அகதா கிறிஸ்டியின் ‘Murder in the Orient Express’

(மீள்பதிவு)

agatha_christieகஷ்டமான விடுகதை. பதிலை கண்டுபிடிக்கத் தேவையான எல்லா க்ளூக்களும் இருக்கின்றன. ஆனால் கண்டுபிடிப்பது ரொம்பவே சிரமம். பதில் இதுதான் என்று சொல்லும்போது அட, இதுதானா, இது நமக்குத் தோன்றவில்லையே என்று நினைக்க வைக்க வேண்டும். இதுதான் அகதா கிறிஸ்டியின் ஃபார்முலா. ஒரு கோணத்தில் பார்த்தால் எல்லா துப்பறியும் கதைகளுக்கும் இதுதான் ஃபார்முலா. அதில் அவர் மீண்டும் மீண்டும் வெற்றி அடைந்திருக்கிறார்.

இலக்கியம், தரிசனம் என்றெல்லாம் எதிர்பார்ப்பவர்கள் அகதா கிறிஸ்டியை புறக்கணித்துவிடலாம். ஆனால் அவர் சிறந்த craftswoman. துப்பறியும் கதைகளின் ஃபார்முலாவுக்குள் என்ன பெரிதாக எழுதிவிட முடியும்? அவரால் சின்னச் சின்ன மாற்றங்கள் மூலம் வெகு சுவாரசியமான கதைகளை எழுத முடிந்திருக்கிறது.

ஆங்கிலத்தில் ‘red herring’ என்று சொல்வார்கள். யார் குற்றவாளி என்பதற்கு பல சாத்தியங்கள் இருக்கும். சாட்சியங்கள், கதைப் போக்கு மூலம் இவர்தான் குற்றவாளி என்று காட்டுவார், ஆனால் அவர் இல்லை என்று பின்னால் தெரியும். கிறிஸ்டியின் கதைகளில் red herring after red herring என்பது மீண்டும் மீண்டும் வரும் ஒரு உத்தி. அதை உல்டாவாகவும் பயன்படுத்துவார். இவர் குற்றவாளி இல்லை, இவர் இல்லை என்று ஷோ காட்டுவார். கடைசியில் அவர்தான் குற்றவாளியாக இருப்பார்.

அவரது நாவல்களைப் பதின்ம வயதில் படிக்க வேண்டும். அவரது உத்திகளை ரசிப்பதற்கு சரியான வயது அதுதான். பதின்ம வயதைத் தாண்டியவர்களுக்கு நான் பரிந்துரைப்பது நான்கு புத்தகங்கள் – Murder in the Orient Express, And Then There Were None (கும்நாம் என்று ஹிந்தியில் திரைப்படமாகவும் வந்தது), Murder of Roger Ackroyd, Mysterious Affair at Styles. அவற்றிலும் ‘first among equals’ என்று நான் கருதுவது Murder in the Orient Express-ஐத்தான்.

ஐரோப்பாவின் ஒரு மூலையிலிருந்து (துருக்கி) இன்னொரு மூலைக்குப் (பாரிஸ்) போகும் ரயில் Orient Express. இரண்டாம் உலகப் போருக்கு முன் ஐரோப்பாவில் இது பெரிய இணைப்பாக இருந்தது. இந்த ரயிலின் ஒரு பெட்டியில் கொலை. கொலை நடந்த சில மணி நேரத்தில் கடுமையான பனிப்பொழிவால் ரயில் நின்றுவிடுகிறது. பெட்டியில் கிறிஸ்டியின் புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர் போய்ரோ பயணிக்கிறார். 12 பயணிகளில் யார் கொலை செய்தது என்பதுதான் மர்மம்.

murder_in_the_orient_express12 பயணிகளும் ஒரு கலவையான கூட்டம். கொலை செய்யப்பட்டவனின் செகரட்டரி, வேலைக்காரன்; கொலை செய்யப்பட்டவன் தன் பாதுகாப்புக்காக அமர்த்தி இருக்கும் ஒரு detective; ஆங்கிலேய ஆர்மி மேஜர்; ஆங்கிலேய governess; ஒரு சீமாட்டி மற்றும் சீமான் (Count and Countess); சீமாட்டியின் பணிப்பெண்; ஒரு அமெரிக்க அம்மா; ஒரு இத்தாலியன்; இன்னொரு வயதான சீமாட்டி.

கொலையோ படு விசித்திரமாக இருக்கிறது. பல கத்திக் குத்துக்கள். சில பலமானவை, சில பலமற்றவை. சில் இடது கைக்காரன் குத்தியதோ என்று சந்தேகம். அங்கே ஒரு கர்ச்சீஃப் கிடக்கிறது. எப்போது இறந்தான் என்று கணிக்க முடியவில்லை. சிவப்பு கிமோனோ அணிந்த ஒருவன் கடந்து போனதை அமெரிக்க அம்மா பார்த்திருக்கிறாள். கொலை நடந்த நேரத்துக்கு எல்லோருக்கும் alibi இருக்கிறது.

போய்ரோ துப்பறிகிறார். அவர் கடைசியில் தரும் விளக்கத்தை யாராலும் ஊகிக்க முடியாது என்றுதான் கருதுகிறேன். மிகவும் திருப்தியான விளக்கம். மிகக் கஷ்டமான விடுகதைக்கு மிகவும் பொருத்தமான, அதே நேரத்தில் சிம்பிளான, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்ற வைக்கக் கூடிய பதில் தெரியும்போது கிடைக்கும் திருப்தி போய்ரோவின் விளக்கத்தைப் படிக்கும்போது ஏற்படுகிறது.

உண்மையில் இது துப்பறியும் கதைகளில் ஒரு classic. Tour de force என்றுதான் சொல்ல வேண்டும்.

1934-இல் எழுதப்பட்ட புத்தகம். சிட்னி லூமெட் இயக்கத்தில் 1974-இல் திரைப்படமாகவும் வந்தது.

துப்பறியும் கதைப் பிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். மற்றவர்களும் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

டோரதி சேயர்ஸ் எழுதிய Murder Must Advertise

சேயர்ஸ் துப்பறியும் கதை எழுத்தாளர்களில் குறிப்பிட வேண்டியவர். எனக்குப் பிடித்த துப்பறியும் கதை எழுத்தாளர்களில் ஒருவர். Golden Age of Detective Fiction என்று அறியப்படும் காலகட்டத்தின் முக்கியப் பங்களிப்பாளர்.

சேயர்ஸின் படைப்புலகம் இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்டது. பிரபு குடும்பத்தைச் சேர்ந்த, பணக்கார பீட்டர் விம்சி அனேகக் கதைகளில் துப்பறிபவராக வருவார். கதைகள் எப்போதும் விறுவிறுப்பாக இருந்துவிடாது. ஆனால் அனேகக் கதைகளில் முடிச்சு நன்றாக இருக்கும், விம்சி அதை அருமையாக அவிழ்ப்பார். ஆனால் சேயர்சின் கதைகள் எனக்குப் பிடிக்க முக்கியமான காரணம் மர்மங்கள் அல்ல; எப்படியோ இரண்டு உலகப் போர்களுக்கு நடுவேயான காலகட்டத்தை, அன்றைய பணக்காரர்கள், முக்கியத்துவத்தை, பணத்தை, சொத்து சுகம் சௌகரியங்களை, மதிப்பை இழந்து கொண்டிருக்கும் பிரபு குடும்பத்தவர்கள், போருக்குப் பிறகான வெறுமையை உணரும் அன்றைய ஜென்டில்மென் வர்க்கம், விடுதலையை உணரத் தொடங்கி இருக்கும் பெண்கள் என்று சித்தரிப்பது உண்மையாக இருப்பதால்தான்.

Murder Must Advertise (1933) நல்ல உதாரணம். விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் விக்டர் டீன் மாடிப்படிகளில் விழுந்து இறந்து போகிறார். விபத்து என்று தீர்ப்பு வந்துவிட்டாலும் முதலாளிக்கு சின்ன உறுத்தல். விம்சி வேறு பெயரில் விளம்பரக் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். போதை மருந்து வியாபாரத்துக்கான ஒரு சரடும் சென்று கொண்டிருக்கிறது. விம்சி எல்லா முடிச்சுகளையும் அவிழ்க்கிறார்.

