பதின்ம வயதில் எழுந்த கேள்விக்கு காந்தியின் பதில்

சிறு வயதில் என் அம்மா கோவிலுக்குப் போனால் லேசில் வீட்டுக்கு வரமாட்டாள். ஒரே பக்தி மயம். அதன் எதிர்விளைவாகத்தானோ என்னவோ பிள்ளைகள் யாரும் பெரிய பக்திசீலர்களாக இல்லை. அதிலும் பதின்ம வயதில் எல்லாம் அறிந்த கடவுளிடம் எனக்கு இதைக் கொடு அதைக் கொடு என்று பிரார்த்திப்பது, வட்டக் குதத்தை வல்வேல் காக்க வேண்டுவது எல்லாம் பொருளற்ற செயல்களாகத் தெரிந்தன. கடவுள் எனக்கு இதுதான் சரி என்று தீர்மானித்துவிட்டால் அவரிடம் பிரார்த்தனை செய்தால் அதை மாற்றிவிடுவாரா? “பக்தோவிஹாரிணி மனோஹர திவ்ய மூர்த்தே” என்று ஜால்ரா அடித்தால் நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லிவிடுவார் என்றால் அவர் என்ன விதமான நாட்டாமை? இந்த மாதிரி கேள்விகளுக்கு பதிலே இல்லை. இருந்தாலும் பழக்கதோஷம், சில சமயம் நம் கையை மீறிய விஷயம் என்றால் எப்போதாவது அது வேண்டும் இது வேண்டும் என்று பிரார்த்தித்திருக்கிறேன்.

சமீபத்தில் காந்தியின் பதில் கிடைத்தது.

பிரார்த்தனை என்னத்திற்கு? ஆண்டவன் ஒருவன் இருந்தால் நம்முடைய விஷயம் அவனுக்குத் தெரியாதா? அவனுக்கு நாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அவன் செய்ய வேண்டியதை நாம் அவனுக்கு சொல்லிக் காட்ட வேண்டுமா?

இல்லை. ஆண்டவனுக்கு நாம் நினைவூட்ட வேண்டியதில்லை. அவன் வெகு தூரத்தில் இல்லை. நமக்குள்ளேயே இருக்கிறான். அவன் அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை. நம்முடைய பிரார்த்தனை நம்முடைய உள்ளத்தை சோதிப்பதற்காகவேதான் அவசியமாகிறது. ஆண்டவனுடைய அருள் இன்றி நாம் ஒன்றுமே செய்து முடிக்க இயலாது என்பதை பிரார்த்தனையினால் நமக்கு நாம் நினைவூட்டிக் கொள்கிறோம்.

எந்த முயற்சியும் பிரார்த்தனையின்றி செய்தால் அது முயற்சியாகாது. ஆண்டவனுடைய அருள் கிட்டாமல் மனிதனுடைய எந்தப் பெருமுயற்சியும் ஒரு பயனும் பெறாது என்பதை நாம் உணர வேண்டும். இந்த அடக்கத்தைப் பெறுவதற்கு பிரார்த்தனை செய்கிறோம். உள்ளத்தில் உள்ள அழுக்கை துடைப்பதற்காகவே இதை செய்ய வேண்டும்

– ஹரிஜன் பத்திரிகை, ஜூன் 8, 1935, ராஜாஜியின் மொழிபெயர்ப்பு.

அதுவும் சில துயரங்களால் எனக்கு படிப்படியாக கடவுள் நம்பிக்கை போயேவிட்டது. கடவுள் என்று யாராவது இருந்தால் அவர் நம்மைப் போன்ற எறும்புகள் வாழும் புற்றுகளில் நடந்து செல்லும் மதயானையே, அவருக்கு நம்மைப் போன்ற எளியவர்களைப் பற்றி எல்லாம் பிரக்ஞையே இல்லை என்றுதான் கருதுகிறேன். அப்படி பிரக்ஞை இருந்தால் மனித வாழ்வில் இத்தனை துக்கங்கள் ஏன்? ஜாப் எதற்காக இத்தனை கஷ்டப்பட வேண்டும்? ஏதோ பழக்கதோஷத்தினால் ஆண்டவா பிள்ளையாரே என்று அவ்வப்போது மனதுக்குள் குரல் எழும், எப்போதாவது கோவிலுக்கு போகிறேன், அவ்வளவுதான்.

ஆனால் இந்த மாதிரி பிரார்த்தனை – உள்ளத்தில் உள்ள அழுக்கைப் போக்குவதற்காக, எந்தப் பெருமுயற்சியும் தனி ஒருவனாக என்னால் மட்டுமே முடியாது என்ற அடக்கத்தை பெறுவதற்காக – எனக்கும் அப்பீல் ஆகிறது. காந்தியின் தெய்வ நம்பிக்கையே எனக்கும் உகந்ததாக இருக்கிறது…

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்

ராமநவமிக்காக: முஸ்லிம்களும் ராமநாமமும்

காந்தியின் ராமநாம பஜனைகளில் முஸ்லிம்கள் பங்கு பெறுவது பற்றி அன்றைய முஸ்லிம்களுக்கு தயக்கம் இருந்திருந்த்தால் வியப்பில்லை – “காஃபிர்களோடு” சேர்ந்து வழிபடுவதா என்று தயங்கி இருக்கலாம். அதுவும் பஜனைகளில் ராமனின் உருவப்படம் இருந்துவிட்டால் நிறையவே தயங்கி இருக்கலாம். ஆனால் சில ஹிந்துக்களும் ஆட்சேபித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. காந்தியின் பதில், ஏப்ரல் 28, 1946 ஹரிஜன் இதழில், ராஜாஜி மொழிபெயர்ப்பு.

