சிறுவர்களுக்கான புத்தகங்கள்

(மீள்பதிவு)

எனக்கு ஆறேழு வயது இருக்கும்போது என் அம்மா உள்ளூர் நூலகத்தில் உறுப்பினராக சேர்த்துவிட்டாள். முதன்முதலாக நானே படித்த கதையில் ஒரு ஓநாய் பன்றிக்குட்டிகளை வாக் கூட்டிக்கொண்டு போகிறேனே என்று அம்மா பன்றியிடம் கேட்கும், அம்மா பன்றி போ போ என்று துரத்திவிடும். புத்தகம் பேர் நினைவில்லை.

நூலகம் பள்ளிக்கு அடுத்த கட்டிடம். பத்து நிமிஷம் இன்டர்வல் விட்டால் கூட நான் நூலகத்துக்கு ஓடிவிடுவேன். அங்கே ஒரு நூறு நூற்றைம்பது சிறுவர் புஸ்தகம் இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் படித்தேன். அப்புறம் அம்மா கை காட்டியவற்றை படிக்க ஆரம்பித்தேன்.

என் வாழ்க்கையின் முதல் ஸ்டார் எழுத்தாளர் வாண்டு மாமாதான். அவருடைய கதைகள் எல்லாவற்றையும் விரும்பிப் படித்திருக்கிறேன். அதுவும் நூலகத்தில் இருந்த காட்டுச்சிறுவன் கந்தன் புத்தகம் எனது ஃபேவரிட். கந்தனின் சித்தப்பா ராஜ்யத்தைப் பறித்துக் கொண்டு கந்தனை விரட்டிவிட, கந்தன் காட்டில் வளர்வான். அங்கே அவனுக்கு ஒரு பெரிய பொக்கிஷம் கிடைக்கும். பல மிருகங்கள் அவனுக்கு உதவி செய்யும். சித்தப்பா செய்யும் கொடுமைகளை எதிர்ப்பதும், மக்களுக்கு உதவி செய்வதும்தான் கதை. இன்று கிடைத்தால் நாஸ்டால்ஜியாவுக்காகவே வாங்கி வைப்பேன்.

அப்புறம் கோகுலம் என்று ஒரு பத்திரிகை அப்போது வரும். அதற்கு அவர்தான் ஆசிரியர் என்று நினைக்கிறேன். அதை விரும்பிப் படித்தேன். பலே பாலு என்ற ஒரு காமிக்ஸ் சீரிஸ் வரும். படங்களும் கதையும் ரொம்பவே பிடிக்கும். அதில் வந்த மந்திரக் கம்பளம் என்ற புத்தகம் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.

வாண்டு மாமாவைப் பற்றி தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் ஒரு விவரமான பதிவு இருக்கிறது. (ஃபோட்டோவும் அங்கே கிடைத்ததுதான்) அவர் எழுதிய எல்லா புத்தக விவரங்களும் அங்கே இருக்கின்றன.

அம்புலி மாமாவில் வரும் சித்திரங்கள் பிரமாதமாக இருக்கும். ஆனால் ஏனோ வாங்கியதில்லை. எப்போதாவது நண்பர்கள் வீட்டில் கிடைத்தால் படித்ததோடு சரி. ரத்னபாலா என்ற ஒரு பத்திரிகையும் நினைவிருக்கிறது.

வாண்டு மாமாவுக்கு அடுத்தபடியாக கல்வி கோபாலகிருஷ்ணன் என்று ஒருவர் எழுதும் புத்தகங்கள் பிடித்திருந்தன. இன்னும் நினைவிருப்பது ஏதோ மருந்தைக் குடித்து மிகச்சிறு உருவம் ஆகிவிட்ட ஒரு சிறுவன் பற்றிய கதைதான். அறிவியலை அந்த சிறுவனுக்கு ஏற்படும் நிகழ்ச்சிகளை வைத்து சொல்லித் தருவார். டாக்டர் அப்பா மாற்று மருந்து கண்டுபிடிப்பதுடன் கதை முடியும்.

