காலில் அடிபட்டு எங்கும் நகரமுடியாத நிலை. பழைய பஞ்சாங்கங்களைக் கிளறிக் கொண்டிருக்கிறேன். அப்போது கண்ணில் பட்டது – சில மாதங்களுக்கு முன் ஜெயமோகன்/பி.ஏ. கிருஷ்ணனை பாரதி தமிழ் சங்க விழாவில் அறிமுகப்படுத்தி பேசிய பேச்சு.
இரண்டு மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம். ராஜன் எங்களிடம் சொல்லி இருந்தார் – இரண்டு மணிக்கு நிகழ்ச்சி என்றால் நம் மக்கள் எல்லாரும் இரண்டரைக்குத்தான் வருவார்கள், அது வரை நேரத்தை நிரப்ப முப்பத்தெட்டாவது வட்டச் செயலாளர் போல எதையாவது பேசி வை என்று சொல்லி இருந்தார். அன்று காலையில் இருவரையும் அறிமுகப்படுத்தி பேசு என்று சொன்னார். ஏற்கனவே தயார் செய்தது எனக்கே திருப்தியாக இல்லை. சரி இவரே ஐடியா கொடுக்கிறாரே என்று கிடுகிடுவென்று ஒரு அறிமுகத்தை தயார் செய்தேன்.
என் பேச்சுதான் முதலில். 2:10 வாக்கில் நான் மேடையேற வேண்டும். கஷ்ட காலம், ராஜன் தொகுப்பாளினி நித்யாவிடமும் அறிமுகப்படுத்தி பேச சொல்லி இருக்கிறார். 2:00 மணியிலிருந்து 2:10 வரை நான் எழுதி வைத்திருந்ததை எல்லாம் நித்யா பேசிக் கொண்டிருந்தார், நான் பேச நினைத்ததெல்லாம் நித்யா பேசிவிட்டதால் என்னத்தை பேசுவது என்று தெரியாமல் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தேன்.
சம்பிரதாயமான அறிமுகம் என்றில்லாமல் என் தனிப்பட்ட அனுபவங்களை, நான் உணர்ந்தவற்றை மட்டுமே பேசுவது என்று முடிவு செய்தேன். பிரிண்ட் செய்து வைத்திருந்த பேப்பரில் சில நோட்ஸ்களை கிறுக்கிக் கொண்டேன். தயார் செய்து வைத்திருந்ததில் என் பரிந்துரைகளின் பட்டியல் ஒன்று இருந்தது, அதை மட்டும் பயன்படுத்திக் கொண்டேன்.
காகிதக் குப்பைகளை கிளறிக் கொண்டிருந்தபோது அந்த நோட்ஸ் கண்ணில் பட்டது. அதைத்தான் தட்டச்சி இருக்கிறேன்…
நண்பர்களே,
இது இலக்கியக் கூட்டம். இன்றைய முக்கிய நிகழ்ச்சி – ஒரே நிகழ்ச்சி – ஜெயமோகன், பி.ஏ. கிருஷ்ணன் இருவர் பேசுவது மட்டும்தான். அவர்கள் பேசுவதை கேட்க வந்திருக்கும் வாசகர்களிடம் இந்த அறிமுகம் எல்லாம் தேவையா, அவர்கள் எழுத்தைப் படிக்காமலா இங்கே ஆர்வத்தோடு வந்திருக்கிறீர்கள் என்று எனக்கு ஒரு கேள்வி உண்டு. இந்த அறிமுகம் எல்லாம் வெற்று சம்பிரதாயம்தான் என்றுதான் தோன்றுகிறது. அதனால் அவர்கள் எழுத்தைப் பற்றிய என்னுடைய பர்சனல் கருத்துகளை, விமர்சனங்களைத்தான் முன்வைக்கப் போகிறேன்.
பிஏகே வயதில் மூத்தவராக இருந்தாலும் ஜெயமோகன்தான் மூத்த எழுத்தாளர். அதனால் ஜெயமோகனிடமிருந்தே ஆரம்பிக்கிறேன்.
தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் என் கருத்தில் பிரதாப முதலியார் சரித்திரம் இலக்கியம் இல்லை, முன்னோடி முயற்சி மட்டுமே. என்னைப் பொறுத்த வரை தமிழில் புனைவு இலக்கியம் என்பது 1893-ஆம் ஆண்டு வெளிவந்த ராஜம் ஐயர் எழுதிய கமலாம்பாள் சரித்திரத்திலிருந்துதான் தொடங்குகிறது. கிட்டத்தட்ட நூற்று இருபது ஆண்டுகள் நீண்ட இந்த புனைவிலக்கிய வரலாறு புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, க.நா.சு., எம்.வி. வெங்கட்ராம், ஜெயகாந்தன், பூமணி, சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், நாஞ்சில், பிஏகே என்று பல சாதனையாளர்களை சந்தித்திருக்கிறது. இந்த நீண்ட வரிசையில் புதுமைப்பித்தன், அசோகமித்ரன், ஜெயமோகன் மூவரையும்தான் நான் மேதைகள் என்று வகைப்படுத்துவேன்.