ஹிந்துக்களுக்குத்தான் ராமனும் ராமநாமமும், முஸல்மான்களுக்கு அதில் ஏது இடம் என்று யாரேனும் ஆட்சேபிக்கும்போது எனக்கு சிரிப்பு வருகிறது. முஸல்மான்களுக்கு வேறு ஆண்டவன், நமக்கு வேறு ஆண்டவனா? முஸல்மான்களுக்கும் ஹிந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பார்ஸியர்களுக்கும் அனைவருக்குமே ஒரே ஒரு ஆண்டவன், எங்கும் நிறைந்து சர்வ வல்லமையும் கொண்டுள்ள ஒரே ஈசனுக்கு பல நாமங்களிட்டு இறைஞ்சி வருகிறோம்.

நான் ‘ராமன்’ என்பது அயோத்தியில் ஆண்ட தசரதனுடைய குமாரனாகிய அந்த சரித்திர ராமன் அல்ல. காலத்துக்கு அப்பால், பிறப்பற்று, ஒரே பொருளாக எப்போதும் நிற்கும் கடவுளைத்தான் நான் ராமன் என்று அழைத்து வருகிறேன். அவனுடைய அருளைத்தான் நான் நாடி வருகிறேன். நீங்களும் அதைத்தான் நாட வேண்டும். ஆனபடியால் முஸல்மான்களாவது வேறு யாராவது என்னுடன் சேர்ந்து ராமனை வழிபடுவதில் என்ன குற்றம்? நான் ‘ராம்’ என்று சொல்லும்போது என்னுடைய முஸல்மான் சகோதரன் ‘அல்லா’ என்றும் ‘குதா’ என்றும் மனதுக்குள் சொல்லி தியானிக்கலாம். அதனால் என் பூஜையோ, பஜனையோ கெட்டுப் போகாது.

ராம் என்பது கடவுளை நான் அழைக்கும் பெயர், பஜனை என்பது கடவுள் வழிபாடு, கூட்டு பஜனை என்பது நாம் அனைவரும் நமக்குத் தெரிந்த வகையில் கடவுளை வழிபடுவது மட்டுமே, என் வழிபடுமுறையை உன் மேல் புகுத்துவதோ அல்லது உன் வழிபடுமுறையை என் மேல் புகுத்துவதோ அல்ல, கூட்டாக வழிபடும்போது மத நல்லிணக்கம் பெருகும் என்பதை இதை விட சிம்பிளாக சொல்லிவிட முடியாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்

வக்காளி இந்தாளு மனுசந்தானா?

(மீள்பதிவு, காந்தி நினைவு நாளான ஜனவரி 30 அன்று மீள்பதிக்க நினைத்திருந்தேன், தவறிவிட்டது)

சமீபத்தில் படித்த கட்டுரை. மனதைக் கவர்ந்த ஒன்று.

டூஃபான் ரஃபாய் 1921-இல் ஏழை பக்கிரி குடும்பத்தில் பிறந்தவர். காந்தியை சிறு வயதில் சந்தித்திருக்கிறார். இரண்டு விரல்களை ஒரு விபத்தில் இழந்துவிட்டார். எப்படியோ கலை பயின்றிருக்கிறார். வேலைக்குப் போயிருக்கிறார், ஓய்வும் பெற்றுவிட்டார். ஓய்வு பெற்ற பின்னர், 1979 வாக்கில், அவருக்கு 58-59 வயது இருக்கும்போது ஒரு பழைய புத்தகக் கடையில் அவர் கண்ணில் தற்செயலாகப் பட்ட ஒரு சிறு புத்தகம் – வனஸ்பதியோன் நூ ரங் – அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது. காந்தி எழுதிய புத்தகம்! எதைப் பற்றி? இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு, வேதிப் பொருட்கள் (chemicals) சேர்க்காமல் வண்ணங்களை உற்பத்தி செய்வது பற்றி! கதர் துணிகளுக்கு செயற்கைச் சாயங்களை வைத்து வண்ணம் தருவதை காந்தி விரும்பவில்லையாம், அதனால் இயற்கைச் சாயங்களைப் பற்றி யோசித்து இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். டூஃபானுக்கு இந்தப் புத்தகம்தான் கீதை, குரான், பைபிள் எல்லாமே.