நாவலை உயர்த்துவது விளம்பரக் கம்பெனியின் சித்தரிப்புதான். இன்றும் காலாவதி ஆகிவிடாத சித்தரிப்பு. காப்பிரைட்டர்கள், ஓவியர்கள், பத்திரிகைகளின் காலக் கெடுபிடிகள், விளம்பரம் கொடுக்கும் கம்பெனிகள், அவர்களுக்கு நடுவே உள்ள போட்டிகள் எல்லாம் மிகச் சிறப்பாக சித்தரிக்கப்படுகின்றன. என் கண்ணில் இது மர்ம நாவல் அல்ல; இலக்கியமே. என்ன, இரண்டாம், மூன்றாம் வரிசை இலக்கியம்.

பத்திரிகையில் விளம்பரம் வெளிவருவதற்கு முன் அதைப் பற்றிய குறிப்பு ஒன்றை பெற்றுக் கொண்டு அதை வைத்து போதை மருந்து வியாபாரம் நடைபெறுகிறது என்பதுதான் முடிச்சு. இது அந்த போதை மருந்து கூட்டத்துக்கு மட்டும்தான் புரியும் குறிப்பு. இரண்டு நாள் கழித்து பத்திரிகை வெளிவந்த பிறகு அதே குறிப்பை வைத்து அதே வியாபாரத்தை செய்யலாமே, முன்னாலேயே பெறுவதால் என்ன லாபம்? வேறு யாருக்கும் புரியப் போவதில்லையே? படிக்கும்போது இந்த மாதிரி கேள்வி எதுவும் மனதில் எழாததுதான் இந்த நாவலின் வெற்றி.

சேயர்ஸ் இந்த நாவலை எழுதும்போது விளம்பர நிறுவன உலகம் மற்றும் அன்றைய வெறுமையால் பார்ட்டி, குடி, போதை என்று அலையும் பணக்கார இளைஞர்/இளைஞிகளின் உலகம் இரண்டையும் விவரிக்க நினைத்தாராம். ஒன்றில்தான் வெற்றி பெற்றிருக்கிறார். அவரே அதை ஒத்துக் கொண்டாராம்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

C.J. Sansom எழுதிய வரலாற்று+துப்பறியும் நாவல்கள்

வரவர எனக்கு வரலாற்றுப் பின்னணியில் எழுதப்படும் துப்பறியும் நாவல்கள் பிடித்திருக்கின்றன. நானே எழுதலாமா என்று யோசிக்கிறேன் இன்னும் கதை சரியாக அகப்படவில்லை. ஆனால் துப்பறியும் வந்தியத்தேவன், பீர்பல், தெனாலிராமன், அட கபீர்தாஸ் என்று நினைத்தால் நன்றாகத்தான் இருக்கிறது.

உண்மையை ஒத்துக் கொள்கிறேன், இங்கிலாந்தின் வரலாற்றில் எனக்கு பெரிய ஈடுபாடு எதுவும் கிடையாது. எவன் பிள்ளை ஆட்சிக்கு வந்தால் எனக்கென்ன? அதுவும் இங்கிலாந்தில்? ராஜராஜ சோழன் என்றாலாவது கொஞ்சம் ஆர்வம் இருக்கும். எனக்குத் தெரிந்திருக்கும் இங்கிலாந்து வரலாறு அனேகமாக நாவல்களின் மூலம் அறிந்தவையே. பெர்னார்ட் கார்ன்வெல்லின் நாவல்கள், ஷேக்ஸ்பியரின் சில நாடகங்கள், ஹார்ன்ப்ளோயர் கதைகள், ஜான் ஃபீல்டிங் கதைகள், ஜோசஃபின் டே எழுதிய Daughter of Time, ஹில்லரி மாண்டல் எழுதிய Wolf Hall, இப்போது சான்சம்.

ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இங்கிலாந்தின் மன்னர்களில் எட்டாம் ஹென்றி ஒரு intriguing மன்னன். கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது, பிறகு மணவிலக்கு இல்லாவிட்டால் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று பொய்யோ மெய்யோ குற்றம் சாட்டி மரண தண்டனை விதிப்பது, பிறகு அடுத்த பெண். இப்படியே ஒன்றன் பின் ஒன்றாக ஆறு மனைவிகள். பிரதமராக இருப்பவர் முட்டுக்கட்டை போட்டாலோ, அட முட்டுக்கட்டையை விடுங்கள், சரியாக ஒத்துழைக்கவிட்டாலோ, அவர் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டி அவர்களுக்கும் மரண தண்டனை. போப் முட்டுக்கட்டை போட்டதால் இங்கிலாந்து கத்தோலிக்கர்களிடம் இருந்து பிரிந்து இன்றைய ஆங்கிலிகன் உபமதம் உருவாகி இருக்கிறது. எட்டாம் ஹென்றி காலத்திலிருந்து யார் மன்னனோ (அல்லது ராணியோ) அவரே ஆங்கிலிகம் உபமதத்தின் தலைவரும் கூட. எட்டாம் ஹென்றி பற்றித்தான் நிறைய எழுதுகிறார்கள். C.J. Sansom-உம் இந்த ஹென்றியின் காலத்தில் இந்தக் கதைகளை எழுதி இருக்கிறார்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Tombland (2018). சிறப்பாக எழுதப்பட்ட நாவல். அன்றைய இங்கிலாந்தில் பிரபுக்கள் பொது ஜனங்களின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களால் சட்டத்தை இஷ்டத்துக்கு வளைக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் நார்விச் நகரம் அருகே பெரிய புரட்சி வெடித்திருக்கிறது. Kett’s Rebellion. அங்கே மாட்டிக் கொள்ளும் வக்கீல் ஷார்ட்லேக். அன்றைய சமூகநிலை மிக அருமையாக விவரிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் வரலாற்றில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாத என்னால் புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை. இத்தனைக்கும் எண்ணூறு பக்க நாவல்!

பரிந்துரைக்கும் இன்னொரு நாவல் Heartstone (2010). இத்தனைக்கும் இது மெதுவாகச் செல்லும் நாவல்; நிறைய பில்டப்; முடிச்சு மிகவும் சிம்பிளானதுதான். ஆனால் கதை விரியும் விதம், கதைப் பின்னல், சரித்திரப் பின்னணி, இங்கிலாந்தில் அன்று சட்டத்துக்கு பெயரளவில் இருந்த மதிப்பு, சட்டத்தை நடைமுறையில் மன்னனிலிருந்து தொடங்கி கொஞ்சம் அதிகாரம் இருப்பவன் வரை எப்படி எல்லாம் வளைக்கிறார்கள் என்ற உண்மை, எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கின்றன.

இவற்றைத் தவிர Dissolution (2003), Lamentation (2014) இரண்டையும் பரிந்துரைக்கிறேன்.

முதல் நாவலான Dissolution (2003)-இல் மாத்யூ ஷார்ட்லேக் அறிமுகம் ஆகிறார். அவர் ஒரு கூனர். வக்கீல். நாவல் ஆரம்பிக்கும்போது தாமஸ் க்ராம்வெல் ஏறக்குறைய பிரதம மந்திரி. இந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்து போப்பின் பிடியிலிருந்து விலகிவிட்டது. அப்புறம் அன்றைய சர்ச்சுகள், அவற்றின் சொத்துக்களின் கதி? இங்கிலாந்தின் பல சர்ச்சுகள் – நம்மூர் மடங்களுக்கு ஏறக்குறைய சமமானவை – கலைக்கப்பட்டு அவற்றின் நிலங்கள், சொத்துக்கள் அரசுக்கே உரிமைப்படுத்தப்பட்டன. இந்தப் பின்னணியில்தான் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஷார்ட்லேக் க்ராம்வெல்லின் நம்பிக்கைக்குரியவர். க்ராம்வெல் ஒரு ‘மடத்தை’ கைவசப்படுத்த அனுப்பிய அதிகாரி அங்கே கொல்லப்படுகிறார். கொலையாளியை கண்டுபிடிக்கவும், மடத்தை ‘கைப்பற்றவும்’ ஷார்ட்லேக் அனுப்பப்படுகிறார்.

