதியார்
“வேண்டும் அடி, எப்போதும் விடுதலை” என்று
ஆரம்பம் செய்தார், அரை நொடியில் பாடிவிட்டார்
ஈரிரண்டு நாளில் இனிமை குறையாமல்
ஆங்கிலத்தில் அந்தக் கவிதான் வெளியாகித்
தீங்கற்ற சென்னைத் தினசரியின் ஆசானின்
கண்ணைக் கவர்ந்து கருத்தில் தமிழ் விளைத்தே
எண்ணூறாண்டாய் கவிஞர் தோன்றவில்லை இங்கென்று
வீவீஎஸ் ஐயர் விருப்பத்தைப் பூர்த்தி செய்து
பாவலராம் பாரதிக்கும் ஊக்கத்தைப் பாய்ச்சியதே!

ஆங்கிலவர் பாரதியார் ஆர்ந்த கவித்தேனை
வாங்கி உண்ணக் கண்ட பின்னர் வாயூறிச் சென்னைத்
தினசரியின் ஆசிரியர் “தேவையினித் தேவை,
இனிய கவி நீங்கள் எழுதுங்கள்” என்றுரைத்தார்
தேவையில்லை என்று முன் செப்பிவிட்ட அம்மனிதர்
தேவையுண்டு, தேவையுண்டு! தேன்கவிகள் என்றுரைத்தார்!

“தாயாம் தமிழில் தரும் கவியின் நற்பயனைச்
சேயாம் தமிழன் தெரிந்துகொள்ள வில்லை
அயலார் சுவை கண்டு அறிவித்தார் பின்னர்
பயன் தெரிந்தார் நம் தமிழர்” என்றுரைத்தார் பாரதியார்

நல்ல கவியினிமை நம் தமிழர் நாடுநாள்
வெல்ல அரும் திருநாள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

வ.உ.சி. கண்ட பாரதி


இன்று பாரதி நினைவு நாள் (செப்டம்பர் 11). வ.உ. சிதம்பரம் பிள்ளை எழுதிய நான் கண்ட பாரதி என்ற சிறு புத்தகத்தைப் பற்றி இன்று.

வ.உ.சி.க்கும் பாரதிக்கும் இருந்த நட்பையும், பந்தத்தையும், உறவையும் பற்றி எனக்கு சிறு வயதில், முதன்முதலாக ஏற்பட்ட பிம்பம் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் மூலமாத்தான். ஆனால் வ.உ.சி. சிறை சென்ற பிறகு, பாரதி புதுவை சென்ற பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் மறந்துவிட்டார்களா, உண்மையாகவே ஆழமான நட்புதானா என்று தோன்றவும் செய்தது. வயதான பிறகுதான் உண்மையான பந்தம் இருந்தாலும் குடும்பக் கவலைகளாலும் பணப் பிரச்சினைகளாலும் நெருங்கிய நண்பர்களுக்குள்ளும் தொடர்பு விட்டுப் போகக் கூடும் என்று சொந்த அனுபவத்திலேயே உணர்ந்துகொண்டேன். இருந்தாலும் இருவரும் கடிதம் கூட எழுதிக் கொள்ளவில்லையா என்று தோன்றியது.

வ.உ.சி.யின் மகனான வ.உ.சி. சுப்ரமணியம் அப்பா தன் நண்பரைப் பற்றி எழுதிய குறிப்புகளை 1946-இல் புத்தகமாகப் பிரசுரித்திருக்கிறார். அ.இரா. வேங்கடாசலபதி அதன் கையெழுத்துப் பிரதியையே வாங்கிப் படித்துப் பார்த்தாராம். 1946-இல் வ.உ.சி.யும் இல்லை, பாரதியும் இல்லை என்பது புத்தகத்துக்கு poignancy-ஐத் தருகிறது.