புத்தகம் கண்ணில் பட்ட நாளிலிருந்து டூஃபான் இலை, வேர், மரப்பட்டை, பூ, வெங்காயச் சருகு, மாதுளம் விதை இன்ன பிறவற்றிலிருந்து சாயங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவற்றை வைத்து ஒரு புடவைக்கு வண்ணம் கொடுத்திருக்கிறார். அது இந்திரா காந்தியிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. டூஃபானுக்கும் அவரது சாயங்களுக்கும் கிராக்கி அதிகரித்துக் கொண்டே போயிருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று சாயம் தயாரிப்பது, துணிகளுக்கு வண்ணம் தருவது ஆகியவற்றை கற்றுத் தந்திருக்கிறார். முன்னூறுக்கும் மேற்பட்ட இயற்கைச் சாயங்களை உருவாக்கி இருக்கிறார். ஒரு சாயம் பசு மூத்திரத்திலிருந்து!

92 வயதில்தான் – மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்னால்தான் இறந்திருக்கிறார். அவரது பேட்டியை, குறிப்பாக பள்ளி மாணவனாக காந்தியை சந்தித்தது பற்றிய பகுதியைத் தவற விடாதீர்கள்! காந்தி ‘ஏண்டா என் உயிரை வாங்குகிறாய்’ என்று அலுத்துக் கொள்வதும், ஏழைச் சிறுவன் ஒரு தொப்பிக்கு மேல் ஒருவரிடம் எப்படி இருக்க முடியும் என்று குழம்புவதும் மிக அருமையாக விவரிக்கப்படுகின்றன.

காந்தியைப் பற்றிய வியப்பும் பிரமிப்பும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தலைக்கு மேலே வேலை, இந்தியா மாதிரி பெரிய நாட்டின் பெரிய பிரச்சினைகள் தோள் மேலே பாரமாகக் குவிந்திருக்கின்றன, இத்தனைக்கு நடுவில் இந்தாள் மலம் அள்ளுவது, துணிக்கு சாயம் போடுவது, இயற்கை வைத்தியம், கதர், ராட்டை என்றெல்லாம் யோசித்து அதை செயல்படுத்தியும் இருக்கிறார்! அவரது சிந்தனைகளின் தாக்கத்தால் எத்தனை பேர், எத்தனை துறைகளில் இப்படி மன நிறைவோடு சாதித்திருக்கிறார்கள்! வனஸ்பதியோன் நூ ரங் புத்தகத்தைப் படித்தேன், அதில் உள்ள கருத்துக்களை செயல்படுத்தினேன், அவ்வளவுதான் என் வாழ்க்கை, என் சாதனை என்று ரஃபாய் சாப் சொன்னதைப் படித்ததும் மனதில் ஆங்கிலத்தில் politicaly incorrect வாக்கியம் ஒன்றுதான் ஓடிற்று. அதைத்தான் ‘வக்காளி இந்தாளு மனுசந்தானா!’ என்று தமிழ்ப்படுத்தி இருக்கிறேன். 🙂

வாழ்க்கை மிக எளிமையானது, சுலபமானது, அற்புதமானது. அதை காந்தி முழுமையாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறார். நம் போன்ற சராசரிகள்தான் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கிறோம், நம்மால் முடிந்தவற்றில் ஒரு சதவிகிதம் கூட செய்வதில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்

தொடர்புடைய சுட்டி: டூஃபான் ரஃபாயின் பேட்டி

“நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?” – கோட்சேயின் விளக்கம்

(மீள்பதிவு)

nathuram_godseகோட்சேயின் விளக்கத்தை நான் 200% நிராகரிக்கிறேன். ஆரம்பப் புள்ளி தவறானது என்றால் அதன் மேல் கட்டப்படும் எந்த வாதமும் சரியாக இருக்கப் போவதில்லை. காந்தி எப்போதும் தன் அரசியலை நடைமுறை அரசியலை விட உயர்ந்த தளத்தில் வைத்திருக்க முயன்றார் என்பதை கோட்சேயால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் கோட்சேயின் வாதங்கள் முக்கியமானவை, ஆவணப்படுத்தப்பட வேண்டியவை என்று கருதுகிறேன். அவற்றைப் படிக்கும்போது காந்தியின் தளமே வேறு, அவர் எப்பேர்ப்பட்ட மாமனிதர் என்பது இன்னும் நன்றாகப் புரிகிறது. ஏதோ என்னாலானது அதற்கு சுட்டி தந்திருக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்

காந்தி 146

இன்று காந்தியின் 146ஆவது பிறந்த நாள்.

வெகு சில தலைவர்களே எல்லா காலத்துக்கும் உரியவர்கள். காந்தி அந்த சின்னக் கூட்டத்திலும் முதன்மையானவர்.

ஒரு விதத்தில் பார்த்தால் முழுத் தோல்வி அடைந்த மாபெரும் தலைவர் அவர் ஒருவரே. அவர் வகுத்த பாதை சரியானது என்று அவரது முதன்மை சீடரான நேரு கூட நம்பவில்லை. ஆனால் அவரது வெற்றி அவர் தன் இலக்குகளை அடைந்தாரா இல்லையா என்பதில் இல்லை. அவர் வாழ்க்கைதான், அவரது போராட்டங்கள்தான், அவர் மாற்றிய மனிதர்கள்தான் அவரது வெற்றி.