காட்டுச்சிறுவன் கந்தன் தவிர படித்த புத்தகங்களில் எனக்கு நன்றாக நினைவிருப்பது இரண்டுதான் – காவேரியின் அன்பு, ஆலம் விழுது. இரண்டுமே பூவண்ணன் எழுதியவை. காவேரி கொஞ்சம் கோரமான உருவம் படைத்த கோபக்கார டீனேஜ் சிறுவனின் மீது செலுத்தும் அன்பு அவனை மாற்றுவது என்று முதல் கதை. ஆலம்விழுதிலோ குடும்பத்தில் பற்றாக்குறை. குழந்தைகள் பட்ஜெட் போட்டு குடும்பத்தை சிறப்பாக நடத்துகிறார்கள். இது கன்னடத்தில் நம்ம மக்களு என்று சினிமாவாகவும் வந்தது. ((அதில் ஒரு நல்ல காட்சி – ஸ்கூலில் ராமாயணம் டிராமா. ராவணன் சீதையின் சுயம்வரத்துக்கு வருவான். தோளைத் தட்டி என்னை போல பலசாலி உண்டா என்று நாலு வரி பாடிவிட்டு பிறகு தெரியாத்தனமாக வில்லை எடுத்து உடைத்துவிடுவான். என்ன செய்வது என்று தெரியாமல் டீச்சர் திரை போட்டுவிட்டு பிறகு அது சும்மா முதல் ரவுண்ட், லுலுலாயி வில்தான், இதோ உண்மையான வில் என்று சமாளிப்பார்)

அதைத் தவிர முத்து காமிக்ஸ். இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ என்று மூன்று மனம் கவர்ந்த ஹீரோக்கள். அதுவும் மாயாவிதான் டாப். அப்புறம் பலர் – ரிப் கேர்பி, ஃ பாண்டம், மாண்ட்ரேக் – என்று வந்தாலும் இவர்கள் போல ஆகுமா?

என் பெண்களுக்காக பனிமனிதன் என்று ஜெயமோகன் எழுதிய ஒரு புத்தகத்தை சில வருஷம் முன்னால் வாங்கினேன். அவர்களுக்கு தமிழ் படிக்கத் தெரியாது, அதனால் நான்தான் படித்து கதை சொன்னேன். அவர்களுக்கு இப்போது சுத்தமாக மறந்துவிட்டாலும் கதை கேட்கும்போது மிகுந்த ஆர்வத்தோடு கேட்டார்கள்.

என்ன ஒரு சோகம் பாருங்கள்! மிகுந்த ஆர்வத்தோடு படித்த நாட்கள். ஆனால் மூன்று நான்கு புத்தகங்கள், சில காமிக்ஸ் தவிர வேறு எதுவும் நினைவில் தங்கவில்லை.

ஆங்கிலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த சோகம் இன்னும் அதிகமாகிறது. நான் 13, 14 வயதில்தான் ஆங்கிலப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். எனிட் ப்ளைடன் (Enid Blyton) எழுதிய ஒரு புத்தகத்திலிருந்து ஆரம்பித்தேன். இந்த மாதிரி புத்தகங்களை கடந்தாயிற்று என்று அப்போதே தெரிந்தது. இருந்தாலும் இங்கிலீஷ் புஸ்தகம், சீன் காட்டலாம் என்று ஒரு பத்து புத்தகம் படித்திருப்பேன். இந்த மாதிரி எல்லாம் தமிழில் புத்தகம் இல்லையே என்று தோன்றிக்கொண்டே இருந்தது. இன்றும் Just So Stories மாதிரி ஒரு புத்தகத்தை என் பெண்களுக்கு படித்துக் காட்டும்போது குதுகலமாக இருக்கிறது. ரொவால்ட் டால் எழுதிய BFG புத்தகம் என் பெண்ணுக்கு லிடரேச்சர் கிளாசில் பாடம், அதைப் படித்துவிட்டு சின்ன வயதில் படிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டிருக்கிறேன்.Wind in the Willows, Peter Pan, Pinnochio, Treasure Island, Wizard of Oz, Narnia, Jungle Book, Hobbit, Lord of the Rings என்று பல புத்தகங்கள் இருக்கின்றன. தற்காலத்திலோ ஹாரி பாட்டர், ஆர்டமிஸ் ஃபவுல், ரிக் ரியோர்டான் எழுதும் கதைகள் என்று எக்கச்சக்கமாக இருக்கின்றன. தமிழில்?