புத்தகம் முழுக்க முழுக்க வ.உ.சி.யின் பர்சனல் நினைவுகள். சிதம்பரம் பாரதிக்கு பத்து வருஷம் மூத்தவர். ஆனால் பாரதிதான் சிதம்பரத்துக்கு மாமா; சிதம்பரம் பாரதிக்கு மாப்பிள்ளை. சிதம்பரத்தின் சிறு வயதில் பாரதியின் அப்பா சின்னச்சாமி ஐயர் சிதம்பரத்தின் சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்துக்கு அடிக்கடி வருவாராம். பாரதியைப் பற்றி சிதம்பரம் கேள்விப்பட்டிருக்கிறார். சென்னை சென்றபோது ஒரு முறை பார்த்திருக்கிறார். இருவருக்கும் விடுதலை வேட்கை; வெள்ளைக்காரன் மீது கோபம். திலகர் கோஷ்டி. பிபின் சந்திரபாலால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். நட்பு பற்றிக்கொண்டுவிட்டது. சூரத் காங்கிரசிற்கு இருவரும் சேர்ந்து போய் திலகர் பக்கம் நின்று போராடி இருக்கிறார்கள். சிதம்பரம் விஞ்ச்-சிதம்பரம் பற்றி பாடிய பாட்டை எல்லாம் தண்டனைக்கு முன் பாரதி வாயாலேயே கேட்டு மகிழ்ந்திருக்கிறார். சிதம்பரம் சிறை சென்றபின் பாரதி கப்பல் கம்பெனியைக் காப்பாற்றுங்கள் என்று பிச்சையே எடுத்திருக்கிறார். Literal ஆகவே மூர்மார்க்கெட்டில் நின்று பேசி சேர்த்த பணம் ஒரு ரூபாய், எட்டணா என்றெல்லாம் குறிப்பு இருக்கிறது. ஆனால் லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டிருக்கிறது, சில நூறுகள்தான் சேர்ந்திருக்கின்றன. சிதம்பரம் விடுதலை ஆன பிறகு புதுவை சென்று பாரதியை சந்தித்திருக்கிறார்.

தான் கடைசியாக பாரதியை சந்தித்தது பற்றி வ.உ.சி. எழுதி இருப்பது உள்ளத்தைத் தொடும் நிகழ்ச்சி. சென்னையில் ஒரு நாள் சிதம்பரம் வீட்டுக்கு பாரதியும் ஒரு சாமியாரும் போயிருக்கிறார்கள். வீட்டில் சிதம்பரம் இல்லை. சிதம்பரத்தின் மனைவியிடம் உரிமையோடு சோறு போடு என்று கேட்டு வாங்கி சாப்பிட்டுவிட்டு (பாரதிக்கு ஜாதி ஆசாரம் எதுவும் கிடையாது என்பதை பல முறை பாரதிதாசனும் சொல்லி இருக்கிறார்.) இருவரும் அங்கேயே வராந்தாவில் தூங்கி இருக்கிறார்கள். சிதம்பரம் வந்ததும் பாரதிக்கு கண்ணில் ஒளி இல்லை என்று கவனிக்கிறார். பிறகு பாரதியும் சாமியாரும் எலுமிச்சங்காய் அளவில் கஞ்சா தின்பதைக் கண்டு சிதம்பரம் அதிர்ந்திருக்கிறார். “அடப்பாவி! காலையிலேயே இவ்வளவா!” என்று கேட்க பாரதியோ கூலாக “நீ திட்டுவாய் என்றுதான் இவ்வளவு குறைவாக எடுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார்.

உண்மையான தியாகிகளுக்கு செத்த பிறகுதான் சிலை வைக்கிறோம், அதுவும் சில சமயம் மட்டுமே.

புத்தகத்தை இணைத்திருக்கிறேன், படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

(குவளைக்) கண்ணன் என் சேவகன் – பாரதியார் கவிதை

கண்ணன் என் சேவகன் கவிதை பாரதியின் அணுக்கர் குவளைக்கண்ணனை மனதில் வைத்துத்தான் எழுதப்பட்டது என்கிறார்கள். ஏழெட்டு வயதில் பாரதியார் கவிதைகளைப் படித்தபோது மனம் கவர்ந்த கவிதைகளில் ஒன்று. “பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பான்” என்ற வரிக்கு விழுந்து விழுந்து சிரித்தது நினைவிருக்கிறது. “எள் வீட்டில் இல்லை என்றால் எங்கும் முரசறைவார்’ என்ற வரியும் கவர்ந்தது.