இந்த நாவலின் கவர்ச்சி என் கண்ணில் அதன் சரித்திரப் பின்னணிதான். என்ன வேண்டுமானாலும் தகிடுதத்தம் செய்து மடத்தை கைவசப்படுத்தலாம், ஆனால் சட்டரீதியாக செல்லுபடி ஆகவேண்டும். அதனால் சர்ச்சின் தலைமைப் பாதிரியாரையே நாங்கள் இந்த மடத்தை கலைத்து விடுகிறோம் என்று சொல்ல வைக்க வேண்டும். பாதிரியாருக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது? அதனால் மடத்தில் பல ‘குற்றங்கள்’ நடக்கின்றன என்று ஒரு ஷோ காட்ட வேண்டும். வசதியாக பலருக்கும் ஓரினச் சேர்க்கை ஆசை இருக்கிறது. அன்று ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம். ஆனால் இரண்டு வருஷத்துக்கு முன்னால் இது வரை நடந்த எல்லாவற்றுக்கும் மாப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. மாப்புக்குப் பிறகும் குற்றங்கள் குறையவில்லை, அதனால் கலைக்கிறோம், நாங்களாக கலைப்பதற்கு பதில் நீயாக விலகிக் கொள் என்று அழுத்தம் தர வேண்டும். ஷார்ட்லேக் அந்த சர்ச்சில் சந்திக்கும் மருத்துவர் – கறுப்பு இனத்தவர் – சுவாரசியமான பாத்திரம்.

மர்மம் சுமார்தான். ஆனால் சுவாரசியம் குன்றாமல் போகிறது.

இரண்டாவது நாவலான Dark Fire (2004) சுவாரசியமான பின்புலம் கொண்டது. மன்னர் ஹென்றி தனது மண வாழ்வு பிரச்சினைகளில் க்ராம்வெல் மீது கடுப்பானார், ஒரு கட்டத்தில் க்ராம்வெல் மீது துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் தலை துண்டிக்கப்படது என்பது வரலாறு. நாவல் ஆரம்பிக்கும்போது க்ராம்வெல்தான் ‘பிரதமர்’, ஆனால் அவர் நிலை ஆபத்தில் இருக்கிறது. ஹென்றிக்கு க்ராம்வெல் தேடிப் பிடித்து வந்த மணமகளைப் பிடிக்கவில்லை, அடுத்த பெண்ணைத் தேடுகிறார். ஷார்ட்லேக் இன்னும் க்ராம்வெல்லைத்தான் ஆதரிக்கிறார், ஆனால் க்ராம்வெல்லும் எதிர்த்தரப்புக்கும் வித்தியாசங்கள் இல்லை என்று உணர்ந்திருக்கிறார். அதனால் தானுண்டு தன் வக்கீல் தொழிலுண்டு என்று இருக்கிறார். க்ராம்வெல்லுக்கு ஓர் அதிபயங்கர ஆயுதம் – ஏறக்குறைய flamethrower – பற்றி தெரிய வருகிறது. அதை வைத்து எதிரிக் கப்பல்களை நிமிஷத்தில் அழித்துவிடலாம். ஹென்றியிடம் அதைப் பற்றி சொல்லி தன் நிலையை இன்னும் உறுதிப்படுத்திக் கொள்ள நினைக்கிறார். ஹென்றியும் உற்சாகமாக அந்த ஆயுதத்தை நேரில் பார்வையிட நாள் குறிக்கிறார். ஆயுதத்தையும் அதைக் கொண்டு வந்தவர்களையும் காணவில்லை. சொன்ன நாளில் ஆயுதத்தைக் காட்ட முடியவில்லை என்றால் தனக்கு ஆப்புதான் என்று உணர்ந்திருக்கும் க்ராம்வெல் ஷார்ட்லேக்கின் உதவியை நாடுகிறார். ஷார்ட்லேக் மர்மத்தை அவிழ்த்தாலும் க்ராம்வெல்லை காப்பாற்ற முடியவில்லை. ஷார்ட்லேக் இதில் தனது உதவியாளர் பாரக்கை சந்திக்கிறார்.

மூன்றாவது நாவலான Sovereign (2004) கொஞ்சம் இழுவை. வளர்த்திவிட்டார். ட்யூடர் வம்சம் இங்கிலாந்தின் ஆட்சியை கைப்பற்றியதில் பல சிக்கல்கள் உண்டு. அவர்கள்தான் உண்மையான வாரிசுகளா என்பது கொஞ்சம் சந்தேகமான விஷயம். எட்டாம் ஹென்றி யார்க்‌ஷைரில் நடந்த ஒரு கலகத்துக்குப் பிறகு பெரும் ஊர்வலமாக அங்கே சென்றார். அந்தப் பின்புலத்தில் ஹென்றியின் வாரிசுரிமையைப் பற்றிய சதி ஒன்றில் ஷார்ட்லேக் மாட்டிக் கொள்கிறார்.

நான்காவது நாவலான Revelation (2008) கொஞ்சம் நீளம் அதிகம். எடிட் செய்யப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இந்த முறை ஒரு மதத் தீவிரவாதி பைபிளின் Revelation பகுதியில் விவரிக்கப்படுவதைப் போலவே ஏழு கொலைகளை செய்கிறான். எதிர்கால ராணியாக வரப் போகும் காதரின் பாரை ஷார்ட்லேக் காப்பாற்றுகிறார். பின்புலமாக இருப்பது அன்றைய பைத்தியக்கார ஆஸ்பத்திரிகள்.

Heartstone (2010) இவற்றுள் மிகச் சிறப்பானது. தாய் தந்தையர் இறந்த பிறகு பத்து பனிரண்டு வயது அக்காவும் தம்பியும் – ஹ்யூ மற்றும் எம்மா – ஒரு கார்டியனால் வளர்க்கபப்டுகிறார்கள். இங்கிலாந்தின் சட்டப்படி யார் வேண்டுமானாலும் கார்டியன் ஆகலாம். அதற்காக எவ்வளவு ஃபீஸ் கட்டுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஏறக்குறைய ஏலம் எடுப்பது போல பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு – அதுவும் நெருங்கிய உறவினர் இல்லாதவர்களுக்கு – போட்டி இருக்கிறது. பிள்ளைகளை வயதுக்கு வரும்வரை சொத்துக்களை இந்த கார்டியன்கள் அனுபவிக்கலாம். அவர்களின் திருமணம் யாரோடு என்பதையும் நிர்ணயிக்கும் உரிமை இந்த கார்டியன்களுக்க்த்தான். அதனால் தன் பிள்ளைகளுக்கு மணம் செய்து வைத்து சொத்துக்களை தன் குடும்பத்தின் கீழ் கொண்டு வந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஏழெட்டு வருஷம் கழித்து ஹ்யூ-எம்மா வளர்க்கப்படும் விதம் சரியில்லை என்று அவர்களின் முன்னாள் ஆசிரியன் வழக்கு தொடர்கிறான். வழக்கு கோர்ட்டுக்கு வருவதற்குள் அவன் இறந்துவிடுகிறான். அவன் அன்றைய ராணிக்கு தெரிந்தவன் என்பதால் ராணி ஷார்ட்லேக்கை விசாரிக்கச் சொல்கிறாள். இன்னொரு மர்மமும் இருக்கிறது – ஷார்ட்லேக்குக் தெரிந்த பெண் ஒருத்தி பைத்தியக்கார மருத்துவமனையில் இருக்கிறாள், ஏன் என்ன என்று துப்பறிகிறார். பின்புலமாக இருப்பது ஃப்ரான்ஸ் அன்று இங்கிலாந்தை போர்ட்ஸ்மவுத் பகுதியில் தாக்க எடுத்த முயற்சியில் மேரி ரோஸ் கப்பல் போர்ட்ஸ்மவுத்தில் முழுகியது.

Lamentation (2014) ஆறாவது நாவல். இதுவும் நல்ல நாவல். ராணி காதரின் பார் தனது மத நம்பிக்கைகளை ஒரு புத்தகமாக எழுத நினைக்கிறாள். மன்னர் எட்டாம் ஹென்றியோ எந்த மதக்குழு பக்கம் சாய்வது என்ற ஊசலாட்டத்தில் இருக்கிறான். புத்தகத்தை வெளியிட்டால் மன்னன் எப்படி உணர்வான் என்று சொல்ல முடியாது, தனது ஆணைகளுக்கு எதிராக ராணியின் நம்பிக்கைகள் இருக்கின்றன, இது ராஜத்துரோகம் என்று மரண தண்டனை விதித்தாலும் விதிக்கலாம் என்ற அச்சத்தில் கையெழுத்துப் பிரதியை அழித்துவிட நினைக்கிறாள். அதற்குள் புத்தகம் திருட்டுப் போய்விடுகிறது. ஷார்ட்லேக் அழைக்கப்படுகிறான். நல்ல denouement.