அது சரி, பெரியவர்கள் புத்தகங்களே விற்பதில்லையாம், சிறுவர் புத்தகங்களை எழுதி எழுத்தாளன் எப்படி பிழைப்பது?

இன்றைய நிலை எனக்குத் தெரியாது. மாறி இருந்தால் சொல்லுங்கள், சந்தோஷமாக இருக்கும்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்

தொடர்புடைய பதிவுகள்:
வாண்டு மாமா பற்றிய தமிழ் காமிக்ஸ் உலகம்
ஆன்லைனில் வாண்டு மாமாவின் “மந்திரக் கம்பளம்” கதை

சிறுவர் புத்தகம் – ‘Winnie the Pooh’

Winnie the Pooh மற்றும் The House at Pooh Corner. Delightful. உங்கள் குழந்தைகளுக்குப் படித்துக் காட்டுங்கள் என்பதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்

குழந்தையும் தெய்வமும் திரைப்படத்தின் மூலக்கதை – எரிக் காஸ்ட்னர் எழுதிய Lisa and Lottie

Parent Trap திரைப்படத்தை நம்மில் அனேகர் பார்த்திருப்போம். எனக்குப் பிடித்தது 1998-இல் லிண்ட்ஸே லோஹன் நடித்த படம். 1961-இல் ஹேய்லி மில்ஸ் நடித்து வெளிவந்ததுதான் முதல் படம். தமிழில் குழந்தையும் தெய்வமும் என்று ஜெய்ஷங்கர், ஜமுனா, குட்டி பத்மினி நடித்து வெளிவந்தது. ஹிந்தி, தெலுகு, கன்னடம், மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் வந்திருக்கிறது.

அதன் மூலக்கதைதான் எரிக் காஸ்ட்னர் ஜெர்மன் மொழியில் எழுதிய Lisa and Lottie புத்தகம். காஸ்ட்னர் ஜெர்மானிய எழுத்தாளர். அனேகமாக சிறுவர் புத்தகங்களைத்தான் எழுதி இருக்கிறார். ஒரு காலத்தில் பிரபலமாக இருந்திருப்பார் போலிருக்கிறது. 1992-இல் ஒரு asteroid-க்கு அவர் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

காஸ்ட்னரின் நாவலில் ஒன்பது வயதுச் சிறுமிகள். வியன்னாவில் இசை conductor அப்பாவோடு வளரும் லிசா; ம்யூனிக்கில் பத்திரிகையாளர் அம்மாவோடு வளரும் லாட்டி இருவரும் குழந்தைகளுக்கான camp ஒன்றில் சந்திக்கிறார்கள். ஆள் மாறாட்டம், உண்மை தெரிந்து அம்மா அப்பா மீண்டும் இணைந்து சுபம்!

புத்தகத்தில் நான் மிகவும் ரசித்தது சித்திரங்களைத்தான். இப்படி படங்களோடு ஒரு புத்தகத்தைப் படித்து எத்தனையோ நாளாயிற்று.

இரண்டாவதாக ரசித்தது புத்தகத்தின் காலகட்டம். 1950களின் முற்பகுதி என்று நினைக்கிறேன். இன்னும் தபால் மூலம்தான் லிசாவும் லாட்டியும் தொடர்பு கொள்கிறார்கள். ம்யூனிக்கில் இருந்து வியன்னாவுக்கு விமானத்தில் போவது கொஞ்சம் அபூர்வமே. பெரிய பெரிய சூப்பர்மார்க்கெட்டுகளைக் காணோம், கசாப்புக் கடை, மளிகைக் கடை எல்லாம் இருக்கிறது. கடைக்காரர்களுக்கு ரெகுலர் கஸ்டமர்களைத் தெரிகிறது, மளிகைக்கடைக்காரர் camp-இலிருந்து திரும்பி வரும் சிறுமிக்கு சாக்லேட் கொடுக்கிறார். அந்தக் காலகட்டத்தோடு பரிச்சயம் உள்ள நானே கடிதம் எழுதி எத்தனையோ வருஷம் ஆயிற்று, இன்றைய இன்ஸ்டாக்ராம் தலைமுறைக்கு தபால் என்றால் கேலிக்கூத்தாகத்தான் இருக்கும்!

