நேருவைப் பற்றி காந்தியின் செயலாளர்

இன்று நேருவின் 128-ஆவது பிறந்த நாள். நேரு இந்தியா கண்ட மாமனிதர். இன்றைய இந்தியாவின் முக்கியச் சிற்பிகளின் ஒருவர். அவர் குறையே இல்லாத, தவறே செய்யாத மனிதர் அல்லர். ஆனால் அவரது சாதனைகள் அவரது தவறுகளை விட பல மடங்கு அதிகம் என்பது தெள்ளத் தெளிவான உண்மை.

நேரு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர். அப்படி நேருவே நினைத்திருக்க மாட்டார். ஆனால் சமீப காலத்தில் நேருவை எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லும் போக்கு பரவலாகிக் கொண்டிருக்கிறது – குறிப்பாக ஹிந்துத்துவர்களிடம். ஏறக்குறைய வன்மம்தான் வெளிப்படுகிறது. கூர்மையான சிந்தனையாளரான அரவிந்தன் நீலகண்டனே ஒரு முறை தமிழகக் கோவில்களில் உள்ள சிற்பங்கள் வெகு அலட்சியமாக சேதப்படுத்தப்படுவதை நேருவிய சிந்தனை முறையின் தாக்கம் என்று குறிப்பிட்டிருந்தார். எல்லாப் பிரச்சினைகளுக்கும் கணவனே காரணம் என்று உறுதியாக நம்பும் மனைவிகளின் நினைவுதான் வந்தது. விமர்சனங்கள் வேறு, வன்மம் வேறு.

விமர்சனங்கள் – அதுவும் வரலாற்று நாயகர்களைப் பற்றிய நடுநிலையான விமர்சனங்கள் – தேவை. வரலாற்று நாயகர்களைப் பற்றிய பிம்பங்கள் பல சமயம் உண்மைக்கு அருகில் இருக்கின்றன, ஆனால் முழு உண்மைக்கு கொஞ்சம் தூரத்தில் இருக்கின்றன. காந்தியின் பிரதம சீடர் என்று கருதப்படும் நேரு காந்தியை விமர்சித்தவர்களில் ஒருவர் என்பது வியப்பளிக்கலாம். நேருவின் தன் சுயசரிதையில் காந்தியை தீவிரமாக விமர்சித்திருக்கிறாராம். காந்தியின் தனிப்பட்ட செயலாளரான (private secretary) மஹாதேவ் தேசாய் நேருவின் சுயசரிதையை ஆங்கிலத்திலிருந்து குஜராத்திக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அப்படி மொழிபெயர்க்கும்போது தீவிர காந்தி பக்தர்கள் காந்தியைப் பற்றிய விமர்சனங்கள் உள்ள புத்தகத்தை மொழிபெயர்ப்பது காந்திக்கு விரோதமான செயல் என்று தேசாயை குறை சொல்லி இருக்கிறார்கள். நேரு ஆதரவாளர்கள் – குறிப்பாக அன்றைய சோஷலிஸ்டுகள் – தேசாய் நேருவின் எண்ணங்களைத் திரித்துவிடுவார் என்று பயப்பட்டிருக்கிறார்கள். அப்படி என்றால் எத்தனை தீவிரமான விமர்சனமாக இருக்க வேண்டும்?

தேசாய் தன் மொழிபெயர்ப்புக்கு ஒரு முன்னுரை எழுதி இருக்கிறார். மிகச் சிறப்பான முன்னுரை. அதை மட்டும்தான் படித்திருக்கிறேன், இனி மேல்தான் நேருவின் சுயசரிதையைத் தேட வேண்டும். இந்தப் பதிவு அந்த முன்னுரையைப் பற்றித்தான்.

மஹாதேவ் தேசாயின் வார்த்தைகளில் – நேரு தன் சுயசரிதையில்:

காந்திஜியின் செயல்களையும் வேலைத் திட்டத்தையும் தத்துவத்தையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். சில இடங்களில் கண் மூக்கு தெரியாமல் தாக்கி இருக்கிறார்.

