முதல் துப்பறியும் கதைகள் – எட்கர் ஆலன் போ

துப்பறியும் கதைகள் இன்று உலகம் முழுதும் பிரபலம். ஷெர்லக் ஹோம்ஸ் என்ற பேரைக் கேள்விப்படாதவர்கள் மிக அபூர்வம்தான். அப்படிப்பட்ட துப்பறியும் கதைகளை முதலில் எழுதியவர் யார்?

எட்கர் ஆலன் போ முதல் துப்பறியும் கதைகளை எழுதினார் என்பது உங்களை வியப்படைய வைக்கலாம். போ அமெரிக்க இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிப்பவர். பொதுவாக இலக்கியத்தரம் வாய்ந்த அமானுஷ்ய திகில் கதைகளை (Gothic genre) எழுதிய முன்னோடி என்று கருதப்படுகிறார். கவிதை Raven, சிறுகதைகள் Cask of Amontillado, Fall of the House of Usher, Tell-Tale Heart போன்றவை அவரது சாதனைகளாகக் கருதப்படுகின்றன.

திகில் கதைகளிலிருந்து துப்பறியும் கதைகளுக்கு தூரம் அதிகமில்லை. அதுவும் உலகின் முதல் துப்பறியும் கதையான Murders in the Rue Morgueயை (1841) திகில் கதை என்றும் பகுக்கலாம். அதை துப்பறியும் கதை என்று வகைப்படுத்துவதற்கான முக்கிய காரணம் – முதன்முதலாக துப்பறியும் நிபுணர் என்று ஒரு பாத்திரம், அவருடைய நண்பர்/உதவியாளராக ஒரு பாத்திரம் (முதன் ஷெர்லக் ஹோம்ஸ்-வாட்சன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.), ஒரு மர்மம், அதைப் பற்றிய விவரங்கள், சாட்சியங்கள், சாட்சியங்களை வைத்து யார் குற்றவாளி இல்லை, யார் குற்றவாளி என்ற முடிவுக்கு அறிவுபூர்வமாக வருவது என்று துப்பறியும் கதைகளின் வடிவ அமைப்பு கச்சிதமாக அமைக்கப்பட்டிருப்பதுதான். Locked Room Mystery (அதாவது, பூட்டப்பட்ட அறைக்குள்ளே கொலை – கொலையாளி வந்தது எப்படி, வெளியே போனது எப்படி என்று குழப்பம்) என்ற sub-genre-இல் எழுதப்பட்ட முதல் கதையும் இதுதான்.

Rue Morgue இன்று படிக்க சுலபமாக இருக்குமா என்று எனக்கு சந்தேகம்தான். போவுடைய நடை கொஞ்சம் பழையதாகிவிட்டது. அதுவும் இழுத்து நீட்டித்தான் முடிவுக்கு வருவார். அதுவும் இத்தகைய முடிவுக்கு வருவது இயலாத காரியம். ஆனால் முன்னோடி துப்பறியும் சிறுகதை. சாதனை.

போவுடைய பழையதான நடை ஒரு பொருட்டே அல்ல என்று உணர வைக்கும் சிறுகதை Purloined Letter (1844). சிறு வயதில் குங்குமத்திலோ குமுதத்திலோ அதன் மொழிபெயர்ப்பைப் படித்திருக்கிறேன். அதன் denouement அன்றும் சரி, இன்று மீண்டும் படிக்கும்போதும் சரி, அட என்று வியக்க வைப்பது. இது வரை படித்ததில்லை என்றால் கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

இந்தக் கதைகளின் துப்பறியும் நிபுணர் டூபின் (C. Auguste Dupin). ஷெர்லக் ஹோம்ஸ் சிறுகதை ஒன்றில் டூபினைப் பற்றிக் குறிப்பிடுவார். டூபின் Mystery of the Marie Roget (1842) கதையிலும் துப்பறிவார். இந்தச் சிறுகதை நிஜக்கொலை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது.

டூபின் இல்லாத துப்பறியும் கதை Gold Bug. இந்தச் சிறுகதையை 15, 16 வயதில் படித்தேன். அந்த வயதில் மிகவும் மகிழ்ச்சி தந்த சிறுகதை. cipher-இல் எழுதப்பட்ட செய்தியை ஆங்கில மொழியின் அடிப்படையை வைத்து என்ன செய்தி என்று நாயகன் கண்டுபிடிப்பான். பிற்காலத்தில் எழுதப்பட்ட புகழ் பெற்ற ஷெர்லக் ஹோம்ஸ் சிறுகதையான Dancing Men-இன் மூலக்கரு இந்தச் சிறுகதையிலிருந்து பெறப்பட்டதுதான்.

டூபின் இல்லாத இன்னொரு துப்பறியும் கதை Thou Art the Man (1850). நல்ல மர்மக் கதை என்று சொல்லமாட்டேன், ஆனால் முன்னோடி துப்பறியும் கதை. இதில் உள்ள உத்தி மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவது.

போவின் தாக்கம் பெரியது, உலகளாவியது. ஆனால் எனக்குத் தெரிந்து போவின் பாணியில் எழுதியவர்கள் இலக்கியம் படைக்கவில்லை. சமீபத்தில் ஜப்பானிய எழுத்தாளர் எடோகாவோ ரான்போ போவின் பாணியில் எழுதிய சிறுகதைத் தொகுப்பு கூட ஒன்று கிடைத்தது. ‘எடோகாவோ ரான்போ’ என்பது ஜப்பானிய மொழியில் ‘எட்கர் ஆலன் போ’ என்பதின் மருவிய வடிவம், அதையே ராம்போ தனது புனைபெயராக வைத்துக் கொண்டிருக்கிறார். ராம்போ போவின் பாணியை முழுமையாகக் கடைப்பிடிக்கிறார், ஆனால் அவை எதுவும் என் கண்ணில் இலக்கியம் இல்லை. ஆனால் ஜப்பானில் திகில் கதைகள், துப்பறியும் கதைகளின் தந்தையாகக் கருதப்படுபவர் ரான்போதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எட்கர் ஆலன் போ பக்கம்