படங்களோடு புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள். ஆனால் புத்தகத்தைப் படிப்பதை விட லிண்ட்ஸே லோஹன் நடித்த திரைப்படத்தைப் பார்ப்பது உத்தமம்.

குழந்தையும் தெய்வமும் திரைப்படத்திலிருந்து எனக்குப் பிடித்த பாடல்கள்:

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்

Jabberwocky

இரண்டு மூன்று நாட்களுக்கு முன் கண்ணில் பட்ட ‘கவிதை’. ஜாபர்வாக்கி, Walrus and the Carpenter, எட்வர்ட் லியரின் limericks, சுகுமார் ரேயின் ஹா ஜா போ லா ரா போன்றவை சிறு வயதில் படிக்க ஏற்றவை என்பார்கள். எனக்கோ இவற்றில் கிடைக்கும் மகிழ்ச்சி enjoyment இத்தனை வயதான பிறகும் குறையவே இல்லை. மன அளவில் நான் வளரவே இல்லை என்று நினைக்கிறேன்!

‘Twas brillig, and the slithy toves
Did gyre and gimble in the wabe:
All mimsy were the borogoves,
And the mome raths outgrabe.

“Beware the Jabberwock, my son!
The jaws that bite, the claws that catch!
Beware the Jubjub bird, and shun
The frumious Bandersnatch!”

He took his vorpal sword in hand;
Long time the manxome foe he sought—
So rested he by the Tumtum tree
And stood awhile in thought.

And, as in uffish thought he stood,
The Jabberwock, with eyes of flame,
Came whiffling through the tulgey wood,
And burbled as it came!

One, two! One, two! And through and through
The vorpal blade went snicker-snack!
He left it dead, and with its head
He went galumphing back.

“And hast thou slain the Jabberwock?
Come to my arms, my beamish boy!
O frabjous day! Callooh! Callay!”
He chortled in his joy.

’Twas brillig, and the slithy toves
Did gyre and gimble in the wabe:
All mimsy were the borogoves,
And the mome raths outgrabe.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர்களுக்காக

மார்க் ட்வெய்ன் எழுதிய “ப்ரின்ஸ் அண்ட் த பாப்பர்”

prince_and_the_pauperஎனக்குப் பிடித்த சிறுவர் புத்தகங்களில் ஒன்று.

சாதாரண ஆள் மாறாட்டக் கதைதான். இங்கிலாந்தின் இளவரசனும் ஒரு ஏழைச் சிறுவனும் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறார்கள், இடம் மாறிவிடுகிறார்கள். போலி இளவரசனுக்கு ராஜாவாக பட்டம் சூட்டப்படும் தறுவாயில் உண்மை இளவரசன் வெளிப்படுகிறான், அவ்வளவுதான். அதை “திரைக்கதையாக” எழுதி இருக்கும் விதம்தான் இந்தப் புத்தகத்தை ஒரு ஜாலியான புத்தகமாக மாற்றுகிறது.