ஆனால் தேசாயின் கண்ணில் நேரு எண்ணங்களை விண்ணிலும் பாதங்களை மண்ணிலும் திடமாக வைத்துக் கொண்டிருப்பவர். கருத்து வித்தியாசம் காந்தியையும் அவரை தெய்வமாகக் கொண்டாடியவர்களையும் நேருவையும் பிரித்துவிடவில்லை!

நேரு தடியடியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை – அப்போது ஓடிவிட வேண்டும் என்ற பயம், திருப்பி அடிக்க வேண்டும் என்ற ஆங்காரம் எல்லாவற்றையும் உணர்ந்திருக்கிறார். மயிரிழையில்தான் தான் தீரத்தோடு அந்த தடியடியை எதிர்கொண்டேன் என்று வெளிப்படையாகச் சொல்கிறார். காந்தியின் மிகப் பெரிய தாக்கமே இதுதான் – தன் தவறுகளை ஒத்துக் கொள்ளும் தைரியம். தன்னால் மாற முடியும், தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும் என்ற துணிவுள்ளவர்கள்தான் தவறுகளை ஒத்துக் கொள்ள முடிகிறது. கோழைகள்தான் வரிந்து சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

முன்னுரையிலிருந்து சில வரிகளை அப்படியே கொடுத்திருக்கிறேன்.

ராஜி (compromise) செய்து கொள்வது அவருக்கு (நேருவுக்கு) பிடிக்காத விஷயம். ஆனால் அவரது வாழ்வு முழுவதும் ராஜியாக இருக்கிறது. காந்திஜியின் இணையற்ற துணிவும் ஆண்மையும் ஜவஹரை அவர்பால் இழுக்கின்றன. ஆனால் காந்திஜியின் சமயப் பற்றும் ஆன்மீகப் போக்கும் மேனாட்டுப் முறையில் வளர்ந்த ஜவஹருக்கு விளங்கவில்லை. ஆகையினால் எரிச்சல் உண்டாகிறது.

ஜவஹரும் காந்திஜியைப் பார்த்து ‘அவர் சாதாரண நடைமுறைகளைக் கடந்தவர். மற்றவர்களை நாம் நிதானிப்பது போல அவரையும் நிதானித்து மதிப்பிட முடியாது’ என்று கூறுகிறார். கூறிவிட்டு தானே மதிப்பிடுகிறார்.

ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி நிறுத்தியது ஒழுக்கக் கேடு

அஹிம்சை நமக்குப் பெரிதும் உதவும். ஆனால் அது முடிவான லட்சியத்துக்கு நம்மை அழைத்துச் செல்லுமா என்பது சந்தேகம்தான்.

அவருடைய வீட்டு வாசலில் நிற்கும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களைப் பார்த்து ‘இவர்களையும் இவர்களது முன்னோர்களையும் இந்தியாவின் நாலாமூலையிலிருந்தும் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் புண்ணிய கங்கையில் நீராடும்படி வரவழைக்கிற இந்த மதம் எவ்வளவு அற்புதமானது’ என்று கூறுகிறார்.

தேசாய் நேருவைப் பற்றி எடை போடுவது:

ஜவஹர் மிகவும் சிக்கலான பேர்வழி. அவர் முரண்பாடுகளின் அதிசயமான கலப்பு. உறுதியும் சந்தேகமும் நம்பிக்கையும் அதன் குறைவும் மதமும் அதன் வெறுப்பும் கலந்தவர். ஓய்வொழிவற்ற உழைப்பும் துன்பமும் துயரமும் நிறைந்த வாழ்க்கை வேறு விதமாக இருக்க முடியாது.