இந்த சீரிஸில் கடைசி நாவல் (இப்போதைக்கு) Tombland (2018). ஒரு கொலையைப் பற்றி விசாரிக்கச் செல்லும் ஷார்ட்லேக் புரட்சியில் மாட்டிக் கொள்கிறார். அவரது உதவியாளனாக வரும் நிக்கோலசின் மனமாற்றம், ஷார்ட்லேக்கால் புரட்சியாளர்களின் பக்கம் இருக்கும் நியாயங்களை பார்க்க முடிவது, சட்டம் பேரளவிலாவது பின்பற்றப்பட வேண்டும் என்பதில் இங்கிலாந்துக்காரர்களுக்கு இருக்கும் முனைப்பு எல்லாம் பிரமாதமாக வந்திருக்கின்றன. இதற்கு முன் வந்தவை பொழுதுபோக்குக் கதைகள்தான். ஆனால் இந்த நாவல் என் கண்ணில் இலக்கியமே.

எட்டாம் ஹென்றியைப் பற்றி ஆங்கிலேயர்களுக்கே பெரிதாக ஆர்வம் இருக்குமா என்று தெரியவில்லை. மேலும் இவை அனேகமாக பொழுதுபோக்குக் கதைகள் மட்டும்தான். அதனால் என்ன? படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: சான்சமின் தளம்

லண்டன் காவல் துறையின் ஆரம்பம் – துப்பறியும் கதைகள்

Bow Street Runners என்று கேள்விப்பட்டிருக்கலாம். லண்டனின் – ஏன் உலகில் முதல் professional காவல் துறை இதுதானாம். அதற்கு முன் லண்டனில் யார் வேண்டுமானாலும் திருடர்களைப் பிடித்து நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தலாம். இன்று எழுத்தாளர் என்றே அறியப்படும் ஹென்றி ஃபீல்டிங் (டாம் ஜோன்ஸ் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்) அன்று நீதிபதியாக இருந்தவர். அவர்தான் இப்படி ஒரு professional அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தி இருக்கிறார். அவர் இறந்ததும் அவரது தம்பி ஜான் ஃபீல்டிங் அமைப்பை இன்னும் செம்மைப்படுத்தி இருக்கிறார்.

ஜான் ஃபீல்டிங் கண்ணிழந்தவர். குரலை வைத்தே அடையாளம் கண்டுபிடித்துவிடுவாராம். அவரும் நீதிபதியாக இருந்தவர்தான். அவர்தான் போலீஸ் கெஜட்டை பிரசுரிக்க ஆரம்பித்தார். அதில் குற்றவாளிகள் எப்படி இருப்பார்கள் என்பதை விவரித்தது குற்றவாளிகளைப் பிடிக்க உதவியாக இருந்தது.

ப்ரூஸ் அலெக்சாண்டர் ஜான் ஃபீல்டிங்கை துப்பறிவாளனாக வைத்து ஒரு சீரிஸ் எழுதி இருக்கிறார். ஃபீல்டிங் ஷெர்லாக் ஹோம்ஸ்; அவருக்கு ஒரு பதின்ம வயது உதவியாளன் (வாட்சன்). முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்த சாமுவெல் ஜான்சன், அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜேம்ஸ் பாஸ்வெல், பிரபல எழுத்தாளர் ஆலிவர் கோல்ட்ஸ்மித், அன்றைய பிரபல நடிகர் டேவிட் காரிக், பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் போன்றவர்கள் சில நாவல்களில் சிறு பாத்திரங்களாக வருகிறார்கள்.

ப்ரூஸ் அலெக்சாண்டர் எழுதிய ட்ரம்போ என்ற அபுனைவு சமீபத்தில் சிறப்பான திரைப்படமாகவும் வெளிவந்தது. அனேகமாக அவரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பவர்கள் இந்தத் திரைப்படத்தின் மூலமான வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் என்றே அறிந்திருப்பார்கள். ஆனால் அந்த வாழ்க்கை வரலாற்றை அவர் தனது சொந்தப் பெயரில் – ப்ரூஸ் குக் – என்றே எழுதி இருக்கிறார். இன்னும் குழம்ப வேண்டுமென்றால் ப்ரூஸ் குக்கின் முழுப்பெயர் ப்ரூஸ் அலெக்சாண்டர் குக்!

நாவல்களின் பலம் அந்தக் கால சூழ்நிலையை நன்றாக விவரிப்பதுதான். குறிப்பாக சிறு குற்றங்களின் – குடி, சிறு திருட்டுக்கள், விபச்சாரம் – சூழ்நிலை. ஜான் ஃபீல்டிங் பெரிய பணக்காரர் அல்ல, ஆனால் அவரிடம் பதவியும் அதிகாரமும் அன்றைய அதிகார மையங்களின் தொடர்பும் இருக்கிறது. பல பாத்திரப் படைப்புகள் – ஃபீல்டிங், நாவல்களை விவரிக்கும் ஜெரீமி ப்ராக்டர், ப்ராக்டரின் காதலி க்ளாரிசா, சூதாடும் கிளப் வைத்து நடத்தும் பில்போ, சிறு திருடனாக இருந்து ப்ராக்டரின் நெருங்கிய நண்பனாக மாறும் பன்கின்ஸ், டாக்டர் டானலி என்று பலரும் சுவாரசியமான பாத்திரங்கள் – நன்றாக இருக்கின்றன. பலவீனம்? மர்மங்கள் பொதுவாக பலவீனமானவை.

இவை வணிக, பொழுதுபோக்கு நாவல்கள் மட்டுமே. அதனால் என்ன? சுவாரசியமானவை. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

முதல் நாவலான ‘Blind Justice‘ (1994)-இல் சிறுவன் ஜெரீமி ப்ராக்டர் அப்பா இறந்ததும் லண்டனுக்கு வருகிறார். திருடன் என்று குற்றம் சாட்டப்பட்டு ஜான் ஃபீல்டிங் முன்னால் நிறுத்தப்படுகிறான். பொய்க் குற்றச்சாட்டு என்று ஃபீல்டிங் நிரூபிக்கிறார். ப்ராக்டர் ஃபீல்டிங்கோடு ஒட்டிக் கொள்கிறான். துப்பாக்கி குண்டால் முகம் சிதைந்து இறந்து கிடக்கும் பிரபு குடும்பத்து தலைவனின் இறப்பை துப்பறிகிறார்கள். சாமுவெல் ஜான்சன், ஜேம்ஸ் பாஸ்வெல் சிறு சிறு பாத்திரங்களாக வருகிறார்கள். சுவாரசியமான புத்தகம்.

Murder at Grub Street (1995)-இலும் சாமுவெல் ஜான்சன் ஒரு சிறு பாத்திரமாக வருகிறார். ஒரு அச்சுக்கூட முதலாளி அவரது குடும்பத்தோடு படுகொலை செய்யப்படுகிறார். கொலை நடந்த இடத்தில் ரத்தம் தோய்ந்த கோடரியோடு ஒரு கவிஞன் அகப்படுகிறான். கவிஞனுக்கு multiple personality disorder – நாவலின் காலகட்டத்தில் அவனுக்கு பைத்தியம். என்ன மர்மம் என்று நாவல் போகிறது.

Watery Grave (1996) இன்னும் ஒரு நல்ல நாவல். கடற்படையின் கப்பல் காப்டன் கடும்புயலில் கடலில் விழுந்து இறந்துவிடுகிறார். அவரைக் காப்பாற்ற அதிகாரி லாண்டன் எடுக்கும் முயற்சிகள் பயனளிக்கவில்லை. இரண்டு வருஷம் கழித்து லாண்டன்தான் காப்டனை கடலில் தள்ளிக் கொன்றார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. கடற்படை மேலதிகாரிகளுக்கு சந்தேகம் இருந்தாலும் லாண்டன் நிரபராதியாக இருந்து தண்டிக்கப்பட்டாலும் பரவாயில்லை, ஆனால் கடற்படையின் பேர் கெட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஃபீல்டிங் துப்பறிகிறார். கடைசி காட்சியில் குற்றவாளி, நிரபராதி இருவருமே தூக்கிலிடப்படுவது நல்ல denouement.