இளவரசன் எட்வர்டும் ஏழைச் சிறுவன் டாமும் தற்செயலாக சந்திக்கிறார்கள். எட்வர்ட் டாமை அரண்மனைக்குள்ளே அழைத்துச் செல்கிறான். விளையாட்டாக இருவரும் உடைகளை மாற்றிக் கொள்கிறார்கள். கொஞ்சம் வெளியே வரும் எட்வர்டை காவலர்கள் அரண்மனையை விட்டு துரத்திவிடுகிறார்கள். அரண்மனைக்கு வெளியே வரும் எட்வர்டை எல்லாரும் ஏழைச்சிறுவன் என்றே நினைக்கிறார்கள். உள்ளே இருக்கும் டாமை இளவரசன் என்று நினைக்கிறார்கள். டாம் தான் இளவரசன் இல்லை என்று சொல்வதை யாரும் நம்புவதில்லை. அவனுக்கு மனநிலை பிறழ்ந்துவிட்டதோ என்று வைத்தியம் பார்க்கிறார்கள். வெளியே வரும் எட்வர்ட் தான் இளவரசன் என்று சொன்னால் பைத்தியம் என்று அவனைத் தாக்குகிறார்கள்.

மைல்ஸ் ஹெண்டன் என்ற வீரன் எட்வர்டை தாக்குதலிலிருந்து காக்கிறான். ஹெண்டன் சிறுவனுக்கு பைத்தியம், அதனால்தான் தான் இளவரசன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறான். சிறுவன் மேல் இரக்கம் கொண்டு அவனைப் பாதுகாக்கிறான். ஏழைச் சிறுவனின் “பிரமைகளை” உடைக்க அவன் விரும்பவில்லை. எட்வர்ட் நீதி-சட்டம் எப்படி ஏழைகளுக்கு எதிராக செயல்படுகிறது என்பதை நேரடியாகப் பார்க்கிறான். தான் அரசனாகும்போது இதை நிறுத்துவேன் என்று உறுதி கொள்கிறான். ஒரு கட்டத்தில் அவனும் ஹெண்டனும் பிரிந்துவிட, அவன் தனியாக டாமுக்கு முடிசூட்டும் விழாவுக்குச் சென்று அதைத் தடுத்து நிறுத்துகிறான். பல கேள்விகளுக்கு பதிலளித்து தானே உண்மையான இளவரசன் என்று நிரூபிக்கிறான். டாம் தான் இளவரசன் இல்லை என்று சொல்வதை எல்லாரும் இப்போதுதான் நம்புகிறார்கள். எட்வர்ட் அரசனாகிறான்.

ஹெண்டன் எட்வர்டுடன் இருக்கும்போது எட்வர்ட் தான் இளவரசன், தனக்குரிய மரியாதைகளில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறான். ஏழைச் சிறுவன் மீது இரக்கப்பட்டு ஹெண்டன் எட்வர்ட் எதிர்பார்க்கும் முறைமைகளில், மரியாதைகளில் குறை வைக்காமல் பார்த்துக் கொள்கிறான். எட்வர்ட் இப்படி என்னைப் பாதுகாப்பதற்கு உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்கும்போது ஹெண்டன் இளவரசன் முன்னால் உட்கார அனுமதி கேட்கிறான். அவனுக்கு நின்று நின்று கால் வலிக்கிறது! கடைசி காட்சியில் எட்வர்டுக்கு பட்டம் சூட்டப்பட்ட பிறகுதான் ஹெண்டன் அவனை அரசவையில் மீண்டும் பார்க்கிறான். உடனே உட்கார்ந்து கொள்கிறான்! அவனை கைது செய்ய விரையும் காவலர்களை முன்னாள் ஏழைச்சிறுவன்-இளவரசன், இன்னாள் ராஜா தடுத்து அது ஹெண்டனுக்குத் தரப்பட்ட உரிமை என்பதை எல்லாருக்கும் அறிவிக்கிறான். சிறந்த காட்சி.

mark_twainட்வெய்ன் சிறுவர் புத்தகங்களாகப் படிக்கக் கூடிய Tom Sawyer, Huckleberry Finn, Connecticut Yankee in King Arthur’s Court என்று சில புத்தகங்களை எழுதி இருக்கிறார். இவற்றில் Huckleberry Finn மற்றும் Connecticut Yankee இரண்டும் சிறுவர் புத்தகங்களாகவும் படிக்கக் கூடியவை, பெரியவர்களும் படிக்கக் கூடியவை என்பதுதான் சிறப்பு.

எர்ரால் ஃப்ளின், க்ளாட் ரெய்ன்ஸ் நடித்து 1937-இல் திரைப்படமாகவும் வந்தது.