முன்னுரையை இணைத்திருக்கிறேன். (தமிழில் மொழிபெயர்த்தவர் யார் என்று தெரியவில்லை). கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: மஹாதேவ் தேசாய் கிட்டத்தட்ட 25 வருஷங்கள் – தான் இறக்கும் வரை – காந்தியின் செயலாளராகப் பணி புரிந்தவர். காந்தியின் செயலாளர் என்றால் சிறை செல்லாமலா? பல முறை சிறைக்கு சென்றிருக்கிறார், சிறையில்தான் இறந்தார். காந்தியின் சுயசரிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இவர்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விடுதலைப் போராட்டம்

தொடர்புடைய சுட்டி: மஹாதேவ் தேசாயின் மகன் நாராயண் தேசாய் காந்தி ஆசிரமத்தில் வளர்ந்ததைப் பற்றி எழுதிய புத்தகம்

விடுதலைப் போராட்ட நாவல் – கே.ஏ. அப்பாசின் இன்குலாப்

இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றோடு 70 வருஷம். விடுதலைப் போராட்ட காலத்தில் லட்சியவாதமும், தியாக மனப்பான்மையும் இன்றை விட பல மடங்கு அதிகமாக இருந்தது (என்றுதான் நினைக்கிறேன்). இந்த பிம்பம் எப்படி உருவானது, ஆரம்பப் புள்ளி எது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நிச்சயமாக பாடப் புத்தகங்கள் இப்படி ஒரு நினைப்பை ஏற்படுத்தி இருக்க முடியாது! நம்மூர் பள்ளிப் புத்தகங்களின் தரம் அப்படி.

எனக்கு நினைவு தெரிந்து அப்படிப்பட்ட பிம்பத்தை உருவாக்கிய முதல் புத்தகம்
கே.ஏ. அப்பாஸ் எழுதிய இன்குலாப்-தான். (1958) ரொம்ப சின்ன வயதில் – எட்டு ஒன்பது வயது இருக்கலாம் – படித்திருக்கிறேன். இன்றும் மனதில் பதிந்திருப்பது உப்பு சத்தியாக்கிரக காட்சிகள்தான். சத்தியாக்கிரகிகள் ஊர்வலமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒரு அமெரிக்க நிருபர் – பேர் மில்லர் என்று நினைக்கிறேன் – மற்றும் அவருக்கு உதவியாக நாயகன் ஊர்வலத்தை cover செய்கிறார்கள். போலீஸ் தடியடி ஆரம்பிக்கிறது. சத்தியாக்கிரகிகள் ஒருவர் பின் ஒருவராக போய் அடி வாங்கி விழுகிறார்கள். ஒருவர் கூட விலகவில்லை, திருப்பி கையோங்கவில்லை, ஓடவில்லை, ஒளியவில்லை. அமெரிக்க நிருபரே உணர்ச்சிவசப்படுகிறார். திருப்பி அடிப்பதை விட கொள்கைக்காக அடி வாங்க இன்னும் தைரியம் வேண்டும், இன்னும் வீரனாக இருக்க வேண்டும், சத்தியாகிரகம் என்பது எத்தனை புதுமையான கருத்தாக்கம், அதன் வலிமை என்ன என்று புரிந்த நாள் அது.

நாவல் ஒரு bildungsroman – அதாவது ஒரு இளைஞனின் வளர்ச்சியை விவரிக்கும் நாவல். அப்பாசின் வாழ்க்கையை அங்கங்கே பார்க்கலாம். முஸ்லிம் வாலிபன், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் படிக்கிறான், பத்திரிகையாளனாகிறான்… கதையின் முடிச்சு என்பது அவன் ஹிந்துவாகப் பிறந்தவன், முஸ்லிம் குடும்பத்தால் வளர்க்கப்படுகிறான், உண்மை தெரிந்ததும் என்ன செய்கிறான் என்று போகிறது.

கே.ஏ. அப்பாசை யாருக்கும் பெரிதாக நினைவிருக்காது. அப்படியே நினைவிருந்தாலும் அவரை ஒரு சினிமாக்காரராகத்தான் நினைவிருக்கும். அமிதாப் பச்சன் நடித்த முதல் படம் – சாத் ஹிந்துஸ்தானி (1969) – அவர் எழுதி இயக்கியதுதான். பல புகழ் பெற்ற ராஜ் கபூர் படங்களுக்கு – ஆவாரா, ஸ்ரீ 420, மேரா நாம் ஜோக்கர், பாபி – ஆகியவற்றுக்கு அவர்தான் திரைக்கதை எழுதினார். முந்தைய இரண்டுக்கும் அவர் வசனம்தான். எனக்குப் பிடித்த திரைப்படங்களில் ஒன்றான ஜாக்தே ரஹோ (1957) அவரது திரைக்கதைதான். அவர் திரைக்கதை எழுதிய சில ‘முற்போக்கு’, சோஷலிச சாய்வு உள்ள திரைப்படங்கள் சர்வதேச விருதுகள் பெற்றிருக்கின்றன. நீச நகர் (1946), தர்தி கே லால் (1946), டாக்டர் கோட்னிஸ் கி அமர் கஹானி (1946), தோ பூந்த் பானி (1971), ஆகியவற்றைப் பற்றி தீவிர சினிமா ரசிகர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அந்தக் காலத்து லட்சியவாதக் கனவுகளை சோஷலிசமாக வெளிப்படுத்திய திரைக்கதைகள்.