Jack, Knave and Fool (1998) இன்னும் ஒரு நல்ல நாவல். ஒரு கொலை, துப்பறிதல். ஆனால் எனக்கு சுவாரசியமாக இருந்த பகுதி ஏழை குடிகார அப்பாவின் சித்திரம். வேறு வழி இல்லாமல் குற்ற உலகில் அடி எடுத்து வைக்கும் சித்தரிப்பு நன்றாக இருந்தது.

Death of a Colonial (1999) சுமார். வாரிசில்லாத சொத்துக்கு உரிமை கொண்டாடி வருபவன் ஏமாற்றுக்காரனா இல்லையா என்று துப்பறிகிறார்கள்.

Color of Death (2001) பிரமாதமாக ஆரம்பிக்கும் நாவல். சில ‘கறுப்பர்கள்’ பணக்கார வீடுகளில் புகுந்து கொள்ளை அடிக்கிறார்கள். அதை வைத்து அன்றைய இங்கிலாந்தில் கறுப்பர்களின் நிலையை நன்றாகக் காட்டுகிறார். ஆனால் வேகவேகமாக முடித்துவிட்டது போலிருக்கிறது.

Smuggler’s Moon (2002) நாவலில் கள்ளக்கடத்தலை துப்பறிகிறார்கள். சுலபமாக யூகிக்கக் கூடிய முடிச்சுதான், ஆனால் கடத்தல் பின்புலம் சுவாரசியமாக இருந்தது. ஃப்ரென்சுக் கடற்கரையிலிருந்து இங்கிலாந்தின் கெண்ட் மாநில கடற்கரை 35 மைல்தானாம்.

An Experiment in Treason (2003) நாவலில் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் ஒரு முக்கியப் பாத்திரம். ஃப்ராங்க்ளின் அப்போது அமெரிக்கக் காலனிகளின் பிரதிநிதியாக இங்கிலாந்தில் இருந்தார். சில கடிதங்கள் திருடப்பட்டு அமெரிக்கா செல்கின்றன. அமெரிக்காவின் விடுதலை உணர்வை அவை தீவிரப்படுத்துகின்றன. அந்தத் திருட்டைத்தான் துப்பறிகிறார்கள்.

Price of Murder (2004) அந்தக் கால குதிரைப் பந்தய பின்னணி. குதிரைகளோடு நல்ல உறவு உள்ள ஜாக்கி ஒருவனின் சகோதரி மகள் – சிறுமி – பாலியல் கொடுமையில் இறக்கிறாள். நன்றாக எழுதப்பட்ட இன்னொரு கதை.

Rules of Engagement (2005) இந்த வரிசையில் கடைசி நாவல். இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே ப்ரூஸ் அலெக்சாண்டர் இறந்துவிட்டார். இந்த நாவலில் மெஸ்மரிசத்தின் மூலம் அடுத்தவர்களை தன் ஆணைப்படி நடக்க வைக்கும் வில்லன்கள் அவர்களை தற்கொலை செய்து கொள்ள வைக்கிறார்கள்.

இவை வணிக, பொழுதுபோக்கு நாவல்கள் மட்டுமே. அதனால் என்ன? சுவாரசியமானவை. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மர்ம நாவல்கள்

டோரதி சேயர்ஸ் எழுதிய ‘Unnatural Death’

dorothy_sayersஷெர்லக் ஹோம்ஸுக்கு அடுத்த படியில் யார்? துப்பறியும் கதைகளின் பொற்காலம் என்று பலரும் கருதும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரண்டாம் நிலைக்கு நிறைய போட்டியாளர்கள் இருந்தார்கள். அகதா கிறிஸ்டி இன்றும் நினைவு கூரப்படுகிறார். டோரதி சேயர்ஸும் இந்தப் போட்டியில் அந்தக் காலத்தில் முன்னணியில் இருந்தவர்தான்.

சேயர்சின் துப்பறியும் நிபுணன் பீட்டர் விம்சி. விம்சி பிரபு குடும்பத்தவர். நிறைய பணம் உண்டு. எல்லா லெவலிலும் நண்பர்கள் உண்டு. உதாரணமாக வயதான கிழவி க்ளிம்ப்சன். அவளால் அன்றைய ஜென்டில்மன் குடும்பங்களில் சுலபமாக பழக முடிகிறது. வக்கீல் மர்பிள்ஸ். வசதியாக அவருடைய நெருங்கிய நண்பர் பார்க்கர் காவல்துறை உயர் அதிகாரி. (பிற்காலத்தில் விம்சியின் தங்கையை மணந்து கொள்கிறார்.) சும்மா ஜாலியாக துப்பறிகிறார்.

Unnatural Death (1927) நாவலில் ஒரு டாக்டர் தன்னிடம் வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கிழவி இயற்கையாக இறக்கவில்லை என்று சந்தேகப்பட்ட கதையை சொல்லிக் கொண்டிருப்பதை விம்சியும் பார்க்கரும் தற்செயலாகக் கேட்கிறார்கள். விசாரிக்கும்போது கிழவி பணக்காரி, அந்தப் பணம் எல்லாம் கிழவியை கவனித்துக் கொண்டிருக்கும் நேரடி வாரிசு இல்லாத கொஞ்சம் தூரத்து உறவுக்காரிக்குத்தான் – மேரி விட்டேக்கருக்கு – போனது, சந்தேகத்தின் பேரில் கிழவியின் பிணத்தை போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று சொல்லி டாக்டர் பிரச்சினையில் மாட்டிக் கொண்டார் என்று தெரிகிறது.

கிழவியைக் கொல்ல என்ன காரணம் இருக்க முடியும்? எப்படியும் சொத்து உறவுக்காரிக்குத்தான் போகப் போகிறது. கிழவியே அதை பல முறை எல்லாரிடமும் சொல்லி இருக்கிறாள். கிழவிக்கு நெருங்கிய உறவும் அவள்தான். போஸ்ட்மார்ட்டத்தில் எந்த விஷமும் தரப்படவில்லை என்று தெரிகிறது. சில சின்ன விஷயங்கள் மட்டுமே இடிக்கிறது.

விம்சி இது கொலைதான், இதுதான் perfect murder என்று உறுதியாக நம்புகிறார். என்னதான் மர்மம்? இதற்கு மேல் எழுதி சஸ்பென்சை உடைத்துவிட முடியாது…

க்ளிம்ப்சனின் கிழவி பாத்திரம் மிகவும் பிரமாதமானது. அவருடைய நிதி நிலைமை கொஞ்சம் கஷ்டம்தான். வம்பு பேச நன்றாக வரும். விம்சி அவ்வப்போது கிழவியை தனக்கு தகவல் சேகரித்துத் தர எங்காவது அனுப்புவார். இந்த நாவலிலும் அப்படித்தான். க்ளிம்ப்சன் மேரி வசிக்கும் ஊருக்கு செல்கிறார். அங்கே பல குடும்பங்கள் வீட்டில் சென்று தேநீர் அருந்துகிறார். வம்பு பேசி/கேட்டே பல தகவல்களை சேகரித்துத் தருகிறார். அவர் எழுதியதாக வரும் கடிதங்களுக்காகவே படிக்கலாம்.

சேயர்சின் எல்லா நாவல்களும் நன்றாக அமைந்துவிடுவதில்லை. அப்படி அமைந்துவிட்ட நாவல்களில் இது ஒன்று. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

அகதா கிறிஸ்டியின் டாமி-டுப்பென்ஸ் கதைகள்

agatha_christieபதின்ம வயதில் நான் அகதா கிறிஸ்டியை விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். இன்று வெகு சில கதைகள் தவிர மற்றவற்றை மீண்டும் படிக்கும்போது குறைகள் பெரிதாகத் தெரிகின்றன, படிக்க சிரமமாக இருக்கிறது. ஆனால் டாமி-டுப்பென்ஸ் கதைகளைப் படிக்க முடிந்தது. மர்ம முடிச்சுகளுக்காக அல்ல, விறுவிறுப்புக்காக அல்ல. இளைஞர்களுக்கு வயதாகும் சித்திரத்துக்காக.