விஷ்ணுபுரத்தைப் பற்றி பேசாமல் ஜெயமோகன் என்ற எழுத்தாளரைப் பற்றி பேச முடியாது. ஆனால் ஆயிரம் பக்கம் உள்ள விஷ்ணுபுரத்தைப் பற்றி அரை நிமிஷத்தில் எப்படிப் பேச? என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை மட்டும் சொல்கிறேன். இந்திய தத்துவ மரபில் எனக்கு பெரிதாக ஆர்வமில்லை. உலகே மாயம் என்றால் சரி இருந்துவிட்டுப் போகட்டும் லஞ்சுக்கு என்ன என்று கேட்கும் ஆசாமி நான். விஷ்ணுபுரத்தின் இரண்டாம் பகுதி தத்துவப் பகுதி என்றே சொல்லலாம். என்னைக் கட்டிப்போட்ட பகுதி அது. புத்தகத்தை கீழே வைக்காமல் வாசித்தேன்.
விஷ்ணுபுரத்தையே ஜெயமோகனின் நாவல்களில் தலை சிறந்ததாகக் கருதுகிறேன். தமிழ் நாவல்களிலேயே அதைத்தான் சிறந்த நாவல் என்று கருதுகிறேன்.
பின் தொடரும் நிழலின் குரல், காடு, வெள்ளை யானை நாவல்களையும் நான் தமிழ் நாவல்களின் முதல் வரிசையில் வைப்பேன். நான் இன்னும் கொற்றவையைப் படித்து முடிக்கவில்லை. ஜெயமோகன் இன்னும் வெண்முரசை எழுதி முடிக்கவில்லை. அனேகமாக இவை இரண்டும் முதல் வரிசையில்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. குறிப்பாக நீலம் பகுதி. இதற்கு முன் இது போன்ற முயற்சி நிச்சயமாகத் தமிழில் வந்ததில்லை. உலக இலக்கியத்திலும் வந்ததாக எனக்குத் தெரியவில்லை.
நாவல்களில் மட்டுமல்ல, ஜெயமோகன் சிறுகதைகளிலும் சாதனையாளர்தான். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை உலகத் தரத்தில் எழுதப்பட்டவை. எனக்குப் பிடித்த 10 சிறுகதைகளை பின்னால் பட்டியலாகத் தருகிறேன்.
ஜெயமோகனின் இன்னொரு முக்கியப் பங்களிப்பாக நான் கருதுவது காந்தியின் சிந்தனைகளை என் போன்றவர்களுக்கு “மொழிபெயர்ப்பது”. காந்தி என்ன செய்தார் என்பது நம் அனைவருக்கும் அனேகமாகத் தெரியும். ஆனால் அவரது சிந்தனைகள், அவை எப்படி பரிணாமம் அடைந்தன என்பதை பல கட்டுரைகளில் அற்புதமாக விளக்கி இருக்கிறார். இன்றைய காந்தி புத்தகத்தை நான் பலமாக பரிந்துரைக்கிறேன். அயோத்திதாசர் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளும் முக்கியமானவை.
ஜெயமோகனின் மற்றொரு முக்கிய பங்களிப்பு இலக்கிய விமர்சனம். சிறந்த நாவல்கள், சிறந்த சிறுகதைகள் என்று அவர் போட்டிருக்கும் பட்டியல்கள் தமிழ் சூழ்நிலையில் seminal பங்களிப்புகள். குறிப்பாக வணிக இலக்கியத்துக்கு அவர் தந்திருக்கும் அங்கீகாரம் மிக முக்கியமானது.
ஜெயமோகன் அதீதங்களின் எழுத்தாளர். அசோகமித்ரனுக்கு நேர் எதிர். எதிர்மறை விமர்சனம் என்று சொன்னால் சில சமயம் அதீதத்தின் மீது அதீதம் என்பது திகட்டிவிடுகிறது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதை அவரிடமே ஒரு முறை சொல்லி இருக்கிறேன், அவர் சாதாரணத்தைப் பற்றி என்ன எழுதுவது என்று என்னைத் திருப்பிக் கேட்டார். அப்படி எழுதுவது அவருக்கு கஷ்டமாக இருக்காது, ஆனால் மனம் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.
பேசிக் கொண்டே போகலாம், ஆனால் இளையவருக்கு தாவிவிடப் போகிறேன்.