கூலி மிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்
ஏனடா நீ நேற்றைக்கிங்கு வரவில்லை என்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறு செய்வார்
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம்பலத்துரைப்பார்
எள் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்
சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு, கண்டீர்
சேவகரில்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை

இங்கிதனால் யானும் இடர் மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
மாடு கன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்
சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன்
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்
காட்டு வழியானாலும் கள்ளர் பயமானாலும்
இரவிற் பகலிலே எந்நேரமானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறாமற் காப்பேன்
கற்ற வித்தை ஏதுமில்லை காட்டு மனிதன் ஐயே!
ஆன பொழுதும் கோலடி குத்துப்போர் மற்போர்
நானறிவேன் சற்றும் நயவஞ்சனை புரியேன்
என்று பல சொல்லி நின்றான் ஏது பெயர்? சொல் என்றேன்
ஒன்றுமில்லை கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான்

கட்டுறுதி உள்ள உடல் கண்ணிலே நல்ல குணம்
ஒட்டுறவே நன்றாய் உரைத்திடும் சொல் ஈங்கிவற்றால்
தக்கவனென்றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்
மிக்க உரை பல சொல்லி விருது பல சாற்றுகிறாய்
கூலி என்ன கேட்கின்றாய்? கூறு என்றேன் ஐயனே!
தாலி கட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதுமில்லை
நானோர் தனியாள் நரை திரை தோன்றாவிடினும்
ஆன வயதிற்களவில்லை தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை என்றான்

பண்டைக் காலத்துப் பைத்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை
ஆளாகக் கொண்டுவிட்டேன் அன்று முதற்கொண்டு
நாளாக நாளாக நம்மிடத்தே கண்ணனுக்கு
பற்று மிகுந்து வரல் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மை எல்லாம் பேசி முடியாது
கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன்
வீதி பெருக்குகிறான் வீடு சுத்தமாக்குகிறான்
தாதியர் செய் குற்றமெலாம் தட்டி அடக்குகிறான்
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்க நயம் காட்டுகிறான் ஒன்றும் குறைவின்றி
பண்டமெலாம் சேர்த்து வைத்து பால் வாங்கி மோர் வாங்கி
பெண்டுகளைத் தாய் போல பிரியமுற ஆதரித்து
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி என்று சொன்னான்.
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!

கண்ணன் எனதகத்தே கால் வைத்த நாள் முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்
செல்வம் இளமாண்பு சீர்ச சிறப்பு நற்கீர்த்தி
கல்வி அறிவு கவிதை சிவயோகம்
தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!
கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!
கண்ணனை யாம் கொள்ளக் காரணமும் உள்ளனவே!


படிக்காத மேதை திரைப்படத்தில் இந்தக் கவிதையிலிருந்து நாலு வரிகளை எடுத்து பயன்படுத்தி இருப்பார்கள்.


குவளைக்கண்ணன் பாரதியாரின் அணுக்கர். மரியாதையாகச் சொல்ல வேண்டுமென்றால் தோழர். ஏறக்குறைய அல்லக்கைதான். பாரதிக்கு பாதுகாவலர் போல இருந்திருக்கிறாராம். அவரைத் தாண்டித்தான் பாரதியை அணுக முடியுமாம். பாரதியை யானை தாக்கியபோது இவர்தான் போய் பாரதியை தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார்.

ஆசாரமான பிராமணர் குடும்பத்தில் பிறந்தவராம். தயக்கங்கள் இருந்தும் பாரதி சொன்னதால் அந்தக் காலத்தில் முதலியார் வீட்டில் எல்லாம் சாப்பிட்டிருக்கிறாராம். குவளைக்கண்ணன்தான் புதுவையில் பாரதிக்கு பல சாமியார்களை அறிமுகம் செய்து வைத்தாராம். குவளைக்கண்ணனுக்கு ஏதோ கம்பெனியில் வேலை கிடைத்தபோது பாரதி நீ போகக்கூடாது, போனால் எனக்குத் துணையில்லை என்று தடுத்துவிட்டாராம்.

