பத்து வருஷங்கள் முன்னால் எழுதிய பதிவு. என் எண்ணங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவாகி இருக்கின்றன.
நிர்வாண நகரம் போன்ற (சில) நாவல்களில் சுஜாதா சாகச நாவல், வணிக நாவல், வாரப் பத்திரிகை தொடர்கதை ஆகியவற்றின் எல்லைகளைத் (constraints) தாண்டி இலக்கியம் படைத்திருக்கிறார். அதிலும் அனாயாசமாகத் தாண்டி இருக்கிறார். வீரேந்தர் செவாக்கும் நிறைய செஞ்சுரி அடித்திருக்கிறார். ராஹுல் திராவிடும். ஆனால் திராவிட் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்திலும் அவரது உழைப்பு தெரியும். செவாக் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்திலும் ஒரு அலட்சியம், இதெல்லாம் என்ன ஜுஜுபி என்ற ஒரு attitude தெரியும். அதே போலத்தான் வாரப் பத்திரிகையில் எழுதினால் என்ன, வாசகர்களின் எதிர்பார்ப்புகளை வாராவாரம் ஒரு முடிச்சு போட்டு கட்டமைக்க வேண்டிய அவசியம் இருந்தால் என்ன, சாகசங்களை வைத்து பக்கத்தை நிரப்ப வேண்டிய தேவை இருந்தால் என்ன, இதை எல்லாம் மீறி இலக்கியம் படைப்பது பிஸ்கோத் வேலை என்ற மாதிரி ஒரு attitude தெரிகிறது.
இந்த நாவலைப் பற்றி எழுதுபவர்கள் இதன் குறும்புத்தனத்தைத்தான் பெரிதும் சிலாகிக்கிறார்கள். ஆனால் அந்த குறும்புத்தனத்திலேயே ஆழ்ந்துபோய் அவை நகர வாழ்வின் வெறுமையையும் சிறப்பாகக் காட்டுவதை தவற விட்டுவிடுகிறார்கள். எனக்கு அந்த சித்தரிப்பால்தான் இது இலக்கியமாக உயர்கிறது.
இலக்கியம்தான், ஆனால் இரண்டாம், மூன்றாம் வரிசை இலக்கியம். இது வாழ்வின் பெரிய தரிசனங்களைக் காட்டிவிடவில்லை. உங்களைப் பெரிதாக சிந்திக்க வைத்துவிடாது. விஷ்ணுபுரம் மைக்கேலாஞ்சலோவின் Sistine Chapel என்றால் இது ரெட்டைவால் ரங்குடு கார்ட்டூன். (நானும் குறும்புத்தனத்தை மட்டும்தான் இங்கே முன்வைக்கிறேனோ?)
அன்று எழுதியது கீழே.
நான் சுஜாதாவின் பரம விசிறி ஆனது இந்தப் புத்தகத்தைப் படித்துதான். அந்த phase ஒரு பத்து வருஷமாவது நீடித்தது. இந்தக் கதை குங்குமத்தில் தொடராக வந்தபோது படித்தேன். சமீபத்தில் மீண்டும் படித்தேன்.