பள்ளிப் புத்தகங்களில் நான் கண்டது hagiography மட்டுமே. அதில் வியப்பும் இல்லை. காந்தியை அன்றைய மனிதர்கள் பலரும் தெய்வமாகத்தான் பார்த்தார்கள். அ.கா. பெருமாள் எழுதிய காந்தி சிந்துகள் என்ற அருமையான கட்டுரையைப் படித்தால் மக்கள் அவரை எப்படிப் பார்த்தார்கள் என்று ஓரளவு புரியும்.

மற்றவர்களை சொல்வானேன், காந்தியைப் பற்றிய பிரமிப்பு எனக்கும் குறைவதே இல்லை. இந்த ஒற்றை மனிதர் என்ன மாயம் செய்தார்? Gandhiஎப்படி சாத்தியமாயிற்று? லட்சக்கணக்கான படித்தவர்களும் படிக்காதவர்களும் பணக்காரர்களும் ஏழைகளும் பெண்களும் தாங்கள் பிறந்து வளர்ந்த சூழலைத் தாண்டி அடி வாங்கவும் ஜெயிலுக்குப் போகவும் சேரிகளில் வாழவும் மலம் அள்ளவும் எப்படித் தங்களைத் தயாராக்கிக் கொண்டார்கள்?

பள்ளிப் புத்தகங்களின் hagiography-ஐத் தாண்டி காந்தியைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவிய புத்தகம் “Freedom at Midnight“. 47இல் கல்கத்தாவில் ஒற்றை மனிதனால் பெரும் உயிர் சேதத்தைத் தடுக்க முடிந்தது என்பது கொஞ்சம் உயர்வு நவிற்சிதான். ஆனால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. பஞ்சாபில் பற்றி எரிந்தது அங்கே எரியவில்லையே! (46-இலேயே எரிந்துவிட்டது என்று ஹிந்துத்துவர்கள் சொல்வது உண்டு.)

அப்புறம் காந்தி திரைப்படம். அது இன்னும் நீளமாக இல்லை, நிறைய விஷயங்களைப் பேசவில்லை என்றெல்லாம் குறைப்பட்டுக் கொண்டாலும் அது spoonfeeding-க்கு அடுத்த கட்டத்துக்கு என்னைக் கொண்டு சென்றது.

அதற்குப் பிறகு பல புத்தகங்கள், கட்டுரைகள் உண்டு. ஆனால் எல்லாப் புத்தகங்களும் கட்டுரைகளும் சினிமாவும் காந்தி என்ன செய்தார் என்பதுதான். அவர் ஏன் இப்படி செய்தார் என்பதைப் பற்றி இல்லை. காந்தியே விளக்கியவற்றில் சுவாரசியம் கம்மியாக இருந்தது, என்னால் ஊன்றிப் படிக்க முடியவில்லை.

உதவிக்கு ஜெயமோகன் வர வேண்டி இருந்தது. அவரது இன்றைய காந்தி காந்தீய சிந்தனைகளைப் புரிந்து கொள்ள உதவியது. மிகச் சிறப்பான புத்தகம்.

முழு புத்தகத்தையும் படிக்க சோம்பேறித்தனப்படுபவர்களுக்கு இந்த ஒரு கட்டுரையைப் பரிந்துரைக்கிறேன் – காந்தி என்ற பனியா பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4.

ஜெயமோகன் சமீபத்தில் ஆற்றிய ஒரு அருமையான உரையை இங்கே கேட்கலாம். சோம்பேறிகளுக்காக அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:

  • காந்தியைப் பற்றிய பிம்பம் அவர் ஒரு மாபெரும் ஒழுக்கவாதி, புனிதர், ஏறக்குறைய மகான். ஆனால் அந்த பிம்பத்துக்கு அப்பாற்பட்ட காந்தியே இன்றும் relevant ஆக இருப்பவர்.
  • அவர் நாளைக்கான சிந்தனைகளை அன்றே கண்டறிந்திருக்கிறார். முதலாளித்துவம், கம்யூனிசம், ஜனநாயகம், தர்க்க அறிவு, ஐரோப்பிய சிந்தனை முறை, மரபான இந்திய சிந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிய அவரது விமர்சனங்கள் தீர்க்கதரிசனம் உள்ளவை. நேரு போன்றவர்கள் ஒரு காலகட்டத்துக்கு தேவையான சிந்தனைகளை (ஜனநாயகம், அரசு முதலாளித்துவம்) முன் வைப்பவர்களுக்கும் அவருக்கும் உள்ள பெரும் வேறுபாடு அதுதான்.
  • ஐரோப்பிய சிந்தனை முறையை முழுதாக உள்வாங்கிக் கொண்டவரும் அவரே. எதையும் பரிசீலனை செய்தே அதை ஏற்றோ மறுத்தோ முன்னேறி இருக்கிறார். வர்ணாசிரமம், ஜாதி முறை சரியே என்று நினைத்தவர் அதை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

அடுத்தபடியாக நான் பரிந்துரைப்பது காந்தி-டுடே தளம். பல முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்க்கிறார்கள், தொகுக்கிறார்கள்.