இதைப் படிக்க ஏற்ற வயது எட்டிலிருந்து பனிரண்டு வரை என்று நினைக்கிறேன். குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள்!


தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்

சிறுவர்களுக்கான 15 புத்தகங்கள்

கார்டியன் பத்திரிகையின் தேர்வு இங்கே – வசதிக்காக பட்டியல் கீழே.

Alice in Wonderland இல்லாத இந்த பட்டியல் குறைபட்டதுதான். இருந்தாலும் சில நல்ல புத்தகங்கள் இருக்கின்றன. Watership Down, Hobbit, Lion, the Witch and the WardrobeLittle PrinceJust So StoriesWind in the Willows ஆகியவற்றை நான் பரிந்துரைப்பேன். இரண்டாம் பட்டியலில் ஹாரி பாட்டர் எனக்கு மிகவும் பிடித்தமான சீரிஸ். நான் பார்த்த வரையில் எட்டு ஒன்பது வயதில் இருக்கும் எல்லா சிறுவர் சிறுமியருக்கும் Phantom Tollbooth பிடித்திருக்கிறது. அது வார்த்தை விளையாட்டை முன் வைப்பது, கிழடு தட்டிவிட்டால் உங்களைக் கவராமல் போகலாம்.

என் சின்னப் பெண் இப்போது Watership Down-ஐத்தான் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு பொதுவாக E.B. White பிடித்திருக்கிறது. Charlotte’s Web மட்டுமல்ல, Stuart Little-உம் அவளுக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு மிகவும் பிடித்த சிறுவர் புத்தகம் BFG. ரொவால்ட் டாலின் சிறுவர் புத்தகங்கள் எதுவுமே எனக்கு சோடை போனதில்லை, ஆனால் எனக்கும் மிகவும் பிடித்தது அதுதான். பெரியவர்களையும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ஜூல்ஸ் வெர்னின் பல புத்தகங்களை இன்று படிக்க முடியாது. A Journey to the Centre of the Earth அப்படிப்பட்ட ஒரு புத்தகம், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து படுத்தாதீர்கள்.

 1. Watership Down – Richard Adams (1972)
 2. Hobbit – J.R.R Tolkien (1937)
 3. Lion, the Witch and the Wardrobe – C.S. Lewis (1950)
 4. Charlotte’s Web – E.B. White (1952)
 5. Little Prince – Antoine de Saint-Exupéry (1943)
 6. Pippi Longstocking – Astrid Lindgren (1945)
 7. Emil and the Detectives – Erich Kästner (1929)
 8. James and the Giant Peach – Roald Dahl (1961)
 9. Winnie the Pooh – A.A. Milne (1926)
 10. A Little Princess – Frances Hodgson Burnett (1905)
 11. Just So Stories – Rudyard Kipling (1902)
 12. A Journey to the Centre of the Earth – Jules Verne (1864)
 13. Wind in the Willows – Kenneth Grahame (1908)
 14. Doll People – Ann M Martin and Laura Godwin (2000)
 15. The Child that Books Built – Francis Spufford (2002)

இன்னும் சில கார்டியன் தேர்வுகள்:

 1. Sword in the Stone – T.H. White (1938)
 2. Secret Garden – Frances Hodgson Burnett (1911)
 3. Stig of the Dump – Clive King (1963)
 4. Heidi – Johanna Spyri (1880)
 5. Harry Potter and the Philosopher’s Stone – J K Rowling (1997)
 6. How the Whale Became – Ted Hughes (1963)
 7. Velveteen Rabbit – Margery Williams (1922)
 8. Phantom Tollbooth – Norton Juster (1961)
 9. A Boy and a Bear in a Boat Rhymes – Dave Shelton (2012)
 10. Little White Horse – Elizabeth Goudge (1946)

தொகுக்கப்பட்ட இலக்கியம்: சிறுவர் புத்தகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
Little Prince
Just So Stories
ரொவால்ட் டாலின் சிறுவர் புத்தகங்கள்
தமிழில் சிறுவர் புத்தகங்கள்