ஒரு வேளை எனக்கும் வயது ஏறிக் கொண்டே போவதாலோ என்னவோ தெரியவில்லை. இன்று இந்தப் புத்தகங்கள் charming ஆகத் தெரிந்தன. பிள்ளைகள் என் வழுக்கைத்தலையைப் பார்த்து சிரிக்கும்போது புன்முறுவல் வருவது போல அவ்வப்போது புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். அதிலும் கடைசி நாவலான Postern of Fate-இல் இருவரும் நிறைய வளவளவென்று பேசுவார்கள். எனக்குத் தெரிந்த பெரிசுகள் மாதிரியே இருக்கிறதே, இது கிறிஸ்டியின் புத்திசாலித்தனமான சித்தரிப்பா, இல்லை கிறிஸ்டிக்கு வயதாகிவிட்டதால் வளவள்வென்று எழுதி இருக்கிறாரா என்று தோன்றியது.

டாமி அன்றைய ஆங்கிலேயனின் கோட்டுச் சித்திரம் (caricature). தைரியம், வீரம் உண்டு, ஆனால் பெரிய புத்திசாலி இல்லை (not clever.) டுப்பென்ஸ் இன்னொரு கோட்டுச் சித்திரம் – கொஞ்சம் புத்திசாலி, ஆனால் ஆழம் தெரியாமல் காலை உள்ளே விடும் ரகம். கதைகL எப்படிப் போகும் என்று சுலபமாக யூகித்துவிடலாம்.

டாமி-டுப்பென்ஸ் முதல் உலகப் போர் முடிந்த காலகட்டத்தில் – Secret Adversary (1922) புத்தகத்தில் சந்திக்கிறார்கள். இருவருக்கும் கையில் பணமில்லை, வேலையில்லை, போர்க்காலம் முடிந்த பிறகு வாழ்க்கை போரடிக்கிறது, ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாட வேண்டி இருக்கிறது. அப்போது ஒரு மர்மம், கொஞ்சம் அதிர்ஷ்டவசத்தால், சில தற்செயல் நிகழ்ச்சிகளால் ஒரு கிரிமினல் மாஸ்டர்மைண்டை வெல்கிறார்கள்.

N or M? (1941) புத்தகத்தில் இருவருக்கும் வயதாகிவிட்டது. இரண்டாம் உலகப் போரின் காலம். தங்கள காலம் கடந்துவிட்டது, ஒன்றுக்கும் பயனில்லை என்ற விரக்தியில் இருக்கும்போது ஜெர்மானிய உளவாளிகளை கண்டுபிடிக்கும் பணி கிடைக்கிறது. தட்டுத் தடுமாறி கண்டுபிடிக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் அவர்களுக்கு வயதாகிவிட்டதைச் சொல்வதுதான் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

By the Pricking of My Thumbs (1968): புத்தகத்தில் இருவருக்கும் இன்னும் வயதாகிவிட்டது. எப்படியோ ஒரு மர்மத்தை வலிந்து கண்டுபிடித்து வலிந்து துப்பறிகிறார்கள். ஆனால் புத்தகத்தின் ஆரம்பத்தில் வரும் டாமியின் வயதான அத்தையின் சித்திரம் நன்றாக இருந்தது.

Postern of Fate (1968): நாவலில் இருவருக்கும் எழுபது எழுபத்தைந்து வயதாகிவிட்டது. ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பழைய சிறுவர் புத்தகத்தில் மேரி ஜோர்டன் கொலை செய்யப்பட்டாள் என்று ஒரு சிறுவன் ‘எழுதி’ இருக்கிறான். டுப்பென்ஸ் வழக்கம் போல கிளம்பிவிடுகிறாள்!

இவற்றைத் தவிர Partners in Crime (1929): என்ற புத்தகத்திலும் இவர்கள் வருகிறார்கள். இந்த முறை கிறிஸ்டி அன்று பிரபலமாக இருந்த எல்லா துப்பறியும் எழுத்தாளர்கள் ஸ்டைலில் டாம்மி-டுப்பென்ஸ் துப்பறியும் சிறுகதைகளை எழுதிப் பார்த்திருக்கிறார். அவரையே நகல் எடுத்திருக்கிறார் என்றால் பாருங்களேன்!

நல்ல மர்மக் கதைகள் என்பதெல்லாம் இல்லை. ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் என்னை இவை தொட்டது உண்மை…

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

டாஷியல் ஹாம்மெட் எழுதிய ‘Maltese Falcon’

humphrey_bogart_in_maltese_falconசாகசக் கதைகள், துப்பறியும் கதைகள், மர்மக் கதைகள் எல்லாம் இலக்கியம் ஆக முடியுமா? முடியும் என்பதற்கு மால்டீஸ் ஃபால்கனை (1929) ஆதாரமாகக் காட்டலாம்.

மால்டீஸ் ஃபால்கனை இலக்கியமாக்குவது துப்பறியும் சாம் ஸ்பேடின் பாத்திரப் படைப்பு. ஸ்பேட் காவிய நாயகன். பீமன், கும்பகர்ணன், பீஷ்மர் போன்றவர்கள் வரிசையில் வைக்கப்பட வேண்டியவன். அவன் என்ன மர்மத்தை அவிழ்க்கிறான், யார் கொலையாளி, கதையில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அவை எல்லாம் ஸ்பேடின் குணாதிசயங்களை, விழுமியங்களை, அவனுடைய அறத்தை, சுய பெருமிதத்தை எப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்பதுதான் முக்கியம். ஸ்பேட் ஒரு archetype. Western genre’s – ‘கௌபாய்’ கதைகளின் நாயகன். நகரத்தில் வாழ்கிறான் அவ்வளவுதான்.

maltese_falconபிற கதாபாத்திரங்களும் நினைவில் நிற்பவைதான். குறிப்பாக குட்மன். குட்மன் எப்போதும் கொஞ்சம் formal, stilted மொழியில்தான் பேசுவான். அது அவன் எத்தனை அபாயமானவன் என்பதை இன்னும் தெளிவாகக் காட்டுகிறது. சின்ன சின்ன பாத்திரங்கள் கூட – ஸ்பேடின் அலுவலகக் காரியதரிசி பெர்ரின் போன்றவர்கள் கூட சிறப்பான கோட்டோவியமாக வடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கதையின் க்ளைமாக்ஸ், denouement காட்சி மிகப் பிரமாதமானது. நாடகமாக நடிக்க ஏற்றது. ஹம்ஃப்ரி போகார்ட், ஜாக் நிக்கல்சன், அல் பசினோ போன்றவர்கள் பிய்த்து உதற வாய்ப்புள்ளது. (திரைப்படத்தில் நடித்தது போகார்ட்தான்). இந்த மர்மக் கதையை இலக்கியமாக்குவதில் அதற்கு பெரிய பங்குண்டு. 1941-இல் ஜான் ஹுஸ்டன் இயக்கத்தில் திரைப்படமாக வந்திருக்கிறது.

இலக்கியமாக்கும் இன்னொரு காட்சி – ஸ்பேட் தன் பழைய கேஸ் ஒன்றை விவரிப்பான். கணவன், மனைவி, குழந்தைகள் என்று ஒரு சந்தோஷமான மத்திமர் குடும்பம். ஒரு நாள் அலுவலகம் செல்லும் கணவன் திரும்பவில்லை. பிணம் கிடைக்கவில்லை. ஸ்பேட் கண்டுபிடிக்க இறங்குகிறான். கணவன் ஊரை விட்டு ஓடிவிட்டான் என்று நினைக்கிறான், ஆனால் அவனுக்கு எந்தப் பணப் பிரச்சினையும் இல்லை, எதிரிகள் இல்லை, மனைவியிடம் சண்டை சச்சரவு இல்லை, அவன் பர்சில் இருக்கும் இருபது முப்பது டாலர்களோடு மட்டும்தான் ஓடிப் போயிருக்க வேண்டும், வங்கியில் இருக்கும் பணத்தை எடுக்கக் கூட அவன் முயற்சி செய்யவில்லை, எந்தத் தடயமும் இல்லை. ஸ்பேடால் கண்டுபிடிக்க முடியவில்லை. சில வருஷங்கள் கழித்து கணவனை தற்செயலாக இன்னொரு நகரத்தில் பார்க்கிறான். அவனைப் பிடித்து விசாரிக்கிறான். காணாமல் போன அன்று மதிய நேரத்தில் உயரமான கட்டிடத்திலிருந்து ஒரு செங்கல் விழுந்திருக்கிறது. கணவன் மயிரிழையில் தப்பித்திருக்கிறான். அவனது வாழ்க்கையின் பொருள் என்ன, இந்தக் குடும்பம், குழந்தை, செய்து கொண்டிருக்கும் பிசினஸ் இதெல்லாம் வாழ்க்கை இல்லை என்று தோன்றி இருக்கிறது. பாக்கெட்டில் இருக்கும் பணத்தோடு ஓடிவிட்டான். ஓடியவன் இப்போது இருக்கும் நகரத்தில் அதே பிசினஸைத்தான் செய்து கொண்டிருக்கிறான். மீண்டும் மணம் செய்துகொண்டிருக்கிறான், குழந்தைகள் பிறக்கின்றன. அதே மத்திமர் வாழ்க்கை!