ஆனால் எனக்கு அப்பாஸ் அறிமுகமானது எழுத்தாளராகத்தான். என் அம்மா சொன்னதால்தான் படித்தேன். நான் ஓரளவு பெரியவனான பிறகு அந்தப் புத்தகத்தை – குறிப்பாக தமிழ் மொழிபெயர்ப்பைத் – தேட ஆரம்பித்தேன், இன்னும் கிடைக்கவில்லை. 😦

பழைய ஞாபகம்தான், ஆனால் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுதந்திரப் போராட்ட நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: கே.ஏ. அப்பாஸுக்கு ஒரு தளம்

படிக்க விரும்பும் புத்தகம் – ஜார்ஜ் ஜோசஃபின் வாழ்க்கை வரலாறு

தமிழகத்தின் விடுதலைப் போராட்டத் தலைவர்கள், வீரர்கள் என்று ஒரு நாலைந்து பேர்தான் பொதுப் பிரக்ஞையில் இருக்கிறார்கள். வ.உ.சி., பாரதியார், ராஜாஜி, காமராஜ். மிஞ்சிப் போனால் திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், சுப்ரமணிய சிவா, வ.வே.சு. ஐயர், சத்யமூர்த்தி, ஈ.வெ.ரா. (பின்னாளில் ஈ.வெ.ரா. வெள்ளைக்காரன் ஆட்சிதான் பெஸ்ட் என்று அழிச்சாட்டியம் செய்தது வேறு விஷயம்.)

ஆனால் குறைந்த பட்சம் இரண்டாம் நிலையிலாவது வைக்கப்பட வேண்டிய இன்னொரு தலைவர் ஜார்ஜ் ஜோசஃப். அது எப்படி அவரைப் போன்ற ஒரு ஆளுமை இன்று முழுவதுமே மறக்கப்பட்டுவிட்டார் என்று எனக்குப் புரியவே இல்லை. என் சிறு வயதில் நான் அவரைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. எந்தப் பாடப் புத்தகத்திலும் அவரைப் பற்றி ஒரு வரி கூட வந்ததில்லை. வைக்கம் வீரர் என்று ஈ.வெ.ரா.தான் பேசப்பட்டாரே தவிர ஜார்ஜ் ஜோசஃபின் பங்களிப்பு பற்றி ஒரு வார்த்தை கூட பேசப்பட்டு நான் கேட்டதில்லை. ஒரு வேளை அவர் மலையாளி என்பதாலா? குறைந்த பட்சம் கேரளத்திலாவது அவர் நினைவு கூரப்படுகிறாரா? இல்லை அவர் மலையாளிகளுக்கு பாண்டியா?

ஜார்ஜ் ஜோசஃப் பற்றி அவருடைய பேரனான ஜார்ஜ் ஜோசஃப் எழுதி இருக்கிறாராம். (George Joseph: The Life and Times of a Kerala Christian Nationalist) அதைப் படிக்க வேண்டும் என்று ஆவல். புத்தகம் அச்சில் இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை. சில பகுதிகளை இந்தத் தளத்தில் படிக்கலாம். படித்த வரை சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

யாராவது படித்திருக்கிறீர்களா? மதுரைக்காரர்கள் யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெரிந்தால் கட்டாயம் பதில் எழுதுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விடுதலை இயக்கம்

அந்தமான் ஜெயில் நினைவுகள் – இரு வங்காளிகளின் புத்தகங்கள்

மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று பார்க்கிறேன், ஆனால் இந்த வாரத்துக்கு தீம் என்று ஒன்றை வரையறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் படித்த சில புத்தகங்களைப் பற்றி random ஆக சில பதிவுகள்.

அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் அரவிந்தரின் தம்பி பரின் கோஷ் (Barindra Kumar Ghose) மற்றும் உல்லாஸ்கர் தத் இருவரும் அந்தமானுக்கு அனுப்பப்பட்டார்கள். ஜெயில் அனுபவங்களைப் பற்றி இருவரும் எழுதி இருக்கிறார்கள். இருவரும் சிறை வாழ்க்கை முடிந்த பிறகு நீண்ட நாள் வாழ்ந்தவர்கள்.

barindra_kumar_ghoseஅந்தமான் அப்போது ஏறக்குறைய நரகம்தான். கடுமையான உடல் உழைப்பு, பற்றாக்குறை உணவு, மோசமான ஜெயில் நிலை, வியாதி, எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாத நிலை. பரின் கோஷ் matter of fact ஸ்டைலில் இதைப் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார். புத்தகத்தின் பெயர் ‘Story of My Exile‘. இதை எல்லாம் படித்தால் சவர்க்கார் சமரசம் செய்து கொண்டார், பாரதி புதுவைக்கு ஓடிப் போனார், வ.உ.சி. விடுதலை பெற்றதும் குடும்பத்தைப் பற்றித்தான் கவலைப்பட்டார் என்றெல்லாம் பேச வாய் வராது. அவர்கள் செய்த தியாகங்களில் நூற்றில் ஒரு பங்கு கூட என்னைப் போன்ற சாதாரணர்கள் செய்வதற்கில்லை.

ullaskar_duttஉல்லாஸ்கர் தத்தின் புத்தகம் அவருடைய தனிப்பட்ட அனுபவங்களை அதிகம் பேசுகிறது. புத்தகத்தின் பெயர் ‘12 Years of Prison Life‘. மனிதருக்கு பிரமையோ என்னவோ சில பல hallucinations ஏற்பட்டிருக்கின்றன. நிஜமாகவே பைத்தியம் பிடிக்காவிட்டாலும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பிறகு சென்னைக்கு (அப்போதும் கீழ்ப்பாக்கம்தானா?) மாற்றலாகி இருக்கிறது. ஒரு சின்ன சுவாரசியம் – அங்கே ஆஷ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சங்கரகிருஷ்ண ஐயரை சந்தித்திருக்கிறார். (இந்த சங்கர கிருஷ்ண ஐயர் வாஞ்சியோடு ரயில்வே நிலையம் வரை போயிருக்கிறார், ஆனால் பாதியில் ஓடி வந்துவிட்டாராம்.)

தமிழைப் பற்றி தத் சொல்வது:

Moreover, the local language being Tamil, it all sounded a queer jargon to me, full of hard consonants, with scarcely any liquid sounds or modulations, to mellow their tone. How well did Gopal Bhat describe it, in Raja Krishna Chandra’s court, as sounding something like the rattling noise, that came out of a dry calabash-skin, when a few brick-bats were inserted and shaken.

தத் பிறகு கொஞ்சம் தமிழை கற்றுக் கொண்டும் இருக்கிறார். 🙂 நாம் மெய்யெழுத்துகளை மட்டும் தனியாக உச்சரிக்கும்போது முன்னால் ஒரு ‘இ’ சேர்த்து இக் (கன்னா), இச் (சன்னா) என்றெல்லாம் சொல்வோமில்லையா? அதுவே அவரை குழப்பி இருக்கிறது.

இவை எல்லாருக்குமான புத்தகங்கள் இல்லைதான். பலருக்கு போரடிக்கலாம். ஆனால் முக்கியமான ஆவணங்கள். மின்புத்தகங்களை இணைத்திருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுதந்திரப் போராட்டம்

தொடர்புடைய சுட்டிகள்:
பரீந்திர குமார் கோஷின் ‘Story of My Exile’
உல்லாஸ்கர் தத்தின் ’12 Years of Prison Life’