பிஏகேவின் பங்களிப்பை எண்ணிக்கையால் அளவிட முடியாது. அவர் இரண்டு நாவல்கள், இரண்டு மூன்று அபுனைவுகளை மட்டும்தான் எழுதி இருக்கிறார். ஆனால் அவர் தமிழின் முதல் வரிசை எழுத்தாளர் என்று கூரை மேல் ஏறிக் கூவவும் நான் தயங்க மாட்டேன்.
புலிநகக் கொன்றை தமிழின் தலை சிறந்த நாவல்களில் ஒன்று. ஒரு குடும்பத்தின் கதையை சட்டகமாக வைத்து 1870களிலிருந்து 1970கள் வரை தமிழக அரசியலில் வெவ்வேறு கட்டங்களில் ஓங்கி நின்ற சித்தாந்தங்களை விவரிக்கும் அரசியல் நாவல் இது. அதிலும் நெருக்கடி நிலை காலத்தில் போலீசிடம் சிக்கி இறக்கும் நம்பி பாத்திரம் மறக்க முடியாதது.
கலங்கிய நதி நாவலில் காந்தி ஒரு பாத்திரமாக இல்லை. ஆனால் அது காந்தியைப் பற்றிய நாவல்தான். காந்திக்கு மிக அருகே நம்மை கொண்டு செல்கிறார்.
மேற்கத்திய ஓவியங்கள் அவருடைய முக்கியமான அபுனைவு. பாலாஜி அதைப் பற்றி விவரமாகப் பேசப் போகிறார்.
இருவரையும் படித்திருப்பீர்கள் என்று முன்னால் சொன்னேன். அப்படிப் படிக்கவில்லை என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். இனிமேல்தான் படிக்கப் போகிறீர்கள் என்றால் இப்படி அணுகுவது உங்களுக்கு சுலபமாக இருக்கலாம்.
ஜெயமோகனின் நாவல்களில் ஏழாம் உலகத்திலிருந்தோ வெள்ளை யானையிலிருந்தோ ஆரம்பிக்கலாம். அங்கிருந்து நான் பரிந்துரைக்கும் வரிசை: காடு, பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை. எனக்கு பர்சனலாக கஷ்டமாக இருந்த, ஆனால் உயர்ந்த படைப்பு – வெண்முரசு வரிசையில் வந்த நீலம்.
நான் பரிந்துரைக்கும் பத்து சிறுகதைகள்.
<
- மாடன் மோட்சம்
- ஊமைச்செந்நாய்
- படுகை
- திசைகளின் நடுவே
- வணங்கான் (பகுதி 1, பகுதி 2)
- அறம்
- யானை டாக்டர்(பகுதி 1, பகுதி 2, பகுதி 3)
- பித்தம்
- அவதாரம்
- லங்காதகனம்
அபுனைவுகள்
இன்றைய காந்தி
அயோத்திதாசர் பற்றிய கட்டுரைகள் (புத்தகமாக வந்ததா என்று தெரியவில்லை)
பட்டியல்கள்:
சிறந்த தமிழ் நாவல்கள்
சிறந்த தமிழ் சிறுகதைகள்
ஜெயமோகன் இந்தப் பட்டியல்களைப் போட்டு பதினைந்து வருஷம் ஆகிவிட்டது, நீங்கள் இவற்றை update செய்ய வேண்டும்.
பிஏகே
புலிநகக் கொன்றை
கலங்கிய நதி
மேற்கத்திய ஓவியங்கள்
தமிழ் படிக்கத் தெரியாதவர்களுக்கு காடு, புலிநகக் கொன்றை, கலங்கிய நதி ஆகியவற்றுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.
இந்த இரண்டு ஆளுமைகளைப் பற்றியும் இரண்டு வார்த்தைகள். இருவரும் இலக்கியத்தில் – தமிழ்/இந்திய/உலக இலக்கியத்தை ஆழ்ந்து அனுபவிப்பவர்கள். நமது பண்பாட்டுப் பின்புலத்தை நன்றாக உணர்ந்தவர்கள். அனுபவ அறிவு நிறைந்தவர்கள். மனித வாழ்க்கையை – அதன் சிகரங்களை, வீழ்ச்சிகளை நன்கறிந்தவர்கள். அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் சுவாரசியமாக பேச்சிலும் எழுத்திலும் கொண்டு வரக் கூடியவர்கள். மிக சுவாரசியமான பேச்சாளர்கள்
ஜெயமோகன் தன் வாழ்வின் குறிக்கோளே எழுதுவதும் ஊர் சுற்றுவதும் மட்டுமே என்று வாழ்பவர். பிஏகே இவற்றில்தான் மும்முரமாக இருக்கிறார், ஆனால் இதுதான் என் வாழ்வின் குறிக்கோள் என்று சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள், ஜெயமோகன் பக்கம், பி.ஏ.கே. பக்கம்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...