இன்னொரு நல்ல காட்சி – ஜோயல் கெய்ரோ என்பவன் ஸ்பேடின் அலுவலகத்தில் மால்டீஸ் ஃபால்கன் இருக்கிறதா என்று தேட வருகிறான். ஸ்பேடை துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான். ஸ்பேட் சின்னதாக சண்டை போட்டு அலட்சியமாக அவன் துப்பாக்கியைப் பிடுங்கிக் கொள்ள கெய்ரோ ஸ்பேடையை சிலையைத் தேட நியமிக்கிறான். பிசினஸ் எல்லாம் பேசி முடித்த பிறகு ஸ்பேட் கெய்ரோவிடம் துப்பாக்கியைத் திருப்பித் தர, இப்போது கெய்ரோ ஸ்பேடை துப்பாக்கி முனையில் வைத்து அலுவலகத்தில் தேடிப் பார்க்கிறான்!

dashiell_hammettHard-boiled detective stories என்று துப்பறியும் கதைகளில் ஒரு sub-genre உண்டு. ஹாம்மெட்டே இதற்கு முன்னாலும் அப்படிப்பட்ட சில கதைகளை எழுதி இருந்தாலும் இதுதான் அந்த sub-genre-இல் முதல் படைப்பாகக் கருதப்படுகிறது. அவரும் ரேமண்ட் சாண்ட்லரும் இந்த sub-genre-இல் சிறப்பான புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள்.

மால்டீஸ் ஃபால்கன் குறைகள் இல்லாத புத்தகம் இல்லை. Rough edges தெரிகின்றன. நுண்விவரங்கள் எல்லாம் மிகக் குறைவு. உண்மையைச் சொன்னால் நுண்விவரங்கள் வரும்போது கதை எப்போது தொடரும் என்றுதான் பொறுமை இல்லாமல் படித்தேன். இரண்டாம் வரிசை இலக்கியம்தான். ஆனாலும் இலக்கியமே. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ஸ்பேட் துப்பறியும் சில சிறுகதைகள் Adventures of Sam Spade என்று வெளிவந்திருக்கின்றன. இவை தீவிர ஹாம்மெட் ரசிகர்களுக்கு மட்டுமே.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம், துப்பறியும் கதைகள்

பாபநாசம்/த்ரிஷ்யம் திரைப்படத்தின் மூலக்கதை – Devotion of Suspect X

drishyamஎழுதியவர் கெய்கோ ஹிகஷினோ. வெளிவந்த வருஷம் 2005. துப்பறியும் புத்தகங்களுக்குத் தரப்படும் எட்கர் விருது உட்பட பல விருதுகளை வென்றிருக்கிறது. ஹிகஷினோ எழுதும் டிடெக்டிவ் கலைலியோ சீரிசில் மூன்றாவது புத்தகம்.

Papanasam_posterDevotion of Suspect Xதான் த்ரிஷ்யம் திரைப்படத்தின் மூலக்கதை என்று எங்கோ படித்ததால்தான் நான் இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். மகா அறுவையான ஆரம்பம். கணக்கு வாத்தியார் இஷிகாமி காலையில் எழுந்து பள்ளிக்குப் போவது உணர்ச்சியே இல்லாத நடையில் ஆல் இந்தியா ரேடியோ செய்திகள் போன்ற தொனியில் விவரிக்கப்படுகிறது. என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை என்று நினைத்துக் கொண்டே பத்து பக்கம் படித்தேன். நல்ல வேளையாக அந்த பத்து பக்கத்துக்குள் ஒரு கொலை. அதை மறைக்க இஷிகாமி எடுக்கும் முயற்சிகள் சூடு பிடிக்கின்றன. கதை விறுவிறுவென்று போக ஆரம்பித்துவிடுகிறது. இஷிகாமியின் முயற்சிகள், யசுகோவாடு அவரது ஒருதலைக் காதல், கொஞ்சம் டுபாக்கூர் alibi மாதிரி தெரிந்தாலும் உடைக்க முடியாத alibi, துப்பறியும் போலீஸ்காரர்கள், இஷிகாமியின் முன்னாள் கல்லூரி நண்பர், இப்போது போலீசுக்கு உதவும் பேராசிரியர் யுகாவா, நல்ல முடிச்சு என்று கதை போகிறது.

keigo_higashinoஇந்த நாவலுக்கும் பாபநாசம்/த்ரிஷ்யத்துக்கும் பல மைல் தூரம். கருவில் – தனக்கு வேண்டியவர்கள் செய்த கொலையை மறைக்க நாயகன் சிருஷ்டிக்கும் காட்சிகள் – மட்டும்தான் ஒற்றுமை. ஜீது ஜோசஃப் இதனால் inspire ஆகி இருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஹிந்தி, தமிழ், மலையாளம் மூன்றிலும் எனக்கு மலையாள த்ரிஷ்யம்தான் டாப்.

அங்கங்கே கணித references வருவதை நான் ரசித்தேன். P=NP reference நாலைந்து முறை வருகிறது.

நல்ல துப்பறியும் கதைகளுக்கு என்று சில விதிகள் உண்டு. சுருக்கமாகச் சொன்னால் ஆசிரியன் எல்லா உண்மைகளையும் வாசகனுக்குக் காண்பித்துவிட வேண்டும், ஆனாலும் வாசகனுக்கு மர்மத்தை யூகிப்பது ஏறக்குறைய முடியாத காரியமாக இருக்க வேண்டும். கடைசி பக்கத்தில் முதல் முறையாக கதையில் தோன்றும் பக்கத்து வீட்டு பாதிரியார் சுரங்கம் வழியாக வந்து கொன்றுவிட்டு திரும்பிப் போய்விட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்து கதையை முடிக்கக்கூடாது. அந்த விதிகளை இந்தப் புத்தகம் மீறுகிறது. விதிகள் எல்லாம் போட்டு கதை எழுதுவது முடியாத காரியம் என்ற என் எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது.

மர்மக்கதைகளை விரும்புபவர்கள் நிச்சயமாகப் படிக்கலாம்.

பிற நாவல்கள் எல்லாம் ஓரிரு மாற்று குறைவுதான். ஒரு வேளை பாபநாசம்/த்ரிஷ்யம் போன்று வேறு கனெக்‌ஷன்கள் இல்லாததால் அப்படி தோன்றுகிறதோ என்னவோ தெரியவில்லை. அவற்றைப் பற்றி சின்ன குறிப்புகள்:

A Midsummer’s Equation நாவலிலும் அதே பேராசிரியர் யுகாவாதான் துப்பறிகிறார். கடற்கரை நகரம் ஒன்றில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் இறந்து போகிறார். குடிபோதையில் உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார் என்று முதலில் நம்பப்படுகிறது. பிறகுதான் அவர் கார்பன் மோனாக்சைடை சுவாசித்ததால் இறந்துவிட்டார் என்று தெரிகிறது. கதையில் ஒரு பத்து வயதுப் பையனும் பேராசிரியர் யுகாவாவும் நண்பர்கள். அந்த நட்பு, அதிகாரி எப்படி கொல்லப்பட்டார், ஏன் கொல்லப்பட்டார் என்ற மர்மங்கள் கதையை சுவாரசியப்படுத்துகின்றன. ஆனால் இது விறுவிறு நாவல் அல்ல, மெதுவாகத்தான் போகும்.