சுவாரசியத்துக்கு இரண்டு சுட்டிகள்:

  • காந்தியின் குரலை இந்த வீடியோவில் கேட்கலாம்.
  • அவர் இறந்தபோது ஹிந்து பத்திரிகையில் வந்த செய்தி

இந்தத் தளத்தில் காந்தியைப் பற்றிய சில புத்தகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். அவற்றை மீண்டும் நினைவு கூர்கிறேன்.

  1. ராஜேந்திர ப்ரசாத் எழுதிய At the Feet of Mahatma Gandhi
  2. மனுபென் காந்தி எழுதிய Bapu My Mother
  3. நாராயண் தேசாய் எழுதிய Childhood Reminiscences

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்

நாராயண் தேசாய் – காந்தி வளர்த்த சிறுவன்

narayan_desaimahadev_desai_gandhi(மீள்பதிவு)

காந்தியின் உதவியாளராக இருந்தவர் மகாதேவ் தேசாய். அவரது மகன் நாராயண் தேசாய் தன் சிறு வயதை காந்தியோடுதான் கழித்திருக்கிறார். காந்தியைத்தான் அப்பா என்று அழைத்திருக்கிறார். (தன் அப்பாவை காக்கா என்று அழைத்திருக்கிறார்.)

தேசாய் பிற்காலத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண், வினோபா ஆகியோரோடு நெருக்கமாகப் பணியாற்றி இருக்கிறார். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்தான் மறைந்திருக்கிறார். நமது ஊடகங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையிலேயே உன்னதமான மனிதர்களைப் பற்றி நமக்கு தெரியப்படுத்துவதே இல்லை என்று வருத்தமாக இருக்கிறது.

தேசாய் காந்தி ஆசிரமத்தில் வளர்ந்த தன் சிறு வயது நினைவுகளை (1930-44) புத்தகமாக எழுதி இருக்கிறார். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.  இந்தப் புத்தகத்துக்கும் தன் தந்தை மஹாதேவ் தேசாய் பற்றி எழுதிய புத்தகத்துக்கும் இரண்டு முறை சாஹித்ய அகாடமி விருது பெற்றவர்.

தொகுக்கப்பட்ட பக்கம் – காந்தி பக்கம்

தொடர்புடைய சுட்டி – காந்தியின் விளையாட்டுத் தோழர் நாராயண் தேசாய்

காந்தி, நான், ஜெயமோகன்

Gandhiஎனக்குத் தெரிந்த வரை மனச்சோர்வே இல்லாமல் எல்லா பின்னடைவுகளையும் சந்தித்த ஒரே மனிதர் காந்திதான். அவர் நினைத்ததெல்லாம் நடக்கவில்லைதான். அவரது நோக்கங்களை முழுதாக செயல்படுத்துவதில் அவருக்கு தோல்விதான். ஆனாலும் அவரது வாழ்வே மனித குலத்தின் வெற்றிதான்.

சமீபத்தில்தான் ஜெயமோகனின் இந்தப் பழைய பதிவைப் பார்த்தேன். ஜெயமோகன்

கடுமையான காந்தி வெறுப்பு கல்விமட்டத்திலேயே எனக்குக் கிடைத்தது. அதை இங்கே பரப்பியவர்கள் கிறித்தவ, கம்யூனிசக் கருத்தியல் கொண்டவர்கள்.

என்றும்

நான் பல கிறித்தவக் கல்வி நிறுவனங்களில் கடுமையான காந்தி வெறுப்பு கற்றுக்கொடுக்கப்படுவதை நேரில் கண்டிருக்கிறேன்.

என்றும் எழுதுகிறார்.

jeyamohanநான் ஜெயமோகனின் தலைமுறைக்காரன். செங்கல்பட்டு மாவட்டப் பள்ளிகளில் படித்தேன். 3 கிறித்துவ கல்வி நிறுவனங்களில் (செய்யூர் லிட்டில் ஃப்ளவர் பள்ளி, தாம்பரம் கார்லி பள்ளி, செங்கல்பட்டு செயிண்ட் ஜோசப் பள்ளி) படித்தேன். ஒரு நிறுவனத்திலும், காந்தியைப் பற்றி தவறாக ஒரு வார்த்தை கேட்டதில்லை, ஒரு ஆசிரியரும் காந்தியைப் பற்றி தவறாக ஒரு வார்த்தை சொன்னதில்லை. காந்தி மட்டுமல்ல, எந்தத் தலைவரைப் பற்றியும் யாரும் தவறாகப் பேசியதில்லை. ஏதாவது பேசினால் அது புகழாரமாகத்தான் இருக்கும். மிச்ச மாணவப் பருவம் பொறியியல் கல்லூரிகளில் கழிந்தது. அங்கே எப்போதும் ஒரு சிறு SFI (கம்யூனிச சார்பு) கோஷ்டி உண்டு. ஒரு வேளை அவர்கள் காந்தியை விமர்சித்திருக்கலாம். ஆனால் அது ஒரு விளிம்பு நிலைக் குழு, மாணவர்களிடம் பெரிய முக்கியத்துவம் இருந்ததில்லை. உயிர் நண்பன் தங்கமணிமாறன் திராவிடக் கழகப் பின்னணி உள்ள குடும்பத்தவன். ஆனால் நான்தான் ஈ.வெ.ரா.வை விமர்சித்திருக்கிறேன், அவன் காந்தியைப் பற்றி ஒரு வார்த்தை தவறாகச் சொன்னதில்லை.