முதல் அத்தியாயத்திலேயே தூள் கிளப்பினார். தற்காலிக கிளார்க்காக இருக்கும் சிவராஜுக்கு மெடர்னிடி லீவில் போன பெண் திரும்பி வருவதால் நாளையிலிருந்து வேலை இல்லை. விஷயம் தெரிந்ததும் சிவராஜ் கேட்கும் கேள்வி: வேற யாராவது கிளார்க்குகள் கர்ப்பமா இருக்காங்களா சார்?” ஹோட்டலில் டேபிளுக்கு காத்திருக்கும் சிவராஜ் நினைக்கிறான் – “சினிமா இன்டர்வல்லில் எனக்கு முன்னால் நிற்பவன் மட்டும்தான் குடம் குடமாக மூத்திரம் போவான்” சென்னை என்ற நகரம் தன் தனித்தன்மையை அழிப்பதைப் பொறுக்க முடியாமல் சிவராஜ் சென்னையைப் பழி வாங்க தீர்மானிக்கிறான். அப்புறம் ஒரு ஜட்ஜ் கொலை, சிவராஜ் அடுத்தபடி ஒரு டாக்டரை கொல்லப் போகிறேன் என்று போலீசுக்கு ஜீவராசி என்ற பெயரில் லெட்டர் எழுதுவது, போஸ்டர் அடித்து கமிஷனர் ஆஃபீசுக்கு முன்னாலே ஓட்டுவது, டாக்டர் கொலை, ஒரு எம்.எல்.ஏ.க்கு மிரட்டல், வனஜா தன்னை கல்யாணம் செய்து கொள் என்று சிவராஜை கேட்பது, திருமணத்தால் சிவராஜுக்கு வாழ்க்கை நிலையாக அமையப் போவது, கணேஷ்-வசந்த் வருகை, எம்.எல்.ஏ. மரணம், கணேஷ் வசந்த் சிவராஜை கண்டுபிடிப்பது என்று கதை போகிறது.
மிகவும் கலக்கலான கதை. வசனம் பிரமாதம். ஒரு பம்மாத்து இன்டர்வ்யூவில் சிவராஜை கேட்கிறார்கள் – “நீங்கள் எதற்காக இந்த வேலையை விரும்புகிறீர்கள்?” “என் வாழ்நாளின் ஆதர்சம் உங்கள் கம்பெனியில் ஒரு டெஸ்பாட்ச் கிளார்க்காக சேர வேண்டும் என்பதுதான்”. ஒரு டாக்டரை சிவராஜ் பார்க்கிறான். அவர் சொல்கிறார் – “சுவாமி நான் ஒரு ஜி.பி. மனசு சரியில்லைனா சைக்காட்ரிஸ்டிடம் போங்கோ.” சிவராஜின் பதில் “எனக்கு ரெண்டு கொட்டையும் வலிக்கிறது டாக்டர்.”
இத்தனை வருஷம் கழித்து மீண்டும் ஒரு முறை படித்தேன். சுவாரசியம் குன்றவே இல்லை. சின்ன சின்ன விஷயங்களில் ஒரு காட்சியை தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார். உதாரணமாக டாக்டரை சிவராஜ் பார்ப்பதற்கு முன்னால் ஒரு அம்மாள் பச்சையா வெளிக்குப் போறான் டாக்டர் என்று குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கவலையோடு சொல்லிக் கொண்டிருப்பார். கமிஷனர் பேட்டியில் ஹிந்து நிருபர் யோசித்து கேள்வி கேட்பதற்குள் கமிஷனர் போய்விடுவார். பாத்திரப் படைப்பும் நன்றாக இருக்கும். சிவராஜின் தனிமை, கையாலாகாத்தனம் எல்லாம் சிறப்பாக வந்திருக்கும். வனஜா, எம்.எல்.ஏ., சந்தடி சாக்கில் பெண் ரோசலினுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போலீஸ் அதிகாரி, எல்லாவற்றையும் சிறப்பாக எழுதி இருப்பார்.
உடுமலை பதிப்பகத்தில் (இன்றும்) கிடைக்கிறது. விலை
எழுபது நூறு ரூபாய். வாங்குங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
இது விஷ்ணுபுரமோ, கரைந்த நிழல்களோ இல்லை. ஆனால் என் கண்ணில் இது இலக்கியமே. ஆனால் ஜெயமோகன் போன்றவர்கள் இந்த மாதிரி ஒரு புத்தகத்தை பொருட்படுத்துவதில்லை. இது ரசனை வேறுபாடா, இல்லை என் படிப்பு முறையின் குறைபாடா தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். சுஜாதா existential angst பற்றி ஒரு கதை எழுதி இருந்தால் தூள் கிளப்பி இருப்பார்!
தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்