Malice கொஞ்சம் இழுத்தாலும் படிக்கலாம். இதில் ஒரு கதாசிரியன் கொல்லப்படுகிறான். யார் கொலையாளி என்று பல வித யூகங்கள்…

Salvation of a Saint என்ற நாவல் படு சுமார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மர்மக் கதைகள்

ஜூலியன் சைமன்ஸ் எழுதிய ‘Man Who Killed Himself’

julian_symonsஒரு லெவலில் பார்த்தால் இந்தப் புத்தகம் வெறும் gimmick-தான். சில சமயம் gimmicks-களும் என்னைக் கவர்கின்றன. 🙂

சிம்பிளான கரு. ஆர்தர் ப்ரௌன்ஜான் இரட்டை வாழ்வு வாழ்கிறான். ஒரு வாழ்க்கையில் மனைவி க்ளேருக்கு அடங்கிய கணவன். அடிக்கடி பயணம் செய்யும் வேலை பார்ப்பவன். அதாவது அப்படி சொல்லிவிட்டு இன்னொரு ஊரில் dating agency நடத்தும் மேஜர் மெல்லனாக பாதி நாள் இன்னொரு வாழ்க்கை. க்ளேரின் பணம் வேண்டும். என்ன செய்வது? மேஜர் மெல்லன் க்ளேரைக் கொலை செய்துவிடுவதாக ஜோடிக்கிறான். கொலைக்கப்புறம் மெல்லனை யாரும் பார்ப்பதில்லை. ஆனால் துரதிருஷ்டம், ஆர்தர் மெல்லனை கொன்று பிணத்தை ஒழித்துவிட்டதாக ஆர்தர் மேலேயே சந்தேகம் விழுகிறது!

இலக்கியம் எல்லாம் இல்லை, நல்ல வணிக நாவல் மட்டும்தான். சைமன்ஸின் நடை tongue in the cheek பாணியில் நன்றாக அமைந்திருக்கிறது. இரட்டை வேஷக் கணவன், அவனுடைய ‘கம்பெனிகள்’, அடக்கி ஆளும் மனைவி எல்லாவற்றையும் கோட்டோவியங்களாக திறமையாகக் காட்டுகிறார். புன்னகை எழுந்து கொண்டே இருந்தது. அதற்காகவே படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

காலின் டெக்ஸ்டர் எழுதிய “Last Bus to Woodstock”

colin_dexterகாலின் டெக்ஸ்டரின் புகழ் பெற்ற படைப்பு இன்ஸ்பெக்டர் மோர்ஸ். மோர்ஸ் ஆங்கிலக் காவல் துறையில் சீஃப் இன்ஸ்பெக்டர். கொஞ்சம் eccentric. நிறைய குசும்பு, கொஞ்சம் தீசத்தனம் உடையவர். மோர்சுக்கு வாட்சனாக இருப்பவர் சார்ஜெண்ட் லூயிஸ். மோர்ஸ் அவ்வப்போது லூயிசையே போட்டு வாட்டி எடுப்பார்.

last_bus_to_woodstockமுதல் புத்தகம் Last Bus to Woodstock (1975). இதைத்தான் இந்த சீரிசில் சிறந்த புத்தகமாகக் கருதுகிறேன். இருபது இருபத்தைந்து வருஷங்களுக்குப் பின்னால் சமீபத்தில் மீண்டும் படித்தேன். சிறந்த கதைப்பின்னல் என்று அப்போது நினைத்தது ஊர்ஜிதமாயிற்று.

மாலை நேரத்தில் இரண்டு பெண்கள் வுட்ஸ்டாக் செல்ல ஒரு பஸ்ஸுக்கு காத்திருக்கிறார்கள். அங்கே வரும் கொஞ்சம் வயதான ஒரு பெண் இனி மேல் வுட்ஸ்டாக் செல்ல பஸ் கிடையாது என்கிறாள். (தவறான தகவல்). வரும் கார்கள் ஏதாவது ஒன்றில் லிஃப்ட் கேட்கலாம் என்கிறாள் ஒருத்தி. இன்னொருத்தி தயங்க, முதல் பெண் “Come on, we will have a giggle about this in the morning” என்கிறாள். பிறகு இருவரும் லிஃப்ட் கேட்க சாலையில் நடந்து செல்கிறார்கள்.

அன்றிரவு அவர்களில் ஒருத்தி – சில்வியா – கற்பழித்துக் கொல்லப்படுகிறாள். இறந்த இருவரும் ஒரு சிவப்பு காரில் ஏறிச் சென்றதைப் பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள். மோர்ஸும் லூயிசும் கூட வந்த பெண் யாரென்று கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஆனால் கூடச் சென்ற பெண் தான்தான் மற்றவள் என்று முன்வரவில்லை. பஸ் கிடையாது என்று சொன்ன பெண்மணி மூலம் அந்த giggle பற்றிய பேச்சு தெரிய வருகிறது. காலையில் இதைப் பற்றி சிரிப்போம் என்றால் மற்றவள் சில்வியாவோடு வேலை செய்பவளாக இருக்க வேண்டும் என்று மோர்ஸ் யூகிக்கிறார். கூட வேலை செய்யும் ஜென்னிஃபர் கோல்பிக்கு ஒரு ரகசிய வேண்டுகோளோடு வந்திருக்கும் கடிதம் ஒன்றைக் கண்டுபிடித்து மோர்ஸ் ஜென்னிஃபர் மீது சந்தேகப்படுகிறார், ஆனால் ஜென்னிஃபர் அசைக்க முடியாத பதில்களைச் சொல்கிறாள், நான் அவளில்லை என்று மறுக்கிறாள்.

பெண்ணைக் கண்டுபிடிக்க முடியாத மோர்ஸ், லிஃப்ட் கொடுத்தது யாரென்று கண்டுபிடிக்க முயல்கிறார். ஒரு சிறந்த பகுதி இங்கே – சில பல hypothesis-களைக் கொண்டு தான் தேடும் பகுதியில் ஒரே ஒருவர்தான் தான் நினைக்கும் குணாதிசயங்களுடன் சிவப்பு கார் ஓட்டுகிறார் என்று முடிவுக்கு வருகிறார். அப்படி கார் ஓட்டும் ஆக்ஸ்ஃபோர்டில் பேராசிரியராக இருக்கும் பெர்னார்ட் க்ரௌதரை நெருங்குகிறார். க்ரௌதர் தான்தான் லிஃப்ட் கொடுத்தேன், ஆனால் இறக்கிவிட்டுவிட்டேன் என்று ஒத்துக் கொள்கிறார். மனைவிக்குத் தெரியாமல் அன்று தன் கள்ளக் காதலியை சந்திக்க சென்றதால் இது வரை தானே முன்வந்து உண்மையைச் சொல்லவில்லை என்கிறார்.

க்ரௌதரின் மனைவி மார்கரெட் கள்ளக் காதலைத் தான் கண்டுபிடித்துவிட்டதாகவும், கோபத்தில் சில்வியாவை தான்தான் கொன்றேன் என்று ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். மனைவி இறந்ததும் பெர்னார்டுக்கு ஹார்ட் அட்டாக். கள்ளக் காதலியை அன்று பார்க்க முடியாததால் சில்வியாவோடு உறவு கொண்டதாகவும், சில்வியா மிரட்டியதால் அவளைக் கொன்றதாகவும் சொல்லிவிட்டு அவரும் இறக்கிறார். மோர்ஸ் இருவருமே கொலை செய்யவில்லை, கொன்றது இன்னொருவர் என்கிறார். மிச்சத்தை படித்துக் கொள்ளுங்கள்.

க்ளூக்களை புத்தகம் முழுதும் இறைத்திருக்கும் விதம், சின்ன சின்ன ஒட்டைகளை அடைக்கும் விதம் இரண்டிலும் டெக்ஸ்டரின் திறமை தெரிகிறது. ஆனால் முக்கியமான giggle க்ளூவைப் படித்தபோது என்னடா மோர்ஸ் ஒரு obvious பகுதியைக் கோட்டை விடுகிறாரே என்று ஒரு நிமிஷம் தோன்றியது, ஆனால் கதையின் சுவாரசியம் அதை விரைவிலேயே மறக்கடித்துவிட்டது.

நல்ல மர்ம நாவல் எழுதுவது கஷ்டம். மர்ம நாவலின் ஃபார்முலாக்களை மீறாமல் சிறந்த கதைப் பின்னலை (plot) டெக்ஸ்டர் உருவாக்கி இருக்கிறார். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மர்ம நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: ஆர். அஜயின் அலசல் (சிவா கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி!)