காந்தியைப் பற்றி விமர்சனங்களை நான் படித்தது பிற்காலத்தில் நானாகப் புத்தகங்களைத் தேடிப் பிடித்து படிக்க ஆரம்பித்தபோதுதான். ஜிகிரி தோஸ்த் ஸ்ரீகுமார் கம்யூனிச சார்புடையவன். காந்தியைப் பற்றி நானும் அவனும் நிறைய பேசி இருக்கிறோம், விமர்சித்திருக்கிறோம், ஆனால் காந்தி வெறுப்பு என்பதை இணையம் பரவலாகும்முன் கண்டதில்லை.

நான் மனிதர்களை நம்புபவன். எனக்கு வெறுப்பு அஜெண்டா என்பது அதீதமாக இல்லாத வரை கண்ணில் படுமா என்று எனக்கு கொஞ்சம் சந்தேகம்தான். ஆனால் ஒரே தலைமுறையைச் சேர்ந்த இருவருக்கு கல்வி நிலையங்களில் இப்படி வேறுபட்ட அனுபவங்கள் கிடைத்திருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஜெயமோகன் சொல்வதைப் பார்த்தால் இப்படிப்பட்டவர்கள் மிக அதிகமாக இருப்பதைப் போலவும், அதுவும் பல வருஷங்களாக இருப்பதைப் போலவும் தெரிகிறது.

உங்கள் அனுபவம் என்ன? பள்ளிகளில் காந்தி வெறுப்பு கற்றுத் தரப்படுவதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா?

பின்குறிப்பு 1: என் எண்ணத்தில் காந்தியை வெறுப்பவர்கள் இரண்டு வகை. ஒன்று சிரிப்பு புரட்சியாளர்கள். வினவு மாதிரி. இரண்டு வரி படித்தால் இதெல்லாம் காமெடி பீஸ் என்று புரிந்துவிடும். காந்தியை வெறுக்கிறேன் என்றால் தனக்குப் பெரிய சிந்தனையாளர் என்ற இமேஜ் கிடைக்கும் என்று நப்பாசைப்படுகிறவர்கள். இரண்டு காந்தியின் inclusive agenda ஒத்துவராதவர்கள். இவர்கள் அனேகமாக ஒரு குழுவை முன்னிறுத்தி இன்னொரு குழுவை வெறுப்பவர்கள்.

பின்குறிப்பு 2:எனக்கு காந்தி மேல் விமர்சனம் உண்டு. கிலாஃபத் இயக்கம் ஒரு உதாரணம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம், ஜெயமோகன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: ஜெயமோகனின் ஒரிஜினல் பதிவு

பனியா காந்தி

என்னைப் பொறுத்த வரையில் நான் ஒரு இந்தியன் என்பது வெறும் விபத்து மட்டுமே. எங்கள் தந்தையர் நாடென்னும் பேச்சைக் கேட்டால் மூச்சில் சக்தி பிறந்த வயதெல்லாம் போய் ரொம்ப வருஷம் ஆகிவிட்டது. நான் ஒரு இந்தியன், ஹிந்து, தமிழன், ஆண், ஐயர் ஜாதியில் பிறந்தவன் என்பதெல்லாமே வெறும் விபத்துக்கள்தான். இதில் பெருமைப்படவோ சிறுமையுறவோ ஒன்றுமில்லை.

ஆனாலும் சில விஷயங்களில் நான் அதிர்ஷ்டக்காரன் என்று நினைக்கிறேன். பெரும் பண்பாட்டுப் புலம் என் பின்னால் இருக்கிறது. மஹாபாரதம் போன்ற காவியத்தை நான் அனுபவிக்கும் அளவுக்கு வேற்று நாட்டுக்காரன் அனுபவிக்க முடியாது. என் ஆன்மிகத்தை நானே நிர்ணயிக்கலாம் என்ற பிரக்ஞை நான் ஹிந்துவாகப் பிறந்திருக்காவிட்டால் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இந்த விபத்துக்களில் பெருமைப்படவோ சிறுமையுறவோ எதுவுமில்லை என்று நான் இன்று நினைப்பதை பல ஆயிரம் வருஷங்களுக்கு முன் “யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று என் முப்பாட்டன் எனக்கு இன்றும் புரியும் மொழியில் பாடி இருப்பது நினைக்கும்போதெல்லாம் மகிழ்வு தரும் விஷயம். அப்புறம் காந்தி பிறந்த நாட்டுக்காரன்.

Gandhiஎப்படி சாத்தியமாயிற்று? லட்சக்கணக்கான படித்தவர்களும் படிக்காதவர்களும் பணக்காரர்களும் ஏழைகளும் பெண்களும் தாங்கள் பிறந்து வளர்ந்த சூழலைத் தாண்டி அடி வாங்கவும் ஜெயிலுக்குப் போகவும் சேரிகளில் வாழவும் மலம் அள்ளவும் எப்படித் தங்களைத் தயாராக்கிக் கொண்டார்கள்? இந்த ஒற்றை மனிதர் என்ன மாயம் செய்தார்?