பாரதி புதுவைக்கு வந்தபோது இவர் மூலமாக சுந்தரேச ஐயர் என்ற வாசகர்/அன்பரை சந்தித்தாராம். இவருக்கும் பாரதி, இந்தியா பத்திரிகை மேல் ஈர்ப்பு இருந்தாலும் இவர்தான் பாரதி என்று தெரிந்து கொள்ள நாளாயிற்றாம்.

பாரதிக்கு எப்படி இந்த மாதிரி ஒரு “சீடர்” குழு அமைந்தது என்று வியப்பாகத்தான் இருக்கிறது. வேலை வெட்டி இல்லாமல் இவரோடு சுற்றிக் கொண்டிருந்தால் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்? குவளைக்கண்ணனே கி.வா.ஜ.விடம் சொன்னாராம்.

நான் ஏழை; அறிவில்லாதவன். அவர் எனக்கு தன் செய்யுட்களில் ஒரு ஸ்தானம் கொடுத்திருக்கிறார். “கிருஷ்ணா, பொருட்செல்வம் அழிந்துவிடுமடா; கவிச்செல்வம் தருகிறேன் உனக்கு”

கடைசி காலத்தில் பொருளாதார ரீதியாக கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கிறார் என்று கி.வா.ஜ. சொல்கிறார். பாரதி மாதிரி அபூர்வ ஆளுமைகளிடம் இந்த மாதிரி ஒரு ஸ்தானம் கிடைத்தால் மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான் போலிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
கி.வா.ஜ. குவளைக்கண்ணனின் கடைசி காலத்தை நினைவு கூர்கிறார்.
பாரதி-குவளைக்கண்ணன் முதல் சந்திப்பு

பிடித்த பாரதி கவிதை – ஒளியும் இருளும்

வானமெங்கும் பரிதியின் சோதி
மலைகள் மீதும் பரிதியின் சோதி
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி
மானவன் தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது என்னே!

நீர்ச்சுனைக்கணம் மின்னுற்றிலக,
நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள,
கார்ச்சடை கருமேகங்கள் எல்லாம்
கனகம் ஒத்துச் சுடர் கொண்டுலாவ
தேர்ச்சி கொண்டு பல்சாத்திரம் கற்றும்
தெவிட்டொணாத நல்லின்பக் கருவாம்
வேர்ச்சுடர் பரமாண்பொருள் கேட்டும்
மெலிவொர் நெஞ்சிடை மேவுதல் என்னே!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

செந்தமிழ் நாடென்னும் போதினிலே

பாரதிதாசன் பாரதியின் – இல்லை இல்லை ஐயரின் – பரமபக்தர் என்பது தெரிந்ததே. பாண்டிச்சேரியில் பாரதி வாழ்ந்த காலத்தில் “செந்தமிழ் நாடென்னும் போதினிலே” என்ற கவிதையை எழுதி இருக்கிறார். கவிதை எப்படிப் பிறந்தது என்று பாரதிதாசன் விவரிக்கிறார்.

தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால்
அமைவான பாட்டுக்களிப்போம் பரிசென்று
சான்ற மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் உரைத்தார்

தேன்போற் கவி ஒன்று செப்புக நீர் என்று
பல நண்பர் வந்து பாரதியாரை
நலமாகக் கேட்டார்: அதற்கு நம் ஐயர்
என் கவிதான் நன்றாய் இருந்திடினும் சங்கத்தார்
புன்கவி என்றே சொல்லிப் போட்டிடுவார், போட்டால்தான்
சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும், ஆதலினால்
உங்களுக்கு வேண்டுமெனில் ஓதுகின்றேன் என்றுரைத்தார்
அந்தவிதம் ஆகட்டும் என்றார்கள் நண்பரெலாம்

“செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே” என்று
அழகுத் தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால்
எழுதி முடித்தார் இசையோடு பாடினார்

காதினிக்கும் நல்ல கருத்தினிக்கும் பாட்டிந்நாள்
மேதினியிற் சோதி விளக்கு.