காந்தியைப் பற்றி வேற்று நாட்டவரால் புரிந்து கொள்ள முடியாது என்பதில்லை. ஆனால் அவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும். நான் வெளிநாட்டுக்கு வந்து எத்தனையோ வருஷம் ஆயிற்று. காந்தியைப் பற்றிய பிரக்ஞையே இல்லாதவர்கள் எக்கச்சக்கம். நம் ஊரிலோ spoonfeeding நடக்கிறது. கொஞ்சூண்டு முயற்சித்தால் போதும், காந்தி பற்றிய hagiography, வசைகள் இரண்டையும் சுலபமாகத் தாண்டி அந்த ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

காந்தி குறைகள் இல்லாத மனிதர் இல்லை. தவறுகளே செய்யாத அவதார புருஷர் இல்லை. அப்படி யாராவது சொன்னால் அதற்கு முதலில் சிரிக்கும் மனிதர் அவராகத்தான் இருப்பார். ஆனால் காந்தியை வசை பாடுபவர்களின் சிந்தனை ஓட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிவதே இல்லை. கண்ணெதிரே நடந்து செல்லும் மாபெரும் கொம்பன் யானையை சின்ன சுண்டெலிதான் என்று எப்படி கூசாமல் சாதிக்கிறார்கள்?

காந்தியைப் பற்றிய பிரமிப்பு சிறு வயதிலேயே ஆரம்பித்துவிட்டது. பள்ளிக் காலத்தில் – ஒரு ஒன்பது பத்து வயதில் – முதல் முதலில் என்னை வியப்பில் ஆழ்த்திய புத்தகம் கே.ஏ. அப்பாஸ் எழுதிய “இன்குலாப்“. அதில் உப்புச் சத்தியாக்கிரக காலத்தில் சத்தியாக்கிரகிகள் வரிசையாக நின்று அடி வாங்கும் காட்சியில் அமெரிக்க நிருபருக்கு மட்டுமல்ல எனக்கும் மூச்சு நின்றேவிட்டது. அமைதியாக நின்று அடி வாங்கிக் கொள்ள ஒரு கூட்டத்தை எப்படி இந்த மனிதர் உருவாக்கினார் என்று என் அம்மாவும் நானும் பேசிப் பேசி வியந்திருக்கிறோம்.

அப்புறம் காந்தி திரைப்படம். அது இன்னும் நீளமாக இல்லை, நிறைய விஷயங்களைப் பேசவில்லை என்றெல்லாம் குறைப்பட்டுக் கொண்டாலும் அது spoonfeeding-க்கு அடுத்த கட்டத்துக்கு என்னைக் கொண்டு சென்றது.

எனக்கு பள்ளிப் புத்தகங்களைத் தாண்டி காந்தியைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவிய புத்தகம் “Freedom at Midnight“. 47இல் கல்கத்தாவில் ஒற்றை மனிதனால் பெரும் உயிர் சேதத்தைத் தடுக்க முடிந்தது என்பது கொஞ்சம் உயர்வு நவிற்சிதான். ஆனால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. பஞ்சாபில் பற்றி எரிந்தது அங்கே எரியவில்லையே! (46-இலேயே எரிந்துவிட்டது என்று ஹிந்துத்துவர்கள் சொல்வது உண்டு.)

gandhi_cartoon_by_abuஅதற்குப் பிறகு பல புத்தகங்கள், கட்டுரைகள் உண்டு. ஆனால் எல்லாப் புத்தகங்களும் கட்டுரைகளும் சினிமாவும் காந்தி என்ன செய்தார் என்பதுதான். அவர் ஏன் இப்படி செய்தார் என்பதைப் பற்றி இல்லை. காந்தியே விளக்கியவற்றில் சுவாரசியம் கம்மியாக இருந்தது, என்னால் ஊன்றிப் படிக்க முடியவில்லை.

jeyamohanஅதற்கு ஜெயமோகன் வர வேண்டி இருந்தது. காந்தியின் சிந்தனைகளை எனக்கு மொழிபெயர்த்துச் சொன்னவர் ஜெயமோகன்தான். அவரது இன்றைய காந்தி புத்தகத்தை எல்லாருக்கும் பரிந்துரைக்கிறேன். அதை மொழிபெயர்த்துப் பிற மொழிகளுக்குக் கொண்டு சொல்ல வேண்டும்…

முழு புத்தகத்தையும் படிக்க சோம்பேறித்தனப்படுபவர்களுக்கு இந்த ஒரு கட்டுரையைப் பரிந்துரைக்கிறேன் – காந்தி என்ற பனியா பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4.

பின்குறிப்பு: நான் சாதாரணமாக மகாத்மா காந்தி என்று எழுதுவது இல்லை. காந்திதான். புரட்சித் தலைவர்/தலைவி, பேரறிஞர், பெரியார், இனமானக் காவலர் என்று பட்டப்பெயர்கள் மலிந்து கிடக்கும் இந்தக் காலத்தில் அவரையும் பட்டப்பெயர் வைத்து குறிப்பிடுவது அவரை இழிவுபடுத்துவதாகத் தெரிகிறது.


தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்
தொடர்புள்ள சுட்டி: காந்திக்கு ஒரு தளம்

மனுபென் காந்தி எழுதிய “பாபு – என் தாய்”

manu_gandhi_and_gandhiமனுபென் காந்தியின் grand-niece. காந்தியின் கடைசி காலத்தில் – குறிப்பாக நவகாளி யாத்திரையின்போது – அவர் கூடவே இருந்து அவரைக் கவனித்துக் கொண்டவர். காந்தி இறக்கும்போது அவருக்கு பதினெட்டு பத்தொன்பது வயதிருக்கலாம். கஸ்தூரிபாவின் கடைசி காலத்திலும் அவரோடு (13, 14 வயதில்) இருந்து அவரை கவனித்துக் கொண்டவர். காந்தியை தன் தாயாக வரித்துக் கொண்டிருக்கிறார். காந்தியும் தன்னை அவரது தாய் – தந்தை இல்லை, தாய் – என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார். (புகைப்படத்தில் காந்தியின் வலது பக்கம் தலையில் முக்காடு இல்லாமல் இருப்பவர் மனு.)

புத்தகம் என்னை கவர்ந்தது. காந்தி எப்பேர்ப்பட்ட மகாத்மா என்றெல்லாம் மனு பேசவில்லை. காந்தியைப் பார்த்துக் கொள்ளூம், அவருக்கு பணிவிடை செய்யும், அரசியல் தெரியாத ஒரு சிறு பெண்ணின் நோக்கில்தான் காந்தியைப் பற்றி எழுதுகிறார். நவகாளியில் நடந்த கொடுமைகளை விட காந்திக்கு அங்கே ஆட்டுப்பால் கிடைக்கவில்லை, தேங்காய்ப்பால் குடித்து பேதி ஆனது என்ற விவரங்கள்தான் நிறைய. மிகவும் genuine ஆன புத்தகம்.

உண்மையாகச் சொல்கிறேன், காந்தி ஒரு நச்சுப் பிடித்தவர். அவரை ஒரு பதின்ம வயதுப் பெண் எப்படி பொறுத்துக் கொண்டாள் என்பது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நவகாளி யாத்திரையின்போது கிராமம் கிராமமாக போயிருக்கிறார். ஒரு கிராமத்தில் அவர் குளிக்கும்போது தேய்த்துக் கொள்ளும் ஒரு கல்லை மறந்துவிட்டு வந்ததால் மனுவை மீண்டும் அந்த கிராமத்துக்குப் போய் அதைக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். என்ன இந்தியாவில் கல்லா கிடைக்காது? நானாக இருந்தால் ஓடிவிட்டிருப்பேன். அவருக்கு மாலை போட்டவர்களை பணவிரயம் என்று திட்டிவிட்டு, பூக்களைக் கோர்த்த நூலைப் பிரித்து சுற்றி எடுத்துக் கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு பழைய படத்தில் சுருளிராஜன் கஞ்சன் என்று காட்டுவார்கள். அவர்கள் எல்லாம் காந்தியிடம் பிச்சை வாங்க வேண்டும்!

ஆனால் அப்படி அவர் இருந்ததால்தான் – எந்த விதமான தக்குனூண்டு சமரசமும் செய்து கொள்ளாமல் இருந்ததால்தான் – அவர் காந்தியாக இருக்கிறார். என் போன்றவர்கள் அவருடைய நிலையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட அடைய முடியவில்லை.

மனுபென் என்றால் உடனே நினைவு வருவது காந்தி தன் பிரமச்சரிய சோதனை என்று மனுவோடு நிர்வாணமாக படுத்து உறங்கியதுதான். அப்படி உறங்கும்போது ஒரு முறை அவருக்கு விறைத்துக் கொண்டதாம். விவரம் தெரியாத ஒரு சிறு பெண்ணை இப்படி நடத்துவது கொடுமை இல்லையா என்று அவ்வப்போது காந்தி எதிர்ப்பாளர்கள் எழுதுவார்கள். உண்மைதான், இது நெருடலாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் காந்தி தன் மனதுக்கு உண்மையாக இருந்தார் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால் இது நமக்கெல்லாம் தெரிய வந்ததே காந்தி சொல்லித்தான்! இதைப் பற்றி மனு குறிப்பிடவே இல்லை.

சின்ன புத்தகம். மின் புத்தகத்தை இணைத்திருக்கிறேன். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்

காந்தி கொடுத்த பேட்டி – வீடியோ, காந்தி குரலைக் கேட்கலாம்

நான் மிகச் சிறந்த தலைவராகக் கருதுபவர்களில் காந்தி முதன்மையானவர். (மிகச் சிறந்த மனிதர் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை) அவர் வீடியோவில் கொடுக்கும் ஒரு பேட்டி – சுட்டி கொடுத்த நண்பர்களுக்கு நன்றி! இந்த தளத்தில் பொதுவாக புத்தகங்கள் பற்றித்தான் என்றாலும் காந்தி வீடியோவை பகிர ஆசை. இன்று காந்தி நினைவு நாள் வேறு…