பாரதியின் கவிதை:

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் – இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு

முத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு – செல்வம்
எத்தனை உண்டு புவி மீதே – அவை
யாவும் படைத்த தமிழ்நாடு

நீலத் திரைக்கடலோரத்திலே – நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே – புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் – மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் – மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

சிங்களம் புட்பகம் சாவகம் – ஆகிய
தீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் – நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு

விண்ணை இடிக்கும் தலை இமயம் – எனும்
வெற்பை அடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ் வீசிக் – கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

பாரதி செய்த அலப்பறை

நான் சின்ன வயதில் கிராமங்களில் வளர்ந்தவன். அங்கே எல்லாம் டெண்டு கொட்டாய்தான். சேர், பெஞ்ச், தரை டிக்கெட். அப்பா/அம்மாவோடு திரைப்படம் பார்க்கப் போனால் சேர் டிக்கெட். நண்பர்களோடு போனால் தரை டிக்கெட், இருபது பைசா இருந்தால் கலர் வேறு குடிக்கலாம். தரை டிக்கெட் விலை 35 பைசாவிலிருந்து 40 பைசாவுக்கு ஏறியபோது விலைவாசி உயர்வு எப்படி எல்லாம் வாழ்க்கையை பாதிக்கிறது என்று ஒன்பது பத்து வயதுப் பையன்கள் நிறைய பேசி இருக்கிறோம்.

அங்கே வரும் திரைப்படங்களில் – அனேகமாக, 50-60களின் திரைப்படங்கள் – ராஜா-ராணி திரைப்படங்கள் நிறைய உண்டு. க்ளைமாக்சில் வில்லன்/வில்லி யாருக்காவது விஷம் கொடுக்க முயற்சி செய்தால் ஏதோ குழப்பம் நடந்து அவர்களே குடித்துவிடுவார்கள். தவறவே தவறாது. அப்படி ஒரு காட்சி வந்தால் நண்பர்கள் எல்லாம் ‘ஐயய்யோ’ mode-க்கு போய்விடுவோம். பின்னே என்ன, விஷத்தை குடித்தோமா, செத்தோமா, படத்தை முடித்தோமா என்றில்லாமல் ஐந்து நிமிஷம் வசனம் பேசிவிட்டுத்தான் சாவார்கள்.

1910களிலேயே இப்படித்தான் போலிருக்கிறது. பாரதி நாடகம் பார்க்கும்போது செய்த அலப்பறையை பாரதிதாசன் விவரிக்கிறார்.

ஒரு நாள் நம் பாரதியார் நண்பரோடும்
உட்கார்ந்து நாடகம் பார்த்திருந்தார் அங்கே
ஒரு மன்னன் விஷமருந்தி மயக்கத்தாலே
உயிர்வாதை அடைகின்ற சமயம் அன்னோன்
இருந்த இடந்தனிலிருந்தே எழுந்துலாவி
“என்றனுக்கோ ஒருவித மயக்கந்தானே
வருகுதையோ” எனும் பாட்டைப் பாடலானான்

வாய் பதைத்து பாரதியார் கூவுகின்றார்
மயக்கம் வந்தால் படுத்துக்கொள்ளுவதுதானே
வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா என்றார்!
தயங்கிப் பின் சிரித்தார்கள் இருந்தோரெல்லாம்

சரிதானே பாரதியார் சொன்ன வார்த்தை!
மயக்கம் வரும் மதுவருந்தி நடிக்க வந்தான்
மயக்கவிஷம் உண்டது போல் நடிப்புக் காட்டும்
முயற்சியிலும் ஈடுபட்டான் தூங்கிவிட்டால்
முடிவு நன்றாயிருந்திருக்கும் சிரமம் போம்!

அனேகமாக இந்த நாடகம் வி.ஏ. தியாகராஜ செட்டியார் எழுதிய அதிரூப அமராவதியாக இருக்க வேண்டும். அதில்தான் இப்படி ஒரு பாடல் வரும் என்று நினைவு.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்